கமல்ஹாசன் .தனித்து நிற்கும் கலைஞன் .தான் சார்ந்திருக்கும் துறை மூலம் தன்னை வளர்த்திக்கொள்ளும் போதே அந்த துறையையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல துடிக்கும் துடிப்பு மிக்க 50 வயது இளைஞன் .தமிழகத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது என்று கூட அறியாமல் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நடிகர்களுக்கு மத்தியில் அரசியல் பற்றி தெளிவான சிந்தனைகளும் ,எந்த பிரச்சனையிலும் தனக்கென்று ஒரு நிலைப்பாடும் கொண்ட அறிவாளி .
15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ரசிகர்களுக்காக 'மய்யம் ' என்னும் இதழை நடத்தி வந்த போது ,1990-ல் ரசிகர்களுக்கு கமல் தீட்டிய ஒரு தலையங்கம் இதோ...
----------------------------------------------------------------------------------------------
வெளிநாடு சென்று புளங்காகிதத்துடன் வீடு திரும்பும் வேளையில் ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரை நடக்கும் பயணத்தில் பாதையிலிருக்கும் குழிகளில் கார் விழுந்து எழும் பொழுது நமது நாட்டை நிந்தனை செய்யும் பழக்கம் யதார்தமாக எல்லோருக்கும் வருவதுண்டு
முதல் குழியில் விழுந்ததும்-
"பாருய்யா ...இது தான் நம்ம நாடு.ஜெர்மனியைப் பார்...ஐந்து கார்கள் ஒரே திசையில் அழகாய் போகக் கூடிய அகலமான பாதைகளை அங்கே ஹிட்லர் காலத்திலேயே அமைத்து விட்டார்கள் .இன்னும் மாட்டு வண்டிகளை ஓட்டிக்கொண்டிருக்கிறோம் நாம்.
அமெரிக்காவில் நினைத்த இடத்தில் சுவரொட்டிகளை ஒட்ட முடியாது தெரியுமா? இங்கே பார் தெருவுக்கு தெரு சுவரொட்டி .அதை பசுமாடு இழுத்து தின்னுகிறது.
அந்த ஊரில் மாடையெல்லாம் ஊரை விட்டே ஒதுக்கி கட்டி வைத்திருக்கிறார்கள் .இங்கே மனிதர்களுக்கே ரோட்டை கடக்க தெரியவில்லை என்றெல்லாம் விமர்சிப்பர் .இந்த விமர்சனம் நானும் செய்து கொண்டிருந்தேன் போன வருடம் வரை.
இந்த வருடம் அமெரிக்கா சென்று ,அவர்களுடம் நெருங்கிப் பழகவும் ,அவர்களின் சில சினிமாத் தொழில் நுட்பத்தைச் சற்றே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த பொழுது -நான் என்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன் . நான் என்ன செய்து விட்டேன் நாடு மேம்பட ? குண்டும் குழியுமாக இருப்பதில் என் பங்கு என்ன இருக்கிறது?
கூவத்தின் நாற்றம் என் மூக்கைத் துளைப்பதை மட்டும் தான் குறையாய் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் எனது வீட்டுச் சாக்கடை கலப்பதும் அந்த கூவத்தில்தானே என்று நான் யோசிக்க மறந்தது ஏன்?
எனது நறகலும் கலந்து வரும் மணம்தானே அந்த கூவத்தில் மணம் என்பதை யோசித்துப் பார்த்தேன். அரசியல்வாதி அள்ளிக் கொண்டு போன பணத்தை சுவிஸ்ட்சர்லாந்தில் வைத்திருக்கிறான் என்று கோபமாய் கூக்குரல் செய்யும் எதிர்கட்சித் தலைவர்களுடன் நானும் சேர்ந்து கூக்குரல் செய்யலாம் .ஆனால் அந்த பணத்தில் என்னுடைய ஒரு பைசாவுல் இருக்கிறது. அவனுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சத்தில் எங்கோ என்னுடைய பைசாவும் கலந்திருக்கிறதே என்று நான் யோசித்துப் பார்க்கையில்..இத்தனை வீழ்ச்சியின் காரணத்தில் எனக்கும் ஒரு கணிசமான பங்கிருக்கிறது என்பதை உணர்ந்து வாய்ப் பேச்சு அடங்கி விடுகிறது.
சற்றே குற்றவுணர்வு என்னைத் தாக்கி என் தொழிலில் நான் என்ன செய்தேன் என்று என்னையே நான் விமர்சித்துப் பார்த்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு என்னை ஆளாக்குகிறது..
அப்படி விமர்சித்துப் பார்த்த பொழுது 'செய்ததெல்லாம் போதாது' என்னும் சபையடக்கமான சொல்லை விட அதிகமான சில விஷயங்கள் புரிகிறது .வலிக்கிறது.
"என்னுடைய தொழிலில் நான் என்ன செய்து விட்டேன்?"
" 'அப்பு' செய்தீர்களே ..'நாயகன்' செய்தீர்களே.. " 'மூன்றாம் பிறை' செய்யவில்லையா ?
இரண்டு முறை ஜனாதிபதி பரிசு வாங்கவில்லையா ? என்றெல்லாம் என்னுடைய நண்பர்களும் ,எனது ரசிகர்களும் என்னுடைய சோர்விலிருந்து என்னை ஆசுவாசப்படுத்த நினைப்பவர்களும் சொல்லுவார்கள்.
ஆனால் யோசித்துப்பார்த்தால் - இந்தியா..இந்தியாவின் முதுகைத் தட்டிக்கொள்வது போதாது.கமல்ஹாசன் ,கமல்ஹாசனின் முதுகைத் தட்டிக் கொள்வது போதாது.
நாம் உலகத்துடம் தொடர்பு கொள்ளும் நாடாக வேண்டும் .எனது சினிமா உலகத்திற்கு புரிய வேண்டும். எனது குரல் உலகத்துக்கு கேட்க வேண்டும்.
அப்படி செய்ய முடியுமாயின் -அமெரிக்காவை விட அழகாக..ஜெர்மனியை விட அகலமான பாதைகளை நாம் செய்ய முடியும்.
இதற்கு நாமென்ன செய்ய வேண்டும்?
"நீங்கள் சினிமா நடிகர். காரில் வசதியாய் போய்க் கொண்டிருக்கிறீர்கள் .நீங்கள் நினைத்தால் செய்ய முடியும் .நானென்ன செய்ய முடியும் ?" என்று ஒரு ரிக் ஷா தொழிலாளி கேட்பானாயின் - செய்ய முடியும்.
கமல்ஹாசன் தனது தொழிலை உலக ரீதியில் பரப்ப முடியுமென்றால் ,ரிக் ஷாகாரரும் தன்னுடைய ரிக் ஷா தொழிலை உலக ரீதியாக்க முடியும்.
உலகத்து டூர்ஸ்டு மேப்பில் அழகான ரிக் ஷாக்கள் இந்தியாவில் தான் இருக்கிறது என்று சொல்ல வைக்க முடியும்.
நாணயமான ரிக் ஷாக்காரர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்று சொல்ல வைக்க முடியும்.
"வேர்க்கடலை விற்கிறேன் .நானென்ன செய்ய முடியும் ?" என்று கேட்டால் .."முதலில் வேர்க்கடலைத் தோலை அள்ளி குப்பையில் போடு .உன் நாட்டை நீ அழகாக்கி விட்டாய் .
இந்த அளவில் ஒவ்வொருவரும் செய்ய முடியும் என்பதை நான் உணர்கிறேன். நான் உபதேசம் செய்வது உனக்கல்ல -எனக்கே!
இதை நான் பேசிப்பார்த்துக் கொள்வதன் மூலம் -இதை நான் எழுதிப் பார்த்துக் கொள்வதின் மூலம் உண்மைகள் எனக்கு தெளிவாய்ப் புரிகிறது .அவ்வளவே!
இதை நான் உனக்கு எழுதினேன் என்பதை விட எனக்கு நானே எழுதிக் கொண்ட கடிதம்.
பொங்கல் வாழ்த்துக்களுடன்..அன்பன் ..கமல்ஹாசன்.
Tuesday, May 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
நல்ல பதிவு..ஜோ!
நல்ல கட்டுரை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
கமல்ஹாசன் தனது தொழிலை உலக ரீதியில் பரப்ப முடியுமென்றால் ,ரிக் ஷாகாரரும் தன்னுடைய ரிக் ஷா தொழிலை உலக ரீதியாக்க முடியும்.
உலகத்து டூர்ஸ்டு மேப்பில் அழகான ரிக் ஷாக்கள் இந்தியாவில் தான் இருக்கிறது என்று சொல்ல வைக்க முடியும்.
நாணயமான ரிக் ஷாக்காரர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்று சொல்ல வைக்க முடியும்.
"வேர்க்கடலை விற்கிறேன் .நானென்ன செய்ய முடியும் ?" என்று கேட்டால் .."முதலில் வேர்க்கடலைத் தோலை அள்ளி குப்பையில் போடு .உன் நாட்டை நீ அழகாக்கி விட்டாய் .
"கூவத்தின் நாற்றம் என் மூக்கைத் துளைப்பதை மட்டும் தான் குறையாய் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் எனது வீட்டுச் சாக்கடை கலப்பதும் அந்த கூவத்தில்தானே என்று நான் யோசிக்க மறந்தது ஏன்?"
///கமல் நடிப்பில் மட்டுமல்ல.
சிந்தனையிலும் சிறந்தவர்தான்.///
அன்புடன்,
துபாய் ராஜா.
Jai Hind :)
நல்ல ஒரு 'மண்டைக்காரர்'!
கமலின் சிந்தனையை பாராட்டுகிறேன். ஆனால் அதை நீங்கள் கமலை தூக்கி வைத்துக் கொண்டு பாராட்டுவது சற்று ஓவராக இருக்கிறது.
கமல் ஒரு சிறந்த சினிமா கலைஞன் என்பதுடன் நிறுத்திக் கொள்வது உசிதம். அவரை சமூக சிந்தனையாளராக எல்லாம் நிறுவமுயலாதீர்கள்.
பாலபாரதி,பெருவிஜயன்,துபாய் ராஜா,தருமி ,Dev..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ராஜ்குமார்,
என்ன இவ்வளவு கோபம் ? கமலை சிந்தனையாளர் என்று நான் சொல்லவில்லை .நீங்கள் தான் கமலின் சிந்தனையை பாராட்டுகிறேன் என்று சொல்லி விட்டு நீங்களாகவே ஏதேதோ சொல்லுகிறீர்கள்.
கமல் பற்றி தொடக்கத்தில் நான் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் மறுக்க முடியுமா?
திசை திருப்புதல் வேண்டாமே?
பதிவு நல்லாருக்கு ஜோ.
ஜோ,
கமல், இவ்வாறு வெவ்வேறு காலகட்டங்களில் வெளிப்படுத்திய சிந்தனைகளின் தொகுப்பு "தேடித்தீர்ப்போம் வா" என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. நீங்கள் பதிப்பித்துள்ள மய்யம் தலையங்கமும் அப்புத்தகத்திலுள்ளது. நன்றி.
>>>> அரசியல் பற்றித் தெளிவான சிந்தனைகளும் ,எந்தப் பிரச்சனையிலும் தனக்கென்று ஒரு நிலைப்பாடும் கொண்ட அறிவாளி .<<<
அவருடைய சிந்தனைகள் அவர் ஒரு பிழைக்கத் தெரிந்த மனிதர் என்பதை தெளிவாகவே காட்டுகின்றன.
தமிழக அரசியல்வாதிகளிடமிருந்து தப்பிக்க தமிழக அரசியலில் பலமுள்ளதாகவிருக்கும் திராவிடக் குழப்பங்களுக்கு (கொள்கைகளுக்கு) ஆதரவு அளிப்பவர். சமுதாயத்தில் பலமுள்ள தேவர் ஜாதியினரை உயர்த்திப் பிடிக்கும் சிந்தனைத் தெளிவும் அவரிடம் உண்டு. இங்கனம் அரசியலிலும், சமுதாயத்திலும் பலமுள்ளவர்களை ஆதரிப்பதன் மூலம் அவர் சிந்தனைத் தெளிவு கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறார். அவர் அறிவாளி என்பதில் சந்தேகம் இல்லை. இந்த அறிவாளித்தனம் தவறானதுமில்லை. பிழைப்பு, வாழ்க்கையின் சந்தோஷங்கள்.
அவர் ஒரு நல்ல நடிகர். திரையிலும், நிஜத்திலும்.
muse,
கருத்துக்களுக்கு நன்றி!
கமல்ஹாசனின் நிலைப்பாடுகள் சரியானதா தவறானதா என்பது பற்றி விவாதம் கருத்து வேறுபாடுகள் இருக்காலாம் .ஆனால் சமுதாயம் பற்றி மேம்போக்கான அறிவையே பெற்றிருக்கும் பெரும்பாலான கலைஞர்களைப் போலன்றி ,ஓரளவு சமுதாய அறிவும் ,சரியோ தவறோ தனக்கென ஒரு நிலைப்பாடும் கொண்டவர் கமல் என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
தேடித்தீர்ப்போம் வா" என்ற புத்தகம்
இப்பொழுது எந்த கடையில் கிடைக்கிறது
thangavel, plz tell me
my id is sandiyar_k@yahoo.co.in
//தேடித்தீர்ப்போம் வா" என்ற புத்தகம்
இப்பொழுது எந்த கடையில் கிடைக்கிறது//
அன்புள்ள சண்டியருக்கு,
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு அப்புத்தகத்தை, அதை வெளியிட்ட பதிப்பகத்தில் (தி. நகரில் இருந்தது) வாங்கியதாக ஞாபகம். பதிப்பகம் பெயர் தெரியவில்லை. ஆனால் பிரபலமானதில்லை. அப்புத்தகமும் இப்போது என்னிடமில்லை.
>>>> ஓரளவு சமுதாய அறிவும் ,சரியோ தவறோ தனக்கென ஒரு நிலைப்பாடும் கொண்டவர் கமல் என்பதை ஒப்புக்கொள்வீர்கள் <<<<
கண்டிப்பாக ஒத்துக்கொள்ளுகிறேன். அவர் திராவிட, கம்யூனிஸ பலங்களுக்குத் தணிந்து போவதையும் நான் தவறென்று கருதவில்லை. அதை புத்திசாலித்தனமாகவே கருதுகிறேன். ஆனால் அவர் தன் தனிமனிதத் தேவைகளை சமுதாயத்தின் மேல் புகுத்த முற்படுவாரேயானல் அது தவறாகவிருக்கும்.
அதுவுமன்றி, அவர் பிரதிபலிக்கும் சிந்தனைத் தெளிவு பலமுள்ள கருத்தியல்களில் உள்ள நல்ல விஷயங்கள் என்பது கவனிக்கத்தக்கதும், பாராட்டத்தக்கதுமான ஒன்று.
செல்வன்,தங்கவேல் ,சண்டியர்..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
Muse,மீண்டுமொருமுறை உங்கள் கருத்துக்கு நன்றி!
தன் முதுகில் தானே சவாரி செய்து வெற்றி கொண்டவர்! உலக பார்வையில் உள்ளூரில் வளம் காண விழைபவர்.எண்ணங்களால் உயர்ந்தவர் கமல்!
இணைய கமல் ரசிகர்மன்றத்தலைவர் ஜோ வாழ்க!!!
நல்ல பதிவு ஜோ.
மிகவும் அருமையான பதிவு ஜோ.
ஒவ்வொருவரும் அவரவர் வேலையை முறையாகச் சரியாக செய்து பொறுப்புடன் நடந்து கொண்டால் போதும். அதைத்தான் கமல் சொல்லியிருக்கிறார். நல்லதைத்தான் சொல்லியிருக்கிறார்.
எந்த முட்டாப் பயலும் சமூகத்தைப் பற்றி என்ன வேணா எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் மேடையிலோ சபையிலோ உளறலாம். அதெல்லாம் பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம். ஆனால் ஒரு நடிகரோ நடிகையோ சமூக அவலங்களைப் பற்றி ஏதாவது சொல்லிவிட்டால் போச்சு. "அதெப்படி சொல்லலாம்" "நடிகர்களுக்கும் சமூகத்திற்கும் என்ன சம்பந்தம்?"
"அவர் தூங்கும்போது கனவில்கூட நடிப்பவர்" "எல்லாம் சுயநலம்" "சொந்த வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்ளும் உத்தி" என்று எகிறிக் குதித்துக் கிளம்புவதற்காக ஒரு கூட்டம் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது.
என்ன விஷயம்னு பாக்காம யாரு சொன்னாங்கறதை மட்டும் எப்பவும் பாத்துக்கிட்டிருக்கிற இன்றைய சூழ்நிலையில் இம்மாதிரிப் பதிவுகளுக்கு எம்மாதிரிப் பின்னூட்டம் வரும் என்பதை முன்கூட்டியே ஊகிக்க முடிகிறது.
தப்பு செய்து விட்டீர்கள் ஜோ. நீங்கள் வெறும் கட்டுரையை மட்டும் - கமல், மய்யம், ரசிகர்கள் இவற்றையெல்லாம் எடுத்துவிட்டுப்- போட்டிருக்க வேண்டும் - அப்போது வரும் பின்னூட்டங்களே வேறு மாதிரி இருந்திருக்கும்! விட்டு விட்டீர்கள்! Better luck next time!
சிங்.செயக்குமார்,ராகவன் ..நன்றி!
சிறில்,
அப்படிப்போடு .நான் வெறும் கமல் ரசிகன் தானுங்க .மன்றமெல்லாம் இல்லைங்க..ஹி..ஹி.
சுந்தர்,
//தப்பு செய்து விட்டீர்கள் ஜோ. நீங்கள் வெறும் கட்டுரையை மட்டும் - கமல், மய்யம், ரசிகர்கள் இவற்றையெல்லாம் எடுத்துவிட்டுப்- போட்டிருக்க வேண்டும் - அப்போது வரும் பின்னூட்டங்களே வேறு மாதிரி இருந்திருக்கும்! விட்டு விட்டீர்கள்! Better luck next time!
//
ஆஹா! இந்த மேட்டர் தெரியாமப் போச்சே! நீங்க சொல்லுறது நிஜம் தான்.
சகோதரர் ஜோ அவர்களே!
எங்கிருந்து தேடிப் பிடிக்கிறீர்கள் இவைகளை. சகோதரர் சிறில் அலெக்ஸ் கூறியது போல் உண்மையிலேயே கமல் ரசிகர் மன்ற கொள்கைபரப்பு தலையா? :-)
நல்ல பதிவு. அருமையான சிந்தனை ஓட்டம்.
சொல்வது யார் என்பதை விட சொன்ன விஷயம் என்ன என்பது தான் முக்கியம்.
ஒரு விஷயத்தை சொல்பவரின் கடமை: சொல்லும் விஷயத்தை முதலில் தான் நடைமுறையில் கடைபிடித்து காண்பிப்பது.
அதை கெட்பவரின்/கேள்விபடுபவரின் கடமை: சொன்னது யார் எனப்பார்த்து அவரின் சொந்த வாழ்க்கையோடு அதனை ஒப்பிட்டு அவ்விஷயத்தை எடை இடாமல், அவ்விஷயம் நல்லது எனில் அதனை மட்டும் எடுத்து பின்பற்ற முயல்வது.
மிகவும் நல்ல ஆழமான நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன் தரத் தக்க கருத்துக்களை கூறியுள்ளார்.
முடிந்த அளவு நம் வாழ்க்கையில் கடைபிடிக்க முயல்வோம்.
நம் தாய் நாட்டை உலக அரங்கில் தலைநிமிர வைப்போம்.
அன்புடன்
இறைநேசன்.
//ஒரு விஷயத்தை சொல்பவரின் கடமை: சொல்லும் விஷயத்தை முதலில் தான் நடைமுறையில் கடைபிடித்து காண்பிப்பது.
அதை கெட்பவரின்/கேள்விபடுபவரின் கடமை: சொன்னது யார் எனப்பார்த்து அவரின் சொந்த வாழ்க்கையோடு அதனை ஒப்பிட்டு அவ்விஷயத்தை எடை இடாமல், அவ்விஷயம் நல்லது எனில் அதனை மட்டும் எடுத்து பின்பற்ற முயல்வது.//
சகோதரர் இறை நேசன்,
நான் கமல் என்னும் கலைஞனின் ரசிகன் தான் .அதை விட சிவாஜி ரசிகன் .ஆனால் அவர்களை வெறும் கலைஞர்களாகத் தான் ரசிக்கிறேனே தவிர தனிப்பட்ட அம்மனிதர்கள் மீது பற்றோ பக்தியோ கிடையாது .கலைஞனிடமிருந்து கலையை மட்டுமே எதிர்பார்க்கிறேனே தவிர அவன் உத்தமனா ,எத்தனை பொண்டாட்டி வைத்துக்கொள்கிறான் என்பதை பொறுத்து அவன் கலை மேல் கொண்ட அபிமானம் கூடுவதோ குறைவதோ கிடையாது .
ஆனாலும் கலைஞன் என்பதைத் தாண்டி ,சொந்த வாழ்க்கையை தாண்டி ..நாட்டின் பிரஜையையாக செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளில் மற்ற நடிகர்களைக் காட்டிலும் கமல் ஒன்றும் குறைந்து விடவில்லையென்றே நான் நினைக்கிறேன் .ஒழுங்காக வருமான வரி செலுத்தும் பெரிய நடிகர்களில் கமல் முதன்மையானவர் என கேள்விப்படுகிறேன். அதனால் தான் அது குறித்த விளம்பரத்தில் அவர் இலவசமாக நடித்துக்கொடுத்தார் என அறிகிறேன் .அது குறித்து மகிழ்ச்சியே.
சகோதரரே,
நானும் கலைக்கு எதிரானவன் ஒன்றும் இல்லை.
சமூகத்தில் சீரழிவுகளை உண்டாக்கும் கலை என்ற பெயரில் நடக்கும் கழிச்சடைகளையே நான் எதிர்க்கிறேன்.
கலைஞன்/நடிகன் என்பவன் ஏதோ இந்த நாட்டிற்கே தேவையில்லாதவன் என்பதும் என் கருத்தல்ல.
பல நல்ல சிந்தனைகளை மக்கள் முன் வெகு எளிதில் கொண்டு சேர்த்திடும் ஓர் சிறந்த துறை கலைத் துறை என்பதிலும் சந்தேகமில்லை.
ஆனால் இன்று சமூகத்தில் அது ஏற்படுத்தும் நல்ல தாக்கத்தை விட கெட்ட தாக்கமே கூடுதல்.
அதனை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.
ஏதோ கூற வந்து ஏதோ கூறிக் கொண்டிருக்கிறேன். மன்னிக்கவும்.
//ஆனாலும் கலைஞன் என்பதைத் தாண்டி ,சொந்த வாழ்க்கையை தாண்டி ..நாட்டின் பிரஜையையாக செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளில் மற்ற நடிகர்களைக் காட்டிலும் கமல் ஒன்றும் குறைந்து விடவில்லை//
அப்படியே ஆமோதிக்கிறேன். மற்ற நடிகர்களைக் காட்டிலும் குறைந்து விடவில்லை எனக் கூறுவதை விட மற்ற நடிகர்களை விட முன்னிலையில் நிற்கிறார் என்றே கூறலாம்.
அவர் நடிகன் என்ற உடன் நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு கருத்து தெரிவிக்கக் கூடாதா என்ன?
என்னைப் பொறுத்தவரை கமல் ஓர் சிறந்த கலைஞனே! மட்டுமல்ல வியாபார கண்ணோட்டத்தைத் தாண்டி அவருடைய சில படங்களில் சமூக அக்கறை இழையோடியிருப்பதை கண்டிருக்கிறேன்.
குருதிப்புனல், அன்பே சிவம் போன்றவை அவற்றில் சில.
எனவே அந்தரங்கத்தை ஆராயாமல் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாமே!
அன்புடன்
இறைநேசன்
சகோதரர் இறைநேசன்,
கருத்துக்கு மிக்க நன்றி! முழுவதுமாக உடன்படுகிறேன்.
ஜோ!
கலக்கீட்டீங்க! முன்பு ஒரு பதிவர் சுட்டிக் காட்டியதைப் போல "தேடித் தீர்ப்போம் வா" என்கிற கமலின் கட்டுரைத் தொகுப்பிலே - இந்தக் கட்டுரையும் நானும் படிச்சிருக்கேன்!
கமலின் அணையா நெருப்பு சிறுகதை இந்த வார விகடனில் வெளிவந்திருக்கு. அது பற்றி இணையத்தில் படித்தவுடன் - ஒரு பதிவும் இட்டேன் - அதில அந்தச் சிறுகதைக்கான தொடுப்பும் உள்ளது - பாருங்க! :)
நண்பர் நியோ,
தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி..'தேடித் தீர்போம் வா' கட்டுரைத் தொகுப்பை எங்கு வாங்கலாம் என்பது பற்றி மேல் விவரம் இருந்தால் அறியத் தரவும்.
ஜோ.. யாரிந்த குட்டிபாரதி..?
(ப்ரோஃபைல் படத்தை கேட்டேன்)
ஜம்மென்று போஸ் கொடுத்திருக்கிறதே குழந்தை...
பாலபாரதி,
அந்த குட்டி பாரதி என்னுடைய 5 மாத குட்டி..நன்றி!
தமிழ் நடிகரிடம் இந்த சிந்தனை... நல்ல விசயம்; குறிப்பாக தனது ரசிகர்கள்க்காக ஒரு இதழ் - அதிலும் பொறுப்பான கட்டுரை
கமல் சொல்லிக்கொள்வதைப் போல - அது கமலுக்கு மட்டுமள்ள - கமல் ரசிகர்களுக்கு மட்டுமள்ள - நமக்குமே தான் ....
நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக்குவொம் தானே...
உங்க குட்டிப் பாப்பாக்கு என்னோட இந்த அத்தையோட hai சொல்லிடுங்க...
தமிழ் நடிகர்களிடம் இல்லாத சில தெளிவுகளை கமலிடம் காணமுடிகிறது.. ஒரு உதாரணமாம் உங்கள் பதிவு...
1990ல் தனது ரசிகர்களுக்கு இதழ் நடத்தி சுயவிமர்சனத்தோடு வேண்டுகோள் விட்டுள்ளார்.
கமல் - தனக்கும், தன் ரசிகர்களுக்குமாக கூறியதை, நான் எனக்குமாகவே எடுத்துக் கொள்கிறேன்..
...........
குட்டி பாரதிக்கு இந்த அத்தையின் hai தெரிவிக்கவும்....
நன்றி லிவிங் ஸ்மைல் !
//குட்டி பாரதிக்கு இந்த அத்தையின் hai தெரிவிக்கவும்....//
கண்டிப்பாக தெரிவிக்குறேன்.
தங்களையும் ஆறு பதிவு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்..
பங்கு பெறவும்...
லிவிங் ஸ்மைல்..
வலைப்பூக்களில் இது வரை நான் படித்த பதிவுகளிலேயே, மிகவும் உபையோகமான, என்னை மிகவும் கவர்ந்த பதிவு.
உங்களுக்கு என் நன்றி.
கமல்ஹாசனை வியக்கிறேன், மீண்டும் ஒருமுறை.
Post a Comment