Friday, September 11, 2009

ஒரு நடிகனின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது அவமானமா?

உலகில் திரைப்பட கலைஞர்களுக்கு மட்டுமென்றில்லை ,எழுத்தாளர்களுக்கு ,விளையாட்டு வீரர்களுக்கு ,பல துறைகளில் புகழ்பெற்று விளங்குபவர்களுக்கு ரசிகர் இருப்பது ஒன்றும் புதிய செய்தியில்லை ..இந்த 'ரசிகர்' என்ற பதம் ஒருவரின் கலை மீது தனி அபிமானம் வைத்திருக்கும் ஒருவன் என்பதைத் தானே குறிக்க வேண்டும் ..ஆனால் நம் நாட்டில் ,அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 'ரசிகர்' என்று சொல்லிவிட்டால் , பொழுதண்ணைக்கும் வேலை வெட்டிகளை மறந்து அபிமான நடிகருக்கு மன்றம் அமைத்து ,போஸ்டர் ஒட்டி , கோஷம் போட்டுக் கொண்டிருக்கும் சிலரை மட்டும் குறிப்பதாக ஒரு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது ,அல்லது சிலர் அப்படி கற்பித்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் தன்னை சாருவின் ரசிகர் ,ஜெயமோகனின் ரசிகர் என்று சொன்னால் அது பெருமை போலவும் , இன்னொருவர் தன்னை கமல் ரசிகர் ,ரஜினி ரசிகர் என்று சொன்னால் அது ஏதோ அவமானத்துக்குரியது போலவும் கட்டமைக்கப்படுகிறது . இதிலே என்ன பெரிய வெங்காய வித்தியாசம் இருக்கிறது என எனக்கு புரிவதில்லை . சிலரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் "நான் ரசிகர்-லாம் இல்லீங்க .ரஜினி படம் விரும்பி பார்ப்பேன்" என்பார்கள் .ஏதோ நாம் நீங்க யாருடைய ரசிகர் மன்றத்தில் இணைந்து பணிபுரிகிறீர்கள் என கேட்டது மாதிரி .. ரஜினி படம் விரும்பி பார்ப்பவர் ரஜினி ரசிகர் .இதுக்கு மேலே அவர் என்ன அர்த்தப்படுத்திக்கொள்ளுகிறார் என தெரிவதில்லை . இன்னும் சிலர் "எனக்கு எல்லா நடிகர்களும் ஒண்ணு தான்" -ன்னு ஒரு உலக மகா தத்துவத்தை சொல்லுவார்கள் ..இல்லையென்றால் நாம் அவரை ஒரு நடிகரின் ரசிகர் என அவமானமாக நினைத்து விடுவோமாம்.

இன்னொன்று ஒருவரின் ரசிகர் என்றால் அவர் சொல்லுவதே வேதவாக்காக கொண்டவர் ,அவரின் போட்டி நடிகரை வெறுப்பவர் என ஒரு பிம்பம் ..இதெல்லாம் ரசிகர் மன்றங்களில் சேர்பவர்களுக்கு சரியாக இருக்கலாம் ..ஏனென்றால் ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களில் பாதி பேர் உண்மையிலேயே அந்த நடிகரின் கலையை ரசிப்பதால் இணந்தவர்கள் என சொல்ல முடியாது ..இல்லையென்றால் ரஜினி மன்றத்தை சார்ந்தவர் அதிருப்தியால் விஜயகாந்த் மன்றத்தில் சேர்ந்தார் என்றெல்லாம் இருக்க முடியாது .ஏதோ ரஜினியின் நடிப்பில் திடீர் அதிருப்தி வந்தா அவர் மாறினார் .மன்றத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை .பிழைக்க வழியில்லை ..எனவே அரசியல் கட்சிகளுக்கு தாவுவது போல தாவுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் .இதை சொல்லுவதால் நான் ஒன்றும் அவமானப்படவில்லை .சிவாஜி கணேசனின் கலைக்கு நான் ரசிகன் .அதே நேரத்தில் சிவாஜி கணேசன் என்ற அரசியல் வாதிக்கு நான் தொண்டனாகவோ ,ஆதரவாளனாகவோ இருந்ததில்லை .இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க தெரிந்தது . ரசிகர் மன்றத்தில் இணைந்திருக்கவில்லை .இன்னும் சொல்லப்போனால் இதுவரை தியேட்டரில் அவர்கள் திரையில் தோன்றும் முதல் காட்சியில் கைதட்டலோ விசிலோ அடித்ததில்லை (விசில் அடிக்க முயற்சி செய்தும் வரவில்லை ,அது வேறு விஷயம்) .அதனால் ஒரு நடிகரின் ரசிகர் கூட்டத்தின் அளவை அறிமுகக்காட்சியில் எழும் விசில் சத்தத்தை வைத்து கணக்கிடும் முறையை நான் ஒத்துக்கொள்ளுவதும் இல்லை.



சிவாஜி ரசிகன் என்பதால் எம்.ஜி.ஆர் படம் பார்க்க மாட்டேன் என அடம் பிடிப்பதில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆரின் 135 படங்களில் ஏறத்தாழ 90 படங்களை பார்த்திருக்கிறேன் .சில படங்களை பல முறை பார்த்திருக்கிறேன் .இன்றும் எம்.ஜி.ஆர் பட பாடல்கள் என்றால் அத்தனை விருப்பம் .எம்.ஜி.ஆர் படங்களில் வந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களின் வீடியோ தொகுப்பை ஏறத்தாழ எல்லா வார இறுதியில் ஒரு முறை பார்ப்பவன் .இதே போல கமல் ரசிகன் என்பதால் ரஜினி படம் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பதில்லை ..கமல் படம் வந்தால் ஒரு வாரத்துக்குள் பார்த்துவிட வேண்டும் என நினைப்பேன் .ரஜினி படம் வந்தால் இரண்டு வாரத்துக்குள்..இந்த ஒரு வாரம் தான் வித்தியாசம் .நீண்ட நாட்களுக்கு பின் தியேட்டரில் நான் பார்க்காத ரஜினி படம் குசேலன் (சில காரணங்களுக்காக) .மற்ற படங்கள் இயக்குநர்களைப் பொறுத்து ,மற்றவர் சொல்வதை பொறுத்து . இதே போல எனக்கு தெரிந்த நண்பர்கள் பலரும் ரஜினி ,கமல் இருவரின் படங்களையும் தவறாமல் பார்ப்பவர்கள் ..ஆனால் இருவரில் ஒருவருக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பது தான் ஒரு சின்ன வேறுபாடு .



சினிமா என்பது எழுத்து போன்ற ஒரு கலை . வரலாற்று ஆய்வுகள் ,விஞ்ஞான கட்டுரைகள் போன்ற உருப்படியான எழுத்துக்களை தவிர்த்து , வெறும் புனைவுகளையும் அது குறித்த சண்டைகளையும் ,சுய சொறிதல்களையும் எழுதும் இலக்கியவாதிகளுக்கு ரசிகனாய் இருப்பதை விட ,இதை விட உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமாவில் கலைப்பங்களிக்கும் ஒரு கலைஞனின் திறமைக்கு ரசிகனாய் இருப்பது எந்த விதத்தில் தாழந்தது ?

ஆம் .நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் ,கண்ணதாசன் ரசிகன் ,இளையராஜா ரசிகன் ,நாகேஷ் ரசிகன் ,எம்.ஆர்.ராதா ரசிகன் .

50 comments:

வந்தியத்தேவன் said...

நான் கமல் ரசிகன் எனச் சொல்வதில் பெருமைகொள்கின்றேன். ரசிகனாக இருக்கணும் என்றால் கொடிகட்டி, பாலாபிசேகம் செய்யவேண்டும் என்பதில்லை, எனக்கு கமல் படங்கள் பிடிக்கும் ஆஹாவே அவரது ரசிகன். இசையில் இளையராஜா பிடிக்கும் ஆகவே இசைஞானி ரசிகன், எழுத்தில் சுஜாதா பிடிக்கும் சுஜாதா ரசிகன். வலைகளில் ஜோவின் வலை பிடிக்கும் ஆகவே ஜோ ரசிகன் (இதற்காக நான் ஜோவின் வலைக்கு தினமும் வந்து மீத பர்ஸ்ட் என்றோ, :‍-) ஸ்மைலியோ கட்டாயம் போடவேண்டும் என்றில்லை)

கிரி said...

ஜோ ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.

ரசிகன் என்றால் நம்ம ஊரில் நீங்க சொன்ன மாதிரி கேவலமான பார்வை தான்.

நான் ரஜினிக்கு ரசிகன் அதனால் நான் எந்த விதத்திலையும் குறைந்து விடவில்லை..உண்மையில் கூற போனால் நான் ரஜினி ரசிகன் என்ற ஒரே காரண அறிமுகத்தினால் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தார்கள் என்பதே உண்மை.

பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளலாம் அதற்காக அனைவருமே அப்படி தான் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்ற அர்த்த தொனியில் பேசினால் எப்படி?

நான் நல்ல வேலையில் தான் உள்ளேன். என் குடும்பத்திற்கு என் கடமையை சரியாக செய்து வருகிறேன்..இதை விட வேறு என்ன வேண்டும்...இப்படி கிண்டல் செய்பவர்களை விட நான் சரியாகவே உள்ளேன்.

ஒரு சிலர் இப்படியும் கூறுவார்கள்....படித்தவனும்!! இப்படி தான் இருக்கிறான் என்று..படித்தவன் என்றால் மட்டும் இரண்டு கொம்பா முளைத்து இருக்கு.

இன்னும் கூற நினைக்கிறேன்..ரொம்ப பெரிதாக செல்லும் என்பதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்

என் பதிவில் கூறியபடி எனக்கு எந்த அவமானமும் வருத்தமும் இல்லை ரஜினி ரசிகனாக இருப்பதால்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பதிவு ஜோ. உண்மை தான். ஒரு கலைஞனின் ரசிகன் என்று கூறிக்கொள்வதில் அவமானம் தேவையில்லை தான்.

இங்கே ஓடும் குதிரையில் பணம் கட்டுவதைத் தான் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வந்தியத்தேவன்,அருமையா சொல்லியிருகீங்க. உண்மை தாங்க. முகஸ்துதி பண்ணினாத்தான் ரசிகன் என்ற எண்ணமும் நம் ஊரில் உள்ளது.

எம்.எம்.அப்துல்லா said...

சபாஷ். நல்ல இடுகை.

//ரசிகனாக இருக்கணும் என்றால் கொடிகட்டி, பாலாபிசேகம் செய்யவேண்டும் என்பதில்லை, //

இதை கன்னாபின்னான்னு வழிமொழியுறேன்.

:))

ஜோ/Joe said...

வந்தியத்தேவன்,
தொடர்ந்த வருகைகும் என் வலையில் வீழ்ந்ததற்கும் நன்றி!

ஜோ/Joe said...

வாங்க கிரி!
//படித்தவனும்!! இப்படி தான் இருக்கிறான் என்று..படித்தவன் என்றால் மட்டும் இரண்டு கொம்பா முளைத்து இருக்கு.//

படித்தவனோ ,படிக்காதவனோ ..வெறும் சினிமா ரசிகனாக மட்டும் இருந்தால் குறை சொல்லலாம் ..சினிமா *ரசிகனாகவும்* இருப்பதில் ஒன்றும் தவறில்லை.

கைப்புள்ள said...

//சிவாஜி ரசிகன் என்பதால் எம்.ஜி.ஆர் படம் பார்க்க மாட்டேன் என அடம் பிடிப்பதில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆரின் 135 படங்களில் ஏறத்தாழ 90 படங்களை பார்த்திருக்கிறேன் .சில படங்களை பல முறை பார்த்திருக்கிறேன் .இன்றும் எம்.ஜி.ஆர் பட பாடல்கள் என்றால் அத்தனை விருப்பம் .எம்.ஜி.ஆர் படங்களில் வந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களின் வீடியோ தொகுப்பை ஏறத்தாழ எல்லா வார இறுதியில் ஒரு முறை பார்ப்பவன் .இதே போல கமல் ரசிகன் என்பதால் ரஜினி படம் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பதில்லை ..//

அருமையாச் சொல்லிருக்கீங்க. இந்த சின்ன விஷயத்தை பலரும் புரிஞ்சுக்க மறுக்கறாங்க. ஒருத்தர் கமல், இளையராஜா ரசிகனா இருந்தா அவருக்கு ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் புடிக்காதுங்கிற முன்முடிவோட தான் பாக்கறாங்க. நல்ல பதிவு. கண்டிப்பா யோசிக்க வைக்கும்.

Rakesh Kumar said...

Good post as usual, bro.

But where does that leave me. I see it as one main fanship, then the lesser one. In my case, as far as TFI is concerned, Nadigar Thilagam Sivaji Ganesan stands tall. Athukkappuram I am equally, depends on film-basis Kamal/Rajini fan. But whatever I prefer, I am guided by my love NT first and foremost. Of course, I started out as Kamal fan first, then Rajini, and athukkapuram vanthaar paarungga Nadigar Thilagam. Everything else was overshadowed.

ஜோ/Joe said...

செந்தில் வேலன் ,அப்துல்லா ,கைப்புள்ள ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஜோ/Joe said...

//athukkapuram vanthaar paarungga Nadigar Thilagam. //
:))
வருகைக்கு நன்றி Bro!

மதிபாலா said...

ஒரு நடிகனின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது அவமானமா? //

இல்லை...ஆனால் ரசிகன் என்று சொல்லிக்கொண்டு நடிகர் அரசியலுக்கு வர மொட்டை போடுறது எல்லாம் சமுதாய அவமானங்கள்

கோவி.கண்ணன் said...

நடிகனின் ரசிகன் என்று சொல்வதில் அவமானம் இல்லை. ஆனால் அவர்கள் உளரலெக்கெல்லாம் சப்பைக் கட்டுவதும், அவற்றில் மறை பொருள்கள் இருப்பது போல் வேத விளக்கம் கொடுப்பதெல்லாம் அடிமைத்தனம்.

துறை சாராது அவர்கள் சொல்லும் பொதுக்கருத்துகள் நாம் சொல்வது போன்று பொதுவானவையே, அவற்றை தாங்கிப் பிடிக்க வேண்டிய தேவையை ரசிகர்களாக எடுத்துக் கொள்கிறார்கள்.

கமல் சொல்வது போல் ரசிகன் என்பவன் நாயகனின் படத்தின் பாத்திரத்தோடு, நடிப்பு திறமையோடு தொடர்பு முடிந்துவிட்டது

கோவி.கண்ணன் said...

//(விசில் அடிக்க முயற்சி செய்தும் வரவில்லை ,அது வேறு விஷயம்) //

எப்படி இப்படி எல்லாம் கடற்கரையில் பிறந்து விசில் அடிக்கத் தெரியலையா ?

அவ்வ்வ்வ்

ஜோ/Joe said...

//எப்படி இப்படி எல்லாம் கடற்கரையில் பிறந்து விசில் அடிக்கத் தெரியலையா ?//

கடற்கரையில் பிறந்ததால் நீச்சலடிக்க தெரிந்திருக்க வேண்டும் ..விசிலடிக்கவுமா? :))

ஜோ/Joe said...

//நடிகனின் ரசிகன் என்று சொல்வதில் அவமானம் இல்லை. ஆனால் அவர்கள் உளரலெக்கெல்லாம் சப்பைக் கட்டுவதும், அவற்றில் மறை பொருள்கள் இருப்பது போல் வேத விளக்கம் கொடுப்பதெல்லாம் அடிமைத்தனம்.

துறை சாராது அவர்கள் சொல்லும் பொதுக்கருத்துகள் நாம் சொல்வது போன்று பொதுவானவையே, அவற்றை தாங்கிப் பிடிக்க வேண்டிய தேவையை ரசிகர்களாக எடுத்துக் கொள்கிறார்கள்.

கமல் சொல்வது போல் ரசிகன் என்பவன் நாயகனின் படத்தின் பாத்திரத்தோடு, நடிப்பு திறமையோடு தொடர்பு முடிந்துவிட்டது
//

மாற்றுக் கருத்தில்லை கோவியாரே!

ஜோ/Joe said...

வாங்க நண்பர் மதிபாலா!
//ஆனால் ரசிகன் என்று சொல்லிக்கொண்டு நடிகர் அரசியலுக்கு வர மொட்டை போடுறது எல்லாம் சமுதாய அவமானங்கள்//

மறுக்க முடியுமா!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
ஆம் .நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் ,கண்ணதாசன் ரசிகன் ,இளையராஜா ரசிகன் ,நாகேஷ் ரசிகன் ,எம்.ஆர்.ராதா ரசிகன் . //

சாம் ஆண்டர்சனை விட்டுவிட்டீர்களே தல...,

Anonymous said...

very good post. yes, recently many tamil blog writers are trying to project that they are all so called extra genius people "fans of no actor", yes some of the writers means genius.
Above all, some who expect their stars to become political leaders is not totally right but we can not condemn that, if the rulers or politicians are really good ones no common fan will expect his star to come over to politics. Innamum thirai bimbaththai nijamaakividakkoodatha endra ethirpaarpu sarasari manithannukku irupaathu antha samoogathin nilaiyai poruththathu.
Kathai padikindravargal kavithai padippavargal thangal unarvugalai poruthi appadiye nenjai pilinthuviteergal ena solvathillaiya athu pol thaan than virumbum nadigan aala varamaattaana endra ennam athikarithu ponathum. Melum ippothu kannadaasangal MSVkkal illai unarvugalai thiraidppaadalil velippaduththa, iruntthirunthaal anthapaadalkalil thannai niruththi valvai ethinookiyiruppan saamnyan.
Melum abimaana nadiganai arasiyalukku ethirpaarkkum manopaavam MGR moolam thondriyathu.
Ippodhu aalum katchikku sariyaana maatru arasiyal sakthikal illatha nilayail ada en abimaana nadigan varakkoodathaa endru ethirpaarkiraan.
Thirayil than abimaana nadigan vanthathum whistile adikka mudinthaal avan than unarvugalai iyalbaai velipaduthiukiraan. Yen iyalbaana unarvugalai tholaikka vendum.
Ippodhu thaalattukalei illamal ponadhu pol, iyalbaai unarvugalai velipaduthaathu manasikkalukku mella tamilanum paliyaagi kondirukiraaan.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரசனை என்பது என்ன? என்று தெரியாது. பலர் பால் அபிசேகம்;காவடி;மண்சோறு என அலைவதுடன்
தாலியை விற்றுத் தோரணம் கட்டுவது; முதல் நாள் முதல் காட்சிக்கு 500 ரூபா சீட்டெடுத்து; வீட்டில் முழுக் குடும்பமும் பட்டினி கிடக்க வைப்பது; மொட்டை போடுவதுடன் , பைத்தியமாகி அடுத்தவருடன்
சண்டையிடுவது இந்த வெறி தேவையா?
நான் தியாகராஜ பாகவதரிலிருந்து இன்றைய நாடோடிகள் நடிகர்கள் வரை ரசிக்கிறேன்.எல்லாத் துறையிலும் ரசிக்கக் கூடியோர் இருக்கிறார்கள்..அதை ரசிப்போம்; நுர்வோம்.
ஆனால் பித்துப் பிடித்த வெறியர்களாக மாறாதிருப்போம்.
செய்வார்களா?நம் ரசிகமணிகள்.

சி தயாளன் said...

:-)

ரசிகர்களில் சிலர் (பலர்) செய்யும் நடவடிக்கைகளால்..நீங்கள் சொல்வது போல் ஏற்படுகின்றது...

Bruno said...

ஜோ சார்

இதைத்தான் நான் ஏற்கனவே கேட்டேன் :) :)

இங்கு பார்க்கவும்

Bruno said...

நடிகர்களின் ரசிகர்களுக்கு தாங்கள் எந்த விதத்திலும் சற்றும் குறைந்தவர்கள் (அல்லது கூடியவர்கள்!!) இல்லை என்று ஜெயமோகன், சாரு மற்றும் இளையராஜா ரசிகர்கள் ஏற்கனவே இணையத்தில் நிருபித்து விட்டார்கள் :) :) :)

Bruno said...

//வலைகளில் ஜோவின் வலை பிடிக்கும் ஆகவே ஜோ ரசிகன்//
நானும் தான் :)

// (இதற்காக நான் ஜோவின் வலைக்கு தினமும் வந்து மீத பர்ஸ்ட் என்றோ, :‍-) ஸ்மைலியோ கட்டாயம் போடவேண்டும் என்றில்லை)//

ஹி ஹி ஹி :) :)

உள்குத்து, வெளிகுத்து எல்லாம் சேர்ந்து குத்தியிருக்கிறீர்கள் :)

ஜோ/Joe said...

மருத்துவர் புரூனோ,
வாங்க .சரியாத்தான் சொல்லியிருக்கீங்க .

என்னைப்போய் நீங்க சார்-ன்னு சொல்லலாமா :)

ஜோ/Joe said...

மருத்துவர் புரூனோ,
நான் தான் உங்க ரசிகன் . H1N1 கலந்துரையாடல் ஒலிச்சித்திரம் கேட்டேன் .அருமை!

பேச்சுல நம்ம ஊர் வாடை அடிச்சதே .நீங்க நம்ம ஊர் பக்கமா?

ilavanji said...

அருமை ஜோ! :)

நான் ரஜினி ரசிகன். ஆனால் நீங்கள் பார்த்த அளவுக்குக்கூட நான் ரஜினி படங்களை பார்த்ததில்லை.

என்னைப்பொருத்தவரை ரசனை வேறு. ரசிகத்தன்மை வேறு. ஒலகப்படங்களையெல்லாம் நான் என் ரசனைக்கேற்பத்தான் பார்க்கிறேன். ஆனால் ரஜினி படம் என்று வந்துவிட்டால் அது முதற்காரணமாக ஒரு ரசிகனாக ரஜினிக்காகவே பார்ப்பது. அதாவது படத்துல எதுவுமே வேண்டாம். ரஜினி இருந்தால் போதும். இது ரஜினி என்ற நடிகரை மனதுக்கு நெருக்கமாக உணரமுடிகிறது என்பதைத் தவிர வேறொரு காரணமில்லை. இதிலும் ஒரு தெளிவு உண்டு. ரஜினியை திரையில் மட்டுமே ரசிக்கிறேன் என்பது! அதுபோக அவராடும் அரசியல் வாய்விளையாட்டுகளும் உசுப்பேத்தும் அரசியல் பன்ச்சுகளையும் தியேட்டர் வாசலிலேயே விட்டுவிட்டு வந்துவிடுவேன்.

எப்படிடா ரஜினியை எல்லாம் ரசிக்கறீங்கன்னு யாராவது கேட்டால் முன்புபோல வாயாடி விளக்குவதில்லை. ஒரு குறுஞ்சிரிப்பில் அதனைப் புறந்தள்ளி போகுமளவுக்கு ரசிகனாக உயர்ந்துள்ளேன்! :)

அருமையான பதிவுக்கு நன்றி! :)

ஜோ/Joe said...

//சாம் ஆண்டர்சனை விட்டுவிட்டீர்களே தல..//

இந்தித் திணீப்பு மாதிரி இது என்ன ரசிக திணிப்பு.

நீங்கள் சாம் ஆண்டர்சன் ரசிகர் என்று இப்போது தான் தெரியும். :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ரசிகன் என்று சொல்வதில் தவறில்லை.

மற்றபடி வந்தியின் கருத்துகளை அப்படியே வழிமொழிகிறேன்.

ஜோ வை ரசிக்கலாம், எழுதுவதைப் படிக்கலாம்.

நடிகர்களை ரசிக்கலாம், படங்களைப் பார்க்கலாம்.

அடிமையாக இருக்கவேண்டும், அபிஷேகம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

மிஞ்சி மிஞ்சிப் போய்,

நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்ததாலும், பிள்ளையார்கள் அதிகமாக பால் குடிப்பதாலும் பால் விலை உயர்ந்து தேனீர் விலையும் உயர்ந்து விட்டதாக அறிந்து வேதனைப் படுகிறோம்.

அப்படியும் டீக்கடைப் பெஞ்சில் அரசியல் அடிய புடிய குறையவில்லையாம்.

:)))

ஜோ/Joe said...

அத்திப்பெட்டியாரே வருக!
//மற்றபடி வந்தியின் கருத்துகளை அப்படியே வழிமொழிகிறேன்.//

நான் சொன்னதைத் அவர் சுருக்கி கச்சிதமாக சொன்னதாக நினைக்கிறேன்.

Radhakrishnan said...

எனக்கு பலரைப் பிடிக்கும் என்பதால் அவர்களுக்கு எல்லாம் நான் ரசிகன் என்று சொல்லிவிட முடியுமெனில் எனக்கு சந்தோசமே.

எனக்கு ரஜினி என்றால் கொள்ளைப் பிரியம். இதை ஒருபோதும் நான் எங்கும் எதற்கும் மறுப்பதில்லை. நீயுமா என என்னைக் கேட்டவர்களுக்கு, ஆம் என்றே பதில் சொல்லி இருக்கிறேன். இதில் நான் ஒருபோதும் என்னை மாற்றிக் கொள்வதில்லை. மனதில் ஆழமாக வேரூன்றிவிட்ட மனிதர் அவர்.

நடிகனின் ரசிகன் என்றால் நச்சுப்பார்வை இருப்பதற்கு காரணம் நமது நாட்டில் நடக்கும் கேலி கூத்துகள், கட்-அவுட் முதற்கொண்டு கெட்-அவுட் வரைக்கும்.

நீங்கள் சொல்வது போல இதற்காக கமல் படங்களை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு நான் ரஜினிக்கு மட்டுமே ரசிகனாக வளரவில்லை, வளர்ந்து கொள்ள முயற்சித்ததும் இல்லை.

நல்லதொரு இடுகை. நிச்சயம் அவமானம் இல்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆம் .நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் ,கண்ணதாசன் ரசிகன் ,இளையராஜா ரசிகன் ,நாகேஷ் ரசிகன் ,எம்.ஆர்.ராதா ரசிகன் . //

ஆம்

அருமையா எழுதி இருக்கீங்க ஜோ.

ஜோசப் பால்ராஜ் said...

அப்ப ஒன்னு இப்ப ஒன்னுன்னு பதிவு எழுதுனாலும் நச்சுன்னு எழுதுறீங்கண்ணே ( டேய், நீ ரொம்ப ரெகுலரா பதிவு எழுதுறியான்னு எல்லாம் கேட்கப்படாது).

ரசிகன் என்று சொல்வதில் எந்த தப்பும் இல்லை. நடிகர்களை ரசிப்பதால் தாழ்வதும் இல்லை. யாருக்கும் ரசிகனில்லை என்று சொல்வதால் உயர்வதும் இல்லை.
நானும் உங்கள மாதிரித்தான் கமல் ரசிகன். ஆனாலும் ஜேகேஆர் படம் வரைக்கும் எல்லாப் படத்தையும் பார்ப்பேன்.

ஆனா ரசிகர்கள் அப்டின்னு சொல்லிக்க வெட்கப்படுறது ஏன்னு பார்த்தீங்கன்னா, ரசிகன்னு சொல்லிக்கிட்டாலே நம்மளையும் கட் அவுட் வைச்சு, பால் , பீர் எல்லாம் ஊத்துறவங்கன்னு மத்தவங்க நினைச்சுப்பாங்களோங்கிற ஒரு பயம் கூட காரணமாயிருக்கலாம் இல்லையா?

ஜோ/Joe said...

பால்ராஜ் தம்பி,

//ஆனாலும் ஜேகேஆர் படம் வரைக்கும் எல்லாப் படத்தையும் பார்ப்பேன். //

வண்ணத்திரை சானல் வச்சிருக்கீங்க போலிருக்கு :)
.நானும் வேலை வெட்டியில்லாத போது சாம் ஆண்டர்சன் படம் போட்டாலும் பார்ப்பேன்.

//ஆனா ரசிகர்கள் அப்டின்னு சொல்லிக்க வெட்கப்படுறது ஏன்னு பார்த்தீங்கன்னா, ரசிகன்னு சொல்லிக்கிட்டாலே நம்மளையும் கட் அவுட் வைச்சு, பால் , பீர் எல்லாம் ஊத்துறவங்கன்னு மத்தவங்க நினைச்சுப்பாங்களோங்கிற ஒரு பயம் கூட காரணமாயிருக்கலாம் இல்லையா?//

அதைத் தான் நானும் சொல்லியிருக்கேன் .ரசிகன் என்பதற்கு என்ன அர்த்ததை ஏற்படுத்தி வச்சிருக்காங்க பாருங்க.

ஜோ/Joe said...

யோகன் பாரிஸ் ,டொன்லி ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

// ஒரு குறுஞ்சிரிப்பில் அதனைப் புறந்தள்ளி போகுமளவுக்கு ரசிகனாக உயர்ந்துள்ளேன்! :)//
வாழ்த்துகள் இளவஞ்சி! :)

ஜோ/Joe said...

வெ.இராதாகுருஷ்ணன் வாங்க! உங்கள் கருத்தும் நன்று.

TVR சார் ,நன்றி!

Anonymous said...

:)

ஜோ/Joe said...

//Ippodhu thaalattukalei illamal ponadhu pol, iyalbaai unarvugalai velipaduthaathu manasikkalukku mella tamilanum paliyaagi kondirukiraaan.//
:)

R.Gopi said...

ஜோ...

நல்ல பதிவு.... நானும் ரஜினி ரசிகன் தான்...

இங்கு என் நண்பர்கள் சிவாஜி படம் ரிலீஸின் போது, 1000 டிக்கெட்டுகள் வாங்கி, இங்கே (துபாயில்) வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இலவசமாக கொடுத்தார்கள்.. நான் கூட என் ஆபிஸில் என்னுடன் பணிபுரியும் 10 தொழிலாளர்களுக்கு அந்த இலவச டிக்கெட் வாங்கி கொடுத்தேன்... ஒரு டிக்கெட்டின் விலை திராம் 30.. இந்திய ரூபாயில் சுமார் 400...

ரஜினி பெயரை சொல்லி, பல நல்ல காரியங்கள் செய்கிறோம்... இதெல்லாம், யாருக்கும் தெரியாது... இல்லை... தெரிந்தாலும், கேட்கும் கேள்வி... அவரின் பெயரை சொல்லி ஏன் செய்கிறீர்கள்.?? ஏன் அவர் பெய‌ரை சொல்லி செய்ய‌க்கூடாது... ஆட்சியில் இருக்கும் பல‌‌ரின் பெய‌ரை சொல்லி நிறைய‌ அநியாய‌ம் செய்யும் ஊரில் இருக்கிறோம் (த‌மிழ்நாடுதான்!!)... அவ‌ர்க‌ளை ஏதாவ‌து கேட்டு இருக்கிறோமா?? ஆனால், ர‌ஜினி பெய‌ரை சொல்லி ந‌ல்ல‌வ‌ற்றை செய்தால் கூட‌ குற்ற‌மென‌ கேட்கிறார்க‌ளே?/ இதை எங்கே போய் சொல்ல‌....

நேர‌ம் இருக்க‌ற‌ப்போ, என் வ‌லைக‌ளுக்கும் வாருங்க‌ள்...

(www.jokkiri.blogspot.com & www.edakumadaku.blogspot.com)

நிகழ்காலத்தில்... said...

உங்களுக்கு நீங்க இரசிகரா :)))

சிந்தியுங்களேன்

வாழ்த்துக்கள்

ஜோ/Joe said...

//உங்களுக்கு நீங்க இரசிகரா :)))
சிந்தியுங்களேன் //
சிந்தித்தேன் .கண்டிப்பா எனக்கு நான் ரசிகன் தான்

dagalti said...

//(விசில் அடிக்க முயற்சி செய்தும் வரவில்லை ,அது வேறு விஷயம்)//

Ditto !

கடும் முயற்சி/பயிற்சிக்குப் பிறகும் "வெறும் காத்து தாங்க வருது" என்று தெரிந்தவுடனே 'கண்ணிய' ரசிகனாக இருந்துவிட முடிவு செய்துவிட்டேன்.

மத்தபடி நடிகர்-ரசிக உறவைப் பற்றி எனக்குப் பிடித்த கருத்து அண்ணன் சில்பா குமார் அருளியதே
நிருபர்:ரசிகர்களுக்கு என்ன கருத்து சொல்ல விரும்புறீங்க ?
GM: கருத்து...ம்ம் நான் இந்த வருஷம் பத்து படம் நடிச்சிருக்கேன்...அடுத்த வருஷம் பதினைஞ்சு படம் நடிக்கலாம்னு இருக்கேன். எல்லாத்தையும் பார்த்து தெளிவாயிடுங்க

Anonymous said...

எனக்கு தெரிந்த வரை, ரசிப்பது என்பது connoisseurship, அதற்க்கு விருப்பம் மட்டும் போராது, ஞானமும் இருக்கவேண்டும். எல்லோருக்கும் ஒரு பாட்டை சும்ம பிடிக்கலாம், ஆனால் ஒரு ரசிகன் அந்த பாட்டின் ராகம், தாளம், பொருள் இத்யாதி அறிந்து புரிந்து பிடிக்கும்.

நடிகர்களைப்பற்றிப் பேசினால், ரசிகன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் மாறுகிரது. ரசிகன் என்பவனுக்கு ஒரு naive desire for ecstatic experience, ஒரு தொண்டன் அவன் இஷ்டதேவத்தைப் பார்ப்பதுபோல். பித்து, வெறி என்று சொல்லலாம் ஆனால் நான் நினைக்கிறேன் இப்படி சினிமா "ரசிப்பது" ஒரு modern, secular version of bhakthi religion's emotional highs.

நான் எந்த நடிகரின் ரசிகனும் இல்லை என்று சொல்லுகிறேன், அதாவது அந்த analytical knowledge எனக்கு கிடையாது, அந்த desire for ecstatic immersement கிடையாது என்று சொல்லுகிறேன்.

(தப்புதப்பான தமிழில் எழுதுவதை மன்னித்துவிடுங்கள், தமிழில் எழுதுவதில் அவ்வளவு பழக்கம் இல்லை)

சிங்கக்குட்டி said...

அருமையான கருத்து ஜோ.

ரஜினி ரசிகனாக இருப்பதால் எந்த அவமானமும் வருத்தமும் இல்லை என்று சொல்லக்கூட தேவை இல்லை.

அவர் யாரையும் கெடுக்க வில்லை, ஒரு நல்ல நடிகராக அவர் சிறப்பாக செயல்படுவதை யார் எந்த கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை பொருத்து மாறு படுகிறது அவ்வளவு தான் :-)

நட்புடன் ஜமால் said...

நல்லதொரு பார்வை.

Sara Suresh said...

//ரசிகனாக இருக்கணும் என்றால் கொடிகட்டி, பாலாபிசேகம் செய்யவேண்டும் என்பதில்லை, //
நிறைய கருத்துக்கள் சரி தான் ஜோ.
ஆனால் அந்த குறிப்பிட்ட நடிகருக்காக வரிந்து கட்டி கொண்டு argue பண்ணுறது தான் தாங்கமுடியல.
ரசிகர் நடிகரின் நடிப்பை மட்டும் ரசித்தால், அது ஏற்றுகொள்ள கூடிய ஒன்று.
ஆனால் யாராவது ஒருவர் அந்த நடிகரை பற்றி comment பண்ணினால், சண்டை போடுவது எப்படி பெருமைபடத்தக்க விசயமாக இருக்கும்?
எனக்கு தெரிந்த உங்களை போன்ற ரசிகர் மன்றத்தில் இல்லாத நிறைய ரசிகர்கள், அந்த நடிகர் அரசியலுக்கு வந்தால் ஓட்டு போட போவதாக சொல்கிறார்கள்.

Sakthi said...

nice

பிச்சைப்பாத்திரம் said...

இப்போதுதான் இந்த இடுகையை வாசித்தேன். நானும் உங்கள் வலைப்பதிவின் 'ரசிகனாகி' விட்டேன். :-)

Anonymous said...

I also just read this.

கொஞ்சம் லாஜிக் உதைக்குது.

’நான் கமல் ரசிகன். ஆனால் ரஜினி படமும் பார்ப்பேன். கமலின் திறமை, கலைத்திறமை என்னை அவரின் ரசிகனாக்குகிறது’

ஜோ!

இங்கு மற்ற ரசிகர்கள் செய்வதைப்பற்றி நீங்களும் பலரும் எழுதிவிட்டார்கள். எனவே உங்களைப் போன்றோர், வந்தியத்தேவன் போன்றோர மட்டுமே come under my discussion.

ரசிகன் என்றால் என்ன? எனறதற்கு விளக்கம் கொடுத்து விட்டீர்கள்.
அஃதாவது,

ஒரு குறிப்பட்ட (for eg. kamal) நடிகரின் கலைத்திறமையை ரசிப்பதால், அவர் ரசிகர் நீங்கள். இல்லையா?

இங்கே கேள்விகள் எழுகிறது:

1. அவர் எப்போதுமே சிறப்பாக நடிப்பாரா? ரசிகன் என்றால் ஆம் என்ற பதில்தான் வரும்.

இல்லையென்றால் இந்த பதில் வரவேண்டும்:-

அவரின் குறிப்பிட்ட இந்தப்படத்திற்கு நான் ரசிகன். or only in the context of that film, I am his fan.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு நடிகன் பல் சொதப்பல் படங்களையும் கொடுப்பான்.

3. நம்பர் 1லும் ப்ராப்ளம் இருக்கு. Because, in a film, where you hero acted fantastically well, for e.g Nayakan by Kamal, you concluded that any other hero would not have done better than Kamal.

It is a false conclusion. We cant say that. There are two possibilities here:

1.if the same film had been given to another hero, he would have done better than Kamal.

2.another hero would have made a hash of the film. (Spoilt that film)

So, when there are two possibilities, you take the one convenient to you.

இது ஏன் நடக்கிறதென்றால், நீங்கள் அவரின் ‘ரசிகன்’ ஆகிவிட்டீர்கள்.

சுருக்கினால், உங்கள் சிந்தனை, மற்றும் உணர்ச்சி சுதந்திரத்தை அன்னடிகனே தீர்மானிக்கிறான்.

கமல் ரசிகன் என்றால், ரஜனி சிறப்பாக நடித்தாலும் அவர் ரசிகன் இல்லையென்றுதான் பொருள்.

இச்சிக்கலிருந்து விடுபடுவதெப்படி?

அந்தப்படத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். அப்படத்தைப் பொறுத்தவரை அவர் ரசிகன்.

இந்தப்படத்தில் இவர் (வேறொரு நடிகர்) சிறப்பாக. எனவே இந்தப்படத்தைப் பொறுத்தவரை, இர் ரசிகன்.

இந்த லாஜிக்கின்படி,

ஒரே நேரத்தில், ஒருவன் பல நடிகரகளுக்கு ரசிகன்.

இவனே, தன்னை பிறர் கையில் கொடுக்காதவன். தன் கருத்து, தன் முடிவுகள், தன் உணர்ச்சிகள் - இவற்றையெல்லாம் இவன் அடக்கி ஆளுகிறான்.

இவனே படித்தவன்.

ஜோ/Joe said...

ராயன் ,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

//1. அவர் எப்போதுமே சிறப்பாக நடிப்பாரா? ரசிகன் என்றால் ஆம் என்ற பதில்தான் வரும்.//
அது உங்கள் அனுமானம் .’ஆம்’ என்ற பதில் என்னிடம் வராது .அவர் எப்போதும் சிறப்பாக நடிப்பார் என சொல்ல முடியாது ..எல்லா கலைஞனுக்கும் எல்லைகள் உண்டு .ஒருவர் சிறந்து விளங்கும் கதாபாத்திர வகைகள் உண்டு .சிலர் சில வகை கதாபாத்திரங்களில் மற்றவரை விட சிறப்பாக செய்ய முடியும் .ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது யார் அதிகபட்ச கதாபாத்திர வகைகளில் நம்மை கவர்கிறார்கள் , அதுவும் எவ்வளவு ஆழமாக கவர்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் .இது மட்டுமல்ல , ஒருவரின் திறமையை மதிப்பிடும் போது அந்த காலகட்டம் ,அப்போது அவரின் அனுபவ வாய்ப்பு இவற்றையும் கருத்தில் கொண்டே மதிப்பிடுவது என் வழக்கம்.

//அவரின் குறிப்பிட்ட இந்தப்படத்திற்கு நான் ரசிகன். or only in the context of that film, I am his fan.//
நான் சிவாஜியின் தீவிர ரசிகன் என்றாலும் ,மிகச்சிறந்த 10 படங்களை நீங்கள் என்னை பட்டியலிடச் சொன்னால் அதில் இரண்டோ அல்லது மூன்றோ சிவாஜி படங்கள் தான் அதில் இடம் பெறும் ..ஒட்டுமொத்த படத்தை மதிப்பிடுவது வேறு ,அதில் ஒரு அங்கமான கலைஞனின் திறமையை மதிப்பிடுவது வேறு . ஒரு படத்தை மதிப்பிடுவது அதன் ஒட்டு மொத்த உள்ளடக்கத்தை கொண்டு ..ஆனால் ஒரு கலைஞனின் பங்களிப்பை மதிப்பிடுவதற்கு அந்த படம் சிறப்பாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை ..குறிப்பாக சிவாஜி-யை எடுத்துக்கொண்டால் இது பல முறை நிகழ்ந்திருக்கிறது .சிறப்பாக அமையாத படங்கள் பலவற்றில் அவர் நடிப்பு சோடை போனதில்லை.

//இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு நடிகன் பல் சொதப்பல் படங்களையும் கொடுப்பான்//
கண்டிப்பாக .அதை சொதப்பல் படம் என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை.

// நம்பர் 1லும் ப்ராப்ளம் இருக்கு. Because, in a film, where you hero acted fantastically well, for e.g Nayakan by Kamal, you concluded that any other hero would not have done better than Kamal.

It is a false conclusion. We cant say that. There are two possibilities here:

1.if the same film had been given to another hero, he would have done better than Kamal.

2.another hero would have made a hash of the film. (Spoilt that film)

So, when there are two possibilities, you take the one convenient to you.//

இது எதையுமே நான் சொல்லவில்லை ..நீங்களாகவே சொல்லிக்கொள்ளுகிறீர்கள் .

//இது ஏன் நடக்கிறதென்றால், நீங்கள் அவரின் ‘ரசிகன்’ ஆகிவிட்டீர்கள்.

சுருக்கினால், உங்கள் சிந்தனை, மற்றும் உணர்ச்சி சுதந்திரத்தை அன்னடிகனே தீர்மானிக்கிறான்.//

இல்லை ..இதுவும் உங்கள் அனுமானம் தான்.

//கமல் ரசிகன் என்றால், ரஜனி சிறப்பாக நடித்தாலும் அவர் ரசிகன் இல்லையென்றுதான் பொருள்//
ரஜினி சிறப்பாக நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும் .அந்த வகையில் நான் ஓரளவு ரஜினி ரசிகன் என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.

//ஒரே நேரத்தில், ஒருவன் பல நடிகரகளுக்கு ரசிகன்.//
யார் இல்லையென்று சொன்னது ? நான் பல நடிகர்களுக்கு ரசிகன் ..ஆர்வத்தின் அளவு மட்டுமே வேறுபடுகிறது .சிவாஜி ,கமல் ,எம்.ஆர்.ராதா ,நாகேஷ் ,ரஜினி ,எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் நான் ரசிகன் ..ஆர்வத்தின் அளவு நான் சொன்ன வரிசைப்படி.

//இவனே, தன்னை பிறர் கையில் கொடுக்காதவன். தன் கருத்து, தன் முடிவுகள், தன் உணர்ச்சிகள் - இவற்றையெல்லாம் இவன் அடக்கி ஆளுகிறான்//

ஏதோ போதைக்கு அடிமையாகி சீரழிந்து விட்ட ரேஞ்சுக்கு சொல்லுகிறீர்கள் ..அப்படி எந்த காரியங்களிலும் (அடிமைத்தனம் ) நான் இறங்கியதில்லை.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives