Sunday, May 13, 2007

'பெரியார்' திரைப்படம் - என் பார்வையில்

பெரியார் - இந்த பெயரைக் கேட்டதுமே பெரும்பான்மை இன்றைய இளைய தலைமுறையினரிடம் அவரைப் பற்றி அறியப்பட்டுள்ள சிந்தனை "பெரியார் ஒரு நாத்திக தலைவர் .கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவர் கேவலமாக திட்டுவார் .கடவுள் சிலைகளை போட்டு உடைத்தவர்" இவ்வளவு தான் .இதற்கு மேல் பெரியாரைப் பற்றி அவர்களுக்கு பெரிய அபிப்பிராயம் எதுவுமில்லை .இதற்கு காரணம் ,பெரியாரை ஒரு பரிமாணத்தில் குறுக்கி அதன் மூலம் சுய தேடல் இல்லாத ,வெகுஜன பிரச்சாரங்களை மீறி எதையும் தெரிந்து கொள்ள ஆர்வமில்லாத பெரும்பான்மை இளைய சமூகத்தினரிடையே பெரியார் பற்றிய குறுகிய பிம்பத்தை பதிய வைத்து விடலாம் என்று சிலர் மேற்கொண்ட முயற்சி என்று மட்டும் சொல்லிவிட முடியாது .மாறாக பெரியார் தொண்டர்கள் ,வழி வந்தவர்கள் கூட அவரின் ஒற்றைப்பரிமாணத்தை தாண்டி அவரை முன்னிறுத்த தவறியதும் காரணமே .பெரியார் வழி வந்த அரசுகள் மாவட்ட தலைநகர்களில் நிறுவிய நினைவுத்தூண்களிலும் சரி ,சிலைகளிலும் சரி பெரும்பாலும் பொறிக்கப்பட்ட வசனம் "கடவுளை நம்பியவன் முட்டாள் ...." என்ற வாசகம் தான் .இதைத் தாண்டி பெரியாரின் சமூக நீதிக்கருத்துக்கள் ,சாதி ஒழிப்பு கருத்துக்கள் ,பெண்ணிய சிந்தனைகள் பொறிக்கப்படுவதில்லை .பெரியாரின் பல முக்கிய பரிமாணங்கள் இளைய தலைமுறையினருக்கு சரியாக எடுத்துச்சொல்லப்படுவதில்லை.

அதிர்ஷ்ட வசமாக பெரியார் திரைப்படம் இந்த குறையை சற்று போக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நகரும் இந்த திரைப்படத்தின் முதல் ஒரு மணி நேரம் மிகச்சாதாரணமாக சொல்லப்பட்டிருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது .அடுத்த இரண்டு மணி நேரத்தில் படிப்படியாக சத்தியராஜின் உடலுக்குள் பெரியார் ஆவி புகுந்து கொண்டது போல கன கச்சிதமாக பெரியாரை நம் கண் முன் நிறுத்துகிறார் சத்தியராஜ்.

பெரியாரின் இளைமப்பருவத்திலிருந்து தொடங்கும் படத்தில் அவர் காசிக்கு செல்வதற்கு முன் வரை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இல்லை .வணிக ரீதியாக திணிக்கப்பட்டதாக சொல்ல முடியாத வகையில் இருந்தாலும் ,கேளிக்கை விடுதி நடனத்திற்காக வீணடிக்கப்பட்ட நேரத்தில் பெரியாரின் சிறு வயது வாழ்வில் தண்ணீர் குடிப்பதில் ஜாதிப்பாகுபாடு அவர் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை காண்பித்திருக்கலாம் .

முதல் மனைவியாக வரும் ஜோதிர்மாயி ,இரண்டாவது மனைவியாக வரும் குஷ்பு இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் .ராஜாஜியின் கதா பாத்திரம் தேவைக்கு அதிகமாகவே வருகிறது .அதே நேரத்தில் ராஜாஜியின் மறைவுக்கு சென்று பெரியார் அழுதது சேர்க்கப்படவில்லை.

இளையராஜா இசையமைத்திருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும் என்றாலும் கூட வித்தியாசாகர் எதிர்பார்த்ததை விட நன்றாக இசையமைத்திருந்தார் .வைரமுத்துவின் ஆழமான வரிகளின் அர்த்தம் சிதையாமலும் ,இசைக்குள் வார்த்தைகளை அமுக்கி விடாமலும் பாடல் வரிகளுக்கு கைதட்டல் கிடைக்கும் அளவுக்கு இசையை வழங்கியிருக்கிறார் .வைக்கம் போராட்ட காட்சியில் வரும் ஒரு பாடலில் தீண்டாமை குறித்து "அவர்கள் மட்டும் தானா விந்து-லிருந்து பிறந்தார்கள் .நாங்கள் என்ன எச்சிலிலுருந்தா பிறந்தோம் ' என்னும் பொருள் படும் வரிகள் கைதட்டலை அள்ளுகிறது.
தங்கர் பச்சானின் ஒளிப்பதிவும் ,அந்த கால பழைய காற்றாடி போன்றவற்றை நுணுக்கமாக பயன்படுத்திய கலை இயக்குநரும் நிறைவாக செய்திருக்கிறார்கள் .

சத்தியராஜ் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ... முதல் பாதியில் அதே சத்யராஜ் பாணி உச்சரிப்பை தவிர்த்திருக்கலாம் .இரண்டாவது பாதியில் சத்தியராஜ் சுத்தமாக மறைந்து பெரியார் நம்மை ஆட்கொள்ளுகிறார் .ஆட்சியமைக்கும் போது அண்ணாவின் விஜயம் மற்றும் இறுதிக்காட்சியில் சத்தியராஜ் பெரியாராகவே வாழ்ந்திருக்கிறார் .

95 வருட வாழ்க்கையை 3 மணி நேரத்தில் குறுக்கும் கடினமான பணி இயக்குநருக்கு .காந்தியாரோடு சந்திப்பு ,விதவை மறுமணம் ,தேவதாசி ஒழிப்பு, கள்ளுக்கடை மறியல் ,வைக்கம் போராட்டம் ,காங்கிரசில் ஜாதிப்பாகுபாடு ,காங்கிரசிலிருந்து வெளியேற்றம் ஆகியவை சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன.ஆனால் பின்னர் தி.க உதயம் ,இரண்டாம் திருமணம் ,திமுக தொடக்கம் ,பெருந்தலைவர் காமராஜர் சந்திப்பு ,திமுக ஆட்சி அமையும் போது அண்ணா சந்திப்பு ,கலைஞர் சந்திப்பு ,எம்.ஜி.ஆர் சந்திப்பு என்று துண்டு துண்டாக காட்சிகள் நகர்வதாக தோன்றுகிரது .விஷுவல் ரீதியாக இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது .

மிகவும் உடல்நிலை பாதிப்பட்ட போதிலும் ,சொன்ன தேதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ,தனது நெஞ்சில் தைத்திருக்கும் முள் பற்றி வேதனைப் பட்டு விட்டு உரையைத் தொடரும் போதே மயங்கி சாய்கிறார் பெரியார் .95 வயதிலும் தன் இறுதி மூச்சு வரையிலும் சுயமரியாதை ,ஒடுக்கப்பட்டோர் இழிவு நீக்கல் ,விழிப்புணர்வு -க்காக பாடுபட்ட மாபெரும் தலைவன் மறைகிறார் .பாரம்பரியத்தை மீறி கலைஞர் அரசு வழங்கிய அரசு மரியாதை இறுதி ஊர்வலத்தின் சில நிஜக் காட்சிகளோடு படம் முடிகிறது.

பெரியார் வாழ்க்கை என்பது 3 மணி நேரத்தில் விளக்கப்பட முடிகிற ஒன்றல்ல .இந்த பெரியார் படம் பெரியாரை ஏற்கனவே படித்தறிந்தவர்களுக்காகவோ,புரிந்து கொண்டவர்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல .மாறாக ,பெரியாரின் ஒரு பரிமாணத்தை மட்டுமே அறிந்த இன்றைய தலை முறை "ஆகா பெரியாருக்கு இத்தனை முகங்களா ? இத்தனைக் காலம் தெரியாமல் விட்டுவிட்டோமே" என்றுணர்ந்து அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் பயணத்தின் ஒரு நல்ல அறிமுகப் படலமாக இந்த படம் அமைந்திருக்கிறது .அந்த வகையில் இந்த படம் அதன் இலக்கை வென்றிருக்கிறது .

ஞானராஜசேகரனுக்கும் ,சத்திய ராஜ்-க்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!

13 comments:

ilavanji said...

// இந்த பெரியார் படம் பெரியாரை ஏற்கனவே படித்தறிந்தவர்களுக்காகவோ,புரிந்து கொண்டவர்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல .மாறாக ,பெரியாரின் ஒரு பரிமாணத்தை மட்டுமே அறிந்த இன்றைய தலை முறை "ஆகா பெரியாருக்கு இத்தனை முகங்களா ? இத்தனைக் காலம் தெரியாமல் விட்டுவிட்டோமே" என்றுணர்ந்து அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் பயணத்தின் ஒரு நல்ல அறிமுகப் படலமாக இந்த படம் அமைந்திருக்கிறது //

சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் ஜோ.

Anonymous said...

ஒரு கிறுக்கன் மதவெறியன் ஊரை விட்டு ஓடி போனவன் விமர்சனம் படு கேவலம்

கோவி.கண்ணன் said...

பெரியார் தரிசனம் உங்களுக்கும் கிடைத்துவிட்டதா ?

கொடுத்து வைத்தோம் ஐயா !

ஜோ/Joe said...

//விமர்சனம் படு கேவலம்//
நன்றி

//ஒரு கிறுக்கன் மதவெறியன் ஊரை விட்டு ஓடி போனவன்//
நல்ல தமாஷ்!

-L-L-D-a-s-u said...

//பெரியார் பற்றிய குறுகிய பிம்பத்தை பதிய வைத்து விடலாம் என்று சிலர் மேற்கொண்ட முயற்சி என்று மட்டும் சொல்லிவிட முடியாது .மாறாக பெரியார் தொண்டர்கள் ,வழி வந்தவர்கள் கூட அவரின் ஒற்றைப்பரிமாணத்தை தாண்டி அவரை முன்னிறுத்த தவறியதும் காரணமே
//

சரியாக சொல்லியுள்ளீர்கள்,

//ஒரு கிறுக்கன் மதவெறியன் ஊரை விட்டு ஓடி போனவன் //
அனானி யாரைச் சொல்கிறார், உங்களையா? பெரியாரையா? கேட்டுச்சொல்லவும் ;)

ஜோ/Joe said...

//அனானி யாரைச் சொல்கிறார், உங்களையா? பெரியாரையா? கேட்டுச்சொல்லவும் ;)//

:))
வேற ஒருத்தருக்கு கச்சிதமா பொருந்துது..நமக்கெதுக்கு வம்பு.

ஜோ/Joe said...

இளவஞ்சி ,கோவி.கண்ணன் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

G.Ragavan said...

நல்ல விமர்சனம். இந்தப் படத்தை இன்னமும் பார்க்கவில்லை. பெரியாரைப் பற்றித் தெரிந்தது மிகக் குறைவு. இந்தப் படம் எல்லாமும் சொல்லியிருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனாலும் விவரங்கள் நிறையத் தெரியவரும் என்று உங்கள் விமர்சனத்திலிருந்து தெரிகிறது.

சத்யராஜ் இதுவரை நடித்த குண்டக்கமண்டக்க கில்பான்ஸ் படங்களுக்கு இது ஒரு பிராயச்சித்தம். இந்தப் படத்தில் நடித்ததால் அவர் புண்ணியராக மாட்டார். அவர் ஒரு நடிகர். நன்றாக நடித்திருக்கிறார் என்று மட்டுமே கொள்ள வேண்டும். பெரியாராக நடித்ததால் அவர் பெரியார் அல்ல.

Anonymous said...

Padam pakalama?

Anonymous said...

thooooooooooooooooooool milton

Anonymous said...

பெரியாரின் பன்முகத்தையும் அடிப்படைக் கொள்கையான மனித நேயத்தையும் அறிமுகப் படுத்தும் ஒரு முயற்சிதான்.
சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.இளைய சமுதாயத்திற்கு மனோரமாக் காட்சிகள் புரியாமல் இருக்கலாம்.அது மாதிரி நிறைய தாய்மார்கள் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.பெரியாரின் தந்தை அப்படியே அவர் காலத்துப் பெரிய மனிதத் தன்மையென்றால் பார்ப்பனீயத்திற்கு அடிமையாக வாழ்வதுதான் என்று காண்பித்துள்ளார்.
ச்த்யராஜ் பெரியாரை நேரே பார்த்துப் பேசியுள்ள என் போன்றோருக்கேப் பெரியாராகத்தான் தோன்றுகிறாரே தவிர சத்யராஜாக அல்ல.மிக அருமை,
நான் பதவி,புகழுக்காக இல்லை,மனிதர்கள் அறிவும்,மான்மும் உள்ளவர்களாக வாழவேண்டும்.அதற்கு எத்தனை பெரிய தடை இருந்தாலும் உடைத்தெரிய பாடு படுவேன்.அதைச் செய்ய என்க்கு என்ன் தகுதி யென்றால் வேறு ஒருவரும் முன் வராததுதான் என்பதை ஆணித் தரமாகச் சொல்கிறார் பெரியார்.
அவரைப் பற்றித் தப்பெண்ணம் உள்ளவர்கள் படத்தைப் பார்த்தால் மேலும் அவரைப் பற்றி அறிந்து,புரிந்து கொள்ள ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் அனைவரும்.

Jazeela said...

உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது. நன்றி ஜோ.

பாரதி தம்பி said...

எளிமையான, சரியான விமர்சனம். ஈரோடு நகராட்சி தலைவராய் பெரியார் அமர்ந்திருக்கும்போது, அங்கு ஆட்டப்படும் அந்த காற்றாடி எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது.

பெரியாருக்கு வயதாவதுபோல ராஜாஜிக்கு வயதாவதில்லை என்றாலும் நம் மனதில் பதிந்திருக்கும் ராஜாஜி பிம்பத்தைத் தவிர வேறொருவரை காட்டினால் நிச்சயம் எடுபட்டிருக்காது என்பதால், அவ்வாறு ஒருவரையே பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் என்றும் எண்ண வேண்டியுள்ளது.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives