Friday, October 03, 2008

காதலில் விழுந்த கம்யூனிஸ்டுகள்

பொதுவாக கம்யூனிஸ்டுகள் என்றால் கொஞ்சம் மரியாதை உண்டு .தோழர் பெருமதிப்புக்குரிய நல்லக்கண்ணு போன்ற பண்பாளர்கள் அங்கம் வகிப்பதால். பெரும்பாலான தலைவர்களின் எளிமையும் ,கொள்கைப் பிடிப்பும் பாராட்டுக்குரியது .ஆனால் சமீப காலங்களில் கம்யூனிஸ்டுகள் காமெடியர்களாக மாறி வருவது ரசிக்கத்தக்கதாக இல்லை .

எதேச்சையாக சன் தொலைக்காட்சி பார்த்த போது செய்திகள் போய்க்கொண்டிருந்தது ..சிவப்பு துண்டைப் போட்டுக்கொண்டு தோழர் தா.பாண்டியன் முழங்கிக்கொண்டிருந்தார் .நான் கூட அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தான் ஆவேசமாக பேசுகிறார் என நினைத்து கூர்ந்து கவனித்தால் அடடா.. 'காதலில் விழுந்தேன்' ஏன் மதுரைக் காரர்களை விழ அனுமதிக்கவில்லை என்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை பற்றி வன்மையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டிருந்தார் .

சன் டீவியை பொறுத்தவரை 2 நாட்களாக தலைப்புச் செய்தியே 'காதலில் விழுந்தேன்' படத்துக்கு மக்கள் வரலாறு காணாத வரவேற்பு ..திரையரங்கமெங்கும் மக்கள் வெள்ளம் ..இத்தியாதி..இத்தியாதி ..இத்துப்போன இந்த படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்க மு.க.அழகிரி தயவில் கிடைத்த வாய்ப்பை சன் டீவி நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது .இது ஏதோ உலக மகா பிரச்சனை போல "வாங்கையா..வாங்கையா" என திடீர் கருணாநிதி எதிர்ப்பாளர்களை தேடிப்பிடித்திருப்பார்கள் போல .

தோழர் தா.பாண்டியனை கேட்கவே வேண்டாம் ..நம்ம கிட்ட மைக் குடுத்துட்டாங்கப்பா -ன்ற சந்தோசத்துல பொளந்து கட்டினார் ..அந்த கொடுமை முடிந்தவுடன் அடுத்து மார்ச்சிஸ்ட் வரதராசன் ..அய்யோ ..மற்றொரு திடீர் கருணாநிதி எதிர்ப்பாளராம்.

இந்த காமெடி முடிஞ்சு இப்போ இன்னொரு காமெடி ..திடீர்ன்னு கம்யூனிஸ்டுகளுக்கு ஈழத்தமிழர் மீது அக்கறை .உடனே புதிய நண்பர்களையெல்லாம் கூட்டி உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்தார்கள் ..கொடுமை என்னண்ணா அதுல அ.தி.மு.க -வும் கலந்து கொள்ளும் -ன்னு அறிவிப்பு .விட்டா ராஜபக்சே ,சோ போன்றவர்களையும் கூப்பிடுவார்கள் போல .

அம்மாவும் பெரியமனது பண்ணி முன்னாள் அமைச்சர் முத்துசாமி கலந்து கொள்வார் என சொல்ல ..நிகழ்ச்சி தொடங்கியும் முத்துசாமி வரவில்லை .கடைசியில் அம்மா கொடுத்தார் பெரிய அல்வா ..வழக்கம் போல கடைசி நேரத்தில் அம்மா-வின் மூடு மாற ,கொஞ்ச நஞ்சம் வந்திருந்த அ.தி.மு.கவினர் மேலிட சிக்னல் கிடைத்ததும் கமுக்கமாக கழன்று கொண்டார்கள் .அட பாவிகளா! உங்கள் அரசியல் சதிராட்டத்துக்கு ஈழத்தமிழர் பிரச்சனையா கிடைத்தது?

பொதுவாகவே இந்த கம்யூனிஸ்ட் காரர்கள் கலைஞரோடு கூட்டணி வைத்திருக்கும் போது தான் கூட்டணி ஜனநாயகம் ,கொள்கை ,நியாயமான தொகுதிப் பங்கீடு ,வெங்காயம் பற்றியெல்லாம் பேசுவார்கள் . அம்மாவிடமெல்லாம் இந்த பாச்சா பலிக்காது .உள்ளே வரும் போதே அம்மா சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது .சும்மா இந்த உதார் விடுற வேலையெல்லாம் கருணாநிதியோட வச்சுகணும் .என் கூட்டணிக்கு வந்தா ..வந்தோமா ..குடுக்கிறத வாங்கிட்டி பேயாம போயிட்டே இருக்கணும் .வெளிய போய் நீட்டி முழக்குறதெல்லாம் வச்சுக்கபுடாது -ன்னு.

இதுல வேற 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' வைக்கோ இருக்காரு .அவர் வெளிய தான் புலி .அம்மா கிட்ட ஈழப்பிரச்சனை ,சேது சமுத்திர திட்டம் பத்தி ..ஊகூம் ..கப்சிப் ..அடுத்த முறை அம்மா இவரைப் பிடிச்சு உள்ளே போடுறவரை ஓயமாட்டார் ..அப்புறம் "பாசிச ஜெயலலிதா" -ன்னு முழங்குவார் .பார்க்கத் தானே போறோம் .கலைஞர் கிட்ட ஒரு தொகுதிக்கு உரிமைக்குரல் கொடுக்கிற வை.கோ-வும் ,தா .பாண்டியன் வகையறாக்கள் ஜெயலலிதா பிச்சைக்காசு மாதிரி வீசுகிற தொகுதிகளை கையையும் வாயையும் பொத்திகிட்டு எப்படி வாங்குறாங்கன்ணு.

Tuesday, September 16, 2008

நாசமாய் போன தமிழகம்

பொதுவாகவே நம்முடைய பெரியவர்கள் தொட்டதுக்கெல்லாம் "நாடு இப்போ ரொம்ப கெட்டுப் போச்சு ..எங்க காலத்துல..." என்று ஆரம்பித்து விடுவார்கள் .தமிழக அரசியல் என்று வரும் போது இன்னும் நிறைய பேர் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் ..திராவிட இயக்க ஆட்சி வந்த பிறகு தான் நாசமாய் போனதாக்கும் .இல்லையென்றால் தமிழ்நாடு இப்படி நாசமாய் போயிருக்காதாக்கும் என்றெல்லாம் சாபமும் ஒப்பாரியுமாக இருக்கும் .கேட்பவர்களுக்கு கூட இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி கெட்டு குட்டிச்சுவராயிடுச்சு போல என்றொரு எண்ணம் தோன்றும்.

அப்புறம் ஒப்பீட்டுக்கு காமராஜர் ,கக்கன் இந்த இரண்டு பேரையும் சொல்வார்கள் ..மறந்தும் ராசாசி ,பக்தவச்சலம் பற்றி சொல்ல மாட்டார்கள் .ராசாசி ,பக்தவத்சலம் போன்ற உயர் அடுக்கிலிருந்து வந்தவர்களே கோலோச்சிய அதிகாரத்தில் காமராஜரும் கக்கனும் வந்ததே பெரிய மாற்றம் தான் .அதனால் தான் தந்தை பெரியார் காமராசரை ஆதரித்தார்கள் .கல்விக்கண் திறந்த தலைவனை என்றும் மறவோம் ,அது வேறு.காமராசராலும் கக்கனாலும் காங்கிரசுக்கு பெருமையே தவிர ,காங்கிரசால் அவர்களுக்கல்ல ..இன்று காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று முழங்குபவர்களில் முக்கால்வாசி பேரின் பின்னணி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு இந்திரா பின்னால் போனது தான் .

திராவிட இயக்க ஆட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை .ஆனால் தேசிய கட்சிகள் ஆண்டிருந்தால் தமிழகம் நாசமாயிருக்காது என்று சொல்பவர்களுக்கு நான் கேட்கும் கேள்வி "ஒட்டு மொத்த இந்தியாவை ஒப்பிடும் போது அப்படி தமிழகம் என்னைய்யா நாசமாய் போய்விட்டது?" .ஏதோ இந்தியாவில் தேசிய கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாலும் தேனும் ஓடுவது போலவும் , நிர்வாக சீர்கேடுகளே இல்லாதது போலவும் .

அப்புறம் இந்தியை கட்டாயமாக படிக்க விடாமல் தமிழ்நாட்டை கெடுத்து விட்டார்கள் .இது ஒரு குற்றச்சாட்டு .தேவையானவர்கள் படித்துக்கொள்ள வேண்டியது தானே ? சரி ..இப்போ இந்தி பேசுகிற மாநிலங்களின் லட்சணங்களை பார்க்கலாமே .நாலஞ்சு சல்மான் கான் ,சாருக்கான் படங்களை பார்த்து விட்டு வட இந்தியாவில் செல்வம் கொழிக்கிறதாக்கும் ,எல்லோரும் பெரிய பெரிய பங்களாவில் கூத்தும் கும்மாளமுமாக தான் இருப்பார்களாக்கும் ..சே .நாமளும் இந்த தமிழ் நாட்டில் வந்து பிறந்தோமோ என நினைக்கும் இளைய தலைமுறைக்கு நகரம் தவிர்த்த வட இந்திய கிராமப்புறங்களின் லட்சணத்தையும் ,தமிழகத்தின் கிராமப்புறங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க சொல்லிக்கொடுக்க வேண்டாமா?

சரி..விஷயத்துக்கு வருவோம்..இந்தியா டுடே பத்திரிகை சமீபத்தில் நாடு தழுவிய மக்களவைத் தொகுதிகள் மற்றும் மாநிலங்களின் தரப்பட்டியலை வெளியிட்டுள்ள்து .543 மக்களவைத் தொகுதிகள் ,20 பெரிய மாநிலங்கள் ,10 சிறிய மாநிலங்கள் ,5 யூனியன் பிரதேசங்கள் என்று பிரித்து சமூக பொருளாதாரம் ,உட்கட்டமைப்பு ,விவசாயம் ,தொழில் ,கல்வி ,ஆரம்ப சுகாதாரம் உள்ளிட்ட பல தளங்களில் ஆய்வு செய்து சில புள்ளியல் விவரங்களை ,தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது .அதிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம் .

* நாட்டின் சிறந்த 100 மக்களவை தொகுதிகள் (மொத்தம் 543) பட்டியலில் தமிழகத்தின் 26 தொகுதிகள் இடம் பிடித்துள்ளன.

* கேரளாவின் அனைத்து 20 தொகுதிகளும் சிறந்த 100 பட்டியலில் இடம் பிடித்துள்ளன . காம்ரேட்கள் தான் காரணம் என நினைக்க வழியில்லை ..ஏனென்றால் மேற்கு வங்கம் அதல பாதாளத்தில் இருக்கிறது ..வெளிநாடு வாழ் மலையாளிகளின் அன்னிய செலவாணியும் ,சுற்றுலாவுமே கேரளத்துக்கு கைகொடுக்கின்றன.

* தமிழகமும் ,கேரளமும் மட்டும் 100-ல் 46 தொகுதிகளை கொண்டிருக்கின்றன .சிறந்த 100 தொகுதிகளில் 79 தொகுதிகள் விந்திய மலைக்கு தெற்கே இருக்கின்றன .

* மாநிலங்களின் ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழகம் 2-ம் இடத்தில் இருக்கிறது .முதலிடம் பஞ்சாப் .சென்ற வருடம் 4-வது இடத்திலிருந்து இந்த வருடம் 2-ம் இடத்திற்கு தமிழகம் முன்னேறியிருக்கிறது .

* விவசாயத்தில் பஞ்சாப் ,ஹரியானாவுக்கு அடுத்து தமிழகம் 3-வது இடத்தில் .

* ஆரம்ப சுகாதாரத்தில் தமிழகம் முதல் இடம் .முதலிடத்திலிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடத்தில்.

* முதலீட்டு சூழலில் இமாச்சல பிரதேசம் ,குஜராத் ,பஞ்சாப் -க்கு அடுத்து தமிழகம் 4-வது இடத்தில்.சென்ற வருடம் 7-வது இடம்.

* ஆரம்ப கல்வியில் தமிழகம் 4-வது இடம் .சென்ற வருடம் 6-வது இடம்.

* உள்கட்டமைப்பில் பஞ்சாப் ,இமாச்சல் ,கேரளா- வுக்கு அடுத்ததாக தமிழகம் 4-வது இடத்தில்.

* நுகர்வோர் சந்தையில் தமிழகம் 7-வது இடத்தில்.

* சட்டம் ஒழுங்கில் கேரளாவுக்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில்.

* இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்.

* மிகவும் நகரமயமான மாநிலங்களில் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் .

* மாநிலங்கள் தர வரிசையில் கடைசி இடங்களில் இருப்பவை பற்றி சொல்லத் தேவையில்லை . பீகார் ,ஜார்கண்ட் ,உத்திர பிரதேசம் .. இந்தி சொல்லித் தராமல் தான் பெரிய இந்தி மேதையாவதை தடுத்து விட்டதாக அங்கலாய்க்கு விஜயகாந்த் வீணாக தமிழகத்தில் கஷ்டப்படுவதற்கு இங்கே போய் குடியேறி விடலாம் .நமக்கும் நல்லது .

* நேரு குடும்பம் 8 முறை வென்ற ரேபரேலி தொகுதி 507-வது இடத்தில்.

* ராஜீவ் ,சஞ்சய் வென்ற அமேதி தொகுதி 484-வது இடத்தில் .

* ஷிபு சோரனின் தும்கா தொகுதி 540-வது இடத்தில்.

* சோம்நாத் சாட்டர்ஜியின் போல்பூர் தொகுதி 319 -வது இடத்தில்.

Thursday, August 07, 2008

ரஜினி செய்தது தவறா?

"ரஜினி பேரை சொன்னாலே தமிழகமே அதிரும்" ,"தலைவர் நடிக்க வேண்டாம்..நடந்தாலே போதும் " என்று சொன்னவர்கள் கூட இப்போது "ரஜினி என்பவர் ஒரு நடிகர் .அவரிடம் போய் எல்லாவற்றுக்கும் தீர்வு எதிர்பார்ப்பது நியாயமா?" ,"தயாரிப்பாளருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நட்டம் வரக்கூடாது என்பதாலேயே அவர் வருத்தம் தெரிவித்தார் ..அதில் என்ன தவறு ?"அரசியல்வாதிகளும் மற்றவர்களும் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளும் போது ரஜினியை மட்டும் குறை சொல்வதேன்?" என்றெல்லாம் இறங்கி வந்திருக்கிறார்கள் ..இந்த அளவுக்காவது ஊதி பெரிதாக்கப்பட்ட பலூனில் காற்று இறங்கி வருவது நல்லது தான்.

ரஜினிகாந்த் நல்ல நடிகர் ..நல்ல மனிதரும் கூட .இருக்கட்டுமே ..யார் இல்லையென்று சொன்னது ? நான் ஒரு நடிகன் .என்னை ஒரு நடிகனாக மட்டும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு போயிருந்தால் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை உண்மையிலேயே அவரின் நடிப்புக்கு ,ஸ்டைலுக்கு திரண்ட கூட்டம் என்று எடுத்துக்கொண்டு போயிருந்திருக்கலாம் .ஆனால் ஊகங்கள் மூலம் அரசியல் சாயங்கள் விழுந்த போது அதனால் ஏற்படும் லாபங்களை மிக லாவகமாக வியாபாரமாக்கிக் கொண்ட போது தானே அவர் வெறும் நடிகர் என்பதையும் தாண்டி வெளியில் வந்து விழுகிறார் .

திரையில் அவர் பேசும் வசனங்கள் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் என்ற எல்லையை தாண்டி ரஜினிகாந்த் என்ற தனிமனிதன் பேசும் வசனங்களாக கருத்தில் எடுக்கப்பட்டதை (இப்போது அவை வெறும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் மட்டுமே என்று மறுத்தாலும் ) கொஞ்சமாவது மண்டையில் மசாலா உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியுமே ?எம்.ஜி.ஆரும் இப்படி அரசியல் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவார் , பாடுவார் ..ஆனால் அவை படத்திலுள்ள இன்னொரு கதாபாத்திரத்திடம் பேசுவது போல மறைமுகமாக இருக்கும் .ஆனால் ரஜினி சம்பந்தம் இல்லாமல் கையை பார்வையாளரைப் பார்த்து நீட்டி நேரடியாகவே பேச ஆரம்பித்தார் . அவை வெறும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் ,பாடல்கள் என்றால் ..வீட்டு வேலைக்காரராக இருக்கும் ஒருவர் அதிலும் காதல் காட்சியில் "கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு ..காலத்தின் கையில் அது இருக்கு .." என்று பாடினால் கேட்பவன் என்ன கேனயனா ? அதற்கு வேலைக்காரனின் காதலி வேறு " என்னமோ திட்டமிருக்கு " என்று பில்டப் வேறு ...ஆமாங்க இதெல்லாம் அவருக்கு தெரியாம இயக்குநரும் பாடலாசிரியரும் திணித்தது ..அல்லது ..இதைக்கூட அவர் பலமுறை தடுத்தும் கேட்காமல் சேர்த்து விட்டார்கள் ..என்று சொல்பவர்களை என்ன சொல்வது ..வடிவேலு பாணியில் ரொம்ப நல்லவன் என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தான் .

தன்னை நடுரோட்டில் காக்க வைத்து விட்டார் என்ற காரணத்துக்காக ஜெயலலிதா எதிர்ப்பு நிலை எடுத்தது .."மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ..ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது " என குரல் கொடுத்தது ..ஊடகங்களும் ஏதோ ரஜினி வாய்சினால் தான் திமுக வெற்றி பெற்றது ..இல்லையென்றால் ஜெயலலிதா வென்றிருப்பார் என காமெடி பண்ணியது ..அந்த பில்டெப்புகளெல்லாம் அடுத்த முறை கொடுத்த வாய்சிலேயே பணால் ஆனது ..மீண்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக பா.ம.க -வை எதிர்த்தது .. சும்மா விட்டிருந்தா குறைந்தது ரெண்டு இடத்துலயாவது தோற்க வாய்ப்பிருந்த பா.ம.கா-வை மறைமுகமாக ரசிகர்களை தூண்டிவிட்டு தோற்கடிக்கிறேன் பேர்வழின்னு எல்லா இடத்திலும் பா.ம.கா-வை வெற்றி பெற வைத்தது ..இதுக்கு பிறகாவது "பேர கேட்டாலே..அதிருதுல்ல ..ஒதறுதுல்ல"-ன்னு சொல்லாம இருந்திருக்கணும் .

வரமாட்டேன் ..வந்தாலும் வருவேன் ..வருவேண்ணு யார் சொன்னது ..நீங்களா நினைச்சுகிட்டா நான் என்ன செய்வது ..நான் பாட்டுக்கு சும்மா இருக்கேன் .. நாளை என்ன நடக்கும்-ன்னு சொல்ல முடியாது .. எல்லாம் (கைய மேலே தூக்குறது) என்றெல்லாம் மாறி மாறி சொல்லி வருவது எதனால் ? வேறு ஒன்றுமில்லை ..இத்தகைய ஊகங்கள் , எதிர்பார்ப்புகள் ,சந்தேகங்கள் ,விவாதங்கள் தன்னுடைய படங்களின் வியாபாரத்துக்கு மிகப்பெரிய பலமாய் இருக்கும் என்ற எண்ணம் தான் .

ரஜினிகாந்துக்கு எந்த சமூக பிரச்சனையிலும் ஆழமான அறிவோ ,தனக்கென ஒரு கருத்தோ இருந்ததில்லை ..அல்லது அரசியலுக்கு வந்து நிலைக்கும் அளவுக்கு அவருக்கு தலைமைப் பண்போ ,நிர்வாக திறனோ ,பக்குவமோ ,பொறுமையோ கிடையாது ..இவை அவருக்கு நன்றாக தெரிந்ததாலும் ..தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற உண்மையை வெட்டு உண்டு துண்டு ரெண்டு என்று போட்டுடைக்க விரும்பவில்லை ..காரணம் ? வரமாட்டோம் -ன்னு தெரியும் ..அதற்காக வருவோம் ,வரமாட்டோம் என ஊகத்தின் அடிப்படையில் நம் திரைப்படங்களுக்கும் ,ஊடகங்களில் நடக்கு கிடைத்து வரும் அதீத முக்கியத்துவத்துக்கும் கிடைத்து வரும் லாபத்தை நாமே கெடுத்துக் கொள்ள வேண்டும் ? போற வரைக்கும் போகட்டுமே என்பது தான் அவரது எண்ணமாக இருக்க முடியும்.

இதில் என்ன தவறு ? என்னைக் கேட்டால் தவறே இல்லை ..அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் .தன்னுடைய தொழில் ,அதில் வருகின்ற லாபம் , அதற்காக போடப்படும் கணக்குகள் எல்லாவற்றிலும் அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் ..அவரோடு சேர்ந்த திரைப்படத் துறையினரும் தெளிவாத்தான் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.. தெளிவாக வேண்டியவர் அவரல்ல ..தமிழக மக்கள் தான் .

இப்போது கூட ரஜினி கணக்கை கொஞ்சம் வித்தியாசமாக போட்டிருக்கலாம் என்பது என் எண்ணம் ..உண்ணாவிரத பேச்சுக்கு பிறகு வந்த மிரட்டலுக்கு பிறகு கூட "கர்நாடகாவில் என் படம் வரா விட்டால் எனக்கு நட்டம் ஏதுமில்லை" என்று பேசியவர் இப்போது 2 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நட்டம் வந்து விடக்கூடாதே என்பதால் வருத்தம் தெரிவித்து நட்டத்தை போக்கியிருக்கிறார் ..ஆனால் நடந்தது என்ன ? கர்நாடகாவில் 2 கோடி லாபம் .தமிழகத்தில் 20 கோடி நட்டம் ..கொஞ்சம் வேறு மாதிரியாக யோசித்து ..லாபத்திற்காகவேனும் "கர்நாடகாவில் என் படம் வரா விட்டால் எனக்கு நட்டம் ஏதுமில்லை" என்பதை மறு உறுதிப்படுத்தியிருந்தால் ,2 கோடி நட்டத்துக்கு பதில் தமிழகத்தில் கூடுதலாக 10 கோடி பார்த்திருக்கலாம் ..தமிழக மக்களும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு வடிவேலு போல நல்லவனாக நீடித்திருப்பார்கள் ..பாவம் ரஜினி ! நல்ல மனிதன் !!

Thursday, July 24, 2008

கிடைக்குமா கச்சத்தீவு? -ரவிக்குமார் எம்.எல்.ஏ

மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இப்போது களமிறங்கியுள்ளன. சிங்கள கடற்படையின் தாக்குதலைக் கண்டிப்பதில் போட்டிபோடும் அரசியல் தலைவர்கள், கச்சத்தீவு பிரச்னையைப் பற்றிப் பேசவும் தவறவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்னையை மத்திய அரசு எழுப்பவேண்டும், மீண்டும் கச்சத்தீவை நாம் மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களின் தலையாயப் பிரச்னையாக விளங்குகின்ற கச்சத்தீவுப் பிரச்னை எப்படி உருவானது? அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அப்போது அதை எதிர்க்க வில்லை என சொல்லப்படுவது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

'எந்த முக்கியத்துவமும் இல்லாத வெறும் பாறை களால் ஆனது' என அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் வர்ணிக்கப்பட்ட கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்தப் பிரச்னை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 1921-ம் ஆண்டிலேயே அது ஆரம்பித்துவிட்டது. அப்போது இந்தியா-இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின் கீழிருந்தன. இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளைக்கொண்ட மாநாடு ஒன்றில் அப்போது இந்தப் பிரச்னை விவாதிக் கப்பட்டது. கச்சத்தீவு பாரம்பரியமாக ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமாக இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டபோதிலும், ராம நாதபுரத்து ராஜாவின் ஜமீன்தாரி உரிமை தொடரும் அதே வேளையில் அந்தத் தீவு இலங்கைக்கு சொந்தமாக அளிக்கப்படவேண்டும் என்று இலங்கை அப்போதுதான் முதன்முதலாகக் கோரியது. ஆனால், அன்றிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும் இலங்கைப் பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகாவும் செய்துகொண்ட ஒப்பந்தம்தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய- இலங்கைக் கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை யில் இந்தியாவும் இலங்கையும் தம்முடைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், 'இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும், கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடமோ, இந்தியாவிடமோ விசா முதலான அனுமதிகளைப் பெறத்தேவையில்லை' எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரிவு ஆறில் 'இந்திய-இலங்கை கப்பல் கள் ஒன்று மற்றதன் கடல் எல்லைக்குள் சுதந்திரமாகச் சென்று வரலாம். பாரம்பரியமாக இருந்து வரும் அத்தகைய உரிமைகள் தொடர்ந்து காப்பாற்றப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1976-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம் அது. இந்தியா சார்பில் கேவல் சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22-ம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்திய, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல் லப்படவில்லை.

இந்த ஒப்பந்தங்களுக்குப்பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தந்தார்கள். அவ்வாறு பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதத்தில், 'இந்திய மீனவர்களோ, மீன்பிடி கப்பல்களோ இலங்கையின் கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது. அதுபோலவே இலங்கை மீனவர்களோ, மீன்பிடிக் கப்பல்களோ இந்திய கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது' எனக் கறாராக வரையறுக்கப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. அந்த ஒப்பந்தத்தை தி.மு.க. சரியான முறையில் எதிர்க்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் இப்போது குற்றம்சாட்டி வருகின்றன. அது உண்மையல்ல. 1974-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் இதுபற்றிப் பிரச்னை எழுப்பி தி.மு.க. உறுப்பினர்களாக இருந்த இரா.செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் வெளி நடப்பு செய்துள்ளனர். ''இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியை தாரைவார்த்துக் கொடுக்கும் இந்த மோசமான ஒப்பந்தத்தைப் போடுவதற்கு முன் மத்திய அரசு எங்களோடு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதித்து இந்த அவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கவேண்டும். இலங்கையோடு நல்லுறவு தொடரவேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம். ஆனால், இந்த ஒப்பந்தம் நம்முடைய நாட்டின் ஒரு பகுதியை எந்த வரை முறையுமின்றித் தாரைவார்த்துக் கொடுப்பதாக இருக்கிறது. இது எந்தவொரு அரசாங்கமும் செய்யக்கூடிய காரியம் அல்ல. எனவே, நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்'' என்று இரா.செழியன் பேசினார்.

''இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற் கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தேச விரோதமானது. தேசப்பற்று இல்லாதது. உலகில் உள்ள நாகரிகமடைந்த நாடு எதுவும் இத்தகைய மோசமான ஒப்பந்தத்தை செய்துகொண்டது இல்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைப் பிரதமர் வெற்றி பெற்றவராகியிருக்கிறார். இந்தியப் பிரதமரோ பரிதாபமான நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார். இது நம்முடைய ஒருமைப்பாட்டின் மீது விழுந்த பலமான அடியாகும்'' என்று ஆவேசமாகப் பேசி விட்டு நாஞ்சில் மனோகரன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

தி.மு.க. உறுப்பினர்களைத் தொடர்ந்து ஃபார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.கே.என்.தேவர், ''கச்சத்தீவு என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். ஆயிரக் கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்க்கை இப்போது ஆபத்தில் தள்ளப்பட்டு உள்ளது. இலங்கை அரசாங்கம் தன்னுடைய ராணு வத்தை கச்சத்தீவுக்கு அருகில் கொண்டுவந்து குவித்துள்ளது. நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள். மக்கள் மீது உங்களுக்கு இரக்கம் கிடையாது... நாட்டுப்பிரிவினைதான் மகாத்மா காந்தியடிகளின் உயிரைக் காவு வாங்கியது. கச்சத்தீவு என்பதோ தமிழகத்தின் பகுதி மட்டுமல்ல, இந்திய நாட்டின் ஓர் அங்கம். நீங்கள் துரோகம் செய்கிறீர்கள்'' என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார்.

பெரியகுளம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஷெரீப், ''1968 ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியே நான் இந்த அவையில் கச்சத்தீவு ராமநாதபுரத்து ராஜாவுக்குத்தான் சொந்தமானது என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை சமர்ப்பித்தேன். அவற்றைப் படித்துப்பார்க்க அரசாங்கம் தவறிவிட்டது. முன்னர் நான் அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தேன். அந்தப் பகுதி மக்களின் கருத்தையோ, தமிழக முதல்வரின் கருத்தையோ கேட்காததற்காக மத்திய அரசு வெட்கப்படவேண்டும். அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து நானும் வெளிநடப்பு செய்கிறேன்'' என்று பேசினார்.

ஒரிஸ்ஸா மாநிலத்தின் கலஹாந்தி தொகுதியைச் சேர்ந்த சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.கே.தேவ், ''நம்மிடம் உள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் யாவும் கச்சத்தீவு என்பது ராமநாதபுரம் ஜமீனுக்கு உட்பட்டது. தமிழக அரசுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கின்றன. ஆகவே, அரசியலமைப்பு சட்டப்படி கச்சத்தீவை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. இந்த நாடு காங்கிரஸ் கட்சி யினுடைய ஜமீன் சொத்தல்ல. சில நாட்களுக்கு முன்னாள் அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியாக இருந்த கொக்கோ தீவு பர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இப்போது கச்சத்தீவு கொடுக்கப்படுகிறது. இப்படி நம்முடைய நாட்டின் பகுதிகளை கொடுத்துக்கொண்டே இருந்தால் அதற்குப் பிறகு என்ன மிச்சம் இருக்கும்'' என்று கேள்வி எழுப்பினார்.

ஜனசங்க உறுப்பினராய் இருந்த வாஜ்பாய் கச்சத்தீவின் பழைய பெயர் வாலிதீப் என்றும் அங்குதான் ராமனும் வாலியும் போரிட்டுக்கொண்டனர் என்றும் பேசினார். அந்த சமயத் தில் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் தொகுதியைச் சேர்ந்த ஜனசங்க உறுப்பினர் உக்கம்சந்த் கச்வாய் என்பவர் சில காகிதங்களைக் கிழித்து அவையில் வீசினார். இப்படி யான சம்பவங்களுக்குப் பிறகுதான் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண்சிங், அவையில் அறிக்கையை வாசித்தார்.

''இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடை யில் உள்ள பாக் நீரிணையில் சர்வதேச கடல் எல்லையை வரையறுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகி இருக்கிறது. அதனால்தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இரண்டு நாடுகளுக்கும் நியாயம் செய்யக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இருநாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்ற மீன்பிடிக்கும் உரிமையும், கோயில் களுக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் உரிமையும், கடலுக்குள் சென்று வரும் உரிமையும் எதிர்காலத்திலும் முழுமையாக காப்பாற்றப்படும் என நான் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன்'' என்றார் அவர்.

அந்தக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யாக இருந்த எம்.கல்யாணசுந்தரம் இந்த ஒப்பந்தத்தைத் தம்முடைய கட்சி வரவேற்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், அமைச்சரின் வாக்குறுதி பற்றி விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஸ்வரண்சிங், ''மீன் பிடிப்பதற்கான எல்லை பிரிட்டிஷ் அரசால் 1921-ம் ஆண்டிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவுக்கு மேற்கே மூன்றரை கடல் மைல்கள் வரை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ளலாம். அதற்குக் கிழக்கே உள்ள பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக்கொள்ளலாம் என்று அப்போது கூறப்பட்டது. ஆனாலும்கூட இரண்டு நாட்டு மீனவர்களும் கச்சத்தீவைச் சுற்றி சுதந்திரமாக மீன்பிடித்து வருகின்றனர். தங்களுடைய வலைகளைக் காயவைப்பதற்கு கச்சத்தீவைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பாரம்பரிய உரிமை என்றால் என்ன என்பதும் இந்த ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கச்சத்தீவின் மீதான இலங்கையின் உரிமை அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இந்திய மீனவர்களின் பாரம்பரியமான உரிமைகளும், அங்குள்ள தேவாலயத்துக்குச் செல்வதற்கான உரிமையும் பாதிக்கப்படாது. அதுபோலவே, இந்திய-இலங்கை மீனவர்கள் ஒருவர் மற்ற நாட்டு எல்லைக்குள் படகுகளிலோ, கப்பல்களிலோ சென்று வருவதற்கான உரிமையும் தொடர்ந்து காப்பாற்றப் படும்'' என்று ஸ்வரண்சிங் விளக்கம் அளித்தார்.

மத்திய அரசு அளித்த வாக்குறுதி சுமார் பத்து ஆண்டுகள் வரை இடை யூறின்றி தொடர்ந்தது. ஆனால், இலங் கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அதன்பிறகு தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதும், அவர்களுடைய மீன்களும், வலைகளும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. கடந்த 25 ஆண்டுகளில் சுமார் முந்நூறு தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் படுகாயப்படுத்தப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளும், வலைகளும், மீன்களும் சிங்கள கடற்படையால் நாசப்படுத்தப்பட்டன. அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட கச்சத்தீவை எப்படி திரும்பப்பெற முடியும் என்று ஒருசிலர் கேள்வி எழுப்புகின்றனர். 1987-ம் ஆண்டு இந்திய- இலங்கை அரசுகளுக்கு இடையே போடப்பட்ட 'ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம்' இப்போது இலங்கை அரசால் தன்னிச்சையாக மீறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பாரம்பரிய தாயகமாக கருதப்படவேண்டும். அதைப் பிரிக்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்று இலங்கை அரசு வடக்கு, கிழக்கு பகுதிகளைப் பிரித்தது மட்டுமின்றி கிழக்குப் பகுதியில் அரசாங்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இது ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறிய செயலாகும். இப்படி ஒப்பந்தத்தை மீறி இலங்கையே ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா மட்டும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஏன் மதித்து காப்பாற்ற வேண்டும்? இன்னும் எத்தனை மீனவத் தமிழர்களை நாம் பலியாகக் கொடுப்பது? இதை மத்திய அரசு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

'கச்சத்தீவை மீட்பதற்கான காலம் நெருங்கி விட்டது' எனத் தமிழக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். மத்தியில் ஆள்பவர்களோ தேர்தலுக்கான காலம் நெருங்கி விட்டது என்றுதான் கவலைப்படுகிறார்கள். கச்சத்தீவு பற்றி சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதை ஒரு முன் நிபந்தனையாக மாற்றவேண்டும். மீனவர்கள் ஒன்றுபட்டால் அதைச் செய்யமுடியும்.

நன்றி - விகடன்.

Saturday, July 12, 2008

மானெங்கெட்ட மத்திய மாநில அரசுகள்

வல்லரசாவதெல்லாம் இருக்கட்டும் .முதலில் தன் நாட்டு மீனவர்களை தொடர்ந்து சுட்டுக்கொல்லும் சுண்டைக்காய் இலங்கை அரசை கண்டிக்க வக்குண்டா இந்த இந்திய வல்லரசுக்கு ..வெட்கம் .கேவலம்.

தமிழனென்றாலே பாராமுகம் தான் .அதிலும் மீனவன் என்றால் கேட்கவே வேண்டாம் .மற்றவர்களுக்காகவெல்லாம் கொதித்தெழும் அரசுகளும் அரசியல் கட்சிகளும் மீனவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் பாராமுகமாகவும் அலட்சியமாகவும் இருப்பதற்கு காரணம் மீனவர்கள் கொண்டுள்ள குறைந்த பட்ச அரசியல் செல்வாக்கு தான் .

புவியல் ரீதியாக நேர்கோட்டில் வசித்து வரும் மீனவர்கள் தொகுதிவாரியாக பல தொகுதிகளுக்கு பங்கிடப்படுவது தான் இதற்கு காரணம் .உதாரணமாக குமரி மாவட்டத்தில் கன்னியாக்குமரி முதல் கேரள எல்லையான நீரோடிவரை நீண்ட கடற்கரை பகுதியில் சுமார் 45 மீனவ கிராமங்களில் வசித்து வரும் மீனவர்கள் அரசியல் ரீதியாக எந்த முக்கியத்துவத்தையும் பெறுவதில்லை .நீள்வாக்கில் சேர்த்தால் தனி சட்டமன்ற தொகுதி அளவுக்கு மக்கள் தொகை இருந்தாலும் 5 சட்டமன்ற தொகுதிகளில் பிரிந்திருக்கிறார்கள் .இதனால் எந்த தொகுதியிலும் அவர்களால் முக்கியத்துவம் பெற முடிவதில்லை.

உயிரை பணயம் வைத்து அன்றாடம் அலைகளோடு அல்லாடும் மீனவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாத கேடுகெட்ட அரசாங்கம் தன்னை ஒரு வல்லரசாக பறைசாற்றிக் கொள்ள முனைவது போல கேலிக்கூத்து எதுவுமில்லை .

மற்றவிடயங்களிலெல்லாம் தேசபக்தி பொங்கி வழியும் உள்நாட்டு மக்களுக்கு கூட மீனவன் அந்நிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டாலும் அது ஒரு செய்தியே இல்லை .

தன் குடிமகன்கள் இவ்வளவு சிறிய அண்டை நாட்டால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப் பட்டுக்கொண்டிருந்தாலும் அந்நாட்டிலிருந்து வரும் பிரதமருக்கு சிவப்பு கம்பளம் விரிந்து மரியாதை கொடுக்கும் கேடு கெட்ட இந்திய அரசாங்கத்தால் அதிகார பூர்வமாக ஒரு சிறிய எச்சரிக்கை கூட விடமுடியவில்லை .கொடுமையிலும் கொடுமை .

இங்கிருக்கும் கலைஞர் அரசாங்கம் வெறும் கடிதம் எழுதினோம் என்று எத்தனை நாளைக்கு பூச்சாண்டி காட்ட முடியும் ? மீனவ மக்களென்றால் அவ்வளவு இளப்பமாக போய்விட்டதா ? கலைஞர் அவர்கள் தன் மெத்தனத்தை உடனே களைய வேண்டும் ..இல்லையென்றால் அதன் பலனை அவர் அனுபவிக்க வேண்டியிருக்கும் .

Monday, April 28, 2008

பண்பால் கவர்ந்த ஜாக்கிசான்!





சமீபத்தில் நடைபெற்ற கலைஞானி கமல்ஹாசனின் தசாதாவரம் பட பாடல் குறுந்தட்டு வெளியீட்டு விழாவில் தன்னுடைய எதார்த்த நடவடிக்கைகளின் மூலம் அனைவரையும் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தவர் உலக நட்சத்திரம் ஜாக்கிசான்.

குறுந்தட்டை கலைஞர் வெளியிட ஜாக்கிசான் பெற்றுக் கொண்டார் .அப்போது குறுந்தகட்டை சுற்றியிருந்த கவரையும் , நாடாவையும் வழக்கம் போல கீழே போட்டுவிட ,கொஞ்சம் கூட தாமதியாமல் அதை குனிந்து பொறுக்கிக் கொண்டு மேடையின் ஓரத்தில் குப்பைத் தொட்டி இருந்தால் அதை போட வேண்டும் என்ற எண்ணத்தில் குடு குடுவென்று ஓடிய ஜாக்கிசானை பார்த்து வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது .பாதி வழியில் இடை மறித்த கமல் அதை வாங்கி கைமாற்றி விட்டு ,ஜாக்கிசானை மீண்டும் இருக்கையில் அமருமாறு பணிக்க ,சின்ன குழந்தையின் குதூகலத்தோடு ஓடி வந்து ஜாக்கிசான் இருக்கையில் அமர்ந்தது கண்கொள்ளா காட்சி .

இங்கிருக்கும் வீடியோ காட்சியைப் பார்த்தால் ஜாக்கிசான் எந்த வித உள்ளுணர்வும் இல்லாமல் மிகவும் அனிச்சை செயல் போல இதைச் செய்ததை காணலாம் .அகில உலக பெரு நட்சத்திரமாக இருந்தாலும் ,ஒரு பணியை மற்றவர் செய்வார்கள் என எதிர்பார்க்காமல் ,அல்லது மற்றவரை செய்ய பணிக்காமல் ,பாராட்டு பெறும் எந்த நோக்கமும் இல்லாமல் ஜாக்கிசான் செய்த இந்த செயல் சிறியதாக இருந்தாலும் ,நமக்கு (குறிப்பாக குப்பையை கண்ட இடத்தில் தூக்கியெறியும் நம்மூர் பொதுஜனத்துக்கு) ஒரு பாடம் .

Monday, March 31, 2008

மதம் மாறும் எறையூர் வன்னியர்களுக்கு நன்றி!

இந்து மதத்தில் சாதிப்பாகுபாடு இருக்கிறது .சரி! .கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகு மட்டும் என்ன வாழுதாம் ? அங்கேயும் தானே சாதி பாகுபாடு இருக்கிறது .அங்கேயும் சில இடங்களில் தலித் கிறிஸ்தவர்கள் ஆதிக்க சாதியினரால் ஒதுக்கி வைக்கப்படுகின்றரே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது .இதற்கு பதில் சொல்லும் சில கத்தோல்லிக்கர்கள் ,இது கத்தோலிக்க மதத்தால் கொள்கை அடிப்படையில் ,கோட்பாடு படி அங்கீகரிக்கப்படவில்லை .திருச்சபை இதை ஒரு போதும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க முடியாது .ஆனால் பன்னெடுங்காலமாக சாதி அமைப்பில் ஊறியவர்கள் கத்தோலிக்கரான பின்னரும் சாதி வேறுபாட்டை நடைமுறையில் கடைபிடிக்கின்றனர் .இது கத்தோலிக்க மதத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல .ஆனால் அதை பின்பற்றுபவர்களின் கோளாறு என்று வாதிடுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை கத்தோலிக்க மதம் வழிபாடுகளில் ,பங்கு நடைமுறைகளில் சாதிப்பாகுபாட்டை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க மறுப்பது மட்டுமல்ல ,அந்த விதிமுறை நடைமுறையில் மீறபடும் போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் திருச்சபைக்கு உள்ளது .எங்கள் சட்டதிட்டங்களில் சாதி பாகுபாடு கிடையாது ,அந்தந்த பகுதியிலுள்ள மக்களின் சில தவறான நடைமுறைகளும் பின்பற்றுதலுமே இதற்கு காரணம் என்று சொல்லி திருச்சபை தப்பித்துக் கொள்ள முடியாது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

விழுப்புரம் மாவட்டம் இறையூர் கிராமத்தில் ஒரே பங்கில் உறுப்பினர்களாக இருக்கும் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் ,தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழிபாடு மற்றும் சில நடைமுறைகளில் பாகுபாடு பல காலமாக இருந்து வந்திருக்கிறது . தலித் கிறிஸ்தவர்கள் இறந்தால் அவர்கள் சவ ஊர்வலம் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாது .சடலத்தை சுமந்து வரும் வண்டி சமமாக உபயோகப்படுத்தப்படவில்லை .இத்தகைய சாதி வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுவது இத்தகைய சூழலில் வளராத என்போன்றவர்க்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது . கிறிஸ்தவர்களிடையே சாதிப்பாகுபாடு இல்லை என்று நான் சொல்ல வரவில்லை .நான் வளர்ந்த சூழலில் திருமணம் போன்றவற்றில் சாதி இன்னும் இருக்கிறது , சாதி சார்ந்த உள்ளடி வேலைகள், அரசியல் இருகிறது என்றாலும் ,அதை இவ்வளவு வெளிப்படையாக வழிபாட்டு முறைகளிலும் ,நடமுறையிலும் கடைபிடிப்பதை பார்த்ததில்லை . ஆனால் சில இடங்களில் தலித்களுக்கு தனிக்கல்லறைகள் இருப்பதாகவும் ,வெளிப்படையாகவே கோவில்களில் சமத்துவமின்மை கடைபிடிக்கப்படுவதாகவும் வரும் செய்திகள் மிகவும் அவமானத்துக்குரியவை ..கத்தோலிக்க மதம் எந்த காரணத்தைக்கொண்டும் இத்தகைய நடைமுறைகளை தொடர்வதற்கு அங்கீகரிப்பதோ ,அல்லது கண்டுகொள்ளாதிருப்பதோ மிகவும் கண்டிக்கத்தக்கது .

எறையூரைப் பொறுத்தவரை பெரும்பான்மை வன்னியர்கள் தங்கள் பங்கிலுள்ள தலித்துக்களை ஆலய விஷயங்களிலும் சமமாக நடத்த விருப்பவில்லை என்பது கண்கூடு .தாங்கள் சாதி ரீதியாக புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்த தலித்துக்கள் தனியாக ஒரு கோவிலை கட்டி எழுப்பி அதற்கு மறைமாவட்ட அங்கீகாரத்தை கோரியிருக்கிறார்கள் .தங்களுக்கு தனியாக ஒரு பங்குத்தளத்தை உருவாக்கி தருமாறு கோரியிருக்கிறார்கள் .மறை மாவட்டம் இது வரை அதனை அங்கீகரிக்கவில்லை ..அங்குள்ள வன்னிய கிறிஸ்தவர்களும் அதை எதிர்த்திருக்கிறார்கள். அது இப்போது பூதாகரமான பிரச்சனையாக வெடித்து ,கலவரம் துப்பாக்கிச்சூட்டில் போய் முடிந்திருக்கிறது.

இப்போது மறைமாவட்ட ஆயர் இது குறித்து விடுத்த அறிவிப்பில் தனிப்பங்கு அவசியமில்லை எனவும் ,தொடர்ந்து ஒரே பங்காக செயல்பட வேண்டுமெனவும் ,வழிபாடுகளில் ,கோவில் நடைமுறைகளில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது எனவும் ,தலித்துகளுக்கு சம உரிமை உண்டு எனவும் அறிவித்திருக்கிறார்.

அதன் பின்னர் தலித் ஒருவர் இறந்து போக அவர் ஆயரின் அறிவிப்பின் அடிப்படையில் வன்னியர்கள் பயன்படுத்தும் சவ வண்டியில் உடலை வைத்து பொது வழியில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது . அதையும் வன்னியர்கள் சிலர் எதிர்த்திருக்கிறார்கள் .எனவே காவல் துறையின் துணையுடன் இது நடந்திருக்கிறது .இதன் பின்னர் வன்னியர் ஒருவர் இறந்து போக ,தலித்துக்கள் பயன் படுத்தியது என்ற காரணத்திற்காக அந்த சவ வண்டியை உபயோகிக்காமல் தாங்களே தூக்கிச் சென்று அடக்கம் செய்திருக்கிறார்கள் .

இப்போது இதை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது ? வன்னியர்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்புகிறார்கள் .இதற்கு திருச்சபையும் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் .இதைவிட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது . சரி! சம உரிமை கிடைக்காத தலித்துக்கள் தங்களுக்கென்று ஒரு ஆலயத்தை அமைத்து எங்களை பிரித்து விட்டு விடுங்கள் என கோருகிறார்கள் ..அதையும் வன்னியர்கள் விரும்பவில்லை . தங்கள் சாதி ஆதிக்கத்தை தொடர முடியாது என்பது காரணமாக இருக்கலாம் ..ஆனால் தலித்துக்களின் அந்த கோரிக்கையை மறைமாவட்டம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை ? அங்கீகாரம் வழங்கியிருக்க வேண்டியது தானே ? என்ற கேள்வி எழலாம் .என்னைப் பொறுத்தவரை ஒரு பங்கின் மக்கள் தொகை அதிகரிப்பால் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கலாமே தவிர ,சாதி அடிப்படையில் ,அதுவும் ஆதிக்க சாதித் திமிருக்கு பயந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பயந்து தனியாக செல்ல வேண்டும் என்று திருச்சபை தீர்ப்பு வழங்க கூடாது .மாறாக எந்த காரணத்தைக்கொண்டும் சாதிப்பாகுபாட்டை அங்கீரரிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல , கோவிலில் ,வழிபாட்டு முறைகளில் சாதிப் பாகுப்பாகுபாடில்லாத சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டியது மறைமாவட்டத்தின் கடமை .கொள்கை அடிப்படையில் மறைமாவட்டம் அதைத் தான் செய்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான விடயம் . ஆனால் நடைமுறையில் அதனை அமல் படுத்த மறைமாவட்ட நிர்வாகம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கப் போகிறது என்பதில் தான் அதன் யோக்கியதை தெரிய வரும் .

தொடக்கத்தில் தலித்துக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை மறைமாவட்டம் கண்டுகொள்ளவில்லை என்று அதிருப்தி காட்டினார்கள் .ஆனால் மறைமாவட்டத்தின் இந்த அறிவிப்புக்கு பின்னர் வன்னியர்கள் கோபமடைந்து தாங்கள் மதம் மாறப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் . சன் தொலைக்காட்சியில் இது குறித்து பேசிய ஒரு வன்னியர் சமத்துவம் என்ற பெயரில் காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வரும் நடைமுறைகளை எங்களை மாற்ற சொல்லுவது சரியல்ல .. நாங்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள் தான் .எனவே நாங்கள் அந்த மதத்துக்கே போகிறோம் என்று குறிப்பிட்டார் .

காலம் காலமாக கடைபிடித்து வருவதை மாற்ற விருப்பாவிட்டால் இந்த ஆள் இந்து மதத்திலிருந்து ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு வர வேண்டும் ? அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானே ? சரி! இப்போது காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வந்த ஏற்றத் தாழ்வையும் , சாதி ஆதிக்கத்தையும் இப்போது கட்டிக்காக்க கிறிஸ்தவ மதம் அனுமதிக்கவில்லையாம் .அதனால் அத்தகைய சுதந்திரத்தை வழங்கக்கூடிய இடத்துக்கு அவர்கள் போகிறார்களாம் .. என்ன ஒரு ஒப்புதல் வாக்குமூலம் ! தயவு செய்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வெளியேறி விடுங்கள் ஐயா ! உன்னை மாதிரி சாதி வெறிபிடித்தவர்கள் ,மதத்தின் பெயரால் சக கிறிஸ்துவனை சமமாக மதிக்க தெரியாதவனெல்லாம் கிறிஸ்தவ மதத்தை விட்டு போவது தான் உண்மையான சமதர்மத்தை விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்பதை உன்னைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ..உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்கும் மதமாற்ற முடிவுக்கும் மனமார்ந்த நன்றி!

தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது .. நடைமுறை ஓட்டைகளையும் ,அந்தந்த பகுதியில் உள்ள சாதி ஆதிக்கத்தையும் சாக்காக வைத்து ஆலயங்களில் வெளிப்படையாக சாதிப் பாகுபாடு பார்க்கும் கிறிஸ்தவர்களுக்கெதிராக உறுதியான கொள்கையை அறிவிக்கும் நிர்பந்தத்துக்கு மறைமாவட்டம் தள்ளப்பட்டிருக்கிறது .ஆலய நடைமுறைகளில் சாதிப் பாகுபாடு பார்ப்பவர் பாதிரியராக இருந்தாலும் அவர்கள் கத்தோலிக்க மதத்தில் நீடிக்க தகுதியில்லாதவர்கள் . அத்தகைய உறுதிப்பாட்டை மறைமாவட்ட நிர்வாகங்களும் ஆயர்களும் மறு உறுதிப்படுத்தவும் நடைமுறைப்படுத்தவும் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும் .தவறினால் ஆயராய் இருந்தாலும் சரி ..தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ளும் தார்மீகத் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள் என்பதே உண்மை கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருக்க முடியும் .

"ஒரு உறையில் இரண்டு வாள் இருக்க முடியாது " என்ற பைபிள் வாசகப்படி ,சாதி மேலாண்மையை விரும்புபவர்கள் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியேறுவதே கத்தோலிக்க மதத்துக்கு நல்லதாக இருக்கும் .

Wednesday, March 12, 2008

உயிரக்காரர்

அந்தோணிப்பிள்ளை ஒரு காலத்துல பெரிய தொழில்காரர் .மீன் பிடி சேல் சொல்லுவதிலும் ,எந்த கடலடியிலும் துணிந்து தொழிலுக்கு போவதிலும் கெட்டிக்காரர் என பெயரெடுத்தவர் .இப்போ பிள்ளைகளெல்லாம் தலையெடுத்த பொறவு தொழிலுக்கு போறதில்ல ..ஆனாலும் தெனமும் காலைலயே கடலைப் பார்த்து இருக்குற சூசை வீட்டு திண்டுல வந்து உக்காந்துடுவாரு .அவர சுத்தி ஒரு கூட்டம் உக்காந்துக்கும் .அவரு பாட்டுக்கு பழைய கதைகளையும் ,தொழில் பராக்கிரமத்தையும் சொல்லிட்டிருப்பாரு .கருக்கலுக்கு 3 ,4 மணிக்கு போன வலைக்கரங்கள்ளாம் 8 மணியிலிருந்து திரும்ப ஆரம்பிப்பாவு . மணி இப்போ 7.30 ஆச்சு.

அந்த பக்கம் வந்த அந்தோணிப்பிள்ளை தம்பி மவன் கில்பர்ட் அவரைப்பார்த்தவுடம் கேட்டான் " பெரியா ! என்ன சேல் ?"

"ஏல மக்கா கில்பர்டா ! சேல் சோண்வாடு தான் .நீரோட்டத்த வச்சி பாத்தா கீழா மடைக்கு மேலே தெக்கால நெத்தலிப் பழுப்பு இருக்கு "

"ஐயே பெரியா ! எல்லாவனும் சாளா வலையெல்லா தள்ளியிருக்கான் "

"ஏல நான் சொன்னா எவன் கேக்கான் ..ராத்திரி ரூபஸ் கிட்ட கச்சாவலை தள்ள சொன்னதுக்கு சும்மா கெடயும் வே -ன்னு சொல்லிட்டு போறான் .இப்போ சாளா வலை தான் தள்ளியிருக்கான்"

"பெரியா ! அன்னா ஒரு வலைக்காரன் பாயை வச்சு வர்றானே ! யாரு வல?"

"மரம் ஓடுற ஓட்டப்பாத்தா மெல்கியாஸ் மொவன் மாதிரி இருக்கி"

"பொட்டு போல தெரியுற மரத்த எப்பிடி பெரியா கரெட்டா சொல்லுறவு?"

"ஏல மக்கா ! மரத்துல உள்ள தொரத்த பார்த்தா தெரியாதால ..செதுக்கும் போது நானும் இருந்தேன்ல ..சரி ..நீ என்ன தொழிலுக்கு போவாம உசர நிக்க?"

"பெரியா ..சேலும் சரியில்ல .காத்தா இருந்துச்சா .அதான் போவல்ல"

"என்னல ..இந்த காத்துக்கெல்லாம் ஒயக்க இருந்தா சோத்துக்கு என்னல பண்ணுவ'

"பெரியா ! அங்க பாருங்க ஒரு வலக்காரன் தொளவ காட்டுறான் "

"நில்லு மக்கா பாத்துண்டு ! ... ஏல நான் சொன்னேனுல்ல ..நெத்தலி பழுப்பு வந்திருக்கி .அதான் கச்சாவலைவள இளக்க சொல்லி தொளவ காட்டுறான் "

"பெரியா ! இப்போ கச்சாவலை எளக்குனா நெத்தலி படுமா "

"ஏல நான் சொன்னேமில்லா .. கீழா மடைக்கு தெக்கால கொண்டு போடு .மரத்துல கெட்டி வச்சு தான் கொண்டு வரணும்"

"பெரியா ! அப்போ நான் புருமிஸ கூட்டுகிண்டு வலைய எளக்குறேன் ..வாரேன்"

"சீக்கிரம் போல மக்கா!"

சில நிமிடங்களில் சிலர் கச்சாவலையை காவிக் கொண்டுவந்து அவரசம் அவசரமாக மரத்தில் வைத்து கட்டி கடலில் இறக்கிக்கொண்டிருந்தார்கள் .சாளா வலைகளெல்லாம் திருப்ப வந்து கொண்டிருந்தன .கரையில் தயாராக கச்சாவலை இருக்க ,மரம் அடைந்தவுடன் சாளாவலையை இறக்கி வைத்து விட்டு ,கச்சாவலையைக் கட்டி மீண்டும் இளக்கிக் கொண்டிருந்தார்கள் .

கந்தசாமி நாடார் திண்டுல வந்து உக்காந்தார் ..பக்கத்திலிருந்த சேசுநாயகம் "என்ன நாடாரே ! தூரமா?"

"இல்லையா ! கறிக்கு மீனு ஆப்புடுமாண்ணு பாக்க வந்தேன்"

அந்தோணிபிள்ளை கந்தசாமி நாடாரை பார்த்துவிட்டார் "ஓ உயிரகாரரா ! பாத்து நாளாச்சே ,இந்தால வாங்க"

"அந்தோணிபிள்ள உயிரகாரரா ! இஞ்ச தான் இருக்கியளா ?"

"நாடார் மீன் வாங்க வந்தியளோ? "

"ஆமா ... மவன் மெட்ராஸ்ல இருந்து வந்திருக்கான் ..கொஞ்சம் மீனு வாங்கலாமிண்ணு சரி கடப்பறத்துல போய் பாக்கலான்ணு வந்தேன்"

"நாடாரே ..இன்னிக்கு நெத்தலி தான் கெடச்சும் .போதுமா "

"ஓய் ! நெத்தலிக்கு என்ன கொறச்ச"

"அப்போ உக்காருங்க ..வலைவ வந்தா தெக்க போலாம் "

"ஓய் என்ன இது ..கடக்கரை இப்படி கெடக்கு ..முன்னால எல்லாம் என்னா கூட்டமா இருக்கும்"

"ஹூம் .இப்போ யாருவே ஊருல தொழிலுக்கு போறா ..பாதி பேர் பகரின்ல போட்டுக்கு போறான் .மீதிபேரு கேராளால போட்டுக்கு போறான் ..ஏதோ நாலஞ்சு பேர் ஊருல கெடந்து சாளாவலையோ கச்சாவலையோ ,டிஸ்கோ வலையோ தள்ளிட்டு கெடக்கான் . ஓய்! அப்போ வாவல் ,நெத்தலிக்கு மடி தள்ளுனா 7 ஒமல் 8 ஒமல்ல வெலங்கி கொண்டு வருவான் .வாங்க ஆளிருக்காது .இப்போ மடியும் இல்ல .மடி தள்ள 8 பேருக்கு எங்க போவ ..இங்க ஊருல உள்ளவனே கறிக்கு மீனில்லாம நார்வோல் சந்தைலயும் தெங்கம்புதூர் சந்தைலையும் போய் மீன் வாங்க வேண்டிருக்கி .என்னத்த சொல்ல . இப்பவாவது நெத்தலியாவது கெடச்சும் ..செப்டம்பர் வந்தா அதுவும் கெடச்சாது ..எல்லாவனும் ராளுக்கு டிஸ்கோ வல தள்ளுவான் .100 ராள கத்தத்துல இடுக்குண்டு போய் வித்தாண்ணா சாப்பாட்டுக்கு மிஞ்சி பைசா ..கறி மீன பத்தி எவன் கவலப்படுறான் .ஓய் ! உயிரக்காரரே அந்த காலத்துல இந்த ராளு பட்டா தரித்திரம் .ஒருத்தனும் தின்ன மாட்டான் .கடபறத்துல வெட்டி பூத்திடுவோம்"

"தெரியுமில்லா"

"இப்போ அதுக்கு வந்த மவுச பாத்தீரா ..மீனு தான் இல்லையே தவிர இப்போ பணத்துக்கொண்ணும் பஞ்சம் இல்லை ஓய்!"

"உயிரக்காரர் சொல்லுறது சரி தான்"

சேசுநாயகம் குறுக்கப் புகுந்தான் "பெரியா ! உயிரக்காரனா ..என்ன பெரியா அது?"

"ஏல மக்கா ! எங்க காலத்துல நம்ம முக்குவ குடியில உள்ள குடும்பமும் நாடாகுடியிலுள்ள குடும்பமும் உயிரகாரரா இருப்பாவு ..தெனமும் நம்ம ஊடுகள்ள இருந்து உயிரகாரர் ஊட்டுக்கு கறிக்கு மீனு போவும் .அவுக ஊட்டுல இருந்து கருப்புட்டி ,நொங்கு ,தேங்க ,பனங்கெளங்க்குண்ணு அப்பப்ப வரும் ..தாயா புள்ளையா பரிமாறுவோம் ..இப்ப எங்கல இருக்கு அது ..அது ஒரு காலம் மக்கா"

அந்தோணிப்பிள்ளை பெரிதாக அலுத்துக்கொண்டார் .. கந்தசாமி நாடாரும் தலையை ஆட்டிக்கொண்டார்.

Thursday, February 28, 2008

சுஜாதா - கமல் இரங்கல் செய்தி

kamal

நன்றி : www.kollywoodtoday.com

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives