Friday, October 21, 2005

பச்சை விளக்கு

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது அங்குள்ள தூய இருதய விடுதியில் தங்கியிருந்தேன் .எங்கள் விடுதியில் மாதம் ஒருமுறை திரை கட்டி சினிமா போடுவார்கள் .இதற்கென்று ஒரு மாணவர் பிரதிநிதி குழு இருக்கும் .அவர்கள் பொறுப்பு , படக்கம்பெனிக்கு போய் சினிமாவை தேர்ந்தெடுத்து ,புரஜ்க்டரோடு அவர்களை வரவழைத்து விடுதி திறந்தவெளி வளாகத்தில் சினிமா போடுவது.இதற்குண்டான செலவை மாத விடுதி கட்டணத்தில் பகிர்ந்து விடுவார்கள்.

நான் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் போது தான் ,இவ்வளவு நாளும் மாணவர் பிரதிநிதிகளே இதில் கொள்ளையடிப்பது தெரிய வந்தது .அதை தடுத்து நிறுத்த ,அந்த வருடம் நண்பர்கள் சேர்ந்து என்னை முதுநிலை பிரதிநிதியாக போட்டார்கள் .அன்றிரவே இளநிலை பிரதிநிதி என் அறைக்கு வந்தார் .வழக்கம் போல எப்படி பங்கு போடலாம் என்று கேட்க வந்தார் போல .நான் அவரிடம் நேரடியாகவெ சொல்லிவிட்டேன் "தம்பி ! என் கிட்ட இந்த பருப்பெல்லாம் வேகாது .எல்லாம் நியாயமா தான் நடக்கும் .இஷ்டம் இருந்தா என் கூட வாங்க!" .அதோடு போனவர் தான் .

கொஞ்ச நாள் கழித்து ,சினிமா போடலாம் என்று முடிவு பண்ணி ,ஒரு படக்கம்பெனிக்கு போனேன் . அங்கிருந்த படங்களை பார்த்து விட்டு 'வருஷம் 16' படத்தை தேர்வு செய்து ,எவ்வளவு செலவாகும் என கேட்டேன் .அவரும் ஒரு தொகை சொன்னார் .நானும் ஒத்துக்கொண்டு ரசீது தரச்சொன்னேன் . "எவ்வளவு தொகை போடணும்?' -னு கேட்டார் .நான் சொன்னேன் "அதான் இப்போ சொன்னீங்களே" .அவர் அதற்கு " அது நீங்க எங்களுக்கு தர வேண்டியது .ரசீதுல எவ்வளவு போடணும்?' -என்று கேட்டார் ." உங்களுக்கு எவ்வளவு தர சொன்னேனோ அதை மட்டும் போட்டா போதும்" -ன்னு நான் சொல்ல என்னை ஏற இறங்கப் பார்த்தார் ..இப்படியும் ஒரு மாக்கானான்னு நினைச்சிருப்பார் போல!

விடுதிக்கு வந்து விடுதிக்காப்பாளரான பாதர் -ஐ சந்தித்து விஷயம் சொன்னேன் .ரசீதை கொடுத்தேன் .ஆச்சர்ய புருவத்தை உயர்த்தினார் " என்ன ஜோ! இவ்வளவு காசு கம்மியா இருக்கு "..."இல்ல பாதர் ..இதுதான் உண்மையான தொகை" .."இஸ் இட் ? பொதுவா இதை மாதிரி மூணு மடங்கு பில் வருமேப்பா" ..முன்னால இருந்த மாணவர் பிரதிநிதிகள் மாணவர் காசையே கொள்ளை அடிச்சது எவ்வளவுன்னு தெரிஞ்சுது (இவனுங்கெல்லாம் வருங்கால தலைவனாகி நாடு உருப்பட்ட மாதிரி தான்).

இப்படியா மாதம் ஒரு சினிமா போட்டோம் .என்னுடைய ரசனையை ஒதுக்கி வைத்து விட்டு ,மாணவர்களுக்கு பிடித்த மாதிரி இது நம்ம ஆளு ,தில்லு முல்லு இப்படி படங்களை தேர்வு செய்தேன் . பொதுவா சினிமா போடுற அன்னிக்கு அறிவிப்பு பலகைல விவரம் எழுதி ஒட்டுரது வழக்கம் ..பெரிய பேப்பர்ல ஸ்கெட்ச் வச்சு எழுதுறது ..'தில்லு முல்லு' படத்துக்கு நாமளும் ஒரு தில்லு முல்லு பண்ணுவோம்னு படத்தோட பேரை மட்டும் கண்ணாடி பிம்பத்தில் இடம் மாறி தெரியுற மாதிரி எழுதி ஒப்புதலுக்காக பாதர்-கிட்ட கொண்டு காட்டினா திரு திருன்னு முழிச்சார் .விளக்கி சொல்லி விட்டு அறிவிப்பு பலகைல கொண்டு போட்டேன் .கொஞ்ச நேரத்துல பசங்க வந்து படிச்சுகிட்டு மண்டைய பிச்சுகிறாங்க ..ஒருத்தன் சொன்னான் "டேய் ..ரஜினி,கமல் நடிச்ச பாலசந்தர் டைரக்ட் பண்ணுன மலையாளப்படம் போல".

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்து விடுதி துணைக் காப்பாளர் ,ஒரு பேராசிரியர் ,வழியில் பார்த்து "என்ன! அடுத்து என்ன படம் போட போறீங்க?- னு கேட்டார் .நீங்க சொல்லுங்க சார் -ன்னு நான் சொல்ல ,அவர் ரொம்ப சீரியஸா "என்னப்பா !ஒரு நல்ல பிளாக் அண்ட் ஒயிட் சிவாஜி படம் போடக்கூடாதா? -ன்னு கேட்டார் .நான் பதறிப்போய் "காலேஜ் பசங்களுக்கு ஜாலியா எதாவது புது படம் போட்டாதான் ஒத்து வரும்..பழைய படம் போட்டா ரகளை பண்ணிருவாங்க சார்"-ன்னு சொல்ல ,அவர் ஒத்துக்கொள்ளுற மாதிரி இல்ல ."என்னப்பா ..இப்படி ரசனையே இல்லாத
ஆளாயிருக்க"-ன்னு சொல்ல ,நான் சிரிக்க ,பக்கத்தில் நின்றிருந்த நண்பன் "சார் ! இவன் பயங்கரமான சிவாஜி ரசிகன் சார்" என்று உண்மையை அவுத்து விட ,அவ்வளவு தான் ..சிவாஜி படம் போட்டே ஆகணும்-ன்னு ஒத்தைகாலில் நின்றார் .நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன் .கேக்குற மாதிரி தெரியல்ல .சரின்னு ஒத்துகிட்டு படக்கம்பெனிக்கு போய் சிவாஜி படங்களை அலசினேன் . அட்லீஸ்ட் கலர் படம் போட்டாலாவது பசங்க பொறுத்துக்குவாங்க-ன்னு அங்கிருந்த 'தங்கப்பதக்கம்' ,'வசந்த மாளிகை' போன்ற படங்களை கேட்க ,அவரோ "அதெல்லாம் பப்ளிக்-ல போட குடுக்க மாட்டோம் .புத்தம் புது காப்பி போட்டு வச்சிருக்கோம் .அடுத்த வாரம் தியேட்டர்ல போட போறோம்"-ன்னு குண்டைத் தூக்கி போட ,வேறு வழியின்றி மீதமிருந்த படங்களில் நான் தேர்வு செய்தது 'பச்சை விளக்கு' .அற்புதமான பாடல்கள் நிரம்பிய படம்.

சினிமா போடுற அன்னிக்கு 'பச்சை விளக்கு' -ன்னு அறிவிப்பு பலகைல எழுதி ஒட்ட பாதர் 'வெரி குட்..நல்ல படம்" -ன்னு சொல்ல ,பசங்களோ முணுமுணுக்க ஆரம்பித்தார்கள் .எங்கள் விடுதியில் 'ப' வடிவில் 10 மாடி கட்டிடங்கள் இரண்டு ஒன்றையொன்று பார்த்திருக்க ,இடையிலுள்ள திறந்த வெளியில் ,ஒரு கட்டிடத்தில் திரையைக்கட்டி படம் போடுவார்கள் . பழைய படம் என்பதால் பக்கத்திலிருந்த பாதர் இல்லத்திலிருந்து கல்லூரி முதல்வர் வரை படம் பார்க்க வந்திருந்தார்கள். பசங்க மேல தான் எனக்கு நம்பிக்கை இல்லை .என்ன பண்ன போறாங்களோ? .

ஒரு வழியாக படம் ஆரம்பித்தது .எல்லோரும் அறைகளில் இருந்து இறங்கி வந்து அமைதியாக படம் பார்த்துக்கொண்டிருக்க..10 வது நிமிடத்தில் வெடிச்சத்தம் காதை பிளந்தது .திரை கட்டப்பட்ட கட்டிடத்திலேயே ,படிக்கட்டுகளில் 1000 வாலா வெடியை நீட்டி வைத்து அதன் முனையில் ஊது பத்தியை கொழுத்தி வைத்து விட்டு வந்திருக்கிறார்கள் .நீண்ட நேரம் வெடி வெடித்து முடிக்க ,தங்கள் நக்கலை,அதிருப்தியை காட்டி விட்ட சந்தோஷத்தில் பசங்க நமட்டு சிரிப்பு
சிரிச்சுட்டு இருக்காங்க.

படம் முடிந்து பணத்தை பெறுவதற்கு பாதர் அறைக்கு நான் செல்ல ,பாதர் உற்சாகமாக வரவேற்றார் "ஜோ! ரொம்ப நல்ல படம் .பாதர்ஸ் எல்லோரும் ரொம்ப ரசிச்சாங்க" ன்னு சொல்லி பணத்தை தந்துவிட்டு கேட்டார் "ஆமா ! பசங்க எதுக்கு வெடி வெடிச்சாங்க?".."அதுவா பாதர்! அந்த பிளாக் பசங்க நிறைய பேர் தீவிர சிவாஜி ரசிகர்கள் ..அதான் " ன்னு நான் சொல்ல ..பாதரும் அப்பாவியா "வெரி குட்..பசங்க பரவாயில்லயே" ..நமட்டுச்சிரிப்போடு நானும் வேளியே வந்தேன்.


(பச்சை விளக்கு தலைப்பைப் பார்த்து சமீபத்திய தமிழ்மணம் சர்ச்சையை எதிர் பார்த்து வந்தவர்களுக்கு..சாரி)

29 comments:

சிவா said...

இப்படி ஏமாத்தி புட்டியலே!

துளசி கோபால் said...

ஒளிமயமான எதிர்காலம் நம் உள்ளத்தில் தெரிகிறது......

(தமிழ்)உலகம் பாடும் பாடலோசை(!) காதில் விழுகிறது.....

Thekkikattan said...

ஹூம்ம்...நல்ல இருக்குதே...!

Ramya Nageswaran said...

நல்ல timely பதிவு ஜோ..:-)

மூர்த்தி said...

நல்ல பதிவு ஜோ.

ஜோ / Joe said...

சிவா ,துளசி அக்கா,thekkikattan,ரம்யா அக்கா,மூர்த்தி அனைவருக்கும் நன்றி!

Anonymous said...

ஆமாம் பச்சைவிளக்கு என்றால் என்ன? இங்கு

Dharumi said...

இப்படியா ஏமாத்துறது ஆளுகள...

தாணு said...

காசியை சிவாஜியுடனுமா மோத விடறீங்க. பாவம்ங்க

குழலி / Kuzhali said...

//ஆமாம் பச்சைவிளக்கு என்றால் என்ன? இங்கு
//
படத்து பேருங்கோ.... ஜோ எழுத்திலும் அருமையாக பகிர்ந்து கொண்டீர் இதை.

ஜோ / Joe said...

தருமி ,குழலி நன்றிகள்!

தாணு,,தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள் .காசியை கிண்டல் செய்ய நான் என்ன பைத்தியமா?அந்த விஷயத்தில் நான் அவரையே ஆதரிக்கிறேன் .அவர் பதிவிலேயெ பின்னோட்டமாக தெரிவிக்கிறேன் .ஆனால் இப்போது 'பச்சை விளக்கு' பிரபலமாக இருப்பதால் இது ஞாபகம் வந்தது .அவ்வளவு தான்.

Hameed abdullah said...

Ennvo eathonu ninaichaa ...........

ஜோ / Joe said...

ஹமீத் ..அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது.

Anonymous said...

hi hi hi

Anonymous said...

நல்லா இருக்குபா..

- செந்தில்

enRenRum-anbudan.BALA said...

Joe,

நல்லா இருக்கு :)

மதுமிதா said...

ஆஹா!
பச்ச விளக்கு போட்டாச்சுப்பா
நல்லா இருக்கு ஜோ

G.Ragavan said...

ஜோ....ஜோரா ஒரு பதிவு போட்டிருக்கீங்க. என்னவோ ஏதோன்னு நெனச்சு வந்தா....பச்சை விளக்கு.......பளிச்சுன்னு எரியுது. குத்துவிளக்கெரிய கூடமெங்கும் பூமணக்க........

ஜோ / Joe said...

செந்தில்,பாலா,மதுமிதா,ராகவன்..நன்றி!

ஜோ / Joe said...

செந்தில்,பாலா,மதுமிதா,ராகவன்..நன்றி!

dondu(#4800161) said...

ஜோ அவர்களே,
நம்பினால் நம்புங்கள், பச்சை விளக்கு என்றவுடன் எனக்கு சமீபத்தில் 1964-ல் வெளியான "பச்சை விளக்கு" படமே ஞாபகத்துக்கு வந்தது. "ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ" என்ற பாடல் அடிகளை முணுமுணுத்தவாறே பதிவைப் படித்தேன். கடைசி வரியைப் பார்த்ததும்தான் இப்போதைய பச்சை விளக்கின் ஞாபகமே வந்தது.

அருமையான படம். அப்போதெல்லாம் படம் முடிந்ததும் இந்தியக் கொடியுடன் தேசீய கீதம் போடுவார்கள். யாரும் நிற்காமல் தியேட்டரை விட்டு வெளியே சென்று கொண்டிருப்பார்கள். ஆனால் இப்படத்தில் கடைசி ஷாட்டாக தேசீயக் கொடியை காண்பித்து அப்படியே பாட்டாகப் போட்டார்கள். அதற்குப் பிறகே "வணக்கம்" என்று ஸ்லைட் வந்தது. அக்காலத்தில் எல்லோரும் இதை பாராட்டினார்கள்.

பாடல்கள் அத்தனையும் அருமை. "ஒளிமயமான எதிர்க்காலம்" என்று சோகமான வெர்ஷனில் பாடப்பட்டப் போது பார்வையாளர்கள் நெஞ்சமே கலங்கியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ / Joe said...

டோண்டு சார்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி .எனக்கு தனிப்பட்ட விதத்தில் இந்த படம் மிகவும் பிடித்திருந்தது .அருமையான பாடல்கள் ,நடிகர் திலகம் ,SSR ,விஜயகுமாரி ,நாகேஷ் என்று பலர் அருமையான நடிப்பை வழங்கியிருந்தார்கள் .பலர் இங்கு பல பாடல்களை குறிப்பிட்டிருந்தாலும் ,'குத்து விளக்கெரிய ' என தொடங்கும் 'வாராதிருப்பரோ வண்ண மலர் கண்ணனவன்' என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது .அனைத்துக்கும் மேலே பெண்கல்வியை வலியுறுத்தும் படம் .

paul said...

ennamoo

paul said...

ennamo evan ippudithaan thiruraan ippavaum sivaji in rasikan( kirukaanathaan)irrukaan,

ஜோ / Joe said...

பால்,
தமிங்கிஷ்ல எழுதும் போதாவது புரியும் படி எழுத கூடாதா?

முத்துகுமரன் said...

உங்கள் வயசை ஓரளவிற்கு ஊகிக்க செய்தமைஇகு நன்றி. என்னமோ ஏதோன்னு எதிர்பார்த்து படிச்சா சத்திய சோதனையாகி விட்டது...

உங்கள் நேர்மைக்கு வாழ்த்துகள்

டி ராஜ்/ DRaj said...

ஜோ:
பச்சை விளக்கு போட்டது நீங்கள் தானா?
நானும் 1989-1994 செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தேன்.
நிறைய மலரும் நினைவுகளை தந்தமைக்கு நன்றி

ஜோ / Joe said...

ராஜ்,
மகிழ்ச்சி..என்னுடைய இன்றைய பதிவைப் பாருங்கள்.நம்ம கல்லூரி பற்றி எழுதியிருக்கிறேன்.

நட்டு said...

அந்த நாள் கல்லூரி விடுதி ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives