Wednesday, December 14, 2005

தமிழக அரசியல் - கேளிக்கை

சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் நீண்ட கால தொடர்பு இருப்பதாலோ என்னவோ ,தமிழக அரசியல் வெகு காலமாக தனி மனித செல்வாக்கை மையமாக வைத்தே நடை போடுகிறது .நமது பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் ,அங்கே ஆட்சி அமைப்பதில் தனிமனித செல்வாக்கை விட கட்சிகளின் செல்வாக்கு தான் முதன்மை பெறுகிறது .ஆனால் தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் தலைவருக்காகத் தான் அந்த கட்சிக்கு ஓட்டளிக்கின்றனர் .தி.மு.க வுக்கு ஓட்டளிப்பவர்களில் பாதி பேர் கலைஞர் வரவேண்டும் என்றும் ,இன்னொரு பாதி பேர் ஜெயலலிதா வரக்கூடாது என்றும் வாக்களிக்கின்றனர்.அதே போல அ.தி.மு.க வின் ஓட்டுவங்கி ஜெயலலிதா ஆதரவு ,கலைஞர் எதிர்ப்பு என்ற இரண்டு காரணிகளை உள்ளடக்கியது.இரண்டு பக்கத்திலும் ஒரு பெரும் கூட்டம் "அவருக்கு இவர் பரவாயில்லை' என்ற நிலைப்பாட்டிலேயே ஓட்டளிக்கின்றனர்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் ,மக்கள் மதிக்கின்ற பலருக்கு ஓட்டளிப்பதில்லை .முதல் இரண்டு நிலைகளுக்கு கீழே இருக்கும் கட்சிகளின் சில தலைவர்கள் மேல் பலருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் அவை ஒட்டுகளாக மாறுவதில்லை .காரணம் போட்டி என்பது முதல் இரண்டு பேருக்குத் தான் என்ற தோற்றம் வரும் போது ,வீணாக தன் ஓட்டை வெற்றி வாய்ப்பில்லாத ஒருவருக்கு போடும் போது ,அதன் மூலம் முதலிரண்டு நிலைகளில் தான் அதிகம் வெறுக்கும் கட்சி சாதகம் பெற்று விடுமோ என்ற அச்சத்தில் ,முதலிரண்டு கட்சிகளில் தான் குறைவாக வெறுக்கின்ற கட்சிக்கு ஓட்டளிக்கிறார்கள்.

பொதுவாக இந்த ஆட்டுமந்தை மனநிலை தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது .வச்சா குடுமி ..அடிச்சா மொட்டை ! "நீ ஏம்பா ரஜினி ரசிகனா இருக்க?" -ன்னு கேட்டா "எனக்கு ரஜினி ஸ்டைல் பிடிக்கும்" இப்படி எதாவது சொல்லாமல் "அவர் படம் தானே ஓடுது .அதான் அவர் ரசிகன்' என்று பலர் சொல்லுவது போல ,பலர் இங்கே வெற்றி பெறுகின்ற பக்கம் சாய்வதை ,எங்கே ஆரவாரம் செய்ய வாய்ப்பிருக்கிறதோ ,எங்கே இருந்தால் தான் வெற்றி பெற்ற பக்கம் இருந்தேன் என்று சொல்லி மற்றவரை கேலி செய்து சுகம் காண முடியுமோ ,அங்கே கண்ணை மூடிக் கொண்டு சாய்கிற மனநிலை சினிமா போலவே ,அரசியலிலும் இருக்கிறது .
ஏனென்றால் இங்கு அரசியல் கூட ஒரு கேளிக்கை போலத் தான் இருக்கிறது .

கண்ணியமாக ,அமைதியாக நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் மதிக்கப்படுகிற போதும் ,தேர்வு செய்யப்படுவதில்லை ."அன்பே சிவம்' மிக நல்ல படம் என்று நானறிந்த எல்லோரும் சொல்கிறார்கள் .ஆனால் அது தியேட்டரில் சென்று பார்ப்பதற்கல்ல .அதிலே விசிலடிக்க ஒன்றுமில்லை.'சிவகாசி' எனக்கு எப்படி சகிக்கவில்லையோ ,அதுபோல நானறிந்த பல நண்பர்களுக்கும் அவ்வாறே ,ஆனல் அது வசூலில் தூள்பறத்துகிறது .அது போல 'நல்ல கண்ணு'கள் இருக்கலாம் .நல்ல மனுசன் தான்னு எல்லோரும் சொல்லுறாங்க .ஆனா ஒரு கெத்து வேணாங்களா ? தலைவர்னா ஒரு மவுசு வேணாமா ? அவர் கலர பாத்து நாம வாய் பிழக்க வேண்டாமா ?ஒரு கலர்புல்லா இருந்தா தானே நல்லா இருக்கும் ,அப்படின்னு தான் சாதாரண மக்கள் நினைக்குறாங்க .
ஒரு கட்சியின் பலமே ,அது எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறது ,அதன் தலைவர் கைது செய்யப்படும் போது எத்தனை பஸ் கண்ணாடிகள் உடைகிறது என்பதை பொறுத்து தான் மக்களால் எடை போடப்படுகிறது எனும் போது ,அரசியல் வாதிகள் அதற்கு தகுந்தபடி நடந்து கொள்கிறார்கள்.அவ்வாறு நடந்து கொள்ளாத அரசியல் வாதிகள் பலமில்லாத ,தலைவருக்குரிய கவர்ச்சி இல்லாதவராக ,இன்னும் சொல்லப்போனால் கேலிக்குரியவராக ஆக்கப்படுவது சாதாரணமாக நடக்கிறது .ஆக இங்கு பலமிக்க அரசியல்வாதியாக வளருவதற்கு மசாலா சினிமா போல ,மசாலா அரசியல் செய்தால் தான் ரசிகர்கள் இருப்பார்கள் .இல்லையென்றால் கண்ணியமான சொங்கி அரசியல் வாதிக்கு தொண்டனாக இருப்பதில் என்ன சுவாரசியம்?

உதாரணத்துக்கு பா.மா.க வை எடுத்துக் கொள்ளுவோம் .நான் பிறந்து வளர்ந்த குமரி மாவட்டத்தில் "பா.ம.க கிலோ என்ன் விலை?' என்று கேட்கும் நிலை தான் .அதனால் எனக்கு எந்த சார்பும் கிடையாது.ராமதாஸ் காந்திய வழியில் நடந்து கொண்டிருந்தால் ,அவரைப்பற்றி யாரும் இங்கு பேசப்போவதும் இல்லை ,பாராட்டப் போவதும் இல்லை .அவர் தனது துவக்க கால போராட்ட முறைகளில் மசாலா தூவினார் .ரசிகர்கள் கிடைத்தார்கள் .அவரை எதிர்க்கும் கூட்டம் அதிகமானது .எதிர்ப்பு கூடக் கூட பிரபலமும் கூடுகிறது .பிரபலம் கூடக் கூட ரசிகர்களும் கூடுகிறார்கள் (இதில் நான் ராமதாஸ் அவர்களின் அரசியல் தேவை ,அவர் சார்ந்த சமுதாய எழுச்சியின் அவசியம் பற்றி பேச வரவில்லை .அதில் எனக்கு வேறு கருத்துக்கள் உண்டு .இங்கே வழிமுறைகள் பற்றியே பேசுகிறோம்)

வைக்கோவை எடுத்துக்கொள்வோம் .ஈழத்தமிழர் விடயத்திலும் ,கலைஞரோடு குலாவுவதிலும் பலருக்கு அவர் மேல் கருத்து வேற்றுமை இருக்கலாம் .ஆனால் அவர் குறைந்த பட்ச கண்ணியமாவது கடைபிடிக்கிற அரசியல் வாதி என்பது என் கருத்து .தமிழகத்தில் குறிப்பிடத் தக்க அளவு இளம் தொண்டர்களை கொண்டிருக்கின்ற தலைவர் அவர் .ஓராண்டுக்கு மேலாக அவர் சிறையிலடைக்கப்பட்ட போதும் ,நடைபயணங்கள் நடத்திய போதும் ,அவர் காட்டிய கண்ணியம் போற்றுதலுக்குரியது .தன்னிடமுள்ள இளைஞர் சக்தியை அவர் இதுவரை வன்முறைக்கு தூண்டி விட்டதில்லை .அவர் நினைத்திருந்தால் அவரது தொண்டர்களை பஸ் கண்ணாடியை உடைக்க தூண்டி தன் பலத்தை காட்டியிருக்கலாம் .ஆனால் அவ்வாறு செய்யவில்லை .அவ்வாறு அவர் கண்ணியம் காத்ததால் அவர் அடைந்த பலன் என்ன? "நடுநிலை"(?) சோ கூட இந்த கண்ணியத்தை பாராட்டியதில்லை .மாறாக அவரது தொண்டர்கள் அமைதி காத்ததை மறைமுகமாக அவரது பலமின்மையாக சுட்டிக்காட்டுவதும் , இயல்பான அவரது நெகிழும் குணத்தை கிண்டல் செய்து ,அவர் அழுமூஞ்சி என்ற ரீதியில் கேலி செய்வதும் தான் நடைபெற்றது .

ஜெயலலிதாவின் எதேச்சகாரமும் ,தான் என்ற எண்ணமும் ,வரட்டு பிடிவாதங்களும் கூட அவரது துணிவாகவும் ,தலைமைக்கு தேவையான உறுதியாகவும் அறிவு ஜீவிகளால் புகழப்படுகிற சூழ்நிலையில் ,கண்ணியமும் ,பொறுமையும் ,நல்லிணக்க முறைகளும் ஒரு அரசியல் வாதிக்கு கவனத்தையும் ,செல்வாக்கையும் பெற்றுத்தருவதற்கு பதிலாக ,பலகீனமாகவும் ,எள்ளலை சம்பாதித்து தருவதாகவும் இருக்கின்ற ஒரு சூழலில் ,ஆர்ப்பாட்ட அரசியல் ஒரு சாராரின் எதிர்ப்பை (அதில் பலர் ஓட்டே போடுவதில்லை) பெற்றுத்தந்தாலும் ,துடிப்பான அரசியல் வாதி என்ற தோற்றத்தையும் ,ஒரு சாராரின் கவனிப்பையும் பெற்றுத் தருமானால் ,அரசியல் வாதிகள் அந்த வழியை தேர்ந்தெடுப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை .

அரசியலை பரபரப்பு கேளிக்கையாக மக்கள் நினைப்பதை குறைத்துக் கொள்ளும் வரை அரசியல்வாதிகள் இப்படித் தான் இருப்பார்கள்.

(சிறிது காலம் வலைப்பதிவுக்கு இடைவெளி விட வேண்டிய நிலை .புத்தாண்டில் மீண்டும் சந்திப்போம் .அனைவருக்கும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்)

18 comments:

முத்து(தமிழினி) said...

ஜோ. நன்றாக இருந்தது...இது தமிழினின் சாபக்கேடு...சினிமாவின் பாதிப்பாக இதை கூறலாம்.

குழலி / Kuzhali said...

வாழ்த்துகள் ஜோ... புதிய பதிவிற்கும்....

Anto said...

Joe,

Now days this is very important. They have to show their strength by such agitations, otherwise they won't exist.

Tamil nadu is not only an example. see BJP, Shiva sena(grown from secterian voilences).

One good example - 2003 Gujarat assembly election.
Since 2000 BJP lost all By - Elections in Gujart. Most importantly Jan'2002 By election in one of the Gandhi nager MP constituncy's(Advani's strong hold) MLA seat BJP was defeted by a huge margin.

After 2002 gujart riot's BJP re gained assembly.

Most of the political Parties are encouraging voilences. I beleive no bars. you can find this in kerala also.(few weeks back i have seen a strike in kerala colleage - you can't imagine see such voilence in colleages in india. but the political party which the student union belonging not condomend that)

What you said about Vaiko is right.

Sadly some common people are getting political knowledge from cinema.(see day before yesterday's our 'tamilmanan blog postings)

மணியன் said...

அடிதடியும் பரபரப்பும்தான் அரசியல் என்றாகிப் போச்சு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அறிஞரின் அரசியல் இன்று செல்லாக் காசாகிவிட்டது.

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

மூர்த்தி said...

ஜோ, இப்பெல்லாம் நல்லா எழுத ஆரம்பிச்சுட்டேய்யா!

ராம்கி said...

//கண்ணியமும் ,பொறுமையும் ,நல்லிணக்க முறைகளும் ஒரு அரசியல் வாதிக்கு கவனத்தையும் ,செல்வாக்கையும் பெற்றுத்தருவதற்கு பதிலாக ,பலகீனமாகவும் ,எள்ளலை சம்பாதித்து தருவதாகவும்

ore kolappama keethe! :-)

தாணு said...

தொண்டர்கள் மட்டுமல்ல, கட்சித் தலைமைகள் கூட பரபரப்பு அரசியல்வாதிகளைத்தானே களமிறக்க நினைக்கிறார்கள்.

Anonymous said...

நல்ல பதிவு. சமூக அக்கறை பளிச்சிடுகிறது. யதார்த்த நிலையை நன்றாக அலசியுள்ளீர்கள். மட்டுமல்ல மக்களின் மனதை சரியாக கணிக்கவும் செய்துள்ளீர்கள். (எதிர் கால எண்ணம் ஏதாவது?:-))

தொடருங்கள்.

வாழ்த்துக்களுடன்,

இறை நேசன்.

-L-L-D-a-s-u said...

வாழ்த்துகள் ஜோ... புதிய பதிவிற்கும்ம்ம்.... ;) ;)

tbr.joseph said...

நல்லா இருக்கு ஜோ.

யாருக்கு என்ன அபிப்பிராய வித்தியாசம் இருந்தாலும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் இது சரின்னு படறத செய்யற அரசியல்வாதிகள் ரொம்ப நாள் நிலைக்கறதில்லையே ஜோ.

அதனாலதான் குறுகிய கண்ணோட்டத்துடன் உடனே கிடைக்கிற புகழுக்காக மயங்கி எது வோட்டு போடற ஜனங்களுக்கு பிடிக்கிதோ அதையே செஞ்சிட்டு போயிடறாங்க.

எனக்கென்னமோ திராவிட கட்சிகளும், ஜாதி, மதம் இவைகளை முன் நிறுத்தி அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளும் நம் தமிழ்நாட்டிலிருந்து மறையும் வரை நமக்கு விடிவு காலம் வரப்போறதில்லைன்னு தோனுது.

இவ்வளவு ஏன்? நம் தமிழ்மணம் அரங்கை எடுத்துக்கொள்ளுங்களேன். தரமான பதிவுகளுக்கு கிடைக்கும் பின்னூட்டங்களை விட அசிங்க அரசியலையும், பிற ஜாதியினரையும் தூற்றி எழுதும் பதிவுகளுக்குத்தானே அதிக மவுசு கிடைக்கிறது. அதைஎதிர்பார்த்து இன்று புதிதாய் சேரும் பதிவாளர்களும் அதையே செய்கின்றனரே?

நன்றாக படித்து, பட்டம் பெற்று உலகமெங்கும் பணி புரியும் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களே பார்ப்பான், தலித்,என்று வெவ்வேறு அணிகளாக பிரிந்து நிற்கும்போது...

அரசியல்வாதிகளை சொல்லி என்ன பலன்?

கிறீஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜோ. இந்தியா வரும்போது ஃபோன் பண்ணுங்க.

Dharumi said...

அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, தனி மனித வாழ்விலும் இந்த நிலைப்பாடுதான் என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்.

மஹாநதி படம் நினைவுக்கு வருகிறது.

சிங். செயகுமார். said...

புது பரிமாணத்தோடு புத்தாண்டு கொண்டாட்டம் !வாழ்த்துக்கள் ஜோ!

George said...

//எனக்கென்னமோ திராவிட கட்சிகளும், ஜாதி, மதம் இவைகளை முன் நிறுத்தி அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளும் நம் தமிழ்நாட்டிலிருந்து மறையும் வரை நமக்கு விடிவு காலம் வரப்போறதில்லைன்னு தோனுது.//

So Joseph sir only congress will விடிய வைக்கும்????(Communist is also a வர்க்க கட்சி).

What a analyzis???????

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//அரசியலை பரபரப்பு கேளிக்கையாக மக்கள் நினைப்பதை குறைத்துக் கொள்ளும் வரை அரசியல்வாதிகள் இப்படித் தான் இருப்பார்கள்.//

நச்ன்னு இருக்கு

Thangamani said...

பொதுவாக அரசியற் கட்சிகள் மக்களை அரசியற்படுத்துவதில்லை. தேர்தலின் போதுதான் மக்களிடம் அரசியலை எடுத்துச் செல்கின்றன. மாறாக நாட்டின் ஒவ்வொரு திட்டமும், முடிவும் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு, அதன் பயனாளர் யார், அதன் விளைவுகள் என்ன அதற்கு மக்கள் அளிக்கவேண்டிய பங்கு என்ன என்பவை வெகுமக்களின் பார்வையில், அக்கறையில் விவாதிக்கப்படவேண்டும். ஆனால் மக்கள் இத்தகைய அரசியல் அறிவை பெறும்போது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் இவைகள் இல்லாமல் செய்துவிடும். எனவே இவைகளை கூடிய மட்டும் அரசியல் கட்சிகள் செய்வதில்லை. காங்கிரஸ் கட்சி. தஞ்சை பகுதிகளில் பலமாயிருந்த (திராவிட/ கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பலம் பெறும் முன்) மக்களிடம் வாண்டையார்களும், ஆண்டைகளும், நிலச்சுவான்தார்களும் தங்கள் நலனைப் பேணும் காங்கிரஸுக்கு ஓட்டு போட கட்டளை இடுவார்கள்; அதற்காக அன்று சாப்பாடு போடுவார்கள். அவ்வளவுதான் அவர்கள் அரசியல். திராவிட/ கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அந்தப்பகுதியில் வளர்ந்த போது இரவும் பகலும் நாடகங்கள், மேடைப்பேச்சுகள், பத்திரிக்கைகள், போராட்டங்கள் மூலம் அவர்களை அரசியல் படுத்தியே காங்கிரஸை வீழ்த்த முடிந்தது. திராவிடக் கட்சிகளும் வளர்ந்த பின் மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கின்றன. அப்போது அரசியற் படுத்தப்படாத மக்களை திரட்ட அச்சமூட்டும் நடவடிக்கைகளும், சினிமா கவர்ச்சியும், திடீர் இலவச நடவடிக்கைகளுமே ஒரே வழியாக இருக்கின்றன.

நன்றி ஜோ.

ஜோ / Joe said...

வருகை தந்த ,கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி!

அப்டிப்போடு... said...

//"நடுநிலை"(?) சோ கூட இந்த கண்ணியத்தை பாராட்டியதில்லை .மாறாக அவரது தொண்டர்கள் அமைதி காத்ததை மறைமுகமாக அவரது பலமின்மையாக சுட்டிக்காட்டுவதும் , இயல்பான அவரது நெகிழும் குணத்தை கிண்டல் செய்து ,அவர் அழுமூஞ்சி என்ற ரீதியில் கேலி செய்வதும் தான் நடைபெற்றது .

ஜெயலலிதாவின் எதேச்சகாரமும் ,தான் என்ற எண்ணமும் ,வரட்டு பிடிவாதங்களும் கூட அவரது துணிவாகவும் ,தலைமைக்கு தேவையான உறுதியாகவும் அறிவு ஜீவிகளால் புகழப்படுகிற சூழ்நிலையில் //

இதேதாங்க நடக்குது. இன்னும் ஒருமுறை அம்மா ஆண்டால்., தமிழ்நாட்டுல அவங்கள தவிர வேற முதல்வரே இல்லைன்னு வரலாற்றுல பொறிச்சு வச்சுருங்க!!!. சோ வ வித்தகர்ங்கிற மாதிரி., என்னாத்த வித்தாரோ?.

எம்.கே.குமார் said...

/////."அன்பே சிவம்' மிக நல்ல படம் என்று நானறிந்த எல்லோரும் சொல்கிறார்கள் .ஆனால் அது தியேட்டரில் சென்று பார்ப்பதற்கல்ல .அதிலே விசிலடிக்க ஒன்றுமில்லை.'சிவகாசி' எனக்கு எப்படி சகிக்கவில்லையோ ,அதுபோல நானறிந்த பல நண்பர்களுக்கும் அவ்வாறே ,ஆனல் அது வசூலில் தூள்பறத்துகிறது .அது போல 'நல்ல கண்ணு'கள் இருக்கலாம் .நல்ல மனுசன் தான்னு எல்லோரும் சொல்லுறாங்க .ஆனா ஒரு கெத்து வேணாங்களா ? தலைவர்னா ஒரு மவுசு வேணாமா ? அவர் கலர பாத்து நாம வாய் பிழக்க வேண்டாமா ?ஒரு கலர்புல்லா இருந்தா தானே நல்லா இருக்கும் ,அப்படின்னு தான் சாதாரண மக்கள் நினைக்குறாங்க ./////

இதுதான் ஏன்னு புரியமாட்டேங்குது.

மதிப்பிற்குரிய நல்லகண்ணு அவர்களை, 'என்னய்யா அரசியல்வாதி இந்தாளு, ஐஸ்விக்கிறவன் மாதிரியிருக்கான்னு என்னிடமே ஒரு நண்பர் சொன்னார். எனக்குக் கோபம் வந்துவிட்டது.

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நன்றி ஜோ.

எம்.கே.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives