Monday, August 16, 2010

இந்திய சுதந்திர தினமும் குறைந்து போன சுருதியும்

அப்போதெல்லாம் எங்கள் ஊரில் கிறிஸ்துமசுக்கு அடுத்து வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நாள் இந்திய சுதந்திர தினம் .10-வது படிக்கும் போது பள்ளி மாணவர் தலைவன் என்ற முறையில் திங்கள் தோறும் தேசியக்கொடி ஏற்றி மாணவர் அணிவகுப்பு நடத்தும் பொருட்டு முன்னரே பள்ளிக்கு சென்று கொடியை மடித்துக்கட்டி உச்சியில் ஏற்றி வைக்கும் பொறுப்பும் எனக்கிருந்தது . தேவாலய வளாகத்திலேயே பள்ளி என்பதால் சுதந்திர தினத்தன்று தேவாலயத்தில் சுதந்திர தின சிறப்புத் திருப்பலி முடிந்தவுடன் ஒட்டு மொத்த ஊரும் கூடி நிற்க பள்ளி மைதானத்தில் சிறப்பு அணிவகுப்பு மற்றும் கொடியேற்றம் நடைபெறும் . பின்னர் நாள் முழுவதும் இளைஞர் அமைப்பு ஒன்று குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான வித விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இரவில் பொதுக்கூட்டம் நடத்தி கலை நிகழ்ச்சிகளோடு பரிசு கொடுப்பார்கள் . பள்ளி நாட்களுக்கு பின்னர் கல்லூரி நாட்களில் இளைஞர் குழாமோடு இணைந்து பொறுப்பேற்று நடத்தியதுண்டு .இரவுப் பொதுக்கூட்டத்தில் இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் முன் ‘தாய்நாடு நம் தாயைப் போன்றது . நம் தாய்க்கு இணையான தாய்நாட்டுக்கு மரியாதை செய்யும் விதமாக அனைவரும் எழுந்து நிற்க வேண்டுகிறேன் “ என்று உணர்ச்சிவசப்படுவது அநேகமாக நானாகத் தான் இருக்கும் .

இந்தியா , தாய்நாடு , ஜனகனமன , வந்தே மாதரம் இந்த வார்த்தைகளை கேட்டாலே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிந்த காலங்கள் அவை . அந்த தாய்நாட்டை விட்டு வேலை காரணமாக சிங்கப்பூர் வந்த பிறகு இந்த தேசபக்தி , பெருமிதமெல்லாம் இன்னும் ஒரு படி அதிகரித்திருத்திருந்தது . ஆகஸ்ட் 15 அன்று சின்ன தேசியக்கொடியை சட்டையில் குத்திக்கொண்டு அலுவலகத்துக்கு போயிருக்கிறேன்.

பள்ளியும் கல்லூரியும் கொடுத்த ஒற்றைப்பார்வை கல்வியைத் தாண்டி படிக்கவும் , பல நாடுகளை பற்றி அறிய ஆரம்பித்த போது தான் புனித பிம்பங்கள் கலைய ஆரம்பித்தது , காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாடு , ஒரே எண்ணம் ,ஒரே மக்கள் என கன்னியாகுமரியில் உட்கார்ந்து கொண்டு ‘முதலில் நான் இந்தியன் ..பின்னர் தான் ...” என்றெல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட்டது கொஞ்சம் கொஞ்சமாக காமெடியாகிப் போனது . முகம் தெரியாத மூன்றாவது நாட்டில் ஏதாவது ஒரு உணவகத்தில் அமர்ந்திருக்கும் போது பாகிஸ்தான் நாட்டு சகோதரன் வந்தாலே கொஞ்சம் சிநேகமாக புன்னகைப்போம் . காணக்கிடைக்காத நாட்டில் வட இந்தியரைப் பார்த்தாலும் பேச்சுக் கொடுப்போம் . அதே நேரம் ஒரு ஈழத்தமிழனோ , மலேசியத் தமிழனோ தென்பட்டால் மெதுவாக நம் மனம் அங்கே நகரும் ..நம் வட இந்திய நண்பரோ பாகிஸ்தான் சகோதரரை நோக்கி நகர நாமோ ஈழத்தழனையோ மலேசியத் தமிழனையோ நோக்கி நகர்ந்திருப்போம் . நானும் வட இந்தியனும் ஒரே நாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கிறோம் என்ற உறவைத் தவிர , எனக்கும் வேறு நாட்டு தமிழனுக்கும் உள்ள இயல்பாண பிணைப்பு அளவுக்கு எதுவும் இல்லை என தெரிய வருகின்ற தருணங்கள் அவை .

இந்தியா என்பது அரசியல் காரணங்களுக்காக வரையப்பட்ட எல்லைக் கோட்டுக்கு கட்டுப்பட்ட பிரதேசமேயன்றி கலாச்சார , மொழி , பண்பாட்டால் உருவான கலாச்சார பிணைப்பு அல்ல என புரிய ஆரம்பித்தது . ஒரு இந்திய பஞ்சாபிக்கு ஒரு பாகிஸ்தான் பஞ்சாபியிடமே பகிர்ந்து கொள்ளவும் உறவு கொள்ளவும் அதிக காரணங்கள் இருக்குமே அல்லாமல் இந்தியன் என்பதற்காக ஒரு தமிழனோடு அல்ல என்பதும் , ஒரு வங்காளி தெலுங்கனை விட வங்காள தேசத்தவனோடே தன்னை அதிகமாக பொருத்திப்பார்க்க முடியும் என்பதும் ஒரு தமிழ்நாட்டு தமிழன் ஒரு இடத்தில் ஒரு உத்திரப் பிரதேசக்காரனையும் ஒரு ஈழத்தமிழனையோ அல்லது மலேசியத் தமிழனையோ காண நேர்ந்தால் யாரோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயல்வான் என்பதையும் அனுபவ பூர்வமாக உணர முடிந்தது. ’ முதலில் நான் இந்தியன் ..பின்னர் தான் ...” போன்ற வெற்று கோஷங்களின் போலித்தன்மை பல்லிளிக்க முதலில் நான் யார் என தெளிவாக உணர முடிகிறது.

மொழி , கலாச்சாரம் வேறு வேறானாலும் வேற்றுமையில் ஒற்றுமை தானே நம் தனித்துவம் என காரணம் சொல்லப்படுகின்ற போது இப்போதெல்லாம் ‘ நீ அரிசி கொண்டு வா ..நான் உமி கொண்டு வாறேன் ..ரெண்டு பேரும் ஊதி ஊதி தின்னலாம் ‘ என்ற சொற்றொடர் தாம் ஞாபகம் வருகிறது . கடல் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்படும் குஜராத் மீனவர்கள் ‘இந்திய மீனவர்கள்’ என இந்திய அரசு நினைக்கும் போது ராமேஸ்வரம் மீனவன் மட்டும் ‘தமிழக மீனவன்’ என்றால் நான் என்ன நினைப்பது ? பரம்பரை எதிரியாக சித்தரிக்கப்படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி வந்து விட்ட மீனவனை சுடுவதில்லையே .. மிஞ்சிப்போனால் கைது செய்து சிறையில் தானே அடைக்கிறார்கள் .. ஆனால் காலங்காலமாக தங்கள் சொத்தாக இருந்த கச்சத்தீவை தன்னுடைய நாடு எவனுக்கோ தாரை வார்த்து கொடுத்ததும் அல்லாமல் , அங்கே வலைஉலர்த்தும் உரிமை இருப்பதாக சொன்னாலும் அதை கூட உறுதிப்படுத்த முடியாத நிலைமையில் ஒரு வல்லரசு என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் ஒரு நாடு 400 -க்கு மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்ட பின்னரும் கூட அந்த குட்டி நாட்டுக்கெதிராக ஒரு குரலைக்கூட உயர்த்த முடியவில்லையென்று சொன்னால் இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும் .. 1. இந்தியா என்ற நாட்டுக்கும் சுயமரியாதையும் முதுகெலும்பும் கிடையாது 2 . செத்துப்போன இன்னும் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மீனவர்களை இந்த நாடு தன் குடிமக்களாக கருதவில்லை ..வெறென்ன காரணம் இருக்க முடியும் ?

இப்போது ஒருபடி மேலே போய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எல்லை தாண்டி சென்றால் மீனவர்களுக்கு அரசு பொறுப்பல்ல என சொல்லியிருக்கிறார் ..ஏதோ இந்திய எல்லைக்குள் மட்டும் இவர்கள் ரொம்ப பாதுகாப்பு கொடுத்து கிழித்து விட்டது போல ..கச்சத்தீவுக்கு வெறும் 18 கிமீ தூரமே உள்ள ஒரு கடற்பரப்பில் , கச்சத்தீவு வரை சென்று மீன் பிடிக்கவும் ,வலை உலர்த்தவும் உரிமை உண்டு என சொல்லப்பட்டும் கூட , 12 கீமி -லிருந்து தன்னுடைய கடற்பரப்பாக கருதிக்கொண்டு இலங்கை நம் மக்களை தாக்குகிறது .அதையும் தாண்டி நம்முடைய கரை வரை வந்து தாக்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன ..ஆனால் வல்லரசின் மேன்மை தங்கிய வெளியுறவுத் துறை அமைச்சரோ தமிழக மீனவருக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்காதது ஒன்று தான் பாக்கி ..இந்த லட்சணத்தில் ’சுதந்திர தினம்’ ரொம்ப முக்கியம் !

26 comments:

Anonymous said...

true

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு ஜோ!

தமிழக மீனவனுக்கு கறுப்புதினமாக மாறிப்போன இந்தி’ய விடுதலை நாள் தமிழர்களுக்கே கறுப்பு நாள் தான்!

அண்மையில் எடுத்துக்கொண்டால்,
கார்கில் போரில் உயிர் விட்டவர்களுக்காக கண்ணீர் மட்டும் விட வில்லை தமிழர்கள், அதையும் தாண்டி உதவியிருக்கிறார்கள்!

ஆனால், எல்லை தாண்டினால் அப்படித்தான் சிங்களவர்கள் அப்படித்தான் சுட்டுக்கொல்வார்கள் என்று சொல்லும் நடுவண் அமைச்சர், கருத்தே சொல்லாத கண்டுகொள்ளாத பிரதமர் இருக்கும் நாட்டில் மீனவர்களுக்கு கறுப்புதினமாகத்தானே இருக்க முடியும்?

:(((

தருமி said...

//ஒரு வல்லரசு என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் ஒரு நாடு 400 -க்கு மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்ட பின்னரும் கூட அந்த குட்டி நாட்டுக்கெதிராக ஒரு குரலைக்கூட உயர்த்த முடியவில்லையென்று சொன்னால் //

என்னவென்றே தெரியாத வேதனை விஷயம் இது. காரணமும் புரியவில்லை; மெளனங்களும் புரியவில்லை.

உங்கள் மண்ணின் வேதனை நன்கு புரிகின்றது. 'ஏதாவது செய்ய வேண்டும்'.

Unknown said...

வருடங்கள் பலவானாலும், இன்னமும் சுருதி குறையாத உன் எண்ணங்களின் பிரதிபலிப்புக்களை கண்டு நீ என் நண்பன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் said...

சீனாக்காரன் சுற்றி உள்ள நாடுகளை பிடித்து வைத்துக் கொண்டு ஒன் சைனா ங்கிறான், இவனுங்க இருக்கிறதையெல்லாம் கொடுத்துட்டு நம்ம ஆளுங்களை அடிவாங்க வைத்துவிட்டு பல்லிளித்து போஸ் கொடுக்கிறாங்க, வெட்கம் சூடு சுரணை இல்லாத நாடு.

Rakesh Kumar said...

You post only occasionally, but man, when you do it rocks our emotional foundation. Sad but true, and what can we do? Good post, bro.

Mahi_Granny said...

தமிழக மீனவன் என்றால் மட்டும் ஏன் இந்த இளக்காரம் . அருமையாக பதிவு செய்து இருக்கிறீர்கள் .

ஜோ/Joe said...

//கார்கில் போரில் உயிர் விட்டவர்களுக்காக கண்ணீர் மட்டும் விட வில்லை தமிழர்கள், அதையும் தாண்டி உதவியிருக்கிறார்கள்!//

கார்கிலுக்கு அதிக நிதி கொடுத்தது தமிழகம் தான்.

ஜோ/Joe said...

தருமி ஐயா,Fid ,கோவியார் , Rakesh ,Mahi,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

TBR. JOSPEH said...

கடல் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்படும் குஜராத் மீனவர்கள் ‘இந்திய மீனவர்கள்’ என இந்திய அரசு நினைக்கும் போது ராமேஸ்வரம் மீனவன் மட்டும் ‘தமிழக மீனவன்’ என்றால் நான் என்ன நினைப்பது ? //

வேதனைக்குரிய விஷயம்தான். ஆனால் இரு தினங்களுக்கு முன்பு
இந்தியா வந்துள்ள இலங்கைவாழ் தமிழக மீனவர்கள் குழுவும் இந்தியர்கள் தங்கள் எல்லையைக் கடந்து வந்து மீன் பிடிப்பது வாடிக்கையாகி வருகிறது என்று கூறியுள்ளனரே.

அதே சமயம் எல்லையை தாண்டி வந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அடிப்பதும் உதைப்பதும் சுடுவதும் அத்துமீறிய செயல்தான்.

அதற்காக இலங்கை அரசிடம் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கமுடியுமே தவிர இந்திய கடற்படை இலங்கை கடலோர படையினருடன் போரிடவா முடியும்?

ஜோ/Joe said...

//அதற்காக இலங்கை அரசிடம் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கமுடியுமே தவிர இந்திய கடற்படை இலங்கை கடலோர படையினருடன் போரிடவா முடியும்?//

டி.பி.ஆர் ஐயா,
எப்படி உங்களால் இப்படி சுலபமாக சப்பைக்கட்ட முடிகிறது :(

Gopal said...

well said Joe. something has to be done for this. Indian government never considered Tamilians

Ravichandran Somu said...

ஜோ,

தங்கள் வருத்தத்தை ஆழமாக பதிவு செய்திருக்கீர்கள்:(

TBR. JOSPEH said...

டி.பி.ஆர் ஐயா,
எப்படி உங்களால் இப்படி சுலபமாக சப்பைக்கட்ட முடிகிறது//

உங்களுக்கு தெரியாததல்ல. நானும் அதே சமூகத்தைச் சார்ந்தவன் என்பதும் நாளொன்றுக்கு தமிழக கடற்கரைகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க சென்று பத்திரமாக திரும்புகின்றன என்பதும். அதிகம் போனால் மாதத்திற்கு ஐந்தாறு படகில் செல்லும் மீனவர்கள் மட்டுமே அத்துமீறி நம் கடல் எல்லையை தாண்டி சென்று அடிபடுகிறார்கள் என்பதும். நான் தூ..டி யில் மேலாளராக இருந்த காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட படகுகளுக்கு ஃபைனான்ஸ் செய்த விஷயமாக மீனவர்கள் சங்க கூட்டங்கள் பலவற்றிற்கும் சென்றிருக்கிறேன். அப்போதே சங்க தலைவர்கள் நம் எல்லையய தாண்டி கடலுக்குள் செல்லாதீர்கள் என மீனவர்களள எச்சரிப்பார்கள். அதை பலரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் அதிகப்பிரச்ங்கித்தனமாக கட்சத்தீவ திருப்பி வாங்க ஏதாச்சும் செய்யிறத விட்டுப்போட்டு எங்கள ஏன் சொல்றீங்க என்பார்கள். ஆக, இந்த பிரச்சினை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று ஊடகங்களின் வளர்ச்சியால்தான் வெளியில் வருகிறது.

ஜோ/Joe said...

டி.பி.ஆர் ஐயா,
இந்திய அரசு போலவே எல்லை தாண்டல் என்ற வழக்கமான சப்பைக் கட்டைத் தான் நீங்களும் சொல்லுகிறீர்கள் .

அருள் எழிலனின் இந்த கட்டுரையை படிக்க வேண்டுகிறேன்
http://www.vinavu.com/2009/10/28/kacha-theevu/

ஜெகதீசன் said...

ஹ்ம்ம்ம்... சுதந்திர தினம் இந்தியனுக்கு... நமக்கல்ல...

தருமி said...

//டி.பி.ஆர் ஐயா,
எப்படி உங்களால் இப்படி சுலபமாக சப்பைக்கட்ட முடிகிறது :( //

உங்கள் பதிலைப் படித்த பின்னும் இதே கேள்வி மனதில் எழுகிறது.

ரசிகன் said...

//வல்லரசின் மேன்மை தங்கிய வெளியுறவுத் துறை அமைச்சரோ தமிழக மீனவருக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்காதது ஒன்று தான் பாக்கி //

நெத்தியடி:)

Joseph said...

அருமையா சொல்லியிருக்கிங்க.

சிங்கக்குட்டி said...

உங்கள் மன ஓட்டத்தை அருமையாக சொல்லியிருக்கிங்க.

Edwin said...

இந்திய நிலை என்னவென்றால் இறப்பது யார் என்பதல்ல!!! கொல்பவன் பாகிஸ்தானியாக இருந்தால் மட்டுமே இறப்பவன் இந்தியனாக இருக்க முடியும். அதுவும் தமிழன் என்றால்????

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty

Unknown said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நல்ல பதிவு ஜோ!

தமிழக மீனவனுக்கு கறுப்புதினமாக மாறிப்போன இந்தி’ய விடுதலை நாள் தமிழர்களுக்கே கறுப்பு நாள் தான்!

அண்மையில் எடுத்துக்கொண்டால்,
கார்கில் போரில் உயிர் விட்டவர்களுக்காக கண்ணீர் மட்டும் விட வில்லை தமிழர்கள், அதையும் தாண்டி உதவியிருக்கிறார்கள்!

ஆனால், எல்லை தாண்டினால் அப்படித்தான் சிங்களவர்கள் அப்படித்தான் சுட்டுக்கொல்வார்கள் என்று சொல்லும் நடுவண் அமைச்சர், கருத்தே சொல்லாத கண்டுகொள்ளாத பிரதமர் இருக்கும் நாட்டில் மீனவர்களுக்கு கறுப்புதினமாகத்தானே இருக்க முடியும்?
//

repeatuuuuuuu

THOPPITHOPPI said...

நச்

Thekkikattan|தெகா said...

யானை தன் தலையிலேயே மண்ண அள்ளி கொட்டிக்கிற மாதிரிதான் இருக்கு, நடக்கும் நிகழ்வுகளும் இந்திய அரசியல் வாதிகளின் பொறுப்பற்ற பதில்களும்.

//கார்கிலுக்கு அதிக நிதி கொடுத்தது தமிழகம் தான்.//

இதையும் சேர்த்துக்கோங்க... அதிகப்படியான உயிரிழப்பும் தமிழர்கள் பக்கமிருந்துதான்.

தறுதலை said...

ஹிந்தியத் தமிழர்கள் ஹிந்தியாவின் இரண்டாம் தர குடிமக்கள் என்பதை ஏற்றுகொண்டு, ஹிந்தியர்க்ளுக்கு அடிமையாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives