Monday, November 28, 2005

வந்த நாள் முதல்...

நண்பர்களே!

இந்த வாரம் ...வேற வழியில்லீங்க உங்களுக்கு! .பின்ன என்னங்க, ஏதோ ஒரு வேகத்துல வலைப்பதிவு ஆரம்பிச்சு ,என்ன பதிவு போடலாம்ன்னு மண்டைய குழப்பி ,சட்டியில இருக்குறத சுரண்டி சுரண்டி ,ஆமை வேகத்துல 10 பதிவு தான் போட்டிருக்கிற ஒருத்தன திடீர்ன்னு மதி கூப்பிட்டு நட்சத்திரமா இருப்பியா-ன்னு கேட்டா கொஞ்சம் கூச்சமா இருந்தது .எல்லோரும் 100 ,200 -ன்னு போட்டுத் தாக்கிட்டு சும்மா ஜெட் வேகத்துல போயிட்டிருக்காங்க .10 பதிவு போட்ட நம்பளயும் கணக்குல எடுத்துருக்காங்களேண்னு ஒரு சந்தோஷம் .உருப்படியா இன்னும் எழுத ஆரம்பிக்காத என் மேல நம்பிக்கை வச்சு அழைத்த மதி அவர்களுக்கும் ,காசி அவர்களுக்கும் நன்றி!

தமிழ் வலைப்பதிவுகளில் இத்தனை பேர் பல்வேறு கோணங்களில் ரசிக்கும் படியாக ஆர்வத்தோடு எழுதி வருவது ,அதுவும் இளைய தலைமுறை தமிழை விட்டு விலகிப் போய்க்கொண்டிருகிறது என்று கருதப்படுகிற காலகட்டத்தில், இத்தனை இளைஞர்கள்(தருமியையும் சேர்த்துத்தான்) தொழில்நுட்ப வளர்சியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து தமிழை முன்னெடுத்து செல்ல பங்காற்ற முன்வந்திருப்பது மகிழ்சிக்குரிய விஷயம் .தொழில்ரீதியாக அல்லாத இத்தகைய பங்களிப்புகளுக்கு ,படைக்கும் ஆர்வம், திறமை தவிர மொழி மீது கொண்டிருக்கும் ஆர்வமும் ஒரு காரணம்.ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு புள்ளியிலிருந்து இந்த ஆர்வம் தொடங்கியிருக்கும். எனக்கு ஆர்வம் வந்ததெப்படி?

எங்கள் கிராமத்தில் கத்தோலிக்க கோவிலுக்கு சொந்தமான உயர்நிலைப்பள்ளியில் 10 வது வரை படித்தேன் .அம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியர் .எனக்கும் ஆசிரியர் .அம்மா தமிழாசிரியர் இல்லையென்றாலும் ,தமிழார்வமும் எழுத்துத்திறமையும் உள்ளவர்கள் .ஆசிரியர் பணியோடு ,கோவில் பணிகளிலும் ,ஊரில் பொதுக்காரியங்களிலும் அயராது பங்களிப்பார்கள் .கோவிலில் ஞாயிறு மற்றும் விசேட தினங்களில் நடைபெறும் திருப்பலிகளின் தொடக்கத்தில் வாசிக்கப்படும் 'இன்றைய சிந்தனை' பெரும்பாலும் அம்மாவே எழுதுவார்கள் .உள்ளூரில் நடக்கும் கலைநிகழ்ச்சிகள் தொடர்பாக நாடகம் ,பாடல்கள் நிறைய எழுதுவார்கள் .

எங்கள் ஊர் ஒரு வித்தியாசமான சூழல் தான் .முழுக்க முழுக்க கத்தோலிக்கர்களைக் கொண்ட ஒரு மீனவ கிராமம் என்றாலும் ,படிப்பறிவில் பின் தங்கிவிடவில்லை .நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் 'இராயப்பர்(St.Peter) எழுத்தாளர் மன்றம்' என்ற ஒரு அமைப்பு இருந்தது .அம்மா தான் தலைவர் .ஆசிரியர்கள் ,படித்த இளைஞர்கள்,கன்னிகாஸ்திரிகள் அதில் உறுப்பினராக இருந்தார்கள் .அவர்கள் இணைந்து மாதமொருமுறை வெளிவரும்படி ஒரு கையெழுத்துப்பத்திரிகை நடத்தினார்கள்.அதற்கு அம்மா ஆசிரியர் என்ற முறையில் ,எங்கள் வீட்டில் அந்த பணிகள் நடக்கும் .தொகுப்புப் பணி முடிந்த பிறகு ஒரே மாதிரி 5 பிரதிகள் எழுத வேண்டும் .அப்பாவோட கையெழுத்து சும்மா அச்சு மாதிரி இருக்கும் .அதனால அப்பா 2 பிரதி எழுதுவாங்க .என்னோட தமிழ் கையெழுத்து அப்போ அழகா இருந்ததால நான் 1 பிரதி எழுதுவேன் .அது எனக்கு ஒரு நல்ல அனுபவம் .அடிப்படையிலயே எனக்கும் சின்ன வயசிலயே இந்த ஆர்வம் இருந்ததால மகிழ்ச்சியாக இருந்தது .கதைகள் ,கட்டுரைகள் ,கவிதைகள் ,போட்டிகள் இப்படி கலந்து கட்டி ,அந்த பத்திரிகைகள் நல்லாவே இருந்தது .எழுதி முடித்த பின்னர் எங்கள் ஊரில் ஆர்வமுள்ள வீடுகளுக்கு ஒரு நாள் ஒரு வீடு என்ற வகையில் வாசித்து அடுத்த வீட்டுக்கு அவர்களே கொடுத்து விடுவார்கள் .

சின்ன வயதிலேயே ,விளையாட்டுகளோடு ,சினிமா பாட்டு கேக்குறதுல ரொம்ப ஆர்வம் .வீட்டுல எல்லோரும் கோவில் பாட்டு மட்டும் ஆர்வத்தோடு பாடுவார்கள் .நான் மட்டும் சினிமாப் பாட்டு தான் .இலங்கை வானொலி தான் என் உற்ற நண்பன் .கல்யாணம் போன்ற விசேடங்கள் என்றால் பெரிய குழல் வச்சு ஒலி பெருக்கி வச்சு பெரும்பாலும் எம்.ஜி.ஆர் பாட்டு தான் கேட்கும் .ஏகப்பட்ட எம்.ஜி.ஆர் பாட்டுக்கள் முழு வரிகளும் எனக்கு மனப்பாடம் ஆனது இப்படித்தான் .ஆனா அதுலயும் ஒரு பயன் இருந்தது .ஊரில திருமண வரவேற்பின் போது மணமக்களை வாழ்த்தி சினிமாப் பாடல் மெட்டில் பொருத்தமான வரிகள் எழுதி பாடுவது அப்போது கண்டிப்பாக உண்டு .பெரும்பாலும் எல்லோரும் அம்மாவத்தான் தேடி வருவாங்க .எந்த பாட்டு மெட்டு-ன்னு ஆர்டர் வேற.அம்மாக்கு அவ்வளவா சினிமாப் பாட்டு தெரியாது .அதனால என்னைக் கூப்பிட்டு பாட சொல்லுவாங்க .நான் பாடுற மெட்டை மனசுல வச்சுகிட்டு அப்புறமா எழுதிடுவாங்க .அப்புறம் எழுதிய பாட்டை அதே மெட்டுல என்னை பாட சொல்லுவாங்க .சில இடங்கள்ள உதைக்கும் .நான் சொல்லுவேன் .அம்மா வேற வார்த்தை போடுவாங்க ..இப்படியே நாளாக ஆக நானே மாற்று வார்த்தை சொல்ல அம்மா ஒத்துக்குவாங்க ..அப்புறம் ஒரு தடவ எழுதிட்டு என்கிட்ட கொடுத்து நீயே திருத்திக்கொடுத்துடு-ன்னு சொல்லிடுவாங்க .அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்.

10-வது வகுப்பு முடித்த பிறகு நாகர்கோவிலில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில் படித்தேன் .வீட்டிலிருந்து 10 கி.மீ தான் என்றாலும் ,கிராமத்தில் வீட்டுக்கு பக்கத்தில் தெரிந்த ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,நல்ல சூழலில் படித்த எனக்கு நகரத்தின் இறுக்கமான புதுச்சூழல் ஒத்து வரவே இல்லை .வகுப்பில் சுமாரான மாணவனாக இருந்தேன்.ஆசிரியர்கள் அந்நியமாக இருந்தார்கள் .நகர மாணவர்களோடு ஒட்ட முடியவில்லை .ஒரு நாள் தமிழாசிரியர் வகுப்பு நடத்தும் போது நாகர்கோவில் ரோட்டரி கிளப் சார்பாக மாவட்ட அளவில் கட்டுரை போட்டி நடைபெறுவதாகவும் ,அதற்கு எங்கள் வகுப்பிலிருந்து ஒருவரை அனுப்பச்சொல்லி சுற்றறிக்கை வந்தது .ஆசிரியர் கேட்ட போது மாணவர்கள் யாரும் தயாராக இல்லை,நான் உட்பட .ஆசிரியர் என்ன நினைத்தாரோ ,கடைசி வரிசையில் இருந்த என்னை எழும்ப சொன்னார் .பெயர் கேட்டார் .சொன்னேன் .என் பெயரை அதில் எழுதி விட்டு "நீ போற..போய் எழுதுற"-ன்னு ஒரே போடா போட்டார் .எனக்கு ஒண்ணுமே புரியல்ல .வகுப்பில் நான் கவனம் பெறாத மாணவன் .ஆசிரியரிடம் பேசியதே இல்லை .எதனால் என்னை சொன்னார் என தெரியாது .கட்டுரை எழுத வேண்டிய நாளன்று வேறு ஒரு பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தார்கள் .அப்பாவியாக அங்கு சென்றேன் .அங்கே நிறைய நகரத்து மாணவர்கள் ரொம்ப சீரியசா கட்டுரை எழுத போறது பத்தி பேசிட்டிருந்தாங்க .நேரம் வந்த போது அப்போது தான் "சுதந்திர இந்தியாவின் 40 ஆண்டு கால சாதனை" -ன்னு தலைப்பு கொடுத்து எழுத சொன்னார்கள் .நானும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்து விட்டேன் .இரண்டு வாரம் கழித்து திங்கள் கிழமை காலை தேசியக்கொடி அணிவகுப்பின் போது பள்ளி முதல்வர் "மாவட்ட அளவில் ரோட்டரி சங்கம் நடத்திய கட்டுரைப்போட்டியில் நமது பள்ளி மாணவர் முதல் பரிசை பெற்றுள்ளார்" என்று சொல்லி என் பெயரைச் சொன்னார் .உண்மையிலயே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இங்கே சிங்கை வந்த புதிதில் ,இலங்கையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் வழக்கம் போல (வழமையாக) பொத்தாம் பொதுவாக தமிழ் நாட்டுக்காரர்கள் தமிழை பேணுவதே இல்லை என்ற குற்றசாட்டைச் சொல்ல அவருக்கு மறுத்து பதிலிறுக்கும் விதமாக கடிதம் ஒன்றை அனுப்பினேன் .அவர் என்ன நினைத்தாரோ ,அதை கட்டுரை போன்று ஒரு நாளிதழுக்கு அனுப்பி வைக்க ,அவர்களும் அதை 'தமிழகம் தமிழை புறக்கணிக்கிறதா?" என்ற தலைப்போடு கட்டுரையாக பிரசுரித்து விட்டார்கள் (தினக்குரல் என்று நினைக்கிறேன்) .அவர் அந்த கட்டுரையை மட்டும் வெட்டி எனக்கு அனுப்பியிருந்தார் .என்ன தான் இருந்தாலும் நம்முடைய எழுத்தை அச்சில் பார்த்தால் அந்த மகிழ்ச்சியே தனி தான்.

இப்போ நாம கிறுக்குறதையும் படிக்க கொஞ்ச ஜீவன்கள் இங்க இருக்குறது சந்தோஷமா இருக்கு .அதைவிட பலபேருடைய எழுத்துக்களை படித்து பல விடயங்களை அறிந்து கொள்ள முடிவது அதைவிட சந்தோஷமா இருக்கு..தொடர்வோம் இந்த பகிர்தலை ..நண்பர்களே!

46 comments:

துளசி கோபால் said...

அடடே,

நீங்களா இந்தவார நட்சத்திரம்?

'ஜோ' கலக்கிடுவீங்கல்லெ?

என்ன சந்தேகம்?

வாழ்த்துக்கள்.

இராமநாதன் said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.

பரஞ்சோதி said...

வாழ்த்துகள்.

"ஜோ"ரா கலக்குங்க.

நாங்களும் படித்து "ஜோ"ரா பாராட்டுகிறோம்.

Anonymous said...

நம்ம ஊர்காரர் இவ்வார நட்சத்திரமா? சந்தோஷமாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் ஜோ அவர்களே!

G.Ragavan said...

வாங்க ஜோ வாங்க. இந்த வார நட்சத்திர ஜோதி நீங்கதானா! வாழ்த்துகள்.

ஜோ / Joe said...

முதல் வாழ்த்து சொன்ன துளசியக்கா, இராமநாதன்,பரஞ்சோதி,நம்ம ஊர்க்காரர் இறைநேசன் ,பக்கத்து ஊர்க்காரர் ராகவன் அனைவருக்கும் நன்றி!

தேசிகன் said...

ஜோ,
நன்றாக எழுதுகிறீர்கள். மேலும் உங்கள் பதிவிகளை இந்த வாரம் படிக்க ஆர்வமாக உள்ளேன்.
தேசிகன்

அன்பு said...

வாழ்த்துக்கள் ஜோ...

உங்களைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ளமுடிந்தது. தொடர்ந்து கலக்குங்கள்.


பி.கு:
நேரம் கிடைக்கும்போது இதையும் கொஞ்சம் பாருங்க..., நன்றி.

முத்து(தமிழினி) said...

Dear joe

பதிவிடுவதை விட பின்னூட்டம் அதிகம் இடுவீங்க. நீங்கள் இனிமேல் அதிகமாக பதிவிட வேண்டும் என கேட்டுக்கொண்டு வரவேற்கிறேன்.

குழலி / Kuzhali said...

வாழ்த்துகள் ஜோ, கலக்குங்க...

டி ராஜ்/ DRaj said...

வாழ்த்துக்கள் ஜோ. செயிண்ட் ஜோசப்ஸ் வாசம் பத்தி எழுதற யோசனை இருக்கா ;)

ஜோ / Joe said...

அன்பு,
நன்றி..தனிமடல் அனுப்பியிருக்கிறேன்.

முத்து,
//பதிவிடுவதை விட பின்னூட்டம் அதிகம் இடுவீங்க.//
உண்மை..உங்கள் ஆலோசனையை பின்பற்ற முயல்வேன்.

குழலி..நன்றி!

இளவஞ்சி said...

கலக்குங்க ஜோ! :)

ஜோ / Joe said...

ராஜ்,
நன்றி.
//செயிண்ட் ஜோசப்ஸ் வாசம் பத்தி எழுதற யோசனை இருக்கா ;) //
எழுதிட்டா போச்சு!

மணியன் said...

மண்ணின் வாசத்தோடு எழுதும் உங்கள் இவ்வார இடுகைகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
வாழ்த்துக்கள்.

tbr.joseph said...

ஹாய் ஜோ!

இன்னைக்கி நான் ஆஃபீசுக்கு ஒரு மணி நேரம் லேட். அதான் உங்களுக்கு வாழ்த்து சொல்றதுலயும் லேட்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜோ.

வாழ்த்துக்கள்.

Nanjil Stephen said...

Dear Joe.

I also studied the same Carmel school.

You can good subjects to write about our Dist. (not Little flower and Joseph convent. haa haaa haaaa)

Nanjil Stephen said...

Dear Joe.

I also studied the same Carmel school.

You can write good subjects about our Dist. (not Little flower and Joseph convent. haa haaa haaaa)

ஜோ / Joe said...

இளவஞ்சி,மணியன்,நாஞ்சில் ஸ்டீபன் ..நன்றி!
ஜோசப் சார்..ரொம்ப சந்தோஷம் .நன்றி!

ramachandranusha said...

வாங்க, வாங்க! நல்லா வரும் என்ற நம்பிக்கை இருக்கு. அறிமுகன் என்ற பெயரில் சூப்பர் வேகத்தில் ஆரம்பித்து வீட்டீர்கள்,
இந்த வேகம் ஒரு வாரம் இருக்கணும். :-)
உஷா

ஜோ / Joe said...

நன்றி உஷா!

மதுமிதா said...

இந்த வார நட்சத்திர ஜோ
நல்லா ஒளிருங்க
மனமார்ந்த வாழ்த்துகள்.

என்ன கலக்கப் போறீங்க.
ஒருவாரம் கழிச்சு முதல் பரிசுன்னு அறிக்கை வரப்போகுது(ரோட்டரியில கிடைச்ச மாதிரி)

கலக்குங்க.

ராம்கி said...

Welcome boss,

"Muttam" pathi exclusive matter pannunga...maranthudaatheenga

சுதர்சன் said...

வாழ்த்துகள் நட்சத்திரமே!

ஜோ / Joe said...

//ஒருவாரம் கழிச்சு முதல் பரிசுன்னு அறிக்கை வரப்போகுது//
என்ன லொள்ளா? நன்றி மதுமிதா.

//"Muttam" pathi exclusive matter pannunga//
தலைவா! பண்ணிடுவோம்.வருகைக்கு நன்றி!

சுதர்சன்..நன்றி!

மூர்த்தி said...

உற்சாகமான வரவேற்பு உங்களுக்கு ஜோ. வாழ்த்துக்கள்.

Dharumi said...

ஏன் அதிகமா எழுதமாட்டேங்கிறீங்கன்னு இப்பதான் கேட்டேன்னு நினைக்கிறேன். நட்சத்திரமா உங்கள மதி ஆக்கினதுக்குக் காரணமே - நல்லா எழுதுற ஆளு; இன்னும் கொஞ்சம் எழுத வைக்கணும் அப்டீங்கிற எண்ணத்திலதான் இருக்கணும்.
இது ஆரம்பமாய் இருக்கவேண்டும்.
எனக்குத் தெரிஞ்ச ஆளு ஒருத்தர் 100 பதிவுன்னு பீலா உட்டுட்டு, அதுக்குப் பிறகு ஏதும் உருப்படியா எழுதினது மாதிரி தெரியலை!

வாழ்த்துக்கள்.

ஜோ / Joe said...

மூர்த்தி..நன்றி!

ஜோ / Joe said...

தருமி..உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி!

ஜோ / Joe said...

//எனக்குத் தெரிஞ்ச ஆளு ஒருத்தர் 100 பதிவுன்னு பீலா உட்டுட்டு, அதுக்குப் பிறகு ஏதும் உருப்படியா எழுதினது மாதிரி தெரியலை!//
குருவைப்பத்தி அப்படியெல்லாம் சொல்லாதீங்க .கீழ விழுந்த யானைகளே குதிரை மாதிரி எழும்பி ஓடுது .நம்ம குரு அதே வேகத்துல போயிட்டிருக்காரு .இப்போ கொஞ்சம் இளைப்பாறுறாருண்ணு நினைக்குறேன்.

ஜோ / Joe said...

தேசிகன்,
உங்களுக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன்.மன்னிக்கவும்.பாராட்டுக்கு நன்றி.தொடர்ந்து உங்கள் கருத்தை சொல்லவும்.

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள் ஜோ.

-L-L-D-a-s-u said...

வாழ்த்துக்கள் ஜோ

ஜோ / Joe said...

தேன் துளி ,LLDasu ..நன்றி!

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//இத்தனை இளைஞர்கள் தருமியையும் சேர்த்துத்தான்) //

இதுதானே வேணாங்கிறது.

அப்புறம் எனக்கு
நாகர்கோவில்,கன்னியாகுமரிப் பகுதிகள் ரொம்பப் பிடிக்கும். நிறைய நண்பர்கள் உண்டு. எனது நண்பனின் கிராமம் கருங்கல் பக்கத்தில் "செம்முதல்" என்ற ஊர். அங்கு வருவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

நட்சத்திர வாழ்த்துக்கள் ஜோ.

சுதர்சன்.கோபால் said...

கார்த்திகை வானில் நட்சத்திரமாய் ஒளிரப் போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

ஜோ / Joe said...

கல்வெட்டு,
நம்ம ஊரை யாருக்குத்தான் பிடிக்காது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சுதர்சன் கோபால்,மிக்க நன்றி!

தாணு said...

வாழ்த்துக்கள் ஜோ! குமரியும், நாகர்கோயிலும் கலக்கப்போகுது. உங்க ஊர் பாஷையில் ஏதும் சொல்லவேயில்லையே `மக்களே'!

சிவா said...

ஜோ! வாழ்த்துக்கள். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஜோ / Joe said...

தாணு,சிவா..வருகைக்கு நன்றி

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் ஜோ. //தொடர்வோம் இந்த பகிர்தலை ..நண்பர்களே// இந்த எண்ணம் தான் உங்களை நட்சத்திரம் ஆக்கியிருக்கிறது என்று எண்ணுகிறேன். தருமி ஐயா யாரை 100 பதிவு முடித்து உருப்படியான பதிவு கொடுக்கலைன்னு சொல்றார்ன்னு எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா? எனக்கு தெரிஞ்சும் ஒருத்தர் அப்படி இருக்கார். தருமி ஐயா அவரை தான் சொல்றாரான்னு தெரியல.

Thangamani said...

வாழ்த்துக்கள் ஜோ. நல்லா செய்யுங்க!

சிங். செயகுமார். said...

அழகான எளிய தமிழ் நடையில் அசத்திட்டீங்க போங்க .ரொம்ப காலத்திற்கு பின் உங்கள் பதிவு போலும். சந்தோழமான வாழ்த்துக்கள்! புத்தகம் படிப்பதை விட நல்ல பதிவுகள் நம் மனதில் நிலை கொள்கின்றன . அந்த வகையில் உங்கள் பதிவு எனக்கு சந்தோழமே! உங்கள் அடுத்த பதிவிற்காக ஆவலுடன் நான் இங்கே!

ஜோ / Joe said...

குமரன்,
நன்றி!
//தருமி ஐயா யாரை 100 பதிவு முடித்து உருப்படியான பதிவு கொடுக்கலைன்னு சொல்றார்ன்னு எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா? எனக்கு தெரிஞ்சும் ஒருத்தர் அப்படி இருக்கார். தருமி ஐயா அவரை தான் சொல்றாரான்னு தெரியல. //
ஆகா,'தன்னடக்க செம்மல்' பட்டத்துக்கு நீங்களும்,தருமியும் போட்டியா?

தங்கமணி,சிங்.செயக்குமார்..மிக்க நன்றி!

குமரன் (Kumaran) said...

ஜோ, எனக்கு அந்த தகுதி இல்லை. இப்பத்தான் 65 பதிவு முடிச்சிருக்கேன். 100வது பதிவு போட இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் :-)

எம்.கே.குமார் said...

Jo, kalakkungka!

"thalaivar" paththi eethum varumaa? :-)

M.K.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives