Wednesday, November 30, 2005

ஷெப்பர்ட் புரோக்ராம்

"இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது" என்று மகாத்மா காந்தி சொன்னார்.நம் நாடு இப்போது பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி பெற்று வருகிறது .முன்பெல்லாம் பல்வேறு நாட்டினர் இந்தியாவென்றால் எதோ பாம்பாட்டிகளும்,பஞ்சப்பரதேசிகளும் நிறைந்த நாடு என்று நினைத்திருந்த நிலை மாறியது மட்டுமல்ல,இப்போது இந்தியாவில் எல்லோரும் பிறக்கும் போதே கையில் மடிக்கணிணியோடு தான் பிறக்கிறார்கள் போல என்ற ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் .பெருமையாகத்தான் இருக்கிறது .ஆனால் உள்ளுக்கும் நமது வளர்ச்சி சீராக பரவலாக்கப்பட்ட வளர்ச்சியாக இருக்கிறதா என்றால் ,இல்லை.

ஒரு பக்கம் தொழில் நுட்ப அறிவில் கொடிகட்டுகிறோம்,இன்னொரு பக்கம் மிகப்பெரிய சதவீத மக்கள் எழுத்தறிவு கூட பெறவில்லை .ஒரு பக்கம் அணுக்குண்டு வெடித்து பெருமையை பறைசாற்றுகிறோம் ,அதே நேரத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத கிராமப்புறங்கள் ஏராளம்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .இப்படி பரவலாக்கப்படாத வளர்ச்சியின் மூலம்,மக்களில் பொருளாதார நிலை இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே சென்றால் ,வல்லரசு என்கிற நம் கனவு வெறும் கனவாகவே இருக்கும்.

சரி.அரசியல்வாதிகளும் ,நமது சமுதாய சிக்கல்களும் இத்தகைய சீரான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று மட்டும் சொல்லி தப்பித்து விட முடியாது .வளர்ந்து வரும் இளைய தலைமுறை குறைந்த பட்சம் நாட்டின் சீரற்ற வளர்ச்சியின் நிலையைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.நகரத்திலே பிறந்து வளரும் இன்றைய இளைஞர்கள் பலருக்கு கிராமங்களின் உண்மையான நிலை தெரிவதில்லை .அல்லது சினிமாவில் வருவது போல எல்லா கிராமங்களிலும் மலைகளும் ,ஆறும் ,பச்சை பசேல் புல் வெளிகளும் இருப்பதாக அவர்கள் நினைக்கலாம் .நகரங்களைத்தாண்டி சிறிய கிராமங்களில் மக்களின் நிலை ,அவர்களின் பிரச்சனைகள் ,அது குறித்த குறைந்த பட்ச அனுதாபம் இருப்பதாக தெரியவில்லை.

நகரங்களில் மேல்த்தட்டு வர்க்கம் பெரும்பாலும் ,எல்லாவற்றுக்கும் அரசியல் வாதிகளை குறைகூறிக்கொண்டு,எதிலும் தன் காரியம் மட்டும் நடந்து விட்டால் போதும் என்ற மனநிலை நிலையோடு இருக்கிறார்கள் ,அறிவு ஜீவி எழுத்தாளர்கள் காபி தூள் வாங்க முடியாத அளவுக்கு குடும்பம் தள்ளப்பட்டது தான் நாட்டின் உச்ச கட்ட வறுமை என்ற ரீதியில் கண்ணீர் கதை எழுதி பாராட்டும் வாங்கி விடுவார்கள்.

படித்த இளைஞர்களிடையே ராமன் ஆண்டாலென்ன ,ராவணன் ஆண்டாலென்ன என்ற மனநிலை இப்போது பெருகி வருகிறது.நகரத்தில் படித்து அங்கேயே வளருகின்ற இளைஞன் இந்தியாவில் கிராமங்களின் நிலை எப்படி இருக்கிறது என்று அனுபவ பூர்வமாக அறிந்து கொள்ளும் நிலை இங்கே இல்லை .மாறாக ,வறியவர்கள் வாழ்க்கைப் போராட்டம் பலருக்கு கேலிப்பொருளாகவே இருக்கிறது .பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க வேண்டிய கல்விக்கூடங்கள் இதற்காக பெரிதாக எதையும் செய்வதில்லை.மக்கள் வரிப்பணத்தில் படிக்கும் பலர் அதில் பெரும்பான்மையாக உள்ள மக்களின் நிலை பற்றி குறைந்த பட்ச அறிவைக்கூட பெறுவதில்லை.

இத்தகைய நிலையை உணர்ந்து ,மாணவர்கள் குறைந்த பட்ச சமுதாய அறிவை,பரிவை அனுபவபூர்வமாக பெற வேண்டும் என்று விரும்பி அதற்கான திட்டங்களை வகுக்கும் கல்வி நிறுவனங்கள் இல்லையென்று சொல்ல முடியாது .அதற்கு நான் பயின்ற திருச்சி புனித வளனார் கல்லூரி (st.Joseph's College) ஒரு உதாரணம் .

எங்கள் கல்லூரியில் ஷெப்பர்ட் புரோக்ராம்(Shepherd Programme) என்ற கட்டாய பாடத்திட்டம் இருக்கிறது .இதன் படி இளநிலை பட்டப்படிப்பில் ,ஒவ்வொரு வகுப்புக்கும் திருச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய ஒரு கிராமம் ஒதுக்கப்படும் .மாணவர்கள் தங்கள் மூன்றாண்டு காலத்தில் இந்த கிராமத்துக்கு நேரடியாக சென்று அந்த மக்களோடு தங்க வேண்டும் ,அவர்களுக்கு பணி செய்ய வேண்டும் .வகுப்பு மாணவர்கள் தங்களுக்குள் விவசாயம் ,மின்சாரம்,கல்வி இப்படி பல குழுக்களாக பிரித்துக் கொண்டு அது குறித்து அந்த கிராமத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்கு அந்த மக்களை ஊக்குவித்து ,இணந்து பணியாற்றி ,அதிகாரிகளை அணுகும் முறைகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து ,அவர்களோடு இணைந்து அந்த பிரச்சனைகளை ஓரளவாவது தீர்க்க பாடுபடவேண்டும்.கல்லூரியில் இதற்கென்று ஒரு துறையே இருக்கிறது .ஒவ்வொரு மாணவரும் குறைந்த பட்சம் 100 மணி நேரமாவது இது தொடர்பான பணிகளில் ஈடு பட்டிருக்க வேண்டும் .இல்லையென்றால் அவர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற முடியாது .

குறிப்பிட்ட நாட்களில் அனைத்து மாணவர்களும் கிராமத்துக்கு சென்று முகாமிட வேண்டும் .அதற்குண்டான செலவுகள் கல்லூரி ஏற்றுக்கொள்ளும் .(இது பல முறை நடக்கும்) .அந்த மக்களோடு பழகி அவர்கள் உணர்வுகளை அறிந்து ,அவர்கள் குறைகளை கேட்டறிந்து ,அதற்கு நம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் .

எங்கள் வகுப்புக்கு இது போல் ஒரு கிராமம் தரப்பட்டது .முதல் முகாமுக்கு சென்ற போது மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்தது .திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலுள்ள சின்னபனையூர் என்ற ஒரு கிராமம் .அது வரைக்கும் தான் பேருந்து செல்லும் .எங்களுக்கு கொடுக்கப்பட்ட கிராமமோ அங்கிருந்து முள் புதர்கள் வழியாக 3 கி.மீ நடக்க வேண்டும்.மாணவர்கள் மிகவும் ஜாலியாக நடந்து சென்று ஊரை அடைந்தோம் .ஒரு சிறிய கோவில் தென்பட்டது .அதை நாங்கள் நெருங்கிய சில நிமிடங்களில் கிட்டத்தட்ட 100 பேர் எங்களை சூழ்ந்து கொண்டார்கள் .நகர நாகரீக உடைகளோடு சென்ற எங்களை அவர்கள் ஏதோ அதிகாரிகள் என்று நினைத்தார்கள் போலும் .எடுத்த உடனேயே "ஐயா! பெரிய மனசு பண்ணி எங்களுக்கு லோன் வாங்கிக் கொடுங்கய்யா" என்று ஆளாளுக்கு கேட்க ஆரம்பித்து விட்டார்கள் .அவர்களை அமைதிப்படுத்தி ,நாங்கள் மாணவர்கள் என்றும் ,நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்றும் சொன்னோம் .4 நாட்கள் அவர்கள் ஊரிலேயே தங்கப்போகிறோம் என்றும் சொன்னோம் .மிகுந்த மகிழ்ச்சியடைந்த அவர்கள் ,எங்களை அருகில் உள்ள ஆரம்ப பாடசாலையில் தங்க ஏற்பாடு செய்தார்கள் .

ஊரை ஒரு நோட்டம் விட்டேன் .சுமார் 200 வீடுகள் இருந்தன .ஒன்றை தவிர அத்தனையும் ஓலைக்குடிசைகள் .ஒரு சிறிய கோவில் ,அருகில் நாங்கள் தங்கியிருந்த ஆரம்ப பாடசாலை .அதில் ஒரே ஒரு ஆசிரியர் .அவர் தான் தலைமையாசிரியர் .எல்லாமே அவர் தான் .அவர் விடுப்பு எடுத்தால் பள்ளிக்கு விடுமுறை தான் .1 முதல் 5 வரை எப்படி ஒருவர் பாடமெடுக்க முடியும் என்கிறீர்களா? 1 மற்றும் 2 -க்கு ஒன்றாக வகுப்பு ,அந்த நேரத்தில் 3,4,5 மாணவர்கள் வெளியே விளையாடுவார்கள்.அடுத்த ஒரு மணிக்கு 3,4,5-கு ஒன்றாக வகுப்பு ,மற்றவர்கள் விளையாட்டு ..நகரத்தில் ரொம்பவும் தான் அலுத்துக்கொள்ளும் மாணவர்களே! நினைத்துப்பாருங்கள்.இந்த ஊரில் அப்போது ஒரே ஒருவர் தான் 10-வது வகுப்பு தாண்டியிருந்தார்.மக்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் கூலி வேலை செய்கிறார்கள் .பெண்கள் சுள்ளி பொறுக்குகிறார்கள்.

காலையில் எழுந்து ஆண்கள் கூலி வேலைக்கு செல்ல ,பெண்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டோ அல்லது தங்களோடு சேர்த்துக்கொண்டோ சுள்ளி பொறுக்க செல்கிறார்கள் .இருட்டியதும் வீடு திருபுகிறார்கள் .கஞ்சி மீதி இருந்தால் சாப்பிட்டு படுக்கிறார்கள் .இது தான் அவர்கள் வாழ்க்கை..30 கி.மீ தூரத்திலிருக்கும் திருச்சிக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை .வெளியுலகம் பலருக்கு ,அதிலும் பெண்களுக்கு சுத்தமாக தெரியவில்லை .உலகமே இப்படித்தான் இருக்கும் போல என்று அவர்கள் நினைத்துக் கொள்வதால் தான் ரொம்பவும் அவர்கள் அலட்டிக்கொள்வதில்லையோ ?

முதல் நாள் மாண்வர்கள் நாங்களே சமைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்ய ,ஒரு பிரகஸ்பதி உப்புமா செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து ,பசியோடு சென்று பார்த்தால் அது களி-யாக இருந்தது .வேறு வழியின்றி நாங்கள் சாப்பிட்டிக்கொண்டிருக்க ,சில கிராமத்து பெரியவர்கள் பரிவோடு வந்து விசாரித்தார்கள் .இனிமேல் தாங்களே உணவு தருவதாக சொல்ல ,நாங்கள் அனைத்துப் பொருட்களும் வாங்கித் தருகிறோம் .உங்களுள் யாராவது சமைத்துத் தந்தால் போதும் என்று சொல்ல ..அடுத்த நாளில் இருந்து சுவையான உணவு ,அந்த மக்களின் அன்போடு சேர்ந்து கிடைத்தது.

அந்த மக்களோடு நாங்கள் அளவளாவியது..ஓவ்வொரு குடிசையாக சென்று பேசியது ,விளையாட்டுப் போட்டி நடத்தியது,கலைநிகழ்ச்சிகள் நடத்தியது ,அரசியல் பேசியது ,ஊரை சுத்தம் செய்தது ,அதிகாரிகளை அணுகும் முறைகளை சொல்லிக்கொடுத்தது,வேறு பல பயனுள்ள பணிகளை ஆற்றியது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த மக்கள் அந்த வறுமையிலும் இயலாமையிலும் எங்களிடம் காட்டிய அன்பும் அக்கரையும் மறக்க முடியாதது.

எங்கள் கல்லூரி தொடந்து நடத்தி வரும் இந்த (கட்டாய) திட்டம் குறிப்பிட்ட அந்த கிராமங்களுக்கு எந்த அளவுக்கு பயனளித்தது என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை .ஆனால் என் போன்ற மாணவர்கள் ,என்னை விட நகர சூழலில் இருந்து வரும் மாணவர்களுக்கு இது ஒரு மனத்திறவு கோல் என்பதில் ஐயமில்லை.இந்த எளியவர் வாழ்க்கை மலராதோ,மாறாதோ என்று ஒவ்வொரு மாணவனும் ஏங்கியிருப்பான் என்பது திண்ணம் .அந்த எண்ணம் வந்து விட்டால் ,அந்தப் புள்ளியிலிருந்து தான் நம் 'வல்லரசு' கனவு நனவாக ஆரம்பிக்க முடியும்.

அதனால் தான் எங்கள் கல்லூரியிலிருந்து ஒரு 'அப்துல் கலாம்' உருவாக முடிந்ததோ?


மேலும் தகவல்களுக்கு சுட்டி இங்கே

31 comments:

Anonymous said...

வல்லரசாவதைப் பற்றிய கனவுகள் தான் சுகமாக இருக்கின்றன. நீங்கள் நல்லரசாவதைப் பற்றி பேசுகிறீர்கள். வல்லரசில் வல்லானின் பங்களிப்பும், பயன்பெறுதலும் இருக்கும். நல்லரசில் எல்லோரின் பங்களிப்பும் பயன்பெறுதலும் இருக்கும். நல்ல ஒரு திட்டத்தை உங்கள் கல்லூரி செய்கிறது. இப்போதும் இத்திட்டம் நடக்கிறதா?

(உங்கள் பதிவில் நிறுத்தக்குறியைப் பயன்படுத்துவதில் ஏதோ பிரச்சனை இருப்பது போலத் தெரிகிறது)

ஜோ/Joe said...

தங்கமணி,
கருத்துக்கு நன்றி!
இப்போதும் நடைபெறுகிறது..இப்போது பதிவில் சுட்டி கொடுத்திருக்கிறேன்.பார்க்கவும்.

ராஜ்..நன்றி!

துளசி கோபால் said...

அதெப்படிங்க., இந்த சோசியல் சர்வீஸுக்குப் போறப்பல்லாம் 'உப்புமா' அதிகாரபூர்வ உணவாகி விடுது?

உப்பில்லாம உப்புமா செஞ்சவுங்க நாங்க:-))))

J S Gnanasekar said...

it is good. continue this type of ventures.

ஜோ/Joe said...

துளசியக்கா,ஞானசேகர் நன்றி.

என்ன இது? எல்லோரும் உப்புமா பத்தியே பேச ஆரம்பிச்சுடீங்க?

G.Ragavan said...

ஜோ, இது ஒரு நல்ல முயற்சி. நல்ல எடுத்துக்காட்டு. இது போன்ற முயற்சிகளை மற்ற கல்லூரிகளிலும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பயன் பரவலாகும். எதெதெற்கோ போராட்டம் நடத்துகிறோம். இதற்கும் நடத்தினால் நன்றாகத்தான் இருக்கும்.

அப்புறம் இன்னொரு விஷயங்கள். பிரச்சனைகள் பலவிதம். இதுவும் ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சனையை அறிய நீங்கள் ஷெப்பர்டு புரோகிராம் நடத்துகின்றீர்கள். இதுபோல மனவியல் துயரம் உள்ளவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் உண்டு. இந்தப் பிரச்சனை பட்டிக்காடுகள் முதல் பட்டினக்கரை வரை பரவியிருக்கின்றது. எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் இதே போல சில புரோக்ராம்களை நான் கெசட்டேடு ஆர்கனைசேஷன் மூலம் நடத்தி வருகின்றார்கள். இந்தப் பிரச்சனையும் பலருக்குத் தெரியாததே.

மொத்தத்தில் எனக்குத் தெரிவது என்னவென்றால் அரசியல்வாதிகளின் பின்னால் கூச்சல் போடுவதை விட, இது போன்ற ஆக்கபூர்வமான சேவைகள் நிச்சயம் பயன் கொடுக்கும். இந்தத் திருப்பணியும் வளர்ந்து பயனளிக்கட்டும். இந்தப் பணியே தேவையில்லை என்ற நிலையை இந்தியா அடையட்டும்.

அன்பு said...

நல்ல எண்ணம், நல்ல தகவல், நல்ல பதிவு. தொடருங்கள்...

Anonymous said...

மற்றொரு நல்ல கருத்துக்களுடன் கூடிய பதிவு.

சாதாரணமாக நட்சத்திர வாரத்தில் தொடர்ந்து நட்சத்திரம் எழுதுவதை நான் படித்ததில்லை. ஆரம்ப பதிவிலேயே நம் நாட்டிற்கு தற்போது தேவையான மிகவும் சென்சிட்டிவான விஷயத்தை யாருமே எதிர் கருத்து கூற முடியாத படி மாறுபட்ட கோணத்தில் அணுகி என் கவனத்தை ஈர்த்தீரகள். இதோ இப்பொழுதும் அருமையான விஷயங்கள் - இளைஞர்களின் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணும் விதத்தில் எழுதியுள்ளீர்கள். கண்டிப்பாக ஒவ்வொரு காலேஜும் நடைமுறை படுத்த வேண்டிய ஒரு விஷயம் இது.

வளரும் இளைய சமுதாயம் எதிர் காலத்தை குறித்து சிந்திக்கும் முக்கிய காலகட்டத்தில் தனது நாட்டின் உண்மையான நிலையை அறிந்திருக்க வேண்டும். என்றாலே நாளைய இன்னாட்டின் மன்னர்களாவது நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொள்வார்கள்.

தொடர்ந்து வரும் உங்கள் பதிவுகளை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளீர்கள். அப்படியே தொடருங்கள். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். வாழ்த்துக்களுடன் இறை நேசன்.

அன்பு said...

மொத்தத்தில் எனக்குத் தெரிவது என்னவென்றால் அரசியல்வாதிகளின் பின்னால் கூச்சல் போடுவதை விட, இது போன்ற ஆக்கபூர்வமான சேவைகள் நிச்சயம் பயன் கொடுக்கும். இந்தத் திருப்பணியும் வளர்ந்து பயனளிக்கட்டும். இந்தப் பணியே தேவையில்லை என்ற நிலையை இந்தியா அடையட்டும்.

ராகவன் சொல்வது முற்றிலும் சரி.

டிபிஆர்.ஜோசப் said...

உங்க பதிவு ஒரு ஆக்கபூர்வமான சிந்தனையை தூண்டியிருக்கு ஜோ.

நான் காட்பாடி Don Bosco பள்ளியில் (1958 - 1966) படித்துக்கொண்டிருக்கும்போதே இப்படி ஒரு Social Service and Public Awareness (SSPA) Project பத்தாவது மற்றும் பதினோராவது (இப்போதைய +1) மாணவர்களுக்கு கட்டாயமாக இருந்தது. வாரம் இரு முறை பகல் முழுவதும் பள்ளியை யில் சுற்றிலுமுள்ள சுமார் 10 கிராமங்களை பள்ளி தத்தெடுத்துக்கொண்டிருந்த கிராமங்களுக்கு சென்று துப்புரவு, சுகாதாரம், இரவு பள்ளி என பல்வேறு பணிகளை கிராமத்தாருடன் சேர்ந்து செய்வோம். இப்போது உள்ளதா என்று தெரியவில்லை.

ஜோ/Joe said...

ராகவன்,
//மொத்தத்தில் எனக்குத் தெரிவது என்னவென்றால் அரசியல்வாதிகளின் பின்னால் கூச்சல் போடுவதை விட, இது போன்ற ஆக்கபூர்வமான சேவைகள் நிச்சயம் பயன் கொடுக்கும். இந்தத் திருப்பணியும் வளர்ந்து பயனளிக்கட்டும். இந்தப் பணியே தேவையில்லை என்ற நிலையை இந்தியா அடையட்டும்.//
அற்புதமா சொன்னீங்க..நன்றி.

அன்பு,ஜோசப் ஐயா..மிக்க நன்றி.

இறைநேசன்,
உங்கள் கருத்துக்கும் ,தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி.

குழலி / Kuzhali said...

ஜோ நட்சத்திரம் பிரகாசிக்கின்றது, எங்கள் கல்லூரியில் தேசிய நலப் பணித்திட்டம் சார்பாக வருடத்திற்கொரு முறை ஒரு கிராமத்தில் 10 நாள் முகாமிட்டு பணியாற்றுவோம்... அது ஒரு சுகமான அதே சமயம் வேதனையான அனுபவம், கிராம மக்களின் துயரங்கள் எல்லாம் மற்றொரு பரிமானத்தில் தெரிந்தன.

//வல்லரசாவதைப் பற்றிய கனவுகள் தான் சுகமாக இருக்கின்றன. நீங்கள் நல்லரசாவதைப் பற்றி பேசுகிறீர்கள். வல்லரசில் வல்லானின் பங்களிப்பும், பயன்பெறுதலும் இருக்கும். நல்லரசில் எல்லோரின் பங்களிப்பும் பயன்பெறுதலும் இருக்கும்
//
வல்லரசாவதைவிட எப்போதும் நல்லரசாக இருப்பதுவே எல்லோருக்கும் நல்லது, மகிழ்ச்சியும் கூட...

ஜோ/Joe said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி குழலி!

தருமி said...

'அக்கினிக் குஞ்சொன்று எடுத்து
ஆங்கே ஒரு பொந்தினில் வைக்கும்' இந்த நல்ல முயற்சி என்றும் உங்கள் கல்லூரியில் நடந்தேற, எங்கள் எல்லோரின் வாழ்த்துக்களை அந்த துறையினருக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களின் இந்த தொண்டு தொடர நம் எல்லோரின் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

ஜோ/Joe said...

தருமி, அப்பாடா..ஆளைக்காணோமேண்ணு பார்த்தேன்.நன்றி
//எங்கள் எல்லோரின் வாழ்த்துக்களை அந்த துறையினருக்குத் தெரியப்படுத்துங்கள். //
கண்டிப்பா தெரியப்படுத்துறேன்

முத்துகுமரன் said...

அற்புதமான செய்தி.

நீங்கள் குறிப்பிட்டது போல் நகரத்தில் வாழும் பெரும்பாலனவருக்கு கிராமங்களைப் பற்றியும், அவர்தம் வாழ்க்கைச் சூழல்கள் பற்றியும், அவர்கள் பிரச்சனைகள், தேவைகள் பற்றியும் விழிப்புணர்வு இன்றியே இருக்கிறார்கள். இது போன்ற ஷெப்பர்ட் புரோகிராம்களை அனைத்து கல்லூரிகளிலும் கட்டாயப் பாடமாக்கினால் இன்னும் அதிக அளவில் பயந்தரும். ஏனென்றால் இந்தியாவில் திட்டங்களுக்கும் அதனால் பயன்பெறுபவர்களுக்குமான இடைவெளி அதிகம். ஏனென்றால் பலருக்கு தங்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்கள் இருப்பது பற்றிய விழிப்புனர்வு கூட இன்றி வாழ்கிறார்கள். இளைஞர்கலுக்கு இது பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டால் நாடு நிச்சயம் முன்னேற்றப்பாதையில் செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை...

நீங்கள்தான் இந்த வார நட்சத்திரமா? வாழ்த்துகள்...

சமூக விழுப்புணர்வுள்ள இது போன்ற படைப்புகளை தொடர்ந்து தாருங்கள். அதற்கு எப்போதும் இரட்டை பாராட்டு உண்டு...

அன்புடன்
முத்துகுமரன்

மணியன் said...

அருமையான ஆக்கம். அனைவரும் உடன்படும் கருத்துக்கள். நல்வழி காட்டும் கல்லூரியின் சுட்டி. நட்சத்திரம் ஜொலிக்கிறது.

பழூர் கார்த்தி said...

ஜோ, நல்லா சொல்லியிருக்கீங்க, நானும் நம்ம கல்லூரியில்தான் படித்தேன்.. பூதக்குடி (மதுரை செல்லும் வழி) கிராமம்தான் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமம், நிறைய செய்திகள் இருக்கின்றன இதைப் பற்றி சொல்ல, நேரமிருக்கும் போது நம்ம வலைப்பக்கம் வந்து பாருங்க, திருச்சியைப் பற்றி எழுதியிருக்கேன்.. வாழ்த்துக்கள் நட்சத்திர வாரத்திற்கு :-)

தாணு said...

எங்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலைய போஸ்டிங் சமயங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அப்போது ஏற்படும் இதைகைய எண்ணம், அதன் பிறகு பணியாற்றும் சமயங்களில் மறுபடியும் தோன்றுவதில்லை. தனது குடும்பம், வாழ்க்கை வசதி போன்றவை முன்னிறுத்தப் படும்போது, பொதுநலம் கொஞ்சம் கீழிறங்கி விடுகிறது.

குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு ஜோ. நண்பர்களுக்கு இந்தப் பதிவின் சுட்டியை அனுப்பலாம் என்று இருக்கிறேன். செய்யலாமா?

ஜோ/Joe said...

முத்துக்குமரன்..உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
மணியன் ,தாணு நன்றி!
//நேரமிருக்கும் போது நம்ம வலைப்பக்கம் வந்து பாருங்க, திருச்சியைப் பற்றி எழுதியிருக்கேன்.. வாழ்த்துக்கள் நட்சத்திர வாரத்திற்கு :-)//
கண்டிப்பாக பார்க்கிறேன்.நன்றி!
//நண்பர்களுக்கு இந்தப் பதிவின் சுட்டியை அனுப்பலாம் என்று இருக்கிறேன். செய்யலாமா?//
என்ன குமரன்..இதுக்கெல்லாம் போய் கேட்கலாமா? நன்றி!

ஜோ/Joe said...

சோம்பேறி பையன்,
//நேரமிருக்கும் போது நம்ம வலைப்பக்கம் வந்து பாருங்க, திருச்சியைப் பற்றி எழுதியிருக்கேன்.. வாழ்த்துக்கள் நட்சத்திர வாரத்திற்கு :-)//
கண்டிப்பாக பார்க்கிறேன்.நன்றி!

இளங்கோ-டிசே said...

இப்போதுதான் இதை வாசிக்கச் சந்தர்ப்பம் வாய்த்தது. நல்ல விடயத்தைப் பற்றி எழுதியியுள்ளீர்கள்,ஜோ. நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

எனது ஆதரவும் பாராட்டுக்களும்.
நல்லதொரு பதிவு. நட்சத்திர வாரத்தில் மட்டும்தானா இப்படி?

ஜோ/Joe said...

வசந்தன் வாங்க! என்ன நீங்க.உங்களை எதிர்பார்த்தேன் .துவக்க விழாவுக்கும் வரல்ல .அப்புறம் நிறைவுப் பேருரை பொதுக்கூட்டத்துக்கும் வரல்ல .ஹி..ஹி..

நன்றி!

Anonymous said...

adei Milta antha uru peru 'Thalinchi' da ghabagam varutha nanum ungooda than irunthen.ippo singaiyila than irukken

ஜோ/Joe said...

அனானிமஸ் நண்பா,
ஊர் பெயரை ஞாபகப்படுத்திய நீ உன் பேரை சொல்லாமல் விட்டுடியேப்பா? djmilton at gmail.com -க்கு ஒரு மயில் அனுப்புப்பா!

Radha N said...

கிராம சேவை அருமையான திட்டமாக இருக்கிறது. மற்ற கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தினால், மாணவர்களின் மனம் பண்படையும்.

தருமி said...

நானும் ஏதோ ஒரு புதுப்பதிவு ஒண்ண கடைசியில ஒருவழியா ஜோ போட்டுட்டார்போல அப்டின்னு நினச்சுவந்தா ..பழசு.
சரி..சரி...புதுசா பதிவு எதுவும் போடறதில்லையென (ஆங்கிலப்)புத்தாண்டு தீர்மானம் எடுத்திருந்தா நான் என்னத்த சொல்றது.. ஏதோ, செய்யுங்க...உங்களுக்கே நல்லா இருந்தா சரி....

ஜோ/Joe said...

தருமி,
தீர்மானமெல்லாம் ஒன்றுமில்லை..எதிர்பாராத வேலைபளு தான் காரணம் .இருந்தாலும் என்னுடைய பதிவையும் படிக்க ஒரு ஜீவன் இருப்பதால் ,உங்களுக்காகவாவது நாளைக்குள் ஒரு பதிவு போடுகிறேன்.

தென்றல் said...

ரொம்ப அருமையா, விளக்கமாக எழுதியுள்ளீர்கள், ஜோ!

கல்லூரியில் படிக்கும் பொழுது, நாங்கள் சீரியஷ் தெரியாமல்.. விளையாட்டாக சென்று வந்தோம் என்பதே உண்மை. இப்பொழுது நினைத்து பார்த்தால் அந்த புரோக்ராம்-ன் அர்த்தம் மிகவும் ஆழமானது.

/நாங்களே சமைத்துக்கொள்ளலாம் .. உப்புமா...
/
எங்கள் கிராமமான, 'பூவாய்பட்டி'யை நினைவுபடுத்தி விட்டீர்கள்..

ம்ம்ம்... மலரும் நினைவுகள்..!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives