Tuesday, November 29, 2005

பங்காளிகள்


ஒரு ஊரில் ரெண்டு பங்காளிங்க இருக்காங்க.ரெண்டு பேருக்கும் பொதுவான சொத்தை சம்பந்தம் இல்லாத இன்னொருத்தன் அபகரிச்சு
வச்சுக்கிறான்.வெகுகாலமா இவங்க ரெண்டுபேரும் ஒத்துமையா அந்த ஜென்ம விரோதிய எதிர்த்து போராடுறாங்க .நீண்ட போராட்டதுக்கப்புறம் ,அடி பட்டு ,ரத்தம் சிந்தி அந்த சொத்தை மீட்குறாங்க .சொத்து அவங்க கைக்கு வந்தவுடனே பங்காளிங்க ரெண்டுபேருக்கும் இருந்த ஒத்துமை காணாமப் போச்சு .ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா சரிப்பட்டு வராதுண்ணு ,சொத்த பிரிச்சுக்கிறாங்க .அதுக்கப்புறம் பாத்தீங்கண்ணா ஊருலயே இவங்க ரெண்டு பேரும் தான் ஜென்ம விரோதி .பாத்தா முறச்சுகிறாங்க .அடிச்சுகிறாங்க .அவங்க பிள்ளைகளையும் விரோத விஷம் ஏத்தி வளக்குறாங்க.இப்போ பழைய எதிரி இருந்தானே அவன் கூட ரெண்டு பேருக்கும் நல்ல தோஸ்து தான் .அவன் கூட்டம் இவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைய மூட்டி விட்டு ,உள்ளுக்குள்ள 'பைத்தியக்கார பசங்க'-ன்னு சிரிக்கிறாங்க .


இது தமிழ் சினிமாக்கதையாவும் இருக்கலாம் .ஆனா நான் சொல்லுறது இந்தியா - பாகிஸ்தான் உண்மைக் கதைங்க. ஒரு சராசரி இந்தியனும்,பாகிஸ்தானியும் தேசபக்தி என்பது தன் சொந்த நாட்டில் பொறுப்புடன் நடந்து கொள்வது ,நாட்டின் முன்னேற்றத்துக்கும் உலக அரங்கில் அதன் பெருமைக்கும் பாடுபடுது போன்றவற்றை விடவும், எந்த அளவுக்கு இந்த எதிரி நாட்டை வெறுக்கிறான்,உணர்ச்சி வசப்படுகிறான் என்பதில் தான் இருக்கிறது என்ற எண்ண ஓட்டத்தில் தான் வளர்க்கப்படுகிறான். நானும் ஒரு சராசரி இந்தியன் என்றாலும் பாகிஸ்தானியர் மீது எப்போதும் வெறுப்பை வளர்த்துக்கொள்ளவில்லையெனினும் ,ஒரு அன்னியத்தன்மை ,அவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற நிச்சயமற்ற மனநிலை இருந்தது உண்மை.அப்படிப்பட்ட பிரமை தோற்றுவிக்கப்பட்டது.


முதன்முதலில் நான் ஒரு பாகிஸ்தானியரை சந்தித்தது கம்போடியாவில் .வேலைநிமித்தம் சில காலம் அங்கு தங்கியிருந்த போது இந்திய உணவகம் தேடியபோது கண்ணில் பட்டது 'ராயல் இந்தியா' என்ற உணவகம் .அங்கு சென்று உட்கார்ந்திருந்த போது அந்த
உணவகத்தை நடத்துபவர் என்னிடம் வந்து பேசினார் .நான் அவரிடம் "நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியைச் சேர்ந்தவர்?" என்று கேட்டேன் ."நான் ஒரு பாகிஸ்தானி" என்று சொன்னார் ."நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா?' என்று கேட்டார் .அந்த நேரத்தில் நான்
என்ன நினைத்தேனோ "இல்லை.நான் இலங்கையிலிருந்து வருகிறேன்" என்று பொய் சொல்லி விட்டேன்.எது அப்படி என்னை சொல்ல வைத்தது என்று எனக்கே தெரியவில்லை .அவர் என்னை மிக நன்றாக கவனித்தார் .(நான் இந்தியன் என்று சொல்லியிருந்தால்
இதைவிட பல மடங்கு என்னை கவனித்திருப்பார் என்பதை பின்னர் தான் உணர்ந்தேன். நான் அவ்வாறு நடந்து கொண்டது எனக்கு வெட்கத்தைக் கொடுத்தது).


அதன் பின்னர் அங்குள்ள ஒரு இலங்கைத்தமிழர் நடத்தும் உணவகத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம் .அங்கே இன்னொரு பாகிஸ்தானியரோடு நட்பு கிடைத்தது .நான் இந்தியர் என்பதை அறிந்து அவர் மிகவும் மரியாதையோடு பழகினார் .பல பொதுவான விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

இன்னொரு முறை ஹாங்காங் சென்றிருந்தேன் .4 நாட்கள் இந்திய உணவு சாப்பிடாமல் பின்னர் இந்திய உணவகம் தேட ஆரம்பித்தேன் .ஓட்டல் அறையில் இருந்த செய்தித்தாளில் ஒரு பாகிஸ்தானிய உணவக விளம்பரம் கண்ணில் பட்டது.உடனே அதிலுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் .உணவக உரிமையாளரே பேசினார் .நானிருக்கும் இடத்தை சொல்லி ,இங்கிருந்து எப்படி உணவகம் இருக்கும் இடத்திற்கு வருவது என்று கேட்டேன் ."நீங்கள் எந்த நாட்டினர்?" என்று கேட்டார்.நான்
இந்தியன் என்று சொன்னேன் .மகிழ்ச்சி தெரிவித்த அவர் அங்கிருந்து சுரங்க ரயில் மூலம் ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் இறங்கி 5 நிமிடம் நடக்க வேண்டும் .நீங்கள் எப்போது வருவீர்கள் என்று சொன்னால் நிலையத்தில் இருந்து உங்களை அழைத்து வர நான் ஒருவரை அனுப்புகிறேன் என்று சொன்னார் .நான் "சிரமம் வேண்டாம் .நான் அந்த நிலையத்துக்கு வந்து விசாரித்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.


நிலையத்தின் சுரங்கத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கே சில பாகிஸ்தான் இளைஞர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் (அந்த பகுதி பாகிஸ்தானியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியாம்) .அவர்களிடம் சென்று நான் ஒரு இந்தியன் என அறிமுகப்படுத்தி விட்டு
,உணவகத்தின் முகவரியை சொல்லி வழி கேட்டேன் .அவர்களுக்குள் ஏதோ பேசிவிட்டு ,ஒருவரை என் கூடவே அனுப்பி விட்டார்கள் .அவர் என்னை அழைத்து சென்று உணவக வாசலில் விட்டு விட்டு விடை பெற்றார்.நன்றி சொல்லி உள்ளே நுழைந்தேன்.தொலைபேசியில் உரையாடிய பாகிஸ்தானியர் என்னை மகிழ்ச்சியோடு வரவேற்று உட்கார வைத்தார் .இன்னொருவர் மெனுவோடு வந்தார். அவர் கல்கத்தாவை சேர்ந்தவராம் .பட்டியலில் இருந்த மீன் குழம்பு கேட்டேன் . அவரோ "மன்னிக்கவும் .தற்போதைக்கு மீன் இல்லை" என்றார் .பரவாயில்லை என்று சொல்லி சிக்கன் வகை ஒன்று ஆர்டர் செய்தேன் .அவர் சென்ற பிறகு சிறிது நேரத்தில்
பாகிஸ்தானியர் வந்து "உங்களுக்கு அவசரம் இல்லையென்றால் ,நான் மீன் வாங்கி வரச்செய்கிறேன் .இங்கே பக்கத்தில் தான் சந்தை" என்று சொல்ல நான் சிரமம் வேண்டாமென்று சொல்ல ,ஒன்றும் சிரமமில்லை என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார் .எனக்காக
மீன் வாங்கி வரச்செய்து சமைத்துக் கொடுக்கச் செய்தார் .மிகவும் மரியாதையாக நடத்தினார்.வற்புறுத்தி இலவசமாக குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.


2 நாட்களுக்குப்பின் மீண்டுமொரு முறை சென்றேன் .என்னைப் பார்த்ததும் பழக்க தோஷத்தில் "அஸ்லாமு அலைக்கும்" என்று சொல்லி விட்டு சுதாரித்து 'சாரி" என்று சொன்னார் .நான் உடனே "அலைக்கும் ஸலாம்" சொல்லி விட்டு "எதற்கு சாரி கேட்கிறீர்கள் ?.நீங்கள் எனக்கு சமாதனம் உண்டாகட்டும் என்று சொல்லுகிறீர்கள் .நான் பதிலுக்கு உங்களுக்கும் அவ்வாறே என்று சொல்லுகிறேன் .இது பொதுவான வாழ்த்து தானே .எங்கள் சர்ச்சில் கூட திருப்பலியில் இதைத்தான் சொல்லுகிறோம் .குருவானவர் அனைவரையும் பார்த்து "சமாதானம் உங்களோடு இருப்பதாக" என்று சொல்ல அனைவரும் பதிலுக்கு "உம்மோடும் இருப்பதாக" என்று சொல்லுகிறோம்" என்று சொன்னேன் .அவர் ஆமோதித்தார் .நீண்ட நேரம் என்னோடு பேசிக்கொண்டிருந்தார் .வயதில் எனக்கு பெரியவராக இருந்த, படித்த அவரிடம் ,பாகிஸ்தான் பற்றிய பல விஷயங்களை கேட்க முடிந்தது .அவருடைய உரையாடலில் இந்தியா மீதும் இந்தியர் மீதும் அவர் வைத்துள்ள நல்லெண்ணம் பளிச்சிட்டது . அரசியல் காரணங்களுக்காக நிலவும் பகைமைக்கு அவரும் என்னைப்போலவே வருந்தினார்.இன்றும் அவருடன் நட்பு தொடர்கிறது.


இன்று பொதுவாக,பரஸ்பர வெறுப்பு உள்ளூர் தேசபக்தியின் அளவுகோலாகவே மாறிவிட்டது .நல்லிணக்கத்தை வளர்ப்பதாக சொல்லப்படும் கிரிக்கெட் சில நேரங்களில் நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாகவும் ,பல நேரங்களில் அர்த்தமற்ற வெறுப்பை
வளர்ப்பதாகவுமே எனக்குப்படுகிறது .படிக்காத பாமர மக்களை விட்டுவிடுவோம் .படித்த நண்பர்கள் பலரே கிரிக்கெட்டில் ஜெயிப்பதில் தான் இந்தியாவின் மானமே அடங்கியிருப்பதைப் போல அரைவேக்காட்டுத்தனமாக நடந்து கொள்வதை பார்த்திருக்கிறேன் .நம்முடைய நாடு வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்க வேண்டும் .அதற்கு அவர்களை விட நம்மவர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கலாம் .நம் அணி மோசமாக விளையாடினாலும் அவர்கள் தோற்கவேண்டும் .இல்லையென்றால் அவர்களைத் திட்டுவது எந்த வகையில் நியாயம் .6 வருடங்களுக்கு முன்பு ,சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையிலிருந்து கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது .அரங்கு நிறைந்த மக்கள் கூட்டம் ஏமாற்றத்தில் 2 நிமிடம் அமைதியாக இருந்து ,பின்னர் பாகிஸ்தான் வீரர்களை பாரட்டும் விதமாக எழுந்து நின்று கரவொலி எழுப்பிய போது ,சில பாகிஸ்தான் வீரர்களின் கண்களில் நெகிழ்ச்சியின் கண்ணீர் .சென்னை மக்களை நினைத்து நான் காலரை தூக்கி விட்டுக்கொண்டேன்.பாகிஸ்தானில் இப்படி நடக்குமா என்று பலர் கேட்டார்கள் .ஆனால் பாகிஸ்தான் மக்கள் சமீபத்திய இந்திய அணி பயணத்தின் போது
சரியான பதில் தந்தார்கள் .இந்திய அணிக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தார்கள்.


சில அரசியல் பிரச்சனைகளில் நாம் வேறுபட்டிருக்கிறோம் .அதை ராஜ்ஜிய முறையில் தீர்த்துக்கொள்ளலாம் .ஆனால் அடிப்படையில் ஒரு தாய்ப்பிள்ளைகளான மக்கள் நண்பர்களாக இருப்பதில் என்ன சிக்கல் .இரு புறங்களிலிலுமே ,சாதாராண மக்களிடையே பரஸ்பரம்
தவறான புரிந்துணர்வு இருக்கிறது .இது மாற்றப்பட வேண்டியது.

சில நேரங்களில் நண்பர்கள் பலருடைய அணுகுமுறை எனக்கு புரிவதில்லை .விளையாட்டு என்பதையும் மீறி ,உணர்வுபூர்வமாக ஒரு சார்பு நிலை வருவது இயல்பு தான் .நம் நாட்டு அணி எந்த நாட்டோடு மோதினாலும் ,உணர்வுபூர்வமாக நம் நாடு வெற்றி பெற
வேண்டுமென நாம் விரும்புகிறோம் .அது இயல்பு .ஆனால் பாகிஸ்தானும் இங்கிலாந்தும் விளையாடினால் ,நாம் இங்கிலாந்து வெற்றி பெறவேண்டுமென (பாகிஸ்தான் தோற்க) விரும்புவது என்ன உணர்வு என தெரியவில்லை .நமக்கு இங்கிலாந்தை விட
பாகிஸ்தானல்லவா சொந்தம் ? பாகிஸ்தானை விட இங்கிலாந்தும் ,ஆஸ்திரேலியாவும் எந்த வகையில் நமக்கு நெருக்கம்? நியாயமாக பார்த்தால் நம் உணர்வுகள் பாகிஸ்தானோடல்லவா பொருந்த வேண்டும்?நாம் ஒன்றாக சுதந்திரத்துக்காக போராடினவர்கள் அல்லவா?.சில அரசியல் காரணங்களுக்காக அந்த முடிவு எடுக்கப்படாதிருந்தால் நாம் ஒரே நாட்டில் இருந்திருக்க வேண்டியவர்கள் அல்லவா?


நம்ம குடும்பத்து பங்காளிச்சண்டை கோர்ட்-ல இருக்கலாம் .இருந்தாலும் பங்காளிகளோட பிள்ளைங்க நாம அன்பா இருப்போமே? நாளை அதுவே பங்காளிச்சண்டையின் உக்கிரம் குறைய பயன்படலாமில்லியா?

என்ன சொல்லுறீங்க?

38 comments:

Anonymous said...

SUPERB !!!!

குமரன் (Kumaran) said...

கலக்கல் பதிவு ஜோ. உங்கள் கருத்தை முழு மனதுடன் வழிமொழிகிறேன். இங்கு அமெரிக்காவில் என் டீமில் இரண்டு பாகிஸ்தானியர் உண்டு. அவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மதியம் 1 மணி போல் வெளியே செல்லும் போது தான் அவர்கள் முஸ்லீம/பாகிஸ்தானியர் என்பதே எங்களுக்குத் தெரியும். மற்ற நேரங்களில் டீமில் உள்ள மற்ற இந்தியர்களுடன் எந்த பாகுபாடும் வெறுப்பும் இல்லாமல் தான் பழகுகிறார்கள்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

ஜோ கலக்கீட்டீங்க.

(முகமூடி எதாவது இன்ஸ்டன்ட் பின்னூட்டங்கள் தயார் செய்யவும்.)

அமெரிக்காவில் நான் முதன் முதலில் பார்த்த வேலையில் திட்ட மேலாளர் காகிஸ்தானியர். அதுபோல் பல காகிஸ்தானியர்களுடன் வேலை பார்த்தது உண்டு.

அது என்னவோ கிரிக்கட்டில் மட்டும் நாட்டுப்பற்றைக் காட்டும் செயல் என்னை இதுவரை கவர்ந்தது இல்லை.

நல்ல மக்கள் எங்கும் (நாடு/மதம்/மொழி தாண்டி) நல்லவர்களாகவே உள்ளார்கள்.

தவறுகள் இரண்டு பக்கமும் இருக்கலாம்.

இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருப்பது ?

Suresh said...

அருமையான பதிவு ஜோ !!

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.

சிங். செயகுமார். said...

வாழ்த்துக்கள் ஜோ !இதுவரை நான் கண்ட ( சில மாதங்களாகத்தான் எனக்கு வலைப்பூ அறிமுகம்)
என்னை கவர்ந்த நட்சத்திரம் . மிஸ்டர் ஜோ
மனம் திறந்த அலசல்
ஆயிரம் பிணக்குகள் இருந்தாலும் அந்த ஒரு விளையாட்டு எல்லோரையும் எப்படி இணைக்கிறது !
சந்தோஷம் நண்பரே!
நாளை எப்போ விடியும்!
உங்கள் அடுத்த பதிவு காண!

துளசி கோபால் said...

ஜோ,
சூஊஊஊஊஊஊஊஊஊஊப்பர் பதிவு.

மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

நல்லா இருங்க.

ஜோ/Joe said...

குமரன்,கல்வெட்டு,சுரேஷ் பாபு,சிங்.செயக்குமார் ,துளசி அக்கா..அனைவருக்கும் நன்றி!

b said...

அன்பின் ஜோ,

நான் சந்தித்த அதே போன்ற பிரச்னைகள். பிரச்னைகள் என்று சொல்லமுடியாது, அதாவது சந்திப்புகள். எங்கள் நிறுவனத்திற்கு வரும் பல பாகிஸ்தானியர்களை அன்போடு கவனித்து இருக்கிறேன். அவர்களும்தான். எனக்குள்ளே சகோதர பாசம். ஒரேயொரு பாகிஸ்தானியர் மட்டும் என்னவோ புழுவினைப் பார்ப்பதுபோல் பார்ப்பார். அவர் பின்னர் எங்கள் நிறுவனத்துக்கு பாக்கி நிறைய வைத்ததால் துறத்திவிட்டோம் என்பது பழைய கதை.

நம்மிடம் இருந்து என்ன வெளிப்படுகிறதோ அதேதான் அவர்களிடம் இருந்து வெளிப்படும். அது அன்பாக இருந்தாலும் சரி வம்பாக இருந்தாலும் சரி. எனவே நாமே முன்சென்று அன்பு செலுத்துவதுதான் சாலச் சிறந்தது.

சிவா said...

நல்ல பதிவு ஜோ! எல்லோரிடமும் அந்த அன்பு, நட்பு உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது. ஒரு பாகிஸ்தானியரை பார்க்கும் போது நமக்குள் ஒரு விரோத எண்ணம் வருவதே இல்லை. இந்தியாவில் கிரிக்கெட் ஒழிந்தால் இன்னும் கொஞ்சம் அந்த உணர்வு அதிகமாகும். தொடருங்கள்...அடுத்த பதிவுக்கும் காத்திருக்கும் சிவா..

குழலி / Kuzhali said...

கலக்கல் ஜோ,

என் பல எண்ணங்களை அப்படியே எழுதியுள்ளீர். இந்த பதிவின் கருத்துகளோடு அப்படியே உடன்படுகின்றேன்.

நன்றி

Anonymous said...

நம் நாட்டில் இன்னமும் மனிதநேயமும் சகோதரத்துவ மனப்பான்மையும் உயிரோடு தான் இருக்கிறது என்பதை உங்கள் பதிவும் பின்னூட்டங்களும் தெளிவிக்கின்றன. புல்லுருவிகளால் பகைமை மூட்டப்பட்டு பிரிந்து நிற்கும் இரு சகோதரர்களுக்கு இடையில் இணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்த இன்னமும் காலம் கடந்துவிடவில்லை என்பதை உங்கள் எழுத்துக்களும் சகோதரர்களின் பின்னூட்டங்களும் பறைசாற்றுகின்றன.

நான் ஒரு இஸ்லாமியன் என்ற முறையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் குறித்து என் மனதில் தோன்றும் எண்ணங்கள்:

* முதல் எண்ணமே பிரிக்கப்பட்ட நம் சகோதரர்களையும், நம் தாய் நாட்டுப் பகுதிகளையும் திரும்பவும் நம்மோடு இணைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து களமிறங்க வேண்டும். இதன் மூலமாக ஒரு வேளை தீர்வு காணப்படாமலிருக்கும் காஷ்மீர் பிரச்சினையும் ஒரு முடிவுக்கு வரும்.

* இதற்கு எதிராக வரும் எல்லா ஆதிக்க புல்லுருவிகளையும் நம் தாய்நாட்டின் விரோதிகளாக அறிவித்து அவர்களுக்கு எதிராக ஒருமித்து போராட வேண்டும்.

* ஒரு பைசாவிற்கு பிரயோஜனமில்லாத "குஷ்பு" போனற விஷயங்களை குறித்து எழுதுவதையும், பேசுவதையும் நிறுத்தி விட்டு இது போன்ற சகோதரத்துவத்தை உருவாகும் படியான நல்லக் கருத்துக்களை குறித்து பேசவும் எழுதவும் தயாராக வேண்டும்.

நட்சத்திர வாரத்தின் ஆரம்பத்திலேயே நல்ல ஒரு சிந்தனையுடன் கூடிய பதிவோடு வந்திருக்கின்றீர்கள். வரும் பதிவுகளிலும் இது போன்ற நாட்டுக்கு தேவையான நல்ல பல கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

என் ஊர் சகோதரருக்கு இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்.

ilavanji said...

அருமையான பதிவு ஜோ!

G.Ragavan said...

நல்ல பதிவு ஜோ. உங்கள் அனுபவம் எனக்கும் பெல்ஜியத்தில் ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு பாகிஸ்தானியர் உணவு விடுதிக்குச் செல்வோம். அவர் அருமையான ரொட்டிகளைச் சுட்டுக் கொடுப்பார். அவர் நம்மிடம் நல்லபடியாக நடந்து கொண்டது போல நாமும் அவரிடம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறோம் தானே. பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் எங்கும் உண்டு. அதை மேலும் வளர்க்கும் விதமாக கீழ்த்தரமான மத, மொழி, இன, நாட்டுத் தாக்குதல்களில் இறங்குவதை அனைவரும் கைவிட வேண்டும். அதுவே நன்று.

அன்பு said...

மனமொன்றி வாசிக்க...
கண்ணில் ஒரு துளி நீர் ததும்பியது! பாராட்டுக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

ரொம்ப நல்லாருக்கு ஜோ!
எத்தனை உணர்ச்சிவசமா இருக்கு. படிச்சி முடிச்சதுக்கப்புறம் மனசுல லேசா ஒரு சந்தோஷம்.

கொஞ்ச நாளாவே பாகிஸ்தானியர் அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளை கடினமான அறுவை சிகிச்சைகளுக்காக சென்னைக்கு கொண்டுவருகின்றனர் என்பதை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அவர்கள் நம் நாட்டைப் பற்றியும் நம் மக்களுடைய பாசத்தைப் பற்றியும் அளவுக்கதிகமாகவே புகழ்ந்துவிட்டு செல்கின்றனர்.

விளையாட்டை எடுத்துக்கொண்டால் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளைப் போலவே ஆசி-நியுசி, இங்கி-ஆசி இவைகளுக்கிடையிலும் கடுமையான போட்டி நடக்கிறது. இது ஒரு போதும் மக்களிடையில் உள்ள துவேஷத்தை காட்டுவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நானும் அப்படித்தான் ஹாக்கியிலும் சரி கிரிக்கெட்டிலும் சரி நம் அணி யாரிடம் தோற்றாலும் பரவாயில்லை பாக்கிடம் தோற்றுவிட்டால் ஆத்திரம் ஆத்திரமாக வரும். ஒரு போட்டியை காணும்போது We should side with some team அப்பத்தான் போட்டியை ரசிச்சி பாக்கமுடியும்.
என்ன நான் சொல்றது சரியா, ஜோ?

தாணு said...

//பைசா பிரயோஜனமில்லாத `குஷ்பூ' விஷயங்கள் பற்றி எழுதுவதைவிட இதுபோன்ற சகோதரத்துவம் மிகுந்த கருத்துக்கள் பற்றி எழுதலாம்// இறைனேசனின் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். நல்ல தெலிவான சிந்தனை ஜோ!

மணியன் said...

மிகச் சிறப்பான சிந்தனைகள். உங்களுடன் முழுவதும் உடன்படுகிறேன். உலகளாவிய நிலையில் இந்திய பாகிஸ்தானியரிடையே பகைமை இருப்பதாகத் தெரியவில்லை. கிரிக்கெட்டிலும் இம்ரான்கான், அக்ரம், அஃப்ரிடி என நிறைய பேருக்கு விசிறிகள் உண்டு. பர்வீன் சுல்தானாவின் இசைக்கு எத்தனை பேர் அடிமைகள் ? விளையாட்டு களத்தில் காணும் பகைமை உணர்ச்சி தற்காலிகமானது. ஒரு ஊரின் இரண்டு கல்லூரிகளிடம் கூட அடிதடி இருக்கும்; ஆனால் அது ஜென்மப் பகை இல்லை. அரசியல் என்பதே மக்களிடம் துவேஷம் வளர்ப்பது என்றிருக்கும் இன்றைய நிலையே இதற்கெல்லாம் காரணம்.
மீண்டும் சிறந்த இவ்விடுகைக்காக பாராட்டுக்கள்.

ஜோ/Joe said...

மூர்த்தி,
//எனவே நாமே முன்சென்று அன்பு செலுத்துவதுதான் சாலச் சிறந்தது.//
சரியா சொன்னீங்க!

சிவா,குழலி நன்றி!

இறைநேசன்,
உங்கள் கருத்துக்களுக்கும் ,பாராட்டுக்கும் நன்றி!
//ஒரு பைசாவிற்கு பிரயோஜனமில்லாத "குஷ்பு" போனற விஷயங்களை குறித்து எழுதுவதையும், பேசுவதையும் நிறுத்தி விட்டு இது போன்ற சகோதரத்துவத்தை உருவாகும் படியான நல்லக் கருத்துக்களை குறித்து பேசவும் எழுதவும் தயாராக வேண்டும்.//
உண்மை..உண்மை!

இளவஞ்சி,ராகவன்,அன்பு ..மிக்க நன்றி!

ஜோசப் சார்,
நன்றி.
//ஒரு போட்டியை காணும்போது Wஎ ஷொஉல்ட் சிடெ நித் சொமெ டெஅம் அப்பத்தான் போட்டியை ரசிச்சி பாக்கமுடியும்.
என்ன நான் சொல்றது சரியா, ஜோ?//
நான் மறுக்கல்ல .நம்ம நாடு பாகிஸ்தான் கூட விளையாடும் போது நாம இந்தியா வெற்றி பெற தான் விரும்புவோம் .அதே நேரம் பாகிஸ்தான் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா அல்லது நியூசி அல்லது ஜிம்பாவே கூட ஆடும் போது நாம யார் வெற்றிபெறணும்ன்னு விரும்பணும் ?பாகிஸ்தான் தானே? எனக்கு அது தான் நியாயமா தோணுது

தாணு,மணியன்..நன்றிகள் பல.

-L-L-D-a-s-u said...

// .அது இயல்பு .ஆனால் பாகிஸ்தானும் இங்கிலாந்தும் விளையாடினால் ,நாம் இங்கிலாந்து வெற்றி பெறவேண்டுமென (பாகிஸ்தான் தோற்க) விரும்புவது என்ன உணர்வு என தெரியவில்லை .நமக்கு இங்கிலாந்தை விட பாகிஸ்தானல்லவா சொந்தம் //

இதே வார்த்தை தாங்க நான் என் நண்பர்களிடமும் கூறுவது !! முஸ்தபாவுக்கு எதிரே இருக்கும் பாகிஸ்தான் கடையில் சாப்பிடும்போது அங்கு வரும் பாகிஸ்தானியரிடம் பேசியபோதும் நீங்கள் கூறிய அதே எண்ணங்கள் தான் எனக்கும் தோன்றியது .. என்ன செய்வது வெறுப்பை வளர்ப்பது அரசியல்வாதிகளின் தொழில் ..

ஜோ/Joe said...

கருத்துக்கு நன்றி தாஸ்!

மதுமிதா said...

அன்பாவே இருப்போம் ஜோ

எவ்வளவு எளிமையா கையாண்டிருக்கீங்க விஷயத்த.
ஒரு வாரம் போதுமாய்யா?

கலங்கி வழியும் கண்களுடன்
மதுமிதா

ஜோ/Joe said...

நன்றி மதுமிதா!

முத்துகுமரன் said...

எழுந்து நின்று எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்திய பாகிஸ்தானிய மக்கலின் உள்ளங்களில் விதைக்கப்படும் வெறுப்பே தேசபக்தி என்பதை மிக அழகாக தோலுரித்து காட்டி இருக்கிறீர்கள். இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்பட வேண்டும். மாறாக இந்தப் பிரச்சனைகளை தேர்தல் கால அனுகூலங்களாக மாற்ற முனைவோர்களை இனம் கண்டு நிராகரிக்க வேண்டும்....

நிச்சயம் நீங்கள் நட்சத்திரப் பதிவாளர்தான்.

கடந்த ஓரிரு நாட்களாகத்தான் தங்கள் வலைப்பூவை வாசிக்கிறேன். உங்கள் சிந்தனைகள் பரந்து பட்டதாக இருக்கிறது. நம் எண்ணங்களில் ஏற்படும் மாற்றம் சமுதாயத்தில் பிரதிபலிக்கும்.

இரு தேசத்தவரும் ஒற்றுமையுடனும் நல்ல இணக்கத்தோடும் வாழும் காலம் வரும். எனக்கந்த அநம்பிக்கை இருக்கிறது

மனமார்ந்த பாராட்டுகள் ஜோ.....

தொடருட்டும் உங்கள் ராஜபாட்டை....

ஜோ/Joe said...

முத்துக்குமரன்,
மிக்க நன்றி!

Chandravathanaa said...

நல்ல பதிவு

வானம்பாடி said...

அருமையான பதிவு ஜோ!

Sivabalan said...

ஜோ,

///நம்ம குடும்பத்து பங்காளிச்சண்டை கோர்ட்-ல இருக்கலாம் .இருந்தாலும் பங்காளிகளோட பிள்ளைங்க நாம அன்பா இருப்போமே? நாளை அதுவே பங்காளிச்சண்டையின் உக்கிரம் குறைய பயன்படலாமில்லியா? //


நல்லா சொன்னீங்க..

அருமை..

Anonymous said...

அருமையான, மனிதநேயமிக்க பதிவு.

Shajahan Ibrahim

தென்றல் said...

"SurveySan" பதிவின் மூலம் இங்கு வந்தேன்.
நல்ல பதிவு, ஜோ! சிந்தனைக்கு பாராட்டுக்கள்!
'தேவர் மகன்' பார்த்திருப்பீர்கள்தானே? நாசரும், கமலும் "பங்காளிகள்".
கதையின் படி, கமல் எவ்வளவுதான் பிரச்சனையில்லாமல் ஒதுங்கி தன் வழியே சென்றாலும், அவனால் முடிவதில்லை.

ஏன்?

அவனை அமைதியாக இருக்கவிடுவதில்லை. ஏதாவது ஒரு வழியில் அவனுக்கோ அல்லது அவனை சார்ந்த மக்களுக்கோ பிரச்சனை கொடுத்து கொண்டே இருக்கிறான். முடிவு.... ?

அவர்கள் எப்பொழுதும் 'அவர்கள்' போக்கிலே இருப்பார்கள். ஆனால், நாம் மட்டும்தான் அமைதி, பேச்சுவார்த்தை-னு போய்கிட்டு இருக்கணும்-னா அதில என்ன நியாயம் இருக்கு?

'ஒரு ராஜீவ்காந்தி' இறந்தபின், நம் அரசாங்கம், LTTE-ய 'தீவிரவாதிகள்' அட்டவணை-ல சேர்த்திருச்சி. ஏன் இலங்கையில உள்ள தமிழர்கள் நம் ரத்தம் இல்லையா?

பாகிஸ்தான் அரசாங்க தூண்டுதலால இதுவரைக்கும் எத்தனை ஆயிரம் இராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் இறந்துருப்பாங்க. ஏன் நம்ம அரசாங்கம்,பாகிஸ்தானை 'தீவிரவாதி நாடு' சொல்லாம இன்னும் பேச்சுவார்த்தைக்காக 'காத்துகிட்டு' இருக்கோம்? நம்ம இராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் உயிர்கள்-னா அவ்வளவு அலட்சியமா, எந்த வகையில கேவலம்?

எந்த ஒரு budget-ல யாவது நம்ம அரசாங்க இராணுவத்திற்கான செலவை குறச்சிருக்காங்களா? ஒரு பக்கம் சாப்பாட்டுக்கே வழியில்லாம விவசாயிகளே சாகும் நிலை.... மறுபக்கம் இராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் நாடுகள நாமளும் இருக்கோம்.

நம்மமாதிரி வெளிநாட்டுல இருக்கிறவங்க.... 'எனக்கும் பாகிஸ்தான் நண்பர்கள் உண்டு. ரொம்ப நல்லவங்க. எந்த பாகுபாடும் வெறுப்பும் இல்லாமல் தான் பழகுகிறார்கள். '-னு சொல்றோம். ஆனா, பாகிஸ்தான் borderல இல்ல பாகிஸ்தானுல வாழ்ற நம்ம மக்கள்கிட்ட கேட்டாதான உண்மையான நிலம தெரியும்?

அமெரிக்காவும், கனடாவும் போல... இந்தியாவும், பாகிஸ்தானும் இருந்தா ரெண்டு நாடுகளுமே வளர்ச்சி அடைந்த நாடுகளா ஆயிருக்கும். ஏன் நாம பொழப்ப தேடி, அமெரிக்கா.. சிங்கப்பூர்-னு ஓடணும்? மற்ற நாட்டில இருந்து, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வேல தேடி வந்திருப்பாங்களே?

செப்டம்பர் 11, 2001க்கு அப்புறம்தான் தீவிரவாதம்னா என்னனு அமெரிக்கா உணர்ந்துள்ளது. ஆனால், நாம் 50 வருடத்திறகும் மேலாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம். காரணம் ...?

கமல் 15வது ரீல நாசர் நல்லவனா திருந்துறமாதிரி ஏன் காண்பிக்கல [மத்த படங்கள வரமாதிரி]?

கமல் எடுத்த முடுவுதான் நடைமுறை உண்மையா? எனக்கு தெரியல??

நீங்க என்ன சொல்லுறீங்க, ஜோ?

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவு ஜோ..

தென்றல்,
என்னவோ 'பாக் மக்கள் அனைவரும் நம்மை வெறுக்கிறார்கள்' என்ற மனநிலையில் நீங்க எழுதிருக்கிறது வருத்தமா இருக்கு. பாக்கிலிருந்து, தங்கள் குழந்தையின் சிகிச்சைக்காக இரண்டு வருடம் முன்னால் சென்னை வந்து போன ஒரு பெற்றோர் கூட "இந்தியாவை மிகவும் விரும்பவதாகவும், இந்தியர்கள் மேல் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை"ன்னு பேட்டி கொடுத்த நினைவு.. அப்படிச் சொல்லிட்டு அவங்க பாக்கிஸ்தானுக்குத் தான் போனாங்க.. அதனால், அந்த ஊரிலும் இந்த மாதிரியான மனநிலை தான் நிலவுதுன்னு தோணுது.

சமீபத்து சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் பிரச்சனையில் கூட இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்து தீவிரவாதத்தை ஒடுக்கப் புறப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அத்தனை பெரிய விபத்து நிகழ்ந்தும், "உங்க நாட்டுக்கு வந்ததால தான் என் உறவினர் இல்லாம போயிட்டார்"னு யாரும் குறை சொல்லி அழுத செய்தி கூட வரலை.. இதெல்லாமே அவங்களும் நம்மை நண்பரா கருதுறாங்கன்னு தெரிவிக்கலையா?

இரண்டு அரசாங்கங்களுக்கு இடையில் போர், எல்லை பிரச்சனை, இன்னும் என்ன வேணாலும் இருக்கட்டும். அடிப்படையில் மக்கள் மனம் ஒபனாத் தான் இருக்குன்னு நினைக்கிறேன்.

இரண்டு வாரம் முன்னால் விகடனில் உலக சினிமா பகுதியில், பாக்-இந்தியா குறித்த பாக் படம் ஒன்று பற்றி வந்திருந்தது. முடிந்தால் படித்துப் பாருங்க..

எனக்கென்னவோ ஜோ சொல்வது போல், இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், சீனா, இந்த நாடுகள் எல்லாம் ஒற்றுமையா இருந்தா மேற்குலகின் முக்கியத்துவம் குறைந்திடும்னு பயந்து, அவங்க உருவாக்கி வைத்திருக்கும் ஒரு சூழ்நிலை தான் இந்த எதிரி மனப்பான்மை எல்லாம்னு தோணுது..

ஜோ/Joe said...

தென்றல்,
உங்கள் கருத்துக்கு நன்றி!
பொன்ஸ் அழகாக சொல்லியிருக்கிறார்கள் . தேவர் மகனில் நீங்கள் சொன்னதை தாண்டி ,இறுதியில் "நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமா போகுதே" என்ற தாயின் புலம்பலும் "போதும்டா..போய் புள்ளைங்கள படிக்க வையிங்கடா" -ன்னு கமலின் புலம்பலும் தான் என் மனதில் நிற்கிறது .அடுத்த தலைமுறையாவது நமக்குள் சிண்டு முடிபவர்களின் கைங்கார்யத்தை புரிந்துகொண்டு பரஸ்பரம் ஒருவர் ஒருவரை புரிந்து கொள்ள முயலுவோம் என்பது தான் என் கருத்து.

ராசுக்குட்டி said...

நன்பர் ஜோ,
அறுமையான பதிவு. உங்கள் கருத்துக்கள் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. வெகு ஜன ஊடகத்தில் இக்கட்டுரை வெளிவர ஆவன செய்யவும்.

தென்றல் said...

/ பொன்ஸ் said..
என்னவோ 'பாக் மக்கள் அனைவரும் நம்மை வெறுக்கிறார்கள்' என்ற மனநிலையில் நீங்க எழுதிருக்கிறது வருத்தமா இருக்கு. /

கண்டிப்பா இல்லைங்க! நான் 'அவர்கள்' என்று குறிப்பிட்டது
ஆளுபவர்களையே..

/அடிப்படையில் மக்கள் மனம் ஒபனாத் தான் இருக்குன்னு நினைக்கிறேன்.
/
நானும் அப்படித்தான் நம்புறேன்!!

/சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் பிரச்சனையில்... /
பாக்கலாம்-ங்க.. யாரு குற்றவாளிகள்-னு கண்டுபிடிக்கிறாங்களான்னு..?
இல்ல.... இதையும் இரண்டு வாரம் பேசிட்டு விட்டுறாங்களா...?
அது சரிங்க... இந்த கோர விபத்து எதனால, ஏன் நடந்தது ..? ;(

என் வருத்தமெல்லாம் நீங்கள் குறிப்பிட்டது போல்..
/அவங்க உருவாக்கி வைத்திருக்கும் ஒரு சூழ்நிலை தான் இந்த எதிரி மனப்பான்மை எல்லாம்னு தோணுது..
/
இரண்டு நாட்டை ஆள்பவர்கள் இதை புரிந்து கொண்டு இந்த பிரச்சனையை தீர்க்க கடந்த அறுபது வருடம் என்ன செய்தார்கள் என்பதே..?

கருத்துக்கு நன்றி, பொன்ஸ்!

/அடுத்த தலைமுறையாவது நமக்குள் சிண்டு முடிபவர்களின் கைங்கார்யத்தை புரிந்துகொண்டு பரஸ்பரம் ஒருவர் ஒருவரை புரிந்து கொள்ள முயலுவோம் என்பது தான் என் கருத்து.
/
வாய்ப்புள்ளதா என்பதே என் ஆதங்கம்?! ஆம், நம்பிக்கைதான் வாழ்க்கை!! கருத்துக்கு நன்றி, ஜோ!

முடிந்தால், உங்கள் ஈமெயில் முகவரி அனுப்புங்கள். நன்றி!

ஜோ/Joe said...

நன்றி தென்றல்,
என் ஈமெயில் முகவரி djmilton at gmail.com

Anonymous said...

"SurveySan" பதிவின் மூலம் இங்கு வந்தேன்.5 வருஷத்துக்கு முன்னே நீங்க எழுதியதை இப்போது தான் பார்க்கிறேன். எழுந்து நின்று கை தட்டுகிறேன். பிரின்ட் எடுத்து என் செட்டுக்கு கொடுக்கப்போகிறேன். ஈமெயில் எல்லாம் அனுப்பினா அவனுங்க படிக்கமாட்டாங்க. பிரின்ட் பண்ணின செலவுக்காவது படின்னு கொடுத்தா படிப்பாங்க. Hats off

agasthi said...

Nice

agasthi said...

Nalla parhivu Anna

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives