Monday, March 26, 2007

தருமி கண்டுபிடித்த 1- ம் நம்பர் கிறுக்கன்

நான் ஒரு 1-ம் நம்பர் கிறுக்கன் -னு கண்டுபிடிச்சிருக்கார் தருமி .ஒரே ஒரு தடவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதை வைத்தே சரியா கணிச்சிருக்கார் .என்ன இருந்தாலும் வாத்தியார் அல்லவா.

1.சின்ன வயசுல நான் கிறுக்குத்தனமா இருந்தது 'பட்டம்' விடுறதுல .பட்டம்-ன்னா சென்னைல சின்னதா ஒரு பட்டம் விடுவாங்களே அது மாதிரி இல்ல .எங்க ஊருல கதவு அளவு பட்டமெல்லாம் விட்டிருக்காங்க .நான் விட்ட பட்டமெல்லாம் அரைக் கதவு அளவுக்கு .அதாவது மூங்கிலை வெட்டி 3 அடி ,1.5 அடி யாக தலா 3 கம்புகள் எடுத்து நீள் சதுரமாக கட்டி அதில் இரண்டு மூன்று அடுக்கு செய்தித் தாள்களை வைத்து ஒட்டி பட்டம் செய்து அதற்கு சரடி இட்டு ,வாலுக்குக்காக மீன்பிடிக்க பயன் படும் பெரிய கயிறை கட்டி ,நூலுக்கு பதிலாக மீன்பிடிக்க பயன்படும் நைலான் ரோல் வைத்து பட்டம் விடுவது தான் எங்க ஊருல வழக்கம் .சின்ன பட்டம் ,நூல் வைத்து விடுவதெல்லாம் எங்கள் ஊரில் கடற்கரையில் வீசுகிற காற்றுக்கு பஞ்சாக பறந்து விடும் .மே மாத கோடை விடுமுறையில் எனக்கு முழு நேர தொழிலே இது தான் .எனக்கு 2 உதவியாளர்கள் வேறு .எங்கள் வீட்டில் யாரும் மீன் பிடிப்பவர்கள் இல்லையாததால் உதவியாளர்கள் வீட்டிலிருந்து நைலான் ரோல் எடுத்து வருவார்கள் .தூண்டில் மீன் பிடிக்க பயன் படும் இந்த நைலான் ரோல் விறைப்பாக இருக்க வேண்டியது அவசியம் .அதனால் சில நேரம் மீன் பிடிக்க செல்லும் முன் 200 மீட்டர் நீளத்தில் இரண்டு பேர் பிடித்துக்கொண்டு இழுப்பார்கள் .பட்டம் விட இதே நைலான் ரோலை உபயோகித்தால் தானாகவே விறைப்பாக ஆகிவிடும் என்பதால் உதவியாளர்கள் வீட்டில் அதை நாங்கள் எடுத்து பட்டம் விடுவதில் சிக்கல் எதுவுமில்லை. காலை 9 மணியளவில் பட்டத்தை எடுத்து பாரமான வாலை கட்டி ,முதலில் ஒரு 50 அடி தூரம் கொண்டு சென்று பட்டத்தை விட்டால் விர்ரென்று 45 டிகிரியில் போய் ஆடாமல் அசையாமல் போய் நிற்கும் .பின்னர் மெதுவாக மீதமுள்ள ரோலை இரண்டு பேர் சேர்ந்து விடுவிக்க வேண்டும் .கொஞ்சம் அசந்தால் கையை அறுத்து விடும் .முழுவதுமாக ரோலை விடுவித்து பின்னர் ரோல் இருக்கும் கட்டையை ஏதாவது ஒரு மரத்தில் அல்லது கட்டுமரத்தில் கட்டிவைத்து விடுவோம் .பொதுவாக எங்கள் ஊரில் விடப்படும் பட்டத்தில் உச்சியில் நடு கம்பு நீளமாக இருக்கும் .அதில் சில நேரம் தேசியக் கொடி அல்லது அதிமுக ,திமுக கட்சிக் கொடி பறக்கும் .பெரும்பாலான பட்டத்தில் பெரிய எம்.ஜி.ஆர் படம் ஒட்டப்படிருக்கும் .நம்ம பட்டத்தில் மட்டும் சிவாஜி படம்.45 டிகிரில் விறைப்பாக நிற்கும் ரோல்.திருப்பி இழுக்க வேண்டுமென்றால் துணியை கையில் சுற்றி தான் இழுக்க வேண்டும் .இல்லையென்றால் கையை வெட்டி விடும் .தென்னை ஓலையை கிழித்து ரோலை சுற்றி சொருகி விட்டால் காற்றடிப்பதால் சல்லென்று மேலே சென்று பட்டத்தோடு ஒட்டிக்கொள்ளும் .எம்.ஜி.ஆருக்கும் ,சிவாஜிக்கும் இங்கிருந்து தந்தி அனுப்புகிறோமாம்..இப்படி வேகாத வெயில்ல பட்டம் விட்டே கறுத்து கருவாடு ஆனேன் நான்.

2.பொதுவா நடந்து ஒரு இடத்துக்கு போறோம்னா ஏதோ கோட்டையை பிடிக்க போறது மாதிரி இண்டு இடுக்குல புகுந்து ,விறு விறுண்ணு நடந்து போகிற பழக்கம் எனக்கு .எதிரே யார் வர்றாங்கண்ணு கூட கவனிக்க மாட்டேன் .பல முறை தூரத்திலேயே என்னை பார்த்து விட்ட நமக்கு தெரிந்தவர் பக்கத்தில் வரும் போது நம்மை பார்ப்பான் என்றெண்ணி குறுக்கே நிற்க ,கிட்டத்தட்ட மோதிய பிறகு நிமிர்ந்து பார்த்து அசடு வழிந்திருக்கிறேன் .ரொம்ப அவசரமான வேலையாக போகும் போது இப்படி போனா பரவாயில்ல .சும்மா நேரப்போக்குக்கு போகும் போதும் இப்படித் தான்.

திருச்சியில் படிக்கும் போது கல்லூரிக்கு எதிரே தெப்பகுளம் முதல் மலைக்கோட்டை வரையிலாக திருச்சியில் மிக பிரபலமான பரபரப்பான ரோட்டில் நண்பர்களோடு மாலை வேளையில் நடந்து செல்வது வழக்கம் .போவதே சும்மா நேரப்போகுக்கு .சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து பெண்கள் கூட்டம் ,ஏகப்பட்ட துணிக்கடை ,ஆற அமர ரசித்துக்கொண்டு நடந்து வருவது தான் நண்பர்கள் வழக்கம் .நான் ஏதோ புகுந்து புறப்பட்டு வளைந்து நெளிந்து நடந்து கொஞ்ச நேரத்தில் திரும்பிப் பார்த்தால் நண்பர்கள் ஒரு 50 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருப்பார்கள் .அவர்கள் வந்து "டேய் ! என்னடா மலைக்கோட்டையை போய் வாங்கப் போகிறாயா என்ன ? எதுக்கு இப்படி ஓடுற" என்பார்கள் .எனக்கும் 'அதானே! ஏன் இப்படி பறக்குறேன்" -ன்னு தோணும் .ஆனால் அடுத்த 5-வது நிமிடத்தில் அதுவே மீண்டும் நடக்கும் .நான் மாறவே இல்ல.

3.காபி குடிக்குறது .ஒரு காபி-யை வாங்கி வைத்து ஆற அமர குடித்து முடிப்பதற்கு குறைந்தது 20 நிமிடம் எடுத்துக் கொள்ளுவோரை பார்த்திருக்கிறேன் .ஆனால் நமக்கு 1 நிமிடத்துக்கு மேல் தேறாது .பல முறை முயற்சி செய்திருக்கிறேன் .ஆனாலும் குடிக்க ஆரம்பித்தால் குடித்து முடித்து விட்டுத் தான் மறு வேலை என்பது போல குடிப்பது என் வழக்கம் .எனக்கே இது ஓவராக தெரிந்தாலும் இன்னும் மாற்ற முடியவில்லை.

4.திருச்சியில் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த போது ,வார இறுதி நாட்களில் நண்பர்களெல்லாம் ரஜினி,கமல் படம் பார்க்க பறந்து கொண்டிருக்க ,நானோ திருச்சியின் சந்து பொந்துகளில் இருக்கும் ஓட்டை ஒடிசல் பழைய தியேட்டர்களை கண்டு பிடித்து தாய்மார்கள் பெரியோர்கள் நடுவில் அமர்ந்து பழைய சிவாஜி படங்களை விரட்டி விரட்டிப் பார்த்தது .'உத்தம புத்திரன்' படம் பார்த்து வெளியே வந்து விட்டு ,அடுத்த காட்சிக்கு நின்ற வரிசையில் சேர்ந்து கொண்டு மீண்டும் ஒரு முறை பார்த்தது .நண்பர்கள் என்னை ஒரு தினுசாக பார்த்ததை சொல்லவும் வேண்டுமா!

5.எனக்கு விவரம் தெரியுமுன்னரே நடந்த ஒரு நிகழ்ச்சியை என் மாமா (எனக்கு பெயரிட்டவர் .பேராசிரியராக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்றார்) சொல்லிச் சொல்லி சிரிப்பதுண்டு .எனக்கு இரண்டரை வயதிருக்கும் போது அம்மா எனக்கு சோறூட்டியிருக்கிறார்கள் .முதல் சுற்று முடிந்து ,இரண்டாவது சுற்று .அதையும் முடித்து விட்டு மேலும் சோறு எனபது போல அம்மாவை பார்த்திருக்கிறேன் .பக்கத்திலிருந்த மாமா "ம்..போதும்..போதும் " என்று சொல்ல நான் சொன்னது " நீ சும்மா கெடல.."

Thursday, March 01, 2007

பருத்தி வீரன்

சினிமா என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல .நல்ல நகைச்சுவையை வழங்கும் பொழுது போக்கு திரைப்படங்களும் நமக்கு தேவையே .அதே நேரத்தில் நம் நம் சமூகத்தின் வாழ்வியல் கூறுகளை ,பழக்க வழக்கங்களை ,நாட்டின் இதயமான கிராமங்களின் நடைமுறைகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அமையும் திரைப்படங்களும் வரவேற்கப் படவேண்டியவை. ஒரு திரைப்படம் "பாட்டி வடை சுட்ட கதை' போன்று ஏதாவது ஒரு கதையோடு தான் அமைய வேண்டுமென்ற கட்டாயமில்லை .சுவாரஸ்யமான சம்பவங்களில் தொகுப்புகள் கூட ஒரு ரசிக்கத் தக்க திரைப்படமாக அமையலாம் .அந்த வரிசையில் ஒரு கிராமத்து சண்டியரின் கதையை அதன் பின்புலத்தோடு ,வாழ்க்கை முறையோடு ,அதன் சோகங்களோடு சொல்லும் ஒரு படம் 'பருத்தி வீரன்'.

தென் தமிழ்நாட்டின் கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த படம் தன் கிராமத்தில் அல்லது பக்கத்து கிராமத்தில் நடந்த பல சம்பவங்களை கண்முன் நிறுத்தும் .கிராமம் என்றால் கண்டிபாக காட்டப்படும் மரத்தடி பஞ்சாயத்து ,ஊரை அடியாள்கள் தயவில் மிரட்டி வைத்திருக்கும் வில்லன் ,கதாநாயகனை வாழ்த்திப்பாடும் போது நூற்றுக்கணக்கில் வந்து நடனமாடும் தடியர்கள் மற்ற நேரத்தில் காணாமல் போய் விட மற்ற நேரங்களில் கிழவர்கள் மட்டுமே கதாநாயகனிடம் முறையிடும் அபத்தம் ,பட்டணத்துக்கு படிக்கப் போய் 10 ஆண்டுகளுக்கு பின்னரே முதல் முறையாக கிராமத்துக்கு வரும் டூ பீஸ் உடையணிந்த வில்லன் மகளான கதாநாயகி இப்படிப் பட்ட சமாசாரங்கள் இந்த படத்தில் இல்லை .ஆனால் கிராமத்து கூத்து ,கரகாட்டம் .கிராமத்து சாதாரண பள்ளியில் படிக்கும் சுமாரான அழகுள்ள கதாநாயகி ,விஷம் குடித்த கதாநாயகிக்கு செய்யப்படும் சிகிச்சை ,கிராமத்து வெளியில் சீட்டாட்டம் ,வெட்டித்தனமாக ஒரு சண்டியரின் வாழ்க்கை, எகத்தாளம் ,அவனை வெறித்தனமாக காதலிக்கும் கதாநாயகியின் செய்கைகள் இப்படி பல விடயங்கள் கண்முன் நடப்பவை போன்று யதார்த்தமாக விரிகின்றன.

சிவகுமாரின் இளைய மகன் 'கார்த்திக்' முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் .கண்டிப்பாக நடிப்பில் நல்ல திறமையுள்ளவராக திகழ்வார் ,ஆனால் அண்ணன் போன்று இளமை துள்ளும் கதாபாத்திரத்தில் மிளிர்வாரா என்பது போகப் போகத் தான் தெரியும் .இருந்தாலும் ,தமிழ் சினிமாவுக்கும் திறமையுள்ள நடிகர் கிடைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

கதாநாயகனின் சித்தப்பாவாக வரும் சரவணன் (பழைய ஹீரோ) ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் .இவரிடம் இத்தனை நடிப்பாற்றலா என வியக்க வைக்கிறார் .கதாநாயகி பிரியாமணி மிக நன்றாக செய்திருக்கிறார் .இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகவே அவரை பாராட்டலாம்.

சின்ன சின்ன காதாபாத்திரங்களில் வருபவர்கள் கூட நிறைவாக செய்திருக்கிறார்கள் .அதிலே இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது .நீண்ட நேடிய கதை சொல்வது முக்கியமல்ல .காட்சிகளின் நேர்த்தி தான் இயக்குநரின் முக்கிய வேலை .அதிலே அமீர் தனது முந்தைய படங்களை மிஞ்சியிருக்கிறார்.

2 மணி நேரங்களுக்கு மேல் கலகலப்பாக செல்லும் திரைப்படம் ,நெஞ்சை பதற வைக்கும் சோகத்தோடு முடிகிறது .மனம் கனக்கிறது .அது படமாக்கப்பட்டிருக்கும் விதம் அதீதமாக வலிந்து திணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்திருகின்றன .ஆனால் என்னைப் பொருத்தவரை அந்த காட்சிகள் நம் சமூகத்தின் இழிவான ஒரு பக்கத்தை ,பொறுப்பின்மையை குறித்த கோபத்தையும் ஆற்றாமையையுமே கொடுப்பதாக இருக்கிறது .அதே நேரத்தில் வாழ்க்கையை பொறுப்ற்ற விதமாக கழிப்பவர் தங்களுக்கு மட்டுமல்ல தங்களை சார்ந்தோருக்கும் கொடுக்கும் துன்பத்தை எடுத்துக்காட்டும் பாடமாக இருக்கிறது.

இத்தகைய முடிவைப்பற்றி கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ,இத்தகைய திரைப்படங்கள் பெறும் வெற்றி,தமிழ் சினிமா எதார்த்தத்தை நோக்கிய பாதையில் இன்னொரு படி எடுத்து வைப்பதற்கான வழியாக இருக்கும்.

இயக்குநர் அமீருக்கு பாராட்டுக்கள்!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives