Wednesday, March 12, 2008

உயிரக்காரர்

அந்தோணிப்பிள்ளை ஒரு காலத்துல பெரிய தொழில்காரர் .மீன் பிடி சேல் சொல்லுவதிலும் ,எந்த கடலடியிலும் துணிந்து தொழிலுக்கு போவதிலும் கெட்டிக்காரர் என பெயரெடுத்தவர் .இப்போ பிள்ளைகளெல்லாம் தலையெடுத்த பொறவு தொழிலுக்கு போறதில்ல ..ஆனாலும் தெனமும் காலைலயே கடலைப் பார்த்து இருக்குற சூசை வீட்டு திண்டுல வந்து உக்காந்துடுவாரு .அவர சுத்தி ஒரு கூட்டம் உக்காந்துக்கும் .அவரு பாட்டுக்கு பழைய கதைகளையும் ,தொழில் பராக்கிரமத்தையும் சொல்லிட்டிருப்பாரு .கருக்கலுக்கு 3 ,4 மணிக்கு போன வலைக்கரங்கள்ளாம் 8 மணியிலிருந்து திரும்ப ஆரம்பிப்பாவு . மணி இப்போ 7.30 ஆச்சு.

அந்த பக்கம் வந்த அந்தோணிப்பிள்ளை தம்பி மவன் கில்பர்ட் அவரைப்பார்த்தவுடம் கேட்டான் " பெரியா ! என்ன சேல் ?"

"ஏல மக்கா கில்பர்டா ! சேல் சோண்வாடு தான் .நீரோட்டத்த வச்சி பாத்தா கீழா மடைக்கு மேலே தெக்கால நெத்தலிப் பழுப்பு இருக்கு "

"ஐயே பெரியா ! எல்லாவனும் சாளா வலையெல்லா தள்ளியிருக்கான் "

"ஏல நான் சொன்னா எவன் கேக்கான் ..ராத்திரி ரூபஸ் கிட்ட கச்சாவலை தள்ள சொன்னதுக்கு சும்மா கெடயும் வே -ன்னு சொல்லிட்டு போறான் .இப்போ சாளா வலை தான் தள்ளியிருக்கான்"

"பெரியா ! அன்னா ஒரு வலைக்காரன் பாயை வச்சு வர்றானே ! யாரு வல?"

"மரம் ஓடுற ஓட்டப்பாத்தா மெல்கியாஸ் மொவன் மாதிரி இருக்கி"

"பொட்டு போல தெரியுற மரத்த எப்பிடி பெரியா கரெட்டா சொல்லுறவு?"

"ஏல மக்கா ! மரத்துல உள்ள தொரத்த பார்த்தா தெரியாதால ..செதுக்கும் போது நானும் இருந்தேன்ல ..சரி ..நீ என்ன தொழிலுக்கு போவாம உசர நிக்க?"

"பெரியா ..சேலும் சரியில்ல .காத்தா இருந்துச்சா .அதான் போவல்ல"

"என்னல ..இந்த காத்துக்கெல்லாம் ஒயக்க இருந்தா சோத்துக்கு என்னல பண்ணுவ'

"பெரியா ! அங்க பாருங்க ஒரு வலக்காரன் தொளவ காட்டுறான் "

"நில்லு மக்கா பாத்துண்டு ! ... ஏல நான் சொன்னேனுல்ல ..நெத்தலி பழுப்பு வந்திருக்கி .அதான் கச்சாவலைவள இளக்க சொல்லி தொளவ காட்டுறான் "

"பெரியா ! இப்போ கச்சாவலை எளக்குனா நெத்தலி படுமா "

"ஏல நான் சொன்னேமில்லா .. கீழா மடைக்கு தெக்கால கொண்டு போடு .மரத்துல கெட்டி வச்சு தான் கொண்டு வரணும்"

"பெரியா ! அப்போ நான் புருமிஸ கூட்டுகிண்டு வலைய எளக்குறேன் ..வாரேன்"

"சீக்கிரம் போல மக்கா!"

சில நிமிடங்களில் சிலர் கச்சாவலையை காவிக் கொண்டுவந்து அவரசம் அவசரமாக மரத்தில் வைத்து கட்டி கடலில் இறக்கிக்கொண்டிருந்தார்கள் .சாளா வலைகளெல்லாம் திருப்ப வந்து கொண்டிருந்தன .கரையில் தயாராக கச்சாவலை இருக்க ,மரம் அடைந்தவுடன் சாளாவலையை இறக்கி வைத்து விட்டு ,கச்சாவலையைக் கட்டி மீண்டும் இளக்கிக் கொண்டிருந்தார்கள் .

கந்தசாமி நாடார் திண்டுல வந்து உக்காந்தார் ..பக்கத்திலிருந்த சேசுநாயகம் "என்ன நாடாரே ! தூரமா?"

"இல்லையா ! கறிக்கு மீனு ஆப்புடுமாண்ணு பாக்க வந்தேன்"

அந்தோணிபிள்ளை கந்தசாமி நாடாரை பார்த்துவிட்டார் "ஓ உயிரகாரரா ! பாத்து நாளாச்சே ,இந்தால வாங்க"

"அந்தோணிபிள்ள உயிரகாரரா ! இஞ்ச தான் இருக்கியளா ?"

"நாடார் மீன் வாங்க வந்தியளோ? "

"ஆமா ... மவன் மெட்ராஸ்ல இருந்து வந்திருக்கான் ..கொஞ்சம் மீனு வாங்கலாமிண்ணு சரி கடப்பறத்துல போய் பாக்கலான்ணு வந்தேன்"

"நாடாரே ..இன்னிக்கு நெத்தலி தான் கெடச்சும் .போதுமா "

"ஓய் ! நெத்தலிக்கு என்ன கொறச்ச"

"அப்போ உக்காருங்க ..வலைவ வந்தா தெக்க போலாம் "

"ஓய் என்ன இது ..கடக்கரை இப்படி கெடக்கு ..முன்னால எல்லாம் என்னா கூட்டமா இருக்கும்"

"ஹூம் .இப்போ யாருவே ஊருல தொழிலுக்கு போறா ..பாதி பேர் பகரின்ல போட்டுக்கு போறான் .மீதிபேரு கேராளால போட்டுக்கு போறான் ..ஏதோ நாலஞ்சு பேர் ஊருல கெடந்து சாளாவலையோ கச்சாவலையோ ,டிஸ்கோ வலையோ தள்ளிட்டு கெடக்கான் . ஓய்! அப்போ வாவல் ,நெத்தலிக்கு மடி தள்ளுனா 7 ஒமல் 8 ஒமல்ல வெலங்கி கொண்டு வருவான் .வாங்க ஆளிருக்காது .இப்போ மடியும் இல்ல .மடி தள்ள 8 பேருக்கு எங்க போவ ..இங்க ஊருல உள்ளவனே கறிக்கு மீனில்லாம நார்வோல் சந்தைலயும் தெங்கம்புதூர் சந்தைலையும் போய் மீன் வாங்க வேண்டிருக்கி .என்னத்த சொல்ல . இப்பவாவது நெத்தலியாவது கெடச்சும் ..செப்டம்பர் வந்தா அதுவும் கெடச்சாது ..எல்லாவனும் ராளுக்கு டிஸ்கோ வல தள்ளுவான் .100 ராள கத்தத்துல இடுக்குண்டு போய் வித்தாண்ணா சாப்பாட்டுக்கு மிஞ்சி பைசா ..கறி மீன பத்தி எவன் கவலப்படுறான் .ஓய் ! உயிரக்காரரே அந்த காலத்துல இந்த ராளு பட்டா தரித்திரம் .ஒருத்தனும் தின்ன மாட்டான் .கடபறத்துல வெட்டி பூத்திடுவோம்"

"தெரியுமில்லா"

"இப்போ அதுக்கு வந்த மவுச பாத்தீரா ..மீனு தான் இல்லையே தவிர இப்போ பணத்துக்கொண்ணும் பஞ்சம் இல்லை ஓய்!"

"உயிரக்காரர் சொல்லுறது சரி தான்"

சேசுநாயகம் குறுக்கப் புகுந்தான் "பெரியா ! உயிரக்காரனா ..என்ன பெரியா அது?"

"ஏல மக்கா ! எங்க காலத்துல நம்ம முக்குவ குடியில உள்ள குடும்பமும் நாடாகுடியிலுள்ள குடும்பமும் உயிரகாரரா இருப்பாவு ..தெனமும் நம்ம ஊடுகள்ள இருந்து உயிரகாரர் ஊட்டுக்கு கறிக்கு மீனு போவும் .அவுக ஊட்டுல இருந்து கருப்புட்டி ,நொங்கு ,தேங்க ,பனங்கெளங்க்குண்ணு அப்பப்ப வரும் ..தாயா புள்ளையா பரிமாறுவோம் ..இப்ப எங்கல இருக்கு அது ..அது ஒரு காலம் மக்கா"

அந்தோணிப்பிள்ளை பெரிதாக அலுத்துக்கொண்டார் .. கந்தசாமி நாடாரும் தலையை ஆட்டிக்கொண்டார்.

11 comments:

singainathan said...

:)
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

அன்புடன்
சிங்கை நாதன்

singainathan said...

//"ஏல மக்கா ! எங்க காலத்துல நம்ம முக்குவ குடியில உள்ள குடும்பமும் நாடாகுடியிலுள்ள குடும்பமும் உயிரகாரரா இருப்பாவு ..தெனமும் நம்ம ஊடுகள்ள இருந்து உயிரகாரர் ஊட்டுக்கு கறிக்கு மீனு போவும் .அவுக ஊட்டுல இருந்து கருப்புட்டி ,நொங்கு ,தேங்க ,பனங்கெளங்க்குண்ணு அப்பப்ப வரும் ..தாயா புள்ளையா பரிமாறுவோம் ..இப்ப எங்கல இருக்கு அது ..அது ஒரு காலம் மக்கா"
//

இதே போல மற்ற பல வார்த்தைகளுக்கும் விளக்கம் கொடுத்து விடுங்களேன்.

அன்புடன்
சிங்கை நாதன்

ஜோ / Joe said...

சிங்கை நாதன்,
நீங்கள் எதற்கெல்லாம் விளக்கம் எதிர்பார்க்கிறீர்கள் என தெரியவில்லை .இருந்தாலும் நானாக சிலவற்றுக்கு சொல்லி விடுகிறேன்.

'சேல்' - கடலில் காற்று வீசும் நிலமை ,அதைப்பொறுத்து அதன் போக்கை கணிப்பது.
சாளாவலை - சாளை மீன் மாட்டும் அளவுக்கு கண்ணியுள்ள வலை
கச்சாவலை - நெத்தலி மீன் மாட்டும் அளவுக்கு சிறிய கண்ணி உள்ள வலை
சோண்வாடு - சோழக்காற்று ..மற்றொன்று வாண்வாடு -வாடைக்காற்று
"தொரத்த பார்த்தா தெரியாதால" -தொரம் என்பது கட்டுமரத்தில் உள்ள இணைத்துக்கட்டப்பட்டுள்ள மரக்கட்டை.
"தொளவ' -மூங்கிலை இரண்டாக பிளந்து துடுப்பாக பயன்படுவது.
"நெத்தலி பழுப்பு " -நெத்தலி கூட்டம்
"மடை" -கடலில் மீன் அதிகமாக காணப்படும் சேறு பகுதி

தருமி said...

மக்கா,
பெருசுக கூட அங்கன கடக்கரை காத்தில உக்காந்து பேசிக்கிட்டிருக்கது போலவே இருக்குவே...ஆனா கதய டக்குன்னு கத்திரி போட்டது மாதிரில்லா முடிச்சிட்டீரு ...

ஜோ / Joe said...

//ஆனா கதய டக்குன்னு கத்திரி போட்டது மாதிரில்லா முடிச்சிட்டீரு//

வாத்தியாரே! இத ஒரு கதையிணே சொல்லிருக்கபுடாதோ..முன்ன பின்ன எழுதி பழக்கமில்லைலா..ஹி..ஹி.

தென்றல் said...

கதை நல்லா இருக்கு, ஜோ!

முதல் முயற்சியா?

ஜோ / Joe said...

தென்றல்,
மிக்க நன்றி.. ஆம்.முதல் முயற்சி தான்.

சிறில் அலெக்ஸ் said...

படிச்சு முடிச்சுட்டு எழுந்து கையிலிருந்த மணலெல்லாம் தட்டிட்டு திரும்ப உக்கார்ந்தேன்.. அங்கே இருந்தாப்லயே இருந்துச்சு.

அருமை. நான் மறந்திருந்த பல வார்த்தைகளை நியாபகப்படுத்தியதுக்கு நன்றி.

தருமி சொன்னது போல கதை டக்குண்ணு முடிஞ்சது. மேலும் கதை ஒரே கருவை கொண்டு வரல.

ஆனா ஊர் பாஷையை சூப்பரா கொண்டுவந்திருக்கீங்க.

நீங்க முக்குவர் எனக் குரிப்பிட்டிருப்பதால் ...உயரக்காரர் பழக்கம் பரதர்களிடமும் இருந்தது. எங்க அப்பாகிட்ட கேட்டா விவரம் தெரியும்.

சூப்பர்.

ஜோ / Joe said...

சிறில்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

சிறுகதை இலக்கணத்தில் இது வரவில்லை என்பது உண்மை தான். கதை எழுதுறதுக்கும் நமக்கும் வெகு தூரம் . இதை கதையில ஒரு பகுதியிண்ணு வச்சுககலாம் போல..ஹி.ஹி.

தருமி said...

//இதை கதையில ஒரு பகுதியிண்ணு வச்சுககலாம் போல..//

அப்போ இப்படி வச்சுக்கலாமா... "தொடரும்" அப்டின்னு போட்டு வச்சுக்குவோம்; தொடருங்க அப்பப்போ..எப்டி போகுதுன்னு பாத்ருவோம். ஏன்னா இப்ப 'உசுரு இருக்கு; உடம்பு இல்லை' அப்டின்றது மாதிரில்லா இருக்கு. உடம்பை தேத்துங்க கொஞ்சம்..சரியா?
இன்னும் உயிரகாரர் அப்டின்றதுக்கு அர்த்தம் புடிபடலையே. ஒண்ணுக்குள்ள ஒண்ணு அப்டின்றது மாதிரியா?

ஜோ / Joe said...

வாத்தியாரே, உயிரக்காரர் -ன்னா நீங்க சொன்ன ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு வச்சுக்கலாம் . ஆனா இந்த வழக்கத்துல இரண்டு சமுதாயத்திலும் ஒரு குடும்பத்துக்கு மாற்று சமூகத்தில் ஒரு குடும்பம் மட்டுமே உயிரக்காரரா இருக்கும் என கேள்விப்பட்டேன் ..ஆக இது ஒரு அங்கீகாரமும் கூட .அதாவது மாற்று சமூகத்தில் உங்களுக்கு பல குடும்பங்களோடு நெருக்கம் இருந்தாலும் ஒரு குடும்பத்துக்கு மட்டூமே உயிரக்காரர் என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கும் .

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives