Tuesday, October 31, 2006

நாதியற்ற மீனவன்!

குமரி மாவட்டத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் வளைகுடா நாடுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .அரபு முதலாளிகளின் படகுகளில் வேலை மீன்பிடிக்க செல்லும் இவர்கள் உயிரைப் பணயம் வைத்து உழைத்தாலும் பல அரபு முதலாளிகள் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதே பெரும்பாடு .பட்ட கடனை அடைக்க முடியாமலேயே ஊர் திரும்பியவர்கள் ஏராளம்.

இந்நிலையில் கடந்த ரம்ஜானுக்கு 4 நாட்களுக்கு முன்பு எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் படகில் மீன் பிடிக்க சென்ற போது கடற்கொள்ளையர்களால் சுடப்பட்டு எனது நண்பர் ஒருவர் பலியாகி விட்டார் .சவூதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த அந்த நண்பர் படகு ஓட்டுபவராகவும் இருந்திருக்கிறார் .ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் போது கடற்கொள்ளையர்கள் தாக்குவது சகஜமாக நடக்கக் கூடியதாம் .வழக்கமாக கடற்கொள்ளையர்கள் வந்து விட்டால் படகை நிறுத்திவிட வேண்டுமாம் .அவ்வாறு செய்தால் அவர்கள் துப்பாக்கி முனையில் எல்லாவற்றையும் கொள்ளை அடித்து விட்டு சிறிது தாக்கி விட்டு சென்று விடுவார்களாம் .ஆனால் அவர்களை பார்த்த பின்னரும் படகை நிறுத்தாமல் சென்றால் முதலில் படகை ஓட்டுபவரை குறிவைத்து சுடுவார்களாம் .இங்கு நடந்தது அது தான்.

கடற்கொள்ளையர்களை பார்த்தவுடன் ,நண்பர் படகை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றிருக்கிறார் .அவர்களும் குறி வைத்து சுட்டதால் அவர் அந்த இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார் .எங்கள் ஊரைச் சேர்ந்த இன்னொரு நபருக்கும் கழுத்தில் குண்டு பாய்ந்து அபாயகரமான நிலையிலுள்ளார்.

அநியாயமாக இறந்து போன இந்த நண்பர் ,பள்ளியில் என்னோடு பயின்றவர் .குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்புக்கு மேல் தொடர முடியாமல் மீன்பிடித் தொழிலில் இறங்கியவர் .எங்கள் ஊரில் படித்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு இளைஞர் இயக்கத்தை தொடங்கி ,பின்னர் மீன்பிடிக்கும் இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு பல்வேறு பணிகளை செய்த போது ,மீன்பிடிக்கும் இளைஞர் என்ற முறையில் அந்த இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்த நண்பர் .இளைஞர் இயக்கத்தின் சார்பில் வெகு விமரிசையாக நடத்தப்படும் சுதந்திர தின விழாக்களை முன்னின்று நடத்தியவர் .திருமணமாகி குழந்தைகள் இருக்கின்ற சூழலில் ,இளம் மனைவியைவும் குழ்ந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு அநியாயமாக சென்று சேர்ந்து விட்டார்.

ரம்ஜான் விடுமுறை காலம் என்பதால் அவருடைய உடல் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடங்கப்படவேயில்லையாம் .கண்ணீரும் கம்பலையுமாக ஊரே அவர் உடலுக்காக காத்திருக்கிறது. இது பற்றிய செய்தி கூட எந்த பத்திரிகையிலும் வந்ததாக தெரியவில்லை.

"ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை"

18 comments:

கால்கரி சிவா said...

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் நண்பருக்கு. ஊரில்தான் இவர்களின் பாடு திண்டாட்டம் என்றால் பிழைக்க வந்த இடத்திலுமா? பாவம்

கோவி.கண்ணன் [GK] said...

லக்கியாரே ...!
துக்கமான நிகழ்வு ! ஆழ்ந்த அனுதாபங்கள் !

//ஒரு ஜாண் உயிரை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்//

உயிரை அல்ல வயிற்றை என்று இருக்க வேண்டும் !

Muthu said...

joe,

உங்கள் சோகத்தில் நானும் பங்கெடுக்கிறேன். என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

முத்துகுமரன் said...

மனதை கனக்கச் செய்கிறது. நண்பரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

லக்கிலுக் said...

:-(

கண்ணீர் அஞ்சலி....

துளசி கோபால் said...

ஆழ்ந்த அனுதாபங்கள் ஜோ.
மனசுக்குக் கஷ்டமாப் போச்சுப்பா.
அந்தப் பாட்டு எவ்வளவு உண்மையைச் சொல்லிருச்சு.

கோவி.கண்ணன் [GK] said...

//கோவி.கண்ணன் [GK] said...
லக்கியாரே ...!
துக்கமான நிகழ்வு ! ஆழ்ந்த அனுதாபங்கள் !
//

ஜோ ...!

ஜோவை ... லக்கியாக்கியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் !

ஜோ/Joe said...

கோவியாரே!
அதனாலென்னெ! பரவாயில்லை .பாடல் வரியை திருத்தியதற்கும் நன்றி!

குழலி / Kuzhali said...

மிகவும் துக்ககரமான செய்தி, உங்கள் நண்பரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

உலகிலேயே மிக ஆபத்தான தொழில் என்பதில் கட்டுமரம் மற்றும் படகுகளில் மீன் பிடித்தல் முதலிடத்தில் இருப்பதாக எங்கேயோ படித்தேன், மீன் பிடித்தல் என்பதை இன்னும் நிறைய முறைபடுத்த வேண்டியுள்ளது என்று அந்த கட்டுரையில் படித்தேன், தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளில் இலங்கை இராணுவத்தை எதிர்கொள்வதும் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.

மாயவரத்தான் said...

My deepest regrets.

சிறில் அலெக்ஸ் said...

என் சித்தப்பா ஒருவர் வளைகுடா நாட்டில் இறந்து அவர் உடலை கொண்டுவர கஷ்டப்பட்டது நினைவுக்கு வருகிறது.

நண்பரின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஜோ.

Thangamani said...

மிகவும் துக்ககரமான செய்தி, உங்கள் நண்பரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

பொன்ஸ்~~Poorna said...

ஆழ்ந்த அனுதாபங்கள் ஜோ.. மிகவும் வருத்தமான செய்தி...

எம்.கே.குமார் said...

அன்பின் ஜோ,

ஆழ்ந்த வருத்தங்கள். கண்ணீர்க்கடலில் தவிக்கும் அக்குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்! இயற்கையன்னை அவர்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும்.


எம்.கே.

மெளலி (மதுரையம்பதி) said...

நண்பரை இழந்த உங்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...

Anonymous said...

ஜோ,

வெகுநாட்கள் வலைப்பக்கம் வராததால் இதைப் படிக்கவில்லை. உங்கள் நண்பரின் குடும்பத்தார்க்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் :(

ஜோ/Joe said...

நண்பர் நியோ,
ரம்ஜான் நேரத்தில் மரணமடைந்த நண்பரின் உடல் ,கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து கிறிஸ்துமஸ் சமயத்தில் ஊருக்கு வந்தது .ஊரே அழுதது.

வெற்றி said...

ஜோ,
மிகவும் வருத்தமான பதிவு.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

"விதியே விதியே தமிழ்ச் சாதியை
என் செய நினைத்தாய்" எனும் பாரதியின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

ஒரு பக்கம் சிங்களப் படைகளின் அடாவடித்தனம். சொந்த அரசுகளே கண்டு கொள்ளாதது இன்னொரு புறம். இதை எல்லாம் கடந்து உழைக்கச் சென்ற இடத்திலும் இப்படியா நடக்க வேண்டும். என் சொல்வேன். வீழ்ந்தவர் என் இனத்தவர் என் உறவுகள் என்றதும் இன்னும் சோகம் அதிகமாகிறதே!

இவர்கள் -"துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ?"

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives