சுதந்திரத்துக்குப்பின் கேரள மாநிலத்தோடு இணைந்திருந்த குமரி மாவட்டம் ,பின்னர் மக்களின் தொடர் போராட்டங்களால் 1956-ல் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இந்த வருடம் 50 ஆண்டுகள் ஆகிறது.
எங்கள் குமரி மாவட்டம் குறித்து நானறிந்த சில தகவல் துளிகள்.
* இந்திய திரு நாட்டின் தெற்கு முனை - முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனை அமைந்துள்ள மாவட்டம்
* கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்து ,பெரும்பான்மைத்தமிழர்கள் மார்ஷல் நேசமணி தலைமையில் தாய்த்தமிழகத்தோடு இணைக்கக்கோரி மாபெரும் இயக்கம் நடத்தி,போராடி பின்னர் தமிழகத்தோடு இணைக்கப்பட்ட மாவட்டம்.
* தமிழகத்தில் எழுத்தறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்.
* பரப்பளவில் குறைந்ததெனினும் ,மலைகளும் கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ,தென்னை ,வாழை நிறைந்த மாவட்டம்.
* தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் அதிக சதவீதத்தில் இருக்கும் மாவட்டம் (ஆனால் பா.ஜ.க-வின் சட்டமன்ற கணக்கை தொடங்கி வைத்த மாவட்டம்)
* 'ஆசிரியர் மாவட்டம்' என்று சொல்லுமளவுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக ஆசிரியர்களை அனுப்பி வைத்த மாவட்டம்.
* இந்தியாவின் உயர்தர ரப்பர் விளையும் மாவட்டம்
* கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , 'தமிழ்த்தாய் வாழ்த்து' தந்த மனோன்மனியம் சுந்தரனார் பிறந்த மாவட்டம் (வள்ளுவரும் இங்கே பிறந்ததாக ஒரு சாரார் சொல்கின்றனர்)
* கலைவாணர் N.S.கிருஷ்ணன் ,திரையிசைத் திலகம் K.V.மகாதேவன் ,அவ்வை சண்முகம் போன்ற கலையுலக ஜாம்பவான்களின் சொந்த மாவட்டம்.
* சொந்த ஊரில் தோற்கடிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரை ,உச்சி முகர்ந்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த பெருந்தலைவரின் செல்ல மாவட்டம்.ஜீவா பிறந்த மாவட்டம்.
* சமீபத்தில் இந்தியாவிலேயே சுத்தமான பஞ்சாயத்து யூனியன் (மேல்ப்புறம்) என்ற ஜனாதிபதி விருதினை தட்டிச்சென்று ,தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாவட்டம்.
* இந்தியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுனரை தந்த மாவட்டம் .
* மாநில கட்சிகளுக்கு இணையாக தேசிய கட்சிகள் (காங்கிரஸ் ,பா,ஜ,க ,கம்யூனிஸ்ட்) செல்வாக்கை இன்னும் தக்கவைத்திருக்கும் மாவட்டம் . ஆனால் எந்த கட்சிக்கும் கோட்டையாக இல்லாத மாவட்டம் .திராவிட கட்சிகளுக்கு சோதனை தந்த மாவட்டம் .அதனால் 'நெல்லை எங்கள் எல்லை! குமரி எங்கள் தொல்லை!" என்று கலைஞரை புலம்ப விட்ட மாவட்டம்.
* தமிழகத்தில் அதிகமாக காற்றலை மூலம் மின் உற்பத்தி நடைபெறும் மாவட்டம்.
* தமிழகத்தில் மாவட்ட தலைநகரின் பெயரில் அழைக்கப்படாத மாவட்டம் (மாவட்ட தலைநகர் - நாகர்கோவில்).
Wednesday, November 02, 2005
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
நல்ல தகவல்கள் ஜோ.
// * தமிழகத்தில் எழுத்தறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம். //
மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம். இது கிடைத்தால் எல்லாமே கிடைத்த மாதிரிதானே.
//* 'ஆசிரியர் மாவட்டம்' என்று சொல்லுமளவுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக ஆசிரியர்களை அனுப்பி வைத்த மாவட்டம்.//
மற்ற மாவட்டங்கள் கவனிக்க
கணேஷ்,
நன்றி..படிப்பறிவில் இரண்டாம் இடம் உங்கள் தூத்துக்குடி மாவட்டம் தான்.
//மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேரளத்தோடு சேர்க்கப்பட்டு//
இந்த தகவல் சரியானது தானா?
மொழிவழிமாநிலங்கள் பிரிக்கப்படும் வரை குமரி கேரளத்துடன் இருந்தது. பிரிக்கப்படும்போது குமரி தாய்த்தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே போராட்டங்கள்.
விட்டுத்தர முடியாதென்ற கேரளத்தின் பிடிவாதங்களை மீறி குமரி தமிழகத்துடன் இணைந்தது அதே மொழிவழி மாநிலங்கள் பிறந்த நவம்பர் 1, 1956 தானே.
பார்க்க
அனுராக்,
தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி .திருத்திவிட்டேன்.
வள்ளுவர் குமரியில பிறந்தார்-னு எதை வைத்து சொல்லுகிறீர்?
/'நெல்லை எங்கள் எல்லை! குமரி எங்கள் தொல்லை!"/ - இது அண்ணா, மாபொசி ஆகியோர் திரு-தமிழ்நாடு காங்கிரஸை ஆதரித்துக்கொண்டிருக்கும் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புலம்பலாகத்தான் இருந்தது. பின்னர் இணைப்பிற்கு பின்னரும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடத்திவந்தது.பெருந்தலைவர் காமாராஜர் முதன்முறையாக நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும்போது அந்த குற்ற உணர்ச்சி காரணமாகத்தான் - நம்பிக்கையற்று வீடுவீடாக ஏறி வோட்டு வேட்டை நடத்தினார். நாஞ்சில் நாட்டோர் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெருந்தலைவனுக்கு அரசியல் மறுவாழ்வு அளித்தனர்.
மேலும் சில துளிகள்:
கன்னியாகுமரி நகர் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது.
(தக்கலை)பத்மனாபபுரம் அரண்மனையும், குமரி முனையில் அமைந்துள்ள கேரளா ஹவுசும் இன்னும் கேரள மாநிலத்துக்குத்தான் சொந்தம்.
வில்லுக்குறி பாலம் - தேசிய நெடுஞ்சாலை சமதளத்திலும், கால்வாய் சாலையின் மீது பாலத்தில் செல்லும் அதிசயம்.(இந்த ஊர்பெயர் ராமர் தாடகையை வதம் செய்யும் முன் வில்லால் தரையில் குறி செய்ததன் காரணமாய் வந்ததாகக் கூறப்படுகிறதாம்).
மருத்துவாமலை - இயற்கை மூலிகைகள் பல இந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் இறுதி முடிச்சில் கிடைக்கின்றன. அனுமன் சிரஞ்சீவி மலையை கொண்டு வரும்போது கீழே வீழ்ந்த ஒரு பகுதி என்பது ஐதீகம். இம்மலையின் சரியான பெயர் மருந்துவாழ்மலை.
Anonymous,அபு மர்வான் மேலும் தகவல்களுக்கு நன்றி.
//கன்னியாகுமரி நகர் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது//
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது - என்றிருக்க வேண்டும்.
இரயில் போக்கு வரத்து உண்டா?
விவேகானந்தர் தவமிருந்ததும் அங்குதானே.
திருத்தியமைக்கப் பட்டுள்ள புதிய தொகுதி அமைப்புகளின்படி கன்னியாகுமரி தொகுதி நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதிக்குள் வந்து விட்டது. (பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி நீக்கப் பட்டு விட்டது)
அனுராக்,
தகவலுக்கு நன்றி. இனிமேல் 6 சட்டமன்ற தொகுதிகள் தானா?
என்னார் சார்,
என்ன இப்படி கேட்டுடீங்க? கன்னியாகுமரி ,நாகர்கோவில் இரண்டுமே முக்கியமான ரயில் சந்திப்புகள்.நாகர்கோவிலிருந்து கன்னியாகுமரி வெறும் 18 கி.மீ தான்.
NALLATH THARAMAANA THAMIZ ILAKKIYAVAATHIKALAI ATHIKAMKONTA MAAVATTMUM ATHTAAN.....
இன்னும் நிறைய, அடிக்கடி, எழுதலாமே...(வேலையில்லா ஆடகள் இப்படித்தான் சொல்லுவார்கள்; இல்லையா, ஜோ?)
தருமி,
சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும் .இருந்தாலும் அப்பப்ப சுரண்டி பாக்குறேன்.
//சுதந்திரத்துக்குப்பின் கேரள மாநிலத்தோடு இணைந்திருந்த குமரி மாவட்டம்// கேரள மாநிலத்தோடு அல்ல - அப்போதைய அதன் பெயர் திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானம்.
சமஸ்தானமெல்லாம் சுதந்திரத்துக்கு முன்னர் தான் என நினைக்கிறேன் .1956 வரை சமஸ்தானம் இருந்ததா என்ன?
கேரள மாநிலம் என்று தான் தினமலரும் குறிப்பிட்டுள்ளது.
http://www.dinamalar.com/2005nov02/tn29.aspb
http://www.dinamalar.com/2005nov02/tn29.asp
// * தமிழகத்தில் எழுத்தறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம். //
தமிழகத்தில் - இந்தியாவில் என்று நினைக்கிறேன். எங்கேயோ படித்த ஞாபகம் - படிப்பறிவில் இந்தியாவில் மாநிலங்களில் கேரளாவும் மாவட்டங்களில் கன்னியாகுமரியும் என்று.
மேலும் பல அரிய தகவல்கள் உண்டு.
சகோதரர் ஜோ அவர்களுக்கு நன்றி.
ஜோ,
திற்பரப்பிற்கு அருகில் உள்ள தொட்டிபாலத்தை மறந்து விட்டிர்களே..ஆசியாவிலே உயர்ந்த பாலம்..காமராஜர் காலத்தில் அர்ப்பணிக்கப்பட்டது..
மற்ற விபரங்களுக்கு நன்றி..
மாயக்கூத்தன் கிருஷ்ணன்
வணக்கம் ஜோ, நல்ல பல தகவல்கள், குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைத்ததில் தினமலர் முக்கிய பங்கு வகித்தது, அப்போதைய தினமலர் ஆசிரியரும் தினமலரும் கேரள அரசை எதிர்த்து ஒரு பெரும் போராட்டமே நடத்தினார்கள் என்பதும் மிக முக்கியமான ஒன்று, அந்த போராட்ட வரலாறு பற்றி படித்த போது அது ஒரு சாகசமாகவே தோன்றியது. நீண்ட நாட்களுக்கு முன் இதைப்பற்றி படித்தேன்
மாயா,
கருத்துக்கு நன்றி.தொட்டிப்பாலத்தை மறக்கவில்லை .அப்படிப்பார்த்தால் வட்டப்பாறை ,பத்மநாதபுரம் அரண்மனை ,விவேகானந்தர் பாறை ,கீரிப்பாறை ,பேச்சிப்பாறை ,பெருஞ்சாணி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
குழலி,
வாங்க..வாங்க .தினமலரின் பங்கை குறிப்பிட்டதற்கு நன்றி .தினமலர் அதிபர் ராமசுப்பையர் நாகர்கோவில் காரர் தான் .தினமலர் அப்போதே திருவனந்தபுரதில் வெளிவந்து கொண்டிருந்தது .குமரி மாவட்ட மீட்பு போராட்டத்தில் தினமலரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்ட பொன்விழா செய்தி
http://thatstamil.oneindia.in/news/2006/11/01/tn.html
ஊர்ப்பெருமை பேசும் இந்த பதிவில் போலித்தனம் நிறைந்திருக்கிறது.நானும் நாகர்கோவில் காரந்தான்.ஆனால் அந்த ஊரின் மீது எனக்கு பற்று கிடையாது...காரணம் அது கேரளாவோடு இருந்த போது நாங்கள் நாயர்களுக்கு அடிமைகளாக இருந்தோம்.இப்போது நாடார்களுக்கு அடிமைகளாக இருக்கிறோம்.அரசு நிர்வாகம் முழுக்க இந்து நாடார்களின் கையில் இருக்கிறது..மண்டைக்காடு கலவரம் நடந்த போது இந்து மத வெறியர்களோடு இணைந்து மீனவ மக்களைத் தாக்கியது.போலீஸ்காரர்களும்தான்..என் நாடு சாதிபார்க்கிற மதம் பார்க்கிற நாடு..எனதும் ஊரும் சாதி பார்க்கிற மதம் பார்க்கிற ஊர்.இதைல் பெருமை கொள்ள எனக்கு ஒன்றும் இல்லை..
Post a Comment