Saturday, January 13, 2007

தமிழ் கத்தோலிக்கரும் பொங்கலும்

இது ஒரு மீள் பதிவு...

அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாட்களுக்கு முன் என்னுடைய திருமண புகைப்படத்தை தற்செயலாகப் பார்த்ததும் என் நண்பர் கேட்ட கேள்வி "என்ன..உங்க wife கல்யாணத்துக்கு பட்டுப்புடவை கட்டியிருக்காங்க ?" .அவர் தமிழ் சினிமா பார்த்து எல்லாத்தயும் நம்புறவர்-ன்னு நல்லா புரிஞ்சது. எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டு கத்தோலிக்கர் யாரும் இவர் நினைக்குறமாதிரி ,சினிமால காட்டுற மாதிரி வெள்ளை கலர்ல பாரதிராஜா தேவதை உடை போட்டு கல்யாணம் பண்ணி நான் பார்த்தததில்லை .கேள்விப்பட்டதும் இல்லை . எல்லோரும் பட்டுப்புடவை தான் கட்டிக்குறாங்க. அதோடு தலையில ஒரு net வச்சு கிரீடம் மாதிரி அலங்காரம் பண்ணிக்கிறது ,கையில ஒரு பூச்செண்டு இவ்வளவு தான் வித்தியாசம்.

அப்புறம் ஒரு நாள் நண்பர் குடும்பத்தோடு சினிமா போகும் போது ,நண்பருடைய மனைவி என் மனைவியை பார்த்ததும் புருவம் உயர்த்தினாங்க ."நீங்க குங்குமமெல்லாம் வைப்பீங்களா? ".அடடா! அதற்கும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.

இன்னொரு நாள் ஒரு சீன நண்பரோடும் ,தமிழ் நண்பரோடும் உணவருந்திகொண்டிருந்த போது ,சீன நண்பர் "எங்கே உங்கள் கல்யாண மோதிரம் ?" என்றார் .நான் "கல்யாண மோதிரம் கண்டிப்பல்ல .இந்திய வழக்கம் போல தாலி தான் அணிவிக்கிறோம் .மோதிரம் இரண்டாம் பட்சம் தான்" .அவர் சமாதானமாகிவிட்டார் .தமிழ் நண்பர் புருவம் உயர்த்தி விட்டார் ..

"என்ன தலைவா ? நீங்களும் தாலியா கட்டுவீர்கள் ?"

"ஆமா! .மோதிரம் மாற்றிக்கொள்வதும் உண்டு .ஆனால் தாலி தான் பிரதானம் .ஒரே வித்தியாசம் .மஞ்சள் தாலி அல்ல .தங்கத்தாலி .மூன்று முடிச்செல்லாம் இல்லை .தாலியை கோர்த்து விடுவது..அவ்வளவு தான் .இன்னும் சொல்லப் போனால் எங்கள் ஊரில் கத்தோலிக்கர்கள் திருமணத்தையே 'தாலிக்கட்டு' என்று தான் சொல்லுவார்கள்"

என்னங்க! பொட்டு வைக்காத ,தாலி அணியாத தமிழ் கிறிஸ்தவர்கள் இல்லை என்கிறீர்களா? என்று உங்களில் பலர் கேட்கலாம் ..இருக்கிறார்கள் .ஆனால் அவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களில் சிறுபான்மையினர் ..தமிழ் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்களும் ,தென்னிந்திய திருச்சபையினர் (CSI) என்றழைக்கப்படும் protestants இவர்கள் இருவரும் தான் பெரும்பான்மை .மற்ற சபையினர் மிக மிக சிறுபான்மை (மொட்டை மாடியில் மைக் கட்டிக்கொண்டு ஊரிலுள்ளவர்களையெல்லாம் பாவிகள் என்று சொல்லுவது ..விவிலியத்தை பிட் நோட்டீஸ் மாதிரி வினியோகிப்பது எல்லாம் இவர்கள் தான்.இது பற்றி தனிப்பதிவு பின்னர்).

CSI கிறிஸ்தவர்களின் வழக்கங்களை முழுமையாக அறுதியிட்டு என்னால் கூற முடியாதெனினும் ,கத்தோலிக்க தமிழர்களை பற்றி கண்டிப்பாக என்னால் கூற முடியும் .கத்தோலிக்க தமிழர்கள் திருமணத்தில் பட்டுப்புடவை அணிந்து தங்கத்தாலி கட்டுகிறார்கள் .பொட்டு ,குங்குமம் வைக்கிறார்கள் .

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கிறிஸ்தவ கோவில் என்றால் அது 'மாதாக் கோவில்' தான் .மாதாக்கோவில் என்றால் அது கத்தோலிக்க கோவிலாகத்தான் இருக்க முடியும் .ஆனால் அங்கு நடைபெறும் (தமிழர்)திருமணக்காட்சியில் மட்டும் எல்லாம் தலை கீழாக காட்டப்படும் .மணப்பெண் பாரதிராஜா படத்து தேவதை மாதிரி உடை அணிந்திருப்பார் .மோதிரம் மட்டும் மாற்றிக்கொள்வார்கள் ..தாலி கட்டுவது கிடையாது . மணப்பெண் பொட்டு வைத்திருக்க மாட்டார்.இப்படி தமிழகத்தின் எந்த கத்தோலிக்க கோவிலில் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை .

நான் பார்த்தவரைக்கும் ,தமிழகத்தில் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டு குழப்புவதில்லை .என்னுடைய மூதாதையர்கள் ,ஏன் எங்கள் ஒட்டு மொத்த ஊர் மட்டுமல்ல ,ஒட்டு மொத்த community-யே கத்தோலிக்கர்களாக மாறி 400 வருடங்கள் கழிந்து விட்டன ..மதம் மாறியிருக்கிறதே தவிர மற்ற வழக்கங்கள்( சாதி உட்பட என்பது வருத்ததுக்குரிய விஷயம்) பெரிதாக மாறவில்லை.எது நம்முடைய கலாச்சாரம் சம்மந்தப்பட்டது ,எது நம்முடைய மதம் சம்மந்தப்பட்டது என்பதில் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் (தமிழ் சினிமா தவிர) ..

திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது (ஒரு நிமிஷம் பொறுங்க!.அப்துல் கலாம் ,சுஜாதா படித்த அதே வகுப்பறையில் நானும் இயற்பியல் படித்தேன் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்) நண்பர்களோடு பலமுறை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றதுண்டு .ஒரு முறை நண்பர்களோடு நேராக உச்சிப்பிள்ளையார் சன்னிதி-க்கு சென்றேன் .நண்பர் ஒருவர் அங்கிருந்த அர்ச்சகரிடம் எங்கள் பெயரையெல்லாம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னார். "ஜோ நமஹா.." என்று அவர் சொன்னது மட்டும் புரிந்தது .முடித்து விட்டு விபூதி கொடுத்தார் .வாங்கிக் கொண்டேன் . விபூதிப் புதனன்று கோவிலில் பாதிரியார் "மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய் .மண்ணுக்கே திரும்புவாய் .மறவாதே என்றும் " என்று நெற்றியில் இட்டு விடுகிற சாம்பல் நினைவுக்கு வந்தது .நான் வணங்கும் தெய்வத்தை நினைத்துக்கொண்டு விபூதியை பூசிக்கொண்டேன்.

வேலை தேடி சென்னையில் எங்கள் ஊர் நண்பர்களோடு தங்கியிருந்தேன் .சொந்தமாக சிறு தொழில் செய்து வந்த நண்பர் எனக்கும் ,அவரோடு வேலை செய்த சகோதரருக்கும் ,இன்னொரு நண்பருக்கும் அடைக்கலம் தந்திருந்தார் .வீடு என்பதை விட அறை என்று சொல்லலாம் ..வீட்டு சொந்தக்காரர் பக்கத்தில் தான் இருந்தார் .அவருக்கு ரெண்டு குடும்பம் .நல்ல நாட்களில் மட்டுமே அவரை இங்கு பார்க்க முடியும் .மற்ற அனைவரும் எங்கள் எல்லோரோடும் நன்கு பழகுவார்கள் .அன்பானவர்கள் ..அன்றைக்கு பொங்கல் தினம் .எல்லோரையும் போல ,பசங்கள் என்பதால் கொஞ்சம் விமர்சையாகவே நாங்களும் காலையிலயே பொங்கல் போட்டோம் .முதல் காரியமாக கொஞ்சம் பொங்கல் எடுத்து வீட்டுக்காரர் குடும்பத்துக்கு கொடுக்க நான் எடுத்துச்சென்றேன். எதிர்பார்த்த மாதிரி வீட்டுக்காரர் இருந்தார்.

"பொங்கல் போட்டோம்..வாங்கிக்குங்க!"

"என்ன தம்பி! நாங்க தானே உங்களுக்கு தரணும் ..நீங்க எப்படி பொங்கல் போட்டீங்க?"..கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏன்?"

"இல்ல..நீங்க கிறிஸ்தவங்களாச்சே"

"அதுக்கு !.பொங்கல் இந்து பண்டிகைன்னு உங்களுக்கு யார் சொன்னது? பொங்கல் .உழவர் திருநாள் ..அது மட்டுமல்ல ..தமிழர் திருநாள்.. உங்கள பத்தி தெரியாது ..நாங்கள்ளாம் தமிழர்கள் "

கொஞ்சம் வியப்பாக பார்த்தார் ..அவரிடம் அதிகம் பேசாத என்னிடம் அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் .

"ஓ! எதுவா இருந்தாலும் எங்களுக்கு முன்னால நீங்க பொங்கல் கொண்டு வந்தது சந்தோஷம்"

வீட்டுக்கார அம்மா புன்சிரிபோடு "குடுங்க தம்பி" என்று வாங்கிக் கொண்டார்.

என் நினைவு எங்க ஊருக்கு சென்றது .வருஷம் முழுவதும் காசு சேர்த்து வைத்து வகுப்பு தோழர்களெல்லாம் பொங்கலன்று தென்னந்த்தோப்புக்கு சென்று பொங்கல் போடும் நினைவுகள் வந்தது ..பொங்கல் அன்று எங்கள் தேவாலயத்தின் பலிபீடம் கரும்பினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் .கோவில் சார்பாக பொங்கல் செய்து ,திருப்பலியின் நடுவே ,எல்லோரும் வரிசையாக சென்று பாதிரியாரிடமிருந்து ஒரு கரண்டி சர்க்கரைப்பொங்கலை கைகளில் பிரசாதம் போல் வாங்கி உண்டது மனக்கண்முன் நின்றது.

எங்கள் ஊர் கன்னியர் மடத்திலுள்ள கன்னியர்கள் செய்த அந்த சர்க்கரைப்பொங்கல் சுவை இன்னும் இனிக்கிறது..

46 comments:

chinnathambi said...

thelivaaga irukkireergal.good post.

happy pongalo'o'o'o' pongal.

சிறில் அலெக்ஸ் said...

ஆச்சர்யம்.. இன்னைக்கு என்கூட வேல பாக்கிற வட இந்தியப் பெணென்னிடம் பொங்கல் கொண்டாடுவீங்களான்னு கேட்டார்.

நான் கிறீத்துவன் என்பதால் கேக்குறீங்களான்னு கேட்டேன்.

வந்து பாத்தா நீங்க பதிவு போட்டிருக்க்கீங்க

ஊரெல்லாம் எப்டி இருக்கு?

tbr.joseph said...

எனக்கும் இத்தகைய அனுபவங்கள் முக்கியமாக தஞ்சையிலிருந்த சமயத்தில் ஏற்பட்டுள்ளது.

என்னுடைய பெயரைக் கேட்டதுமே நாங்க தமிழாளுங்களுக்குத்தான் வீடு தருவோம் என்றனர் சிலர். அம்மா நாங்களும் தமிழாளுங்கதாம்மா என்றபோது இல்லைங்க அதெல்லாம் சரி வராது. நீங்க ராத்திரியில அல்லேலுயா, அல்லேலுயாம்பீங்க பாட்டு பாடுவீங்க என்றார்கள்.

தஞ்சையில் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தம். என்னை தமிழனாக ஏற்றுக்கொண்டு இறுதியில் வாடகைக்கு விட்ட தம்பதியர் என் மனைவியும் வீட்டு முற்றத்தில் பானை வைத்து பொங்கல் வைத்தபோது அட! நீங்களும் கொண்டாடுவீங்களா என்று வியந்து நின்றனர்.

அங்கிருந்த எல்லா கத்தோலிக்க தேவலாயங்களிலும் பொங்கலன்று சிறப்பு திருப்பலி, வழிபாட்டின் இறுதியில் பொங்கல் வினியோகம் எல்லாமே இருந்தது. இப்போது சென்னையிலும் சில தேவாலயங்களில் பொங்கல் சிறப்பு வழிபாடுகள் உள்ளன.
திருப்பலிப் பீடத்தை கரும்பால் அலங்கரிப்பதையும் தஞ்சையில் கண்டிருக்கிறேன்.

கேரளத்தில் ஓனம் எவ்வாறு எல்லா மதத்தினராலும் கொண்டாடப்படுகிறதோ அதுபோலத்தான் பொங்கலும்.. ஆனால் இத்திருவிழாவை இந்து மதத்துடன் இணைத்துப் பார்க்கும் கத்தோலிக்கர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மறுப்பதற்கில்லை.

PRABHU RAJADURAI said...

முன்பே பலமுறை எழுதியதுதான். தென்னிந்திய திருச்சபை பெண்கள் பொட்டு வைப்பதில்லை...ஆயினும், தற்பொழுது பேஷனாக வைத்துக் கொள்கிறார்கள்.

மும்பை கிறிஸ்தவர்கள் அப்படியே மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களது தாய்மொழி கூட ஆங்கிலம்தான்.

எனது உறவினர் ஒருவர் மும்பை பெண்ணை காதலித்து மணந்தார். திருமணத்தில் மோதிரம்தான், கவுன்...ஒரு துளி செயின் கூட இல்லை. திருமணத்திற்கு வந்த நம்ம பெண்களுக்கெல்லாம் ஒரே ஆதங்கம்...என்ன நம்ம வழக்கப்படி பொண்ணுக்கு ஒரு செயினாவது போடக்கூடாதா என்று.

ஆனால், ஆங்கிலத்தில் யார் சம்பந்தி சண்டை போடுவது:-))

Akilan said...

நல்ல பதிவு

எங்கள் ஊரில் அந்தோனியார் பொங்கல் என்று ஒரு வாரம் கழித்து கொண்டடுவார்கள்


// திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது (ஒரு நிமிஷம் பொறுங்க!.
// அப்துல் கலாம் ,சுஜாதா படித்த அதே வகுப்பறையில் நானும்
// இயற்பியல் படித்தேன் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்)

நானும் அங்குதான் படித்தேன் PHY B

ஆனால் சிங்கப்ப்பூரில் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படாதது கொஞ்சம் வருத்தம் தான்

ஜோ / Joe said...

Chinnathambi,Cyril,Joseph Sir,Prabhu Rajadurai,Akilan...Thanks for your comments.

G.Ragavan said...

ஜோ, இந்தப் பதிவை முன்னமே படித்துப் பின்னூட்டமிட்டிருக்கிறேன். இன்றைய சூழலில் இந்தப் பதிவைப் படிப்பது மனநிறைவையும் அமைதியையும் தருகிறது. நன்றி பல.

ஜோ / Joe said...

ராகவன்,
மீண்டும் வருகைக்கு நன்றி .மீள்பதிவு என்றாலும் நம்மைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பது நிறைவைத் தருகிறது.

கோவி.கண்ணன் [GK] said...

ஜோ,

இந்தியர்கள், குறிப்பாக மதங்களால் பிரிந்து கிடக்கிறோம். எல்லோரும் சேர்ந்து கொண்டாட ஒரு பண்டிகை இருந்தால் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும். சீனர்கள் சீனப் புத்தாண்டை விமர்சியாக கொண்டாடுவார்கள் அதில் சீன கிறித்துவர்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது. சீன புத்தாண்டு என்பது சீனர்களின் கலாசார அடையாளம்.

கத்தோலிக்க கிறித்துவர்கள் மட்டுமில்லாது ஏனைய கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் அவரவர் மார்க வழிபாட்டுடன் பொங்கல் கொண்டாலாம். தமிழர் திருநாளை இந்து பண்டிகை என்னும் ஒரு பண்டிகையாக நினைப்பதை மாற்றி அமைக்க வேண்டும். எங்கள் ஊரில் ஆயுத பூஜையை சில இஸ்லாமிய அன்பர்களும் கொண்டாடுவார்கள். ஆயுதங்களுடன் சிற்றுண்டி உணவு தயாரித்து சரஸ்வதிக்கு பதில் அல்லாவுக்கு படைத்துவிட்டு அனைவருக்கும் கொடுப்பார்கள். நெகிழ்ச்சியாக இருக்கும்.

பொங்கல் திருநாள் வழி தமிழர்களிடையே ஒற்றுமையும் சகோதரத்துவமும் வளரட்டும்.

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !

ஜோ / Joe said...

கோவியாரே,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

நீங்கள் சொன்னது போல ,ஒவ்வொரு மதத்தினரும் தாங்கள் மனதில் இருத்தியிருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் திருவிழாவாக பொங்கலை கொண்டாடுவதில் எந்த சிக்கலும் இல்லை .இதைத் தான் பெரும்பான்மை தமிழ் கத்தோலிக்கர்கள் செய்கிறார்கள்.

✪சிந்தாநதி said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஜோ

dondu(#4800161) said...

பொங்கல் வாழ்த்துக்கள் கடற்புறத்தான் அவர்களே. இது என்ன பழைய பின்னூட்டங்கள் எங்கே? மீள்பதிவு பழைய பதிவை காப்பி பேஸ்ட் செய்தா போட்டீர்கள்? தேவையில்லையே.

log in>dashboard>blogname>manage posts>edit concerned post>change date and time by clicking on the button for comment options>publish>republish blog or index (only in the case of old bloggers like you and me).

அவ்வளவுதான், உங்கள் பழைய பதிவு ஜம்மென்று பழைய பின்னூட்டங்களுடன் மீள்பதிவாக வரும்.

இதைக் கூறுவது மீள்பதிவு எக்ஸ்பர்ட் டோண்டு ராகவனாக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ / Joe said...

டோண்டு சார்,
வருகைக்கும் ,மீள்பதிவு செய்யும் முறை விளக்கத்துக்கும் நன்றி.

அடுத்த முறை மீள்பதிவு செய்யும் போது உபயோகிக்கிறேன்.உதவிக்கு நன்றி!

bala said...

//தமிழர் திருநாளை இந்து பண்டிகை என்னும் ஒரு பண்டிகையாக நினைப்பதை மாற்றி அமைக்க வேண்டும். எங்கள் ஊரில் ஆயுத பூஜையை சில இஸ்லாமிய அன்பர்களும் கொண்டாடுவார்கள்//

ஜி.கே அய்யா,
ஆமாங்கய்யா,எங்க ஊரில் ,பகுத்தறிவு குஞ்சுகள் கூட ,பொங்கல் கொண்டாடி மகிழ்வாங்க.ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கும், பார்ப்பதற்கு.

பாலா

கோவி.கண்ணன் [GK] said...

//ஜி.கே அய்யா,
ஆமாங்கய்யா,எங்க ஊரில் ,பகுத்தறிவு குஞ்சுகள் கூட ,பொங்கல் கொண்டாடி மகிழ்வாங்க.ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கும், பார்ப்பதற்கு.

பாலா//

பாலா,

பகுத்தறிவு குஞ்சுகள் பூணூல் போட்டுக் கொண்டு ராமர் படத்தை ஊர்வலமாக கொண்டு வருவதையும், தீச்சட்டி எடுத்து வருதையும் கூட பார்த்திருக்கிறேன். அதுவும் கூட நெகிழ்ச்சியாக இருக்கும்.

ஜோ / Joe said...

பாலா என்னங்க சொல்ல வர்றாரு ? பகுத்தறிவு உள்ளவங்க பொங்கல் கொண்டாட மாட்டாங்கன்னா? அல்லது அவருக்கு பகுத்தறிவு கிடையாதுன்னா?

lak said...

I had a few christian friends when I was in my college. When everyone decided to come to our place for Pongal (Hostel Mess closed..), couple of them were hesitating because they were worried that we'd have offered the food to God (Sun God) that day and they were not keen eating the same food. Whereas other christian friends were ok. Ofcourse my parents made something else for them and we had a nice pongal though.

சிநேகிதன் said...

எனக்கு அதிகமான கத்தோலிக்க கிறிஸ்தவ நண்பர்கள் உள்ளனர். நான் என்னுடைய இளமைக்காலம் முழுவதும், புனித ஃபிரான்ஸிஸ் சேவியரின் பெயர் கொண்ட ஊரில் தான் கழித்தேன் எனக்கு தெரிந்து எந்த கிறிஸ்தவரும் பொங்கல் கொண்டாடியதில்லை. அதே போலத்தான் முஸ்லீம்களும். ஆனால் கத்தோலிக்கர்கள் தாலி, பூ, பொட்டு அணிவது உண்டு.

புனித அந்தோனியார் கூட இந்து சாமியார் போல உடையணிந்து தான் கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயன்றார்.

ஜடாயு said...

சமயத்திற்கேற்ற பதிவு ஜோ. பொங்கல் வாழ்த்துக்கள்.

உங்கள் மற்றும் நல்லடியார் பதிவுகளைப் படித்ததும் எழுந்த சிந்தனைகளை இந்தப் பதிவில் போட்டிருக்கிறேன் -
http://jataayu.blogspot.com/2007/01/blog-post.html

அதில் ஒரு பகுதி...

// சகோதரர் திரு. ஜோ கத்தோலிக்கர்கள் பொங்கல் கொண்டாடுவதைப் பற்றி எழுதியிருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. .. தான் பொங்கல் கொண்டாடுவது சாத்தானின் தூண்டுதலால் என்று கிறித்தவ இறையியலை யாராவது முன் நிறுத்தினால் இல்ல இல்ல அது இந்துப் பண்டிகையே இல்லங்க என்று சொல்லிக் குழப்பலாம் என்றோ என்னவோ பொங்கல் இந்துப் பண்டிகையே அல்ல என்று அந்தப் பதிவில் ஜல்லி யடிக்கிறார். மதம் வேறு, கலாசாரம் வேறு என்று அவர் கூறுவதை முழுமையாக ஒப்புக் கொள்ள முடியாது. இரண்டுக்கும் நடுவில் உள்ள எல்லை மிகவும் நெகிழ்ச்சித் தன்மை உடையது. மதம் மாறிவிட்டாலும், அவரது கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலாசாரக் கூறுகளை விடாமல் கடைப் பிடிப்பது மிகவும் பாரட்டுக்குரிய விஷயம். இந்திய தேசியத்தை வலுப்படுத்தும் இந்த கலாசாரப் போக்கு வரவேற்கத் தக்கது. //

Harikmar J said...

Joe, romba nalla katurai. Yellorukum Iniya Pongal Nal Vaazhthukkal.

கானா பிரபா said...

வணக்கம் ஜோ

எங்கள் தாயகத்திலும் இது பொதுவான ஒரு உழவர் திருநாள் தான், இந்து மட்டும் கலப்பை பிடிப்பதில்லையே?

ஜோ / Joe said...

//இல்ல இல்ல அது இந்துப் பண்டிகையே இல்லங்க என்று சொல்லிக் குழப்பலாம் என்றோ என்னவோ பொங்கல் இந்துப் பண்டிகையே அல்ல என்று அந்தப் பதிவில் ஜல்லி யடிக்கிறார்.//

ஜடாயு,
மன்னிக்கவும் .நான் சொல்லாததை அல்லது நினைக்காததை நீங்களாக கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

உள்நோக்கம் வைத்து பேசுவது,எழுதுவது என் வழக்கம் அல்ல.

bala said...

//பகுத்தறிவு குஞ்சுகள் பூணூல் போட்டுக் கொண்டு ராமர் படத்தை ஊர்வலமாக கொண்டு வருவதையும், தீச்சட்டி எடுத்து வருதையும் கூட பார்த்திருக்கிறேன். அதுவும் கூட நெகிழ்ச்சியாக இருக்கும்//

ஜி.கே அய்யா,

நெகிழ்ச்சி மட்டுமல்ல அய்யா,மகிழச்சியோடு கூடிய எழுச்சியாக இருக்கும்னு சொல்லுங்க.நம்மைப் போன்ற பாசறை மாணவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உணர்ச்சி அது.அது புரியாதவங்க தான் இந்த பிள்ளையார்/ராமர் சிலை உடைக்கும் சமாசாரம்,ஒரு கேவலமான தாலிபான் கட்டுமிராண்டிங்க செய்யற மாதிரி கீழ்த்தரமான செயல்னு சொல்லுவாங்க.போகட்டும் விடுங்க.ஒரு தடைவை மானமிகு வீரமணி அய்யா கிட்ட காஃபி வாங்கி குடிச்சாங்கன்னா புரிஞ்சுக்குவாங்க.

பாலா

ஜோ / Joe said...

//எனக்கு தெரிந்து எந்த கிறிஸ்தவரும் பொங்கல் கொண்டாடியதில்லை. //

அதாவது நீங்கள் நினக்குற மாதிரி பொங்கல் கொண்டாடுவதில்லை.

உங்களுக்கு தெரிந்தவர்களை ,நீங்கள் புரிந்து கொண்டதை விடுவோம் .இங்கே வலையுலகில் இருக்கும் மற்ற தமிழ் கத்தோலிக்கர் வந்து சொல்லட்டுமே ,தாங்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை என்று .இது வரை வருகை தந்த சிறில் ,ஜோசப் ஐயா என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கவும்

Anonymous said...

//தான் பொங்கல் கொண்டாடுவது சாத்தானின் தூண்டுதலால் என்று கிறித்தவ இறையியலை யாராவது முன் நிறுத்தினால்//

அதைத் தீவிரவாதக் கிறிஸ்தவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, ஜடாயு மாதிரி ஆன்மீகப் போர்வையைப் போர்த்திக்கொண்டு அலையும் மதவெறிச் சாத்தான்கள் கச்சிதமாகச் செய்துவிடுவார்கள்! என்னதான் இருந்தாலும் கிறிஸ்துவனும் ஹிந்துவும் முஸ்லீமும் ஒற்றுமையாய் இருக்கலாமா சொல்லுங்கள்!! இந்து ராஷ்டிரம் அல்லவா இது. பொங்கலைக் கொண்டாடமாட்டோம் என்று நல்லடியார் எழுதினாலும் குற்றம், கொண்டாடுவோம் என்று ஜோ எழுதினாலும் குற்றம்!!

G.Ragavan said...

நேற்று தமிழக சர்ச்சுகளில் பொங்கல் சிறப்புத் திருப்பலிகள் நடந்ததாக டிவியில் காட்டினார்கள். அதுவும் பொங்கல் கொண்டாட்டத்தில் அடங்கும் என்பது என் கருத்து. அவரவர்களுக்கு விருப்பப்பட்டபடி கொண்டாடுங்கள். ஆனால் இது தமிழர்களுக்கான பொதுக் கொண்டாட்டமாக இருத்தல் சுகம்.

ஓணத்தை எல்லா மலையாளிகளும் துர்கா பூஜாவை எல்லா வங்காளிகளும் கொண்டாடும் பொழுது...தமிழர்கள் நாமெல்லாம்......திருந்துங்க மக்களேன்னு கத்தத் தோணுது.

செந்தழல் ரவி said...

உங்கள் இந்த பதிவை மிகவும் ரசித்தேன் ஜோ !!!

செந்தழல் ரவி said...

நானும் சமயபுரம் போய் மொட்டையெல்லாம் போட்டிருக்கேன் ஹி ஹி

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

ஜோ பொங்கல் வாழ்த்துகள்!


ராகவன்,

//ஓணத்தை எல்லா மலையாளிகளும் துர்கா பூஜாவை எல்லா வங்காளிகளும் கொண்டாடும் பொழுது...தமிழர்கள் நாமெல்லாம்......திருந்துங்க மக்களேன்னு கத்தத் தோணுது.//

கத்திக்கிட்டே இருந்தா என்றாவது ஒரு நாள் நிறையபேர் நம்முடன் சேர்ந்து கத்த வாய்ப்பு உள்ளது என்று நம்புவோம்.

Anonymous said...

கல்வெட்டு & ஜோ உங்களோடு நானும் சேர்ந்து கத்துகிறேன்.

http://kailaasam.blogspot.com/2007/01/blog-post.html

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

bala said...

//கல்வெட்டு & ஜோ உங்களோடு நானும் சேர்ந்து கத்துகிறேன்//

ஜோ அய்யா,
குரல் கொடுங்கய்யா..நானும் சேர்ந்து குரல் கொடுக்கிறேன்.

பாலா

ஜோ / Joe said...

//ஜோ அய்யா,
குரல் கொடுங்கய்யா..நானும் சேர்ந்து குரல் கொடுக்கிறேன்.

பாலா
//
பாலா ஐயா!
திருநெல்வேலிக்கே அல்வாவா!

பொங்கல் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான திருவிழா .அறுவடையின் நன்றி விழா .அதை ஒவ்வொருவரும் தங்கள் மத முறைகளில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடலாம் .அதை நானும் செய்கிறேன்.பெரும்பாலான தமிழ் கத்தோலிக்கரும் செய்கிறார்கள் என்று குரல் கொடுக்க இந்த பதிவை இட்டவன் நான் .இங்கு வந்து குரல் கொடு குரல் கொடு -ன்னா என்ன ஐயா அர்த்தம் .?நான் குரல் கொடுத்தா தான் நீர் கொடுப்பீராகும் ?...இப்படியே ஒவ்வொண்ணுக்கும் என்னுடைய வழிகாட்டுதல் படி நடப்பீர்களா என்ன?

உங்க நக்கல் நையாண்டி ,சிண்டு முடியுற வேலையெல்லாம் வேற எங்கியாவது வச்சுகுங்க .நாகர்கோவில் காரனுக்கு உம்ம நக்கல் நல்லாவே புரியும் ஓய்!

ஜோ / Joe said...

ராகவன் ,கல்வெட்டு,
பொங்கல் இந்துக்களுக்குரியது .இந்து முறைப்படி கொண்டாடினால் தான் பொங்கல் என்று வாதிடும் கூட்டத்துக்கு உங்கள் பதில் என்ன?

✪சிந்தாநதி said...

நண்பர் ராகவனுக்கு.

பொங்கலை எல்லோரும் கொண்டாட வேண்டும் என்பதில் இணைந்து குரல் கொடுத்தீர்கள்... நன்றி. ஆனால் திருவோணத்தையும் துர்கா பூஜாவையும் அதோடு இணைத்துப் பேசுவது கொஞ்சம் இடிக்கிறதே?

பொங்கலை மதச்சார்பற்று கொண்டாடலாம் மற்ற இரண்டையும் மாற்று மதத்தவர் எப்படி மதச்சார்பின்றி கொண்டாட முடியும்?

(அங்கே பொதுவான விழாவாக கொண்டாடுகிறார்கள் என்ற அளவில் சரிதான் என்ற போதும் அதை இதோடு ஒப்பிடுவது இங்கேயுள்ள பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும்.)

bala said...

//இங்கு வந்து குரல் கொடு குரல் கொடு -ன்னா என்ன ஐயா அர்த்தம் .?நான் குரல் கொடுத்தா தான் நீர் கொடுப்பீராகும் ?...இப்படியே ஒவ்வொண்ணுக்கும் என்னுடைய வழிகாட்டுதல் படி நடப்பீர்களா என்ன? உங்க நக்கல் நையாண்டி ,சிண்டு முடியுற வேலையெல்லாம் வேற எங்கியாவது வச்சுகுங்க .நாகர்கோவில் காரனுக்கு உம்ம நக்கல் நல்லாவே புரியும் ஓய்!//

ஜோ அய்யா,
என்னங்க இப்படி எழுத்திட்டீங்க?ராகாவன் அய்யா,கல்வெட்டு அய்யா,நீங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து கத்தலாம்னு சொன்னீங்க.சரி,இந்த விளையாட்ல நாமும் சேர்ந்துக்கலாமேன்னு பாத்தா,நீங்க என்னமோ நான் ராகவன் அய்யாவுக்கும், உங்களுக்கும் சிண்டு முடியறேன்,அல்வா கொடுக்கிறேன்னு அபாண்டமா சொல்றீங்க.இது நியாயமா?உங்க மனசாட்சியை கேட்டுவிட்டு சொல்லுங்கய்யா.

வருத்தத்துடன்,

பாலா

ஜோ / Joe said...

//அங்கே பொதுவான விழாவாக கொண்டாடுகிறார்கள் என்ற அளவில் சரிதான் என்ற போதும் அதை இதோடு ஒப்பிடுவது இங்கேயுள்ள பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும்//

சிந்தாநதி,
உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் .ஆனால் நண்பர் ராகவன் தவறான கோணத்தில் சொல்லியிருக்க மாட்டார் என்பது என் நம்பிக்கை .துர்கா பூஜையையே அனைவரும் கொண்டாடும் போது பொங்கல் கொண்டாட இவ்வளவு தயக்கமா என்ற கோணத்தில் சொல்லியிருப்பதாக நான் எடுத்துக்கொண்டேன்.

chi said...

In our family (incl. grandparents), we go to velankanni church on our pilgrimage trips to temple in that area. We dont really kneel down and pray, but we used to light the candle and pray folding the hands. Ofcourse, I have never seen them going to local churches in our area though. But our pooja room does include Mary Matha. Me and my cousins seem to have accepted that as a norm. I agree with this post that Pongal is "Uzhavar Thirunaal" and everyone can thank/celebrate in the way that suit them.

ஜோ / Joe said...

//சிண்டு முடியறேன்,அல்வா கொடுக்கிறேன்னு அபாண்டமா சொல்றீங்க.இது நியாயமா?உங்க மனசாட்சியை கேட்டுவிட்டு சொல்லுங்கய்யா.//

பாலா ஐயா!
ராகவன்,கல்வெட்டுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ,யார் என்ன கண்ணோட்டத்துல சொல்லுவாங்கண்ணு நமக்கு தெரியும் ஐயா .உங்க வழக்கமான பல அர்த்தங்கள் தரும் பின்னூட்டங்களை கவனித்திருக்கிறேன் .உங்களோட விதண்டாவாதத்துல பதிலுக்கு பதில் மல்லுக்கட்ட நமக்கு அறிவோ ,நேரமோ இல்லீங்க ஐயா! அதனால என்ன விட்டுடுங்க..உங்க அக்கறைக்கும் வருகைக்கும் நன்றி!

Kumari "அப்பாவி" said...

நல்ல பதிவு... பொங்கல் எனும் மத சார்பற்ற பண்டிகைக்கு சிலர் மதசாயம் பூசுவது வேடிக்கையாக உள்ளது.

Bharateeyamodernprince said...

i have been reading your blogs for quite some time... however, i havent posted any comment. Even now, i dont have tamil fonts in this computer...so I have to postpone it once again. Meantime i really thank for this blog... bcoz I have many Catholic friends in chennai and i have observed what you have told in your blog. Wish you all the best.. Cheers!

ஜோ / Joe said...

Bharateeyamodernprince,
Thanks for your support!

Vetrimagal said...

I am late by almost a year, but your write up on Pongal gave immense satisfaction to me. In teh middle of all the divide on religion , you have made a good uniting write up.
Thanks

ஜோ / Joe said...

வெற்றிமகள் ,மிக்க நன்றி!

Oracle FAQ - Interview QA said...

==> "என்ன தலைவா ? நீங்களும் தாலியா கட்டுவீர்கள் ?"

Nanum eppadi kettu erukkene...! Aanal entha post paidtchathum.. niraiya kuzappam thelivayittuthu..!

Thanks thalaivare!

J Mariano Anto Bruno Mascarenhas said...

//
எனக்கு அதிகமான கத்தோலிக்க கிறிஸ்தவ நண்பர்கள் உள்ளனர். நான் என்னுடைய இளமைக்காலம் முழுவதும், புனித ஃபிரான்ஸிஸ் சேவியரின் பெயர் கொண்ட ஊரில் தான் கழித்தேன் எனக்கு தெரிந்து எந்த கிறிஸ்தவரும் பொங்கல் கொண்டாடியதில்லை.
//

உங்கள் அறியாமை இந்த தமிழ் புத்தாண்டிலாவது குறைய வாழ்த்துக்கள்

அது சரி

அது எந்த ஊர்


J Mariano Anto Bruno Mascarenhas said...

//புனித அந்தோனியார் கூட இந்து சாமியார் போல உடையணிந்து தான் கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயன்றார்.//

அவர் இந்தியா வந்தாரா

அவ்வ்வ்வ்வ்வ்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives