Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில்

நான் கடவுள் , உன்னைப் போல் ஒருவனுக்கு அடுத்து தியேட்டரில் பார்த்த படம் இது தான் .வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களை படித்து விட்டு எதிர்பார்ப்புகளை வெகுவாக குறைத்துக்கொண்டு சென்றது நல்லதாக போய்விட்டது .பலரின் விமரிசனங்களை படித்தால் ‘மவனே ! பாயிண்ட் பாயிண்டா’ பிரிச்சு மேஞ்சுடணும்’ -னு நோட்டும் கையுமா போய் குறிப்பெடுத்துக் கொண்டு எழுதுவார்களோ என சந்தேகமாயிருக்கு .அதிலும் ஆங்கிலப்படங்களை அதிகமாக பார்ப்பவர்கள் தங்கள் மேதமையை காட்டுவதற்காக ‘சொதப்பிட்டான்யா’ என 1000 கோடி செலவில் எடுத்த ஆங்கிலப்படத்தையும் 30 கோடியில் எடுத்த இந்த படத்தையும் ஒப்பிட்டு ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்குவது நல்ல தமாசு .

இதுவரை செல்வராகவன் பாலாவைப் போல மிகக்கவர்ந்த இயக்குநர் இல்லை எனக்கு .முந்தைய நாள் தான் தொலைக்காட்சியில் 7Gரெயின்போ காலனி பார்க்க நேர்ந்தது .இது போன்ற அப்பார்ட்மெண்ட் காதலை சொதப்பல் நடிகர்களை வைத்து நகர்ப்புற ரசனைக்கேற்றவாறு கொஞ்சம் மந்தகாசமான கோணத்துடன் பெரும்பாலும் பாடல்களை நம்பி களமிறங்கும் ஒரு இயக்குநர் என்ற என் பொதுவான கருத்தை வலுப்படுத்திக் கொண்டு இந்த படத்திற்கு சென்றால் எதிர்பாராத மாற்றம் .எனக்கு தெரிந்து தமிழில் இந்த அளவுக்கு முன்னேற்பாடுகள் , காட்சியில் வரும் அதிகபட்ச மனிதர்களின் ஒருங்கிணைப்பு , அரங்க அமைப்பு போன்றவற்றுக்கு அதிகபட்ச உழைப்பு தேவைப்பட்டிருக்கும் படம் இதுவாகத் தானிருக்கும்.

“சோழர் பாண்டியர் உண்மை வரலாற்றுக்கும் இதற்கும் தொடர்பில்லை ..இது முழுக்க கற்பனையே” என முதலிலேயே போட்டு விட்ட பின்னரும் பலர் வரலாற்றுத் தவறுகளை நோண்டுவதுவும் பிடிபடவில்லை ..ஒரு வரலாற்றுப் புத்தகத்தை படித்து விட்டு கேள்வி கேட்கலாம் . வரலாற்றுப் புதினத்தில் வரும் கற்பனைகளையும், வர்ணனைகளையும் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி ? அதான் புதினம் -ம்னு சொல்லியாச்சேப்பா (இதுவரை வரலாற்று புதினம் எதுவும் நான் படித்ததில்லை ,அதனால என் கண்ணோட்டம் தவறோ என்னவோ?)

படத்தின் கதை ,நடிப்பு ,இசை பற்றியெல்லாம் பலரும் அலசி விட்டார்கள் .என்னைப் பொறுத்தவரை ஒளிப்பதிவு ,அரங்க அமைப்பு ,காட்சி கோணங்களில் பிரம்மாண்டம் ..குறைந்தபட்சம் இவைகளில் இந்த படம் தமிழ்சினிமாவின் உச்சத்தை தொட்டிருக்கிறது. காட்சிகளின் நம்பகத்தன்மையை மட்டும் வைத்து முற்றிலும் நிராகரிப்பதை விட அந்த காட்சியை ஒருங்கிணைப்பதில் எடுக்கப்பட்டிருக்கும் உழைப்பை கருத்தில் கொள்வதும் முக்கியம் .அந்த வகையில் செல்வராகவன் கற்பனையில் தோன்றுவதை காட்சிப்படுத்தியதில் தமிழ் சினிமாவின் பொருளாதார வரைமுறைக்குட்பட்டு கொடுத்துள்ள பிம்பங்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவை. மீண்டும் 1000 கோடிகளை 30 கோடிகளுடன் ஒப்பிட்டு ஒற்றை வரியில் நிராகரிப்பது ஏற்புடையதல்ல.

கார்த்தியின் உடம்பில் புலி வண்ணத்தையெல்லாம் ஆராய்ந்து கேள்வி கேட்கும் சோழ மன்னன் புஜத்தில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் உருவத்தை பார்த்து “யார் இந்த அரசன்?” என ஏன் கேள்வி கேட்கவில்லை ? என நானும் வம்புக்கு கேள்வி கேட்கலாம் .படம் முழுவதும் கற்பனையென்றான பின் இதற்கெல்லாம் விடையில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகள் ஈழத்தின் சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பின் செல்வராகவனுக்கு தோன்றியதாக சிலர் நினைப்பதற்கு முகாந்திரம் அதிகமே . ஒரு நாட்டின் ராணுவம் என்பது தேசபக்தியின் அடையாளம் , ஒழுக்க சீலர்களின் கூடாரம் ,புனிதப்பசுக்கள் போன்ற பாடப்புத்தக பொதுப்புத்தியிலிருப்பவர்களுக்கு கடைசி காட்சிகளை ஜீரணிக்க முடியாதிருக்கலாம் . ஆனால் அதை துணிந்து பதிவு செய்த செல்வாவை பாராட்ட வேண்டும். சோழர் காலத்து மொழியில் வரும் வசனங்கள் பலருக்கும் புரியவில்லை என பரவலாக குற்றச்சாட்டு உள்ளது .எனக்கு ஒரு சில வார்த்தைகள் தவிர அனைத்தும் தெளிவாக புரிந்தது.

செல்வா இன்னொன்றை செய்திருக்கலாம் ..படத்தை முடித்த பின்னர் வெளிப்படையாக கருத்து சொல்ல வாய்ப்பில்லாத தன் உள்வட்டத்தில் உள்ளவர்களை தவிர்த்து தனக்கு வெளிவட்டத்தில் ஒரு சில தரப்பினரிடம் படத்தை காண்பித்து கருத்து கேட்டிருந்தால் ,இரண்டாம் பாதியில் சில குறைத்தல் ,சரிப்படுத்துதல் செய்திருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப ரீதியில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் .

குறைகளைத் தாண்டி கண்டிப்பாக இது புறக்கணிக்கப்படவேண்டிய படமல்ல , கொட்டப்பட்டிருக்கும் உழைப்புக்காகவேனும் .

29 comments:

நட்புடன் ஜமால் said...

குறைகளைத் தாண்டி கண்டிப்பாக இது புறக்கணிக்கப்படவேண்டிய படமல்ல , கொட்டப்பட்டிருக்கும் உழைப்புக்காகவேனும் .]]


இதுக்காகவேணும் - பார்த்திடுவேன்.

joe vimal said...

நச்!!! உங்கள் அளவிற்கு பிற ஒலக சினிமா ரசிகர்கள் இந்த படத்தை பார்கவில்லை அவர்கள் தான் இந்த படத்தை லாஜிக் இல்லை என்று சொல்கிறார்கள் .உங்கள் பார்வை தான் சரி .

நர்சிம் said...

நல்லா சொல்லி இருக்கீங்க பாஸ்.

ஜோ/Joe said...

நட்புடம் ஜமால் ,affable joe , நர்சிம்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Rakesh Kumar said...

Sounds intriguing. Not sure am going to watch it anytime soon...hmmm....

கோவி.கண்ணன் said...

இன்னும் பார்க்கவில்லை

கண்ணா.. said...

//1000 கோடி செலவில் எடுத்த ஆங்கிலப்படத்தையும் 30 கோடியில் எடுத்த இந்த படத்தையும் ஒப்பிட்டு ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்குவது நல்ல தமாசு //

கலக்கல்...எனக்கும் இதேதான் தோணுச்சு...


விமர்சனம் எழுதணும்னே நினைச்சு படத்த பாத்துருப்பாங்க..தல

அதான் சாதாரண ரசிகனின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை


என்னை பொறுத்த வரையில், படத்தில் பல குறைகள் இருந்தாலும், முயற்ச்சிக்காக பாராட்டவேண்டிய படைப்பு..

தமிழ்ல இதுபோல முயற்சிகள் குறைவுங்கறதால...சைக்கிள் ஓட்ட கற்று கொள்ளும் போது கீழே விழுந்த சிறுவனின் மேல் விசாரணை கமிஷன் வைக்காதீர்கள்..

TBCD said...

//ஒரு நாட்டின் ராணுவம் என்பது தேசபக்தியின் அடையாளம் //

படத்தில் வரும் பாதுகாப்பு படையணிகள் தனியார் படை என்பதாகவே காட்டப்படுகின்றது. அழகம் பெருமாள் பாத்திரம் ஒரு ஒய்வுப் பெற்ற ராணுவ அதிகாரி என்றும் சொல்லப்படுகின்றது.

துபாய் ராஜா said...

நடுநிலையான விமர்சனம்.

முரளிகண்ணன் said...

Welcome

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஜோ...ம்..ம்...ம்ம்,,,
என்ன சொல்ல..
திரையுலகின் கஷ்டங்களை உணர்ந்து..அக்கறையுடன் போடப்பட்டுள்ள சூப்பர் பதிவு

கார்க்கிபவா said...

எந்த படம்தான் பாஸ் கஷ்டப்படாம எடுக்கிராங்க? அசல் பட ஷூட்டிங்கில் அஜித்திற்கு டூப் போட்ட நடிகர் இறந்துவிட்டாராம். அதற்காகவாது அந்த படம் பார்க்கனும்ன்னு சொல்வீங்களா?

அதுவும் கடின உழைப்பு உழைத்த ஆயிரம் துணை நடிகர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறார்களாம்.

படம் எப்படின்னு சொன்னிங்க இல்ல. அது சரி. எவ்ளோ மொக்கை படம் பார்க்கிறோம். அதனால் இதையும் பார்க்கிறது தவறில்லைன்னு சொன்னா அதுவும் சரி. ஆனா இதுதான் சினிமா.. அபப்டின்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. அதுவும் மற்ற துறைகளில் காட்டிய உழைப்பை ஸ்க்ரிப்ட் தயார் செய்வதில் காட்டியிருந்தால் இந்த பிரச்சினையே இல்லை. அவர் புனைவுன்னு போட்டா ஆயிடுச்சா?அப்போ எதுக்கு நெல்லாடிய நிலமென்று சோழரின் வரலாற்றை துணைக்கு அழைக்கிறார்? ஒளிப்பதிவும், கலையும் நிச்சயம் பாராட்டப்ப வேண்டியது. அதற்காக படமே சிற்ந்ததாக ஆயிடுமோ?

//உங்கள் பார்வை தான் சரி//

ஜோ. நான் என் கருத்தை சொல்கிரேன். அது தவறாகவும் இருகலாம். எனவேதான் யாராவ்து விளக்கம் சொல்ல மாட்டார்களா என்று ஒவ்வொரு பதிவாக படிக்கிறேன். ஆனால் எல்லோரும் உழைப்புக்காக பார்க்கலாமென்றே சொல்கிறார்கள். அதிலே படம் ஒன்னுமில்லை என்பதை மறைமுகமாக சொல்கிறது. நீங்க என்னடான்னா நாம சொல்றதுதான் சரியென்று அடித்து பேசறீங்க.

உஙக்ளை ஓரளவுக்கு அறிந்தவன் முறையில் என் வருத்தத்தை மட்டும் பதிவு செய்கிறேன்

தமிழ் said...

உண்மை தான்

ஜோ/Joe said...

//நீங்க என்னடான்னா நாம சொல்றதுதான் சரியென்று அடித்து பேசறீங்க.//
நான் அப்படி சொல்லவேயில்லையே ..நீங்கள் மேற்கோள்காட்டியிருப்பது affable joe என்பவர் சொன்னது .

//உஙக்ளை ஓரளவுக்கு அறிந்தவன் முறையில் என் வருத்தத்தை மட்டும் பதிவு செய்கிறேன்//
எனக்கு வருத்தமா இருக்கு ..நீங்க வருத்தப்படுற அளவு நான் என்ன சொல்லிட்டேன்னு தெரியல்ல .. கடைசி இரண்டு பத்திகளை படித்தாலே நான் குறைகளை ஒப்புக்கொண்டுதானிருக்கிறேன் என்பது உங்களுக்கு புரியும்.

Directhit said...

Joe - appaada ungalukku padam pudichirundhuchaa :-))

1000 கோடி செலவில் எடுத்த ஆங்கிலப்படத்தையும் 30 கோடியில் எடுத்த இந்த படத்தையும் ஒப்பிட்டு ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்குவது நல்ல தமாசு - migavum sari, ennai porutha varayil 60 kodi selavu seidha dasavadharathai vida (adhu oppanaikku selavaanadhu enbadhu oru pakkamirundhaalum) 31 kodiyil edutha Aayirathil Oruvan thamizh mattrum indhiya padathin tharathai uyarthiye kaatiyulladhu (enakku dasavatharam piditha padam enbadhu oru pakkamirundhaalum!)
aana indha pongal in vettri padam kutti - kashtakaalam!!

ஜோ/Joe said...

கார்க்கி,
//எந்த படம்தான் பாஸ் கஷ்டப்படாம எடுக்கிராங்க? அசல் பட ஷூட்டிங்கில் அஜித்திற்கு டூப் போட்ட நடிகர் இறந்துவிட்டாராம். அதற்காகவாது அந்த படம் பார்க்கனும்ன்னு சொல்வீங்களா?//

இறந்தவருக்கு அஞ்சலி . நான் இங்கே குறிப்பிட்டது உடல் உழைப்பை குறித்தல்ல (அதை நான் குறைத்து மதிப்பிடவில்லையெனினும்) .நான் சொல்ல வந்தது இந்த படத்தில் வரும் இடங்களை தேர்வு செய்ய ,அரங்கு அமைக்க ,ஒரே நேரத்தில் திரையில் தோன்றும் நூற்றுக்கணக்கான பேரை ஒருங்கிணைக்க , அதை மாறுபட்ட கோனங்களில் படமாக்க செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் ,யோசனைகள் ,செயல்படுத்துதல் போன்றவற்றை.

//அதுவும் கடின உழைப்பு உழைத்த ஆயிரம் துணை நடிகர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறார்களாம்.//
கண்டிக்கத்தக்கது .லாபம் கிடைத்தாலாவது அவர்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

//படம் எப்படின்னு சொன்னிங்க இல்ல. அது சரி. எவ்ளோ மொக்கை படம் பார்க்கிறோம். அதனால் இதையும் பார்க்கிறது தவறில்லைன்னு சொன்னா அதுவும் சரி. //
சரி தான்.
//ஆனா இதுதான் சினிமா.. அபப்டின்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்ல.//
இது தான்பா சினிமாவின் இலக்கணம் அல்லது இது தான் எனக்கு மிகவும் பிடித்தபடம் என்ற ரீதியில் நான் எதுவும் சொல்லவில்லையென நினைக்கிறேன். பலரும் சொல்கிற அளவுக்கு மோசமில்லை எனவே சொல்ல வந்தேன்.
//அதுவும் மற்ற துறைகளில் காட்டிய உழைப்பை ஸ்க்ரிப்ட் தயார் செய்வதில் காட்டியிருந்தால் இந்த பிரச்சினையே இல்லை.//
கார்க்கி ,நான் சாதாரண ரசிகன் . 'திரைக்கதை ' என்னும் தொழில்நுட்பம் ,அதன் குறைகளை கண்டுணரும் அளவுக்கு எனக்கு சூட்சுமம் தெரியாது .ஆனால் என்ன தான் பேப்பரில் எழுதினாலும் அதை பிம்பமாக கொண்டு வருவது வேறு என்பது என் சிற்றறிவு .இல்லையென்றால் ஸ்கிரிப்டை எழுதி வேறு யாரிடமோ கொடுத்து விட்டு இயக்குநர் வீட்டுக்கு போய்விடலாமே .. உரையாடல் பூர்வமான காட்சியை ஸ்கிரிப்டில் முழுமையாக எழுதி விடலாம் .காட்சி பூர்வமான கற்பனையை செய்து பார்த்து தான் முடிக்க முடியுமே தவிர ஸ்கிர்ப்டில் முழுமையாக எழுதிவிட முடியுமா தெரியவில்லை.

//ஒளிப்பதிவும், கலையும் நிச்சயம் பாராட்டப்ப வேண்டியது. அதற்காக படமே சிற்ந்ததாக ஆயிடுமோ?//
எந்த இடத்தில் நான் ஒட்டுமொத்த படமும் 'சிறந்தது' என சொல்லியிருக்கிறேன் என சுட்டிக்காட்ட முடியுமா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல அலசல் ஜோ.. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

நம்ம ஆளுங்க வெவ்வேறு படத்திற்கு வெவ்வேறு கண்ணாடி அணிந்து பார்க்கிறார்கள்.

அட.. இந்த ஆளு படம் எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும். அதனால பார்த்து "ஓட்டிடுவோம்" படத்த..

அட.. இந்த ஆளு ஏதோ புதுசா எடுக்கறாராம்.. என்ன தான்னு ஒரு கை பார்த்திடுவோம்..

இது இங்கிலீசு துரைக படம்.. எப்படி எடுத்தாலும் பார்த்திடலாம். இது தாங்க நாம் :)

Unknown said...

நாளைக்கே குடும்பத்துடன்
படம் பார்க்கப் போகிறேன்
நன்றி

ஜோ/Joe said...

//நாளைக்கே குடும்பத்துடன்
படம் பார்க்கப் போகிறேன்//

தாமோதர் ,இது குழந்தைகளுக்கு ஏற்ற படமல்ல .குழந்தைகளை தவிர்ப்பது நல்லது.

Prathap Kumar S. said...

//ஆங்கிலப்படங்களை அதிகமாக பார்ப்பவர்கள் தங்கள் மேதமையை காட்டுவதற்காக ‘சொதப்பிட்டான்யா’ என 1000 கோடி செலவில் எடுத்த ஆங்கிலப்படத்தையும் 30 கோடியில் எடுத்த இந்த படத்தையும் ஒப்பிட்டு ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்குவது நல்ல தமாசு .//

நியாயமான கருத்து ஜோ. வழிமொழிகிறேன்.

வித்தியாசமான படங்கள் வரவில்லை என்று வேட்டைக்காரனையும், மசாலா படங்களையும் குறைசொல்பவர்கள, வித்தியாசமான முயற்சிகள் செய்யப்பட்டாலும் அதையும் குற்றம் சொல்கிறார்கள்.

சினிமாவில் அடுத்த கட்டம் என்பது ரசிகர்களின் ஆதரவினால் மட்டுமே சாத்தியம். இப்படி குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் தமிழ்சினிமா குத்துப்பாட்டிலும், ஹீரோவின் பன்ச் டயலாக்கையும் மட்டுமே நம்பியிருக்கும்...

கார்க்கிபவா said...

அட சாரி சகா.. அவர் பேரும் ஜோ என்பதால் வந்த குழப்பம் :)))

அது affable joeக்கு :))))

ஜோ/Joe said...

கார்க்கி :)

நியோ / neo said...

ஜோ!

சற்றேறக்குறைய உங்கள் கருத்துதான் எனதும். நம்முடைய வரலாறு குறித்த எந்தப் புரிதலுமில்லாத ஒரு தலைமுறைக்கு அதை அறிமுகம் செய்து வைக்கிற/ அது குறித்து (ஏதோ ஒரு வகையிலாவது) பேசவிவாதம் செய்ய வைக்கிற - எந்தப் படைப்பாக இருந்தாலும் - நாம் அதை ஆதரிப்பதில் தவறில்லை.

வைரமுத்துவினுடைய அந்தப் பாடல் உணர்வுபூர்வமானது.

ஆனால், இந்தப் பாடலுக்கு சோனியாவின் கையால் "தேசிய விருது" கொடுத்தாலும் முகம் முழுக்க சிரிப்பாணியோடு போய் அவர் வாங்காமல் இருக்க - எல்லாம் வல்ல மகரக்குழை நெடுங்காதன்கள் அருள் புரியட்டும் என்று வேண்டிக் கொள்ளவேண்டியதுதான்! ;))

சிநேகிதன் அக்பர் said...

நல்ல விமர்சனம் ஜோ.

மூன்று வருட உழைப்பை ஒற்றைவரியில் நல்லாயில்லைன்னு சொல்வது தவறு. தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கலாம்.

சிங்கக்குட்டி said...

விமர்சனம் அருமை பாராட்டுக்கள்.

சைடில் சிவாஜி படம் கலக்கல் :-)

Anonymous said...

O...o.......Kalakkaaaaaaaaaaaaal, Pathivungannooooooooooooo, But Romba Ovara Theriyuthu, Neeeeeeeeeeeeeeeenga Avuru Fanungala Samiyov

priyamudanprabu said...

////
பலரின் விமரிசனங்களை படித்தால் ‘மவனே ! பாயிண்ட் பாயிண்டா’ பிரிச்சு மேஞ்சுடணும்’ -னு நோட்டும் கையுமா போய் குறிப்பெடுத்துக் கொண்டு எழுதுவார்களோ என சந்தேகமாயிருக்கு .அதிலும் ஆங்கிலப்படங்களை அதிகமாக பார்ப்பவர்கள் தங்கள் மேதமையை காட்டுவதற்காக ‘சொதப்பிட்டான்யா’ என 1000 கோடி செலவில் எடுத்த ஆங்கிலப்படத்தையும் 30 கோடியில் எடுத்த இந்த படத்தையும் ஒப்பிட்டு ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்குவது நல்ல தமாசு .
///

நல்லா அடிச்சீங்க

Yoganathan.N said...

நல்ல அலசல். கண்டிப்பாக வரவேற்கத்தக்க படைப்பு... :)

-யோகா.நா

Anonymous said...

ஜோ, நல்ல கேள்விகள் & சிந்தனைகள்.
படம் முதற்பாதியில் வெகுவும் கவர்ந்தது, பிற்பாதியில் சற்று குழப்பம் - ஏற்பட்டாலும் சோழர் கால புராணத்துக்கும் இந்த கற்பனை கதைக்கும் brilliant ஆன ஒரு முடிச்சு போட்டிருப்பது சற்று தாமதமாக புரிந்தது. மற்றப்படி, வன்முறை சற்று அதிகமாக (over-the-top and unnecessary) யாக தோன்றியது. மற்றப்படி, தமிழர்கள் பெருமை பட்டு கொள்ளும் ஒரு படமாகவே உள்ளது.. தசாவதாரம் எல்லாம் பேசுக்குள்ளேயே சேர்த்துக்க கூடாது :ப (அந்த படம் எனக்கு பிடிக்கும் என்பது வேறு விஷயம்)

அனூப், குட்டி சரியாக ஓட வில்லை (flop என்றும் கூறப்படுகிறது )பின்பெப்படி பொங்கல் ரிலீஸ் ஹிட் என கூறுகிறீர்கள் :?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives