Thursday, August 07, 2008

ரஜினி செய்தது தவறா?

"ரஜினி பேரை சொன்னாலே தமிழகமே அதிரும்" ,"தலைவர் நடிக்க வேண்டாம்..நடந்தாலே போதும் " என்று சொன்னவர்கள் கூட இப்போது "ரஜினி என்பவர் ஒரு நடிகர் .அவரிடம் போய் எல்லாவற்றுக்கும் தீர்வு எதிர்பார்ப்பது நியாயமா?" ,"தயாரிப்பாளருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நட்டம் வரக்கூடாது என்பதாலேயே அவர் வருத்தம் தெரிவித்தார் ..அதில் என்ன தவறு ?"அரசியல்வாதிகளும் மற்றவர்களும் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளும் போது ரஜினியை மட்டும் குறை சொல்வதேன்?" என்றெல்லாம் இறங்கி வந்திருக்கிறார்கள் ..இந்த அளவுக்காவது ஊதி பெரிதாக்கப்பட்ட பலூனில் காற்று இறங்கி வருவது நல்லது தான்.

ரஜினிகாந்த் நல்ல நடிகர் ..நல்ல மனிதரும் கூட .இருக்கட்டுமே ..யார் இல்லையென்று சொன்னது ? நான் ஒரு நடிகன் .என்னை ஒரு நடிகனாக மட்டும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு போயிருந்தால் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை உண்மையிலேயே அவரின் நடிப்புக்கு ,ஸ்டைலுக்கு திரண்ட கூட்டம் என்று எடுத்துக்கொண்டு போயிருந்திருக்கலாம் .ஆனால் ஊகங்கள் மூலம் அரசியல் சாயங்கள் விழுந்த போது அதனால் ஏற்படும் லாபங்களை மிக லாவகமாக வியாபாரமாக்கிக் கொண்ட போது தானே அவர் வெறும் நடிகர் என்பதையும் தாண்டி வெளியில் வந்து விழுகிறார் .

திரையில் அவர் பேசும் வசனங்கள் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் என்ற எல்லையை தாண்டி ரஜினிகாந்த் என்ற தனிமனிதன் பேசும் வசனங்களாக கருத்தில் எடுக்கப்பட்டதை (இப்போது அவை வெறும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் மட்டுமே என்று மறுத்தாலும் ) கொஞ்சமாவது மண்டையில் மசாலா உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியுமே ?எம்.ஜி.ஆரும் இப்படி அரசியல் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவார் , பாடுவார் ..ஆனால் அவை படத்திலுள்ள இன்னொரு கதாபாத்திரத்திடம் பேசுவது போல மறைமுகமாக இருக்கும் .ஆனால் ரஜினி சம்பந்தம் இல்லாமல் கையை பார்வையாளரைப் பார்த்து நீட்டி நேரடியாகவே பேச ஆரம்பித்தார் . அவை வெறும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் ,பாடல்கள் என்றால் ..வீட்டு வேலைக்காரராக இருக்கும் ஒருவர் அதிலும் காதல் காட்சியில் "கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு ..காலத்தின் கையில் அது இருக்கு .." என்று பாடினால் கேட்பவன் என்ன கேனயனா ? அதற்கு வேலைக்காரனின் காதலி வேறு " என்னமோ திட்டமிருக்கு " என்று பில்டப் வேறு ...ஆமாங்க இதெல்லாம் அவருக்கு தெரியாம இயக்குநரும் பாடலாசிரியரும் திணித்தது ..அல்லது ..இதைக்கூட அவர் பலமுறை தடுத்தும் கேட்காமல் சேர்த்து விட்டார்கள் ..என்று சொல்பவர்களை என்ன சொல்வது ..வடிவேலு பாணியில் ரொம்ப நல்லவன் என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தான் .

தன்னை நடுரோட்டில் காக்க வைத்து விட்டார் என்ற காரணத்துக்காக ஜெயலலிதா எதிர்ப்பு நிலை எடுத்தது .."மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ..ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது " என குரல் கொடுத்தது ..ஊடகங்களும் ஏதோ ரஜினி வாய்சினால் தான் திமுக வெற்றி பெற்றது ..இல்லையென்றால் ஜெயலலிதா வென்றிருப்பார் என காமெடி பண்ணியது ..அந்த பில்டெப்புகளெல்லாம் அடுத்த முறை கொடுத்த வாய்சிலேயே பணால் ஆனது ..மீண்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக பா.ம.க -வை எதிர்த்தது .. சும்மா விட்டிருந்தா குறைந்தது ரெண்டு இடத்துலயாவது தோற்க வாய்ப்பிருந்த பா.ம.கா-வை மறைமுகமாக ரசிகர்களை தூண்டிவிட்டு தோற்கடிக்கிறேன் பேர்வழின்னு எல்லா இடத்திலும் பா.ம.கா-வை வெற்றி பெற வைத்தது ..இதுக்கு பிறகாவது "பேர கேட்டாலே..அதிருதுல்ல ..ஒதறுதுல்ல"-ன்னு சொல்லாம இருந்திருக்கணும் .

வரமாட்டேன் ..வந்தாலும் வருவேன் ..வருவேண்ணு யார் சொன்னது ..நீங்களா நினைச்சுகிட்டா நான் என்ன செய்வது ..நான் பாட்டுக்கு சும்மா இருக்கேன் .. நாளை என்ன நடக்கும்-ன்னு சொல்ல முடியாது .. எல்லாம் (கைய மேலே தூக்குறது) என்றெல்லாம் மாறி மாறி சொல்லி வருவது எதனால் ? வேறு ஒன்றுமில்லை ..இத்தகைய ஊகங்கள் , எதிர்பார்ப்புகள் ,சந்தேகங்கள் ,விவாதங்கள் தன்னுடைய படங்களின் வியாபாரத்துக்கு மிகப்பெரிய பலமாய் இருக்கும் என்ற எண்ணம் தான் .

ரஜினிகாந்துக்கு எந்த சமூக பிரச்சனையிலும் ஆழமான அறிவோ ,தனக்கென ஒரு கருத்தோ இருந்ததில்லை ..அல்லது அரசியலுக்கு வந்து நிலைக்கும் அளவுக்கு அவருக்கு தலைமைப் பண்போ ,நிர்வாக திறனோ ,பக்குவமோ ,பொறுமையோ கிடையாது ..இவை அவருக்கு நன்றாக தெரிந்ததாலும் ..தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற உண்மையை வெட்டு உண்டு துண்டு ரெண்டு என்று போட்டுடைக்க விரும்பவில்லை ..காரணம் ? வரமாட்டோம் -ன்னு தெரியும் ..அதற்காக வருவோம் ,வரமாட்டோம் என ஊகத்தின் அடிப்படையில் நம் திரைப்படங்களுக்கும் ,ஊடகங்களில் நடக்கு கிடைத்து வரும் அதீத முக்கியத்துவத்துக்கும் கிடைத்து வரும் லாபத்தை நாமே கெடுத்துக் கொள்ள வேண்டும் ? போற வரைக்கும் போகட்டுமே என்பது தான் அவரது எண்ணமாக இருக்க முடியும்.

இதில் என்ன தவறு ? என்னைக் கேட்டால் தவறே இல்லை ..அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் .தன்னுடைய தொழில் ,அதில் வருகின்ற லாபம் , அதற்காக போடப்படும் கணக்குகள் எல்லாவற்றிலும் அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் ..அவரோடு சேர்ந்த திரைப்படத் துறையினரும் தெளிவாத்தான் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.. தெளிவாக வேண்டியவர் அவரல்ல ..தமிழக மக்கள் தான் .

இப்போது கூட ரஜினி கணக்கை கொஞ்சம் வித்தியாசமாக போட்டிருக்கலாம் என்பது என் எண்ணம் ..உண்ணாவிரத பேச்சுக்கு பிறகு வந்த மிரட்டலுக்கு பிறகு கூட "கர்நாடகாவில் என் படம் வரா விட்டால் எனக்கு நட்டம் ஏதுமில்லை" என்று பேசியவர் இப்போது 2 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நட்டம் வந்து விடக்கூடாதே என்பதால் வருத்தம் தெரிவித்து நட்டத்தை போக்கியிருக்கிறார் ..ஆனால் நடந்தது என்ன ? கர்நாடகாவில் 2 கோடி லாபம் .தமிழகத்தில் 20 கோடி நட்டம் ..கொஞ்சம் வேறு மாதிரியாக யோசித்து ..லாபத்திற்காகவேனும் "கர்நாடகாவில் என் படம் வரா விட்டால் எனக்கு நட்டம் ஏதுமில்லை" என்பதை மறு உறுதிப்படுத்தியிருந்தால் ,2 கோடி நட்டத்துக்கு பதில் தமிழகத்தில் கூடுதலாக 10 கோடி பார்த்திருக்கலாம் ..தமிழக மக்களும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு வடிவேலு போல நல்லவனாக நீடித்திருப்பார்கள் ..பாவம் ரஜினி ! நல்ல மனிதன் !!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives