Thursday, March 30, 2006

நாகர்கோவில் தொகுதி அலசல்

குமரி மாவட்டம் எப்போதுமே அரசியலில் விசித்திரமான முடிவுகளையும் ,அரசியல் கட்சிகளுக்கு எதிர்பாராத அதிர்ச்சிகளையும் அளிக்கும் மாவட்டம் .பெருந்தலைவர் காமராஜர் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் வென்ற பின்னர் நாகர் கோவில் சட்டமன்ற தொகுதி பொதுவாக காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற தொகுதியாகவே இருந்திருக்கிறது.

திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை குமரி மாவட்டம் எப்ப்போதுமே செல்வாக்கு குறைந்த மாவட்டம் .கலைஞரே ஒரு முறை வெறுத்துப்போய் " நெல்லை எங்கள் எல்லை .குமரி எங்கள் தொல்லை" என்று சொல்லியிருக்கிறார்.காங்கிரஸ்,பா.ஜ.க ,கம்யூனிஸ்டுகள் ஏன் ஜனதா தளம் கூட இங்கே குறிப்பிடத்தக்க செல்வாக்கோடு கோலோச்சியிருக்கின்றன .நாகர் கோவில் சட்ட மன்ற தொகுதியைப் பொறுத்தவரை ஆளும் கட்சியாக வரும் கட்சி இங்கு வெற்றி பெறுவதில்லை அல்லது கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் நிலையே இருக்கிறது .

* எம்.ஜி.ஆர் காலத்தில் இருமுறை அ.தி.மு.க வேட்பாளர் நாஞ்சில் வின்செண்ட் வென்றார் (1977,1980) .தொகுதியில் உள்ள கிறிஸ்தவ மீனவர்களின் சுளையான ஓட்டு இவரை இரு முறையும் கரையேற்றியது .ஆனால் 1982 மண்டைக்காடு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு இவர் தலை வைத்துக்கூட படுக்கவில்லை என்பதால் அம்மக்கள் இவரை விரட்டி அடித்தனர் .அப்போதே அவர் அரசியலிலும் காணாமல் போனார்.

*எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுகொண்டே ஜெயித்த 1984 தேர்தலில் தமிழகம் அதிமுக பக்கம் சாய ,நாகர்கோவிலில் திமுக வென்றது .அப்போது தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற ரத்தினராஜ் ,இப்போது ம.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

* 1989,1991,1996 மூன்று தேர்தல்களிலும் வென்றவர் டாக்டர் மோஸஸ் (காங்கிரஸ் ,தா.ம.க சார்பில்) .ஓட்டுக் கேட்க வருவதோடு இவர் பணி முடிந்து விடும் .ஜெயித்த பிறகு அடுத்த தேர்தல் வரை ,வாயில் வெத்திலையை குதப்பிக்கொண்டு அவருடைய மருத்துவமனையில் மட்டும் அவர் பணி தொடரும் .இவரிடமும் மக்கள் வெறுத்துப் போயினர்.

*2001 தேர்தலில் அதிமுக தமிழகம் முழுதும் வெற்றி முழக்கமிட ,நாகர் கோவில் தொகுதியில் வென்றவர் திமுக கூட்டணியில் திருநாவுக்கரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஆஸ்டின் .திடீரென்று அரசியலில் குதித்து குறுகிய காலத்தில் ஜெயலலிதாவால் அதிமுக மாவட்ட செயலாளராகவும் ,ராஜ்யசபா எம்.பி யாகவும் நியமிக்கப்பட்ட ஆஸ்டின் ,பின்னர் திருநாவுக்கரசுவுடன் அதிமுகவிலிருந்து வெளியேறினார் .தி.மு.க தொண்டர்களின் உழைப்பினால் எம்.எல்.ஏ ஆனவர் திருநாவுக்கரசு கட்சியை பா.ஜ.க வுடன் இணைத்த போது ,ஒரு கிறிஸ்தவராக அந்த கட்சிக்கு போக முடியாமல் மீண்டும் அதிமுக-வில் ஐக்கியமாயுள்ளார் .இப்போது தொகுதி மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது (சென்ற தேர்தலில் மதிமுக இரண்டாமிடம் பிடித்த குளச்சல் தொகுதியை அதிமுகவே எடுத்துக்கொண்டுள்ளது)

* இந்த தொகுதியில் பா.ஜ.க வும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ளது .காரணம் பெரும்பான்மை கிறிஸ்தவர்களாக இருப்பது .எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் நடந்த தேர்தலில் நடிகர் திலகத்தின் தமிழக முன்னேற்ற முன்ணணி இங்கு 20% மேல் கணிசமான வாக்குக்களை பெற்று ஜெயலலிதா கட்சியை நான்காம் இடத்துக்கு தள்ளியது .இன்றும் நடிகர் திலகம் ரசிகர் நிறைந்த தொகுதி இது. ம.தி.மு.க குளச்சல் அளவு இல்லையெனினும் ஓரளவு ஓட்டு வங்கி பெற்றுள்ளது.

* மற்ற மாவட்டங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சாதி குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிப்பது போல ,இங்கு மதம் ஓரளவு ஒரு காரணியாக இருக்கிறது .பெரும்பாலும் கிறிஸ்தவர்களே இங்கு வென்று வந்துள்ளது அதைக்காட்டுகிறது.


இந்த தேர்தலைப் பொறுத்தவரை இங்கு தி.மு.க வும் ம.தி.மு.கவும் மோதுகின்றன . ம.தி.மு.க வில் முன்னாள் எம்.எல்.ஏ ரெத்தின ராஜ் வேட்பாளர் .எளிய மனிதர் .நாகர் கோவில் டீகடைகளில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சாதாரணமாக நின்று கொண்டிருப்பார் .எளிமை அவருக்கு அனுகூலம் என்றாலும் தனிப்பட்ட செல்வாக்கோ ,பணபலமோ ,வசீகரமோ இல்லாதவர்.

தி.மு.க இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை .இந்த தொகுதியில் அதிமுக -வை விட தி.மு.க செல்வாக்கான கட்சி என்றபோதும் வெற்றி பெற அது போதாது .தொகுதியில் கணிசமாக இருக்கும் காங்கிரஸ் ஓட்டுக்களை தி.மு.கவுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் தான் வெற்றி தோல்வி இருக்கிறது .அது போல கணிசமான ஓட்டுக்களை கொண்டுள்ள பா.ஜ.க தனித்து போட்டியிடும் சூழநிலையில் அதுவும் வெற்றி தோல்வியை பாதிக்கும் முக்கியமான காரணி .பா.ஜ.க ஆதரவு ஓட்டுக்கள் அப்படியே பா.ஜ.க வுக்கு விழும் பட்சத்தில் அது தி.மு.க வுக்கு சாதகமாக இருக்கும் என்பது உண்மை.இதற்கிடையில் அதிமுக-வில் புறக்கணிக்கப் பட்டதால் ஆஸ்டின் சுயேட்சையாக நிற்கலாம் என்ற பேச்சு இருக்கிறது .அப்படி நடந்தால் அதுவும் தி.மு.கவுக்கு சாதகமே.

மதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்கள் ஆஸ்டினை சரிகட்ட வேண்டும் .பா.ஜ.க ஓட்டுக்களை ஓரளவு திசைதிருப்பி பெறவேண்டும் ..தி.மு.கவை பொறுத்தவரை காங்கிரஸ் ,கம்யூனிஸ்டு ஓட்டுக்களை முழுவதுமாக பெற்றுவிட்டால் வெற்றிக்கோட்டை தொடலாம் .தொகுதியிலிருக்கும் முஸ்லிம் ஓட்டுக்கள் பொதுவாக தி.மு.க பக்கம் என்பதும் அக்கட்சிக்கு சாதகமான அம்சம்...தி.மு.க வேட்பாளர் யார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

Sunday, March 05, 2006

கலைஞர் தடுமாறுகிறார்

கடந்த 35 ஆண்டுகளாக கலைஞர் தமிழக அரசியலின் மையப்புள்ளி .வெற்றியும் தோல்வியும் அவரில்லாமல் இல்லை .'அரசியல் ராஜதந்திரி' என வர்ணிக்கப்பட்டிருக்கிறவர் .மோதுகின்ற இரு தலைகளில் எதிர் புறம் நிற்கிற போட்டியாளர் மாறியிருக்கிறாரே தவிர கலைஞர் எப்போதும் இரண்டில் ஒன்றாக நிலையாக இருந்திருக்கிறார்(காமராஜரிலிருந்து ஜெயலலிதா வரை) .ஆயிரம் விமரிசனங்கள் ,கோப தாபங்கள் ,எரிச்சல்கள் இருந்தாலும் ,அவருக்கு மனதில் நீங்கா இடத்தை கொடுத்திருக்கும் அனுதாபிகளில் நானும் ஒருவன் .ஆனால் இப்போது கலைஞரை 'ராஜதந்திரி' என்றழைப்பது கடினமாக இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

அரசியல் களத்தில் இப்போது வைகோ அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் .அரசியல் காய் நகர்த்தலில் கலைஞர் எதார்த்தத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன் .கலைஞருக்கோ அல்லது திமுக-வுக்கோ விழும் ஓட்டுக்கள் எல்லாம் நேரடியாக திமுகவை ஆதரித்து விழும் ஓட்டுக்கள் அல்ல .ஜெயலலிதாவை வர விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக கலைஞருக்கு ஓட்டுப்போடும் ஒரு பெரும் கூட்டம் உண்டு.ஆனால் கலைஞருக்கு ஜெயலலிதாவை எக்காரணம் கொண்டும் வர விடக்கூடாது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதாக தெரியவில்லை .ஆனால் மற்ற கட்சிகள் மட்டும் அப்படி நினைக்க வேண்டும் என நினைக்கிறார்.

மதிமுக என்ற இயக்கம் திமுக-வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி .ஆனாலும் வைகோ பெரும்பாலும் திமுக-விடம் நட்பு பாராட்டியே வந்திருக்கிறார்.அதற்காக தனித்தன்மையை இழந்திருக்கிறார் .12 ஆண்டுகளாகியும் சட்டமன்றத்தில் நுழைய முடியாத நிலை .கணிசமான வாக்குகளை கையில் வைத்திருந்தும் அதற்குரிய அங்கிகாரம் கிடைக்காத நிலை .பாமக போன்று சாதுர்யமாக கூட்டணி அமைத்து சட்டமன்ற பலத்தை பெருக்கிக்கொள்ள வைகோவுக்கு தெரியவில்லை .பலன் என்ன ,கூட்டணி மூலம் கிடைத்த சட்டமன்ற எண்ணிக்கையை வைத்து பாமாக -வை விட சிறிய கட்சியாக அறியப்படுகிற மாயை .கலைஞர் போன்ற 'ராஜதந்திரி'(?) கூட அப்படி நம்புகிற நிலைமை . அதைப் போக்குவதற்கு ஒரே வழி சட்டமன்றத்தில் கணிசமான இடங்களைப் பிடித்து உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்க வைப்பது .அதிமுக 35 சீட்டுகள் கொடுக்க முன்வந்தும் ,திமுக -வில் 25 கிடைத்தால் கூட தி.மு.க வோடு தங்கிவிட வைகோ தயாராயிருந்ததாகவே தெரிகிறது .(பாமக-வுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நாடறியும்) .ஆனால் கலைஞர் நடந்து கொண்ட விதம் வெறும் வீம்பாகத்தான் எனக்குத் தெரிகிறது .ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விட ,மு.க ஸ்டாலினுக்குள்ள பிடியை விட்டுவிடக்கூடாது என்பதே அவருக்கு பிரதானமாக இருக்கிறது .பாதி தமிழகத்தில் மட்டும் செல்வாக்குள்ள பாமக அவரை மிரட்ட முடிகிறது .ஆனால் மதிமுக-வை அவர் மதிக்கக்கூட இல்லை ."22 தான் கொடுக்க முடியும் .இருந்தால் இரு. இல்லையென்றால் போ" என்ற தொனியில் பேசுகிறார் .கூட்டணி மாறுவதால் வைகோ இழக்கப்போவது கொஞ்சம் மரியாதையை ,பெறப்போவது அதிகம் MLA-க்களை .ஆனால் கலைஞர் இழக்கப் போவது மீண்டும் ஜெயலலிதாவிடம் ஆட்சியை.அது அவருக்கு பெரிதாக இல்லை போலும் .ஜெயலலிதாவும் வரக்கூடாது ,வைகோவும் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையாக இருக்கிறது அவர் போக்கு.இது தான் வேதனையான உண்மை.

நான் விரும்புகிறேனோ இல்லையோ,வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.அதற்கு சில காரணங்கள்.

1."மயிரைக் கட்டி மலையை இழுப்போம் .வந்தா மலை .போனா மயிரு" என்ற ஜெயலைதாவின் அணுகுமுறை ,கலைஞர் இறங்கு முகத்திலும் ஜெயலலிதா ஏறுமுகத்திலும் இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

2.நகர்புறங்கள் திமுக கோட்டை என்ற நெடுங்கால பாரம்பர்யம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது .

3.இளைய தலைமூறை பொதுவாக திமுக-வை ஆதரிக்கும் வழக்கம் மாறிவிட்டது .சன் டீவி போன்ற திமுக ஆதரவு ஊடகங்கள் இதற்கு பெரும்பங்காற்றியிருக்கின்றன .திமுக அனுதாபிகளுக்கே எரிச்சல் வரும் போது மற்றவர்களுக்கு சொல்லத்தேவையில்லை.

4.அதிமுக வுக்கு ஏற்கனவே அதிகமாக இருக்கும் தாய்க்குலத்தின் ஆதரவு இப்போது உச்சத்துக்கு போயிருப்பதாக தெரிகிறது .கருத்துக் கணிப்புகள் ,வெளிப்படையாகத் தெரியும் எழுச்சி இவையெல்லாம் மீறி பல முறை அதிமுக ஆச்சரிய வெற்றி ஈட்டியதற்கு தாய்க்குலம் ஓட்டு தான் பிரதானம் .கிராமப் பகுதிகளில் பெண்கள் ஓட்டுப்போடுவதை திருவிழாவுக்கு செல்வது போல சீவி சிங்காரித்து பெருமிதத்தோடு நிறைவேற்றுகிறார்கள் .அரசியல் கட்சி சார்ந்த ஆண்கள் தங்களுக்குள்ள கூட்ட பலத்தை வைத்து கணக்கு போட்டுக்கொண்டிருக்க ,திருநெல்வேலி அல்வாவை கிண்டிக் கொடுப்பது இவர்கள் தான்.

5.ஜெயலலிதாவின் அராஜகங்கள் பலவற்றையும் பலரும் தலைமைக்குரிய பண்பாகவும் ,துணிவின் இலக்கணமாகவும் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

6.குறைகூறல்களை மீறி சுனாமி நிவாரணத்திலும் ,மற்ற சில விடயங்களிலும் நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் .எனவே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சேர்க்காமல் ,அதிமுக கூட்டணிக்கு அதிக வெற்றிவாய்ய்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன் .கூட்டணி ஆட்சி என்றெல்லாம் தமிழகத்தில் கனவு மட்டுமே காணலாம் .வச்சா குடுமி ..அடிச்சா மொட்டை தான் .யார் கண்டது மதிமுக சட்டமன்றத்தில் இரண்டாவதோ மூன்றாவதோ பெரிய கட்சியாக நுழைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

கலைஞர் தடுமாறுகிறார் பிள்ளைப்பாசத்தில்..வருத்தமாக இருக்கிறது.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives