Friday, April 28, 2006

சீனரும் மதமும்

பொதுவாகவே ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் ஒரு பொதுவான கருத்துருவாக்கம் நம் மனதில் ஏற்கனவே இருக்கும் .முன்பெல்லாம் இந்தியா என்றால் பாம்பாட்டிகள் ,அரை நிர்வாண சாமியார்கள் நிறைந்த நாடு என்ற தோற்றம் மேலை நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது போல ,சீனாவை பற்றியும் பொதுவான இந்தியர்களிடையே ஒரு கருத்துருவாக்கம் இருந்து வருகிறது ..அவற்றில் சில சீனர்கள் எப்போதும் நூடுல் சாப்பிடுவார்கள் ,அப்புறம் பாம்பு பல்லியெல்லாம் சாப்பிடுவார்கள் , பெரும்பாலும் புத்த மதத்தை பின்பற்றுவார்கள் இப்படியெல்லாம் சில கருத்துருவாக்கங்கள் இருகிறது . நான் 3 முறை சீனா சென்று வந்த போது கூட பலர் என்னிடம் ஏதோ நான் வேறு வழியில்லாமல் பாம்பு பல்லியெல்லாம் சாப்பிட்டிருப்பேன் என்று சந்தேகத்தோடு கேட்டார்கள் .

பொதுவாக இந்தியர்கள் அதிகமாக வெஜிடேரியன் சாப்பிடுவது போலவும் ,சீனர்கள் அதிகமாக புலால் உண்பதாகவும் நம் மக்கள் நினைக்கிறார்கள் ..சீனர்கள் உணவில் தினமும் புலால் சேர்த்து உண்பது உண்மை தான் .ஆனால் கண்டிப்பாக நம்மை விட அதிகமாக காய்கறிகள் ,கீரைகளை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்பவர்கள் அவர்கள் தான் .நம்ம ஊரில் வெஜிடேரியன் என்ற பெயரில் சட்டி சட்டியாக சோறு சாப்பிடுகிறோம் .காய்கறிகளை பெயருக்கு தொட்டுக் கொள்ளுகிறோம் .சீனர்களும் சோறு சாப்பிடுகிறார்கள் .ஆனால் நம் அளவு அல்ல .சோற்றை விட அதிகமாக காய்கறிகள் ,கீரைகள் அதோடு இறைச்சி சம அளவில் சாப்பிடுகிறார்கள் .அதோடு பழங்களும் நிறைய சாப்பிடுகிறார்கள் .ஆக மொத்ததில் காய்கறி சாப்பிடுவதாக சொல்லும் நம்மை விடவும் வித விதமான காய்கறிகள் ,கீரைகள் சாப்பிடுவது சீனர்கள் தான் . இது தவிர உடலுக்கு நலம் தரும் மீன் வகைகளை அதிகமாக சாப்பிடுகிறார்கள்.

அலுவலக வேலை காரணமாக 3 முறை நான் சீனாவுக்கு சென்றிருக்கிறேன் .நான் சென்ற நகரம் ShenZhen .இது ஹாங்காங்-க்கு மிக அருகில் உள்ள சீன நகரம் .ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு நுழைவதற்கான வாயில் என்று சொல்லலாம் .இந்தியாவோடு வளர்ச்சியில் போட்டி போடும் ஒரு நாடாக நினைத்து சீனாவை கற்பனை செய்திருந்த எனக்கு இங்கு அதிர்ச்சி காத்திருந்தது..Shen Zhen உள்கட்டமைப்பு ,வசதிகள் ,தொழில் ,சுத்தம் இவற்றில் உலகத்தரத்தில் இருந்தது என்றால் மிகையல்ல .இன்னும் சொல்லப்போனால் சுத்தம் ,நகர பராமரிப்பு ,வடிவமைப்பு இவற்றில் சிங்கப்பூருக்கு இணையாக இருந்தது என்பதே உண்மை. நாம் அவர்களோடு போட்டி போட்டாலும் இப்போதைக்கு நம்மை விட கிட்டத்தட்ட 20 வருடங்களாவது அவர்கள் முன்னால் இருப்பதாகவே எனக்கு தோன்றியது.

பொதுவாக நான் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டு வரலாறு ,மக்கள் வாழ்க்கை முறை ,கலாச்சாரம் ,உணவு முறை ,மதம் ,சமுதாய கட்டமைப்பு இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முற்படுவேன் . சீனாவிலுள்ள சீனர்கள் சிங்கப்பூர் ,ஹாங்காங்கில் உள்ள சீனர்களைக் காட்டிலும் நட்பு பாராட்டுபவர்களாகவும் ,உதவுகின்ற மனமுள்ளவர்களாகவும் ,பிறர் மேல் கரிசனமுள்ளவர்களாகவும் இருந்தார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து . என்ன தான் சிங்கப்பூரில் நான் சீன உணவு சாப்பிட்டு அனுபவம் இருந்தாலும் ,சீன உணவின் சுவை ,எண்ணற்ற வகைகள் இவற்றை சீனாவில் தான் என்னால் உணர முடிந்தது.

அலுவலக வேலை நிமித்தம் சென்றிருந்ததால் ,நான் அங்கு பணியாற்றிய ,பழகிய அனைவரும் நன்கு படித்த பொறியாளர்களாக இருந்தனர் .ஒரு சிலரைத் தவிர மிகப் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் பேசவும் ,நாம் பேசினால் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும் இருந்தனர் .ஆனால் ஆங்கிலத்தில் ஓரளவு நன்றாக எழுதவும் ,நாம் எழுதினால் நன்றாகவே புரிந்து கொள்பவர்களாகவும் இருந்தனர் . அதனால் எப்போதும் என்னோடு ஒரு பேப்பரும் பேனாவும் வைத்திருப்பேன் .நான் சொல்லி அவர்களுக்கு புரியாத பட்சத்தில் உடனே வாக்கியமாக அதை எழுதி காண்பிப்பேன் .உடனே புரிந்து கொண்டு அவர்களும் பதிலை எழுதிக்காட்டுவார்கள் . மற்ற படி உடைந்த ஆங்கிலத்தில் உரையாடி சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்கள் பல்கலைக்கழகங்களிலே ஆங்கிலம் கற்றிருந்தாலும் உரையாடும் வாய்ப்போ ,தேவையோ இல்லாததால் இந்த நிலமை .ஆனால் இப்போது நிறுவனங்களிலேயே இதற்கான பட்டறைகளை நடத்தி வருகிறார்கள்.

பொதுவாக சீனாவில் உள்ள சீனர்கள் படித்தவர்களாக இருந்தாலும் ,வேலை ,வியாபாரம் தவிர்த்த உலக அறிவு அவர்களுக்கு இல்லாதது கண்கூடாக தெரிந்தது .அரசியல் ,மதம் இவற்றைப்பற்றி நடுத்தர சீனர்கள் கண்டுகொள்வதே இல்லை .அவர்கள் ஒரே நோக்கம் படிப்பு ,வேலை ,பணம் ,நல்ல வாழ்க்கை .மதம் ,சாதி(அப்படி ஒன்றும் கிடையாது) ,மொழி ,சடங்குகள் ,அரசியல் இவற்றிலெல்லாம் அவர்களுக்கு இருக்கும் ஆர்வமின்மை அல்லது தேவையின்மை அவர்களின் முழுக்கவனத்தையும் நேரத்தையும் உழைப்புக்கும் ,வசதிகளை பெருக்கிகொள்வதற்கும் முழுக்கவனத்தையும் செலுத்த முடிவதே அவர்களின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருப்பதாக என்னால் உணர முடிந்தது.

நண்பரொருவர் வார இறுதியில் அவர் குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பதை தியாகம் செய்து என்னையும் வியட்நாமிலிருந்து வந்த இன்னொரு நண்பரையும் நகர உலாவுக்கு அழைத்து சென்றார் .."Little wonders of the world" என்ற மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றார் .உலகின் முக்கியமான சின்னங்களின் சிறிய வடிவங்கள் அங்கே தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன .தாஜ்மகால் ,ஈபில் டவர் உட்பட பல முக்கிய சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தாஜ்மகால் கிட்டத்தட்ட 30 அடி உயரமாகவும் ,ஈபில் டவர் கிட்டத்தட்ட 200 அடி உயரமாகவும் இருந்தது .அவற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்தால் உண்மையிலேயே அந்த உண்மையான சின்னங்களின் முன் நின்று எடுத்தது போல இருந்தது.இந்த பூங்காவின் உள்ளே நுழைந்தவுடன் முதலில் இருந்தது நமது அரசு சின்னமான 'மூன்று சிங்கங்கள்' அச்சு அசலாக சுமார் 20 அடி உயரத்தில் இருந்தது . இந்தியர்களை அங்கு காண்பது அரிது என்பதால் பலரும் என்னை விநோதமாக பார்த்தார்கள் .பின்னர் புன்னகைத்தார்கள் . ஓரிடத்தில் சீன மாது ஒருவர் பாரம்பரிய சீன உடைகள் அணிந்து தலையில் கீரீடங்கள் வைத்து விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார் .திடீரென்று சீன நண்பரிடம் வந்து ஏதோ சொன்னார் .சீன நண்பர் என்னிடம் "இந்த இந்தியரோடு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்கிறார்" என்றார் .பக்கத்தில் நின்ற வியட்நாம் நண்பருக்கு காதில் புகை .ஏதோ ஒரு விநோத ஜந்துவை பார்த்த ஆர்வத்தில் அப்பெண் புகைப்படம் எடுக்க விரும்பியிருப்பார் போலும்.

சீனாவில் புத்த மதம் ,கன்பூசிய மதம் ,இஸ்லாம் ,கிறிஸ்தவம் இன்னும் பல பாராம்பரிய சீன வழிமுறைகளை பின்பற்றுவோர் இருந்தாலும் கிட்டத்தட்ட 70% பேர் மத நம்பிக்கை அற்றவர்கள் தான் .அதிலும் நான் சென்ற நிறுவனத்தில் நான் பழகிய அனைவரும் தாங்கள் எந்த மதத்தை சாரவில்லை என்றே சொன்னார்கள் .பலரிடம் மதம் என்றால் என்ன என்பதை புரிய வைப்பதே பெரும்பாடாக இருந்தது .ஒரு பொறியாளரிடம் பேச்சு வாக்கில் 'நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள் ?" என்று கேட்க அவருக்கு மதம் என்பதே புரியவில்லை ..நான் ஒரு உதாரணத்திற்கு 'I am a christian..what about you?' என்று கேட்க ,அவர் ஓரளவு புரிந்தவராக "Oh! no relegion" என்றார் .நான் உடனே "Do you beleive in GOD?" என்று கேட்க "No..I beleive in myself " என்று தீர்க்கமான பதில் வந்தது .நானும் விடாமல் "What about your parents?" என்று கேட்க ,அவர் சொன்னார் "They also same like me..But my grandparents beleived" ..கிட்டத்தட்ட அனைவருமே இப்படித் தான் சொன்னார்கள் .இவர்கள் இதைப்பற்றியெல்லாம் நினைத்துக்கூட பார்க்காமல் பொழப்பைப் பார்ப்பதால் தான் நம்மைவிட வேகமாக முன்னேறிச் செல்கிறார்களோ என்று தோன்றியது.

நம்மை நகர உலா அழைத்துச் சென்ற நண்பர் இதை விட மேல் .அவரிடம் வழ்க்கம் போல 'I am a christian .what about you?" என்று கேட்க அவருக்கு christian என்றால் என்ன என்று தெரியவில்லை ..நான் சைகையெல்லாம் வைத்து 'Jesus' என்று சொல்ல 'ஓ! யேசு'(சீன மொழியில் யேசு என்ரு தான் சொல்கிறார்கள்)என்று சொன்னார் .அப்பாடா ஒரு வழியாக புரிந்தது. அப்போது டிசம்பர் மாதம் .கிறிஸ்தவ மதம் அங்கு பெரிதாக இல்லையென்றாலும் எங்கும் கிறிஸ்துமஸ் சுவடுகள் .உணவகங்கள் ,ஹோட்டல்கள் எங்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் ,அலங்கரிப்புகள் ,வாழ்த்து வாசகங்கள் என்று வியக்கும் வகையில் இருந்தது .ஒரு ஆடியோ சீடி விற்கும் கடை தென்பட நானும் அந்த சீன நண்பரும் உள்ளே சென்றோம் . அங்கு கிறிஸ்துமஸ் பாடல்கள் எதுவும் கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்தேன் .சீன மொழியிலேயே இருந்தன .சீன நண்பர் அருகில் வந்து "என்ன தேடுகிறீர்கள்" ? என்று கேட்டார் .நான் "கிறிஸ்துமஸ் பாடல்கள் சீன மொழியில் இருக்கிறது .அது போல ஆங்கிலத்தில் கிடைக்குமா?" எனக் கேட்டேன் .அவர் புருவத்தை உயர்த்தி ஒரு கேள்வி கேட்டார் "You worship Yesu .then why do you look for christmas songs?..எனக்கு மயக்கம் வராத குறை .அதன் பிறகு மதம் பற்றி நான் வாய் திறக்கவே இல்லை.

32 comments:

கோவி.கண்ணன் said...

//"You worship Yesu .then why do you look for christmas songs?..//
சிங்கப்பூரில் கிரிஸ்டியன் என்றால் அது மெதடிஸ்டுகளையே குறிக்கும், அதைத்தான் சீனாவிலும் நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கத்தோலிக்கர்களுக்கு கிறித்துவர் அடையாளம் அவர்கள் தருவது இல்லை

ஜோ/Joe said...

கொவிகண்ணன்,
நான் கத்தோலிக்கன் என்று சொல்லவுமில்லை .அவருக்கு சொன்னாலும் தெரியாது .கத்தோலிக்கனாக இருந்தாலும் மெதடிஸ்டாக இருந்தாலும் அது இங்கு பிரச்சனை அல்ல .யேசுவுக்கும் கிறிஸ்துமசுக்கும் சம்பந்தம் இருப்பதே அவருக்கு தெரியாது .இதில் கிறிஸ்தவ பிரிவுகளைப்பற்றி தெரியவா போகிறது.

ஜோ/Joe said...

Dreamer,
தேசப்பற்று அதிகம் என்பது உண்மைதான் .மொழியை பொறுத்தவரை அவர்களுக்கு வேறு மொழி கற்க வேண்டிய அவசியம் இதற்கு முன்னால் இருக்கவில்லை . நாம் ஆங்கில ஆட்சியில் இருந்ததால் ஆங்கிலம் பேசுகிறோம் .அவர்களுக்கு அந்த அனுபவம் இல்லாததால் ,நாம் நம் நாட்டு மொழியிலலாமல் வேறு மொழியில் பேசுவது விநோதமாக தோணலாம்.

துளசி கோபால் said...

ஜோ,

இவுங்க உழைப்பைப் பத்தியும் ஊரைப் பத்தியும் நீங்க சொன்னது ரொம்பச் சரி. கோபால் அடிக்கடி அதாவது
மாசாமாசம் ச்சீனா போயிட்டு வர்றார். (இப்பவும் அங்கேதான் இருக்கார்.) ஒவ்வொருதடவை வந்தபிறகும்
இதைத்தான் சொல்வார். 'எப்படி இருக்கு தெரியுமாம்மா? இனிமே அவுங்கதாம்மா உலகத்துலே நம்பர் 1.
வேற சிந்தனையில்லாம உழைக்கிறாங்க. நம்ம ஊர்லே பாரு. சினிமாவும் அரசியலும் மனுஷனை மயக்கி
வச்சுருக்கறதை'ன்னு. இத்தனைக்கும் அவர் போறது பெரிய நகரம் இல்லையாம்.

ஜோ/Joe said...

துளசி அக்கா,
நீங்கள் சொல்லுவது உண்மை தான் .சீனர்கள் கடும் உழைப்பாளிகள்!

தருமி said...

பாவம் ஜோ, இனிமே அவங்ககிட்ட மதம் பற்றியெல்லாம் கேட்காதீங்க...அவங்களாவது அதெல்லாம் இல்லாம நல்லா இருக்கட்டும் !

ஜோ/Joe said...

தருமி,
விட்டா நான் மதமாற்றம் பண்ணத்தான் சீனாவுக்கு போனதா சொல்லுவீங்க போல.ஹி..ஹி .மதம் இல்லாம அவங்க நல்லா இருக்காங்கண்ணு தானெ நானும் சொல்லியிருக்கேன் .

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல பதிவு ஜோ. புகைப்படங்கள் எடுக்கலையா?

இன்னும் கொஞ்சம் விரிவாக, நீங்க படித்த விதயங்களையும் சேர்த்து எழுதுங்க. (அப்பப்ப)

தருமி said...

அப்படியெல்லாம் உங்கள் பத்தி தப்பா நினைப்பேனா..இப்பதான நம்ம வழிபக்கம் திரும்பியிருக்கீங்க :-)

இளங்கோ-டிசே said...

நல்ல பதிவு ஜோ. மதி கூறியதுமாதிரி படங்களையும் இணைத்தீர்கள் என்றால், காதில் புகை எழும்ப பார்க்கமுடியும் :-).
....
சீன உணவுவகைகள் எனக்கும் மிகப் பிடித்தவை. அவர்கள் அதிகம் காய்கறிகள், கடலுணவுகள் உண்பதால்தான் அதிக காலம் நோய் நொடியில்லாது நெடுங்காலம் வாழ்கிறார்கள் போலும்.

சிங். செயகுமார். said...

தலைவா அந்த போட்டோவெல்லாம் போடாம ஏமாத்தி புட்டீகளே. நம்ம முதல் சந்திப்பில் அந்த முதல் மணிநேரம் காளியம்மன் கோவில் வாசல்ல இந்த நிகழ்வதான் பேசுனோம் ஞாபகம் இருக்கா!...............

G.Ragavan said...

சைவம் என்பது தென்னிந்தயர்களுக்கு சோற்றைப் பிணைந்து வெட்டுவது...வடக்கர்களுக்குச் சப்பாத்தியும் உருளைக்கிழங்கும் பனீரும்.

இது மிகவும் தவறு. காய்கறிகள் நிறையவும் சோறு குறையவும் சாப்பிட வேண்டும்.

மனிதனுக்கு மதம் தேவையா என்றால் ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். எந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டும் நல்லதும் செய்யலாம். கெட்டதும் செய்யலாம். ஆக நமது அறிவைப் பயன்படுத்தி நல்லதே செய்ய வேண்டும். அந்த அறிவு வளர வேண்டும்.

Anonymous said...

இங்கு எங்களது சீன நண்பரும், ஒரு non-beleiver. அவர் அழைத்த விருந்தில் பல வகையான உணவு பதார்த்தங்களை செய்து இருந்தார். குறிப்பாக கடலில் இருந்து கிடைக்கும் ஒரு தாவர வகை உணவு சிறப்பாக இருந்தது.

நீங்களும் தருமியும் கூறியது போல் அவர்களாவது மதமின்றி நிம்மதியாக இருக்கட்டும்.

பாலாஜி-பாரி

Anonymous said...

ஜோ,

அருமையான கட்டுரை. எனக்கு பல வாய்ப்புகள் வந்தும் சீனா செல்ல நான் தயங்கியது அவர்களின் ஆங்கில ப்ரச்னைக்குப் பயந்துதான்.

பாம்பு, பல்லி, பூராண் வகையறாக்களுக்கு நான் என்றும் பயந்தது இல்லை.

மூர்த்தி
www.muthamilmantram.com

ஜோ/Joe said...

அடைக்கலம்,
எ-கலப்பை உபயோகித்து எளிதில் யூனிகோடில் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

இங்கே செல்லவும்
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?op=&cid=3

மாயவரத்தான் said...

நல்லதொரு பதிவு ஜோ.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பானியர்கள் உழைப்பையே தெய்வம் என்று கருதி முன்னேறியதைப் போல, இப்போது சீனர்களின் முறை.

கண்டிப்பாக சீனர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது நமக்கு - ஆனால், இன்னும் இருபது வருடங்களில் மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சி விடுவோம் என்ற பெருமையை (?!)மட்டும் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ilavanji said...

ஜோ,

நல்லதொரு கட்டுரை. புகைப்படங்கள் எங்கேன்னு கேக்கலாம்னு பார்த்தா நிறைய பேரு அதையே கேக்டிருக்காங்க!! அதானே பயணக்கட்டுரை படங்கள் இல்லாமலா?!

//மற்ற படி உடைந்த ஆங்கிலத்தில் உரையாடி சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்கள் பல்கலைக்கழகங்களிலே ஆங்கிலம் கற்றிருந்தாலும் உரையாடும் வாய்ப்போ ,தேவையோ இல்லாததால் இந்த நிலமை // இந்த ஒரு விசயத்தில் அவங்களைவிட பலபடிகள் மேல இருக்கறதுனாலதான் நாம IT, BPO ல இந்த போடுபோடறோம்னு நினைக்கறேன்!

ilavanji said...

ஜோ,

ஒரு புதிய வலைப்பதிவில் கண்டது இது. நீங்களும் அறிய விரும்பகூடும் என நினைத்து இங்கே இடுகிறேன்!

http://oosi.blogspot.com/2006/04/india-rising-news-hour-from-abc.html

arunagiri said...

இதைப்படித்தவுடன் எனக்குத் தோன்றிய சில விஷயங்களைச் சொல்லி விடுகிறேன்.

ஷென்சென் special economic zone-ஆக அறிவிக்கப்பட்டது ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு. எனவே நீங்கள் சொன்ன 20 வருடக்கணக்கு மிகவும் சரிதான். ஆனாலும் சீனாவின் இன்றைய நிலை ஷென்சென்னை வைத்து மட்டும் எடைபோட்டுவிடக்கூடியதல்ல. அதன் பொருளாதார விரிவில் இருக்கும் fundamental weakness, opaque banking system, unaddressed social frustrations, totalitarian set-up, its recent military ambitions போன்ற பல விஷயங்கள் சமூக, பொருளாதார ஆய்வாளர்களைக் கவலைப்படுத்துகின்றன. (சிலர் இந்நிலையினை 1930-களில் நாசி ஜெர்மனியின் வளர்ச்சியோடு ஒப்பிடுகிறார்கள்).

சீனாவில் மத நம்பிக்கை இல்லை என்பதும் தவறு. மதம் என்றாலே அதற்கு ஒரு தோற்றுவித்தவர் இருக்க வேண்டும் ஒரு புனித நூல் இருக்க வேண்டும் என்ற குறுகிய விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் மட்டுமே இது உண்மை. ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் சென்சஸ் எடுக்கத்தொடங்கியபோது அவர்களுக்கு ஏற்பட்ட பெருங்குழப்பம் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் மக்களை well-defined மதகுழுக்களாக எப்படிப் பிரிப்பது என்பதுதான். எல்லாப்பிரிவு மக்களும் எல்லாக் கடவுளர்களையும் மதிப்பதும் வணங்குவதும் மட்டுமல்ல, தோற்றுவித்தவரோ ஒரே ஒரு புனித நூலோ இல்லாமல் இருந்ததும் அவர்கள் குழப்பத்திற்குக் காரணமாயிற்று. இந்த நெகிழ்வுத்தன்மை கீழை நாடுகள் பலவற்றில் (அன்றைய) உண்மை. சீன மக்கள் பெரும்பாலும் சொர்க்கம், ஆவி, முன்னோர் வழிபாடு, டாவோயிசம்,புத்த மதம் மற்றும் கன்பூசியனிசம் இவற்றைப் பின்பற்றுபவர்கள். ஆனால் கடினமான பிரிவுகளோ ஒற்றைத்தன்மையோ இல்லாத நெகிழ்வுடன், எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்பர்களும்கூட.

மட்டுமன்றி ஆபிரகாமிய மத அடிப்படையிலான அவதிகளையும் கொடுங்கோன்மைகளையும் (christian inquision, missionary-biased colonialism, islamist tyranny, crusades போன்ற அவதிகளை) மிகவும் அதிகமாகச்சந்திக்காத வரலாற்றுப்பின்னணி சீனாவுக்கு உண்டு.
இவற்றைச்சந்தித்த நாடுகளில் religious polarisation அதிகம் என்பது கண்கூடு.

(குறிப்பு: ஓபியப்போர்கள் மற்றும் அதனைத்தொடர்ந்த காலங்களில் மேற்கத்திய imperialiசத்தின் உதவியுடன் சீன மக்கள் மீது மிஷனரிகள் அவிழ்த்து விட்ட அதிகார அத்து மீறல்கள், அவமதிப்புகள், கட்டாய மத மாற்றங்கள் சில வணிக நகரங்களைப் பாதித்தது உண்மை என்றாலும் பெரும்பான்மை சீன கிராமப்புறங்கள் இவற்றால் பெரிதும் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் இவற்றை மனதில் கொண்டு இன்றும் சீன அரசாங்கம் வட்டிகனை நோக்கிய விசுவாசத்திற்கும், மதப்பிரசாரத்திற்கும், religious funding முதலியவற்றிற்கும் தடை விதித்துள்ளது).

மற்றபடி ஆபிரகாமிய மத அடிப்படைவாத குருமார்கள் போல கம்யூனிச ஆட்சியாளர்கள் சீன சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவதும், கருத்தியல் எதிர்ப்புகளை சகிக்காத போக்கும் கம்யூனிச சீனாவிலும் காணப்படுகிறது. மத அடிப்படைவாதிகள் மத அடிப்படையில் முன்வைக்கும் சமூகக்கெடுபிடிகள்போல கம்யூனிச சீனாவில் பல உதாரணங்கள் உண்டு. கம்யூனிச எதிர்ப்பின் விளைவை டியானன்மார் சதுக்கத்தில் கண்டோம். கம்யூனிஸ்டாக இருந்தாலொழிய அரசுப்பதவிகளில் அதிகாரம் கிடையாது. ஒரு குழந்தை அதிகமாகப் பெற்றுக்கொண்டதால் பொருளாதார ரீதியாகவும், சிறையில் தள்ளப்பட்டும் அடைக்கப்பட்டும் அடிக்கப்பட்டும் நடத்தப்படும் கொடுமைகள் அதிகம். அங்குள்ள special economic zone தவிர வேறு ஒரு இடத்திலும் ஆட்சியாளர்களின் மேல் கேஸ் போடவோ ஜெயிக்கவோ எளிதில் முடியாது. (economic zone-இல் உள்ள முக்கால்வாசி கேஸ்கள் ஏற்றுமதி இறக்குமதி, அங்குள்ள தொழிற்சாலைப் பிரச்சினை இவற்றைக்குறித்ததே- வெளிநாட்டு முதலீடு என்ற பின்னணியில் மட்டுமே இவை அனுமதிக்கப்படுகின்றன). மத அடிப்படைவாதத்தின் பல கூறுகளையே சீனக்கம்யூனிசமும் உட்கொண்டிருக்கின்றது.

ஆனாலும் சீனாவின் கம்யூனிச அரசில் கம்யூனிசம் தவிர்த்த மற்ற மதங்கள் கடுமையாகப் பின்தள்ளப்பட்டு விட்டதால், மத ரீதியான பிளவு அரசியல் இல்லை என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மையே. மதத்தின் அடிப்படையில் சலுகையோ, சட்டமோ இல்லாததால் தனி மனித முன்னேற்றத்திற்கும் சமூக அதிகாரம் மற்றும் ஆளுமைக்கும் (power and dominance) அதனை leverage-ஆகக்கொள்ள அவசியம் இல்லாமல் போகிறது.

பொதுவாக அமெரிக்கா வந்ததும் முதலில் தெரிவது அதன் அகன்ற தெருக்களும், கார்களும், மால்களும்தான். ஆனால் அது ஒரு முதல் நிலை அவதானிப்பு மட்டுமே என்பது போகப்போகப்புரிந்து போவதுபோலத்தான் சீனம் குறித்த இன்றைய பல விரிந்த விழி அவதானிப்புகளும்.

சீனம் குறித்த சரியான புரிதலுக்கும் ஒப்பு நோக்குதலுக்கும் அதன் தொடர்வரலாறு, சமூகம், மதப்பின்னணி போன்ற பன்முகக் காரணிகளை வைத்து ஆராய்வது முக்கியம் என்ற எண்ணத்தில் இப்பின்னூட்டத்தினைப் பதிவு செய்தேன்.

வசந்தன்(Vasanthan) said...

ஜோ, நல்ல பதிவு.
அருணகிரி சொல்வதில் பெரும்பாலும் ஒத்துப்போகத் தோன்றுகிறது.
நான் சந்தித்த சீனர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் என்றுதான் சொல்கின்றனர். குறிப்பாக இளைய சமுதாயம் அப்பிடித்தான் சொல்கிறது. மோட்சம் நரகம் என்பவற்றிற்கூட நம்பிக்கையற்ற நண்பர் உலகில் பேய் (அல்லது ஆவி) உண்டைன்று நம்புகிறார் என்பதை அறிந்தபோது குழப்பமாகி விட்டது. என்னைப்பொறுத்தவரை, நிறுவனப்பட்ட எந்த மதத்துள்ளும் அவர்கள் சிக்கிக்கொள்ளவில்லையென்பதே உண்மையென்று நினைக்கிறேன். மத நிறுவனங்களின் பெயர்கள், பிரிவுகள்கூட அவர்களுக்குச் சரியாகத் தெரிந்திருக்கவில்லையென்பது உண்மையே.
ஆனால் நானும் பெரும்பான்மையானோரைப் போலவே, சீனர்களில் அதிகம்பேர் புத்தமதத்தைத் தழுவுபவர்கள் என்று நினைத்து வைத்திருந்தேன்.

ஜோ/Joe said...

மாயவரத்தான்,மூர்த்தி,இளவஞ்சி,அருண்கிரி,மதி,டிசே தமிழன்,சிங்.செயக்குமார்,பாலாஜி-பாரி ,வசந்தன் ..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

வஜ்ரா said...

//
அப்போது டிசம்பர் மாதம் .கிறிஸ்தவ மதம் அங்கு பெரிதாக இல்லையென்றாலும் எங்கும் கிறிஸ்துமஸ் சுவடுகள் .உணவகங்கள் ,ஹோட்டல்கள் எங்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் ,அலங்கரிப்புகள் ,வாழ்த்து வாசகங்கள் என்று வியக்கும் வகையில் இருந்தது .
//

ஜோ, சீனர்கள் கிறுஸ்துவர்களைப் பார்த்து பயம் வந்து விட்டது, சீக்கிரமே இதற்கு முடிவு கட்ட ஆரம்பிப்பார்கள்.

பார்க்க

இந்த வலைப்பூவையும் பார்க்க

வஜ்ரா ஷங்கர்.

வஜ்ரா said...

அந்த வலைப்பூவில் துடுப்பு வேலை செய்யவில்லை.

அதற்கான உண்மையான துடுப்பு

வஜ்ரா ஷங்கர்.

ஜோ/Joe said...

//ஜோ, சீனர்கள் கிறுஸ்துவர்களைப் பார்த்து பயம் வந்து விட்டது, சீக்கிரமே இதற்கு முடிவு கட்ட ஆரம்பிப்பார்கள்.//
ஷங்கர்,
உங்கள் கணிப்பு தவறு என நினைக்கிறேன் .சீனாவில் கிறிஸ்துமஸ் என்பது ஒரு மத விழா என்பதை விட அது ஒரு உலகளாவிய கொண்டாட்ட நேரம் என்று தான் பார்க்கிறார்கள் .அதனால் பொருளாதார ,வர்த்தக ரீதியில் கிடைக்கும் ஆதாயங்களை அரசு ஊக்குவிக்குமே தவிர தவிர்க்க நினைக்காது .

arunagiri said...

தனக்குப்போட்டியாக எந்த மதத்தையும் கம்யூனிசம் வளர விடாது. மிக உன்னிப்பாக இஸ்லாமிய தீவிரவாதத்தை கவனித்து தன் நாட்டில் உள்ள இஸ்லாமிஸ்டுகளை கடுமையாக ஒடுக்கி வருகிறது சீனா. கிறித்துவர்களுக்கும் அதே நிலைதான். இந்த ஆபிரஹாமிய மதங்களின் வளர்ச்சி ஒரு trojan horse போல உபயோகப்படுத்தப்பட்டு தன் நாட்டு இறையாண்மைக்கே உலை வைத்து விடும் என்பதை -நம் நாட்டு ஓட்டுப்பொறுக்கி கம்யூனிஸ்டுகள் போல இல்லாமல்- மிகத்தெளிவாகவே சீனக் கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்துள்ளனர்.

Muse (# 01429798200730556938) said...

>>>> இந்த நெகிழ்வுத்தன்மை கீழை நாடுகள் பலவற்றில் (அன்றைய)

உண்மை. <<<<

ஆபிரகாமிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப்படும் நாடுகளில்

இதுதான் உண்மை. ஆபிரகாமிய மதங்களுக்கு முற்பட்ட, அவைகளால்

அழிக்கப்பட்ட மதங்களும் இந்த நெகிழ்வுத்தன்மை கொண்டவையே.

இந்தியாவிலும் இதே நிலைதான். இந்தியாவில் பின்பற்றிவரப்படும்

மதங்களுக்கு ஆபிரகாமிய மதங்கள் சூட்டிய ஒட்டுமொத்த பெயர்தான் ஹிந்து

மதம்.

>>>> மற்றபடி ஆபிரகாமிய மத அடிப்படைவாத குருமார்கள் போல

கம்யூனிச ஆட்சியாளர்கள் சீன சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவதும், <<<<

கம்யூனிஸமும் ஒரு ஆபிரகாமிய மதமே. சீனாவில் பின்பற்றப்படும் மதம்

கம்யூனிஸம்.

>>>> ஒரு குழந்தை அதிகமாகப் பெற்றுக்கொண்டதால் பொருளாதார

ரீதியாகவும், சிறையில் தள்ளப்பட்டும் அடைக்கப்பட்டும் அடிக்கப்பட்டும்

நடத்தப்படும் கொடுமைகள் அதிகம். <<<<

அங்கே யெல்லோ ஹவுஸ் என்றோ அல்லது ரோஸ் ஹவுஸ் என்ற

பெயரிலோ நடந்துவரும் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள்

பற்றியும் யாராவது எழுதலாம்.

>>>>> தனக்குப்போட்டியாக எந்த மதத்தையும் கம்யூனிசம் வளர விடாது.

மிக உன்னிப்பாக இஸ்லாமிய தீவிரவாதத்தை கவனித்து தன் நாட்டில் உள்ள

இஸ்லாமிஸ்டுகளை கடுமையாக ஒடுக்கி வருகிறது சீனா.<<<

சீனாவின் மேற்கு எல்லையோரமுள்ள பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம்

என்று கேள்விப்படுகிறேன். இவர்களை அடக்கி வைப்பதம் மூலம்

கம்யூனிஸம் செய்துவருகின்ற நல்ல விஷயங்களின் எண்ணிக்கையில் ஒன்று

கூடுகிறது.

பல சீன நாவல்கள் இந்த மக்களைப் பற்றிய கதைகளை லேசு பாசாகத்

தருகின்றன. நான் "ஸ்மைலிங்க் ப்ரௌட் வான்டரர்" என்கிற கதையின்

பெரும்பான்மையான பகுதிகளைப் படித்தேன். மார்ஷியல் ஆர்ட்டுகளை

ரசிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் நாவல் அது. எனக்கும் பிடித்திருந்தது.

(மதக் கொள்கையை பின்பற்றுவது போல மார்ஷியல் ஆர்ட்டுகளை

பின்பற்றுபவர்களும் உண்டு என்று கேள்விப்பட்டேன். உண்மையா?)

அந்த புத்தகம் இந்தியாவில் கிடைக்குமா?

இலக்கியம் பற்றிப் பேசும்போது வேறொன்றும் ஞாபகம் வருகிறது.

கம்யூனிஸம் பெண்களின் மீது நடத்தி வரும் வன்முறை. "வொயில்ட்
ஸ்வான்ஸ்" படித்திருக்கிறீர்களா?

Muse (# 01429798200730556938) said...

அருணகிரி, ஜோ இருவரின் பதிவுகளும் அருமை. பல விஷயங்கள் தெரிந்தன.

Muse (# 01429798200730556938) said...

>>> நம் நாட்டு ஓட்டுப்பொறுக்கி கம்யூனிஸ்டுகள் போல இல்லாமல் ....<<<<

நம் நாட்டில் ஓட்டுப்பொறுக்கியாகவிருப்பது கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல. மற்ற கட்ஷிகளும் அப்படித்தான். பி ஜே பியைத் தவிர. பி ஜே பியானது ஹிந்துக்களின் ஓட்டுக்களை பொறுக்கிக்கொண்டு, அவர்கள் முதுகிலேயே குத்தும் ஒரு உன்னதமான அமைப்பு.

Anonymous said...

We should take joint effort to send Vidaadhu Karuppu and couple of others to china and start spreading the gospel around that arya/dravida stuff. That'll take care of the competitive threat that china is posing. ;-)

வஜ்ரா said...

//
சீனாவில் கிறிஸ்துமஸ் என்பது ஒரு மத விழா என்பதை விட அது ஒரு உலகளாவிய கொண்டாட்ட நேரம் என்று தான் பார்க்கிறார்கள் .அதனால் பொருளாதார ,வர்த்தக ரீதியில் கிடைக்கும் ஆதாயங்களை அரசு ஊக்குவிக்குமே தவிர தவிர்க்க நினைக்காது .
//

ஜோ,

பொருளாதார ரீதியில் அது ஊக்குவிக்கப் படும்...உண்மையான். ஆனால் மக்கள் கம்யூனிசம் என்ற மதத்திலிருந்து கிறுத்துவம் என்ற மதத்திற்கு மாறாமல் என்ன செய்யவேண்டுமோ அதையும் செய்வார்கள். செய்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன், பத்திரிக்கையில் வெளிவராது!!

வஜ்ரா ஷங்கர்.

Anonymous said...

பயணங்கள் தொடரட்டும்.
வாழ்த்துக்கள் ஜோ!!.

அன்புடன்,
துபாய் ராஜா.

ஜோ/Joe said...

//ஆனால் மக்கள் கம்யூனிசம் என்ற மதத்திலிருந்து கிறுத்துவம் என்ற மதத்திற்கு மாறாமல் என்ன செய்யவேண்டுமோ அதையும் செய்வார்கள். செய்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன், பத்திரிக்கையில் வெளிவராது!!
//
ஷங்கர்,
சில கிறிஸ்தவ சபைகள் தான் ரகசியமாக செயல்படுகிறது .நீங்கள் சொன்னவற்றை அரசாங்கம் வெளிப்படையாகவே செய்கிறது.

துபாய் ராஜா,
நன்றி!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives