Monday, May 15, 2006

குமரி மாவட்ட முடிவுகள் -சுவாரஸ்யத் துளிகள்

பொதுவாக தென் மாவட்டங்கள் அதிமுக கோட்டை ,தென் மாவட்டங்கள் சாதி மோதலுக்கு பெயர் போனவை என்று குறிப்பிடப்படும் போது தென் கோடியிலிருக்கிற எங்கள் குமரி மாவட்டத்தை ஒருவேளை தென் மாவட்டங்களில் சேர்க்கவில்லையா அல்லது குமரி மாவட்டத்தை யாரும் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லையா என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு .ஏனென்றால் குமரி மாவட்டம் ஒரு போதும் அதிமுக-வின் கோட்டையாக இருந்தது இல்லை என்பது மட்டுமல்ல ,தமிழகத்திலேயே அதிமுக மிகவும் பலவீனமாக இருக்கும் மாவட்டம் இது தான் என்பதும் உண்மை .அதுபோல மற்ற தென் மாவட்டங்களைப் போல ஜாதி மோதல்கள் எனக்கு தெரிந்து இல்லாத மாவட்டமும் இது தான் (1982 மதக்கலவரம் வேறு).

தமிழகத்திலேயே படிப்பறிவில் முதலிடம் வகிக்கும் குமரி மாவட்டம் இன்று வரை தேசியக் கட்சிகளின் கூடாரமாக இருக்கிறது .பெருந்தலைவர் காமராஜர் நாகர் கோவில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது கலைஞர் இங்கு முகாம் அமைத்து தீவிர பணியாற்றியும் மக்கள் பெருந்தலைவரை 'அப்பச்சி' 'அப்பச்சி' என்று வாஞ்சையோடு அழைத்து அமோக வெற்றி பெற செய்தார்கள் .அதனாலேயோ என்னவோ கலைஞர் அவர்கள் குமரி மாவட்டம் என்றாலே பாராமுகம் காட்டுவது உண்டு .ஒரு முறை வெறுத்துப் போய் 'நெல்லை எங்கள் எல்லை .குமரி எங்கள் தொல்லை' என்று குறிப்பிட்டார் .பெருந்தலைவரின் மறைவுக்குப் பின்னாலும் அவரை மிகவும் நேசிக்கும் மக்கள் நிறைந்த மாவட்டத்தில் காங்கிரஸ் தான் தனிப் பெரும் கட்சியாக கோலோச்சி வந்தது .

நாளடைவில் இந்துத்துவ கட்சிகள் இங்கு தலையெடுக்க ஆரம்பித்தன. தமிழகத்தில் சிறுபான்மை மதத்தினர் இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையினராக இருப்பதால் இயல்பாக இந்த மாவட்ட அரசியலிலும்,பொருளாதாரத்திலும் அவர்கள் பெரும் பங்கு வகிப்பதை சில இந்து அமைப்புகள் பயன்படுத்தி இந்துக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அதிலே ஓரளவு வெற்றியும் பெற்றார்கள் .தமிழகத்தில் பாஜக காலூன்றாத காலத்திலேயே பத்மநாதபுரம் தொகுதி முதல் பாஜக எம்.எல்.ஏ -வை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தது.

அதிமுக-வைப் பொறுத்தவரை திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெற்றிருக்கிறது .நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதன் நிலைமை அந்தோ பரிதாபம் தான். கேரள எல்லையில் அமைந்திருக்கும் திருவட்டாறு ,விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனிப்பெரும் கட்சியாக விளங்கி வருகிறது.

இந்த தேர்தலில் பலம் பொருந்திய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அணியில் இருந்ததால் திமுக கூட்டணிக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு இயல்பான ஒன்று தான் .ஆனால் மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற மதிமுக- வை கூட்டணியில் பெற்றிருந்த அதிமுக டெபாஸிட் தொகையை இழக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வழக்கம் போலவே பாளையங்கோட்டை வரை வந்த கலைஞர் ,தொல்லை மாவட்டமான குமரிக்கு பிரச்சாரத்துக்கு வராத நிலையில் அதிமுக அணியில் ஜெயலலிதா ,வைக்கோ ,சரத்குமார் என்று அனைவரும் மாவட்டம் முழுக்க பிரச்சாரம் செய்தார்கள்.


தொகுதிவாரியாக இங்கு முடிவுகளைப் பார்ப்போம்...

நாகர்கோவில் - திமுக வெற்றி

ராஜன் (திமுக) -45,354
எஸ்.ஆஸ்டின் -31,609
ரத்தினராஜ்(மதிமுக) - 21,990
உதயகுமார்(பாஜக) -10,752
தேதிமுக -3783

இது தனிப்பட்ட முறையில் என்னுடைய தொகுதி .சென்ற முறை திமுக கூட்டணியில்(திருநாவுக்கரசு கட்சி) வென்று எம்.எல்.ஏ-வாக இருந்த ஆஸ்டின் பின்னர் அதிமுகவில் இணைந்தார் .அவருக்கு சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டார் .சுனாமி நேரத்தில் கட்சி சார்பாக இல்லாமல் ,தான் சார்ந்திருந்த சர்ச் சார்பில் அவர் ஆற்றிய பணி அபாரம் .அந்த நன்றி மறவாத மீனவ மக்கள் அவருக்கு ஓட்டுப்போட்டதன் விளைவு ,கணிசமான வாக்குகளும் இரண்டாமிடமும் ..அதிமுக கூட்டணி 3-வது இடத்தில்.

பத்மநாபபுரம் - திமுக வெற்றி

தியோடர் ரெஜினால்ட் (திமுக) -51,612
ராஜேந்திர பிரசாத்(அதிமுக) -20,546
வேலாயுதன்(பாஜக) -19777
தேதிமுக -3360

200-க்கு மேல் திமுக கூட்டணிக்கு கணித்திருந்த ஜூவியில் கூட ,அதிமுக வெற்றி பெறும் என்று கணித்திருந்த தொகுதி ,கடைசியில் அதிமுக பெற்ற வாக்குகளைவிட வாக்கு வித்தியாசம் அதிகம் என்று முடிந்திருக்கிறது ..பாஜக ஒரு காலத்தில் கோலோச்சிய தொகுதி .அதிமுக அளவுக்கு பாஜக வாக்குகளை பெற்றிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் (ராஜேந்திர பிரசாத் கிறிஸ்தவர் தான்..நம்புங்கள்..ஹி..ஹி) மதரீதியில் மக்கள் ஓட்டுப் போடவில்லை என்று சொல்லலாம்.

குளச்சல் (காங்கிரஸ் வெற்றி)

ஜெயபால் (காங்) -50,258
எம்.ஆர்.காந்தி -29,261
பச்சைமால்(அதிமுக)-20,407
தேதிமுக - 4941

காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி என்று நினைத்திருக்க அதிமுகவை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டாமிடத்தில் பாஜக. தேதிமுக வேட்பாளர் மீனவர் என்பதால் மீனவர் ஓட்டை பெருமளவு பிரிக்கிறார் என்று ஜூவியிலும் ,இங்கே வலைப்பதிவிலும் சொல்லப்பட்ட போது நான் அதை மறுத்தேன் .அது பொய்க்கவில்லை .மீனவ ஓட்டுக்களை இம்முறை காங்கிரஸ் அள்ளியிருக்கிறது.

கிள்ளியூர் (காங்கிரஸ் வெற்றி)

ஜாண் ஜேக்கப்(காங்) -51,016
சந்திரகுமார்(பாஜக) -24,441
டாக்டர் குமாரதாஸ் (அதிமுக) -14,056
தேதிமுக - 1743

டாக்டர் குமாரதாஸ் கோலோச்சிய தொகுதி .ஜனதா தளம்,காங்கிரஸ் ,த.மா.க சார்பாக பல முறை அமோக வெற்றி பெற்ற டாக்டர் குமாரதாஸ் ,பச்சோந்தியாக மாறி அதிமுக சார்பில் நின்றதால் மக்கள் வெறுப்பை சம்பாதித்து டெப்பாஸிட் இழந்து மூன்றாமிடத்தில் பரிதாபமாக நிற்கிறார்..அய்யோ பாவம்!

திருவட்டாறு (மா.கம்யூ வெற்றி)

லீமா ரோஸ் (மா.கம்யூ) -57,162
சுஜித்குமார்(பாஜக) -29,076
திலக்குமார்(அதிமுக) -13,353
தேதிமுக -9431

கம்யூனிஸ்ட் அமோக வெற்றி பெற ,பாஜக இரண்டாமிடத்தில் ..அதிமுக பரிதாபமாக டெப்பாஸிட் இழந்து நிற்கிறது.அதிமுக +பாஜக கூட கம்யூ ஓட்டை நெருங்க முடியவில்லை.என்னங்க நடக்குது?


விளவங்கோடு (மா.கம்யூ வெற்றி)

ஜாண் ஜோசப் (மா.கம்யூ) -64,552
பிராங்கிளின்(அதிமுக) -19,458
பொன்.விஜயராகவன் -13,434
தேவதாஸ்(பாஜக) -12,553
தேதிமுக -7309

இந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் ,இந்த சிறிய தொகுதியில் 4 முனை போட்டியில் நிகழ்த்தப்பட்டிருப்பது உண்மையிலேயே சாதனை தான். வாக்கு வித்தியாசம் 45000-க்கு மேல். இதற்கு மேல் என்ன சொல்லுவது?

கன்னியாக்குமரி (திமுக வெற்றி)

சுரேஷ்ராஜன் (திமுக) -63,181
தளவாய் சுந்தரம்(அதிமுக) -52,494
தேதிமுக -5093
பாஜக -3436

மற்ற தொகுதிகளிலிருந்து தனித்து நிற்பதும் ,அதிமுகவின் மானத்தை ஓரளவு காத்ததும் இந்த ஒரே தொகுதி தான் .இங்கு வெற்றி பெறும் கட்சியே ஆட்சியமைக்கும் என்ற செண்டிமெண்ட் இந்த முறையும் தப்பவில்லை.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது...

* அதிமுக ஏற்கனவே பலவீமமாயிருந்து ,இப்போது இன்னும் சரிந்திருக்கிறது

* ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால் அதிமுக எதிர்ப்பு அலை பலமாகவே வீசியிருக்கிறது.

* வழக்கமாக அதிமுக -வுக்கு சாதகமான மீனவர் ஓட்டுக்கள் இம்முறை பல்வேறு காரணங்களால் வேறு அணிக்கு போயிருக்கிறது

*அதிமுக 3 இடங்களில் டெபாஸிட் தொகையை இழந்திருக்கிறது

* பரவலாக தமிழகத்தில் வாக்கு வித்தியாசங்கள் குறைவாக இருக்க ,குமரி மாவட்டத்தில் வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்கிறது

* பாஜக செல்வாக்கு சரிந்திருந்தாலும் ,கணிசமாக வாக்கு வங்கி இன்னும் இருக்கிறது.

* மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது இங்கு விஜயகாந்துக்கு ஆதரவு மிகக்குறைவு.

* திராவிடக்கட்சிகளில் இம்மாவட்டத்தில் பலமான திமுக தன் பலத்தை கூட்டியிருக்கிறது.

* தேசியக்கட்ட்சிகள் தொடர்ந்து குமரிமாவட்டத்தை கட்டிப்போட்டிருக்கின்றன.

18 comments:

Muthu said...

ஜோ,

நல்ல அலசல். அதிமுக டெபாஸி்ட் இழந்ததா? ஐயோ பாவம்...

அப்புறம் ஏதோ அவர்களே வென்ற மாதிரி ஜெயாடிவியிலும் வலைப்பதிவுகளிலும் எழுதி தள்ளுகிறார்களே?

Anonymous said...

ஜோ,
உங்கள் குமரி மாவட்டத்தைப் போல எங்கள் நெல்லை மாவட்ட முடிவுகளையும் தொகுதிவாரியாக தொகுத்து தாருங்களேன்.எந்த ஒரு பத்திரிக்கையிலும் இவ்வளவு தெளிவாக,விரிவாக இல்லை.

எதிர்பார்ப்புடன்,
துபாய் ராஜா.

ஜோ/Joe said...

முத்து,
வாங்க!நன்றி!
//அப்புறம் ஏதோ அவர்களே வென்ற மாதிரி ஜெயாடிவியிலும் வலைப்பதிவுகளிலும் எழுதி தள்ளுகிறார்களே? //

விடுங்க! கொஞ்சம் ஆறுதல் அடைஞ்சுட்டு போகட்டும் ..

துபாய் ராஜா,

நன்றி. நெல்லை தொகுதிகள் பற்றி தனித்தனியாக குறிப்பாக எனக்கு விவரம் தெரியாது..எனினும் நீங்கள் எதிர் பார்க்கும் விததில் ஓரளவு நெல்லை மாவட்ட முடிவுகள் விவரம் ,அலசல் தினமலரில் வந்துள்ளது..இந்த சுட்டியில் பார்க்கவும்.

http://www.dinamalar.com/2006may12/district/tirunelveli.asp

மணியன் said...

ஜோ, அருமையான அலசல்.

ஜோ/Joe said...

துபாய் ராஜா,
சரியான சுட்டி இங்கே..

http://www.dinamalar.com/2006may12/district/tirunelveli.asp

ஜோ/Joe said...

நன்றி மணியன்!

ப்ரியன் said...

அருமையான அலசல் ஜோ...

ஜோ/Joe said...

ஒரு சிறிய திருத்தம் .தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசம் தாம்பரம் தொகுதி(இது தமிழகத்தில் இரண்டாவது பெரிய தொகுதி)திமுக பெற்றிருக்கிறது (48000).இரண்டாவதாக விளவங்கோடு (45000).

Anonymous said...

துபாய் ராஜா,
சரியான சுட்டி இங்கே..

http://www.dinamalar.com/2006may12/district/tirunelveli.asp

ஜோ!!தகவலுக்கு நன்றி!!!!
தாங்கள் குறிப்பிட்ட் சுட்டி படித்து விவரங்கள் அறிந்தேன்.பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்
துபாய் ராஜா.

ஜோ/Joe said...

நன்றி துபாய் ராஜா!

ஜோ/Joe said...

நன்றி பிரியன்!

கூத்தாடி said...

ஆஸ்டினுக்கு ஜெ சீட்டு கொடுத்திருந்தா அவரு ஜெயிச்சுர்ப்பாரப் போலத் தெரியுது..?
குளச்சல் நம்ம தொகுதி ..எம் ஆர் காந்தி நிண்ணதால அதிமுகவுக்கு 3 வது இடம் தான் ..நம்ம ஊரு எப்பவுமே வித்தியாசம் தான்..
தளவாய் நிறைய செய்திருக்கார்ன்னு கேள்விப்பட்டேன் .ஆனா மண்ண்க்கவ்விட்டரே

ஜோ/Joe said...

கூத்தாடி,
வாங்க .ஆஸ்டின் -க்கு சீட் கொடுத்திருந்தா அவரோட சொந்த செல்வாக்கும் கட்சி ஓட்டும் சேர்ந்து ஜெயிக்க வாய்ப்பிருக்கு.

நீங்க நம்ம குளச்சல் தானா? போன தடவ மதிமுக தனியா நிண்ணு வாங்குன ஓட்டு கூட இந்த தடவ கூட்டணியில அதிமுக வாங்கல்லியே? என்ன நடக்குது?

ஜோ/Joe said...

koothadi,
இந்த முறை தளவாய் நன்றாக செய்தது போலவே ,அதற்கு முன்பு சுரேஷ்ராஜனும் நன்கு செய்திருந்தார் .அப்படியிருந்தும் சென்றமுறை தோற்றது இந்த முறை அவருக்கு அனுதாபத்தை கொடுத்திருக்கலாம் .அதுபோக அதிமுக ஒற்றுமையாக வேலை செய்யவில்லை என கேள்வி.

Anonymous said...

Nice Coverage!

Bala

Anonymous said...

Nice Article. Are u from KK Dist?

ஜோ/Joe said...

//Nice Article. Are u from KK Dist?//
Yes,I am .Thanks!

சிறில் அலெக்ஸ் said...

ஜோ இங்கே ஒரு பின்னூட்டமிட்ட நியாபகம்..

அருமையான அலசல்.. வழக்கம் போல கலக்கல்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives