Tuesday, February 20, 2007

எல்லை மீறும் கன்னட அமைப்புக்கள்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அடுத்து அது முழுக்க முழுக்க தமிழகத்துக்கு சாதகமாகவும் கர்நாடகத்துக்கு எதிராகவும் அமைந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது .முதலில் அரைகுறையாக வெளிவந்த செய்திகளின்படி தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் என குறிக்கப்பட்ட அளவை ,தமிழ்கத்துக்கு கர்நாடகா கொடுக்க வேண்டிய அளவாக திரித்துக் கூறப்பட்டு கர்நாடகத்தில் கொந்தளிப்பு உருவாக்கப்பட்டது.

பின்னர் இப்போது தமிழகத்துக்கு கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவு இடைக்கால உத்தரவு படி கொடுக்க வேண்டிய அளவை விட குறைவு என்று தெளிவாக தெரிந்த பின்னரும் கர்நாடக அமைப்புக்கள் தங்கள் வேகத்தை குறைத்துக் கொள்ளுவதாக இல்லை. உணர்ச்சிகளை தூண்டி விட்டு இதனை மொழிப் பிரச்சனையாக வழக்கம் போல ஊதி பெரிதாக்கி வருகின்றன.

இந்தியாவிலேயே ஒரு மாநிலத்துகென்று தனிக்கொடி கர்நாடகாவில் தான் உள்ளது .17 வருடங்கள் விசாரணைக்குப் பின் அளிக்கப்பட்ட தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இல்லையென்றாலும் கூட தமிழர்கள் ,விவசாயிகள் இந்த வகையிலாவது நம் பங்கு கிடைத்ததே என்று நினைத்து எதிர்ப்புகள் ,ஆர்ப்பாட்டங்கள் உணர்வுகளை தூண்டி விடும் செயல்களை தவித்து வரும் நேரத்தில் கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகளும் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன.

பந்த் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது எதிர் பார்த்ததை விட வன்முறைகள் கட்டுக்குள் இருந்ததற்கு கர்நாடக மாநில அரசை பாராட்டியே ஆக வேண்டும் .அதே நேரத்தில் வழக்கம் போல தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. தமிழ் தொலைக்காட்சி இணைப்புகள் வழக்கம் போல துண்டிக்கப்பட்டன .தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது .தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டன .இது போதாதென்று சிலர் அத்துமீறி தமிழகத்துகுள்ளேயே நுழைந்து ஓசுரை கைப்பற்றப்போவதாக கோஷமிட்டுள்ளனர்.

இன்றைய தட்ஸ்தமிழ்.காம் செய்தியில் தமிழக எல்லையில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் ...

கர்நாடக கிறிஸ்துவ ஆலயயங்களில் தமிழ் பிராத்தனை ஜெபக்கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக கத்தோலிக்க கன்னட கிறிஸ்தவர்கள் சங்கம் கோரியுள்ளது .இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரபேல் கூறுகையியில் "பெங்களூர்,மைசூர்,மாண்டியா,கோலார் மாவட்டங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் தமிழில் பிராத்தனை நடத்துவதை நிறுத்த வேண்டும் .இந்த கூட்டங்களை புறக்கணிக்க வேண்டும் .கிறிஸ்தவ ஆலயங்களில் தமிழ் பிராத்தனைக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

இப்படி ஒரு கேவலமான சிந்தனை உள்ள ஒருவர் கத்தோலிக்க சங்கத்தின் (இது திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தால்) தலைவராக இருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது .இச்செய்தியின் பின்னூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது போல கன்னடரல்லாத இயேசு கிறிஸ்துவை இவர்கள் ஏன் கும்பிட வேண்டும் .இவரெல்லாம் ஒரு கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்வதே வெட்கக்கேடு.

காவிரி கர்நாடகாவில் பிறக்கிறது .எனவே கர்நாடகாவுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது .ஆனால் காவிரி முழுக்க முழுக்க கர்நாடகாவுக்கே சொந்தம் என்று ஊளையிடுவது இந்திய ஒருமைப்பாட்டிக்கே அவமானம் .இதை மத்திய அரசு வேட்டிக்கை பார்ப்பது வேதனையானது .சரி .அப்படியே சொல்லி விட்டுப் போகட்டும் .ஆனால் இருவருக்கும் பொதுவான நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்காக தமிழ் மேலும் தமிழர்கள் மேலும் இந்த கன்னட அமைப்புகள் காட்டும் வன்மத்திற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா ? தான் என்ன செய்தாலும் கர்நாடகத் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் என்ற எண்ணத்தில் தமிழக தமிழர்கள் எதிராக எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற கோழை மனப்பான்மையும் மிரட்டல் புத்தியுமே கன்னட அமைப்புகளின் இந்த காட்டுமிராண்டித் தனங்களுக்கு அடிப்படைக் காரணம்.

தமிழகத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இரு தலைக் கொள்ளி எறுப்புக்கள் .மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி தான் .தன்மானம் இல்லாதவர்கள் ,மொழியுணர்வு இல்லாதவர்கள் என்ற மற்ற சில தமிழர்கள் சொல்லும் பழிச்சொல் ஒரு பக்கம் ..மொழி வெறி பிடித்தவர்கள் என்ற மற்ற மாநிலத்தவரின் அரை வேக்காட்டு குற்றச்சாட்டு மறு பக்கம் .தமிழகத்தில் கூட இதைக் கண்டித்து சிறிது குரல் எழுப்பினாலும் மொழி வெறியனென்று திட்டி ,முதலில் நாம் இந்தியர் என்றெல்லாம் இலவச அறிவுரை வழங்கி தேச துரோகிகளாக சித்தரிக்கும் தமிழரிலே ஒரு கூட்டம் மறுபக்கம் .எப்படி இருப்பினும் இத்தனை தூண்டல்களுக்குப் பின்னரும் உணர்ச்சியை அடக்கிக்கொண்டு அறிவுபூர்வமாக நடந்து கொண்டிருக்கும் தமிழக தமிழர்கள் தங்கள் முதிர்ச்சியை தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறார்கள்.

கர்நாடகா-வினர் வெளிப்படையாக தனிக் கொடி வைத்திருக்கலாம் .தமிழர்களை அடிக்கலாம் .தமிழ் சார்ந்த அனைத்தையும் தடை செய்யலாம் .காவிரியில் எவனுக்கும் பங்கு கிடையாது என்று முழங்கலாம் .ஆனாலும் அவன் இந்தியன் .ஆனால் கார்கில் போரானாலும் சரி ,குஜராத் பூகம்பம் ஆனாலும் சரி இந்தியாவிலேயே அதிகமாக வாரிக்கொடுத்த தமிழன் தன் உரிமை பற்றி வாய் திறந்தாலோ உள்ளூரிலேயே தேச துரோகிப் பட்டம்.

வாழ்க இந்திய ஒருமைப்பாடு!

17 comments:

ஜோ/Joe said...

சோதனை

Anonymous said...

இந்த முறை பிரச்சினையின் போது 'வழக்கத்துக்கு' மாறாக சட்டம் ஒழுங்கு மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்தது...

காரணம் குமாரசாமி சன் ஆப் தேவகவுட.

எனக்கென்னவோ, இவரது திறமைக்கு கண்டிப்பாக இந்திய அரசியலில் நிரந்தர இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

தமிழ் சேனல்கள் சில இடங்களில் இப்போது தெரிகின்றன. ஆனால் எங்கள் ஏரியாவில் இன்னும் இல்லை.

ஏதோ ஆலயங்களில் தமிழ் கூடாதென்று...யாரோ....நான் போகாத இடமுங்க அது....

ஜோ/Joe said...

//எல்லை மீறும் கன்னட அமைப்புக்கள்
//
ஆமாம் செந்தழல் ரவி.அவர் பாராட்டுக்குரியவரே!

Anonymous said...

You have a point..I agree.

ஜடாயு said...

ஜோ,

நிலைமை சுமுகமாகத் தான் இருக்கிறது. ஆனால் எந்நேரமும் வெடிக்க வைக்கப் படக் கூடிய சாத்தியம் கொஞ்சம் உள்ளது.

// இந்தியாவிலேயே ஒரு மாநிலத்துகென்று தனிக்கொடி கர்நாடகாவில் தான் உள்ளது //

அந்த மஞ்சள்-இளஞ்சிவப்பு கொடி அரசால் அங்கீகரிக்கப் பட்டது அல்ல. ஆனாலும், ராஜ்குமார் ரசிகர்கள் தயவில் மிகப் பிரபலம் அடைந்து இப்போது எல்லாக் கொடிகளையும் விட அதிகமாக கர்நாடகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இது தவறான முன் உதாரணம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்தக் கொடி இப்போது ரொம்பவே ஊடுருவி விட்டது. எடுப்பது கடினம்.

// கர்நாடக கிறிஸ்துவ ஆலயயங்களில் தமிழ் பிராத்தனை ஜெபக்கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக கத்தோலிக்க கன்னட கிறிஸ்தவர்கள் சங்கம் கோரியுள்ளது //

இது மிகவும் கண்டனத்திற்கு உரியது. பல முக்கிய கன்னட வீரசைவ மடாதிபதிகள் காவிரிப் போராட்டத்தில் நேரடியாக குதித்துள்ளதால் போட்டிக்கு செய்யப்படும் விஷயம் என்றும் கருத வாய்ப்புள்ளது.

// தான் என்ன செய்தாலும் கர்நாடகத் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் என்ற எண்ணத்தில் தமிழக தமிழர்கள் எதிராக எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற கோழை மனப்பான்மையும் மிரட்டல் புத்தியுமே //

இது தவறு. இப்போது இந்தக் கருத்து கர்நாடகாவில் இல்லை. ஒன்று தெரியுமா? பெங்களூர் தமிழ்ச் சங்கம், கோலார், சாமராஜ் நகர், மைசூர் தமிழ் அமைப்புகள் எல்லாம் காவிரி தீர்ப்பை எதிர்த்து அறிக்கை விட்டு, கன்னட இயக்கங்களுடன் கை கோர்த்து தங்கள் மீது வரவிருந்த தாக்குதல்களை pre-empt செய்துகொண்டு விட்டன! "இந்த தீர்ப்பினால் கர்நாடகத்தில் வாழும் நாங்களும் தானே பாதிக்கப் படுகிறோம்" என்று செமத்தியாக ஒரு நடைமுறை தத்துவத்தையும் எடுத்து விட்டு விட்டனர்!

// உணர்ச்சிகளை தூண்டி விட்டு இதனை மொழிப் பிரச்சனையாக வழக்கம் போல ஊதி பெரிதாக்கி வருகின்றன. //

இப்போது இப்படி இல்லை என்று உறுதியாக சொல்லுவேன். கோபம் முழுக்க தமிழக அரசியல்வாதிகள் மீது தான் உள்ளது, கர்னாடக தமிழர்கள் மீது அல்ல.

// ஆனால் கார்கில் போரானாலும் சரி ,குஜராத் பூகம்பம் ஆனாலும் சரி இந்தியாவிலேயே அதிகமாக வாரிக்கொடுத்த தமிழன் தன் உரிமை பற்றி வாய் திறந்தாலோ உள்ளூரிலேயே தேச துரோகிப் பட்டம். //

இப்படி யாரும் சொல்லவில்லை. பொறுப்பற்று நீங்கள் எழுதியிருப்பதாக நினைக்கிறேன். இந்திய தேசியம் என்ற வலிமையான அமைப்பினால் தான் 17 வருடம் கழித்தும் தமிழகம் தன் உரிமைகளை வாதாடி வென்றுள்ளது. அந்த நோக்கில் இதைப் பாருங்களேன்!

// வாழ்க இந்திய ஒருமைப்பாடு! //

வாழ்க இந்திய ஒருமைப்பாடு!

Thangamani said...

ஜோ, தங்களுக்கென்று கொடி வைத்துக்கொள்வது, தங்களது தேசிய இன அடையாளங்களைப் பேணுவதும் கர்நாடகத்தின் உரிமை. நதிநீர்ப்பகிர்வு என்பது வேறு விதயம். நீங்கள் சொல்லியபடி கர்நாடகம் இரண்டையும் குழப்புவது என்பதும் வேறு. 17 வருடங்களுக்குப் பின்னும் இன்னும் நீதி கிடைக்காத அரசியல் சூழலில் இப்பிரச்சனை உண்மையில் நதிநீர் பிரச்சனை மட்டும் தானா என்பதைப் பார்க்கத் தவறினால் இன்னும் இதே போன்ற அனுபவங்களை, இழப்புகளைத் தமிழகம் சந்திக்க நேரிடும். முல்லைப் பெரியார் அணைக்கட்டு விவகாரத்திலும், கேரளாவில் உற்பத்தியாகி தென் தமிழகத்தை வளமாக்கிக் கொண்டிருந்த ஆறுகள் விதயத்திலும் ஏற்கனவே நமது அணுகுமுறை (இந்த போலி தேசியவாதிகள் காட்டிய வழியில்) நமக்கு பாதகமான விளைவுகளையே தரத்துவங்கி உள்ளது; இதைச் சட்டத்தின் அடிப்படையில் அணுகக்கூட மைய அரசுக்கு நேர்மையும், தைரியமும் இல்லை. இந்நிலையில் எலிக்கறி சாப்பிடும் விவசாயிகளின் குரல்தான் கவனிக்கப்பட வேண்டும். அதற்கு முதலில் 'நோய்நாடி' என்பது போல இப்பிரச்சனையின் உண்மையான காரணத்தை அணுகி சரியான நிலைப்பாட்டை தமிழகம் அரசியல் தளங்களில் எடுக்கவேண்டும்.

ஜோ/Joe said...

ஜடாயு,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
//கோபம் முழுக்க தமிழக அரசியல்வாதிகள் மீது தான் உள்ளது//
ஏன்? சற்று விளக்க முடியுமா?

//இப்படி யாரும் சொல்லவில்லை.//
நீங்கள் இல்லாமலிருக்கலாம் .மகிழ்ச்சி.ஆனால் யாரும் சொல்லவில்லை என்பதை ஏற்க முடியவில்லை.

//பொறுப்பற்று நீங்கள் எழுதியிருப்பதாக நினைக்கிறேன். இந்திய தேசியம் என்ற வலிமையான அமைப்பினால் தான் 17 வருடம் கழித்தும் தமிழகம் தன் உரிமைகளை வாதாடி வென்றுள்ளது. அந்த நோக்கில் இதைப் பாருங்களேன்! //
பார்த்தீர்களா! இவ்வளவு சொன்னதற்கே என்னை இந்திய தேசியத்துக்கு எதிரான தேச துரோகி போல நிறுவ முனைகிறீர்கள் .இதைத் தான் நானும் சொன்னேன்.

//வாழ்க இந்திய ஒருமைப்பாடு!//
வாழ்க-ன்னு தான் நான் மனமாற நினைக்கிறேன் .ஒழிக என்று சிலர் செயலில் காட்டிக் கொண்டிருக்கிறார்களே!

Anonymous said...

//இந்திய தேசியம் என்ற வலிமையான அமைப்பினால் தான் 17 வருடம் கழித்தும் தமிழகம் தன் உரிமைகளை வாதாடி வென்றுள்ளது. அந்த நோக்கில் இதைப் பாருங்களேன்! //

உரிமை என்று பேப்பரில் எழுதி வைத்து விவசாயம்
பண்ண முடியாது.

ஜோ/Joe said...

தங்கமணி,
//தங்களுக்கென்று கொடி வைத்துக்கொள்வது, தங்களது தேசிய இன அடையாளங்களைப் பேணுவதும் கர்நாடகத்தின் உரிமை.//

கண்டிப்பாக .நானும் ஒத்துக்கொள்ளுகிறேன் .வருகைக்கும் மற்ற கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

Anonymous said...

கன்னடர்களில் வெகு சிலரே இப்படி நடந்து கொள்கிறார்கள்.

Anonymous said...

//இச்செய்தியின் பின்னூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது போல கன்னடரல்லாத இயேசு கிறிஸ்துவை இவர்கள் ஏன் கும்பிட வேண்டும் .இவரெல்லாம் ஒரு கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்வதே வெட்கக்கேடு.//

திராவிடரல்லாதா இயேசுவை நீங்கள் கும்பிடும்போது கன்னடர்கள் கும்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது.

இயேசு ஆரியரா? திராவிடரா?

போட்டுத்தாக்கு.....

ஜோ/Joe said...

அனானி,
பதிலளிக்க தகுதியில்லாத அபத்தமான உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்தற்கு காரணம் ,உங்கள் புரிதலின் லட்சணத்தை மற்றவர் அறிந்து கொள்ள மட்டுமே.

ஜடாயு said...

//
//கோபம் முழுக்க தமிழக அரசியல்வாதிகள் மீது தான் உள்ளது//
ஏன்? சற்று விளக்க முடியுமா?
//

ஏனென்றால்

அ) கன்னட மக்கள் தங்கள் அரசியல்வாதிகளுக்கு சாதுரியம் போதாது என்று நினைக்கிறார்கள் (இதை என் பதிவிலும் சொல்லியிருந்தேன்)

ஆ) இப்போது மத்தியில் திமுக பங்கு பெறும் காங்கிரஸ் அரசு, கர்னாடகாவில் எதிர்க்கட்சியான பாஜக் கூட்டணி. அதனால் இந்த தீர்ப்பில் மத்தியக் கூட்டணியின் அரசியல் தூண்டுதல் உள்ளது என்று நினைக்கிறார்கள்

இ) "தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் மாநிலக் கட்சிகள், அதனால் தேசிய அளவில் அவை முழுக்க-முழுக்க மாநிலச் சார்பாகவே நடந்து கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ்-பாஜகவால் அப்படி முடியாது.. அதுவும் ஒரு காரணம்" என்றும் கருதுகிறார்கள். கர்னாடகத்திலும் வலிமையான பிராந்தியக் கட்சியை நாம் வளர்க்க வேண்டும் என்றும் கன்னட மக்கள் பலர் கூறி வருகிறார்கள்.

தமிழகத்தில் பிராந்தியக் கட்சிகளின் ஏகாதிபத்தியம் குறைந்து காங்கிரஸ்,பாஜக பங்கு அதிகமாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஜோ/Joe said...

ஜடாயு,
உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி .கர்நாடக மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடிகிறது .இவை பொதுவாக மக்களின் மனநிலையாக நீங்கள் குறிப்பிடுவதாக நம்புகிறேன் .அவ்வாறெனில் அவர்கள் அவ்வாறு நினைப்பதில் நியாயமுண்டு .ஆனால் இதற்கும் தமிழ் சானல்களை நிறுத்துவது ,தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை நிறுத்துவது ,தமிழ் பெயர் பலகைகளை அழிப்பது ,அத்து மீறி தமிழக எல்லையில் நுழைந்து வம்புக்கு இழுப்பது என்பதெற்கெல்லாம் என்ன சம்பந்தம் ?

இந்த பதிவு கூட பொதுவாக கன்னடர்களைப் பற்றி நான் எழுதவில்லை .சில கன்னட அமைப்புகளைப் பற்றியே.

Appaavi said...

//கோபம் முழுக்க தமிழக அரசியல்வாதிகள் மீது தான் உள்ளது, கர்னாடக தமிழர்கள் மீது அல்ல.//

கர்னாடக தமிழர்களை தாக்கி அதில் குளிர் காய பல "பொடி" அமைப்புகள் தயாராக உள்ளன.

G.Ragavan said...

இங்கே நாளொரு போராட்டம்னு பேப்பர்ல படிக்கிறோமே. பொதுவாவே கர்நாடக அரசியல்வாதிகள் சரியில்லைன்னு (வீட்டுக்கு வீடு வாசப்படி) இவங்களுக்கு நெனைப்பு. எனக்குத் தெரிஞ்சி கிருஷ்ணாவுக்கு அப்புறம் கொஞ்சம் பிரச்சனை பெரிசாகாம பாத்துக்கிட்டதுல குமாரசாமியையும் பாராட்டித்தான் ஆகனும். இந்நேரம் வேறொரு ஆளா இருந்தா அவ்வளவுதான். பங்காரப்பா மாதிரி ஆளுங்க இருந்திருந்தா...கேக்கவே வேண்டாம்.

பிரச்சனை மதப் பிரச்சனை. இது கிருத்துவ மதத்துகுள்ள பிரச்சனை. தவறுன்னுதான் எனக்குப் படுது.

ஜோ/Joe said...

ராகவன்,
உங்க வழக்கமான நிதான நடையிலிருந்து மாறி கொஞ்ச கோபமா எழுதியிருக்கிற மாதிரி தோணுது..ஏன்?

குமாரசாமியையும் மாநில அரசையும் நான் பாராட்டியே எழுதியிருக்கிறேன் .இங்கே அரசியல் வாதிகளைப் பற்றி கூட எழுதல்ல .சில கன்னட அமைப்புகளைப் பற்றி தான் எழுதியிருக்கேன் .

அப்புறம் நான் ஹைலைட் பற்றிய பிரச்சனை பிரச்சனைகளில் ஒன்று .அது மட்டுமே நான் சொல்ல முற்பட்ட பிரச்சனை அல்ல.என் கண்டனத்தை தெரிவிக்கவே அதை ஹைலைட் செய்தேன்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives