Thursday, March 30, 2006

நாகர்கோவில் தொகுதி அலசல்

குமரி மாவட்டம் எப்போதுமே அரசியலில் விசித்திரமான முடிவுகளையும் ,அரசியல் கட்சிகளுக்கு எதிர்பாராத அதிர்ச்சிகளையும் அளிக்கும் மாவட்டம் .பெருந்தலைவர் காமராஜர் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் வென்ற பின்னர் நாகர் கோவில் சட்டமன்ற தொகுதி பொதுவாக காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற தொகுதியாகவே இருந்திருக்கிறது.

திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை குமரி மாவட்டம் எப்ப்போதுமே செல்வாக்கு குறைந்த மாவட்டம் .கலைஞரே ஒரு முறை வெறுத்துப்போய் " நெல்லை எங்கள் எல்லை .குமரி எங்கள் தொல்லை" என்று சொல்லியிருக்கிறார்.காங்கிரஸ்,பா.ஜ.க ,கம்யூனிஸ்டுகள் ஏன் ஜனதா தளம் கூட இங்கே குறிப்பிடத்தக்க செல்வாக்கோடு கோலோச்சியிருக்கின்றன .நாகர் கோவில் சட்ட மன்ற தொகுதியைப் பொறுத்தவரை ஆளும் கட்சியாக வரும் கட்சி இங்கு வெற்றி பெறுவதில்லை அல்லது கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் நிலையே இருக்கிறது .

* எம்.ஜி.ஆர் காலத்தில் இருமுறை அ.தி.மு.க வேட்பாளர் நாஞ்சில் வின்செண்ட் வென்றார் (1977,1980) .தொகுதியில் உள்ள கிறிஸ்தவ மீனவர்களின் சுளையான ஓட்டு இவரை இரு முறையும் கரையேற்றியது .ஆனால் 1982 மண்டைக்காடு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு இவர் தலை வைத்துக்கூட படுக்கவில்லை என்பதால் அம்மக்கள் இவரை விரட்டி அடித்தனர் .அப்போதே அவர் அரசியலிலும் காணாமல் போனார்.

*எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுகொண்டே ஜெயித்த 1984 தேர்தலில் தமிழகம் அதிமுக பக்கம் சாய ,நாகர்கோவிலில் திமுக வென்றது .அப்போது தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற ரத்தினராஜ் ,இப்போது ம.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

* 1989,1991,1996 மூன்று தேர்தல்களிலும் வென்றவர் டாக்டர் மோஸஸ் (காங்கிரஸ் ,தா.ம.க சார்பில்) .ஓட்டுக் கேட்க வருவதோடு இவர் பணி முடிந்து விடும் .ஜெயித்த பிறகு அடுத்த தேர்தல் வரை ,வாயில் வெத்திலையை குதப்பிக்கொண்டு அவருடைய மருத்துவமனையில் மட்டும் அவர் பணி தொடரும் .இவரிடமும் மக்கள் வெறுத்துப் போயினர்.

*2001 தேர்தலில் அதிமுக தமிழகம் முழுதும் வெற்றி முழக்கமிட ,நாகர் கோவில் தொகுதியில் வென்றவர் திமுக கூட்டணியில் திருநாவுக்கரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஆஸ்டின் .திடீரென்று அரசியலில் குதித்து குறுகிய காலத்தில் ஜெயலலிதாவால் அதிமுக மாவட்ட செயலாளராகவும் ,ராஜ்யசபா எம்.பி யாகவும் நியமிக்கப்பட்ட ஆஸ்டின் ,பின்னர் திருநாவுக்கரசுவுடன் அதிமுகவிலிருந்து வெளியேறினார் .தி.மு.க தொண்டர்களின் உழைப்பினால் எம்.எல்.ஏ ஆனவர் திருநாவுக்கரசு கட்சியை பா.ஜ.க வுடன் இணைத்த போது ,ஒரு கிறிஸ்தவராக அந்த கட்சிக்கு போக முடியாமல் மீண்டும் அதிமுக-வில் ஐக்கியமாயுள்ளார் .இப்போது தொகுதி மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது (சென்ற தேர்தலில் மதிமுக இரண்டாமிடம் பிடித்த குளச்சல் தொகுதியை அதிமுகவே எடுத்துக்கொண்டுள்ளது)

* இந்த தொகுதியில் பா.ஜ.க வும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ளது .காரணம் பெரும்பான்மை கிறிஸ்தவர்களாக இருப்பது .எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் நடந்த தேர்தலில் நடிகர் திலகத்தின் தமிழக முன்னேற்ற முன்ணணி இங்கு 20% மேல் கணிசமான வாக்குக்களை பெற்று ஜெயலலிதா கட்சியை நான்காம் இடத்துக்கு தள்ளியது .இன்றும் நடிகர் திலகம் ரசிகர் நிறைந்த தொகுதி இது. ம.தி.மு.க குளச்சல் அளவு இல்லையெனினும் ஓரளவு ஓட்டு வங்கி பெற்றுள்ளது.

* மற்ற மாவட்டங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சாதி குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிப்பது போல ,இங்கு மதம் ஓரளவு ஒரு காரணியாக இருக்கிறது .பெரும்பாலும் கிறிஸ்தவர்களே இங்கு வென்று வந்துள்ளது அதைக்காட்டுகிறது.


இந்த தேர்தலைப் பொறுத்தவரை இங்கு தி.மு.க வும் ம.தி.மு.கவும் மோதுகின்றன . ம.தி.மு.க வில் முன்னாள் எம்.எல்.ஏ ரெத்தின ராஜ் வேட்பாளர் .எளிய மனிதர் .நாகர் கோவில் டீகடைகளில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சாதாரணமாக நின்று கொண்டிருப்பார் .எளிமை அவருக்கு அனுகூலம் என்றாலும் தனிப்பட்ட செல்வாக்கோ ,பணபலமோ ,வசீகரமோ இல்லாதவர்.

தி.மு.க இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை .இந்த தொகுதியில் அதிமுக -வை விட தி.மு.க செல்வாக்கான கட்சி என்றபோதும் வெற்றி பெற அது போதாது .தொகுதியில் கணிசமாக இருக்கும் காங்கிரஸ் ஓட்டுக்களை தி.மு.கவுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் தான் வெற்றி தோல்வி இருக்கிறது .அது போல கணிசமான ஓட்டுக்களை கொண்டுள்ள பா.ஜ.க தனித்து போட்டியிடும் சூழநிலையில் அதுவும் வெற்றி தோல்வியை பாதிக்கும் முக்கியமான காரணி .பா.ஜ.க ஆதரவு ஓட்டுக்கள் அப்படியே பா.ஜ.க வுக்கு விழும் பட்சத்தில் அது தி.மு.க வுக்கு சாதகமாக இருக்கும் என்பது உண்மை.இதற்கிடையில் அதிமுக-வில் புறக்கணிக்கப் பட்டதால் ஆஸ்டின் சுயேட்சையாக நிற்கலாம் என்ற பேச்சு இருக்கிறது .அப்படி நடந்தால் அதுவும் தி.மு.கவுக்கு சாதகமே.

மதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்கள் ஆஸ்டினை சரிகட்ட வேண்டும் .பா.ஜ.க ஓட்டுக்களை ஓரளவு திசைதிருப்பி பெறவேண்டும் ..தி.மு.கவை பொறுத்தவரை காங்கிரஸ் ,கம்யூனிஸ்டு ஓட்டுக்களை முழுவதுமாக பெற்றுவிட்டால் வெற்றிக்கோட்டை தொடலாம் .தொகுதியிலிருக்கும் முஸ்லிம் ஓட்டுக்கள் பொதுவாக தி.மு.க பக்கம் என்பதும் அக்கட்சிக்கு சாதகமான அம்சம்...தி.மு.க வேட்பாளர் யார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

34 comments:

rajkumar said...

நல்ல கட்டுரை.

Dharumi said...

எப்படிப்பா இந்த மாதிரி வருஷக் கணக்குகளை யெல்லாம் நினைவுல வச்சிக்கிட்டு இப்படிப்பட்டக் கட்டுரைகள் எல்லாம் எழுதறீங்க? ஆச்சரியமாதான் இருக்கு..நீங்க மட்டுமில்ல; நிறைய ஆட்கள் இது மாதிரி புட்டுப் புட்டு வைக்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாயிடுது...சந்தோஷம்தான்.

ஜோ / Joe said...

நன்றி ராஜ்குமார்!

தருமி,
வருடங்களை பொறுத்தவரை உத்தேசமாக தெரிந்தாலும் ,இணையத்தில் தகவல் தேடி உறுதிப்படுத்திக்கொள்வது .மற்ற தகவல்கள் தெரிவது தனிப்பட்ட ஆர்வத்தில் தான்.

மு.கார்த்திகேயன் said...

Nice analysis..Keep good work

பாரதி said...

இந்தத் தேர்தலில் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கேப்டன் factor ஐத் தொடாமல் அலசல் பூர்த்தியாகுமா? நாகர்கோவிலில் கேப்டனின் செல்வாக்கு எப்படி?

ஜோ / Joe said...

பாரதி,
நாகர்கோவிலைப் பொறுத்தவரை பெரும்பான்மை நகர்புறமும் ,மீதமிருக்கும் கிராமப்புறங்களும் படிப்பறிவு மிக்க பகுதியாகவும் இருக்கிறது .இங்கு இன்னமும் சிவாஜிக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களோ தெரியாது .இன்னும் சொல்லப்போனால் மார்க்கெட் இழந்த பிரபு-வுக்கு நடிகர் திலகத்தின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக ஏகப்பட்ட ரசிகர்கள் .மற்ற தொகுதிகளைப் போல இங்கு விஜயகாந்த்-கு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் இல்லை என்பதே என் கணிப்பு .

ஜோ / Joe said...

பாரதி,
விஜயகாந்த்-க்கு கன்னியாகுமரி தொகுதியில் ஓரளவு ஆதரவு இருக்கலாம்

ராஜகுமார் said...

அன்பு நாண்பருக்கு வணக்கம்

நாகர்கோவில் இருக்கும் ஓட்டு நிலவரங்கள்பற்றி ஒரு தொளிவான கருத்துகளை தந்தமைக்கு மிக்க நன்றி

பாரதி said...

நன்றி ஜோ.

சுதர்சன்.கோபால் said...

ஆண்டு,பெயர்கள் முதற்கொண்டு மிகத்துல்லியமான தகவல்கள்.கலக்கிப்புட்டீங்க போங்க...
அப்படியே குளச்சல் பத்தியும அந்தப் பக்கத்து பிரபலமான அரசியல்வாதி குமாரதாஸைப்(கட்சி தாவுவதில் கில்லாடின்னு கேள்விப்பட்டேன்) பத்தியும் எழுதுங்களேன்.

sivagnanamji(#16342789) said...

kalakkiteenga....good
aana oru vishayam iddikkude
nagerkoil dmk kku adharava varum engireenga........apram, nagarkoil edirkatchi seat engireenga.......
apdeenna?

ஜோ / Joe said...

சிவஞானம்ஜி,
தி.மு.க வரும்-னு தீர்மானமா சொல்லல.அதே நேரம் சாதகமான சூழ்நிலை இருக்குண்ணு சொல்லியிருக்கேன் .1980-க்கு பிறகு இந்த தொகுதியில் ஆளும் கட்சி MLA இருந்ததில்ல .ஒண்ணுல கூட்டணி கட்சி ,இல்லைண்ணா எதிர் கட்சி தான் வெற்றி பெற்றிருக்கு .இந்த முறை மாநிலத்திலும் ,இந்த தொகுதியிலும் தி.மு.க ஜெயித்தால் அந்த நிலை மாறலாம்.

tbr.joseph said...

சூப்பரா இருக்கு ஜோ..

ரொம்ப நல்லா ஸ்டடி பண்ணி எழுதி இருக்கீங்க. செய்தித்தாள்கள்ல வர்ற தேர்தல் அலசலைவிடவும் பிரமாதமா இருக்கு.

படிச்சி முடிச்சப்போ ரொம்ப சந்தோஷமாவும் இருந்தது.. இது யாரு நம்ம ஜோ இல்லேன்னு!

வாழ்த்துக்கள்..

ஜோ / Joe said...

ஜோசப் சார்,கார்த்திகேயன்,ராஜகுமார்,சுதர்சனம் கோபால் ..மிக்க நன்றி!

குளச்சல் பற்றி எழுத முயல்கிறேன் கோபால்.

முத்து(தமிழினி) said...

இந்த முறை சிறுபான்மையோர் ஓட்டு தி,மு.க கூட்டணிக்கு போய்விடுமோ என்ற பயத்தில் கருத்து கணிப்பில் இஸ்லாமியர் பெருவாரியாக அதிமுகவிற்கு வாக்களிப்பதாக குமுதம் விஷம பிரச்சாரம் செய்வதை கவனித்தீர்களா

ஜோ / Joe said...

முத்து,
குமுதம் விடும் ரீல்களை கவனித்து வருகிறேன் .நாகர்கோவிலைப் பொறுத்தவரை அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் திமுக அல்லது காங்கிரஸ் ஆதரவாளர்கள் .இப்போது இரண்டும் கூட்டணி என்பது திமுகவுக்கு பலமே

Anonymous said...

Good Analysis Jo.

senthil

ஜோ / Joe said...

Thanks Senthil

சிவா said...

ஜோ! புள்ளிவிவரம் கொடுத்து கலக்கிட்டிய. நானெல்லாம் ஓட்டு போட்டதோட சரி! அப்புறம் என்னச்சுன்னு நெனைச்சதே இல்லை. கலக்கலான கட்டுரை.

koothaadi said...

நல்ல பதிவு .திமுக ஏ.ராஜன் என்பவரை நிறுத்தியுள்ளது .அவர் யார் என்ன செல்வாக்கு என ஏதாவது தெரியுமா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.
ரத்தினராஜ் நல்ல மனிதர் .ஆனால் போன தேர்தலில் அவர் 13000 ஓட்டுதான் வாங்கி இருக்கிறார். சம்பத் சந்திரா அளவிற்கு பாப்புலர் ஆனவர்ன்னு சொல்ல முடியாது.குளச்சல் தான் மதிமுக வுக்கு ஜெயிக்கக் கூடியத் தொகுதி .

குளச்சல் பத்தி எழுதுவதை எதிர்பார்க்கும் ...

ஜோ / Joe said...

சிவா,கூத்தாடி..நன்றி!

எ.ராஜன் நீண்ட காலமாக நாகர்கோவில் நகர திமுக செயலாளராக இருக்கிறார் .தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன் .ம.தி.மு.க வேட்பாளர் ரெத்தினராஜ் ஒரு முறை நாகர்கோவிலிலும் ஒரு முறை குளச்சலிலும் தி.மு.க சார்பில் வென்றவர்.எனவே திமுக வேட்பாளரைக் காட்டிலும் தொகுதி மக்களுக்கு பரிச்சயமானவர்.

செல்வகுமார் said...

ஜோ,
நல்ல அலசல். "நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை" என்று கருணாநிதி கூறிய செய்தி எனக்கு புதிது. எனக்கு தெரிந்த வரை அவர் குமரியில் தெர்தல் பிரசாரம் செய்வதை தவிர்ப்பவர் என்று அறிந்தேன்.

தங்களது நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது. கடந்த கால தேர்தல் குறித்து அறிய நல்ல ஒரு இணையதளத்தை பரிந்துரையுங்கள்.

நன்றி,
செல்வ குமார்.

ஜோ / Joe said...

செல்வகுமார்,
நன்றி!..கடந்த கால வெற்றி தோல்வி பற்றிய விவரம் இங்கே இருக்கிறது..பாருங்கள்

http://www.pibchennai.gov.in/TNELECTIONS2006/tnelections2006.pdf

Anonymous said...

Good analysis!

Raja

குழலி / Kuzhali said...

ஜோ... ஆஸ்டின் சுயேட்சையாக போட்டியிடுகின்றாராமே, நாகர்கோவில் செய்திகளுக்கு நன்றி...

Anonymous said...

சகோதரர் ஜோ அவர்களே!

அருமையான அலசல். நன்றாக உள்ளது. முக்கியமாக ஒவ்வொரு பழைய சட்ட மன்ற உறுப்பினர்களைக் குறித்த கண்ணோட்டம்.

டா. மோஸஸ் அவர்களைக் குறித்து மிகச் சரியாக கூறியிருக்கிறீர்கள். (என்ன அவரின் மருத்துவமனை சென்று கவனித்தீர்களா?:-))

திரு. இரத்தின ராஜ் அவர்களைக் குறித்து (அனைத்து)மக்களிடமும் இன்னமும் நல்ல பெயர் உள்ளது.

விஜய காந்திற்கு தக்கலைப் பகுதியில் குறிப்பிடத் தக்க ஓட்டு விழும் என நினைக்கிறேன். மேலும் இம்முறை முஸ்லிம்களின் ஓட்டு வெகுவாக பிளவு பட சாத்தியம் உள்ளது. அதிமுக சார்பு நிலையுடைய சில முஸ்லிம் தலைவர்களுக்கு இப்பகுதியில் குறிப்பிடத் தக்க செல்வாக்கு உள்ளது. இது முஸ்லிம் ஓட்டு வங்கியை பிரிக்கும் என நினைக்கிறேன்.

அரசியல் வித்தகர் போன்று உள்ளது உங்கள் அலசல். பார்த்து ஏதாவது அரசியல் கட்சி உங்களை கொத்திக் கொண்டு போகப் போகிறது! :-)

அன்புடன்

இறை நேசன்.

ஜோ / Joe said...

ஆஸ்டின் விவகாரம் -குமுதம் செய்தி

http://www.kumudam.com/reporter/060406/pg8.php

ஜோ / Joe said...

செல்வகுமார் சொன்னது போல இம்முறையும் கலைஞர் தனது பயணத் திட்டத்தில் குமரி மாவட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்துள்ளார் .ஆனால் ஜெயலலிதா பல இடங்களில் பிரச்சாரம் செய்கிறார் .இது திமுக-வுக்கு நல்லதல்ல.

SK said...

தங்களது அலசல் மிக நல்ல முறையில் எழுதப்பட்டிருப்பினும், 'இரு கழக மாயை'யில் இருந்து வெளிச் சென்று பார்க்கததால், முழுமையாக இல்லை என்பது என் கருத்து.

வீச்சும் வேகமும் குறைவில்லை என்ற அளவில், நிறைவே1

eNagercoil said...

Dear sir ,
We are impressed by your article. Can we use this with your name in our webiste for nagercoil people called www.enagercoil.com ?
Thanks
eNagercoil Team.

ஜோ / Joe said...

enagercoil,
Thanks for your comment.You can use this article in full/part as you wish ,in enagercoil.com.

Thanks!

ஜோ / Joe said...

Interesting article from rediff on the pulse of voters in Kanyakumari dist

http://in.rediff.com/election/2006/apr/21ptn1.htm

மாயவரத்தான்... said...

//திருநாவுக்கரசு கட்சியை பா.ஜ.க வுடன் இணைத்த போது ,ஒரு கிறிஸ்தவராக அந்த கட்சிக்கு போக முடியாமல் மீண்டும் அதிமுக-வில் ஐக்கியமாயுள்ளார் //

//இந்த தொகுதியில் பா.ஜ.க வும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ளது .காரணம் பெரும்பான்மை கிறிஸ்தவர்களாக இருப்பது .//

ஒரே லைன்ல அரசியல்வாதி கணக்கா இப்படி ஒரு அந்தர்பல்டியா?! அல்லது எதுவும் தட்டச்சு பிழையா ஜோ?

ஜோ / Joe said...

மாயவரத்தான்,
நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு வாக்கியங்களுக்கும் சம்பந்தம் இல்லை..இரண்டாவது வாக்கியத்தை புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் திறந்த மனமும் ,ஜோ என்றாலே சீறி வந்து குற்றம் கண்டு பிடிக்கும் மனநிலையை விடவும் வேண்டும் .குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான் பா.ஜ.க வளர்வதற்கு காரணம் .எங்குமே இல்லாமல் இங்கு கிறிஸ்தவர்கள் பிரதிநிதித்துவம் பெறுவதை பொறுக்க முடியாத இந்து அமைப்புகள் அங்கே இந்துக்கள் சிறுபான்மையினராக அச்சுறுத்துதலுக்கு உள்ளாயிருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்து இந்துக்களை தூண்டி விட்டனர் . எங்குமே சிறுபான்மையினருக்குள்ளே இயல்பாக வரும் ஒற்றுமையும் ,எண்ணமுமே அங்கு இந்து அமைப்புகள் செல்வாக்காக இருக்க காரணம்..

மனதை திறந்து வையுங்கள்..வெறுப்புணர்ச்சியையும் குற்றம் கண்டு பிடிப்பதையும் குறையுங்கள் .முந்திரி கொட்டை மாதிரி குதிக்காதீர்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives