Tuesday, May 23, 2006

கமல் எழுதிய தலையங்கம்

கமல்ஹாசன் .தனித்து நிற்கும் கலைஞன் .தான் சார்ந்திருக்கும் துறை மூலம் தன்னை வளர்த்திக்கொள்ளும் போதே அந்த துறையையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல துடிக்கும் துடிப்பு மிக்க 50 வயது இளைஞன் .தமிழகத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது என்று கூட அறியாமல் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நடிகர்களுக்கு மத்தியில் அரசியல் பற்றி தெளிவான சிந்தனைகளும் ,எந்த பிரச்சனையிலும் தனக்கென்று ஒரு நிலைப்பாடும் கொண்ட அறிவாளி .
15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ரசிகர்களுக்காக 'மய்யம் ' என்னும் இதழை நடத்தி வந்த போது ,1990-ல் ரசிகர்களுக்கு கமல் தீட்டிய ஒரு தலையங்கம் இதோ...


----------------------------------------------------------------------------------------------
வெளிநாடு சென்று புளங்காகிதத்துடன் வீடு திரும்பும் வேளையில் ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரை நடக்கும் பயணத்தில் பாதையிலிருக்கும் குழிகளில் கார் விழுந்து எழும் பொழுது நமது நாட்டை நிந்தனை செய்யும் பழக்கம் யதார்தமாக எல்லோருக்கும் வருவதுண்டு

முதல் குழியில் விழுந்ததும்-
"பாருய்யா ...இது தான் நம்ம நாடு.ஜெர்மனியைப் பார்...ஐந்து கார்கள் ஒரே திசையில் அழகாய் போகக் கூடிய அகலமான பாதைகளை அங்கே ஹிட்லர் காலத்திலேயே அமைத்து விட்டார்கள் .இன்னும் மாட்டு வண்டிகளை ஓட்டிக்கொண்டிருக்கிறோம் நாம்.

அமெரிக்காவில் நினைத்த இடத்தில் சுவரொட்டிகளை ஒட்ட முடியாது தெரியுமா? இங்கே பார் தெருவுக்கு தெரு சுவரொட்டி .அதை பசுமாடு இழுத்து தின்னுகிறது.

அந்த ஊரில் மாடையெல்லாம் ஊரை விட்டே ஒதுக்கி கட்டி வைத்திருக்கிறார்கள் .இங்கே மனிதர்களுக்கே ரோட்டை கடக்க தெரியவில்லை என்றெல்லாம் விமர்சிப்பர் .இந்த விமர்சனம் நானும் செய்து கொண்டிருந்தேன் போன வருடம் வரை.

இந்த வருடம் அமெரிக்கா சென்று ,அவர்களுடம் நெருங்கிப் பழகவும் ,அவர்களின் சில சினிமாத் தொழில் நுட்பத்தைச் சற்றே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த பொழுது -நான் என்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன் . நான் என்ன செய்து விட்டேன் நாடு மேம்பட ? குண்டும் குழியுமாக இருப்பதில் என் பங்கு என்ன இருக்கிறது?

கூவத்தின் நாற்றம் என் மூக்கைத் துளைப்பதை மட்டும் தான் குறையாய் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் எனது வீட்டுச் சாக்கடை கலப்பதும் அந்த கூவத்தில்தானே என்று நான் யோசிக்க மறந்தது ஏன்?

எனது நறகலும் கலந்து வரும் மணம்தானே அந்த கூவத்தில் மணம் என்பதை யோசித்துப் பார்த்தேன். அரசியல்வாதி அள்ளிக் கொண்டு போன பணத்தை சுவிஸ்ட்சர்லாந்தில் வைத்திருக்கிறான் என்று கோபமாய் கூக்குரல் செய்யும் எதிர்கட்சித் தலைவர்களுடன் நானும் சேர்ந்து கூக்குரல் செய்யலாம் .ஆனால் அந்த பணத்தில் என்னுடைய ஒரு பைசாவுல் இருக்கிறது. அவனுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சத்தில் எங்கோ என்னுடைய பைசாவும் கலந்திருக்கிறதே என்று நான் யோசித்துப் பார்க்கையில்..இத்தனை வீழ்ச்சியின் காரணத்தில் எனக்கும் ஒரு கணிசமான பங்கிருக்கிறது என்பதை உணர்ந்து வாய்ப் பேச்சு அடங்கி விடுகிறது.

சற்றே குற்றவுணர்வு என்னைத் தாக்கி என் தொழிலில் நான் என்ன செய்தேன் என்று என்னையே நான் விமர்சித்துப் பார்த்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு என்னை ஆளாக்குகிறது..

அப்படி விமர்சித்துப் பார்த்த பொழுது 'செய்ததெல்லாம் போதாது' என்னும் சபையடக்கமான சொல்லை விட அதிகமான சில விஷயங்கள் புரிகிறது .வலிக்கிறது.

"என்னுடைய தொழிலில் நான் என்ன செய்து விட்டேன்?"

" 'அப்பு' செய்தீர்களே ..'நாயகன்' செய்தீர்களே.. " 'மூன்றாம் பிறை' செய்யவில்லையா ?

இரண்டு முறை ஜனாதிபதி பரிசு வாங்கவில்லையா ? என்றெல்லாம் என்னுடைய நண்பர்களும் ,எனது ரசிகர்களும் என்னுடைய சோர்விலிருந்து என்னை ஆசுவாசப்படுத்த நினைப்பவர்களும் சொல்லுவார்கள்.

ஆனால் யோசித்துப்பார்த்தால் - இந்தியா..இந்தியாவின் முதுகைத் தட்டிக்கொள்வது போதாது.கமல்ஹாசன் ,கமல்ஹாசனின் முதுகைத் தட்டிக் கொள்வது போதாது.

நாம் உலகத்துடம் தொடர்பு கொள்ளும் நாடாக வேண்டும் .எனது சினிமா உலகத்திற்கு புரிய வேண்டும். எனது குரல் உலகத்துக்கு கேட்க வேண்டும்.

அப்படி செய்ய முடியுமாயின் -அமெரிக்காவை விட அழகாக..ஜெர்மனியை விட அகலமான பாதைகளை நாம் செய்ய முடியும்.

இதற்கு நாமென்ன செய்ய வேண்டும்?

"நீங்கள் சினிமா நடிகர். காரில் வசதியாய் போய்க் கொண்டிருக்கிறீர்கள் .நீங்கள் நினைத்தால் செய்ய முடியும் .நானென்ன செய்ய முடியும் ?" என்று ஒரு ரிக் ஷா தொழிலாளி கேட்பானாயின் - செய்ய முடியும்.

கமல்ஹாசன் தனது தொழிலை உலக ரீதியில் பரப்ப முடியுமென்றால் ,ரிக் ஷாகாரரும் தன்னுடைய ரிக் ஷா தொழிலை உலக ரீதியாக்க முடியும்.

உலகத்து டூர்ஸ்டு மேப்பில் அழகான ரிக் ஷாக்கள் இந்தியாவில் தான் இருக்கிறது என்று சொல்ல வைக்க முடியும்.

நாணயமான ரிக் ஷாக்காரர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்று சொல்ல வைக்க முடியும்.

"வேர்க்கடலை விற்கிறேன் .நானென்ன செய்ய முடியும் ?" என்று கேட்டால் .."முதலில் வேர்க்கடலைத் தோலை அள்ளி குப்பையில் போடு .உன் நாட்டை நீ அழகாக்கி விட்டாய் .

இந்த அளவில் ஒவ்வொருவரும் செய்ய முடியும் என்பதை நான் உணர்கிறேன். நான் உபதேசம் செய்வது உனக்கல்ல -எனக்கே!

இதை நான் பேசிப்பார்த்துக் கொள்வதன் மூலம் -இதை நான் எழுதிப் பார்த்துக் கொள்வதின் மூலம் உண்மைகள் எனக்கு தெளிவாய்ப் புரிகிறது .அவ்வளவே!

இதை நான் உனக்கு எழுதினேன் என்பதை விட எனக்கு நானே எழுதிக் கொண்ட கடிதம்.

பொங்கல் வாழ்த்துக்களுடன்..அன்பன் ..கமல்ஹாசன்.

Friday, May 19, 2006

யார் நல்லவர்? யார் ஏழை?

பொதுவாவே புனித பிம்பங்களாக தம்மை காட்டிக்கொள்பவர்கள் புத்திசாலித்தனமாக பேசிக் கொள்வதாக நினைத்துக்கொண்டு சில கருத்து முத்துக்களை உதிர்த்து விடுவார்கள் "இப்போ இருக்கிற அரசியல் வாதிகளையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டு ஒரு நல்லவரா ,உத்தமரா ,நாட்டுப்பற்றுள்ளவரா பார்த்து அதிகாரத்த ஓப்படைக்கணும் .அப்ப தான் நம்ம நாடு உருப்படும் " அப்படீண்ணு ஒரே வரியில பெரிய தீர்வு சொல்லிட்டதாக மனதுக்குள் நினைத்துக் கொள்வார்கள் போல .விசுவின் அரட்டை அரங்கங்கள் போல உச்சஸ்தாயி உளறல்களில் இதை அதிகம் கேட்கலாம் .

இப்படிப்பட்டாவர்களை தனித்தனியே அழைத்து "நீங்க அற்புதமா சொன்னீங்க .சரி சொல்லுங்க .யாருங்க அந்த நல்லவர் ,உத்தமர் ?" -ன்னு கேட்டுப்பாருங்க .அநேகமா அவங்க அப்பா அல்லது சித்தப்பா அல்லது மாமா -வைச் சொல்லுவாங்க .இப்படி எல்லோரும் ஆளாளுக்கு இவர் தான் நல்லவர் ,அவர் தான் நல்லவர் -ன்னு சொல்லப்போக ,இருக்கதுல ரொம்ப நல்லவரை கண்டுபிடிக்க 'நல்லவரோமீட்டர்' கருவியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .

"ஐயா ! உங்களுக்கு நல்லவரா தெரியுறவர இவரு ஒத்துக்க மாட்டேங்குறாரே ? அவர் சொல்லுறவர நீங்க ஒத்துக்க மாட்டேங்குறீங்க .இப்படியே நாட்டுல உள்ள கோடிகணக்கானவர்களும் ஒத்துக்குற நல்லவர உத்தமர எப்படி கண்டுபிடிக்குறது ?"

.."அட அப்படீண்ணா எல்லோரும் அவங்களுக்கு தோணுறவங்கள சொல்லட்டும் .யாரை அதிகம் பேரு சொல்லுறாங்களோ அவங்கள எடுத்துக்குவோம் "..

"ஐயா ! அதைத் தானே இப்போ தேர்தல்-ங்குற பேர்ல பண்ணிட்டிருக்கோம் . நீங்க என்ன தொடங்குன இடத்துக்கே வந்து நிக்குறீங்க ?

"என்னங்க சொல்லுறீங்க .அதுக்காக இப்படி அநியாயம் பண்ணுறவங்களை நிறைய பேர் தேர்ந்தெடுத்தா எப்படிங்க ஏத்துக்க முடியும் ?"

"சரி! நீங்க சொல்லுறத பார்த்தா உங்க அப்பா ,சித்தப்பா அல்லது மாமாவை தேர்ந்தெடுக்குற வரைக்கும் நீங்க ஒத்துக்க மாட்டீங்க போல"

"ஹி..ஹி"
---------------
"அப்புறம் பாத்தீங்கண்ணா இந்த இட ஒதுக்கீடு முறை ஒண்ணும் சரியில்லீங்க .சாதி அடிப்படையில கொடுக்காம ,பொருளாதார அடிப்படையில கொடுக்கணும் .அது தான் சரிப்பட்டு வரும்"

"நீங்க சொல்லுறது சரி தாங்க .ஆனா யாரெல்லாம் ஏழைங்க-ன்னு எப்படி கண்டுபிடிக்குறது?"

"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க .பார்த்தா தெரியாதா ? வசதி இல்லாதவங்க ,கஷ்டப்படுறவங்க இவங்கள ஏழைங்கண்னு முடிவு பண்ணனும் "

"யாரு முடிவு பண்ணனும் ? ஏழைங்கல்லாம் வரிசையில் வந்து நிற்க உண்மையிலேயே வசதியானவங்க பெருந்தன்மையா வரிசையில வந்து நிக்க மாட்டாங்கண்ணு சொல்லுறீங்களா?'

"குதர்க்கமா பேசாதீங்க! அதான் ரேசன் கார்டுல வருமானம் போட்டிருக்கில்ல"

"அடேங்கப்பா ! ரேசன் கார்டுல போட்டுட்டாலும் ...எங்கூரு பண்ணையார் 200 ஏக்கர் நிலம் வச்சிருக்காரு .அவர் ரேசன் கார்டுல மாசம் 1000 ரூபா வருமானம்-ன்னு போட்டிருக்கு .சாராயக்கடை பெரும்புள்ளி மாச வருமானம் 200 ரூபாய்ன்னு போட்டிருக்கு .பாவப்பட்ட சண்முகம் வாத்தியாருக்கு மட்டும் கரெக்டா 8000-னு போட்டிருக்கு . ரயில்வேயில வேலை பாக்குறவங்க குடும்பத்துக்கே இலவச ரயில் பயணம் .பஸ் டிரைவர் புள்ளைக்கு பஸ் பயணம் இலவசம் .ஆனா பள்ளிக்கூடத்துல வாத்தியார் புள்ளைக்கு மட்டும் தான் ஸ்காலர்ஷிப் கிடையாதாம் .அரசாங்க ஊழியராம் .ஆனா பண்ணையார் புள்ளைக்கும் ,சாராயக்கடை காரன் புள்ளைக்கும் ஸ்காலர்ஷிப் உண்டாம் .பாவம் அவங்க தான் ஏழைங்களாச்சே."

"என்ன நக்கலா !இப்போ என்ன தான் சொல்லுறீங்க ! சாதி சார்புல குடுத்து அனுபவிக்குறவனே அனுபவிக்குறான் .அதனால தான் பொருளாதார அடிப்படையில கேக்குறோம் "

"பொருளாதார அடிப்படையில மட்டும் என்ன வாழுதாம் -ன்னு இவ்வளவு சொல்லியுமா புரியல்லயா ? .ஓய்! சாதி அடிப்படையில குடுக்குறதுல ஓட்டை இருந்தா ,அத அடைக்குறதுக்கு என்ன பண்ணலாம்-ன்னு உருப்படியா எதாவது சொல்லும் .அதை விட்டுட்டு பெருசா பொருளாதார அடிப்படையில குடுத்தா பிரச்சனை தீர்ந்துடும்-ன்னு கப்ஸா உட்டுட்டு அலையாதேயும்"

"ஆளை விடுயா!"

Monday, May 15, 2006

குமரி மாவட்ட முடிவுகள் -சுவாரஸ்யத் துளிகள்

பொதுவாக தென் மாவட்டங்கள் அதிமுக கோட்டை ,தென் மாவட்டங்கள் சாதி மோதலுக்கு பெயர் போனவை என்று குறிப்பிடப்படும் போது தென் கோடியிலிருக்கிற எங்கள் குமரி மாவட்டத்தை ஒருவேளை தென் மாவட்டங்களில் சேர்க்கவில்லையா அல்லது குமரி மாவட்டத்தை யாரும் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லையா என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு .ஏனென்றால் குமரி மாவட்டம் ஒரு போதும் அதிமுக-வின் கோட்டையாக இருந்தது இல்லை என்பது மட்டுமல்ல ,தமிழகத்திலேயே அதிமுக மிகவும் பலவீனமாக இருக்கும் மாவட்டம் இது தான் என்பதும் உண்மை .அதுபோல மற்ற தென் மாவட்டங்களைப் போல ஜாதி மோதல்கள் எனக்கு தெரிந்து இல்லாத மாவட்டமும் இது தான் (1982 மதக்கலவரம் வேறு).

தமிழகத்திலேயே படிப்பறிவில் முதலிடம் வகிக்கும் குமரி மாவட்டம் இன்று வரை தேசியக் கட்சிகளின் கூடாரமாக இருக்கிறது .பெருந்தலைவர் காமராஜர் நாகர் கோவில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது கலைஞர் இங்கு முகாம் அமைத்து தீவிர பணியாற்றியும் மக்கள் பெருந்தலைவரை 'அப்பச்சி' 'அப்பச்சி' என்று வாஞ்சையோடு அழைத்து அமோக வெற்றி பெற செய்தார்கள் .அதனாலேயோ என்னவோ கலைஞர் அவர்கள் குமரி மாவட்டம் என்றாலே பாராமுகம் காட்டுவது உண்டு .ஒரு முறை வெறுத்துப் போய் 'நெல்லை எங்கள் எல்லை .குமரி எங்கள் தொல்லை' என்று குறிப்பிட்டார் .பெருந்தலைவரின் மறைவுக்குப் பின்னாலும் அவரை மிகவும் நேசிக்கும் மக்கள் நிறைந்த மாவட்டத்தில் காங்கிரஸ் தான் தனிப் பெரும் கட்சியாக கோலோச்சி வந்தது .

நாளடைவில் இந்துத்துவ கட்சிகள் இங்கு தலையெடுக்க ஆரம்பித்தன. தமிழகத்தில் சிறுபான்மை மதத்தினர் இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையினராக இருப்பதால் இயல்பாக இந்த மாவட்ட அரசியலிலும்,பொருளாதாரத்திலும் அவர்கள் பெரும் பங்கு வகிப்பதை சில இந்து அமைப்புகள் பயன்படுத்தி இந்துக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அதிலே ஓரளவு வெற்றியும் பெற்றார்கள் .தமிழகத்தில் பாஜக காலூன்றாத காலத்திலேயே பத்மநாதபுரம் தொகுதி முதல் பாஜக எம்.எல்.ஏ -வை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தது.

அதிமுக-வைப் பொறுத்தவரை திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெற்றிருக்கிறது .நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதன் நிலைமை அந்தோ பரிதாபம் தான். கேரள எல்லையில் அமைந்திருக்கும் திருவட்டாறு ,விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனிப்பெரும் கட்சியாக விளங்கி வருகிறது.

இந்த தேர்தலில் பலம் பொருந்திய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அணியில் இருந்ததால் திமுக கூட்டணிக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு இயல்பான ஒன்று தான் .ஆனால் மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற மதிமுக- வை கூட்டணியில் பெற்றிருந்த அதிமுக டெபாஸிட் தொகையை இழக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வழக்கம் போலவே பாளையங்கோட்டை வரை வந்த கலைஞர் ,தொல்லை மாவட்டமான குமரிக்கு பிரச்சாரத்துக்கு வராத நிலையில் அதிமுக அணியில் ஜெயலலிதா ,வைக்கோ ,சரத்குமார் என்று அனைவரும் மாவட்டம் முழுக்க பிரச்சாரம் செய்தார்கள்.


தொகுதிவாரியாக இங்கு முடிவுகளைப் பார்ப்போம்...

நாகர்கோவில் - திமுக வெற்றி

ராஜன் (திமுக) -45,354
எஸ்.ஆஸ்டின் -31,609
ரத்தினராஜ்(மதிமுக) - 21,990
உதயகுமார்(பாஜக) -10,752
தேதிமுக -3783

இது தனிப்பட்ட முறையில் என்னுடைய தொகுதி .சென்ற முறை திமுக கூட்டணியில்(திருநாவுக்கரசு கட்சி) வென்று எம்.எல்.ஏ-வாக இருந்த ஆஸ்டின் பின்னர் அதிமுகவில் இணைந்தார் .அவருக்கு சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டார் .சுனாமி நேரத்தில் கட்சி சார்பாக இல்லாமல் ,தான் சார்ந்திருந்த சர்ச் சார்பில் அவர் ஆற்றிய பணி அபாரம் .அந்த நன்றி மறவாத மீனவ மக்கள் அவருக்கு ஓட்டுப்போட்டதன் விளைவு ,கணிசமான வாக்குகளும் இரண்டாமிடமும் ..அதிமுக கூட்டணி 3-வது இடத்தில்.

பத்மநாபபுரம் - திமுக வெற்றி

தியோடர் ரெஜினால்ட் (திமுக) -51,612
ராஜேந்திர பிரசாத்(அதிமுக) -20,546
வேலாயுதன்(பாஜக) -19777
தேதிமுக -3360

200-க்கு மேல் திமுக கூட்டணிக்கு கணித்திருந்த ஜூவியில் கூட ,அதிமுக வெற்றி பெறும் என்று கணித்திருந்த தொகுதி ,கடைசியில் அதிமுக பெற்ற வாக்குகளைவிட வாக்கு வித்தியாசம் அதிகம் என்று முடிந்திருக்கிறது ..பாஜக ஒரு காலத்தில் கோலோச்சிய தொகுதி .அதிமுக அளவுக்கு பாஜக வாக்குகளை பெற்றிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் (ராஜேந்திர பிரசாத் கிறிஸ்தவர் தான்..நம்புங்கள்..ஹி..ஹி) மதரீதியில் மக்கள் ஓட்டுப் போடவில்லை என்று சொல்லலாம்.

குளச்சல் (காங்கிரஸ் வெற்றி)

ஜெயபால் (காங்) -50,258
எம்.ஆர்.காந்தி -29,261
பச்சைமால்(அதிமுக)-20,407
தேதிமுக - 4941

காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி என்று நினைத்திருக்க அதிமுகவை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டாமிடத்தில் பாஜக. தேதிமுக வேட்பாளர் மீனவர் என்பதால் மீனவர் ஓட்டை பெருமளவு பிரிக்கிறார் என்று ஜூவியிலும் ,இங்கே வலைப்பதிவிலும் சொல்லப்பட்ட போது நான் அதை மறுத்தேன் .அது பொய்க்கவில்லை .மீனவ ஓட்டுக்களை இம்முறை காங்கிரஸ் அள்ளியிருக்கிறது.

கிள்ளியூர் (காங்கிரஸ் வெற்றி)

ஜாண் ஜேக்கப்(காங்) -51,016
சந்திரகுமார்(பாஜக) -24,441
டாக்டர் குமாரதாஸ் (அதிமுக) -14,056
தேதிமுக - 1743

டாக்டர் குமாரதாஸ் கோலோச்சிய தொகுதி .ஜனதா தளம்,காங்கிரஸ் ,த.மா.க சார்பாக பல முறை அமோக வெற்றி பெற்ற டாக்டர் குமாரதாஸ் ,பச்சோந்தியாக மாறி அதிமுக சார்பில் நின்றதால் மக்கள் வெறுப்பை சம்பாதித்து டெப்பாஸிட் இழந்து மூன்றாமிடத்தில் பரிதாபமாக நிற்கிறார்..அய்யோ பாவம்!

திருவட்டாறு (மா.கம்யூ வெற்றி)

லீமா ரோஸ் (மா.கம்யூ) -57,162
சுஜித்குமார்(பாஜக) -29,076
திலக்குமார்(அதிமுக) -13,353
தேதிமுக -9431

கம்யூனிஸ்ட் அமோக வெற்றி பெற ,பாஜக இரண்டாமிடத்தில் ..அதிமுக பரிதாபமாக டெப்பாஸிட் இழந்து நிற்கிறது.அதிமுக +பாஜக கூட கம்யூ ஓட்டை நெருங்க முடியவில்லை.என்னங்க நடக்குது?


விளவங்கோடு (மா.கம்யூ வெற்றி)

ஜாண் ஜோசப் (மா.கம்யூ) -64,552
பிராங்கிளின்(அதிமுக) -19,458
பொன்.விஜயராகவன் -13,434
தேவதாஸ்(பாஜக) -12,553
தேதிமுக -7309

இந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் ,இந்த சிறிய தொகுதியில் 4 முனை போட்டியில் நிகழ்த்தப்பட்டிருப்பது உண்மையிலேயே சாதனை தான். வாக்கு வித்தியாசம் 45000-க்கு மேல். இதற்கு மேல் என்ன சொல்லுவது?

கன்னியாக்குமரி (திமுக வெற்றி)

சுரேஷ்ராஜன் (திமுக) -63,181
தளவாய் சுந்தரம்(அதிமுக) -52,494
தேதிமுக -5093
பாஜக -3436

மற்ற தொகுதிகளிலிருந்து தனித்து நிற்பதும் ,அதிமுகவின் மானத்தை ஓரளவு காத்ததும் இந்த ஒரே தொகுதி தான் .இங்கு வெற்றி பெறும் கட்சியே ஆட்சியமைக்கும் என்ற செண்டிமெண்ட் இந்த முறையும் தப்பவில்லை.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது...

* அதிமுக ஏற்கனவே பலவீமமாயிருந்து ,இப்போது இன்னும் சரிந்திருக்கிறது

* ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால் அதிமுக எதிர்ப்பு அலை பலமாகவே வீசியிருக்கிறது.

* வழக்கமாக அதிமுக -வுக்கு சாதகமான மீனவர் ஓட்டுக்கள் இம்முறை பல்வேறு காரணங்களால் வேறு அணிக்கு போயிருக்கிறது

*அதிமுக 3 இடங்களில் டெபாஸிட் தொகையை இழந்திருக்கிறது

* பரவலாக தமிழகத்தில் வாக்கு வித்தியாசங்கள் குறைவாக இருக்க ,குமரி மாவட்டத்தில் வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்கிறது

* பாஜக செல்வாக்கு சரிந்திருந்தாலும் ,கணிசமாக வாக்கு வங்கி இன்னும் இருக்கிறது.

* மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது இங்கு விஜயகாந்துக்கு ஆதரவு மிகக்குறைவு.

* திராவிடக்கட்சிகளில் இம்மாவட்டத்தில் பலமான திமுக தன் பலத்தை கூட்டியிருக்கிறது.

* தேசியக்கட்ட்சிகள் தொடர்ந்து குமரிமாவட்டத்தை கட்டிப்போட்டிருக்கின்றன.

திமுக -வுக்கு எச்சரிக்கை மணி!

தன் தள்ளாத வயதிலும் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து தனது பிரச்சாரத்தினால் கூட்டணியை தூக்கி நிறுத்தி ,இன்றும் தன்னை வசீகரத் தலைவராக நிரூபித்து ,வெற்றிக்கொடி நாட்டி தமிழகத்தின் முதல்வராக 5-வது முறை பொறுப்பேற்றிருக்கும் கலைஞர் அவர்களுக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

சுவாரஸ்யம் மிகுந்த இந்த தேர்தல் முடிவுகள் அனைத்து தரப்பினருக்கும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் அளித்திருக்கும் எச்சரிக்கைகளை தெளிவாக சொல்லியிருக்கிறது .

அதிமுக ஆட்சியை இழந்தாலும் ,மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக இழக்கவில்லை என்பதை அக்கட்சி வலிமை குறைந்த கூட்டணியிலும் பெற்ற பெருவாரியான வெற்றியும் ,வாக்குக்களும் புலப்படுத்துகின்றன .அதிமுக இதை சரியான கோணத்தில் எடுத்துக்கொண்டு பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது எமது விருப்பமென்றாலும் ,அதன் தலைமை அந்த அளவுக்கு பக்குவப்பட்டது போல் தெரியவில்லை.

திமுக-வைப் பொறுத்தவரை கூட்டணி பலத்தால் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும் ,பல இடங்களில் திமுக-வுக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்கள் என்பது உண்மை.

திமுக-வின் கோட்டை எனப்படும் சென்னையில் அதிமுக இம்முறை 14-ல் 7 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது .திமுக வெற்றி பெற்ற பல தொகுதிகளில் கூட அதன் வாக்கு வித்தியாசம் திருப்தியுறும் அளவுக்கு இல்லை .இதற்கான காரணங்களை இதய சுத்தியோடு ஆராயவேண்டும் .சென்னையைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் தட்டுப்பாடை நீக்கும் திட்டங்கள் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன என்பது என் எண்ணம் .திமுக வழக்கம் போல பாரம்பரிய கோட்டை என்றெல்லாம் இனிமேல் சால்ஜாப்பு சொல்ல முடியாது .மக்கள் இப்போது மாறியிருக்கிறார்கள் .பாரம்பரியமாக ஒரே கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்ற எண்ணத்திலிருந்து பெருவாரியான மக்கள் வெளியே வந்து ,பிரச்சனைகள் அடிப்படையில் ஓட்டளிக்கும் பாங்கு இப்போது அதிகரித்து வருகிறது .திமுக-வின் கோட்டையை தகர்க்க சென்னையைப் பொறுத்தவரை ஜெயலலிதா எடுத்த சில முயற்சிகள் வழக்கத்துக்கு மாறாக பயனுள்ள விதத்தில் அமைந்தது என்பதை ஜெயலலிதா எதிர்ப்பாளரான என் போன்றவர்கள் ஒத்துக்கொள்வதில் ஒன்றும் தயக்கம் இல்லை .அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்கள் .அதே வகையில் நல்லதை யார் செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம் என்று சென்னை நகர மக்கள் கொடுத்திருக்கும் செய்தியை திமுக சரியான கோணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் .வெறும் பாரம்பரிய கோட்டை என்னும் மாயையை மட்டும் வைத்து இனிமேல் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு தனக்கு வாக்களிப்பார்கள் என்று திமுக நினைப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த தேர்தலில் சென்னையில் பாதிக்கு பாதி இடங்கள் ,கோவையில் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் ,விருதுநகர்,தேனியில் பெருவாரியான இடங்கள் ,தூத்துக்குடி மற்றும் தஞ்சையில் பாதிக்கு பாதி இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தினமலர் போன்ற பத்திரிகைகள் ,மாயவரத்தான் போன்ற வலைப்பதிவர்கள் அதிமுக 188 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ,திமுக 132 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ஒப்பிட்டு காமெடி செய்து மனத்திருப்தி அடைந்து கொள்ளலாம் .அதையும் மீறி கூட்டணி பலமின்றி அதிமுக பெற்ற ஓட்டுக்களை குறைத்து மதிப்பிட முடியாது தான் .

கலைஞர் அவர்கள் மற்றொரு விடயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும் .தான் திமுக கோட்டை என்று நம்பிய பல பகுதிகள் திமுகவை கைவிட்டது போல ,பாரம்பரியமாக தனக்கு சாதகமில்லாததாக திமுக நினைக்கும் பல பகுதிகள் திமுக-வை கைதூக்கி விட்டுருக்கின்றன.. உதாரணமாக கலைஞர் அவர்கள் தனது பிரச்சார பயணத்தில் முற்றிலுமாக புறக்கணித்த குமரி மாவட்டம் திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றியை அளித்தது மட்டுமல்ல ,அதிமுக கூட்டணியை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் தொகையை இழக்க செய்திருக்கிறது(இது பற்றி தனிப்பதிவு விரைவில்) .இனிமேலாவது கலைஞரும் திமுக-வும் இது போன்ற முன் முடிவுகளின் அடிப்படையும் செயல்படாமல் இருப்பது நல்லது.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை மக்கள் எல்லா கட்சிகளுக்கும் ஒரேயடியாக ஆதரவும் தெரிவிக்கவில்லை ,முழுவதுமாக கைவிடவும் இல்லை .கலைஞரை முதல்வராக்கினாலும் திமுக-வுக்கு பல இடங்களில் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள் .அதிமுக-வை ஆட்சியை விட்டு அகற்றினாலும் முழுவதுமாக கைவிட்டு விடவில்லை .மதிமுக தோல்வியை தழுவினாலும் முதன் முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறது .விடுதலைச் சிறுததைகள் 2 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறார்கள் .பாமக 17 தொகுதிகளைப் பிடித்திருந்தாலும் மக்கள் கடுமையான எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்கள் .விஜயகாந்தின் துணிச்சலுக்கு பரிசாக பெருவாரியான வாக்குகளையும் அளித்து அவரை சட்டமன்றத்துக்கும் அனுப்பியிருக்கிறார்கள் .சுயேட்சைகளை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டுமென்று அவர்களுக்கும் ஒரு தொகுதியை கொடுத்திருக்கிறார்கள் .

எல்லாவற்றிக்கும் மேலே முதல் முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள் .ஒரு காலத்தில் மலையாள சினிமாவையும் தமிழ் சினிமாவையும் ஒப்பிட்டு தமிழ் சினிமாவை அதீதமாக கேலி செய்யும் நிலைமை இருந்தது .இன்று தமிழ் சினிமா அதன் தரத்தை உயர்த்தி அந்த இடைவெளியை குறைத்திருக்கிறது .இப்போது அரசியலும் அந்த பாதையில் மாறிக்கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன் .மாறி மாறி ஆட்சியை ஒப்படைக்கும் கேரளாவைப்போல கடந்த நான்கு முறை தொடர்ந்து தமிழகம் ஆட்சி மாற்றத்தை சந்தித்திருக்கிறது .கேரளா போன்று முழுமையான கூட்டணியாட்சி இல்லையெனினும் கூட்டணி ஆதரவோடு ஆட்சி நீடித்து அமையும் என நம்புகிறேன் .

இது போன்று கேரளத்தை பின்பற்றி அரசியலில் எளிமையும் ,நாகரீகமும் தமிழகத்தில் வளரும் என நம்புவோம் .70% என்ற அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் மேலுள்ள நம்பிக்கையை அதிகமாக்கியிருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்!

அனுபவமும் ஆற்றலும் கொண்ட கலைஞர் தலைமையில் தமிழகம் ஆக்க பூர்மான வளர்ச்சி பெறும் என நம்புகிறேன்..வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives