Tuesday, February 19, 2013

கடல் திரைப்படமும் கத்தோலிக்க மீனவர் சித்தரிப்பும்


கடல் திரைப்படம் வர்த்தக ரீதியாக மட்டுமன்றி விமர்சன ரீதியாகவும் பொதுவாக நிராகரிக்கப்பட்டுள்ளது . அதீதமான எதிர் மறை விமர்சனங்களுக்குப் பின் கடல் படத்தை பார்க்க நேர்ந்ததாலோ என்னவோ பலரும் கருதும் அளவுக்கு அத்தனை மோசமில்லை என்றே எனக்கு தோன்றியது . ஒரு திரைப்படம் என்னும் அளவில் ஓரளவு என்னை கவரவும் செய்தது.


மணிரத்னம் இயக்கம் , ஜெயமோகன் வசனம் , தென் தமிழகத்து கத்தோலிக்க மீனவர் சமூக பின்னணி என பல காரணிகள் படம் பார்ப்பதற்கான ஆர்வம் தூண்டின . தமிழ் சினிமாவில் தொடர்ந்து மீனவர் குறித்த சித்தரிப்புகள் தேவையான கள ஆய்வும் புரிதலும் இல்லாமலேயே இது வரை இருந்திருக்கின்றன . ஜெயமோகன் என்ற பெரும் எழுத்தாளர் இந்த கடற்கரை சமூகம் வாழும் நிலப்பரப்பிலிருந்து 10 கிமீ தூரத்தில் வசிப்பவர் தான் என்றாலும் அவருடைய முந்தைய சில அவதானிப்புகளை பார்க்கையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கவில்லை .

இது கடல் திரைப்படத்துக்கான விமர்சனம் அல்ல . கடல் படம் சித்தரிக்கும் தென் தமிழகத்து கத்தோலிக்க மீனவர் பின்புலத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன் என்ற முறையில் கடல் படத்தில் அந்த சமூகம் குறித்த சித்தரிப்புகளின் மீதான என் பார்வை மட்டுமே.


தென் தமிழகத்து கத்தோலிக்க மீனவர் சமூகம் இந்தியாவில் மிகப்பழமையான , பாரம்பரியமிக்க கிறித்துவ சமூகங்களில் ஒன்று .திருச்செந்தூருக்கு தெற்கே மணப்பாடு முதல் கன்னியாகுமரி வரையில் வங்காள விரிகுடா ஓரமும் , கன்னியாகுமரியிலிருந்து கேரள எல்லையான நீரோடி வரை அரபிக்கடல் ஓரமாகவும் நீண்டு கிடக்கின்ற மீனவ கிராமங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கத்தோலிக்கர்களாகவும் , இரண்டு சாதியினராகவும் உள்ளனர் . இதில் 4 அல்லது 5 ஊர்களில் மட்டுமே இரண்டு சாதியினரும் இணைந்து வாழ்கிறார்கள் ..மற்ற எல்லா கிராமங்களிலும் ஏதாவது ஒரு சாதி மக்களே வாழ்கின்றனர் .. உள்நாட்டு கிறித்துவர்களை போலன்றி 450 வருடங்களுக்கு மேலாக கத்தோலிக்க மதத்தில் ஊறிப்போன இம்மக்கள் வாழ்க்கை , அரசியல் , ஊர் நிர்வாகம் எல்லாமே மதம் சார்ந்து தான் அமைந்துள்ளது . ஊர் முழுக்க ஒரே மதம் , ஒரே சாதி என்பதால் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மதம் பின்னிப் பிணைந்துள்ள சமூகம் இவை .

* இந்த பின்புலத்தில் ஒரு கடற்கரை கிராமத்து பங்கு (parish) கோவில் பல ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடப்பது என்பது நடைமுறையில் நான் கண்டிராதது .இந்த படத்தில் பங்குக்கோவில் பல ஆண்டுகள் கவனிப்பாரன்றி பூட்டிக்கிடப்பதாகவும் அதை திறக்கும் போது நாய்கள் உள்ளிருந்து பாய்ந்து வெளியே வருவதுமாக காட்டப்படுகிறது . இது போல இந்த பகுதியில் நடக்க வாய்ப்பே இல்லை . முழுக்க முழுக்க திருச்சபையை வாழ்க்கையோடு இணைத்துக் கொண்ட இம்மக்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தாங்கள் ஓலைக் குடிசைகளில் வசித்த போதும் வானளாவ கோவில்களை கட்டியவர்கள் .. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் நீங்கள் குறுக்காக பயணம் செய்தால் ஒவ்வொரு ஊரிலும் வானளாவ நிற்கும் கோவில்கள் நிச்சயம் உங்களை வாய்பிளக்க வைக்கும் .. அந்த அளவுக்கு பக்தியின் பேரால் இம்மக்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டிருக்கிறார்கள் என்பதே என் தனிப்பட்ட கருத்து . அன்றிலிருந்து இன்று வரை மீன் பிடித்து வரும் வருமானத்தில் குறைந்தது 10 சதவீதத்தை ஊர் கோவிலுக்கு கொடுத்து வருபவர்கள் இம்மக்கள் . எங்கள் ஊர் சமீபத்தில் ஒரு பங்காக இருந்து இரண்டாக பிரிக்கப்பட்டது .. 500 குடும்பங்கள் கொண்ட சிறிய புதிய பங்கில் கிட்டத்தட்ட 1.5 கோடி செலவில் புதிய ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது .. ஓரிரு உதவிகள் தவிர இது 90% எம் மக்களின் பணம் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும் . எனவே ஒரு கடற்கரை பங்குக்கோவில் இப்படி பாழடைந்து கிடக்கும் என்பது எதார்த்தமில்லாதது .

* அரவிந்த சாமி அந்த ஊருக்கு புதிய பங்குக் குருவாக வருகிறார் .. தமிழ் சினிமாவில் கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு புதிதாக வரும் ஆசிரியர் ஒரு பஸ்ஸில் வந்து இறங்கி நான் தான் பள்ளிக்கு புதுசா வந்திருக்கும் வாத்தியார் என்ன மக்களிடம் சொல்வாரே அது போல புதிய பங்கு சாமியார் வருவதாக காட்டும் போது நான் விழுந்து விழுந்து சிரித்தேன் .. ஏனென்றால் ஒரு பங்குக்கு அதுவும் கடற்கரை பங்குக்கு பங்கு குருவானவர் பொறுபேற்க வருகிறார் என்றால் அத்தனை சுழுவாக நடந்து விடாது .. முதலில் மறைமாவட்ட ஆயர் (பிஷப்) அதை அறிவிப்பார் ..பின்னர் பொறுப்பேற்கும் அன்று பெரும்பாலும் பிஷப் அவரோடு ஊருக்கு வருவார் . ஊரிலிருந்து பங்கு கமிட்டியினர் வருகின்ற புதிய குருவை சென்று வரவேற்று கொண்டு வருவார்கள் . ஓரே கூடி நிற்கும் ஒரு நிகழ்வில் பங்குக்குருவானவர் பொறுப்பேற்றுக்கொள்வார் . இது போல ஏதோ புதிதாக வந்த போஸ்ட் மாஸ்டர் கணக்காக யாரும் வருவதில்லை .

* ஒரு குருவானவரை ஊரார் நடத்தும் விதம் அதிர்ச்சிகரமாக காட்டப்பட்டுள்ளது . எக்காரணத்தைக் கொண்டும் ஒரு குருவனாவரை அடிப்பது , உதைப்பது , கிட்டத்தட்ட எல்லோருமே நாராச மொழியில் பேசுவது போன்றவை மணிரத்தினமும் , ஜெயமோகனும் பொதுவாக மீனவர்கள் படிப்பறிவற்றவர்கள் , முரடர்கள் , மரியாதை தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தியை தாண்டி எந்த கள ஆய்வும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது . முந்தைய காலங்களைப் போல குருவானவர் என்றால் பிரமிப்பும் , பக்தியும் இப்போது இல்லாதிருக்கலாம் . அதற்கு காரணம் இன்றைக்கு மிக அதிக அளவில் குருவானவர்கள் வருவது இந்த கடற்கரை கிராமங்களிலிருந்து தான் . இப்போது சொந்த குடும்பத்திலோ அல்லது ஒன்று விட்ட குடும்ப வட்டத்திலோ குறைந்தபட்சம் ஒரு குருவானவரோ அல்லது கன்னிகாஸ்திரியோ இல்லாத ஒரு மீனவ குடும்பத்தை பார்ப்பது அரிது .அந்த வகையில் பிரமிப்பும் பக்தியும் குறைந்து போயிருக்கலாம் .ஆனால் குருவானவரை ஏதோ வேண்டப்படாத விரோதி போல பார்க்கும் நிலை கண்டிப்பாக இல்லை .. சில ஊர்களில் சில குருவனாவர்களை ஏசுவதும் , அரிதாக சிறிது தாக்குவதும் நடந்திருக்கலாம் .ஆனால் இது போல ஊர்முழுக்க வசையும் தாக்குதலும் குருவனாவர் மீது நடப்பதாக காட்டுவது மீனவர் பற்றிய பொதுப்புத்தி என்றே நினைக்கிறேன். அதுவும் எடுத்தவுடனே அந்த பையன் பாதிரியாரை வசை மாறி பொழிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை . அப்படி நடந்தால் கண்டிப்பாக மக்கள் பார்த்துக்கொன்டிருக்க மாட்டார்கள்.

* இந்த படத்திலும் சரி , நீர்ப்பறவையிலும் சரி .. ஹீரோ ஊரால் புறக்கணிக்கப்பட்டவர் , ஊதாரி ரேஞ்சில் வருகிறார்கள் . நீர்ப்பறவையில் கடலில் கண்டெடுக்கப்பட்டவன் என்பதால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதது போலவும் , இந்த படத்தில் தாய் சோரம் போனதால் ஒதுக்கப்பட்டதாக்கவும் காட்டுகிறார்கள் . இறந்து போன தாயைத்தவிர அவனுக்கு யாருமே இல்லையாம் . இவையெல்லாம் கடற்கரை சமூகத்தில் சாத்தியமில்லாதது ..ஏனென்றால் பாரம்பரிய மீனவர்கள் நூற்றாண்டுகளாக அங்கிருப்பவர்கள் , யாராக இருந்தாலும் மாமன் , மச்சான் என குறைந்தது 10 குடும்பங்களாவது அந்த ஊரில் இருக்கும் . நான் பார்த்தவரை மீனவ சமூகம் பாலியல் ரீதியாக சோரம் போனதற்காக போன்ற சொத்தை காரணங்களுக்காக யாரையும் தள்ளி வைப்பதும் இல்லை ..இப்படி கேவலமாக நடத்துவதும் இல்லை .. கூட நின்று தட்டிக் கேட்பதற்கு குறைந்தது நாலு பேரில்லாத எவரையும் நான் எங்கள் ஊர்களில் பார்த்ததில்லை . (உள்ளூர் கிராமங்களுக்கும் இது பொருந்துமே என கேட்கலாம் ..நிச்சயமாக வேறுபாடு இருக்கிறது)

* நீர்ப்பறவை ஆனாலும் சரி , இதிலும் சரி .. தன்னை நிரூபிக்க ஒரு படகு வாங்கி அதில் தொழில் செய்ய முற்படுவதாக காட்டப்படுகிறது ..அதெல்லாம் சரி தான் .ஆனால் படகில் தொழில் செய்வதை ஏதோ பம்பரம் விடுவது கணக்காக காட்டுகிறார்கள் ..முதலில் ஒரு கட்டுமரத்தில் வலையோடு சென்று மீன்பிடிக்கவே குறைந்தது இரண்டு பேராவது சேர்ந்து செல்ல வேண்டும் . வள்ளம் எனப்படும் படகிலேயே ஹீரோக்கள் தனியாக சென்று மீன்பிடிப்பது போல காட்டப்படுவது நல்ல காமெடி .. வள்ளம் , படகுகளில் மீன்பிடிப்பதற்கும் படகில் சுற்றுலா போவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா ? குளுமையான காட்சி அமைப்பு , அட்டகாசமான காமிரா கோணம் திரைப்படங்களுக்கு தேவையென்பதால் படகில் படுத்துக்கொண்டு கையை விரித்து போஸ் கொடுப்பது , திடீரென்று வீட்டு அக்குவேரியத்திலிருந்து ஒரு மீனை அள்ளுவது போல அம்மாம்பெரிய மீனை கடலில் கைவிட்டு அசால்டாக பிடித்து விடுவது எல்லாம் எனக்கு ஏதோ ஹீரோ சுற்றுலா போவது போலிருக்கிறதே தவிர , தொழில் செய்வது போலில்லை .. இவையெல்லாவற்றையும் விட மிகப்பெரிய காமெடி சினிமாக்களில் கடலில் வலை வீசுவதாக வரும் காட்சிகள் தான் .. இதுவரை அப்படி வீசப்படும் வலைகளெல்லாம் ஏரி , குளங்களில் வீசப்படும் வலைகள் தான் . வலையை தோளில் போட்டுக்கொண்டு ஒரு முனையை பிடித்து வீசுவதாக காட்டுவார்கள் .. கடலிலே பயன்படுத்தப்படும் வலைகள் குறைந்தது 100 மீட்டர் நீளமாவது இருக்கும் .யாரும் அதை தோளில் தூக்கி வீசுவதில்லை ,வீசவும் முடியாது .

(தொடரும்)

43 comments:

ஜோசப் பால்ராஜ் said...

மிக அருமையான ஆய்வு.

விரைவில் அடுத்தபாகம் எழுதுங்கண்ணே.

sharfu said...

good Writing,

Very useful informations.

keep on writing

இனியா said...

Fantastic writing Joe! Thanks for this post!

இனியா said...

எனக்கும் நீங்கள் சொல்வதுதான் சரியாகப்பட்டது. நிறைய கத்தோலிக்க நண்பர்கள்

தென் தமிழகத்தில் இருப்பதால் ஓரளவு அவர்களின் வாழ்க்கை எனக்கு பரிச்சயமானதே.

எங்கள் ஊரும் முழுக்க முழுக்க கத்தோலிக்க கிராமம் (தஞ்சை மாவட்டம்) என்பதால் பங்குத்தந்தையின் role என்ன என்பதும் தெரியும்.

பல இயக்குனர்கள் கத்தோலிக்க/protestant மக்களிடம் இருக்கும் வாழ்வுமுறை மாற்றங்கள் தெரியாததால், இரண்டையும் குழப்பி விடுவார்கள்.

Robin said...

ஜெயமோகன் போன்ற விஷமிகளிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

இனியா said...

அகிலமும் தெரிந்த ஜெமோ வுக்கு, பக்கத்தில் இருக்கும் மீனவர்களின் வாழ்க்கை முறை தெரியவில்லையா?

Anonymous said...

வில்லன்கள் எல்லாம் கிறிஸ்தவ பெயர் கொண்டவர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் ஆக அதிக தமிழ் சினிமா இருப்பதே தமிழ் சினிமா கிறிஸ்தவ மதத்தை சீண்டுவதற்கு உதாரணம்,இதில் கடல் ஒரு படி மேலே போய் கத்தோலிக்க மீனவர்களை சாடியிருப்பதில் எனக்கு வியப்பேதும் இல்லை காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்கு சொல்லித் தருவதில் பெரும்பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது..யோசிக்க வேண்டிய விஷயம் இன்று வரை ஒரு தமிழ் சினிமா கூட ஆஸ்கார் வாங்கவில்லை ஆனால் மாதம் ஒருமுறை பண்ணி குட்டி போடும் எண்ணிக்கை அளவுக்கு படங்கள் இன்று வரை வருகின்றன,
சட்டியில் இருந்தால் தான் ஆப்பையில் வரும் என்றவகையில் நல்லதை சொல்லாத இந்த தமிழ் சினிமாவை நான் ஒரு போதும் ஆதரிப்பது இல்லை

இந்த சினிமாவையும் கிரிக்கெட்டையும் ஒழித்தால் இந்தியா ஒரே வருடத்தில் வல்லரசாகிவிடும் என்பது என் நம்பிக்கை -சபா

முரளிகண்ணன் said...

அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்

Anonymous said...

//மீனவ கிராமங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கத்தோலிக்கர்களாகவும் , இரண்டு சாதியினராகவும் உள்ளனர் . இதில் 4 அல்லது 5 ஊர்களில் மட்டுமே இரண்டு சாதியினரும் இணைந்து வாழ்கிறார்கள்.மற்ற எல்லா கிராமங்களிலும் ஏதாவது ஒரு சாதி மக்களே வாழ்கின்றனர் //

இரு சாதிகள் எவை?

Anonymous said...

ஜெயமோஹனை எழுத வைத்தது தவறு. அவருக்கு கத்தோலிக்கக் கிராமங்களின் வாழ்க்கை நன்றாகவே தெரியும். நீங்கள் சொன்ன்வை அனைத்துமே தெரியும்.

இருப்பிலும் அவர் தனக்கு வசதியாக மாற்றிக்கொண்டதற்கு இந்துத்வா பிடிப்பு காரணம். இந்துத்வா கிருத்துவ மதத்தை வெறுக்கும்.

உவரி டி குரூசை எழுதவைத்திருக்கலாம்.

Anonymous said...

//...திருச்செந்தூருக்கு தெற்கே மணப்பாடு முதல்...//

இது சரியான தகவலில்லை.

பரதவர், பரவால்ஸ், பெர்னாண்டோக்கள் என்றெல்லாம் அழைக்கப்படும் கத்தோலிக்க மீனவர் கிராமங்கள், தூத்துக்குடி வடக்கே தருவைக்குளத்திலிருந்து தொடங்கி, தூத்துக்குடி,பழையகாயல், புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டணம், திருச்செந்தூர் (இங்கு மீன்வர்கள் கிடையா) அதற்குப்பக்கத்தில் அமலிநகரில்தான் உண்டு, பின்னர் ஆலந்தலை,குலசேகர பட்டணம் என்றெல்லாம் வரிசையாக கடலோரக் கிராமங்களைத் தாண்டிய பின்னர் வருவதுதான் மணல்பாடு, மணப்பாடு, ஸ்டைலான தமிழில் மணவை என்றழைக்கப்படும் புனித சேவியர் வாழ்ந்த கிராமம், பின்னர் பெரியதாழை, முட்டம் (இந்த முட்டம் வேறே) கூடுதாழை, கூட்டப்பனை. இடிந்தகரை, முட்டம் (இதுதான் சுற்றுலாத்தளம்), என்று போய் இறுதியில் கன்யாகுமரியில் முடிந்து, பின்னர் நீங்கள் சொல்லிய அரபிக்கடல் கிராமங்கள் வரும்.

Anonymous said...

வலம்புரி ஜான், ஜோ டி குரூஸ் இவர்களின் உவரியை விட்டுவிட்டேனே! அதை பெரியதாழைக்கப்புறம் போட்டுக்கொள்ளவும்.

ஜோ/Joe said...

//பரதவர், பரவால்ஸ், பெர்னாண்டோக்கள் என்றெல்லாம் அழைக்கப்படும் கத்தோலிக்க மீனவர் கிராமங்கள், தூத்துக்குடி வடக்கே தருவைக்குளத்திலிருந்து தொடங்கி, தூத்துக்குடி,பழையகாயல், புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டணம், திருச்செந்தூர் (இங்கு மீன்வர்கள் கிடையா) அதற்குப்பக்கத்தில் அமலிநகரில்தான் உண்டு, பின்னர் ஆலந்தலை,குலசேகர பட்டணம் என்றெல்லாம் வரிசையாக கடலோரக் கிராமங்களைத் தாண்டிய பின்னர் வருவதுதான் மணல்பாடு//

நன்றி .இதை நான் அறிந்திருந்தாலும் திருச்செந்தூருக்கு தெற்கே இடைவெளியின்றி கத்தோலிக்க மீனவர்கள் இருக்கிறார்கள் என்பதை குறிக்க அவ்வாறு எழுதினேன் .ஆனாலும் ஆலந்தலை ,குலசேகரப்பட்டணம் சேர்த்திருக்க வேண்டும் . திருத்தத்திற்கு நன்றி

//முட்டம் (இதுதான் சுற்றுலாத்தளம்), என்று போய் இறுதியில் கன்யாகுமரியில் முடிந்து, பின்னர் நீங்கள் சொல்லிய அரபிக்கடல் கிராமங்கள் வரும். //
இல்லை .. நீங்கள் கடலோரக்கவிதைகள் முட்டம் பற்றி சொல்வதாக இருந்தால் ..கன்னியாகுமரி தாண்டி அரபிக்கடல் ஓரமாக மணக்குடி , பள்ளம் , ராஜாக்கமங்கலம் துறை உள்ளிட்ட கிட்டத்தட்ட 15 ஊர்கள் தாண்டியே முட்டம் வருகிறது.

ஜோ/Joe said...

//இரு சாதிகள் எவை?//
பரவர் , முக்குவர்

ஜோ/Joe said...

நீங்கள் சொல்வது கன்னியாகுமரியை ஒட்டி இருக்கின்ற சின்ன முட்டம் -ஆக இருக்கலாம் .அது மீன்பிடித்துறைமுகமே தவிர சுற்றுலாத்தலம் அல்ல.

Bruno said...

//
ஜெயமோஹனை எழுத வைத்தது தவறு. அவருக்கு கத்தோலிக்கக் கிராமங்களின் வாழ்க்கை நன்றாகவே தெரியும். நீங்கள் சொன்ன்வை அனைத்துமே தெரியும்.

இருப்பிலும் அவர் தனக்கு வசதியாக மாற்றிக்கொண்டதற்கு இந்துத்வா பிடிப்பு காரணம். இந்துத்வா கிருத்துவ மதத்தை வெறுக்கும்.
//

Exactly

My guess : Maniratnam wanted to do a picture about Christian faith. His mistake was chosing JeMo.

He must have thought that JeMo would be a professional

Only after shooting, he realised that JeMo had inserted his pro Hindutva, Anti Christian thoughts in dialogues

After seeing what had happened to Kamal, he hurriedly chopped away many of those dialogues, scenes and the result is what we see

This is my guess of what went wrong

settaikkaran said...

கடல் படத்தின் பொருந்தாமை குறித்து நானே நம்மூர்க்காரங்க கிட்டே கேட்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். முதல் பகுதியிலேயே எல்லா சந்தேகங்களையும் தீர்க்கிற மாதிரி விபரமா எழுதிட்டீங்க! அடுத்த பகுதியையும் வாசிக்க வருவேன். கோர்வையான இடுகை! பாராட்டுகள்!

Unknown said...

அருமையாக பதிந்துள்ளீர்கள் நன்றி

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,
நல்ல அலசல்தான்.. பொது ஊடகங்களில் என வரும்போது சில விபரங்களை சரி செய்வது முறையானதுதான்.

கடல் படம் ஒரு பின்னணிக்குத்தான் கடற்கரைக்கு வருகிறது. அதன் கதை கடற்கரை மக்களை பற்றியதல்ல. அதன் கதை ஒரு ஆன்மாவின் பயணத்தை குறித்ததுதான்.

டாக்டர் புரூனோ,
உங்கள் யூகம் முற்றிலும் தவறானது. மணி அவ்வாறு கேட்கவுமில்லை ஜெயமோகனின் கதையில் இந்துத்துவ சார்பு கொஞ்ச‌மும் இல்லை அது முழுக்க முழுக்க பைபிளை ஆதரித்தும் கிறீத்துவின் நேரடியான போதனைகளை முன்வைத்தும் எழுதப்பட்ட கதை. அதில் இந்துத்துவ அஜென்டா என்ன இருக்கிறது?

நம் ஊர்களில் சாமியார்கள் அடித்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். சினிமாவென்று வரும்போது அது மிகை யதார்த்தத்தைத்தான் (நாடகத்தன்மை கலந்து) காட்ட முடியும். இரண்டு நிமிடங்களுக்குள் உங்களுக்குள் ஒரு உணர்வை கடத்தி கதையையும் நகர்த்தவேண்டும் அதற்கு இரத்தம் வழிய அவரை அடித்ததாகக் காண்பித்தாகவேண்டும். மேலும் இரத்தம் சிந்தும் தேவதூதன் ஒரு அற்புதமான கிறீத்துவக் குறியீடு.

படம் ஏதோ பழைய காலத்தில் நடக்கிறது என்பதை புரிந்துகொல்ள முடிகிறது ஆனால் எந்த காலம் என்பதை சொல்லவில்லை. (ஏனென்றால் அதெல்லாம் மையகதைக்கு தேவையானவையல்ல).

இந்தப்படம் கிறீத்துவ நம்பிக்கைகளுக்கோ, கிறீத்துவின் போதனைகளுக்கோ எதிரானது என்பதை 100சதம் மறுக்கிறேன்.

Rakesh Kumar said...

Okay, can post now. Good going, Joe. Waiting for the rest.

rr srinivasan said...

மில்டன், உங்கள் கட்டுரையில் ஏதோ படம் எடுத்தவர்கள் குழந்தைத்தன்மையோடு , தெரியாமல் எடுத்தது போல எழுதியுள்ளீர்கள், இந்துத்துவப் பின்னணியில் கிற்த்தவத்தை தெளிவாகச் சித்தரிக்கப்பட்டதே இப்படம்,,,

அன்பு said...

அருமையான பதிவு... நீர்ப்பறவை உடனான ஒப்பீடு உட்பட நான் நினைத்தவை பல அப்படியே இருக்கிறது ... அடுத்தபதிவுக்கு காத்திருக்கிறேன்...

அன்பு said...

பெண்தொடர்பில் சிக்கி மரியாதை பெற்ற பாதிரிகள் மணப்பாடு சுற்றுவட்டாரத்தில் அதிகம்... சாத்தான்குளம் பங்கு பகுதிகளில் நிறைய பாதிரிகள் பணியாற்றிய பங்குகளில் பெண்தொடர்பால் அடித்து துரத்தப்பட்டிருக்கின்றனர்
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பள்ளிகளில் வேலையும் ஜீவனாம்சமும்(!!!) வழங்கப்பட்டிருக்கிறது..

அன்பு said...

படத்தின் மிகப்பெரிய பிரச்சனை அதிகபட்ச கிறித்தவ போதனையே .. ஊரில் ஆலயத்தையே மதிக்காத மக்கள் சாத்தான் என்று ஒருவரை குறிப்பிடுவதே ஆச்சர்யம்...கடற்புரங்களில் மக்கள் பிறரை சாத்தானே என்று விளிப்பதே அரிது எனகருதுகிறேன்..

அன்பு said...

துளசி கவுதமை காதலிக்கிறாரா என்பதே புரியவில்லை... மேலும் துளசி சற்றே மனச்சிதைவு அடைந்த குழந்தைத்தனமான பெண் .. அவர் கவுதமை காதலிப்பதாக காட்சிஅமைப்புகள் தெரியவில்லை (எனி குறியீடு!).. படம் முடிந்து வெளிவரும்போது படம் மனதில் ஓட்டாத ஒரு எண்ணம் தொடர்கிறது.. கடற்கரையும் மக்களும் மட்டுமே மனதில் நிற்கின்றனர்,,

தருமி said...

//அந்த அளவுக்கு பக்தியின் பேரால் இம்மக்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டிருக்கிறார்கள் என்பதே என் தனிப்பட்ட கருத்து .//

அடப்பாவி மனுஷா ...!

நேற்று தான் நீர்ப்பறவை பார்த்தேன். பிடித்தது. அதைப் பற்றியும் எழுதியுள்ளீர்களா?

Anonymous said...

Srinivasan!
இந்துத்துவப் பின்னணியில் கிற்த்தவத்தை தெளிவாகச் சித்தரிக்கப்பட்டதே இப்படம்,,,//

een inthuthva pinnani?

If so, why don't we describe Hinduism using Christian background? Will you allow it?

Anonymous said...

பக்தியின் பெயரால் எல்லா மக்களும் எல்லா மதங்களிலும் சுரண்டப்பட்டுத்தான் வருகிறார்கள். உலகம் முழுவதும் அப்படித்தான். ஏனெனின், ஒரு மதம் என்பது ஒரு ஸ்தாபனம். அதை நிருவகிப்பது மனிதர்கள். சுரண்டலில்லாமலிருக்குமா?

A religion is not merely about God. It is an organization with hierarchical structure and governance. Even Hindu religion, which prides itself on not being organized, is worst in the sense that it has lacs of gurus and mutts who exploit people in their own way.

All religions are of the same kind; they differ only in degree in exploiting the people.

அதே வேளையில், அம்மதம் இல்லாவிட்டால், இன்னொரு மதம்தான் வேண்டுமே தவிர, மதமே இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. தருமி வாழலாம்; பெரியார் வாழலாம். பொதுமக்களால் முடியாது.

ஜோ/Joe said...

Anonymous,
உங்களுடைய சில பின்னூட்டங்களை நான் வெளியிடாததற்கு காரணம் அதில் நிறைய தகவல் பிழைகளை மிகவும் தெரிந்த உண்மை போல சொல்லுகிறீர்கள் .. அவற்றை வெளியிட்டு தேவையற்ற திசைதிருப்பலையும் , விளக்கங்களையும் உருவாக்க நான் விரும்பவில்லை .நேரடியாக விளக்கம் தேவையென்றால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும் djmilton at gmail.com. குறைந்த பட்சம் உங்கள் பெயரை குறிப்பிங்கள் ..இல்லையேல் Anonymous -ஆக வரும் கருத்துக்கள் எல்லாம் உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும் ..உங்கள் தகவலுக்கு ...நானும் சிறில் அலெக்ஸ் போல கடற்கரை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான் .இன்னும் என் இல்லமும் உறவினர்களும் அங்கே தான் இருக்கிறார்கள் . சிறில் அலெக்ஸ் அவர் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்தே என் நண்பர் ..அவருடைய 'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' புத்தகத்திலும் என் கருத்தை வெளியிட்டிருந்தார் .

ஜோ/Joe said...

//een inthuthva pinnani?

If so, why don't we describe Hinduism using Christian background? Will you allow it?//
சீனிவாசனின் உள்குத்து உங்களுக்கு புரியவில்லை என நினைக்கிறேன் :)

ஜோ/Joe said...

//தருமி வாழலாம்; பெரியார் வாழலாம். பொதுமக்களால் முடியாது. //
ஏன் தருமியும் , பெரியாரும் பொதுமக்களில் வரமாட்டார்களா?

உண்மைத்தமிழன் said...

கொளுத்து ராசா..!

இன்னும் காத்திருக்கிறோம்..!

Anonymous said...

////தருமி வாழலாம்; பெரியார் வாழலாம். பொதுமக்களால் முடியாது. //
ஏன் தருமியும் , பெரியாரும் பொதுமக்களில் வரமாட்டார்களா?//

வரமாட்டார்கள். பொது மக்கள் அல்லது பொது ஜனம் என்பது ஒரு சமூகவியல் பதம்.
அதன்படி, பொதுஜனம் ஒரு கன்ஃபார்மிஸ்ட். அதை நன் கன்ஃபார்மிஸ்ட் ஒரு விடயத்தில் பண்ணிவிட்டால், அதை இன்னொருவர் வந்து மீண்டும் மாற்றும்வரை, பொது ஜனம் ஏற்று கன்ஃபார்மிஸ்ட் பண்ணிவிடும். ஒன்றே ஒன்றைததான் சொன்னேன். இதைப்போல நிறைய குணங்கள் பொதுஜனத்திற்கு மாறாமல் உண்டு. எத்தேயத்திலும்.

தனிமனித சிந்தனையாளர்கள் இந்த பொதுஜனச் சிந்தனையில் இருந்து மாறுபட்டவர்கள்.

பெரியாரின் நாத்திகம் அப்படிப்பட்டது. எவரின் நாத்திகமும் அவ்வாறே. காரணம், பொதுஜனம் என்றுமே நாத்திகத்தை ஏற்காது. காரணம். ஆத்திகம் மனிதரின் பயம் என்ற உணர்ச்சியின் அடிப்படையை வைத்து எப்போதுமே ஜீவிக்கிறது. பயம் போகாது மனிதன் நிலவுலகில் வாழும்வரை. அப்பயத்தை தாற்காலிகாமாக பொதுஜனம் சமாளிப்பதற்கு வேண்டியது மதம்.

எனவே தருமியோ பெரியாரோ, பொதுமக்களில் வரமாட்டார்கள் அவர்களின் சிந்தனையைப்பொறுத்த மட்டில். அதைத்தானே பேசுகிறோம்.

Anonymous

Anonymous said...

/`சீனிவாசனின் உள்குத்து உங்களுக்கு புரியவில்லை என நினைக்கிறேன் :)//

அவர் மட்டுமன்று. ஜெயமோகனும் அப்படத்தில் செய்தது உட்குத்து வேலை என்பதுதானே இங்கே என் வாதம். - Anonymous

Anonymous said...

///சிறில் அலெக்ஸ் போல கடற்கரை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான் .இன்னும் என் இல்லமும் உறவினர்களும் அங்கே தான் இருக்கிறார்கள் . சிறில் அலெக்ஸ் அவர் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்தே என் நண்பர் ..அவருடைய 'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' புத்தகத்திலும் என் கருத்தை வெளியிட்டிருந்தார் .//

அவரைத் தெரியாதவர்கள் வலைபதிவு வாசகர்களாக இருக்க முடியுமா? ஜெயமோஹன் வலைபதிவு இரசிகர்களுக்கு அவரைத்தெரியும். ஏனெனில், தன் வலைபதிவை வடிவமைத்துத் தந்தவர் இவர்தான் என அவர் சொல்லியிருக்கிறார்.
அலெக்ஸின் பழைய பதிவுகளை நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும். கத்தோலிக்க கடலோரக்கிராமங்கள் பீதியில் உறைந்தன. அவரின் முட்டம் எப்படி நடுங்கியது அந்த கொடிய நாட்களில் என்று அவர் விவரித்திருக்கிறார் படிக்கவும். நீங்கள் ஒரே ஒரு ஊர்க்காரர். அவரும் ஒரே ஒரு ஊர்தான் அதாவது முட்டம். ஆனால் நான் அப்படியன்று. தருவைக்குளத்திலிருந்து முட்டமும் தாண்டி அனுபவம்.

இப்போது கடல் படத்தைப் பற்றிப் பேசுவோம்.

இப்படத்தைப்பற்றி உங்கள் பிரச்சினை, எதார்த்தங்களைக்காட்டவில்லையென்பதே.

திரைப்படம் ஒரு கற்பனைக்கலை. அதன் வீரியமே அது எப்படிப்பட்ட சிறந்த கற்பனை என்பதில்தான் எனபதை நினைவு கூர்க. கடலோரமக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கவேண்டுமானால் அது ஒரு குறும்படம் (டாக்குமென்ட்ரி) ஆகி விடும். மணிரத்தினம் குறும்படம் எடுக்கவில்லை.

எதார்த்தங்கள் திரிக்கப்படும். படலாம். ஆனால் அத்திரிபுகளில் ஒரே நோக்கம் கலைச்செறிவு. அல்லது சிறப்பு ஒன்றே.

நம் திரைப்படங்கள் கலைச்சேவையை எப்போதாவது செய்யும். பொதுவாக ஜனரஞ்சமே. எனவே இரு நோக்கங்கள்.

திரிபுகளின் இந்நோக்கங்கள் மாறும்போதுதான் பிரச்சினையே வருகிறது.

மணிரத்தினம் அப்படி நோக்கத்தை மாற்ற எடுக்கவில்லையென நம்பலாம். ஆனால் எழுத்தாளர்? ஏனெனில் அவரின் மனச்சாய்வுகளை அவர் வலைபதிவில் படித்தறியலாம்.

எனவே செய்யும் செயல் செய்பவனின் நோக்கத்தைப் பொறுத்தும் அமையும்.. இந்துச்சாமியார்களும் ஏமாற்றுவார்கள். இசுலாமியரும் ஏமாற்றுவர்; கிருத்துவ பாதிரிமார்களும் குற்றச்செயல்கள் செய்யாமலில்லை. எதையும் ஒரு கற்பனைக்களமாக எடுத்துச் சொல்லலாம். அதே வேளையில் அதைச்சொல்பவர் யார்? ஒரு மதத்தையே வெறுப்பவன் அம்மதத்தைப்பற்றி என்ன நன்னோக்கத்திலா கற்பனைக்களமாகப் பயனப்டுத்துவான்?

கிறித்துவர்கள் 'க்டல்' படத்துக்கு எதிராக தங்களது தார்மீகக்கோபத்தைக்காட்டியது முற்றிலும் சரியே. உள்ளோக்கம் இருப்பதை உணர்ந்ததனால் அவ்விளைவு.

So, I stand by my first comment. The egregious mistake with Manirathan was to have invited Jeyamohan to write the script. The film could have turned out to be a masterpiece if only the director did some solid home work on his own, instead of relying on the writer.

- Anonymous

Further comment; Not only Jeyamohan, all such popular writers should not be given the work. They attempt to dominate the film. Director should be the lord and master of all things in the film! In old days, the dravidian writers used the scripts to propagate their ideology, killing art. Let not that happen again.

ஜோ/Joe said...

//எனவே தருமியோ பெரியாரோ, பொதுமக்களில் வரமாட்டார்கள் //
இதுக்கு தருமி தான் பதில் சொல்லணும் .பார்ப்போம் :)

ஜோ/Joe said...

//அலெக்ஸின் பழைய பதிவுகளை நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும். //
ஸ்ப்பா ..முடியல்ல அவரை படிக்காமலா என் மதிப்புரையை அவர் புத்தகத்தில் வெளியிட்டார்..சிறில் , நீங்களாவது வந்து இந்த பஞ்சாயத்தை முடிக்கக் கூடாதா?

அப்புறம் , ஒரு அடையாளத்துக்கும் உங்க பெயரை எழுத சொன்னால் , Anonymous என்பதையே பெயராக எழுதுகிறீங்கள் .எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணல்லியே ? :)

ஜோ/Joe said...

//இப்படத்தைப்பற்றி உங்கள் பிரச்சினை, எதார்த்தங்களைக்காட்டவில்லையென்பதே//
இல்லை . எதை காட்ட வேண்டுமென நான் சொல்ல முடியாது .ஆனால் காட்டப்பட்டதில் சித்தரிப்புகளில் எனக்கு தோன்றும் முரண்பாடுகளை மட்டுமே இங்கே பதித்திருக்கிறேன் .

nagoreismail said...

Nice

K.R.அதியமான் said...

நண்பர் சிறில் அலெக்ஸின் கடல் பற்றிய விமர்சனத்தையும் பார்க்கவும் :

http://www.jeyamohan.in/?p=34540

ஜோ/Joe said...

அதியமான்,
நன்றி .ஏற்கனவே படித்தேன் .

நான் எழுதியிருப்பது திரைப்பட விமர்சனம் அல்ல.

Unknown said...

ஒரு மென்மையான தயக்கம் இருப்பது உங்கள் எழுத்துகளில் வெளிப்படுகிறது ஜோ. அது தேவையே இல்லை.

கொஞ்சம் அழுத்தமாகவே உங்களுடைய எண்ணங்களைப் பகிருங்கள்.

ரெபெல்ரவி said...

மணியின் படங்கள் எதிலும் எதார்த்தம் எனப்படும் நிகழ்வியல் இருக்காது. வெறும், போலியான மிகைப் படுத்தல், மற்றும் அழகியல் போன்றவையே தூக்க்லாக இருக்கும். அவரின் முதல் படத்தில் இருந்து இதை நான் கவனித்து வருகிறேன். Creative Blackbook இலுருந்து frameகளை அப்படியே உருவுவது, வெளிநாட்டுப் படங்களின் போஸ்டர் படங்களை ஈயடிச்சான் காப்பி அடிப்பது...இது தான் இவரின் கலைச் சேவை. old man and the sea எனும் எமிங்வே இயற்றிய ஓர் அற்புத நூலை அமெரிக்காவில் திரைப்படமாக எடுத்துள்ளதை மணியோ, ஜெமோவோ அறியார் போலும். க்யூப மீனவர்களின் வாழ்முறையும்,,மீனவ சமூக வாழ்வும் மிக எளிமையாக சித்தரிக்கப் பட்டிருக்கும். கூட்டப்புளியைச் சார்ந்த எம்.ஜெ.ரெகோ எனும் அற்புத எழுத்தாளரின் கெழுதகை நண்பன் எனும் முறையில் எனக்கும் பர்ணாந்துகளின் வாழ்க்கை சற்று பரிச்சயமே. மணிரத்னம், ஜெமோ போன்ற சல்லிகளின் வண்டி தமிழகத்தில் ஓடுவது வருத்தமான ஒரு விஷயம்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives