Monday, June 18, 2007

சிவாஜி (ராவ் கெய்க்வாட்)

வருடக்கணக்காக நீடித்த எதிர்பார்ப்பு ,பில்டப் ,ஊகங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது .ஷங்கர்+ரஜினி+ AVM கூட்டணி உருவான போது எனக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு ..ஷங்கர் பலகாலமாக ரஜினிக்காக ஒரு பிரம்மாண்ட கதையை மனதில் உருவாக்கி அதை AVM -ம் கொடுத்து ,ரஜினியை ஒப்புதல் கொடுக்க வைத்து ஒரு படம் எடுக்கிறார்கள் ..ஆனால் படம் பார்த்த பின்னர் தெரிந்தது ..ரஜினியின் கால்சீட் AVM-க்கு கிடைக்க அவர்கள் சங்கரிடம் ரஜினிக்கு ஒரு கதையை யோசிக்க சொல்லியிருக்கிறார்கள் .சங்கரோ தன்னை நம்பாமல் முழுக்க முழுக்க ரஜினியை நம்பி (அடுத்தவர்)பணத்தை இறைத்து ரஜினி நிழலில் குளிர்காய்ந்திருக்கிறார் .வெற்றியும் பெற்றிருக்கிறார் .ஆனால் இந்த வெற்றியில் ரஜினியின் பங்கே மகத்தானது .சங்கர் தனது வழக்கமான சமூக அக்கறை ,பாடல்கள் பிரம்மாண்டம் ,கதாநாயகியின் கவர்ச்சி இவற்றைக்கொண்டு படத்தை நிரப்பினாலும் ,ரஜினியின் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் இவை எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகியிருக்கும்.

தனிமனிதன் உலகத்தையே திருத்துவதாக முன்பு பிற கதாநாயகர்களை வைத்து செய்த இந்தியன் ,அந்நியன்,முதல்வன்,ஜெண்டில்மேன் படங்களே வெற்றியை குவித்த போது ,சூப்பர் ஸ்டாரை வைத்து எடுக்கும் படத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சங்கர் துணிந்ததில் வியப்பில்லை .ஒரு ரூபாயை வத்திருப்பவர் உதவியாளர் அழைத்தவுடன் ஊரிலுள்ள பெருந்தலைகள் கோட்டும் சூட்டுமாக ஒரு அறையில் வந்து கூடுவது ,உதை வாங்குவது ,250 கோடியை வைத்துக்கொண்டு இந்தியாவை வல்லரசாக்குவது போன்றவற்றை பிறர் படத்தில் குறை சொல்லலாம் ..இது சூப்பர் ஸ்டார் படம் .வந்தோமா..தலைவரை பார்த்தோமா .தரிசனம் கிடைத்து கிளம்பினோமா என்றிருக்க வேண்டும். அது தான் உடம்புக்கு நல்லது .இல்லையென்றால் ரஜினி ரசிகர்கள் 'ஆபீஸ் ரூம்'-க்கு கூட்டிப் போய் விடுவார்கள் .

பாடல் காட்சிகளில் 100 பேர் உடம்பில் விதவிதமாக பெயிண்ட் அடிப்பது ,கோடிக்கணக்கில் செலவு செய்து கண்ணாடி மாளிகை அமைத்து டூயட் பாடுவது என்றெல்லாம் தனது 'பிரம்மாண்ட' பிம்பம் கலைந்து விடாமல் பார்த்துக்கொள்கிறார் சங்கர் .ஆனால் அர்ஜீன் படத்துக்கு சரி..ரஜினி இருக்கும் போது யார் இதை கவனிக்க போகிறார்கள் ?கிளைமாக்ஸ் காட்சியில் தரை தெரியாத அளவுக்கு பணம் கொட்டிக்கிடக்கும் போது ஒரு மாணவர் எண்ணி எண்ணி தான் கட்டிய பணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுகிறார் ..என்னே நேர்மை ? இந்தியா அப்போதே வல்லரசாகி விட்டது.

விவேக்கின் சில டயலாக்குகள் ,ரஜினி 'பழக' போவது ,நடிகர் திலகம் ,எம்.ஜி,ஆர் .கமல் போல நடனமாடுவது ,லிவிங்ஸ்டன் 'லகலகலக' சொல்லுவது ,சின்னி ஜெயந்த் நடிகர் திலகம் போல பேசுவது போன்றவை ரசிக்க வைக்கின்றன.பாடல்களில் வழக்கமான ஷங்கர் பிரம்மாண்டம் ,கூடுதலாக ரஜினி ஸ்டைல் .ஷ்ரயாவை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் ஜொள்ளு விட வைத்து.

ஷ்ங்கரின் வழக்கமான படங்களில் இருக்கிற அளவுக்கு கூட கதையோ ,திரைக்கதையோ ,லாஜிக்கோ ,பிரச்சனைக்கு நடைமுறைக்கு ஒத்து வரும் தீர்வோ இந்த படத்தில் இல்லை .ஆனால் சந்தேகமில்லை ..படம் மிகப்பெரிய வெற்றி பெறும் ..காரணம் சிவாஜியோ ,எம்.ஜி .ஆரோ அல்ல..காரணம் சிவாஜி ராவ் கெய்க்வாட் .மொட்டை பாஸாக வந்து அசத்தும் அந்த கடைசிகட்ட காட்சிகள் போதும் ..படத்தின் வசூலை தூக்கி நிறுத்த .

ரஜினியின் இடத்தை சீக்கிரம் பிடித்து விடலாம் என்று நினைக்கிற இளைய தலைமுறைக்கு 'தம்பிகளா ..வெயிட் பண்னுங்கப்பா..நான் இன்னும் ஆடி முடிக்கல.." என்று சொல்லுகிறார் சூப்பர் ஸ்டார் .ஒரு சொதப்பல் திரைக்கதையை தூக்கி நிறுத்தும் சக்தி இன்னும் தனக்கிருக்கிறது என்பதை தன்னந்தனியாக நிரூபிக்கிறார் ரஜினி .அவருடைய அந்த Screen presence- தலை வணங்கியே ஆக வேண்டும்.

நான் குடும்பத்தோடு ,நண்பர் குடும்பத்தோடு 7 பேர் சென்றிருந்தோம் .பலருக்கு படம் பிடிக்க வில்லை .சிலருக்கு ஓரளவு பிடித்திருந்தது .ஆனால் முழு படத்தையும் முழுக்க முழுக்க அனுபவித்தது டிக்கெட் எடுக்காமல் என் மடியில் உட்கார்ந்து படம் பார்த்த 18 மாதங்களே ஆன என் மகன் ..ஆடாமல் அசையாமல் திரையையே உற்றுப் பார்த்துக்கொண்டு ,பாடல் காட்சிகளுக்கு தலையை முன்னும் பின்னும் ,சில நேரம் உடல் முழுவதையும் ஆட்டி நடனம் வேறு ..என் வீட்டில் ஒரு ரஜினி ரசிகன் உருவாகிறான் ..அடுத்த தலைமுறை 'சூப்பர் ஸ்டார் ரசிகர் கூட்டம்' ரெடி !

19 comments:

துளசி கோபால் said...

மொதல்லே குழந்தைக்குச் சுத்திப்போடுங்க.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.

படத்தோட பெயர் என்ன?

சிவாஜி

சிவாஜி the boss

இது ரெண்டில் எது சரி?

நான் சொல்றேன் (வெறும்)சிவாஜி.

கோபால் சொல்றார் சிவாஜி த பாஸ்.
சனிக்கிழமை சிங்கையில் விளம்பரம் பார்த்தேன்னு சாதிக்கிறார். கூடவே தமிழ் முரசு, தினத்தந்தின்னு பேப்பர்களையும் கொண்டுவந்து காமிக்கிறார்.

ஜோ / Joe said...

துளசியக்கா,
படத்தோட அதிகார பூர்வ பெயர் 'சிவாஜி' மட்டும் தான் .

கோவி.கண்ணன் said...

ஜோ,

கிட்டதிட்ட நான் எழுதிய விமர்சனம் போல் ஒத்தே இருக்கிறது !
:)

சிவாஜி படத்தலைப்பு உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கும்.

ஸ்ருசல் said...

சிவாஜி த பாஸ் என்று இருந்திருந்தால், கேளிக்கை வரி விலக்கு அரசிடமிருந்து கிடைத்திருக்காது.

இதுவே 'சிவாஜி', என்பது பெயர் சொல் என்று மழுப்பி வரி விலக்கு கொடுத்திருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் said...

//ஜோ / Joe said...
துளசியக்கா,
படத்தோட அதிகார பூர்வ பெயர் 'சிவாஜி' மட்டும் தான்
//

குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். சிவாஜி த பாஸ் தான் ..சிவாஜி இரண்டுமே சரி !
:)

கோவி.கண்ணன் said...

//இதுவே 'சிவாஜி', என்பது பெயர் சொல் என்று மழுப்பி வரி விலக்கு கொடுத்திருக்கிறார்கள்.//

நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். வரிவிலக்கு தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் சிங்கையிலும், மலேசியாவிலும் 'சிவாஜி த பாஸ்' என்று தான் டிக்கெட் கவுண்டரிலும், டிக்கட்டிலும் இருந்தது.

தேவ் | Dev said...

ஜோ ஒரு நேர்மையான சிவாஜி விமர்சனம் தந்து இருக்கிறீர்கள். நன்றி..

கோவி.கண்ணன் said...

'சிவாஜ் த பாஸ்' - தான்

ஆதாரம் வேண்டுமென்றால் டிக்கெட் ஆதாரம் இருக்கு ஸ்கேன் பண்ணி போடுகிறேன் !

:))
பொய் இல்லிங்க நிஜம் தான் !

தருமி said...

மகனப்பத்தி கவலைப் படாதீங்க, ஜோ. வளர்ந்து புத்தி வந்ததும் நல்லபடியா ஆகிவிடுவான் - அப்பா மாதிரி!

ஜோ / Joe said...

//மகனப்பத்தி கவலைப் படாதீங்க, ஜோ. வளர்ந்து புத்தி வந்ததும் நல்லபடியா ஆகிவிடுவான் - அப்பா மாதிரி!//

:)))))

மனதின் ஓசை said...

ஜோ,
நல்ல விமர்சனம்.

//ஷ்ங்கரின் வழக்கமான படங்களில் இருக்கிற அளவுக்கு கூட கதையோ ,திரைக்கதையோ ,லாஜிக்கோ ,பிரச்சனைக்கு நடைமுறைக்கு ஒத்து வரும் தீர்வோ இந்த படத்தில் இல்லை .//

இது ஒரு குறையே. இதனையும் சிறப்பாக செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


//ரஜினியின் இடத்தை சீக்கிரம் பிடித்து விடலாம் என்று நினைக்கிற இளைய தலைமுறைக்கு 'தம்பிகளா ..வெயிட் பண்னுங்கப்பா..நான் இன்னும் ஆடி முடிக்கல.." என்று சொல்லுகிறார் சூப்பர் ஸ்டார் .ஒரு சொதப்பல் திரைக்கதையை தூக்கி நிறுத்தும் சக்தி இன்னும் தனக்கிருக்கிறது என்பதை தன்னந்தனியாக நிரூபிக்கிறார் ரஜினி .அவருடைய அந்த Screen presence- தலை வணங்கியே ஆக வேண்டும்.//

கலக்கலா சொல்லி இருக்கீங்க..

ஷங்கர் முழுக்க முழுக்க ரஜினி ரசிக்ர்களுக்காகவே படம் எடுத்து இருக்கிறார்.. இதுவே இப்படத்தின் குறையும் நிறையும்.. அவர்களுக்கு என்ன தேவை என்பதை சரியாக கொடுத்து இருக்குறார்.. அந்த வகையில் பாராட்டப்பட வேண்டியவரே.


உங்கள் பதிவில் நான் எதிர்பார்த்த ஒரு குறையை நீங்கள் சொல்லவில்லை..ஆச்சரியமாக இருக்கிறது. நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜியை எந்த விதத்திலும் இந்த படம் கவுரவப்படுத்தவில்லை. ஒரிரு காட்சிகளாவது வைத்து இருக்கலாம்..பின்னாளில் சிவாஜி எனும்போது ஒரு சிலர்/பலர் இந்த படத்தை நினைவு கூறலாம்..அது அந்த மாபெரும் கலைஞனின் பெயரை தெரிந்தோ தெரியாமலோ ஓரளவு இருட்டடிப்பு செய்வது போல்தான் இருக்கும்.

ஜோ / Joe said...

//நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜியை எந்த விதத்திலும் இந்த படம் கவுரவப்படுத்தவில்லை. ஒரிரு காட்சிகளாவது வைத்து இருக்கலாம்//

மனதின் ஓசை,
இந்த படம் ஆரம்பிக்கப்படும் வரை 'சிவாஜி' என்ற பெயருக்கு தமிழகத்தில் உரியவராக இருந்த ஒரே ஒருவர் நடிகர் திலகம் .குறைந்த பட்சம் இந்த படத்தை அவருக்கு அர்ப்பணிப்பது போல தொடக்கத்தில் காட்டிவார்கள் என எதிர்பார்த்தேன் .அதுவும் இல்லை .அவரை மட்டம் தட்டாமல் இருந்தார்களே .அதுவே பெரிது ..என்னத்த சொல்ல..:))

tbr.joseph said...

ஜோ,

நானும் ஒரு காலத்தில் ஒங்க பையன போலவே தீவிர(!) ரஜினி ரசிகனாய் இருந்தவந்தான்...

அதாவது முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை காலத்தில்..

ஒரு நூறு நாள் கழித்து சிவாஜியை ஒருமுறை பார்க்கலாம் போலிருக்கிறது..

ஜோ / Joe said...

//நானும் ஒரு காலத்தில் ஒங்க பையன போலவே தீவிர(!) ரஜினி ரசிகனாய் இருந்தவந்தான்... //

ஜோசப் சார்,
என்னது ? நீங்க ஒண்ணரை வயசா இருக்கும் போது ரஜினி ரசிகரா இருந்தீங்களா? சார்! அது 'சிவாஜி' கணேசன் ..இது 'சிவாஜி' ராவ் கெய்க்வாட் .

(சும்மா தமாசு)

ஆயில்யன் said...

இங்கு கத்தாரிலும் முதல் ஷோவிற்கே,நம்ம தமிழ்நாட்டுக்காரங்க குடும்பத்துடன் வந்து பார்த்தாங்க காலை முதல் காத்திருந்து டிக்கெட் வாங்கி சீட்ல போய் உக்காந்த பக்கத்துல ஒரு தம்மாத்துண்டு இன்னெரு தம்மாதுண்டுகிட்ட மழலை குரல்ல " அதிருதுல்ல" அப்படிங்குது
இதுக்கு என்னத்த சொல்றது...!

ஜோ / Joe said...

கோவியார்,ஸ்ருசல்,தேவி,ஆயில்யன்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

//ரஜினியின் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் இவை எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகியிருக்கும்.//

ஒரு கமல் ரசிகராக இதை நேர்மையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

பதிவில் எதுவும் 'உள்குத்து' இல்லையே?!

இளவஞ்சி said...

ஜோ,

// இல்லையென்றால் ரஜினி ரசிகர்கள் 'ஆபீஸ் ரூம்'-க்கு கூட்டிப் போய் விடுவார்கள் // :))))

// ரஜினியின் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் இவை எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகியிருக்கும். //

100% உண்மை!

அல்வாசிட்டி.விஜய் said...

ஜோ

நலமா? பையன் என்ன பண்றான். உங்களையும் இதில் கோர்த்துள்ளேன்...

http://halwacity.com/blogs/?p=263

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives