Tuesday, February 20, 2007

எல்லை மீறும் கன்னட அமைப்புக்கள்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அடுத்து அது முழுக்க முழுக்க தமிழகத்துக்கு சாதகமாகவும் கர்நாடகத்துக்கு எதிராகவும் அமைந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது .முதலில் அரைகுறையாக வெளிவந்த செய்திகளின்படி தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் என குறிக்கப்பட்ட அளவை ,தமிழ்கத்துக்கு கர்நாடகா கொடுக்க வேண்டிய அளவாக திரித்துக் கூறப்பட்டு கர்நாடகத்தில் கொந்தளிப்பு உருவாக்கப்பட்டது.

பின்னர் இப்போது தமிழகத்துக்கு கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவு இடைக்கால உத்தரவு படி கொடுக்க வேண்டிய அளவை விட குறைவு என்று தெளிவாக தெரிந்த பின்னரும் கர்நாடக அமைப்புக்கள் தங்கள் வேகத்தை குறைத்துக் கொள்ளுவதாக இல்லை. உணர்ச்சிகளை தூண்டி விட்டு இதனை மொழிப் பிரச்சனையாக வழக்கம் போல ஊதி பெரிதாக்கி வருகின்றன.

இந்தியாவிலேயே ஒரு மாநிலத்துகென்று தனிக்கொடி கர்நாடகாவில் தான் உள்ளது .17 வருடங்கள் விசாரணைக்குப் பின் அளிக்கப்பட்ட தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இல்லையென்றாலும் கூட தமிழர்கள் ,விவசாயிகள் இந்த வகையிலாவது நம் பங்கு கிடைத்ததே என்று நினைத்து எதிர்ப்புகள் ,ஆர்ப்பாட்டங்கள் உணர்வுகளை தூண்டி விடும் செயல்களை தவித்து வரும் நேரத்தில் கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகளும் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன.

பந்த் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது எதிர் பார்த்ததை விட வன்முறைகள் கட்டுக்குள் இருந்ததற்கு கர்நாடக மாநில அரசை பாராட்டியே ஆக வேண்டும் .அதே நேரத்தில் வழக்கம் போல தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. தமிழ் தொலைக்காட்சி இணைப்புகள் வழக்கம் போல துண்டிக்கப்பட்டன .தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது .தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டன .இது போதாதென்று சிலர் அத்துமீறி தமிழகத்துகுள்ளேயே நுழைந்து ஓசுரை கைப்பற்றப்போவதாக கோஷமிட்டுள்ளனர்.

இன்றைய தட்ஸ்தமிழ்.காம் செய்தியில் தமிழக எல்லையில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் ...

கர்நாடக கிறிஸ்துவ ஆலயயங்களில் தமிழ் பிராத்தனை ஜெபக்கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக கத்தோலிக்க கன்னட கிறிஸ்தவர்கள் சங்கம் கோரியுள்ளது .இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரபேல் கூறுகையியில் "பெங்களூர்,மைசூர்,மாண்டியா,கோலார் மாவட்டங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் தமிழில் பிராத்தனை நடத்துவதை நிறுத்த வேண்டும் .இந்த கூட்டங்களை புறக்கணிக்க வேண்டும் .கிறிஸ்தவ ஆலயங்களில் தமிழ் பிராத்தனைக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

இப்படி ஒரு கேவலமான சிந்தனை உள்ள ஒருவர் கத்தோலிக்க சங்கத்தின் (இது திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தால்) தலைவராக இருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது .இச்செய்தியின் பின்னூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது போல கன்னடரல்லாத இயேசு கிறிஸ்துவை இவர்கள் ஏன் கும்பிட வேண்டும் .இவரெல்லாம் ஒரு கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்வதே வெட்கக்கேடு.

காவிரி கர்நாடகாவில் பிறக்கிறது .எனவே கர்நாடகாவுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது .ஆனால் காவிரி முழுக்க முழுக்க கர்நாடகாவுக்கே சொந்தம் என்று ஊளையிடுவது இந்திய ஒருமைப்பாட்டிக்கே அவமானம் .இதை மத்திய அரசு வேட்டிக்கை பார்ப்பது வேதனையானது .சரி .அப்படியே சொல்லி விட்டுப் போகட்டும் .ஆனால் இருவருக்கும் பொதுவான நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்காக தமிழ் மேலும் தமிழர்கள் மேலும் இந்த கன்னட அமைப்புகள் காட்டும் வன்மத்திற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா ? தான் என்ன செய்தாலும் கர்நாடகத் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் என்ற எண்ணத்தில் தமிழக தமிழர்கள் எதிராக எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற கோழை மனப்பான்மையும் மிரட்டல் புத்தியுமே கன்னட அமைப்புகளின் இந்த காட்டுமிராண்டித் தனங்களுக்கு அடிப்படைக் காரணம்.

தமிழகத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இரு தலைக் கொள்ளி எறுப்புக்கள் .மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி தான் .தன்மானம் இல்லாதவர்கள் ,மொழியுணர்வு இல்லாதவர்கள் என்ற மற்ற சில தமிழர்கள் சொல்லும் பழிச்சொல் ஒரு பக்கம் ..மொழி வெறி பிடித்தவர்கள் என்ற மற்ற மாநிலத்தவரின் அரை வேக்காட்டு குற்றச்சாட்டு மறு பக்கம் .தமிழகத்தில் கூட இதைக் கண்டித்து சிறிது குரல் எழுப்பினாலும் மொழி வெறியனென்று திட்டி ,முதலில் நாம் இந்தியர் என்றெல்லாம் இலவச அறிவுரை வழங்கி தேச துரோகிகளாக சித்தரிக்கும் தமிழரிலே ஒரு கூட்டம் மறுபக்கம் .எப்படி இருப்பினும் இத்தனை தூண்டல்களுக்குப் பின்னரும் உணர்ச்சியை அடக்கிக்கொண்டு அறிவுபூர்வமாக நடந்து கொண்டிருக்கும் தமிழக தமிழர்கள் தங்கள் முதிர்ச்சியை தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறார்கள்.

கர்நாடகா-வினர் வெளிப்படையாக தனிக் கொடி வைத்திருக்கலாம் .தமிழர்களை அடிக்கலாம் .தமிழ் சார்ந்த அனைத்தையும் தடை செய்யலாம் .காவிரியில் எவனுக்கும் பங்கு கிடையாது என்று முழங்கலாம் .ஆனாலும் அவன் இந்தியன் .ஆனால் கார்கில் போரானாலும் சரி ,குஜராத் பூகம்பம் ஆனாலும் சரி இந்தியாவிலேயே அதிகமாக வாரிக்கொடுத்த தமிழன் தன் உரிமை பற்றி வாய் திறந்தாலோ உள்ளூரிலேயே தேச துரோகிப் பட்டம்.

வாழ்க இந்திய ஒருமைப்பாடு!

Thursday, February 08, 2007

டோண்டு விவகாரம் -என் எண்ணங்கள்

டோண்டு ராகவன் என்ற வலைப்பதிவர் மிகுந்த அனுபவமும் தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர் என்ற வகையில் பல்வேறு கருத்து வேறுபாடுகளையும் மீறி மரியாதைக்குரியவராகவே கருதி வந்தவர்களில் நானும் ஒருவன்.

போலி டோண்டு விவகாரம் ஆரம்பித்த நாட்களிலிருந்து அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் .போலி டோண்டு-வின் ஆபாச செய்கைகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை ,நிராகரிக்கத் தக்கவை ,அருவருக்கத் தக்கவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது .முகம் தெரியாத (சிலருக்கு தெரியும் என்கிறார்கள்) அந்த நபரின் செய்கைகள் டோண்டுவை மட்டுமல்ல ,வலைப்பதியும் பல சகோதரிகள் உட்பட சம்பந்தம் இல்லாத பலரையும் மனதளவில் பாதிக்கும் அளவுக்கு மோசமானதாக உருவெடுத்தது .தமிழ் வலைப்பதிவுலகில் உருப்படியான விவாதங்களை பின்னுக்குத் தள்ளி ,தேவையில்லாத இந்த விவகாரமே முதன்மைப்படுத்தப்பட்டது துரதிருஷ்ட வசமானது.

ஆனால் இந்த விவகாரம் அணைந்து விடாமலும் ,அதன் மூலம் தனக்கு கிடைக்கும் விளம்பரமும் அனுதாபமும் தளர்ந்து விடாமலும் கண்ணும் கருத்துமாக கட்டிக்காத்ததில் டோண்டு அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை தொடக்கத்திலிருந்து கவனித்து வரும் நடுநிலையாளர்கள் மறுக்க மாட்டார்கள் .

இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்த புதிதில் என் போன்ற சிலர் டோண்டு அவர்களிடம் பல முறை வேண்டுகோள் வைத்தோம் .தயவு செய்து இந்த புண்ணை கிளறாதீர்கள் .ஆறப்போடுங்கள் .ஏட்டிக்கு போட்டியாக மீண்டும் மீண்டும் இதை கிளறுவதால் எந்த பயனும் இல்லை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தோம் .ஆனால் டோண்டு அவர்களின் பதில் "நீ என்ன அவனுக்கு வக்காலத்தா .அவனைக் கேட்க வேண்டியது தானே!" என்ற ரீதியிலே இருந்தது .

இரண்டு பேர் மோதிக் கொள்ளுகிற போது ஒருவர் வரம்பு மீறி செல்கிறார் ,யாரென்றே தெரியவில்லை ,சொன்னாலும் கேட்பார் என்ற நம்பிக்கை இல்லாத போது ,இன்னொரு பக்கம் இருக்கிற நமக்கு தெரிந்த ,புரிய வைக்க முடியும் என்று நம்பப்படுகிற ஒருவரிடம் தான் அவர் தரப்பிலிருந்து பிரச்சனையை குறைப்பதற்கு முயற்சி எடுக்கும் படி வேண்ட முடியும் .ஆனால் அந்த நபரே நம்மை எதிர் தரப்பு ஆதரவாளன் என முத்திரை குத்தி அதிலும் விளம்பரம் தேடி ,அனுதாபம் பெற முயற்சிக்கும் போது எழும் எரிச்சலை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் பிறகு "நீ ஒன்றில் என் பக்கம் .அல்லது அவன் பக்கம்" என்று புஷ் தனமாக டோண்டு தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரையும் கூறு போட்டு குழு மனப்பான்மையை தொடங்கி வைத்தார் .செல்லுகிற இடமெல்லாம் இதைப் பற்றியே எல்லோரும் பேசும் படி செய்து விளம்பரம் தேடிக்கொண்டார் .இதை சுட்டிக்காட்டிய அனைவரையும் போலியின் ஆதரவாளன் என வாய் கூசாமல் பழி சுமத்தினார் .புதிதாக வலைப்பதிபவர்கள் மேலோட்டமாக இதை புரிந்து கொண்டு ,டோண்டு பக்கம் தவறே இல்லாதது போல நினைக்கும் படி செய்தார்.

இவரின் சாதி சாதி என பிடித்து தொங்கும் விவகாரத்தில் நான் நுழைய விரும்பவில்லை .தொங்கிக் கொள்ளட்டும் .எனக்கு அதைப்பற்றி விவாதிக்க கூட ஆர்வமில்லை .இத்தனையும் மீறி இவரை நான் டோண்டு சார் அல்லது டோண்டு ஐயா என்று வயது ,அனுபவம் காரணமாக மரியாதையாகத் தான் அழைத்து வந்தேன். அதனால் சில மிரட்டல் கடிதங்களும் கிடைக்கப்பெற்றேன் .அதைப்பற்றி நான் கண்டு கொள்ளவில்லை.

நண்பர் சிறில் அலெக்ஸ்- சமீபத்திய ஒலிப்பதிவில் நான் டோண்டு விவகாரத்தின் பின்னணி பற்றி சுருக்கமாக குறிப்பிட்ட போது அவருக்கு இந்த பின்னணி தெரியாது என குறிப்பிட்டிருந்தார் .அவரை போல இந்த விவகாரம் சூடு பிடித்த பின்னர் வலைப்பதிய வந்தவர்களுக்கும் இந்த பின்னணி தெரிய வேண்டும் என்பதற்காகவே இதனை பதிகிறேன்.

போலி டோண்டுவோ அல்லது ஆபாசமாக எழுதும் யாரோ அவர்களை நான் கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை .ஆனால் டோண்டு மிக முக்கியமான வலைப்பதிவராக அறியப்பட்டவர் .சரியான விளம்பரப் பிரியர் .போலி டோண்டு விவகாரத்தில் இந்த பிரச்சனையை முடிக்கும் ஆர்வத்தை விட இதை வைத்து தான் எப்படி சுய விளம்பரம் தேடிக்கொள்ளலாம் ,வெளிச்சத்திலேயே இருக்கலாம் என்ற ஆர்வம் தான் அவருக்கு அதிகம் இருந்ததாக என் மனசாட்சி சொல்லுகிறது .

எப்போதெல்லாம் இந்த விவகாரம் சிறிது அமுங்கி ,டோண்டு வெளிச்சத்திற்கு வெளியே போகிறாரோ ,அப்போதெல்லாம் ஏதாவது ஒரு ரூபத்தில் அதனை கிண்டி கிளறி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து ,வெளிச்சம் மீண்டும் தன் மீது விழுவதை ரசிப்பவர் டோண்டு அவர்கள் .அதனால் தமிழ் வலையுலகில் ஏற்படும் திசை திருப்பல்கள் குறித்தோ அல்லது பாதிக்கப்படுவோர் குறித்தோ அவருக்கு கவலையில்லை .மாறாக இன்னும் எத்தனை பேரை பாதிக்க வைக்கலாம் ,அதன் மூலம் கூட்டம் சேர்க்கலாம் ,அதை வைத்து கும்மியடிக்கலாம் என்பதே அவரின் நோக்கமாக இருந்ததாக நான் நினைக்கிறேன்.

தனக்குத் தானே பின்னூட்டம் இட்டுக்கொள்வது ,தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயத்தை ,தனக்கு சாதகமான நேரத்தில் பொதுவில் வெளிப்படித்திவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல நடிப்பது ,எங்கு சென்றாலும் இந்த விவகாரத்தை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அனைவருக்கும் ஞாபகப் படுத்திக் கொண்டே இருப்பது என்பதெல்லாம் அவரின் புத்திசாலித் தனமான (அப்படி அவர் நினைத்துக்கொள்ளுகிற) உத்திகள் .

டோண்டு அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .அவரின் வயது ,அனுபவம் காரணமாக நாம் அவரை மதிக்கிறோம் என்பதற்காக ,அவரின் சிறுபிள்ளைத் தனமான வழிமுறைகளும் ,விளக்கங்களும் நமக்கு புரியாமல் இல்லை .பல நேரங்களில் இவரிடம் போய் விவாதித்து இவரின் விதண்டாவாதத்தில் தலையைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டுமே என்பதால் தான் பலர் இவரை தவிர்த்து வருகிறார்கள் .ஆனால் அவர்களையும் இவர் விடுவதில்லை .இவருக்கு பின்னூட்டம் கொடுக்காதவர்களெல்லாம் போலிக்கு பயந்தவர்கள் ,விட்டால் போலிக்கு நண்பன் என்று ஓயாமல் சொல்லி வருவார்.

நிறைய சொல்லலாம் .இப்போதைக்கு இது போதும் .இப்போது அவர் பல முகமெடுத்து (ஆமய்யா ! ஆமா! ஆபாசமாகவெல்லாம் எழுதவில்லை) மாட்டிக்கொண்டது பற்றி அவரின் "மீசையில் மண் ஒட்டாத' விளக்கங்கள் குறித்து நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives