Monday, June 18, 2007

சிவாஜி (ராவ் கெய்க்வாட்)

வருடக்கணக்காக நீடித்த எதிர்பார்ப்பு ,பில்டப் ,ஊகங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது .ஷங்கர்+ரஜினி+ AVM கூட்டணி உருவான போது எனக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு ..ஷங்கர் பலகாலமாக ரஜினிக்காக ஒரு பிரம்மாண்ட கதையை மனதில் உருவாக்கி அதை AVM -ம் கொடுத்து ,ரஜினியை ஒப்புதல் கொடுக்க வைத்து ஒரு படம் எடுக்கிறார்கள் ..ஆனால் படம் பார்த்த பின்னர் தெரிந்தது ..ரஜினியின் கால்சீட் AVM-க்கு கிடைக்க அவர்கள் சங்கரிடம் ரஜினிக்கு ஒரு கதையை யோசிக்க சொல்லியிருக்கிறார்கள் .சங்கரோ தன்னை நம்பாமல் முழுக்க முழுக்க ரஜினியை நம்பி (அடுத்தவர்)பணத்தை இறைத்து ரஜினி நிழலில் குளிர்காய்ந்திருக்கிறார் .வெற்றியும் பெற்றிருக்கிறார் .ஆனால் இந்த வெற்றியில் ரஜினியின் பங்கே மகத்தானது .சங்கர் தனது வழக்கமான சமூக அக்கறை ,பாடல்கள் பிரம்மாண்டம் ,கதாநாயகியின் கவர்ச்சி இவற்றைக்கொண்டு படத்தை நிரப்பினாலும் ,ரஜினியின் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் இவை எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகியிருக்கும்.

தனிமனிதன் உலகத்தையே திருத்துவதாக முன்பு பிற கதாநாயகர்களை வைத்து செய்த இந்தியன் ,அந்நியன்,முதல்வன்,ஜெண்டில்மேன் படங்களே வெற்றியை குவித்த போது ,சூப்பர் ஸ்டாரை வைத்து எடுக்கும் படத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சங்கர் துணிந்ததில் வியப்பில்லை .ஒரு ரூபாயை வத்திருப்பவர் உதவியாளர் அழைத்தவுடன் ஊரிலுள்ள பெருந்தலைகள் கோட்டும் சூட்டுமாக ஒரு அறையில் வந்து கூடுவது ,உதை வாங்குவது ,250 கோடியை வைத்துக்கொண்டு இந்தியாவை வல்லரசாக்குவது போன்றவற்றை பிறர் படத்தில் குறை சொல்லலாம் ..இது சூப்பர் ஸ்டார் படம் .வந்தோமா..தலைவரை பார்த்தோமா .தரிசனம் கிடைத்து கிளம்பினோமா என்றிருக்க வேண்டும். அது தான் உடம்புக்கு நல்லது .இல்லையென்றால் ரஜினி ரசிகர்கள் 'ஆபீஸ் ரூம்'-க்கு கூட்டிப் போய் விடுவார்கள் .

பாடல் காட்சிகளில் 100 பேர் உடம்பில் விதவிதமாக பெயிண்ட் அடிப்பது ,கோடிக்கணக்கில் செலவு செய்து கண்ணாடி மாளிகை அமைத்து டூயட் பாடுவது என்றெல்லாம் தனது 'பிரம்மாண்ட' பிம்பம் கலைந்து விடாமல் பார்த்துக்கொள்கிறார் சங்கர் .ஆனால் அர்ஜீன் படத்துக்கு சரி..ரஜினி இருக்கும் போது யார் இதை கவனிக்க போகிறார்கள் ?கிளைமாக்ஸ் காட்சியில் தரை தெரியாத அளவுக்கு பணம் கொட்டிக்கிடக்கும் போது ஒரு மாணவர் எண்ணி எண்ணி தான் கட்டிய பணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுகிறார் ..என்னே நேர்மை ? இந்தியா அப்போதே வல்லரசாகி விட்டது.

விவேக்கின் சில டயலாக்குகள் ,ரஜினி 'பழக' போவது ,நடிகர் திலகம் ,எம்.ஜி,ஆர் .கமல் போல நடனமாடுவது ,லிவிங்ஸ்டன் 'லகலகலக' சொல்லுவது ,சின்னி ஜெயந்த் நடிகர் திலகம் போல பேசுவது போன்றவை ரசிக்க வைக்கின்றன.பாடல்களில் வழக்கமான ஷங்கர் பிரம்மாண்டம் ,கூடுதலாக ரஜினி ஸ்டைல் .ஷ்ரயாவை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் ஜொள்ளு விட வைத்து.

ஷ்ங்கரின் வழக்கமான படங்களில் இருக்கிற அளவுக்கு கூட கதையோ ,திரைக்கதையோ ,லாஜிக்கோ ,பிரச்சனைக்கு நடைமுறைக்கு ஒத்து வரும் தீர்வோ இந்த படத்தில் இல்லை .ஆனால் சந்தேகமில்லை ..படம் மிகப்பெரிய வெற்றி பெறும் ..காரணம் சிவாஜியோ ,எம்.ஜி .ஆரோ அல்ல..காரணம் சிவாஜி ராவ் கெய்க்வாட் .மொட்டை பாஸாக வந்து அசத்தும் அந்த கடைசிகட்ட காட்சிகள் போதும் ..படத்தின் வசூலை தூக்கி நிறுத்த .

ரஜினியின் இடத்தை சீக்கிரம் பிடித்து விடலாம் என்று நினைக்கிற இளைய தலைமுறைக்கு 'தம்பிகளா ..வெயிட் பண்னுங்கப்பா..நான் இன்னும் ஆடி முடிக்கல.." என்று சொல்லுகிறார் சூப்பர் ஸ்டார் .ஒரு சொதப்பல் திரைக்கதையை தூக்கி நிறுத்தும் சக்தி இன்னும் தனக்கிருக்கிறது என்பதை தன்னந்தனியாக நிரூபிக்கிறார் ரஜினி .அவருடைய அந்த Screen presence- தலை வணங்கியே ஆக வேண்டும்.

நான் குடும்பத்தோடு ,நண்பர் குடும்பத்தோடு 7 பேர் சென்றிருந்தோம் .பலருக்கு படம் பிடிக்க வில்லை .சிலருக்கு ஓரளவு பிடித்திருந்தது .ஆனால் முழு படத்தையும் முழுக்க முழுக்க அனுபவித்தது டிக்கெட் எடுக்காமல் என் மடியில் உட்கார்ந்து படம் பார்த்த 18 மாதங்களே ஆன என் மகன் ..ஆடாமல் அசையாமல் திரையையே உற்றுப் பார்த்துக்கொண்டு ,பாடல் காட்சிகளுக்கு தலையை முன்னும் பின்னும் ,சில நேரம் உடல் முழுவதையும் ஆட்டி நடனம் வேறு ..என் வீட்டில் ஒரு ரஜினி ரசிகன் உருவாகிறான் ..அடுத்த தலைமுறை 'சூப்பர் ஸ்டார் ரசிகர் கூட்டம்' ரெடி !

Sunday, May 13, 2007

'பெரியார்' திரைப்படம் - என் பார்வையில்

பெரியார் - இந்த பெயரைக் கேட்டதுமே பெரும்பான்மை இன்றைய இளைய தலைமுறையினரிடம் அவரைப் பற்றி அறியப்பட்டுள்ள சிந்தனை "பெரியார் ஒரு நாத்திக தலைவர் .கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவர் கேவலமாக திட்டுவார் .கடவுள் சிலைகளை போட்டு உடைத்தவர்" இவ்வளவு தான் .இதற்கு மேல் பெரியாரைப் பற்றி அவர்களுக்கு பெரிய அபிப்பிராயம் எதுவுமில்லை .இதற்கு காரணம் ,பெரியாரை ஒரு பரிமாணத்தில் குறுக்கி அதன் மூலம் சுய தேடல் இல்லாத ,வெகுஜன பிரச்சாரங்களை மீறி எதையும் தெரிந்து கொள்ள ஆர்வமில்லாத பெரும்பான்மை இளைய சமூகத்தினரிடையே பெரியார் பற்றிய குறுகிய பிம்பத்தை பதிய வைத்து விடலாம் என்று சிலர் மேற்கொண்ட முயற்சி என்று மட்டும் சொல்லிவிட முடியாது .மாறாக பெரியார் தொண்டர்கள் ,வழி வந்தவர்கள் கூட அவரின் ஒற்றைப்பரிமாணத்தை தாண்டி அவரை முன்னிறுத்த தவறியதும் காரணமே .பெரியார் வழி வந்த அரசுகள் மாவட்ட தலைநகர்களில் நிறுவிய நினைவுத்தூண்களிலும் சரி ,சிலைகளிலும் சரி பெரும்பாலும் பொறிக்கப்பட்ட வசனம் "கடவுளை நம்பியவன் முட்டாள் ...." என்ற வாசகம் தான் .இதைத் தாண்டி பெரியாரின் சமூக நீதிக்கருத்துக்கள் ,சாதி ஒழிப்பு கருத்துக்கள் ,பெண்ணிய சிந்தனைகள் பொறிக்கப்படுவதில்லை .பெரியாரின் பல முக்கிய பரிமாணங்கள் இளைய தலைமுறையினருக்கு சரியாக எடுத்துச்சொல்லப்படுவதில்லை.

அதிர்ஷ்ட வசமாக பெரியார் திரைப்படம் இந்த குறையை சற்று போக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நகரும் இந்த திரைப்படத்தின் முதல் ஒரு மணி நேரம் மிகச்சாதாரணமாக சொல்லப்பட்டிருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது .அடுத்த இரண்டு மணி நேரத்தில் படிப்படியாக சத்தியராஜின் உடலுக்குள் பெரியார் ஆவி புகுந்து கொண்டது போல கன கச்சிதமாக பெரியாரை நம் கண் முன் நிறுத்துகிறார் சத்தியராஜ்.

பெரியாரின் இளைமப்பருவத்திலிருந்து தொடங்கும் படத்தில் அவர் காசிக்கு செல்வதற்கு முன் வரை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இல்லை .வணிக ரீதியாக திணிக்கப்பட்டதாக சொல்ல முடியாத வகையில் இருந்தாலும் ,கேளிக்கை விடுதி நடனத்திற்காக வீணடிக்கப்பட்ட நேரத்தில் பெரியாரின் சிறு வயது வாழ்வில் தண்ணீர் குடிப்பதில் ஜாதிப்பாகுபாடு அவர் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை காண்பித்திருக்கலாம் .

முதல் மனைவியாக வரும் ஜோதிர்மாயி ,இரண்டாவது மனைவியாக வரும் குஷ்பு இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் .ராஜாஜியின் கதா பாத்திரம் தேவைக்கு அதிகமாகவே வருகிறது .அதே நேரத்தில் ராஜாஜியின் மறைவுக்கு சென்று பெரியார் அழுதது சேர்க்கப்படவில்லை.

இளையராஜா இசையமைத்திருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும் என்றாலும் கூட வித்தியாசாகர் எதிர்பார்த்ததை விட நன்றாக இசையமைத்திருந்தார் .வைரமுத்துவின் ஆழமான வரிகளின் அர்த்தம் சிதையாமலும் ,இசைக்குள் வார்த்தைகளை அமுக்கி விடாமலும் பாடல் வரிகளுக்கு கைதட்டல் கிடைக்கும் அளவுக்கு இசையை வழங்கியிருக்கிறார் .வைக்கம் போராட்ட காட்சியில் வரும் ஒரு பாடலில் தீண்டாமை குறித்து "அவர்கள் மட்டும் தானா விந்து-லிருந்து பிறந்தார்கள் .நாங்கள் என்ன எச்சிலிலுருந்தா பிறந்தோம் ' என்னும் பொருள் படும் வரிகள் கைதட்டலை அள்ளுகிறது.
தங்கர் பச்சானின் ஒளிப்பதிவும் ,அந்த கால பழைய காற்றாடி போன்றவற்றை நுணுக்கமாக பயன்படுத்திய கலை இயக்குநரும் நிறைவாக செய்திருக்கிறார்கள் .

சத்தியராஜ் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ... முதல் பாதியில் அதே சத்யராஜ் பாணி உச்சரிப்பை தவிர்த்திருக்கலாம் .இரண்டாவது பாதியில் சத்தியராஜ் சுத்தமாக மறைந்து பெரியார் நம்மை ஆட்கொள்ளுகிறார் .ஆட்சியமைக்கும் போது அண்ணாவின் விஜயம் மற்றும் இறுதிக்காட்சியில் சத்தியராஜ் பெரியாராகவே வாழ்ந்திருக்கிறார் .

95 வருட வாழ்க்கையை 3 மணி நேரத்தில் குறுக்கும் கடினமான பணி இயக்குநருக்கு .காந்தியாரோடு சந்திப்பு ,விதவை மறுமணம் ,தேவதாசி ஒழிப்பு, கள்ளுக்கடை மறியல் ,வைக்கம் போராட்டம் ,காங்கிரசில் ஜாதிப்பாகுபாடு ,காங்கிரசிலிருந்து வெளியேற்றம் ஆகியவை சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன.ஆனால் பின்னர் தி.க உதயம் ,இரண்டாம் திருமணம் ,திமுக தொடக்கம் ,பெருந்தலைவர் காமராஜர் சந்திப்பு ,திமுக ஆட்சி அமையும் போது அண்ணா சந்திப்பு ,கலைஞர் சந்திப்பு ,எம்.ஜி.ஆர் சந்திப்பு என்று துண்டு துண்டாக காட்சிகள் நகர்வதாக தோன்றுகிரது .விஷுவல் ரீதியாக இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது .

மிகவும் உடல்நிலை பாதிப்பட்ட போதிலும் ,சொன்ன தேதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ,தனது நெஞ்சில் தைத்திருக்கும் முள் பற்றி வேதனைப் பட்டு விட்டு உரையைத் தொடரும் போதே மயங்கி சாய்கிறார் பெரியார் .95 வயதிலும் தன் இறுதி மூச்சு வரையிலும் சுயமரியாதை ,ஒடுக்கப்பட்டோர் இழிவு நீக்கல் ,விழிப்புணர்வு -க்காக பாடுபட்ட மாபெரும் தலைவன் மறைகிறார் .பாரம்பரியத்தை மீறி கலைஞர் அரசு வழங்கிய அரசு மரியாதை இறுதி ஊர்வலத்தின் சில நிஜக் காட்சிகளோடு படம் முடிகிறது.

பெரியார் வாழ்க்கை என்பது 3 மணி நேரத்தில் விளக்கப்பட முடிகிற ஒன்றல்ல .இந்த பெரியார் படம் பெரியாரை ஏற்கனவே படித்தறிந்தவர்களுக்காகவோ,புரிந்து கொண்டவர்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல .மாறாக ,பெரியாரின் ஒரு பரிமாணத்தை மட்டுமே அறிந்த இன்றைய தலை முறை "ஆகா பெரியாருக்கு இத்தனை முகங்களா ? இத்தனைக் காலம் தெரியாமல் விட்டுவிட்டோமே" என்றுணர்ந்து அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் பயணத்தின் ஒரு நல்ல அறிமுகப் படலமாக இந்த படம் அமைந்திருக்கிறது .அந்த வகையில் இந்த படம் அதன் இலக்கை வென்றிருக்கிறது .

ஞானராஜசேகரனுக்கும் ,சத்திய ராஜ்-க்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!

Wednesday, May 02, 2007

பட்டுக்கோட்டையை காப்பியடித்த வைரமுத்து

என்னடா இது? வைரமுத்து மீது பகிரங்க குற்றசாட்டா என்று நினைக்க வேண்டாம் .நேற்று சிங்கையில் நடந்த விழாவில் வைரமுத்துவே குறிப்பிட்ட செய்தி இது.

சிங்கையில் உள்ள பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆர்வலர்களின் முயற்சியால் ஆண்டு தோறும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா கடந்த மூன்று ஆண்டுகளாக மேதினத்தன்று கொண்டாப்பட்டு வருகிறது .நேற்றைய விழாவுக்கு சிறப்புரை வழங்க கவிஞர் வைரமுத்து வைந்திருந்தார்.

சிங்கை ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் 6 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் அரங்கு நிறைந்து வழிந்த போதும் 7 மணியளவிலேயே துவங்கப்பட்டது .வைர முத்து பேசும் போது அரங்கத்திலிருந்த கூட்டத்தை போல 3 மடங்கு கூட்டம் திறந்த வெளியிலும் நின்று கொண்டிருந்தது .

சிறப்பு விருந்தினராக வந்திருந்து பட்டுக்கோட்டையார் பாடல்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்த சிங்கை அமைச்சர் தெக் யூ நான்கைந்து தமிழ் வாக்கியங்களை எழுதி வந்து படித்த போது சீனர் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு தமிழ் வாக்கியத்துக்கும் விண்ணதிர கைதட்டல் ஒலி எழும்பியது .ஒரு கவிஞரின் புகழ் பாடும் விழாவுக்கு இத்தனை பெரிய கூட்டத்தை அமைச்சர் எதிர் பார்த்திருக்க மாட்டார் .தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய அமைச்சர் சிங்கையின் அரசாங்க மொழிகளில் ஒன்றான தமிழை விஞ்ஞான யுகத்தில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் ,மொழி கலாச்சார கூறுகளை பேணிக்காக்க வேண்டிய கடமையையும் சுட்டிக்காட்டி ,தமிழ் மொழி வளர்ச்சியில் சிங்கை அரசு கொண்டுள்ள கடப்பாட்டை உறுதிப்படுத்தினார். விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழர் கூட்டம் அவரது பேச்சுக்கும் வருகைக்கும் மிகுந்த உற்சாகத்தோடு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

விழாவின் இறுதியில் கவிஞர் வைரமுத்து உணர்ச்சிகரமான உரைநிகழ்த்தினார் .29 வயதிலேயே மறைந்து விட்ட மாபெரும் 'மக்கள் கவிஞனின்' சிறப்புக்களை பட்டியலிட்ட அவர் சில சுவாரஸ்யமான தகவல்களையும் சொன்னார் .காதல் பாடல்களில் கூட பொதுவுடமையைச் சொன்ன ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை என்று உதாரணத்தோடு குறிப்பிட்ட அவர் ,பட்டுக்கோட்டையின் சமுதாய கருத்துக்கள் கொண்ட பாடல்களின் வெற்றி அப்போதிருந்த மற்ற கவிஞர்கள் சமுதாய கருத்துக்களை சொன்னால் தான் நிலைக்க முடியும் என்று நினைக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார்.

படத்துக்கு படம் ஒரு சமுதாயப்பாடல் இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரை நினைக்க வைத்தது பட்டுக்கோட்டை தான் ,அது எம்.ஜி.ஆரை அரியணையில் கொண்டு அமர்த்தியது என்று குறிப்பிட்டார் .

பட்டுக்கோட்டையை தான் காப்பியடித்த ரகசியத்தையும் சொன்னார் .பட்டுக்கோட்டையாரின் "தவறுக்கு தவறான தவறை புரிந்து விட்டு " என்ற தனது மனதில் தங்கிய வரிகளை காப்பியடித்தே சிந்து பைரவியில் 'மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்" என்றெழுதியதாக குறிப்பிட்டார் .

பட்டுக்கோட்டையார் இறந்த போது ஒரேயொரு நடிகை மட்டுமே அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்தாராம் .அவர் அப்போது பட்டுக்கோட்டையார் பாட்டெழுதிக்கொண்டிருந்த ஒரு படத்தை தயாரித்துக்கொண்டிருந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகை பண்டரி பாய் .ஒரு கையில் மாலையும் இன்னொரு கையில் காசோலையும் கொண்டு வந்து ,மாலையை அணிவித்து ,தான் கொடுக்க வேண்டிய தொகைக்கான காசோலையை பட்டுக்கோட்டையார் குடும்பத்துக்கு கொடுத்தார் என்ற செய்தியை குறிப்பிட்டார்.

வைரமுத்து பேசி முடிக்கும் போது இரவு 9-ஐ தாண்டியிருந்தது .வைரமுத்து பேச்சில் 'சிங்கப்பூர் தமிழர்கள்' என்று குறிப்பிடும் போதெல்லாம் என் மனதில் தோன்றியது ...இந்த விழாவை ஏற்பாடு செய்த ,மாணவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்ற சில சிங்கப்பூர் தமிழர்களை தவிர இந்த நிகழ்ச்சிக்கு கட்டுக்கடங்காமல் வந்திருந்த கூட்டத்தில் 90 % இந்தியாவிலிருந்து இங்கு வந்து தினக்கூலிகளாக வேலை செய்யும் கட்டுமானத்துறை தொழிலாளர்கள் .

தொழிலார்கள் தினத்தன்று தொழிலாளர் நலம் பாடிய அந்த மக்கள் கவிஞனின் விழாவுக்கு திரளாக வந்திருந்து தமிழுக்கு அழிவில்லை என நிரூபித்த அந்த தொழிலாளர் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!

Wednesday, April 25, 2007

ஸ்டைல் சக்கரவர்த்தி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராக களம் இறங்கிய சமயத்தில் தூர்தர்ஷனில் அவர் பேட்டி ஒன்று ஒளிபரப்பானது .நேயர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லும் விதமாக அமைந்த அந்த பேட்டியின் முதல் கேள்வி..

"நடிகர் திலகம் சிவாஜி பற்றி உங்கள் கருத்து?"

சூப்பர் ஸ்டார் பதில் :

"என்னை பல பேர் ஸ்டைல் கிங் அப்படி இப்படின்லாம் சொல்லுறாங்க .நான் ஸ்டைல் கிங்-ன்னா சிவாஜி சார் ஸ்டைல் சக்கரவர்த்தி"

சூப்பர் ஸ்டார் என்ன சொல்லுறார்ணு புரியாதவங்க கீழேயுள்ள பாடல் காட்சியை பார்க்கவும்.

வாய் திறந்து பேசவில்லை ,பாடவில்லை ,எழுந்து நடக்கவில்லை ,உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை .ஆனாலும் ஸ்டைல் ..இது ஸ்டைல் !

Tuesday, April 24, 2007

ஆதரிப்போம் தமிழ்மணம்!

புதுமணம் வீசட்டும்!
புத்துணர்ச்சி நிலைக்கட்டும்!
புறந்தள்ளுவோம் புரட்டுக்'களை'
அறம் திளைக்க விளைவோம் .நன்றி!


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives