Monday, February 25, 2013

கடல் திரைப்படமும் கத்தோலிக்க மீனவர் சித்தரிப்பும் - தொடர்ச்சி


சென்ற பதிவின் தொடர்ச்சியாக ...

பொதுவாகவே கிறித்துவர்களிடையே கத்தோலிக்கருக்கும் மற்ற பிரிவினருக்கும் உள்ள கலாச்சார வேறுபாடுகள் குறித்த புரிதல் கிறித்துவரல்லாதவரிடத்தில் மிகக்குறைவு என்பது நிதர்சனம் . அதுவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து முரண்பட்ட பார்வை இருந்து கொண்டே இருக்கிறது .அவை பெரும்பாலும் ஆவேசப்பட்டு எதிர்க்கும் வகையாக இல்லாமல் புரிதலற்ற தன்மை குறித்த நகைப்போடு கடந்து செல்வதாகவே இருந்திருக்கிறது .  கிறித்துவர்களென்றால் முன்பெல்லாம் தமிழை கடித்துத் துப்பும் ஆங்கிலோ இந்தியரை சித்தரிப்பது , மாதா கோவிலில் நடப்பதாக காட்டப்படும் நிகழ்வுகள் தமிழக கத்தோலிக்க பின்புலத்திலிருந்து மாறுபட்டு கத்தோலிக்கரல்லாத பிறரின் வழக்கங்களை காட்டுவது (உதாரணமாக திருமணத்துக்கு தமிழ் கத்தோலிக்கர் இன்றுவரை மணமகள் பட்டுப்புடவை அணிந்து தங்கத்தாலி தான் கட்டுகிறார் என்பதை அறிந்திருக்காமல் ) வழக்கமான ஒன்று .

கடல் திரைப்படத்திலும் சில முரண்கள் இருக்கின்ற . 'ஸ்தோத்திரம்' என்ற வார்த்தை ஒருவருக்கொருவர் சொல்வது போல காட்டப்படுகிறது .  எங்கள் ஊர்களில் 'ஸ்தோத்திரம்' என்று யாரும் சொல்லுவதில்லை . தமிழிலேயே இன்றைக்கு கத்தோலிக்கரும் பிற பிரிவினரும் உபயோகிக்கும் விவிலியத்தின் (பைபிள்) உள்ளடக்கம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் வார்த்தை அமைப்புகளில் பெரும் வேறுபாடு உண்டு . தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகமே பைபிள் தான் என நினைக்கிறேன் . அப்போதைய தமிழ் மொழிபெயர்ப்பு அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த மணிபிரவாள நடையிலேயே அமைந்திருக்கிறது . கொஞ்சம் சமஸ்கிருதம் கலப்போடு வார்த்தைகள் அமைந்திருக்கும் ..பின்னர் கத்தோலிக்க ஆயர் குழு அதை திருத்தி முடிந்தவரை தூய தமிழில் மாற்றி அமைத்த வடிவத்தையே கத்தோலிக்கர்கள் இன்று உபயோகிக்கிறார்கள் . ஆனால் பிற சபையினர் இன்னும் பழைய வார்த்தை அமைப்புகள் கொண்ட வடிவத்தையே உபயோகிக்கிறார்கள் ..உதாரணமாக ஸ்தோத்திரம் , கர்த்தர் , தேவன் , இரட்சணியம் போன்ற வார்த்தை பிரயோகங்களை கத்தோலிக்கரல்லாதவர் உபயோகிக்கும் பைபிளில் காணலாம் .ஆனால் கத்தோலிக்கர் பைபிளில் அவை முறையே வணக்கம் , மீட்பர் , கடவுள் , மீட்பு என்றிருக்கும் . இது போன்ற வார்த்தை பிரயோகங்களிலேயே கத்தோலிக்கரையும் மற்றவரையும் அடையாளம் கண்டு கொள்ளலாம் . 'ஸ்தோத்திரம்' போன்ற வார்த்தைகள் கத்தோலிக்கரிடையே இன்று வழக்கொழிந்து விட்டது . 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்க கோவில்களில் லத்தீன் மொழியில் வழிபாடுகள் நிகழ்ந்தன . பின்னர் கத்தோலிக்க திருச்சபை அவரவர் தாழ்மொழியில் வழிபாடு செய்ய ஆரம்பித்த பிறகு நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. பொதுவாக கிறித்துவ பெண்கள் பூ , பொட்டு வைக்க மாட்டார்கள் என்ற அபிப்பிராயம் உள்ளது .மற்ற சபையினரைப் போலன்றி , தமிழக கிறித்துவர்களில் பெரும்பான்மையாக இருக்கின்ற கத்தோலிக்கர்களில் பெண்கள் பூ வைத்து பொட்டும் வைப்பது சகஜம் . அதுவும் மீனவ கிராமங்கள் இது சற்று அதிகம் . கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை தான் .ஆனால் கடல் திரைப்பட்டத்தில் 'கிறித்துவர்கள் பொட்டு வைக்க மாட்டார்கள்' என்ற பொதுக்கருத்தை அபப்டியே எடுத்துக்கொண்டு ஒரு பெண் கூட பொட்டோடு இருக்க கூடாது என கவனமாக தவிர்த்திருப்பதை பார்க்க முடிகிறது . அது ஒரு வேடிக்கையான அனுமானம் தான் .

கடல் திரைப்படத்தின் வர்த்தக தோல்விக்கு பிறகு ஜெயமோகன் தன் இணையப்பக்கத்தில் கொடுத்துள்ள சில விளக்கங்களில் ஒன்று இந்த கதை ஒரு அவிசுவாசம் நிறைந்த கத்தோலிக்க கடற்கரை கிராமத்தில் நடப்பதாக உள்ளது என்கிறார் . பொதுவாக மீனவர்கள் குறித்து உள்நாட்டவர் பலருக்கு ஒரு பொதுவான எண்ணம் உண்டு . மீனவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் , முரடர்கள் , அடுத்தவர் சென்று சொல்லித்தான் எதையும் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கும் உலக நடப்பு தெரியாதவர்கள் என்பது போன்ற ஒரு எண்ணம் பலருக்கும் இருப்பதை பார்க்க முடிகிறது . தமிழகத்தில் வட தமிழக மீனவ கிராமங்களுக்கும் தென் தமிழக மீனவ கிராமங்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு . தென் தமிழகத்தில் மீனவ கிராமங்கள் கத்தோலிக்க திருச்சபையோடு பின்னிப் பிணைந்திருப்பதால் அவர்கள் ஒரு வகையில் சுரண்டப்பட்டாலும் , அவர்கள் அடைந்த மிகப்பெரிய நன்மை கல்வி மேம்பாடு .. தென் தமிழகத்து மீனவ கிராமங்களில் வானுயர்ந்த தேவாலயங்களுக்கு அருகில் நிச்சயமாக ஒரு பள்ளிக்கூடத்தையும் காணலாம் . படிப்பறிவில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன இந்த கிராமங்கள் .சமீபத்தில் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த ஒரு இளம் பெண் பேசும் போது மீனவர்கள் என்றால் படிப்பறிவில்லாத அப்பாவிகள் என்பது போல குறிப்பிட்டு விட்டு இடிந்தகரை மக்களுக்கு உதயகுமாரின் என்.ஜி.ஓ பிழைப்பதற்கு வேலை கொடுப்பதனால் தான் அவரை ஆதரிக்கிறார்கள் என ஒரு மிகப்பெரிய காமெடியை சீரியசாக சொன்னார் . மீனவர் பற்றிய பொதுவான புரிதல் எத்தனை அபத்தமாக இருக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம் . அவரைச் சொல்லி குற்றமில்லை . ஏனன்றால் உள்நாட்டில் இருக்கும் பலரும் மீனவர் கிராமங்களுக்கு சென்று பார்த்ததே கிடையாது . இது அவருக்கு மட்டுமல்ல , மீனவர் பற்றி ரொம்ப தெரிந்தது போல பேசும் , எழுதும் பல அறிவுஜீவிகளின் நிலையும் அது தான் .

திரைப்படம் என்பது கற்பனை கலந்தது , அதை பொதுமைப்படுத்தி குறை சொல்லக்கூடாது என்பதிலும் , ஒரு குறிப்பிட்ட சித்தரிப்பு ஒட்டுமொத்தமாக எதையும் நிறுவுவதாகாது என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு . ஆனால் மீனவர் குறித்து மேற்சொன்ன பொதுமைப்படுத்துதலே தொடர்ந்து நிகழ்ந்து வரும் போது , அரிதாக மீனவர் குறித்து வரும் இது போன்ற திரைப்படங்களின் சித்தரிப்புகள் அந்த பொதுப்புத்தியை தாண்டிய பார்வையை தவிர்த்து அதை மீண்டும் உறுதிப்படுத்தவே செய்யும் எனும் போது அது பற்றி நமக்கு கரிசனம் வருவது தவிர்க்க முடியாதது . எந்த ஒரு குறிப்பிட்ட சித்தரிப்புக்கும் ஒரு குறைந்த பட்ச நடைமுறை முகாந்திரம் இருக்க வேண்டும் . ஜெயமோகன் சொல்ல வரும் அவிசுவாச மக்கள் நிறைந்த கத்தோலிக்க கடற்கரை கிராமம் என்பது குறித்த பொதுவான சித்திரத்தை அளிக்க முடியாது . குறிப்பிட்ட பாதிரியார்கள் , சில திருச்சபை செயல்பாடுகள் குறித்த சில அவிசுவாசங்கள் சாத்தியம் உண்டு என்றாலும் அடிப்படை கத்தோலிக்க விசுவாசத்தில் கடற்கரை மக்கள் காலங்காலமாக ஊறியவர்கள் . மீனவர்களுக்கும் கிறித்துவத்துக்கும் விவிலிய ரீதியாகவே பிணைப்பு உண்டு . இயேசுவை முதன் முதலாக ஏற்றுக்கொண்டு பின் தொடர்ந்த அவரது சீடர்களில் பலர் மீனவர்கள் தான் . மீன் பிடித்துக்கொண்டிருந்தவரிடம் "இன்று முதல் நீ மனிதர்களை பிடிப்பவனாவாய்" என இயேசுவால் சொல்லப்பட்ட , பின்னர் திருச்சபையின் முதல் தலைமையாக இருந்த இராயப்பர் (St.Peter) உள்ளிட்ட இயேசுவில் 12 அப்போஸ்தலர்களில் பலர் மீனவர்கள் தான் . இயேசுவே அவர்களோடு சென்று வலை வீசினார் என பைபிளில் வருகிறது . தென் தமிழ்கத்தில் 5 நூற்றாண்டுகளாக கத்தோலிக்கராக இருக்கின்ற கடற்கரை மக்களின் கிறித்துவ விசுவாசத்தில் இவை சார்ந்த ஒரு பெருமிதமும் , கூடுதல் ஒட்டுதலும் இருப்பதை நிச்சயமாக்க சொல்ல முடியும் . மீனவ மக்களிடம் அதிமாக காணப்படும் புனித அந்தோனியார்(St.Antony)  பக்திக்கும் , அந்தோனியாரின் போதனையை கடல் மீன்கள் செவிமடுத்தன என்பது போன்ற கதைகளும் காரணம் . இந்த பின்புலத்தில் கடற்கரை கிராமம் முழுவதும் அவிசுவாசிகளாக இருப்பதாகவும் அதை மாற்ற ஒரு பாதிரியார் சென்று அவர்களின் அறியாமையையும் அவிசுவாசத்தையும் போக்க முயல்வதாகவும் இன்றைய காலகட்டத்தில் சொல்லுவது நீயா நானாவில் பேசிய அந்த மாணவியிடம் வெளிபட்ட பொதுப்புத்தியிலிருந்து பெரிதும் வேறுபட்டதல்ல என்றே நினைக்கிறேன்.

மற்றபடி , பாராட்டத்தக்க சில அம்சங்களும் படத்தில் இருக்கின்றன . முதலில் மேற்சொன்ன சித்தரிப்பு முரண்பாடுகளைத் தாண்டி இது நிராகரிக்கத்தக்க படம் அல்ல .. நண்பர் அருள் எழில் சொன்னது போல மீனவர் சம்பந்தப்பட்ட எதைக்குறித்தும் மீனவரல்லாதவரிடம் நிலவுகின்ற அதீதமான இடைவெளியாலேயே  இந்த படம் பலரால் முற்றாக நிராகரிக்கப்பட்டதோ என்ற ஐயமும் இருக்கிறது . படத்தில் கையாளப்பட்ட வட்டார வழக்கை பொறுத்தவரை இதுவரை மீனவர் குறித்து வந்த படங்களிலேயே இதுவே ஆகச்சிறந்தது . முதன்மை கதாபாத்திரங்கள் தவிர சிறு கதாபாத்திரங்கள் மற்றும் பின்னணியில் ஒலிக்கும் சில வசனங்கள் அருமையான அவதானிப்பை உணர்த்துகின்றன . குறிப்பாக கதாநாயகனின் தாய்க்கு பின்னர் ஒரு நாளில் கல்லறை தோட்டத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அது சார்ந்த பாடலும் மிகவும் எதார்த்தம் .

கடவுள் , சாத்தான் , குறியீடு , படிமம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கெல்லாம் ஆழம் இருப்பதாக படவில்லை என்றாலும் நிராகரிக்கத்தக்க படமல்ல 'கடல்'.

Tuesday, February 19, 2013

கடல் திரைப்படமும் கத்தோலிக்க மீனவர் சித்தரிப்பும்


கடல் திரைப்படம் வர்த்தக ரீதியாக மட்டுமன்றி விமர்சன ரீதியாகவும் பொதுவாக நிராகரிக்கப்பட்டுள்ளது . அதீதமான எதிர் மறை விமர்சனங்களுக்குப் பின் கடல் படத்தை பார்க்க நேர்ந்ததாலோ என்னவோ பலரும் கருதும் அளவுக்கு அத்தனை மோசமில்லை என்றே எனக்கு தோன்றியது . ஒரு திரைப்படம் என்னும் அளவில் ஓரளவு என்னை கவரவும் செய்தது.


மணிரத்னம் இயக்கம் , ஜெயமோகன் வசனம் , தென் தமிழகத்து கத்தோலிக்க மீனவர் சமூக பின்னணி என பல காரணிகள் படம் பார்ப்பதற்கான ஆர்வம் தூண்டின . தமிழ் சினிமாவில் தொடர்ந்து மீனவர் குறித்த சித்தரிப்புகள் தேவையான கள ஆய்வும் புரிதலும் இல்லாமலேயே இது வரை இருந்திருக்கின்றன . ஜெயமோகன் என்ற பெரும் எழுத்தாளர் இந்த கடற்கரை சமூகம் வாழும் நிலப்பரப்பிலிருந்து 10 கிமீ தூரத்தில் வசிப்பவர் தான் என்றாலும் அவருடைய முந்தைய சில அவதானிப்புகளை பார்க்கையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கவில்லை .

இது கடல் திரைப்படத்துக்கான விமர்சனம் அல்ல . கடல் படம் சித்தரிக்கும் தென் தமிழகத்து கத்தோலிக்க மீனவர் பின்புலத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன் என்ற முறையில் கடல் படத்தில் அந்த சமூகம் குறித்த சித்தரிப்புகளின் மீதான என் பார்வை மட்டுமே.


தென் தமிழகத்து கத்தோலிக்க மீனவர் சமூகம் இந்தியாவில் மிகப்பழமையான , பாரம்பரியமிக்க கிறித்துவ சமூகங்களில் ஒன்று .திருச்செந்தூருக்கு தெற்கே மணப்பாடு முதல் கன்னியாகுமரி வரையில் வங்காள விரிகுடா ஓரமும் , கன்னியாகுமரியிலிருந்து கேரள எல்லையான நீரோடி வரை அரபிக்கடல் ஓரமாகவும் நீண்டு கிடக்கின்ற மீனவ கிராமங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கத்தோலிக்கர்களாகவும் , இரண்டு சாதியினராகவும் உள்ளனர் . இதில் 4 அல்லது 5 ஊர்களில் மட்டுமே இரண்டு சாதியினரும் இணைந்து வாழ்கிறார்கள் ..மற்ற எல்லா கிராமங்களிலும் ஏதாவது ஒரு சாதி மக்களே வாழ்கின்றனர் .. உள்நாட்டு கிறித்துவர்களை போலன்றி 450 வருடங்களுக்கு மேலாக கத்தோலிக்க மதத்தில் ஊறிப்போன இம்மக்கள் வாழ்க்கை , அரசியல் , ஊர் நிர்வாகம் எல்லாமே மதம் சார்ந்து தான் அமைந்துள்ளது . ஊர் முழுக்க ஒரே மதம் , ஒரே சாதி என்பதால் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மதம் பின்னிப் பிணைந்துள்ள சமூகம் இவை .

* இந்த பின்புலத்தில் ஒரு கடற்கரை கிராமத்து பங்கு (parish) கோவில் பல ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடப்பது என்பது நடைமுறையில் நான் கண்டிராதது .இந்த படத்தில் பங்குக்கோவில் பல ஆண்டுகள் கவனிப்பாரன்றி பூட்டிக்கிடப்பதாகவும் அதை திறக்கும் போது நாய்கள் உள்ளிருந்து பாய்ந்து வெளியே வருவதுமாக காட்டப்படுகிறது . இது போல இந்த பகுதியில் நடக்க வாய்ப்பே இல்லை . முழுக்க முழுக்க திருச்சபையை வாழ்க்கையோடு இணைத்துக் கொண்ட இம்மக்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தாங்கள் ஓலைக் குடிசைகளில் வசித்த போதும் வானளாவ கோவில்களை கட்டியவர்கள் .. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் நீங்கள் குறுக்காக பயணம் செய்தால் ஒவ்வொரு ஊரிலும் வானளாவ நிற்கும் கோவில்கள் நிச்சயம் உங்களை வாய்பிளக்க வைக்கும் .. அந்த அளவுக்கு பக்தியின் பேரால் இம்மக்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டிருக்கிறார்கள் என்பதே என் தனிப்பட்ட கருத்து . அன்றிலிருந்து இன்று வரை மீன் பிடித்து வரும் வருமானத்தில் குறைந்தது 10 சதவீதத்தை ஊர் கோவிலுக்கு கொடுத்து வருபவர்கள் இம்மக்கள் . எங்கள் ஊர் சமீபத்தில் ஒரு பங்காக இருந்து இரண்டாக பிரிக்கப்பட்டது .. 500 குடும்பங்கள் கொண்ட சிறிய புதிய பங்கில் கிட்டத்தட்ட 1.5 கோடி செலவில் புதிய ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது .. ஓரிரு உதவிகள் தவிர இது 90% எம் மக்களின் பணம் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும் . எனவே ஒரு கடற்கரை பங்குக்கோவில் இப்படி பாழடைந்து கிடக்கும் என்பது எதார்த்தமில்லாதது .

* அரவிந்த சாமி அந்த ஊருக்கு புதிய பங்குக் குருவாக வருகிறார் .. தமிழ் சினிமாவில் கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு புதிதாக வரும் ஆசிரியர் ஒரு பஸ்ஸில் வந்து இறங்கி நான் தான் பள்ளிக்கு புதுசா வந்திருக்கும் வாத்தியார் என்ன மக்களிடம் சொல்வாரே அது போல புதிய பங்கு சாமியார் வருவதாக காட்டும் போது நான் விழுந்து விழுந்து சிரித்தேன் .. ஏனென்றால் ஒரு பங்குக்கு அதுவும் கடற்கரை பங்குக்கு பங்கு குருவானவர் பொறுபேற்க வருகிறார் என்றால் அத்தனை சுழுவாக நடந்து விடாது .. முதலில் மறைமாவட்ட ஆயர் (பிஷப்) அதை அறிவிப்பார் ..பின்னர் பொறுப்பேற்கும் அன்று பெரும்பாலும் பிஷப் அவரோடு ஊருக்கு வருவார் . ஊரிலிருந்து பங்கு கமிட்டியினர் வருகின்ற புதிய குருவை சென்று வரவேற்று கொண்டு வருவார்கள் . ஓரே கூடி நிற்கும் ஒரு நிகழ்வில் பங்குக்குருவானவர் பொறுப்பேற்றுக்கொள்வார் . இது போல ஏதோ புதிதாக வந்த போஸ்ட் மாஸ்டர் கணக்காக யாரும் வருவதில்லை .

* ஒரு குருவானவரை ஊரார் நடத்தும் விதம் அதிர்ச்சிகரமாக காட்டப்பட்டுள்ளது . எக்காரணத்தைக் கொண்டும் ஒரு குருவனாவரை அடிப்பது , உதைப்பது , கிட்டத்தட்ட எல்லோருமே நாராச மொழியில் பேசுவது போன்றவை மணிரத்தினமும் , ஜெயமோகனும் பொதுவாக மீனவர்கள் படிப்பறிவற்றவர்கள் , முரடர்கள் , மரியாதை தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தியை தாண்டி எந்த கள ஆய்வும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது . முந்தைய காலங்களைப் போல குருவானவர் என்றால் பிரமிப்பும் , பக்தியும் இப்போது இல்லாதிருக்கலாம் . அதற்கு காரணம் இன்றைக்கு மிக அதிக அளவில் குருவானவர்கள் வருவது இந்த கடற்கரை கிராமங்களிலிருந்து தான் . இப்போது சொந்த குடும்பத்திலோ அல்லது ஒன்று விட்ட குடும்ப வட்டத்திலோ குறைந்தபட்சம் ஒரு குருவானவரோ அல்லது கன்னிகாஸ்திரியோ இல்லாத ஒரு மீனவ குடும்பத்தை பார்ப்பது அரிது .அந்த வகையில் பிரமிப்பும் பக்தியும் குறைந்து போயிருக்கலாம் .ஆனால் குருவானவரை ஏதோ வேண்டப்படாத விரோதி போல பார்க்கும் நிலை கண்டிப்பாக இல்லை .. சில ஊர்களில் சில குருவனாவர்களை ஏசுவதும் , அரிதாக சிறிது தாக்குவதும் நடந்திருக்கலாம் .ஆனால் இது போல ஊர்முழுக்க வசையும் தாக்குதலும் குருவனாவர் மீது நடப்பதாக காட்டுவது மீனவர் பற்றிய பொதுப்புத்தி என்றே நினைக்கிறேன். அதுவும் எடுத்தவுடனே அந்த பையன் பாதிரியாரை வசை மாறி பொழிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை . அப்படி நடந்தால் கண்டிப்பாக மக்கள் பார்த்துக்கொன்டிருக்க மாட்டார்கள்.

* இந்த படத்திலும் சரி , நீர்ப்பறவையிலும் சரி .. ஹீரோ ஊரால் புறக்கணிக்கப்பட்டவர் , ஊதாரி ரேஞ்சில் வருகிறார்கள் . நீர்ப்பறவையில் கடலில் கண்டெடுக்கப்பட்டவன் என்பதால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதது போலவும் , இந்த படத்தில் தாய் சோரம் போனதால் ஒதுக்கப்பட்டதாக்கவும் காட்டுகிறார்கள் . இறந்து போன தாயைத்தவிர அவனுக்கு யாருமே இல்லையாம் . இவையெல்லாம் கடற்கரை சமூகத்தில் சாத்தியமில்லாதது ..ஏனென்றால் பாரம்பரிய மீனவர்கள் நூற்றாண்டுகளாக அங்கிருப்பவர்கள் , யாராக இருந்தாலும் மாமன் , மச்சான் என குறைந்தது 10 குடும்பங்களாவது அந்த ஊரில் இருக்கும் . நான் பார்த்தவரை மீனவ சமூகம் பாலியல் ரீதியாக சோரம் போனதற்காக போன்ற சொத்தை காரணங்களுக்காக யாரையும் தள்ளி வைப்பதும் இல்லை ..இப்படி கேவலமாக நடத்துவதும் இல்லை .. கூட நின்று தட்டிக் கேட்பதற்கு குறைந்தது நாலு பேரில்லாத எவரையும் நான் எங்கள் ஊர்களில் பார்த்ததில்லை . (உள்ளூர் கிராமங்களுக்கும் இது பொருந்துமே என கேட்கலாம் ..நிச்சயமாக வேறுபாடு இருக்கிறது)

* நீர்ப்பறவை ஆனாலும் சரி , இதிலும் சரி .. தன்னை நிரூபிக்க ஒரு படகு வாங்கி அதில் தொழில் செய்ய முற்படுவதாக காட்டப்படுகிறது ..அதெல்லாம் சரி தான் .ஆனால் படகில் தொழில் செய்வதை ஏதோ பம்பரம் விடுவது கணக்காக காட்டுகிறார்கள் ..முதலில் ஒரு கட்டுமரத்தில் வலையோடு சென்று மீன்பிடிக்கவே குறைந்தது இரண்டு பேராவது சேர்ந்து செல்ல வேண்டும் . வள்ளம் எனப்படும் படகிலேயே ஹீரோக்கள் தனியாக சென்று மீன்பிடிப்பது போல காட்டப்படுவது நல்ல காமெடி .. வள்ளம் , படகுகளில் மீன்பிடிப்பதற்கும் படகில் சுற்றுலா போவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா ? குளுமையான காட்சி அமைப்பு , அட்டகாசமான காமிரா கோணம் திரைப்படங்களுக்கு தேவையென்பதால் படகில் படுத்துக்கொண்டு கையை விரித்து போஸ் கொடுப்பது , திடீரென்று வீட்டு அக்குவேரியத்திலிருந்து ஒரு மீனை அள்ளுவது போல அம்மாம்பெரிய மீனை கடலில் கைவிட்டு அசால்டாக பிடித்து விடுவது எல்லாம் எனக்கு ஏதோ ஹீரோ சுற்றுலா போவது போலிருக்கிறதே தவிர , தொழில் செய்வது போலில்லை .. இவையெல்லாவற்றையும் விட மிகப்பெரிய காமெடி சினிமாக்களில் கடலில் வலை வீசுவதாக வரும் காட்சிகள் தான் .. இதுவரை அப்படி வீசப்படும் வலைகளெல்லாம் ஏரி , குளங்களில் வீசப்படும் வலைகள் தான் . வலையை தோளில் போட்டுக்கொண்டு ஒரு முனையை பிடித்து வீசுவதாக காட்டுவார்கள் .. கடலிலே பயன்படுத்தப்படும் வலைகள் குறைந்தது 100 மீட்டர் நீளமாவது இருக்கும் .யாரும் அதை தோளில் தூக்கி வீசுவதில்லை ,வீசவும் முடியாது .

(தொடரும்)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives