1999 இறுதியில் நான் சிங்கையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் வேலைநிமித்தமாக கம்போடியா செல்ல வேண்டியிருந்தது .அப்போது அந்த நாட்டைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.ஹிட்லரை விட பன்மடங்கு கொடூரமான போல்பாட் தன் சொந்த நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பகுதியை கொன்று குவித்து 25 ஆண்டுகள் கூட ஆகவில்லை .அந்த போல்பாட் இறந்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது.
உங்களில் பல பேர் அந்த வரலாறை அறிந்திருப்பீர்கள் என்றாலும் இங்கு சுருக்கமாக குறிப்பிடுகிறேன் .இயற்கை வளத்திற்கும்,கலாச்சார பெருமைக்கும் குறைவில்லாத நாடு கம்போடியா.ஒரு காலத்தில் கம்போடியாவில் இருந்த கமேர் பேரரசுவின் கீழ் இன்றைய தாய்லாந்தின் பெரும் பகுதி,தெற்கு வியட்நாம்,லாவோஸ் போன்ற பகுதிகள் அடங்கியிருந்தன.பிற்காலத்தில் அந்த பேரரசு நலிவடைந்து 1863-ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது.பின்னர் 1953-ல் சுதந்திரம் பெற்றது.வியட்நாம் போரின் போது 1965-ம் ஆண்டு அமெரிக்க படைகள் இங்கு குவிக்கப்பட்டு வியட்நாம் போருக்கான தளமாக ஆக்கப்பட்டது.வியட்நாம் ஆதரவு கம்போடிய கம்யூனிஸ்டுகள் அமெரிக்க படைகளை எதிர்த்து சண்டை செய்ய,அமைதி கீழறுக்கப்பட்டது.1975-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் சார்பு கெமர் ரூஜ் (Khmer Rouge) என்ற அமைப்பு திடீரென்று தலைநகர் புனாம் பென் -ஐ கைப்பற்ற புதிய ஆட்சி மலர்ந்தது.
இந்த கெமர் ரூஜ் (Khmer Rouge) -ன் தலைவர் தான் போல்பாட் .கம்போடியாவின் கிராம புறத்தில் பிறந்த இவன் சிறிது காலம் பிரான்ஸில் சென்று பயின்ற போது கம்யூனிஸ்டு சிந்தனை வளர்ந்து ,படிப்பை முடிக்காமலேயே நாடு திரும்பினான்.சீனாவில் நடந்த கம்யூனிஸ்ட் மாற்றத்தைப் போல கம்போடியாவிலும் நிகழ்த்த வேண்டும் என்பது அவனது நோக்கம்.நாடு திரும்பிய போல்பாட் கிராமப் புற படிக்காத இளைஞர்களையும்,இளம் பெண்களையும் ஒன்று சேர்த்து ஆயுதப்பயிற்சி கொடுத்து ஒரு கொரில்லா இயக்கமாக மாற்றினான்.
கிராமத்தில் கஷ்டப்பட்டு உழைத்தும் வறுமையில் வாடும் போது நகரங்களில் படித்தவர்கள் ,வியாபாரிகள் சுகபோகமாக வாழ்வது இவர்கள் கண்ணை உறுத்தியது .உடல் உளைப்பின்றி வாழும் அனைவரும் எதிரிகளாக கொள்ளப்பட்டனர் .1975 ஆண்டு கெமர் ரூஜ் (Khmer Rouge) அமைப்பு புனாம் பென் -ஐ கைப்பற்றிய போது ,அமெரிக்க படைகளால் அமைதியிழந்திருந்த மக்கள் ,இவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள் .கிராமத்தான்கள் சேர்ந்து தம்மை மீட்டு விட்டதாக தெருக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள் .ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நகரத்து மக்கள் ஒட்டு மொத்தமாக நகரத்தை காலி செய்து கொண்டு உடனே கிராமப்பகுதிகளுக்கு விவசாயம் செய்ய புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது .மறுத்தவர்கள் கொல்லப்படனர் .
மருத்துவர்கள் ,பொறியாளர்கள் ,ஆசிரியர்கள் இப்படி அத்தனை பேரும் விவசாய நிலங்களில் துப்பாக்கி முனைகளில் வேலை செய்ய பணிக்கப்பட்டனர் .மறுத்தவர்கள் ,வேலை செய்ய திராணியற்றவர்கள் கொல்லபட்டனர் .நகரங்கள் இழுத்து மூடப்பட்டன. நாணயம் நிறுத்தப்பட்டது .மருத்துவ மனைகள் பூட்டபட்டன .கல்விக்கூடங்கள் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டன.கம்போடியா உலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.
பல இடங்களில் மக்களை ஒன்றாக கூட்டி அவர்களில் மருத்துவர் யார்,பொறியாளர் யார் ,ஆசிரியர் யார் என்று கேட்டு அவர்களுக்கு முக்கியமான வேலைகள் இருப்பதாக அழைத்துச் செல்வார்கள் .பின்னர் அவர்கள் திரும்பியதே இல்லை .புனாம் பென் -னுக்கு புறநகர் பகுதியில் கொலைக்களம் ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் உயிரோடு புதைகுழிகளில் கொல்லப்பட்டனர் .தோண்டத்தோண்ட பிணங்களில் மண்டை ஓடுகள் இருக்கும் அந்த பகுதி Killing Field என்று அழைக்கப்படுகிறது .இப்போது சில மண்டை ஓடுகளை எடுத்து பல மாடி கோபுரத்தில் காட்சிப்பொருளாக வைத்துள்ளனர்.
இப்படியாக 4 வருடங்கள் நீடித்த இந்த அராஜகத்தில் 10 லட்சத்திற்கு மேல் கொல்லப்பட்டனர் .அவர்கள் பெரும் பாலும் படித்த ஆண்கள் .1979 -வியட்நாம் படைகள் கம்போடியாவில் நுழைந்து கெமர் ரூஜ் (Khmer Rouge) -ஐ வென்றது கமெர் ரோக்(Khmer Rouge) தாய்லாந்து அருகிலுள்ள அடர்ந்த காடுகளில் தஞ்சம் புகுந்தது .ஒரு காலத்தில் நாட்டின் பிரதமராக இருந்து இத்தனை படுகொலைகளையும் செய்த போல்பாட் கடைசி வரை எந்த தண்டனையும் இன்றி ,1998-ல் காட்டிலேயே மரணமடந்தான் .அவனுடைய இறுதி காரியத்தை செய்தது அவன் மனைவி மட்டும் தான்.
சுத்தமாக கல்வி ,வர்த்தகம்,உள்நாட்டு கட்டமைப்பு என்பவை முற்றாக துடைத்தெறியப்பட்ட ,ஆண்களில் பெரும்பகுதி கொல்லப்பட்ட ஒரு நாட்டின் நிலையை நினைத்துப்பாருங்கள் .இன்று கிட்டத்தட்ட அனைத்து குடுப்பங்களிலும் ஆண்களை இழந்து ஒரு தலைமுறை தான் ஆகியிருக்கிறது .பெண்களில் 30% -க்கு மேல் எய்ட்ஸ் நோய் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.30 ஆண்டு கால வடுக்கள் இன்னும் மறையவில்லை.மக்களின் முகங்களில் இனம்தெரியாத ஒரு சோகம்,விரக்தி கண்டுகொள்ளமுடிகிறது. உள்நாட்டு சண்டைகளும் ,ஆட்சி அதிகார மோதல்களும் ,ஊழலும் இன்னும் நீடிக்கின்ற இந்த நாடு ,மண்டை ஓடுகளில் நடுவிலிருந்து எழுந்து வருவதற்கு மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது .நகரங்கள் ஓரளவு வளர்ந்து விட்ட போதிலும் ,கிராமங்களில் வறுமை தாண்டவமாடுகிறது .என் கண் முன்னரே துப்பாக்கிச் சண்டையை பார்த்திருக்கிறேன் .இந்தியாவோடு நீண்ட கலாச்சார தொடர்புடைய நாடு கம்போடியா.ஒரு காலத்தில் இந்துக் கலாச்சாரம் இங்கு தழைத்தோங்கியிருக்கிறது .12-ம் நூற்றாண்டில் கட்டபட்ட அங்கோர் வாட் என்னும் உலகின் மிகப்பெரிய ,பழமையான கோவில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது .இது இரண்டாம் சூரியவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது .அடந்த காடுகளுக்கு நடுவில் சுமார் 40 க்.மீ சுற்றளவில் ஆங்காங்கே இப்படி பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. பொதுவாக அங்கோர் என அழைக்கப்படுகிற இந்த பகுதியில் அங்கோர் வாட் என்பது முதன்மையான கோவில் .கம்போடிய தேசியக்கொடியில் இதன் உருவம் இடம் பெற்றுள்ளது .இது தவிர சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரம்மாண்டமான கோவிலும் ,மன்னர்களுக்காக கட்டப்ட்ட பல கோவில்களும் ,இப்படி சுமார் 30 கோவில்கள் உள்ளன .
இவை அனைத்தையும் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அங்கோர் வாட் -டின் இன்றைய நிலை சற்று புத்த கோவிலாக மாற்றம் கண்டிருந்தாலும் ,அது விஷ்ணு-வுக்காக கட்டபட்ட கோவில் தான் .பிற்காலத்தில் மன்னர் பரம்பரை புத்த மதத்தை தழுவியதாலும் ,தாய்லாந்தின் கட்டுப்பாட்டில் இப்பகுதி சிறிது காலம் இருந்ததாலும் ,இதனை ஒரு புத்த ஆலயமாக மாற்றும் முயற்சிகள் நடந்திருப்பது கண்கூடாக தெரிகிறது .இந்து கடவுளர்களின் சிலைகளில் தலை மட்டும் அகற்றப்பட்டு புத்த தலைகள் வைக்கப்பட்டுள்ளன.ஆனால் கோவிலின் நீண்ட சுவர்களில் சிற்ப ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ள இராமாயணக்கதைகள் ,பார்க்கடலை கடைந்த கதைகள் அப்படியே இருக்கின்றன.
இது தவிர பெரிய சிவன் ஆலயம் ஒன்று இருக்கிறது .நான் அங்கு சென்ற போது அங்கிருந்தவர் எனக்கு அதை விளக்க முற்பட்டார் .சிவன் ,பார்வதி என்று ஒவ்வொன்றாக காட்ட ,நான் 'திருநெல்வேலிக்கே அல்வாவா?' -என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க ,அவருக்கு புரிந்து "ஓ! நீங்கள் இந்தியர் .உங்களுக்கு தெரியாததா?" -என்று சிரித்தார் .மகிழ்ச்சியாக இருந்தது .நான் ஒரு இந்து அல்ல என்ற போதும் இவற்றை என் நாட்டு கலாச்சார பரவலின் அடையாளங்களாகத் தான் பார்த்தேன் .பெருமையாக இருந்தது.
இன்றும் இராமயணம் தான் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படும் இதிகாசம் .பிள்ளையார் இங்கு மிகவும் பிரபலம் .இப்போது முழுக்க முழுக்க புத்த நாடாக இருந்தாலும் இந்து கலாச்சாரம் ,பழக்க வழக்கங்கள் கிராமப்பகுதிகளில் தொடர்கின்றன.கல்யாணத்திற்கு வாழை மரம் கட்டி பந்தல் அமைப்பது முதல் பெயர்களில் கூட இந்திய வாடை இருக்கிறது .இவர்களின் தேசிய மொழியாம கெமர் மொழி எழுத்து வடிவம் இந்திய மொழிகலின் சாயலில் இருக்கிறது,பல வார்த்தைகளும் வடமொழிச்சொற்களாக இருக்கின்றன.இங்குள்ள ஒரு நகரத்தின் பெயர் ரத்னகிரி .ரத்தினக்கற்கள் கிடைக்கும் மலைப்பகுதி என்பதை சொல்லத்தேவையில்லை.
மக்கள் நட்பு பாராட்டுபவர்களாகவே இருக்கிறார்கள் .அதிலும் இந்தியராக இருந்தால் கூடுதல் புன்னகை .சாதாரண மக்களும் இந்தியாவோடு உள்ள பண்டைய கலாச்சார தொடர்பை அறிந்திருக்கிறார்கள் .சில நேரம் அலுவலக வேலையாக நான் நடந்து செல்லும் போது ,பலரும் சினேகமாக சிரிப்பார்கள் .நகரப்பகுதிகள் இப்போது சீன தாக்கத்தினால் கிராமங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது .நகரங்களில் மஞ்சள் நிற மேனியும் ,சாப் ஸ்டிக்கில் சாப்பிடிவதுமாகத் தான் பலர் இருக்கிறார்கள் .ஒரு முறை நான் கிராமப்பகுதிகளுக்கு சென்ற போது ,தவறி இந்தியாவுக்கு வந்து விட்டோமோ என்று நினைத்தேன் .ஆற்றுக்கரைகளில் பெண்கள் மார்போடு கச்சை கட்டிக்கொண்டு குளித்துக்கொண்டிருக்க ,ஆண்கள் மீசை வைத்து,லுங்கி அணிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.தட்டில் சோறு போட்டு நம்மைப்போல கையாலேயே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் .மேனி நிறம் கூட ஓரளவு கறுத்திருந்தது .ஆகா ..நகரத்தில் நம்மைப்பார்த்து பலரும் சிரித்ததற்கு இதுவும் காரணமாக இருக்குமோ..பாதி பேர் நான் இந்தியன் என்பதற்காக சிரிக்க ,மீதி பேர் "இத பார்டா .நம்மூர் கிராமத்தான் கையில கம்ப்யூட்டரோட டிப் டாப்-ஆ போறத" -அப்படீன்னு சொல்லி சிரிச்சிருப்பாங்களோ?
Thursday, December 01, 2005
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
பலமுறை கம்போடியா, போல் பாட் என்ற சொற்களை செய்திகளில் மட்டுமே கேட்டுவந்த எனக்கு, நேரடி அனுபவத்தோடு நல்ல பதிவு கொடுத்துள்ளீர்கள். உங்களிடம் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது. இந்த நட்சத்திரவாரம் மட்டுமல்லாமல் தொடர்ந்து வாரமொரு பதிவாவது கண்டிப்பாக எழுதுங்கள். பாராட்டுக்கள்.
பி.கு:
நான் இங்குள்ள ஊடகங்களில் கேட்டபடி:
லாவேஸ் - லாவோஸ்
கமெர் ரோக்(Khmer Rouge) - கெமர்ரூஜ்
அன்பு,
மிக்க நன்றி.
லாவோஸ் -தட்டச்சுப்பிழை
கமெர் ரோக் -எனது பிழை.திருத்தி விடுகிறேன்.
அட. இதப் பார்றா, கிராமத்தான் இப்படியெல்லாம் எழுதறதை:-))))))))
ஜோ! அருமையான விவரங்கள் அடங்கிய பதிவு.
பி.கு: தப்பா நினைக்காதீங்க.ஸ்மைலி போட்டுருக்கேன்.
நன்றி துளசியக்கா.
உங்களைப் போய் தப்பா நினைப்பேனா!
இன்னொரு அருமையான பதிவு ஜோ.
கம்போடியா நாட்டில் நடந்த அக்கிரமங்களை அப்போதே பத்திரிகைகளில் படித்திருந்தாலும் I could revisit the holocaust once again thro' your post. அதில் பாதிக்கப்பட்ட ஒருவரைப்போல் மிகுந்த ஈடுபாட்டுடன் உணர்ச்சி பூர்வமாய் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
கம்போடியாவிலுள்ள இந்து கோவில்களைப்பற்றி வெகு வருடங்களுக்கு முன்னர் National Geographyபுத்தகத்தில் அருமையா புகைப்படங்களுடன் வந்திருந்தது. படித்திருக்கிறேன்.
உங்களுடைய புகைப்படங்களும் அருமை. வாழ்த்துக்கள் ஜோ.
//கிராமத்தில் கஷ்டப்பட்டு உழைத்தும் வறுமையில் வாடும் போது நகரங்களில் படித்தவர்கள் ,வியாபாரிகள் சுகபோகமாக வாழ்வது இவர்கள் கண்ணை உறுத்தியது.//
சரி தானே! சில வேளைகளில் நம் நாட்டு கிராமப் புற சகோதரர்களை காணும் போது எனக்கும் இந்த சிந்தனை வந்ததுண்டு. அவர்கள் மட்டும் விவசாயம் செய்யாமல் அனைவரும் நகர வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு நகரங்களுக்கு வந்தால் நாட்டின் கதியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் அதற்காக, "உடல் உளைப்பின்றி வாழும் அனைவரும் எதிரிகளாக கொள்ளப்பட்டனர்" இப்படியா? கோபம் வெறுப்பாக மாறியிருக்கிறது!
நல்ல பதிவு சகோதரரே! ஒரே பக்கத்தில் ஒரு ஜனதையின் நெஞ்சில் உறைந்து போன மாறா வடுவின் சோக பக்கங்களை மிக எளிய முறையில் அறியத் தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள் இன்னும் நல்ல பதிவுகளுடன்!
அன்புடன் இறை நேசன்.
கம்போடியாவின் நிலை வருத்தத்தைத் தருகிறது. அந்த நாடு முன்னேற வேண்டுவோம்.
அதே நேரத்தில் நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் சொகுசாக உண்டு வாழ்கின்றவர்கள் என்பதும் தவறு. நகர்ப்புறங்கில் வேலை செய்கின்றவர்களுக்கு அவரவர் கஷ்டங்கள் உண்டு.
இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
ஜோசப் சார்..நன்றி!
இறைநேசன்,
கடைசி வரை போல்பாட் இதற்காக வருந்தவில்லை.மாறாக'நாட்டு நல்லதுக்கு தான் நான் செய்தேன்..யாரும் அதை புரிந்து கொள்ளவில்லை' என்றே சொல்லியிருக்கிறார்..சில நேரங்களில் நோக்கங்கள் நியாயமாக இருந்தாலும் ,வழிமுறைகள் அந்த நோக்கத்தின் அடிப்படையையே அழித்து விடுவது உண்டுதானே ?அது தான் இங்கு நடந்தது.கருத்துக்கு நன்றி
//அதே நேரத்தில் நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் சொகுசாக உண்டு வாழ்கின்றவர்கள் என்பதும் தவறு. //
ராகவன்,
அது என்னுடைய கருத்தல்ல .போல் பாட்டின் கருத்து.
உங்கள் கருத்துக்கும் நன்றி!
அன்பின் ஜோ,
அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள். முன்னர் நா.கண்ணன் அவர்கள் அங்கோர்வாட் ஆலயத்தினைப் பற்றிய பயணக் கட்டுரை ஒன்றைத் தந்தார். அதேபோல இதுவும் பயனுள்ளதாக அமைந்தது.
ஜோ,
பிற நாடுகளை விஜயம் செய்பவர்கள் அதன் சுற்றுலா பகுதிகளையே பேசுவது போலன்றி அந்த நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை சொல்லியது நன்றாக உள்ளது. கம்போடியாவின் நிகழ்ச்சிகளை மேலெழுந்த வாரியாக பேப்பர்களில் படித்திருந்தாலும் இப்போ முழுமையாக மனதில் பதிந்து விட்டது.
//இவற்றை என் நாட்டு கலாச்சார பரவலின் அடையாளங்களாகத்தான் பார்த்தேன்// இதுபோன்ற விளக்கங்களையும் வார்த்தைகளையும் அடிக்கடி பயன்படுத்தவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற பதிவுகள் அடுத்துவரும் வாரங்களிலும் தொடர்ந்து எழுதுங்கள் ஜோ!
நல்ல பதிவு ஜோ
நன்றி மூர்த்தி.நா.கண்ணன் அவர்கள் பதிவையும் வாசித்திருக்கிறேன்.
தாணு
//இதுபோன்ற விளக்கங்களையும் வார்த்தைகளையும் அடிக்கடி பயன்படுத்தவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். //
கண்டிப்பாக பயன்படுத்துகிறேன்.உங்கள் கருத்துக்கு நன்றி.
சுதர்சன்..நன்றி!
நல்லாச் சொன்னீங்க கடற்புறத்தான்...
சர்வாதிகாரத்தின் கோரப் பிடியில் வீழ்ந்த எந்த நாடும் தன்னை மீறி அந்த வடுக்களை மறக்க நாளாகும்.
ஆண்டவன் அந்த சக்தியை அந்த மக்களுக்குத் தரட்டும்.
ஜோ அருமையான கட்டுரை. 98-ம் ஆண்டின் இறுதியிலும் 99-ம் ஆண்டின் இறுதியிலுமாக இருமுறை நானும் கம்போடியா செல்லும் வாய்ப்பு கிட்டியது. இதே மண்டை ஓடுகளை கையில் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்கள். அத்தனை மக்களின் மண்டையோடுகளும் ஒரு கண்காட்சிப் பொறுளாகத்தான் வெளிநாட்டவர்களால் பார்க்கப்பட்டது. குவிக்கப்பட்டிருந்த மண்டையோடுகளில் வெளிநாட்டவர்களின் மண்டையோடும் அடக்கம்.
கம்போடியாவின் தலைநகர் ப்னோம்பெங்க் (சரிதானே?!) - அங்கே இலங்கைத் தமிழர் ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றும் இருந்தது. (கடையின் பெயர் தான் மறந்து விட்டது). புகைப்படங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். அடுத்த வாரங்களில் கிடைத்தவுடன் நானும் பதிகிறேன்.
ஒரு சிறு திருத்தம்...இப்போது இந்த மண்டையோடு 'கண்காட்சி' கம்போடியாவில் இல்லை என்று கேள்விப்பட்டேன்.
//லாவோஸ் -தட்டச்சுப்பிழை//
மன்னிக்கவும் ஜோ. லாவோஸ் என்பது தான் சரியான உச்சரிப்பு. ஒரு காலத்தில் பயங்கர பணக்கார நாடக திகழ்ந்த லாவோஸ் நாட்டில் இன்று பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.(கம்யூணிஸ்ட் ஆட்சி தான் காரணம் என்று கூறினால் 'தோழர்கள்' கோபித்துக் கொள்வார்கள்.) அந்தக்காலத்தில் பல தமிழர்கள் லாவோஸ் சென்று லட்ச லட்சமாக சம்பாதித்தாக கூறுவார்கள். இன்றும் லாவோஸில் பல தமிழர்கள் வசிக்கிறார்கள். லாவோஸின் தலைநகரில் மூன்று நான்கு இடங்களில் இருக்கும் 'நஜீம் ரெஸ்டாரெண்ட்' என்ற தமிழரின் கடை நம்மூர் சரவண்பவனைப் போன்று அங்கு மிக பிரசித்தம்.
ம்...நியாபகத்திற்கு வந்து விட்டது. கம்போடியாவிலுள்ள ஈழத் தமிழரின் ரெஸ்டாரெண்ட் பெயர் : 'ரெனி ரெஸ்டாரெண்ட்' - ஆங்கிலத்தில் 'ராணி' என்று எழுதியிருந்ததாக நினைவு.
மாயவரத்தான்,
வருகைக்கு நன்றி.
ரொம்பவும் நெருங்கி வந்து விட்டீர்கள் .'ராணி ரெஸ்டாரண்ட்' எனக்கு நன்றாகவே தெரியும்.அதை நடத்துவர் பெயர் தான் ரெனி.கம்போடியாவிலிருக்கும் போது தினமும் அங்கே வருவேன் .
//இதே மண்டை ஓடுகளை கையில் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்கள்.//
நண்பரின் வற்புறுத்தலால் நானும் ஒன்று எடுத்தேன்.
//இப்போது இந்த மண்டையோடு 'கண்காட்சி' கம்போடியாவில் இல்லை என்று கேள்விப்பட்டேன்.//
3 வருடங்களுக்கு முன்புவரை இருந்தது .இப்பொதும் இருக்கிறது என்று தான் நினைக்கிறேன்.
//லாவோஸ் என்பது தான் சரியான உச்சரிப்பு.//
சரி தான் .நான் முதலில் தவறுதலாக லாவேஸ் என்று எழுதியிருந்ததை அன்பு அவர்கள் சுட்டிக்காட்ட பின்னர் திருத்தினேன்.
மாயவரத்தான்,
நீங்கள் அங்கோர் வாட் செல்லவில்லையா?
இந்து இல்லை என்றாலும் இந்து மதம் சம்பந்தப்பட்ட பல தகவல்களை அழகாக கூறினீர்கள். ஒரு தமிழனாக உங்களை உணர்ந்த நான் இந்தியனாக பெருமையுடன் உணர்கிறேன்..
பிரதீப் ,முத்து ..மிக்க நன்றி!
்ஜ் ஜோ,
இன்று வீடு வரும்வழியில் நூலகத்தில் ்Beyond Divine Doors என்ற புத்தகம் பார்த்தேன். ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட விழா மலர். அதில் தென்கிழக்காசியாவில் இந்துமதம் பற்றிய சிறு வராலாறில் ஆரம்பித்து - அங்கோர்வாட் ஆலயத்தின் படத்துடன், சிவ, விஷ்ணு, இரமாயணம் போன்ற பல செய்திகள் வந்திருக்கிறது. ஆங்கிலத்திலும், தமிழிலும்.
ஜோ
அருமை. கம்போடியாவில் AIDS விழிப்புணர்வுக்காக இப்போது நடைபெறும் முன்னேற்பாடுக, வீப்புணர்வை தூண்ட செய்யப்படும் செயல்கள், வியட்நாமிய போர்வீரர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்று சமீபத்தில் தான் ஒரு கட்டுரைகள் தொகுப்பை படித்திருந்தேன். ஐ நா சபை மொசம்பிக், கென்யா, கம்போடியா நாடுகள் AIDsவிழிப்புணவு பரப்ப துரிதமாக செயல்படுகிறது.
//மாயவரத்தான்,
நீங்கள் அங்கோர் வாட் செல்லவில்லையா?//
இல்லை ஜோ...அந்த பாக்கியம் எனக்கு (இன்னும்) கிட்டவில்லை. இரண்டு முறையும் நான் கம்போடியாவில் சுமார் மூன்றே நாட்கள் தான் தங்கியிருக்க முடிந்தது. அடுத்த முறை பார்க்கலாம்.
கடந்த வார குமுதம் இதழில் தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் தனது கம்போடிய விஜயத்தை பற்றி எழுதியிருந்ததை படித்தீர்களா?
மீண்டும் நல்லதொரு பதிவு ஜோ,
10 லட்சம் பேரை கொன்றவனுக்கு முதுமையில் இயற்கையான மரணம்! ஆண்டவனின் கணக்கு எங்கேயோ இடிக்குது! :(
ராகவனைக்கேட்டால் நிச்சயம் பதில் இருக்கும்!!
என்னமோ போய்யா ஜோ, இப்பிடி ஒவ்வோர் பதிவையும் சிறப்பா எழுதி கலக்குறீங்க.. படம்லாம் வேற.. எல்லாம் வேற பாரட்டிட்டாங்க.. ஹூம்.. இந்தாங்க என் பாராட்டு :-)
வாழ்த்துக்கள் !
******
கம்போடியான்னா போல்பாட் மட்டும்தான் தெரியும், என்னய்யா கோயில் அது இதுன்னு சொல்றீங்க.. ஆமா அங்கனயும் நம்மூரு மாதிரி டீக்கடையெல்லாம் உண்டா...
******
உங்க முழுப்பெயர் என்னய்யா, புரொஃபைல்ல கூட போடலை..
எந்த வருசம் ஜோஸப்ல படிச்சீங்க ?
******
எல்லாம் ரொம்ப பாரட்டுறாங்களேன்னு ரொம்ப ஆடாதய்யா :-))
நட்சத்திர வாரம்னா இப்படித்தான் பாரட்டுவோம் (ஊக்கப் படுத்துறோம்ல)
ஆனா ஏதாவது தப்பா எழுதுனா பிரிச்சி எடுத்துருவோம் :-) நல்லா எழுதறய்யா.. தொடர்ந்து கலக்குங்க :-)
*******
இந்த பின்னூட்டம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா ? :-))
நிறைய எழுதுங்கள்; அடிக்கடி எழுதுங்கள் என்று நானெல்லாம் சொன்னால் கேட்கிறீர்களா? அதுதான் இப்படி உங்களை இழுத்துப்போட்டு எழுதவைத்துள்ளார்கள். உங்கள்மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவிற்கு நல்ல பதிவுகள் இந்த வாரத்தில்.
இந்த வாரத்தோடு இந்த வரத்து நின்று விட வேண்டாம்; சரியா?
அழகான பயண கட்டுரை ,வாழ்க்கை முறை,வரலாறு ரொம்பவும் ரசிக்கவைத்தது உங்கள் பதிவு
சந்தோஷம் நண்பரே!
அருமையான வரலாற்றுப்பதிவு.
வாழ்த்துக்கள் ஜோ
Nice writing
நல்ல பதிவு ஜோ..
--
லாவோஸ் தனி நாடென்பதே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தெரியும். ஒருவரை சந்தித்தபோது அவர் லாவோஸ் நாடு என்றார். ஓ கம்போடியாவா என்று கேட்டதற்கு மூக்குமேல் கோபம் வந்து கம்போடியா மற்றும் லாவோஸ் வரலாறு லெக்சர் கொடுத்துவிட்டு போனார். அமெரிக்கனாயிருந்தால் எப்படியிருக்குமென்று அன்றுதான் புரிந்தது எனக்கு. :)
நல்ல பதிவு ஜோ..நன்றி.
சோம்பேறி பையன்,
//உங்க முழுப்பெயர் என்னய்யா, புரொஃபைல்ல கூட போடலை..//
தமிழ்மணம் வாசகர் பக்கத்துல நட்சத்திர விபரம் இருக்கே.
//எல்லாம் ரொம்ப பாரட்டுறாங்களேன்னு ரொம்ப ஆடாதய்யா :-))//
நான் எங்கையா ஆடுறேன் .நானே என்ன எழுதுறதுண்ணு ஆடிப்போய் இருக்கேன்.
//ஆனா ஏதாவது தப்பா எழுதுனா பிரிச்சி எடுத்துருவோம் //
சரிங்கண்ணா .- வோட் போடுறது நீங்க தானா? (சும்மா தமாசு)
தருமி,
//இந்த வாரத்தோடு இந்த வரத்து நின்று விட வேண்டாம்; சரியா?//
முயற்சி செய்கிறேன் .உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
சிங்.செயக்குமார்,கல்வெட்டு,கிறுக்கன்,ராமநாதன்,தங்கமணி..அனைவருக்கும் நன்றி!
இளவஞ்சி,
நன்றி..ராகவன் பதில் சொல்கிறாரா பார்ப்போம்
பத்திரிக்கைத்தரத்தில் ஒரு கட்டுரை..
பாராட்டுகள்..
நான் போக விரும்பும் நாடுகளில் முதல் மூன்று இடங்களில் கம்போடியா இருக்கிறது.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ஜோ!
-மதி
தருமி எழுதியது:
நிறைய எழுதுங்கள்; அடிக்கடி எழுதுங்கள் என்று நானெல்லாம் சொன்னால் கேட்கிறீர்களா? அதுதான் இப்படி உங்களை இழுத்துப்போட்டு எழுதவைத்துள்ளார்கள். உங்கள்மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவிற்கு நல்ல பதிவுகள் இந்த வாரத்தில்.
இந்த வாரத்தோடு இந்த வரத்து நின்று விட வேண்டாம்; சரியா?
தருமி, நேரில் கண்டதுபோல ரொம்பச் சரியாகச் சொல்லிட்டீங்க..
ஜோ'வை மக்கள் இந்த வாரம் முடிஞ்சபிறகும் படுத்தணும்னு நானும் விரும்புறேன். ;)
-மதி
ஜோ அருமைய்யா
முழு உணர்வோட ஒன்றி பதிவு செஞ்சிருக்கீங்க
தொடர்ந்து எழுதுங்க
தாமதமானாலும் படிச்சிருவோம்.
சீரியசான பதிவில் பாருங்க
///"இத பார்டா .நம்மூர் கிராமத்தான் கையில கம்ப்யூட்டரோட டிப் டாப்-ஆ போறத" -அப்படீன்னு சொல்லி சிரிச்சிருப்பாங்களோ?///
நகைச்சுவை உணர்வையும் அள்ளித் தெளிக்கிறீங்க கனமான மனசோட நம்ம வாசகருங்க போகக்கூடாதுன்னு.
இராகவன் இனி கனவெல்லாம் மண்டையோடு வருமோ???
கம்போடியாவைப் பற்றி அழகானத் தமிழில் விளக்கியதற்கு நன்றி. போல் பாட் பற்றிய தகவலுக்கும் நன்றி.
அல்வா சிட்டி சம்மி,மஞ்சூர் ராசா..மிக்க நன்றி!
தகவல்கள் எனக்கு புதிது ஆனால் சோகம்.
வருத்தமாக உள்ளது.. தற்போது நிலைமை கொஞ்சம் மாறி இருக்கும் என்று நினைக்கிறேன்
அங்கோர்வாட் கோயிலைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்..அதை உங்கள் வார்த்தைகளில் காண்பதில் இன்னும் மகிழ்ச்சி...!
அங்கோர்வாட்டின் வடிவமைப்பும் , பிரம்பானனின் வடிவமைப்பும் சற்றேறக்குறைய ஒத்துப்போகிறது என்றே நினைக்கிறேன்..பார்ப்போம்!
Post a Comment