Monday, March 31, 2008

மதம் மாறும் எறையூர் வன்னியர்களுக்கு நன்றி!

இந்து மதத்தில் சாதிப்பாகுபாடு இருக்கிறது .சரி! .கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகு மட்டும் என்ன வாழுதாம் ? அங்கேயும் தானே சாதி பாகுபாடு இருக்கிறது .அங்கேயும் சில இடங்களில் தலித் கிறிஸ்தவர்கள் ஆதிக்க சாதியினரால் ஒதுக்கி வைக்கப்படுகின்றரே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது .இதற்கு பதில் சொல்லும் சில கத்தோல்லிக்கர்கள் ,இது கத்தோலிக்க மதத்தால் கொள்கை அடிப்படையில் ,கோட்பாடு படி அங்கீகரிக்கப்படவில்லை .திருச்சபை இதை ஒரு போதும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க முடியாது .ஆனால் பன்னெடுங்காலமாக சாதி அமைப்பில் ஊறியவர்கள் கத்தோலிக்கரான பின்னரும் சாதி வேறுபாட்டை நடைமுறையில் கடைபிடிக்கின்றனர் .இது கத்தோலிக்க மதத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல .ஆனால் அதை பின்பற்றுபவர்களின் கோளாறு என்று வாதிடுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை கத்தோலிக்க மதம் வழிபாடுகளில் ,பங்கு நடைமுறைகளில் சாதிப்பாகுபாட்டை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க மறுப்பது மட்டுமல்ல ,அந்த விதிமுறை நடைமுறையில் மீறபடும் போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் திருச்சபைக்கு உள்ளது .எங்கள் சட்டதிட்டங்களில் சாதி பாகுபாடு கிடையாது ,அந்தந்த பகுதியிலுள்ள மக்களின் சில தவறான நடைமுறைகளும் பின்பற்றுதலுமே இதற்கு காரணம் என்று சொல்லி திருச்சபை தப்பித்துக் கொள்ள முடியாது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

விழுப்புரம் மாவட்டம் இறையூர் கிராமத்தில் ஒரே பங்கில் உறுப்பினர்களாக இருக்கும் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் ,தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழிபாடு மற்றும் சில நடைமுறைகளில் பாகுபாடு பல காலமாக இருந்து வந்திருக்கிறது . தலித் கிறிஸ்தவர்கள் இறந்தால் அவர்கள் சவ ஊர்வலம் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாது .சடலத்தை சுமந்து வரும் வண்டி சமமாக உபயோகப்படுத்தப்படவில்லை .இத்தகைய சாதி வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுவது இத்தகைய சூழலில் வளராத என்போன்றவர்க்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது . கிறிஸ்தவர்களிடையே சாதிப்பாகுபாடு இல்லை என்று நான் சொல்ல வரவில்லை .நான் வளர்ந்த சூழலில் திருமணம் போன்றவற்றில் சாதி இன்னும் இருக்கிறது , சாதி சார்ந்த உள்ளடி வேலைகள், அரசியல் இருகிறது என்றாலும் ,அதை இவ்வளவு வெளிப்படையாக வழிபாட்டு முறைகளிலும் ,நடமுறையிலும் கடைபிடிப்பதை பார்த்ததில்லை . ஆனால் சில இடங்களில் தலித்களுக்கு தனிக்கல்லறைகள் இருப்பதாகவும் ,வெளிப்படையாகவே கோவில்களில் சமத்துவமின்மை கடைபிடிக்கப்படுவதாகவும் வரும் செய்திகள் மிகவும் அவமானத்துக்குரியவை ..கத்தோலிக்க மதம் எந்த காரணத்தைக்கொண்டும் இத்தகைய நடைமுறைகளை தொடர்வதற்கு அங்கீகரிப்பதோ ,அல்லது கண்டுகொள்ளாதிருப்பதோ மிகவும் கண்டிக்கத்தக்கது .

எறையூரைப் பொறுத்தவரை பெரும்பான்மை வன்னியர்கள் தங்கள் பங்கிலுள்ள தலித்துக்களை ஆலய விஷயங்களிலும் சமமாக நடத்த விருப்பவில்லை என்பது கண்கூடு .தாங்கள் சாதி ரீதியாக புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்த தலித்துக்கள் தனியாக ஒரு கோவிலை கட்டி எழுப்பி அதற்கு மறைமாவட்ட அங்கீகாரத்தை கோரியிருக்கிறார்கள் .தங்களுக்கு தனியாக ஒரு பங்குத்தளத்தை உருவாக்கி தருமாறு கோரியிருக்கிறார்கள் .மறை மாவட்டம் இது வரை அதனை அங்கீகரிக்கவில்லை ..அங்குள்ள வன்னிய கிறிஸ்தவர்களும் அதை எதிர்த்திருக்கிறார்கள். அது இப்போது பூதாகரமான பிரச்சனையாக வெடித்து ,கலவரம் துப்பாக்கிச்சூட்டில் போய் முடிந்திருக்கிறது.

இப்போது மறைமாவட்ட ஆயர் இது குறித்து விடுத்த அறிவிப்பில் தனிப்பங்கு அவசியமில்லை எனவும் ,தொடர்ந்து ஒரே பங்காக செயல்பட வேண்டுமெனவும் ,வழிபாடுகளில் ,கோவில் நடைமுறைகளில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது எனவும் ,தலித்துகளுக்கு சம உரிமை உண்டு எனவும் அறிவித்திருக்கிறார்.

அதன் பின்னர் தலித் ஒருவர் இறந்து போக அவர் ஆயரின் அறிவிப்பின் அடிப்படையில் வன்னியர்கள் பயன்படுத்தும் சவ வண்டியில் உடலை வைத்து பொது வழியில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது . அதையும் வன்னியர்கள் சிலர் எதிர்த்திருக்கிறார்கள் .எனவே காவல் துறையின் துணையுடன் இது நடந்திருக்கிறது .இதன் பின்னர் வன்னியர் ஒருவர் இறந்து போக ,தலித்துக்கள் பயன் படுத்தியது என்ற காரணத்திற்காக அந்த சவ வண்டியை உபயோகிக்காமல் தாங்களே தூக்கிச் சென்று அடக்கம் செய்திருக்கிறார்கள் .

இப்போது இதை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது ? வன்னியர்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்புகிறார்கள் .இதற்கு திருச்சபையும் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் .இதைவிட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது . சரி! சம உரிமை கிடைக்காத தலித்துக்கள் தங்களுக்கென்று ஒரு ஆலயத்தை அமைத்து எங்களை பிரித்து விட்டு விடுங்கள் என கோருகிறார்கள் ..அதையும் வன்னியர்கள் விரும்பவில்லை . தங்கள் சாதி ஆதிக்கத்தை தொடர முடியாது என்பது காரணமாக இருக்கலாம் ..ஆனால் தலித்துக்களின் அந்த கோரிக்கையை மறைமாவட்டம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை ? அங்கீகாரம் வழங்கியிருக்க வேண்டியது தானே ? என்ற கேள்வி எழலாம் .என்னைப் பொறுத்தவரை ஒரு பங்கின் மக்கள் தொகை அதிகரிப்பால் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கலாமே தவிர ,சாதி அடிப்படையில் ,அதுவும் ஆதிக்க சாதித் திமிருக்கு பயந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பயந்து தனியாக செல்ல வேண்டும் என்று திருச்சபை தீர்ப்பு வழங்க கூடாது .மாறாக எந்த காரணத்தைக்கொண்டும் சாதிப்பாகுபாட்டை அங்கீரரிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல , கோவிலில் ,வழிபாட்டு முறைகளில் சாதிப் பாகுப்பாகுபாடில்லாத சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டியது மறைமாவட்டத்தின் கடமை .கொள்கை அடிப்படையில் மறைமாவட்டம் அதைத் தான் செய்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான விடயம் . ஆனால் நடைமுறையில் அதனை அமல் படுத்த மறைமாவட்ட நிர்வாகம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கப் போகிறது என்பதில் தான் அதன் யோக்கியதை தெரிய வரும் .

தொடக்கத்தில் தலித்துக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை மறைமாவட்டம் கண்டுகொள்ளவில்லை என்று அதிருப்தி காட்டினார்கள் .ஆனால் மறைமாவட்டத்தின் இந்த அறிவிப்புக்கு பின்னர் வன்னியர்கள் கோபமடைந்து தாங்கள் மதம் மாறப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் . சன் தொலைக்காட்சியில் இது குறித்து பேசிய ஒரு வன்னியர் சமத்துவம் என்ற பெயரில் காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வரும் நடைமுறைகளை எங்களை மாற்ற சொல்லுவது சரியல்ல .. நாங்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள் தான் .எனவே நாங்கள் அந்த மதத்துக்கே போகிறோம் என்று குறிப்பிட்டார் .

காலம் காலமாக கடைபிடித்து வருவதை மாற்ற விருப்பாவிட்டால் இந்த ஆள் இந்து மதத்திலிருந்து ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு வர வேண்டும் ? அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானே ? சரி! இப்போது காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வந்த ஏற்றத் தாழ்வையும் , சாதி ஆதிக்கத்தையும் இப்போது கட்டிக்காக்க கிறிஸ்தவ மதம் அனுமதிக்கவில்லையாம் .அதனால் அத்தகைய சுதந்திரத்தை வழங்கக்கூடிய இடத்துக்கு அவர்கள் போகிறார்களாம் .. என்ன ஒரு ஒப்புதல் வாக்குமூலம் ! தயவு செய்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வெளியேறி விடுங்கள் ஐயா ! உன்னை மாதிரி சாதி வெறிபிடித்தவர்கள் ,மதத்தின் பெயரால் சக கிறிஸ்துவனை சமமாக மதிக்க தெரியாதவனெல்லாம் கிறிஸ்தவ மதத்தை விட்டு போவது தான் உண்மையான சமதர்மத்தை விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்பதை உன்னைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ..உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்கும் மதமாற்ற முடிவுக்கும் மனமார்ந்த நன்றி!

தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது .. நடைமுறை ஓட்டைகளையும் ,அந்தந்த பகுதியில் உள்ள சாதி ஆதிக்கத்தையும் சாக்காக வைத்து ஆலயங்களில் வெளிப்படையாக சாதிப் பாகுபாடு பார்க்கும் கிறிஸ்தவர்களுக்கெதிராக உறுதியான கொள்கையை அறிவிக்கும் நிர்பந்தத்துக்கு மறைமாவட்டம் தள்ளப்பட்டிருக்கிறது .ஆலய நடைமுறைகளில் சாதிப் பாகுபாடு பார்ப்பவர் பாதிரியராக இருந்தாலும் அவர்கள் கத்தோலிக்க மதத்தில் நீடிக்க தகுதியில்லாதவர்கள் . அத்தகைய உறுதிப்பாட்டை மறைமாவட்ட நிர்வாகங்களும் ஆயர்களும் மறு உறுதிப்படுத்தவும் நடைமுறைப்படுத்தவும் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும் .தவறினால் ஆயராய் இருந்தாலும் சரி ..தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ளும் தார்மீகத் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள் என்பதே உண்மை கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருக்க முடியும் .

"ஒரு உறையில் இரண்டு வாள் இருக்க முடியாது " என்ற பைபிள் வாசகப்படி ,சாதி மேலாண்மையை விரும்புபவர்கள் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியேறுவதே கத்தோலிக்க மதத்துக்கு நல்லதாக இருக்கும் .

45 comments:

ஜோ/Joe said...

Test!

TBCD said...

:(((

ஜோ/Joe said...

//:(((//
TBCD,
இதற்கு என்ன அர்த்தம் .எனது பதிவுக்காக வருந்துகிறீர்களா? :)

G.Ragavan said...

இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!!!! ஒரே ஊருக்குள்ளேயே குட்டையாய் ஊறிக்கிடக்கும் குட்டைகளிடம் இந்தப் பழக்கம் எக்கச்சக்கமாக இருக்கிறது போல. தேங்கிய உள்ளத்தில் தேங்கிப் போன அழுக்குகள். நீங்கிப் போனால் நன்று.

Anonymous said...

2008க்கான புனித பிம்ப பதிவர் அவார்ட் உங்களுக்குத்தான் கவலையே வேண்டாம். :)

ஜோ/Joe said...

அனானி,
புனித பிம்பத்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம் ..அதை நீங்களே வச்சுகுங்க!!

Anonymous said...

விவிலியத்துல தப்பில்ல.. நம்ம மக்கள் சில விஷயங்கள்ல நாய் வால் தான்... தென் மாவட்டங்கள்ல இன்னும் ஜாஸ்தி....

அருண்மொழி said...

TBCD, எதற்காக வருந்துகிறீர்கள்

ஜோ/Joe said...

ஜி.ரா,
வாங்க .உங்க கருத்துக்கு நன்றி!

அருண்மொழி,
வாங்க .நானும் அதே கேள்வியைத் தான் கேட்டிருக்கேன்.

Anonymous said...

In Tamil nadu, Christins always behaved like an extend part of Hinduism. Even the chariot function in valankanni and other function are also is an example of that. So I think the Christians has lost it’s originality in India. This might be one good reason why still caste is practiced in Christians in India.

கல்வெட்டு said...

//நான் வளர்ந்த சூழலில் திருமணம் போன்றவற்றில் சாதி இன்னும் இருக்கிறது , சாதி சார்ந்த உள்ளடி வேலைகள், அரசியல் இருகிறது என்றாலும் ,அதை இவ்வளவு வெளிப்படையாக வழிபாட்டு முறைகளிலும் ,நடமுறையிலும் கடைபிடிப்பதை பார்த்ததில்லை .//

so... எல்லா இடத்திலும் இருக்கிறது. வெளிப்படையாக இல்லை. அவ்வளவுதான் சரியா ஜோ ?

**

சாதீயமே இல்லாத கத்தோலிக்கத்தில், சாதியுடன் இன்னும் வாழ்பவர்களை ஏன் இயேசு தண்டிக்காமல் ,"வெளிப்படையாக இல்லாதவரைக்கும் எனக்கு OK "என்று வைத்துக் கொண்டு உள்ளார்?

கத்தோலிக்கத்தில் இணையும் போதே , எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் மனதில் இருக்கும் சாதிய அழுக்கை ஏன் துடைக்க முடியவில்லை?

எங்கே வந்து சேர்ந்தாலும் சாக்கடை சாக்கடையாகத்தான் இருக்கும் எனும்போது , இவர்கள் எந்த சாக்கடையில் இணைந்தால் என்ன?

**

மதங்கள் அனைத்தும் நாசமத்துப் போகட்டும்.

ஜோ/Joe said...

கல்வெட்டு,
//so... எல்லா இடத்திலும் இருக்கிறது. வெளிப்படையாக இல்லை. அவ்வளவுதான் சரியா ஜோ ?//
சரி தான் . கிறிஸ்தவ மதம் ஜாதிப்பாகுபாடை அங்கீகரிக்கவில்லை என்றாலும் நம் நாட்டில் கிறிஸ்தவர்களும் ஜாதியிலிருந்து முற்றிலும் வெளிவரவில்லை .இது தெரிந்த விஷயம் தான் .ஒருவன் மனதில் சாதி துவேஷம் வைத்திருப்பதை மதம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியாது .ஆனால் கண்டிக்க வேண்டும் .அதே நேரத்தில் நேரடியாக மத நடைமுறைகளில் ,பொது வழிபாட்டு இடங்களில் சாதியை கொண்டுவருவதை திருச்சபை அங்கீகரிக்க முடியாது .கூடாது ..அதற்கு அர்த்தம் மறைமுகமாக சாதி துவேசம் கொண்டிருந்தால் பரவாயில்லை என்று அர்த்தம் இல்லை ..

//சாதீயமே இல்லாத கத்தோலிக்கத்தில், சாதியுடன் இன்னும் வாழ்பவர்களை ஏன் இயேசு தண்டிக்காமல் ,"வெளிப்படையாக இல்லாதவரைக்கும் எனக்கு OK "என்று வைத்துக் கொண்டு உள்ளார்?//

இயேசு கிறிஸ்தவ மதம் என்று எந்த மதத்தையும் ஏற்படுத்தவும் இல்லை ....வெளிப்படையாக இல்லாதவரை OK என்று நானும் சொல்லவில்லை ..ஏசுவும் சொல்லவில்லை ..இயேசு வைத்துக்கொண்டுள்ளார் என்று இயேசு ஏதோ கத்தொல்லிக்க மத நிர்வாகி மாதிரி சொல்லுகிற உங்கள் புரிந்துணர்வு புல்லரிக்க வைக்கிறது.

//கத்தோலிக்கத்தில் இணையும் போதே , எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் மனதில் இருக்கும் சாதிய அழுக்கை ஏன் துடைக்க முடியவில்லை?//
எல்லாம் வல்ல இறைவனை அவர்கள் சரியாக நம்பாததால் இருக்கலாம்.

//எங்கே வந்து சேர்ந்தாலும் சாக்கடை சாக்கடையாகத்தான் இருக்கும் எனும்போது , இவர்கள் எந்த சாக்கடையில் இணைந்தால் என்ன?//
ஒன்றும் இல்லை .அதைத் தான் நானும் சொல்லியிருக்கிறேன் .

//மதங்கள் அனைத்தும் நாசமத்துப் போகட்டும்.//
அதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை.

கல்வெட்டு said...

//இயேசு வைத்துக்கொண்டுள்ளார் என்று இயேசு ஏதோ கத்தொல்லிக்க மத நிர்வாகி மாதிரி சொல்லுகிற உங்கள் புரிந்துணர்வு புல்லரிக்க வைக்கிறது.//

நிச்சயம் உங்களுக்கு புல்லரிக்கத்தான் செய்யும் ஜோ :-)))

கத்தோலிக்க மதத்திற்கும் எல்லாம் அறிந்த பகவான் இயேசுவுக்கும் சம்பந்தம் இல்லை அல்லவா?

கத்தோலிக்கம் பின்பற்றுவது கல்வெட்டின் வேதநூல், அதற்கும் கடவுள் யேசுவிற்கும் சம்பந்தம் இல்லை. சரி விடுங்கள்,தனது பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் ஒரு மதத்தை அழிக்கமுடியாவிட்டாலும், அதை திருத்த முடியாத கடவுள்களை என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள்.

//கத்தோலிக்கத்தில் இணையும் போதே , எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் மனதில் இருக்கும் சாதிய அழுக்கை ஏன் துடைக்க முடியவில்லை?//
**//எல்லாம் வல்ல இறைவனை அவர்கள் சரியாக நம்பாததால் இருக்கலாம்.//**

:-))

சரியாக நம்பாதவர்களை, என்ன கொடுமைக்கு மதத்தில் சேர்க்கிறார்கள்? எண்ணிக்கைக்காகவா?

கத்தோலிக்கத்தில் (அல்லது என்ன ஒரு மதமோ) இணைபவர்கள் அது காட்டும் கடவுளை நம்பியே இணைகிறார்கள். ஒத்துக்கொள்வீர்களா ஜோ?

சும்மா மதகுரு/மதத் தலைமை (போப்??) காப்பாத்துவார் என்று அவரை மட்டுமே நம்பி யாரும் கத்தோலிக்கத்தில் இணைவது இல்லை.
அப்படி இருக்கையில் தன்னை நம்பி வருபவன் சாக்கடை எண்ணங்களோடு (சாதி) வரும்போது, அவனை சுத்தப்படுத்த வேண்டியது யாருடைய கடமை?

**
எப்படியோ இவர்கள் நினைத்தபடி வாழ பொந்து மதம்(நன்றி : லக்கி) இவர்களை தாய்க்கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ளட்டும்.

**

வெளிப்படையாய் தீண்டாமை பாராட்டாதவரை கத்தோலிக்கம் அனைவரையும் காக்கட்டும். வெளிப்படையாய் தீண்டாமை பாராட்ட இருக்கவே இருக்கிறது பொந்துமதம்.

**

TBCD said...

ஜோ,

கருப்பர்களுக்கென்று தனியான வழிப்படும் இடங்கள் இருக்கின்றது. தெரியும்மா. (அயல் நாடுகளில் )
இதுப் போன்றே, ஆதிக்க பிரச்சனைகளை முன்னிறூத்தியே அவர்கள் பிரிந்தார்கள்.

இங்கே வன்னியர்கள், தலித் போல, இனப் பாகுபாடு (சாதி என்பதை நான் இனம்/Race என்று கருதுகிறேன்..அதுக் குறீத்து பிறகு பேசலாம்) அங்கே வெள்ளை, கருப்பு இருக்கும்.

அவர்கள் வெளியேறினால், எனக்கு மகிழ்ச்சி என்றால், இந்தப் பதிவு என்னளவிற்கு என் மதத்தில் பிரச்சனை இல்லாமலிருந்தால் போதும் என்று குறுகி சிந்திதத்துப் போல் பட்டது அதற்காகவே.. :((

மதங்கள் நாசமத்துப் போகட்டும் என்று உடன்படுபவர், மதத்தை விட்டு வெளியேறினால் போதும் என்று நினைப்பது முரன்பாடு.

///
ஜோ / Joe said...
//:(((//
TBCD,
இதற்கு என்ன அர்த்தம் .எனது பதிவுக்காக வருந்துகிறீர்களா? :)அருண்மொழி said...
TBCD, எதற்காக வருந்துகிறீர்கள்

///

TBCD said...

பதில் சொல்லிட்டேன்... :))

///
அருண்மொழி said...
TBCD, எதற்காக வருந்துகிறீர்கள்
///

ஜோ/Joe said...

////கத்தோலிக்கத்தில் இணையும் போதே , எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் மனதில் இருக்கும் சாதிய அழுக்கை ஏன் துடைக்க முடியவில்லை?//
**//எல்லாம் வல்ல இறைவனை அவர்கள் சரியாக நம்பாததால் இருக்கலாம்.//**

:-))

சரியாக நம்பாதவர்களை, என்ன கொடுமைக்கு மதத்தில் சேர்க்கிறார்கள்? எண்ணிக்கைக்காகவா?

கத்தோலிக்கத்தில் (அல்லது என்ன ஒரு மதமோ) இணைபவர்கள் அது காட்டும் கடவுளை நம்பியே இணைகிறார்கள். ஒத்துக்கொள்வீர்களா ஜோ?

சும்மா மதகுரு/மதத் தலைமை (போப்??) காப்பாத்துவார் என்று அவரை மட்டுமே நம்பி யாரும் கத்தோலிக்கத்தில் இணைவது இல்லை.

//

கல்வெட்டு,
எல்லாம் வல்ல இறைவனை அவர்கள் முழுவதும் நம்பாததே காரணமாக இருக்கலாம் என்ற என் எள்ளலை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

//அப்படி இருக்கையில் தன்னை நம்பி வருபவன் சாக்கடை எண்ணங்களோடு (சாதி) வரும்போது, அவனை சுத்தப்படுத்த வேண்டியது யாருடைய கடமை?//

உண்மையிலேயே பதிவை படித்துவிட்டுத் தான் பின்னூட்டம் எழுதுகிறீர்களா ? அவனை சுத்தப்படுத்த வேண்டியது திருச்சபையின் கடமை ,சும்மா சால்ஜாப்பு சொல்லக்கூடாது என்று தான் நான் சொல்கிறேன்.

ஜோ/Joe said...

//அவர்கள் வெளியேறினால், எனக்கு மகிழ்ச்சி என்றால், இந்தப் பதிவு என்னளவிற்கு என் மதத்தில் பிரச்சனை இல்லாமலிருந்தால் போதும் என்று குறுகி சிந்திதத்துப் போல் பட்டது அதற்காகவே.. :((//

TBCD,
ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த அனுமதியும் அங்கீகாரமும் கேட்பவர்கள் .இன்னொரு பக்கம் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ..ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ,அதாவது தலித்துக்கள் தங்கள் உரிமை மறுக்கப்படுவதால் தாங்கள் வெளியேறுவதாக சொல்லியிருந்தால் நான் வருந்தியிருப்பேன் .அவர்கள் வெளியே சென்றாலும் இதே கொடுமையை அனுபவிக்க வேண்டும் என்பதால் .ஆனால் இங்கே ஆதிக்கம் செலுத்த முடியாத அதிருப்தியில் ஒரு கூட்டம் வெளியே செல்லும் போது அது எனக்கு மகிழ்ச்சி தான் .ஏனென்றால் இவர்கள் வெளியேறினால் குறைந்த பட்சம் இவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட தலித் மக்களாவது உரியோடு வாழ்வார்கள் .அது எனக்கு மகிழ்ச்சி தான் .இதில் என்ன தவறை கண்டுவிட்டீர்கள் ஐயா?

TBCD said...

மதம் மாறினால் மட்டும், தலித்துகளில் பிரச்சனை தீராது.

ஒரே ஊரில் வசிக்கீறார்கள் என்றால், சவ ஊர்வலம் எடுத்துப் போவதில் ஆரம்பித்து, பல் வேற விதமாக, பிரச்சனைகள் தொடரும்.

அது தான் ஐயா என் பிரச்சனை.. :P


//
ஜோ / Joe said...
TBCD,
ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த அனுமதியும் அங்கீகாரமும் கேட்பவர்கள் .இன்னொரு பக்கம் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ..ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ,அதாவது தலித்துக்கள் தங்கள் உரிமை மறுக்கப்படுவதால் தாங்கள் வெளியேறுவதாக சொல்லியிருந்தால் நான் வருந்தியிருப்பேன் .அவர்கள் வெளியே சென்றாலும் இதே கொடுமையை அனுபவிக்க வேண்டும் என்பதால் .ஆனால் இங்கே ஆதிக்கம் செலுத்த முடியாத அதிருப்தியில் ஒரு கூட்டம் வெளியே செல்லும் போது அது எனக்கு மகிழ்ச்சி தான் .ஏனென்றால் இவர்கள் வெளியேறினால் குறைந்த பட்சம் இவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட தலித் மக்களாவது உரியோடு வாழ்வார்கள் .அது எனக்கு மகிழ்ச்சி தான் .இதில் என்ன தவறை கண்டுவிட்டீர்கள் ஐயா?

ஜோ/Joe said...

//மதம் மாறினால் மட்டும், தலித்துகளில் பிரச்சனை தீராது.

ஒரே ஊரில் வசிக்கீறார்கள் என்றால், சவ ஊர்வலம் எடுத்துப் போவதில் ஆரம்பித்து, பல் வேற விதமாக, பிரச்சனைகள் தொடரும்.

அது தான் ஐயா என் பிரச்சனை.. :P//

TBCD,
இது என்ன விதமான வாதம் ? something is better than nothing .
நான் ஒரு வாதத்துக்காகவே சொல்லுகிறேன் . அந்த ஊரில் வன்னியர்கள் அனைவரும் மதம் மாறிவிடுகிறார்கள் என வைத்துக்கொள்ளுவோம் .பின்னர் அங்கிருக்கும் கோவில் தலித்துக்களுக்குத் தான் சொந்தமாகும் .அதற்கும் வன்னியர்கள் விடவில்லையென்றால் தலித்துக்களுக்கு சொந்தமாக ஒரு கோவில் கட்டி அதையே இறையூர் பங்குக் கோவிலாக மறைமாவட்டம் அங்கீகரித்தால் ,தலித்துக்கள் யாரையும் கேட்கத் தேவையில்லை . அதையும் மீறி கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேறிய வன்னியர்கள் கிறிஸ்தவ தலித்துக்களின் மத சுதந்திரத்தில் தலையிட்டால் அது விவகாரமே வேறு.

அப்போ என்ன தான்யா சொல்லுறீங்க ? விட்டா வன்னியர்களுக்கு அடிமையாவே இருந்திட்டு போகட்டும்ன்னு சொல்லுவீங்க போலிருக்கு.

கல்வெட்டு said...

//உண்மையிலேயே பதிவை படித்துவிட்டுத் தான் பின்னூட்டம் எழுதுகிறீர்களா ? அவனை சுத்தப்படுத்த வேண்டியது திருச்சபையின் கடமை ,சும்மா சால்ஜாப்பு சொல்லக்கூடாது என்று தான் நான் சொல்கிறேன்.//

சும்மா திருச்சபை என்றெல்லாம் சொல்ல வேண்டாம் ஜோ. எந்த சபைகளும் சாதி வேண்டாம் என்று சொல்லி சபை நடத்த முடியாது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் உங்களுக்கு நிச்சயம் அது தெரிந்து இருக்கும்.

ரேசிசம் என்னும் கேவலமான கூத்துகள் எல்லாம் கத்தோலிக்கம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை அப்படியே இருக்கிறது. எந்த டவுசர் சபையாலும் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை.

கத்தோலிக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து இருக்கும் ரேசிசம்/கருப்பைச் சுதந்திரம்... பிரச்சனைகள் இன்றுவரை அப்படியே இருக்கிறது. எனவே ரேசிசத்தின் இந்திய வெர்சனான சாதியமும் எந்தக் காலத்திலும் திருச்சபையால் தீர்க்க முடியாதது. கடவுளால் மட்டுமே முடியும் சரியா?.

**

எனது கேள்வி...திருச்சபைக்கும் மேலான, கத்தோலிக்கம் கைகாட்டும் அந்த இறைவன் என்ன செய்து கொண்டுள்ளார் ? என்பதே.

அவர் நினைத்தால் அனைத்து கத்தோலிக்கர்கள் மனத்தையும் ஒரே நிமிடத்தில் சுத்தமாக்க முடியும் . ஏன் செய்யவில்லை? பதில் உண்டா?

***

விடுங்கள் ஜோ, மனதளவிலாவது மதத்தை விட்டு வெளியில் வந்தால்தான் மாற்றுப்பார்வை கிடைக்கும். இல்லாவிட்டால் ஏற்றுக் கொண்ட மதத்தை , ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக,அது செய்யும் எல்லா காரணங்களுக்கும் ஏதாவது விளக்கம் சொல்லி காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.

**

ஜோ/Joe said...

TBCD,
அல்லது கல்வெட்டு அய்யா சொல்லுற மாதிரி அந்த ஊருல எல்லா மதத்தையும் ஒழிச்சிட்டா ,அடுத்த நாளே எல்லா பிரச்சனையும் தீர்ந்து வன்னியர்கள் தலித்துகளோட போய் கொஞ்சி குலாவுவாங்கன்னு சொல்ல வர்றீங்களா?

ஜோ/Joe said...

கல்வெட்டு,
உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம் என நினைத்தேன் ..இந்த வரிகளை பார்க்கூம் வரை

//இல்லாவிட்டால் ஏற்றுக் கொண்ட மதத்தை , ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக,அது செய்யும் எல்லா காரணங்களுக்கும் ஏதாவது விளக்கம் சொல்லி காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.//

இந்த பதிவிலோ என் பதில்களிலோ எங்காவது கத்தோலிக்க மதத்துக்கு நான் வக்காலத்து வாங்கியிருக்கிறேனா ? கஷ்டம்டா சாமி ..விடுங்க கல்வெட்டு!

கல்வெட்டு said...

//கஷ்டம்டா சாமி ..விடுங்க கல்வெட்டு!//

சந்தோசமாக விட்டுவிடுவோம் ஜோ. :-)))

TBCD said...

இதுக்குத் தான் அன்னைக்கே சொல்லி வைச்சாங்க..

Nothing is better than non sense.

நகைச்சுவையயை விட்டுத் தள்ளுவோம்.

மனதளவில், இவர்கள் தலித்துகளை சமமான மனிதர்களாக மாற்ற, பாதிரிகளாலும் முடியவில்லை, மதத்தாலும், முடியவில்லை.

முதலில் தொடர் வண்டி விட்டப் போது பேய் என்று அலறி ஓடினார்களாம்.

இன்று அது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

அதுப் போல், சமத்துவம், ஏற்றுக்கொள்ள சிரமமானதாக இருக்கும். ஆனால், நிதர்சனமான உண்மை அது.

அதை, சாம,பேத, தான தண்டம் என்பதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி, அரசு மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.

மதங்களுக்கு அப்பாற்பட்டு, எவனும் மேலும் இல்லை, எவனும் கீழும் இல்லை என்று நிறுவ வேண்டும்.

ஊடகங்கள் கூட, இதுப் போன்ற முட்டாள்களின் (பழக்கத்தை மாற்ற முடியாது ) பேச்சை ஒலிபரப்பி, பின்னாலே இது போன்று பேசினால், கைது செய்யப்படுவார்கள் என்றுச் சொன்னால் ஏதேனும் பலனாவது இருக்கும்.

அதை விட்டுவிட்டு, என் மதம் சுத்தம் ஆகும். தலித்துகள் நிம்மதியாக இருப்பார்கள் என்பது மனப்பால் குடிப்பது தான்.

மதத்திற்கு வெளியே நடப்பது தனிப் பிரச்சனை அல்ல. கிறித்துவன், இசுலாமியன், இந்து, நாத்திகர்கள் அனைவரும் ஒன்றே.


இது எல்லாமே பார்ப்பனீயத்தின் வேர்களே...

கல்வெட்டு அவர்களின் நடையில் எள்ளல் இருப்பதால் நீங்களும் எகிறுறீங்க.

இதில் இரண்டு விவகாரம் இருக்கு.

ஒன்று நாத்திகம், இன்னோன்று பார்ப்பனீய எதிர்ப்பு. நாத்திகர்களே, அடுத்தவர்களின் மத உரிமைக்கு குரல் கொடுக்கிறார்கள். (ஏன்னா, அவங்களுக்கு தாங்கி பிடிக்க மதம் இல்லை...)

அவர் சொல்லியிருப்பது இரண்டையுமே சேர்த்து...

அதனால் ஒரு சிறு குழப்பம்..

மதத்தால் ஓன்னும் ஆகவில்லை..பின்னே ஏன் அதை கட்டிக்கிட்டு அழனும்.

மதம் மாறீனாலும், பிரச்சனை தீரவில்லை என்றால்,பிரச்சனை மதத்திலிருந்து அதற்கடுத்த நிலைக்குச் சென்று விட்டது.

எல்லாரையும் படிக்க வைச்சு,அடுத்த நாளே தெளிய வைக்க முடியாது. ஆனால், அரசாங்கம் இதை ஒரு அஜெண்டாவாக எடுத்து, ஒரு 10 வருடம் எவர் ஆட்சியில் வந்தாலும், இதை தொடர்ந்து செய்தால் பலன் இருக்கும்.

//
ஜோ / Joe said...

TBCD,
இது என்ன விதமான வாதம் ? something is better than nothing .
நான் ஒரு வாதத்துக்காகவே சொல்லுகிறேன் . அந்த ஊரில் வன்னியர்கள் அனைவரும் மதம் மாறிவிடுகிறார்கள் என வைத்துக்கொள்ளுவோம் .பின்னர் அங்கிருக்கும் கோவில் தலித்துக்களுக்குத் தான் சொந்தமாகும் .அதற்கும் வன்னியர்கள் விடவில்லையென்றால் தலித்துக்களுக்கு சொந்தமாக ஒரு கோவில் கட்டி அதையே இறையூர் பங்குக் கோவிலாக மறைமாவட்டம் அங்கீகரித்தால் ,தலித்துக்கள் யாரையும் கேட்கத் தேவையில்லை . அதையும் மீறி கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேறிய வன்னியர்கள் கிறிஸ்தவ தலித்துக்களின் மத சுதந்திரத்தில் தலையிட்டால் அது விவகாரமே வேறு.

அப்போ என்ன தான்யா சொல்லுறீங்க ? விட்டா வன்னியர்களுக்கு அடிமையாவே இருந்திட்டு போகட்டும்ன்னு சொல்லுவீங்க போலிருக்கு.

3:44 PM, March 31, 2008

ஜோ / Joe said...
TBCD,
அல்லது கல்வெட்டு அய்யா சொல்லுற மாதிரி அந்த ஊருல எல்லா மதத்தையும் ஒழிச்சிட்டா ,அடுத்த நாளே எல்லா பிரச்சனையும் தீர்ந்து வன்னியர்கள் தலித்துகளோட போய் கொஞ்சி குலாவுவாங்கன்னு சொல்ல வர்றீங்களா?
///

ஜோ/Joe said...

TBCD,
உங்கள் எல்லா கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளுகிறேன் ..ஒன்றைத்தவிர

//அதை விட்டுவிட்டு, என் மதம் சுத்தம் ஆகும். தலித்துகள் நிம்மதியாக இருப்பார்கள் என்பது மனப்பால் குடிப்பது தான்.//

முதலில் குறைந்த பட்சம் என் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் ..ஊர்ல உள்ளவனெல்லாம் அவனவன் வீட்டை கழுவினால் தான் நான் என் வீட்டை கழுவுவேன் .இல்லைன்னா ஒரு பிரயோஜனமும் இல்லை -ன்னு என்னால சொல்ல முடியாது. எல்லாம் ஒரே நேரத்துல நடந்தா தான் ஒத்துக்குவேன்னு சொல்லுறதுக்கு இது என்ன புரட்சியா?

எல்லா வகையிலும் ஒடுக்கப்பட்ட தலித்துக்கள் எனக்கு கருத்து சொல்ல உரிமையுள்ள தளத்திலாவது சமத்துவத்தை பெறுகிறார்கள் எனும் போது எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது .

தெய்வமகன் said...

சும்மா கலக்கிட்டிங்க ஜோ

ஜோ/Joe said...

நன்றி தெய்வமகன்!

Anonymous said...

agree with u

ஜோ/Joe said...

Thanks Anony

கோவி.கண்ணன் said...

விரும்பி கிறிஸ்துவையும், கிறித்துவத்தையும் ஏற்றுக் கொண்டார்கள் என்பதவை விட வன்கொடுமைக்கு ஆளானவர்களே மதம் மாறினார்கள் என்பது சரித்திர உண்மை. இதிலிருந்து வன்னியர்கள் கீழாகத்தான் இருந்தார்கள் என்பது கண்கூடு, இதில் தலித் தாழ்ந்தவன் அவனுடன் சேர்ந்து தேவாலயம் செல்லமாட்டோம் என்று சொல்வது வெட்கக் கேடு. தன்னிலை மறந்த தரம்தாழ்ந்த செயல். இந்துமதம் இந்த எழவையெல்லாம் அங்கீகாரம் கொடுக்கிறது என்ற சாதிவெறியில் இந்துவாக மாற முடிவெடுத்து இருக்கிறார்கள்.

நாடர்களும், வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவராக இருந்தார்கள் என்பதற்கு அவர்கள் கிறித்துவம் தழுவியதே சாட்சி. தாழ்விலும் தாழ்ந்தவனை காட்டுவதன் மூலம் தன்னை உயர்த்திக் கொள்ளலாம் என்ற கீழான உத்தியில் வன்னியர்கள் செயல்படுக்கிறார்கள். இதன் மூலம் பார்பனர்களை விட தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற வருண அடுக்கில் நுழைகிறார்கள்.

பெரியார் பூமியில் இது வெட்கப்பட வேண்டிய விசயம்

Anonymous said...

ச்சே, ச்சே, இந்தப் பழம் புழிக்கும் என்று தின்று பார்த்து உணர்ந்தவர்கள் தாய் மதம் திரும்புகிறார்கள்.

தங்கள் அருவடை செய்த ஆன்மாக்கள் தங்களுக்கு டகால்டி கொடுத்துவிட்டுச் செல்கிறதே என்று இங்கே கவலைப்படுகிறார்கள் சிலர்.

ஜாதி வெறி எந்த மதம் மாறினாலும் இருக்கும் என்பது இந்தியாவின் சாபக்கேடு. சாபக்கேட்டிலும் விழையும் நல்ல விஷயம் என்னவென்றால் இது போன்ற முட்டாள்கள் திருந்தும் விஷயம் தான்.

நாட்டார்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்கள் கிருத்துவத்திற்கு மாறியதால் தான் என்று யாராலும் சொல்ல முடியாது. கிருத்தவத்தால் அவர்களுக்கு கிடைத்தது பெப்பே தான்...அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் அப்பனுக்கும் பெப்பே தான் கிடைத்தது. துத்தேரி இதெல்லாம் ஒரு மதமா என்று வேசியிடம் சென்று சுகத்தைத் தேடியவன் வியாதி வந்ததும் வீட்டுக்கு ஓடிவருவது போல் வந்துவிட்டனர்.

குழலி / Kuzhali said...

hகடலூர் புதுச்சேரி மறைமாவட்டத்திலே எறையூர் ஏகப்பட்ட பாதிரியார்கள், சிஸ்டர்கள் என வழங்கி இந்த மறைமாவட்டத்தில் எப்போதுமே எறையூர் வன்னிய கிறுத்துவர்களின் ஆதிக்கம் அதிகம்..... மதம் மாறி வந்தாலும் சாதி ஒழிக்க முடியாத வன்னிய ஆதிக்க சாதிவெறியில் ஊறி திளைத்த சாதி வெறியர்கள் இம்மாதிரியாக தலித்களின் மீதான வன்கொடுமைகளை செய்கின்றனர்....

ஜோ வடமாவட்டங்களில் இந்து / கிறித்துவ மதம் என்ற வேறுபாடின்றி சாதி வெறியே முதன்மையாக இருக்கின்றது

இந்த பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போதே இறந்து போன தலித் ஒருவரின் சடலத்தை பொது வண்டியிலும் பொது வழியிலும் எடுத்து செல்ல கடும் முயற்சியையும் தடுத்தால் எறையூரில் வன்னியர்களுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என அறிவித்து பொது வண்டியிலும் பொதுப்பாதையிலும் எடுத்து செல்ல வைத்த திண்டிவனம் தொகுதி பா.ம.க. எம்பி தன்ராஜ் அவர்களின் தலைமையிலான பாமக-விடுதலை சிறுத்தைகள் குழுவிற்கு எமது பாராட்டுகள்....

ஆனாலும் என்ன அடுத்த நாளே எப்படி பொது வண்டியில் தலித் சடலத்தை எடுத்து செல்லலாமென வண்டியை அடித்து நொறுக்கிவிட்டார்கள் வன்னிய சாதி வெறியர்கள்....

மதம் மாறினாலும் சாதி விசம் மாறவில்லை....

சிறில் அலெக்ஸ் said...

என் கருத்துக்கள் இங்கே

ஜோ/Joe said...

//தடுத்தால் எறையூரில் வன்னியர்களுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என அறிவித்து பொது வண்டியிலும் பொதுப்பாதையிலும் எடுத்து செல்ல வைத்த திண்டிவனம் தொகுதி பா.ம.க. எம்பி தன்ராஜ் அவர்களின் தலைமையிலான பாமக-விடுதலை சிறுத்தைகள் குழுவிற்கு எமது பாராட்டுகள்//

குழலி,
நல்ல செய்தி .நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாராட்டுக்கள்.

ஜோ/Joe said...

//இதிலிருந்து வன்னியர்கள் கீழாகத்தான் இருந்தார்கள் என்பது கண்கூடு, இதில் தலித் தாழ்ந்தவன் அவனுடன் சேர்ந்து தேவாலயம் செல்லமாட்டோம் என்று சொல்வது வெட்கக் கேடு. தன்னிலை மறந்த தரம்தாழ்ந்த செயல்.//

நன்றாக சொன்னீர்கள் கோவியாரே!

G.Ragavan said...

// குழலி / Kuzhali said...
ஜோ வடமாவட்டங்களில் இந்து / கிறித்துவ மதம் என்ற வேறுபாடின்றி சாதி வெறியே முதன்மையாக இருக்கின்றது //

தென்மாவட்டங்களிலும் இது உண்டு. குறிப்பாகச் சொன்னால் தூத்துக்குடியில் கிருத்துவ நாடார்களுக்கும் கிருத்துவ பரதவர்களுக்கும் (ஃபெர்ணாண்டஸ்) நடக்கும் பிரச்சனைகள். பெரிய பெரிய கலவரங்களை உண்டாக்கியிருக்கிறது.

MK said...

"கிரேக்கனென்றுமில்லை யூதனென்றுமில்லை-னு வேதாகமம் சொல்றத வாசிச்சுட்டு.. இன்னமும் ஜாதி வித்தியாசம் பார்த்தா கிறிஸ்தவன்னு சொல்லிக்கறதே இல்ல.. இந்த பாகுபாடு கத்தோலிக்கம் மட்டுமில்லாம ப்ரோட்டஸ்டன்ட், பெந்தகொஸ்தே-ன்னு எல்லா பிரிவுலயும் இருக்குது.. "ஒரு ஊழியக்காரன் இரண்டு எஜமானுக்கு ஊழியம் பண்ணமுடியாது.." அதனால ஜாதி வித்தியாசம் பாக்கறவங்க கிறிஸ்தவத்தோட பேர கெடுக்காம.. வேற மார்க்கம் போறதுதான் நல்லது...

Anonymous said...

No religion in the world encourage division based on anything, but it exists every where, in India you are saying it is based on caste in the rest of the world it is based on class, color, race, sexual orientation etc etc. We must remember that religion is man made and as long as mankind is involved these things will exist.
RE: Mahesh's comment on Christianity loosing originality; India did not need a religion, in fact concepts of Christianity has been existing in the name of Buddhism in india long before Christ. Christianity was preached to a set of people who needed to be civilized. Indians were far superior at the time period. Christianity was forced on Indians by Europeans. Christianity was Europianised/Anglisised by the time it reached India.
Many centuries B.C people from Europe have been visiting India (those who read history will know) to learn Indian culture and religion and modified it according to their culture. Who knows may be Christianity is one such religion. Have I actually gone off track??!! well I better stop.

டி.அருள் எழிலன் said...

ஒரு நாடார் இஸ்லாமிய மதத்துக்கு மாறினால் நாடார் பாய் ஆகிவிடுவார்.ஆனால் கிறிஸ்தவத்துக்கு மாறீனால் அவர் நாடாராகவெ தொடருகிறார்.இது கிறிஸ்தாத்தை இந்திய தன்மைக்கு மாற்றிய கிறிஸ்தவ தலைமை செய்த தவ்று இஸ்லாம் தன் தன்மையை மாற்றிக் கொள்ளாமல் உலகம் முழுக்க வலம் வரும் போது.கிறிஸ்தவம் இந்திய சாதியமைப்புக்கு பலியாகியது.திருநெல்வேலி வடக்கன்குளத்திலும்,திருச்சியிலும் தலித்துக்களுக்கு தனிக் கல்லறை கொடுமை இன்னும் இருக்கிறது.இதற்காக போராடிய சில முற்போக்கு பாதிரிகள் கிறீஸ்தவத்திலிருந்து வெளியேறீயதெல்லாம் பழைய கதை.பார்ப்பன இந்து தர்மத்தின் அடையாளங்களை தேவாலயங்கள் சுவீகரிக்கும் ப்ழக்கங்களை கைவிட வேண்டும்.தேவாலயத்தில் பரத நாட்டியம் ஆடுவது மேரிமாதாவுக்கு சேலை கட்டிவிடுவது இது எல்லாமும் தமிழ் அடையாளமாக இருந்தாலும் சைவத்தாலும்,வைணவத்தாலும் கறைபட்ட அடையாளங்களே.முழுக்க முழுக்க கிறிஸ்தவ தன்மைக்கு இவர்கள் மாறுவதோடு அடித்தட்டு மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தாமல் கிறிஸ்தவம் வெற்றீ பெறாது.தவிறவும் பாதிரியார்கள்தான் அதன் சாபக்கேடு.குமரி மாவட்டத்தில் கோட்டாறூ மறைமாவட்டம் இரண்டாக பிரியப்போகிறது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.மீனவர் நாடார் பாகுபாடுதான் காரணம்.காலம் காலமாக மீனவ மக்கள்தான் கிறீஸ்தவத்தை வளர்த்தார்கள்.பிரமாண்ட தேவாலாங்களை எழுப்பினார்கள்.கடலோடி போராடி வருமானத்தில் பெரும் பங்கை தேவாலயங்களுக்கு கொடுத்து ஏமாந்து போனதுதான் மிச்சம்.
இன்று பெரும்பாலும் மீனவ மக்களை சுரண்டுவது பாதிரிகளும் மதமும்தான்.ஒரு பக்கம் சாதி இந்துக்களின் மீனவ மக்களுக்கு எதிரான மனம்.இன்னொரு பக்கம் அண்டி வந்த மதமும் கைகழுவி விட்ட பரிதாபம் என குமரி மாவட்ட மீனவ மக்களின் வாழ்க்கை திண்டாட்டமாகத்தான் இருக்கிறது.

ஜோ/Joe said...

அருள் எழிலன்,
நீங்கள் அடுத்த ஊர்க்காரர் (தனிப்பட்ட முறையிலும் உங்களை தெரியும் என நினைக்கிறேன்) என்பதில் மகிழ்ச்சி . முடிந்தால் djmilton at gmail.com -க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்களேன்.

Augustus said...

Do you believe in Conversions?

ஜோ/Joe said...

//Do you believe in Conversions?//
Conversion is not a beleif .It is an act.

Augustus said...

//Conversion is not a beleif .It is an act.//

Conversion might be an act for some and a belief for some. But this act or belief should be condemned.

ஜோ/Joe said...

//But this act or belief should be condemned.//
யாருடைய கட்டாயப்படுத்துதலும் இல்லாமல் ,ஒருவர் தான் உணர்ந்து எந்த மதத்துக்கும் செல்வதற்கு உரிமையுண்டு ..அதை கண்டிக்க நீங்க யார் சார்?

Anonymous said...

Conversion is for fickle minded people, who has not understood life and spirituality. It is definitely an act based on inssecurity. if you understand the concept of GOD well then there is no need for conversion.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives