Monday, May 15, 2006

திமுக -வுக்கு எச்சரிக்கை மணி!

தன் தள்ளாத வயதிலும் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து தனது பிரச்சாரத்தினால் கூட்டணியை தூக்கி நிறுத்தி ,இன்றும் தன்னை வசீகரத் தலைவராக நிரூபித்து ,வெற்றிக்கொடி நாட்டி தமிழகத்தின் முதல்வராக 5-வது முறை பொறுப்பேற்றிருக்கும் கலைஞர் அவர்களுக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

சுவாரஸ்யம் மிகுந்த இந்த தேர்தல் முடிவுகள் அனைத்து தரப்பினருக்கும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் அளித்திருக்கும் எச்சரிக்கைகளை தெளிவாக சொல்லியிருக்கிறது .

அதிமுக ஆட்சியை இழந்தாலும் ,மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக இழக்கவில்லை என்பதை அக்கட்சி வலிமை குறைந்த கூட்டணியிலும் பெற்ற பெருவாரியான வெற்றியும் ,வாக்குக்களும் புலப்படுத்துகின்றன .அதிமுக இதை சரியான கோணத்தில் எடுத்துக்கொண்டு பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது எமது விருப்பமென்றாலும் ,அதன் தலைமை அந்த அளவுக்கு பக்குவப்பட்டது போல் தெரியவில்லை.

திமுக-வைப் பொறுத்தவரை கூட்டணி பலத்தால் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும் ,பல இடங்களில் திமுக-வுக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்கள் என்பது உண்மை.

திமுக-வின் கோட்டை எனப்படும் சென்னையில் அதிமுக இம்முறை 14-ல் 7 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது .திமுக வெற்றி பெற்ற பல தொகுதிகளில் கூட அதன் வாக்கு வித்தியாசம் திருப்தியுறும் அளவுக்கு இல்லை .இதற்கான காரணங்களை இதய சுத்தியோடு ஆராயவேண்டும் .சென்னையைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் தட்டுப்பாடை நீக்கும் திட்டங்கள் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன என்பது என் எண்ணம் .திமுக வழக்கம் போல பாரம்பரிய கோட்டை என்றெல்லாம் இனிமேல் சால்ஜாப்பு சொல்ல முடியாது .மக்கள் இப்போது மாறியிருக்கிறார்கள் .பாரம்பரியமாக ஒரே கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்ற எண்ணத்திலிருந்து பெருவாரியான மக்கள் வெளியே வந்து ,பிரச்சனைகள் அடிப்படையில் ஓட்டளிக்கும் பாங்கு இப்போது அதிகரித்து வருகிறது .திமுக-வின் கோட்டையை தகர்க்க சென்னையைப் பொறுத்தவரை ஜெயலலிதா எடுத்த சில முயற்சிகள் வழக்கத்துக்கு மாறாக பயனுள்ள விதத்தில் அமைந்தது என்பதை ஜெயலலிதா எதிர்ப்பாளரான என் போன்றவர்கள் ஒத்துக்கொள்வதில் ஒன்றும் தயக்கம் இல்லை .அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்கள் .அதே வகையில் நல்லதை யார் செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம் என்று சென்னை நகர மக்கள் கொடுத்திருக்கும் செய்தியை திமுக சரியான கோணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் .வெறும் பாரம்பரிய கோட்டை என்னும் மாயையை மட்டும் வைத்து இனிமேல் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு தனக்கு வாக்களிப்பார்கள் என்று திமுக நினைப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த தேர்தலில் சென்னையில் பாதிக்கு பாதி இடங்கள் ,கோவையில் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் ,விருதுநகர்,தேனியில் பெருவாரியான இடங்கள் ,தூத்துக்குடி மற்றும் தஞ்சையில் பாதிக்கு பாதி இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தினமலர் போன்ற பத்திரிகைகள் ,மாயவரத்தான் போன்ற வலைப்பதிவர்கள் அதிமுக 188 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ,திமுக 132 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ஒப்பிட்டு காமெடி செய்து மனத்திருப்தி அடைந்து கொள்ளலாம் .அதையும் மீறி கூட்டணி பலமின்றி அதிமுக பெற்ற ஓட்டுக்களை குறைத்து மதிப்பிட முடியாது தான் .

கலைஞர் அவர்கள் மற்றொரு விடயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும் .தான் திமுக கோட்டை என்று நம்பிய பல பகுதிகள் திமுகவை கைவிட்டது போல ,பாரம்பரியமாக தனக்கு சாதகமில்லாததாக திமுக நினைக்கும் பல பகுதிகள் திமுக-வை கைதூக்கி விட்டுருக்கின்றன.. உதாரணமாக கலைஞர் அவர்கள் தனது பிரச்சார பயணத்தில் முற்றிலுமாக புறக்கணித்த குமரி மாவட்டம் திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றியை அளித்தது மட்டுமல்ல ,அதிமுக கூட்டணியை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் தொகையை இழக்க செய்திருக்கிறது(இது பற்றி தனிப்பதிவு விரைவில்) .இனிமேலாவது கலைஞரும் திமுக-வும் இது போன்ற முன் முடிவுகளின் அடிப்படையும் செயல்படாமல் இருப்பது நல்லது.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை மக்கள் எல்லா கட்சிகளுக்கும் ஒரேயடியாக ஆதரவும் தெரிவிக்கவில்லை ,முழுவதுமாக கைவிடவும் இல்லை .கலைஞரை முதல்வராக்கினாலும் திமுக-வுக்கு பல இடங்களில் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள் .அதிமுக-வை ஆட்சியை விட்டு அகற்றினாலும் முழுவதுமாக கைவிட்டு விடவில்லை .மதிமுக தோல்வியை தழுவினாலும் முதன் முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறது .விடுதலைச் சிறுததைகள் 2 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறார்கள் .பாமக 17 தொகுதிகளைப் பிடித்திருந்தாலும் மக்கள் கடுமையான எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்கள் .விஜயகாந்தின் துணிச்சலுக்கு பரிசாக பெருவாரியான வாக்குகளையும் அளித்து அவரை சட்டமன்றத்துக்கும் அனுப்பியிருக்கிறார்கள் .சுயேட்சைகளை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டுமென்று அவர்களுக்கும் ஒரு தொகுதியை கொடுத்திருக்கிறார்கள் .

எல்லாவற்றிக்கும் மேலே முதல் முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள் .ஒரு காலத்தில் மலையாள சினிமாவையும் தமிழ் சினிமாவையும் ஒப்பிட்டு தமிழ் சினிமாவை அதீதமாக கேலி செய்யும் நிலைமை இருந்தது .இன்று தமிழ் சினிமா அதன் தரத்தை உயர்த்தி அந்த இடைவெளியை குறைத்திருக்கிறது .இப்போது அரசியலும் அந்த பாதையில் மாறிக்கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன் .மாறி மாறி ஆட்சியை ஒப்படைக்கும் கேரளாவைப்போல கடந்த நான்கு முறை தொடர்ந்து தமிழகம் ஆட்சி மாற்றத்தை சந்தித்திருக்கிறது .கேரளா போன்று முழுமையான கூட்டணியாட்சி இல்லையெனினும் கூட்டணி ஆதரவோடு ஆட்சி நீடித்து அமையும் என நம்புகிறேன் .

இது போன்று கேரளத்தை பின்பற்றி அரசியலில் எளிமையும் ,நாகரீகமும் தமிழகத்தில் வளரும் என நம்புவோம் .70% என்ற அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் மேலுள்ள நம்பிக்கையை அதிகமாக்கியிருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்!

அனுபவமும் ஆற்றலும் கொண்ட கலைஞர் தலைமையில் தமிழகம் ஆக்க பூர்மான வளர்ச்சி பெறும் என நம்புகிறேன்..வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!!

35 comments:

குழலி / Kuzhali said...

தலைவா நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதினால் நான் என்னத்தய்யா எழுதுவது.... இந்த பதிவை பொறுத்தவரை எல்லா கருத்துகளோடும் ஒத்து போகிறேன்

நன்றி

ப்ரியன் said...

அருமையான பதிவு,

நீங்கள் சொன்னது அனைத்தும் மு.க உணர்ந்த்தே இருக்கிறார் எனத் தெரிகிறது.அதுதான் மேடையிலேயே சொன்னபடி 3 கையெழுத்துக்கள்...

மீண்டும் கண்ணகி வருவாள்

உழவர் சந்தை உயிர்பெறும்

கடல்நீர் குடிநீராக்கப்படும் பொறுத்துப் பாருங்கள்

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//இது போன்று கேரளத்தை பின்பற்றி அரசியலில் எளிமையும் ,நாகரீகமும் தமிழகத்தில் வளரும் என நம்புவோம் .70% என்ற அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் மேலுள்ள நம்பிக்கையை அதிகமாக்கியிருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்!//
என் உண்மையான வாழ்த்துக்களும் எதிர் பார்ப்பும் இதிலேயே அடங்குது தலிவா...

தமிழ் சசி said...

இந்த தேர்தல் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருப்பது உண்மை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வாக்கு வங்கி அரசியல் எதிர்காலத்தில் சிதையும் என்றே நான் நினைக்கிறேன். அதனுடைய அடிப்படை இந்த தேர்தலில் எதிரொலித்து உள்ளது. பல தொகுதிகளின் முடிவுகளைப் பார்க்கும் பொழுது கட்சி அபிமானம், சாதி அபிமானம் இவற்றைக் கடந்து தொகுதியை சரிவர கவனிக்காத பல எம்.எல்.ஏ.க்களை மக்கள் தூக்கியடித்து இருக்கின்றனர். தொகுதியை கவனித்தவர்களை கைதூக்கி விட்டிருக்கின்றனர்.

நீங்கள் கூறுவது போல திமுக-பாமகவின் கோட்டை என்று சொல்லப்படும் வடமாவட்டங்கள், சென்னை போன்ற இடங்களில் அதிமுக குறிப்பிடத்தக்க இடங்களைப் பெற்றிருக்கிறது. தங்களுக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்ற அலட்சியப் போக்கில் அரசியல் செய்து கொண்டிருந்த பாமக போன்ற கட்சிகளுக்கு அவர்களது சாதி மக்களே இம் முறை எச்சரிக்கையையும் விடுத்திருக்கின்றனர். அதிமுகவிற்கு இதே நிலை தான் தென்மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கிறது

பொதுவாக இந்த தேர்தலில் ஒரு நல்ல ஆரோக்கியமான தீர்ப்பினை மக்கள் முன்வைத்துள்ளார்கள் என்று கூறலாம். என்னுடைய முந்தைய ஒரு பதிவில் மக்களின் தேவை குறித்து கூறியிருந்தேன்


"இன்றைய இந்திய/தமிழக சூழலில் மக்களுக்கு தேவை கொள்கைகள் அல்ல. யாருடைய கொள்கைகளும் யாருக்கும் தேவையில்லை. மக்களின் தேவை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தான். இவை தான் தேர்தலில் முக்கிய பிரச்சனை"


இனி வரும் தேர்தல்களில் வாழ்வியல் பிரச்சனைகள் மட்டுமே தேர்தலில் எதிரொலிக்கும். சாதி, கட்சி அபிமானம் போன்றவற்றை மக்கள் பெருவாரியாக புறக்கணிக்க தொடங்கி விடுவார்கள்.

செல்வன் said...

கோட்டைன்னு சொல்வதெல்லாம் சும்மா அடித்து விடுவது ஜோ.அருப்புக்கோட்டை எம்ஜிஆர் ஜெயித்த தொகுதி.ஆனால் அவர் காலத்திலிருந்து அங்கு தொழிற்சாலையே கிடையாது.தென்மாவட்டம்ங்கள் முழுக்க சுத்தமா எந்த தொழிற்சாலையும் கிடையாது.தொழிற்சாலை கட்டாம ஜாதிதலைவருக்கு மணிமண்டபத்தை அரசு கட்டினா ஜனங்க ஒத்துக்குவாங்களா?வேலை வெட்டி இல்லாம சும்மா எத்தனை நாள் இருப்பாங்க?கடுப்பாயி சூரியனுக்கு குத்திட்டாங்க.

இனி வரும் காலத்திலெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடுவதை ஜனங்க விட்டுடுவாஙன்னு தோணுது.அரசியல்வாதிகள் அல்லோல கல்லோல படபோவது உறுதி

இளவஞ்சி said...

ஜோ,

கட்டுரை நல்லாயிருக்குங்க! திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சிக்கு இனி வரப்போகிற குடைச்சல்கள் பற்றியும் எழுதியிருப்பீர்கள் என எதிர்பார்த்தேன்!

குழலி,

//தலைவா நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதினால் நான் என்னத்தய்யா எழுதுவது... //

தல, உங்களுக்கே இந்த பிரச்சனையா?! :))))

ஜோ / Joe said...

குழலி,
நன்றி! என்ன தல..உங்களுக்கா எழுதுவதற்கு பஞ்சம் .பாமக சிறு சரிவு ,கடலூர் ,விழுப்புரம் முடிகள் குறித்து கலக்குங்க!

மாயவரத்தான்,
வாங்க! அது என்ன bold-ல?

ஜோ / Joe said...

பிரியன்,பாலபாரதி,செல்வன்..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

ஜோ / Joe said...

தமிழ் சசி,
கருத்துக்களுக்கு நன்றி!
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல மக்கள் ஓட்டளிக்கும் காரணிகள் நல்ல பாதையில் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

இளவஞ்சி,
வருக!நீங்க சொன்ன சிக்கல்கள் பற்றி தமிழ்சசி,குழலி போன்ற பெருந்தலைகள் விவரமாக எழுதுவார்கள் என நம்புகிறேன் .நானும் முயற்சிக்கிறேன்.

Anonymous said...

அருமையான பதிவு.ஆய்வு தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.

G.Ragavan said...

வாங்க ஜோ. நீங்களும் தேர்தல் முடிவு பதிவு போட்டுட்டீங்களா! :-)

உங்களது பெரும்பான்மையான கருத்துகளோடு நானும் ஒத்துப் போகிறேன்.

// எல்லாவற்றிக்கும் மேலே முதல் முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள் //

எங்க? தனித்து ஆட்சின்னு சொல்லீட்டாங்களே. மத்தியில மட்டும் கூட்டணின்னு வாங்கி வெச்சுக்கிட்டு தமிழகத்தில் இப்பிடிச் செய்தது மிகப் பெரிய தவறுன்னு நெனைக்கிறேன். கூட்டணிக்குக் கருணாநிதி வற்புறுத்தி முயற்சித்திருக்க வேண்டும். வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவ வழங்குறதுக்குக் கூட்டணிக்கட்சிகளுக்கு இருக்குற நல்லெண்ணம் மத்திய அரசு விஷயத்துல திமுகவுக்கு ஏன் இல்லாம போச்சு?

ஜோ / Joe said...

ராகவன்,
வாங்க..கலைஞர் காங்கிரஸையும் அரசில் சேர்த்துக்கொள்ளத்தான் விரும்பினார் ,ஆனால் காங்கிரஸ் தான் பிடி கொடுக்கவில்லை என்று தான் இது வரை நான் நம்பிக்கொண்டுள்ளேன் .காங்கிரஸ் மேலிடம் திமுக -வுக்கு வைத்த செக் இது என்று நான் நினைக்கிறேன் .அது போக அமைச்சரவையில் சேர்ந்தால் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பதில் காங்கிரஸ் தலைமை தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும் என்பதும் காரணமாக இருக்கலாம்.

ROSAVASANTH said...

//தினமலர் போன்ற பத்திரிகைகள் ,மாயவரத்தான் போன்ற வலைப்பதிவர்கள் அதிமுக 188 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ,திமுக 132 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ஒப்பிட்டு காமெடி செய்து மனத்திருப்தி அடைந்து கொள்ளலாம் .//

நான் இரண்டையும் படிக்கவில்லை என்றாலும், இந்த அபத்த காமெடியை ஜெயாடீவில் பார்த்தேன். விரிவாக அலசியிருக்கிறீர்கள். கிட்டதட்ட எல்லாவற்றுடனும் ஒத்து போகிறேன்.

Hamid said...

Dear Joe.. Good article.. I too agree with many of your points.. Also, I feel that Karunanithi will make stalin as chief minister after 2 years or so and at that time congress will also be given a few ministers...The time stalin is made as chief minister there could be some other moves planned by MK to divert the attention and make people to accept that...Also promoting Dayanithi is to make people understand that Stalin is in politics for a long time and there is no harm of him becoming chief minister compared to Dayanithi... Even congress ministers will be aware of this I think.

Sriram said...

//
வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவ வழங்குறதுக்குக் கூட்டணிக்கட்சிகளுக்கு இருக்குற நல்லெண்ணம் மத்திய அரசு விஷயத்துல திமுகவுக்கு ஏன் இல்லாம போச்சு?
//
If Karunanidhi were to do this, then how can he make Dayanidhi Maran as Cabinet Minister, when there are so many good and experienced MPs in DMK? I bet that no other political leader would be so much concerned about only his family rather than his party and political dignity.

ஜோ / Joe said...

ரோசாவசந்த் சார்,Sriram,hamid ,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

sivagnanamji(#16342789) said...

கட்சி மாயை, பாரம்பரிய வாக்கு வங்கி என்பதெல்லாம் தவிடு பொடியாகின்றது
பா,ம.க வின் பாரம்பரிய விருதாசலத்தில் விஜயகாந்த்...
தளியில் சுயேச்சையாக போட்டியிட்ட
சி,பி.எம் ராமச்சந்திரன் ஆகியோர்
எச்சரிக்கைமணி அடிக்கின்றனர்
மயிலாப்பூரில் லோக்பரித்ரான் 10000
வாக்குகள்.அந்தப் பொடியண்களின்
தேர்தல் பணி வியக்கத்தக்கது
காலம் மாறுகின்றது....சொற்சிலம்பங்கள்
இனியும் எடுபடுவது சந்தேகமே...

sivagnanamji(#16342789) said...

தேர்தல் முடிவுகள் யாவும் வெளியான பின்பு,
சட்டமன்ற அதிமுக பற்றி முதல்வரும்
திமுக பற்றி ஜெயலலிதாவும் கூறியுள்ள கருத்துகள் எதற்கு
எச்சரிக்கை மணி...?

ஜோ / Joe said...

//தேர்தல் முடிவுகள் யாவும் வெளியான பின்பு,
சட்டமன்ற அதிமுக பற்றி முதல்வரும்
திமுக பற்றி ஜெயலலிதாவும் கூறியுள்ள கருத்துகள் எதற்கு
எச்சரிக்கை மணி...?//
முதல்வரும் ,ஜெயலலிதாவும் சொல்ல வந்த கருத்தில் வேறுபாடு இருக்கிறது ,ஆனால் பயன்படுத்திய சொற்கள் ஏறத்தாழ ஒன்று தான் என்பது என் கருத்து.

Anonymous said...

Jo,
நல்ல அலசல்.

செந்தில்

முத்துகுமரன் said...

//அது போக அமைச்சரவையில் சேர்ந்தால் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பதில் காங்கிரஸ் தலைமை தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும் என்பதும் காரணமாக இருக்கலாம்.//.

10 ஜன்பத் இல்லத்தில் தெரிந்தவர் யாரும் இருக்கிறார்களா?? இப்பிடி புட்டு புட்டு வைக்குறீங்க. காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்களை இவ்வாறு பொதுவில் பகிரங்கப்படுத்துவதற்காக உம்மீது வழக்கு போட கோஷ்டிவாரியாக சிந்தித்து வருகிறார்களாம்:-))

ஜோ / Joe said...

//கோஷ்டிவாரியாக சிந்தித்து வருகிறார்களாம்//
ஹா..ஹா..ஒரு கோஷ்டி வழக்கு போட்டால் மறு கோஷ்டி நமக்காக வாதாடும் -னு ஒரு நம்பிக்கை தான்.

G.Ragavan said...

// ஜோ / Joe said...
//தேர்தல் முடிவுகள் யாவும் வெளியான பின்பு,
சட்டமன்ற அதிமுக பற்றி முதல்வரும்
திமுக பற்றி ஜெயலலிதாவும் கூறியுள்ள கருத்துகள் எதற்கு
எச்சரிக்கை மணி...?//
முதல்வரும் ,ஜெயலலிதாவும் சொல்ல வந்த கருத்தில் வேறுபாடு இருக்கிறது ,ஆனால் பயன்படுத்திய சொற்கள் ஏறத்தாழ ஒன்று தான் என்பது என் கருத்து. //

உண்மைதான். தமிழ்நாட்டில் அரசியல் நாகரீகம் அந்த அளவிற்குத்தான் இருக்கிறது. நல்லவேளை..இந்த வாட்டி நாமெல்லாம் கருணாநிதியிடம் திட்டு வாங்காமல் தப்பித்தோம்.

sivagnanamji(#16342789) said...

//அதுபோக அமைச்சரவையில்....//
2011 அல்லது 2016 ல் 120 காங்கிரசு
எம் எல் ஏ க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்,கோஷ்ட்டிகானத்திற்கு பயந்து மந்திரிசபை அமைக்க
மாட்டர்களோ?
நேருவிடமே எதிர் கருத்து கூறிய
ஓமாந்தூரார், காமராஜர் போன்ற
தலைவர்களும் இல்லை;நிதர்சனத்தை
உணர்ந்து செயல்படும் ஜி.கே.மூப்பணார் போன்ற தலைவர்களும் இல்லை.........
மகளிர் அணி,இளைஞ்ர் அணி,இலக்கிய அணி......காங்கிரஸ் அணி....என்று
............................

Anonymous said...

Hi There!,

Though I'm not a regular follower of tn politics, your view has mostly reflected the recent election outcome.

- M

ஜோ / Joe said...

//இந்த வாட்டி நாமெல்லாம் கருணாநிதியிடம் திட்டு வாங்காமல் தப்பித்தோம். //

சிலா நேரம் சில பேர் வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள் .பல நேரம் பல பேர் மனதுக்குள் என்னவெல்லாம் திட்டுவார்களோ ..யார் அறிவார்?

koothaadi said...

அருமையானப் பதிவு ஜோ..
திமுக சென்னையில் தோற்றது நல்லதுதான்..
அதிமுகவின் ஓட்டு பலம் கண்டிப்பாய் கவனிக்கப் பட வேண்டியது.வரும் காலங்களில் அரசியல் சுவராசியம்மக் இருக்கும் என எதிர்பார்ப்போம் ..காங்கிரசை அரசில் சேர்த்து இருக்கல்லாம்..குமரியில் திமுகவின் வெற்றி ஆச்சரியம்..எல்லாத் தொகுதியிலும் நல்ல வாக்கு வித்தியாசம் கூட

ஜோ / Joe said...

koothadi..நன்றி!


ராகவன்,
தமிழகத்தில் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரிப்பது போல ,பாண்டியில் திமுக வெளியிலிருந்து ஆதரிக்கிறது .இங்காவது காங்கிரஸ் இல்லையென்றால் கூட மற்ற கட்சிகள் துணையோடு ஆட்சி தொடரலாம் .ஆனால் புதுவையில் திமுக துணையின்றி பெரும்பான்மை இல்லை.

Anonymous said...

கருணாநிதி இந்த எச்சரிக்கை மணியை புரிந்து கொண்டால் நல்லது.

லக்கிலுக் said...

அருமையான பதிவு ஜோ.... பாரபட்சமில்லாமல் எழுதி இருக்கிறீர்கள்... எனக்கென்னவோ தமிழகத்தில் இருந்ததிலேயே சிறந்த ஆட்சியை கலைஞர் இந்த முறை வழங்குவார் என தோன்றுகிறது.... ஆரம்பத்திலேயே அசத்தி இருக்கிறாரே?

நல்லாட்சி தந்தால் மட்டும் போதாது மிக மிக நல்லாட்சி தரவேண்டும் என்பதை கலைஞர் உணர்ந்திருப்பார் என்றே தெரிகிறது.....

tbr.joseph said...

ஜோ,

நன்றாக அலசியிருக்கிறீர்கள்.

ஆனால் சென்னையில் அதிமுக ஏழு இடங்களைப் பிடித்ததற்கு முக்கியமான காரணம் குடிநீர் பிரச்சினையை தீர்த்துவைத்ததுடன் வேறு காரணமும் இருக்கிறது.

அதுதான் காஞ்சி சாமிமார்களின் சிறைபிடித்தல். இதை விரும்பாத சென்னையில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் திமுகவையும் விரும்பாதவர்கள் என்பதால் யாருக்கும் வாக்களிக்காமல் இருந்துவிட்டனர். மேலும் ஜெ அரசு அளித்த சுநாமி மறுவாழ்வு நிதியால் பயனடைந்த பலரும் (முக்கியமாக படிப்பறிவில்லாத ஏழைப் பெண்கள்) அதிமுகவை ஆதரித்துள்ளனர். இதுதான் உண்மை.

மற்றபடி திமுகவின் செல்வாக்கு குறைந்துள்ளதாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. படித்தவர்களுள் பலரும் தங்களுடைய ஜனநாயக கடமையை மறந்து, மறுத்துவிடுவதுதான் இத்தகைய அவலங்களுக்கு காரணம்.

என்ன செய்வது?

ஆனால் இது திமுகவுக்கு ஒரு நல்ல பாடம். தமிழகமெங்கும் சுற்றி பிரச்சாரம் செய்தவர்கள் சென்னையைப் பொறுத்தவரை மெத்தனமாக இருந்துவிட்டனர் என்பதும் உண்மை.

tbr.joseph said...

அது போக அமைச்சரவையில் சேர்ந்தால் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பதில் காங்கிரஸ் தலைமை தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும் என்பதும் காரணமாக இருக்கலாம்.//

ராகவன்,

கலைஞரை தனித்து ஆட்சி செய்ய அனுமதித்ததின் உண்மையான காரணம் இதுதான்.

வேறொன்றும் இருக்கலாம்.

எங்கே கலைஞர் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளுக்கு மத்திய அரசிடம் மான்யம் கேட்பாரோ என்ற பயம்.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

ஜோ / Joe said...

மாயவரத்தான் என்ற பெயரில் வெளியிடப்பட்ட பின்னூட்டம் போலியுடையது என்பது அறிந்து நீக்கப்பட்டுள்ளது .சுட்டிக்காட்டிய வலைப்பதிவருக்கு நன்றி!

ஜோ / Joe said...

திடீரென்று 4 - குத்துக்களிட்ட நண்பருக்கு நன்றி!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives