Wednesday, November 16, 2005

உழைப்பவர் வாழ்க்கை மலராதோ

Image hosted by Photobucket.com

உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒருநாள் பொழுதும் புலராதோ...

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை

கடல்நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
உயிரைஊரார் நினைப்பது சுலபம்


---------------------------------------------

மீனவனின் வாழ்க்கையை இத்தனை உருக்கத்தோடு என்னால் எழுத முடிந்திருந்தால் அதில் பெரிய ஆச்சரியமில்லை .ஆனால் ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பிராமணன் அனுபவித்து எழுதியிருப்பது ஆச்சரியமல்லவா!

வாலி நீ வாழி!

9 comments:

துளசி கோபால் said...

அருமையான பா(ரா)ட்டு ஜோ.

'கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ?'

எனக்கு ரொம்பப் பிடிச்ச வரிகள்.

ஆமா, இதுதான் அவரோட முதல் பாட்டா?

இவ்வளவு அருமையான பாட்டெல்லாம் எழுதுனவர் இப்ப எழுதறதைப் பார்த்தால்.....

ஜோ/Joe said...

துளசியக்கா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாலிக்கு இது முதல் பாட்டு இல்ல .'படகோட்டி'-க்கு ரொம்ப முன்னாலேயே வாலி எழுத வந்துட்டார் .கற்பகம் படத்துல 'அத்தை மடி மெத்தையடி' பாட்டு கூட வாலி எழுதுனதுன்னு நினைக்குறேன்

துளசி கோபால் said...

அது என்னமோ ஜோ, இன்னிக்குக் காலையிலே எழுந்ததுலே இருந்து 'உலகம் பிறந்தது எனக்காக ஒடும் நதிகளும் எனக்காக' பாட்டு மனசுலேயும் வாயிலேயுமோடிக்கிட்டு இருக்கு:)

ஜோ/Joe said...

துளசியக்கா,
தருமி பதிவுல உங்களை நான் வானளாவ புகழ்ந்த்தால அப்படித் தோணுதோ?

ஜோ/Joe said...

நண்பர் வாய்ச்சொல்லில் வீரன்,
நீங்கள் சொல்லும் முன்னரே சிவாவின் அந்த பதிவை படித்து விட்டேன்.அவரும் அவரோடு சேர்ந்து நண்பர்களும் செய்து வருகிற பணிகளுக்கு நான் தலை வணங்குகிறேன் .அதற்கு என்னால் முடிந்த அளவு ஆதரவு அளிக்கவும் தயாராக இருக்கிறேன் .நானும் உங்களைப் போல தாய் நாட்டையும் ,தாய் மொழியையும் மிகவும் நேசிக்கும் இளைஞன் தான் .இந்தியாவைப்பற்றி பெருமிதமும் நம்பிக்கையும் கொண்டவன் .

அதே நேரத்தில் ராஜசேகரன் அவர்கள் எழுதியுள்ள சில கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவே நான் கருதுகிறேன் .அன்னிய நாட்டினர் முன் நான் ஒரு போதும் என் நாட்டை விட்டுக்கொடுப்பதில்லை .அதே நேரம் நமது முன்னேற்றத்திற்காக நாம் நமக்குள் பேசிக்கொள்ளும் போது சுய விமர்சனம் செய்து கொள்வதில்லையா? ராஜசேகரன் மலேசியர் என்றாலும் ,நம்மில் ஒருவராக தன்னை உரிமைப்படுத்திக்கொண்டு உளப்பூர்வமான சுய விமர்சனமாகத் தான் சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன் .நான் கூட சீனா சென்று வந்த பிறகு நண்பர்களிடம் "சீனாவும் நாமும் வளர்ச்சியில் நெருக்கத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தேன் .ஆனால் அங்கு சென்று பார்த்தால் நாம் 30 வருடம் பின்னால் நிற்பது போல் இருக்கிறது " என்று சொன்னேன் .அது நம் நாட்டை இகழ்ந்து அல்ல . ஆதங்கத்தில் சொன்னது .அது போல ராஜசேகரன் அவர்களும் உரிமையோடு ஆதங்கப் பட்டதாக எடுத்துக்கொள்வோமே ? மற்றபடி"தலைகீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது" என்ற அவர் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை தான் .

குழலி / Kuzhali said...

இரவு 12 மணிக்கும் மேல் திருச்சி பேருந்து நிலையத்தில் ஒரு தேநீர் கடையின் அருகில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன்.... வருமை தோற்றத்தில் இருந்த 50 வயது மதிக்கதக்க ஒருவர் இந்த பாடலை மிக அழகாக பாடிக்கொண்டிருந்தார், அன்றிலிருந்து இந்த பாடலின் மீது ஒரு மயக்கம்.... மிக அருமையான பாடல்... எம்ஜியாரின் பல படப்பாடல்களில் பொது நலமும், ஏழைகளின் வாழ்க்கையும் (அவர் அந்த பாடல்களை எழுத வில்லையென்றாலும்) இருக்கும்....

நன்றி

டிபிஆர்.ஜோசப் said...

நல்லாருக்கு ஜோ..

மீனவர்களின் வாழ்க்கையில்தான் எத்தனை பிரச்சினைகள்.

முன்பெல்லாம் இத்தகைய பாடல்களுக்காகவே ம.தி.யின் படங்களை விரும்பி பார்ப்பதுண்டு..

ந.தி.தான் என்னுடைய அபிமான நடிகர் என்றாலும் ம.தி.யின் படங்களில்தான் அதிக படிப்பினைகள் இருந்தன..

போதித்தவர் கடைபிடித்தாரா என்பது வேறு விஷயம்..

இப்பல்லாம் அடிக்கடி எழுத மாட்டேங்கறீங்க ஜோ.. ரொம்ப பிசியா?

டிபிஆர்.ஜோசப் said...

இவ்வளவு அருமையான பாட்டெல்லாம் எழுதுனவர் இப்ப எழுதறதைப் பார்த்தால்.....//

காலத்துக்கேத்தாமாதிரி மாறித்ததானே ஆகணும் இல்லன்னா பூவாவுக்கு வழி?

ஜோ/Joe said...

நன்றி ஜோசப் சார்!கொஞ்சம் பிஸி தான்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives