Monday, September 14, 2009

பஃறுளி முதல் யூப்ரடீசு வரை

பொதுவாக வரலாற்று ,மொழி ஆய்வு நூல்கள் வெறும் தகவல் தொகுப்புகளாக இருப்பதால் புரட்டியவுடன் ஒரு அயற்சியை ஏற்படுத்தி முழுவதும் படிக்க விடாமல் செய்வதுண்டு ..சிங்கை நூலகத்தில் இந்த 400 பக்க புத்தகத்தை எடுத்துப் புரட்டிய போது வழக்கத்துக்கு மாறாக மிக சுவாரஸ்யமாக தோன்றியதால் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முடிக்கவும் ,வெறுமனே பக்கங்களை புரட்டவும் விடாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டது இந்த பத்தகம் .


மா.சோ.விக்டர் என்பவர் எழுதிய இந்த நூலை படித்து முடிக்கும் போது இவருடைய மொழியறிவு ,கடும் உழைப்பு மலைக்க வைத்தது. பஃறுளி ஆறு பண்டைய குமரிக்கண்டத்தில் ஓடிய ஆறு . பஃறுளி = பல துளி என சொல்ல வேண்டியதில்லை . ஆசிரியர் நிறுவ முனைவது .. குமரிக்கண்டமே விவிலியம் சொல்லும் ஆதிமனிதன் ஆதாம் வாழ்ந்த இடம் . விலிலியத்தில் சொல்லப்பட்ட நோவாவின் வெள்ளப்பெருக்கே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த கடற்கோள் .நோவா குமரிக்கண்டத்தை சேர்ந்தவரே .வெள்ளப்பெருக்கால் குடிபெயர்ந்த தமிழர்கள் சிந்து சமவெளி ,அங்கிருந்து பாபிலோன் ,மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் சென்று பரவினார்கள் . கிரேக்கம் , எபிரேயம் உட்பட மத்திய கிழக்கு மொழிகளில் காணப்படும் பல சொற்களின் மூலம் தமிழே . விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல நாடுகள், ஆறுகள் , மாந்தர்களின் பெயர்கள், பழக்க வழக்கங்களின் மூலம் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டின் மூலமாக இருக்கிறது . விவிலிய ஆராச்சியாளர்கள் அர்த்தம் கண்டு பிடிக்க முடியாத பல எபிரேய வார்த்தைகளின் மூலம் தமிழ் சொற்களின் திரிபாக இருக்கிறது .. இதன் மூலம் தமிழும் ,தமிழர் பண்பாட்டு பரவலும் வெறும் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல , 10000 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் பழமை வாய்ந்தது ..உலகின் பல மொழிகளின் தாயாக தமிழ் இருந்திருக்கிறது.

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை ஓரளவு ஏற்கனவே படித்திருப்பவர்களுக்கு இந்நூல் மேலும் சுவாரஸ்யத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . வெறும் ஆராய்ச்சி ,தகவல் தொகுப்பு என்றில்லாமல் விவிலியம் சொல்லும் ஆதி மனித தோற்றம் , நோவா வெள்ளப்பெருக்கும் , ஆபிரகாம், மோயீசன் , இஸ்ராயேல் வரலாறு என்று ஒரு வரிசைக்கிரமமான விவிலிய நிகழ்வுகளினூடே தகவல்கள் இணைந்து ஒரு நாவல் படிக்கும் உணர்வை ஊட்டுகிறது இந்நூல்.

இதில் சொல்லப்பட்ட தகவல்களில் சிலவற்றை உதாரணங்களாக சுருக்கமாக பார்ப்போம் ...

* பைபிள் - பப்பிலியோன் (Biblion) என்னும் கிரேக்க சொல்லுக்கு கோரையினின்று உருவாக்கப்பட்ட தாளில் எழுதப்பட்ட நூல் என்பது பொருளாகும் .பைப்புல் அல்லது பசும் புல் என்று கோரையினம் தமிழில் சொல்லப்பட்டது . பைப்புல் என்ற தமிழ் சொல்லே கிரேக்கத்தில் பைப்பில் என திரிந்தது.

* அப்பிரு (apiru) என்னும் சுமேரிய மூலச் சொல்லினின்று ஈப்ரூ (Hebrew) என்ற சொல் பிறந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் . அப்பிரு என்ற சொல்லுக்கு 'அந்த பக்கம்' , 'அப்புறம்' (that side) என்று ஆக்ஸ்போர்டு கலைக்களஞ்சியம் பொருள் கூறுகிறது . அப்புறம் ,அப்புற என்ற தமிழ் சொல்லின் திரிபே அப்பிரு அல்லது அப்பிறு.

* ஆபிறகாமை 'அலைந்து கொண்டிருந்த அறம்வாயன் (Wandering Aramean) என்று விவிலியம் விளிக்கிறது . அறம் + வாய் எனும் இரு தமிழ் சொற்களில் முன்னது இடத்தையும் , பின்னது மொழியையும் குறிக்கிறது .அறம் என்னும் பகுதி பாபிலோனுக்கு வடபகுதியில் இருந்தது . அறம் என்பது நோவாவின் பேரனின் பெயர் . அப்பகுதியில் பேசப்பட்ட மொழி அறம்வாய் பின்னர் அறமாய்க் என திரிந்தது.ஆபிரகாம் பிறந்த ஊரின் பெயர் ஊர் (Ur). ஆபிரகாமின் மனைவி பெயர் சாராய் .. தமிழில் சார் = அழகி .


* உல் -உல்கு -உலகு என்ற சொல்லுக்கு உருண்டை என்பதே பொருள் . இந்த உலகம் வான் வெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர் . ஞாலுதல் என்பதற்கு தொங்குதல் என்பதே பொருள் . எனவே உலகம் ஞாலம் எனப்பட்டது .உல் -உல்கு என்ற தமிழ் சொல்லின் நீட்சியே உர்ல்ட் என்றவாறு world என்ற சொல் உருவானது . இரு -இருத்தல் என்ற பொருளில் எர்த் (earth) என்னும் சொல் வந்தது . எபிரேய மொழியில் உலகம் ஓலம் (Olam) எனப்பட்டது .

* இசுரேல் - இசுரா -எல் (எல் -யூதர்களின் கடவுள்) . இசுரா என்பதற்கு முரண்படுதல் , வரிந்து செயல்படுதல் (Contended) என்ற பொருள் சொல்லப்பட்டுள்ளது . தமிழில் இசைவுறா - ஏற்றுக்கொள்ளாத ,முரண்பட்ட .

* கனான் என்ற எபிரேய சொல்லுக்கு (நோவாவின் பேரன் ,இதனாலேயே கனான் ,கானான் நாடு எனப்பட்டது) பழுப்பு அல்லது கறுப்பு என பொருள் சொல்லப்படுகிறது . பெருவெள்ளத்தால் குமரி கண்டத்திலிருந்து குடிபெயர்ந்த நோவாவின் பேரன் கருமை நிறமாகத்தான் இருக்க வேண்டும் ..தமிழில் கன்னான் = கரிய நிறம் கொண்டவன் . காயன் வழியில் இலமெக் என்பான் யா ஆள் (Jabal) , ஊ ஆள் (Jubal ), துவள் காயன் (Tubal Cain) ஆகியோருடைய தந்தையாக சொல்லப்படுகிறான் . இவனின் மனைவிகள் சிலை (Zillah ) மற்றும் ஆடை (Adah).

* கல்லோடு (Gilead) - ஓட்டை கவிழ்த்தது போன்ற மலை (கல்+ ஓடு) . யாபோக்கு (Yabbok) என்னுன் ஆறு ..தமிழில் யா = தென் திசை போக்கு =செல்லுதல் ..யாப்போக்கு = தென் திசையில் செல்லும் ஆறு .

* Yarmuk என்னும் ஆறு பாலத்தீனத்தில் பாய்கிறது .இதில் ஆறு ஆறுகள் வந்து கலக்கின்றன . ஆறு +முகம் -த்தின் திரிபே யார்முக் ஆனது .. யாறு என்ற தமிழ் சொல் யோர் (Yor) என்று எபிரேய மொழியில் திரிந்து 'தன்' நகரம் வழியாக பாயும் ஆறு 'யோர்தன்' என பெயர் பெறுகிறது.

* கலிலி ஏரிக்கு சின்னீரோத்து என்ற பெயரும் உண்டு . சின்ன + நீர் + ஊற்று என்ற மூன்று தமிழ் சொற்களின் இணைப்பே சின்னீரோத்து என திரிந்துள்ளது . நீர்+ஊற்று திரிந்து பீரோற்று பின்னர் பெய்ரூட் ஆனது ..பெய்ரூட் என்ற சொல்லுக்கு நீர் ஊற்றுகளின் நகரம் என்பதே பொருள்.

(கடல்சார்ந்த தொழில் முறையிலும் , கடல் வழி பயணங்களிலும் தமிழன் முன்னோடி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்)

* கலம்(kalam) என்ற தமிழ் சொல் , Galaia (கிரேக்கம்) , Galea (லத்தீன்) , Galley (ஆங்கிலம்)

* நாவி என்ற தமிழ்ச் சொல் , Naus (கிரேக்கம் ) , Navis (லத்தீன் ) , Navie (பிரெஞ்சு) , Navy (ஆங்கிலம்)

* நங்கூரம் என்ற தமிழ்ச் சொல் , Angura (கிரேக்கம்) , Ancora (லத்தீன்) , Anchor (ஆங்கிலம்) . Angk என்ற கிரேக்க சொல்லுக்கு வளைந்த (hook) என பொருள் கூறப்பட்டுள்ளது . அங்கு - அங்குதல் - அங்கனம் = வளைந்த சாய்கடை.

* மாந்தன் மண்ணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவன் என்ற விவிலியக் கூற்றை அடிப்படையாக வைத்தே Man என்ற சொல் வந்த்து ..இது மண் என்னும் தமிழ் சொல்லே.

இது போன்ற பல விளக்கங்கள் , பல்வேறு சுமேரிய , கிரேக்க , எபிரேய சொற்களுக்கு கிடைக்கிறது ..இது தவிர யாக்கோபு மாமன் மகளை மணந்தது , 7 நாட்கள் திருமண கொண்டாட்டங்கள் போன்றவை தமிழர் பண்பாட்டை பிரதிபலிப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.

பொதுவாக யாராக இருந்தாலும் தங்கள் இனம் தான் பழமையானது என நிறுவவே முனைவர் ..ஆனால் இந்த புத்தகத்தில் வறட்டு வாதமோ , யூகங்களோ மிக மிகக் குறைவு என்றே எனக்கு தோன்றியது ..வார்த்தைகளுக்கு உள்ள ஒற்றுமைகளை விளக்கும் போது வெறும் ஓசைகள் தரும் ஒற்றுமையாக இருந்தால் அதை வலுவானதாக எடுத்துக்கொள்ள முடியாது .ஆனால் ஓசைகள் மட்டுமின்றி மூல மொழியில் கொள்ளப்படும் அர்த்தமும் , தமிழ் வார்த்தையின் அர்த்தமும் ஒன்றாக இருப்பதே வலுவான ஆதாரமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.

மா.செ.விக்டர் என்ற இதன் நூலாசிரியர் இதை எழுதுவதற்கு மேற்கொண்டிருக்க வேண்டிய உழைப்பும் ,சிந்தனை பெருக்கும் நினைத்தால் மலைக்க வைக்கிறது ..அவரின் மற்ற நூல்களின் பட்டியலை பார்த்தால் இன்னும் மலைப்பு .. வெத்து வேட்டுகளெல்லாம் பெரிய இலக்கியவாதிகளாக அறியப்படும் தமிழ் சூழலில் இத்தகையோர் அந்த அளவு கூட அறியப்படாதது மிகவும் துரதிருஷ்டவசமானது .இவர் ஒரு முனைவர் -ஆ இல்லையா தெரியவில்லை . இந்த ஒரு புத்தகத்துக்காகவே 4 முனைவர் பட்டம் கொடுக்கலாம் .. இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தமிழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது.

33 comments:

கோவி.கண்ணன் said...

// இந்த ஒரு புத்தகத்துக்காகவே 4 முனைவர் பட்டம் கொடுக்கலாம் .. இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தமிழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது. //

அதென்னவோ சரிதான் !

Robin said...

சொல்லப்பட்ட தகவல்கள் பிரமிப்பூட்டுபவையாக இருக்கின்றன. இன்னும் ஆராய்ச்சிகள் செய்தால் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்றுதான் தோன்றுகிறது. குமரிக்கு தெற்கே கடலுக்கடியில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் ஒழிந்து கிடக்கின்றனவோ.

Rakesh Kumar said...

Amazing information, bro. Thanks for taking effort to share with us. Ilayathalabathigal...:)))

சி தயாளன் said...

குமரிக்கண்டம் அல்லது லெமுரியா பற்றி பலரும் ஆய்வுகள் செய்து புத்தகங்கள், படைப்புக்கள் வெளியிட்டாலும் பெரும்பாலான மேற்கத்தைய ஆய்வாளர்கள் லெமுரியா கண்டம் என்பது இருக்கவில்லை என்று அடம் பிடிக்கின்றனர். இந்து சமுத்திரத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது தெரியவில்லை.

நூலாசிரியரின் ஆய்வு & அர்பணிப்பு போற்றத்தக்கது. ஆனாலும் அதற்கெல்லாம் இங்கே மரியாதை கிடைக்குமா...? :-(((

ஜோ/Joe said...

//சொல்லப்பட்ட தகவல்கள் பிரமிப்பூட்டுபவையாக இருக்கின்றன. இன்னும் ஆராய்ச்சிகள் செய்தால் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்றுதான் தோன்றுகிறது.//

இங்கே நான் சொன்னது மிகச்சில உதாரணங்கள் தான் ..இது போல புத்தகமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன.

Anonymous said...

இது தமிழ்மையம் வெளியீடு தானே?
எப்படிப் பெற்றீர்கள்? சிங்கை பொத்தகக் கடைகளில் உள்ளதா?
தமிழ்மையத்துக்குத் தொலைபேசி நான்கைந்து பேர்களிடம் பேசி மா.சோ.விக்டரின் நூல்களைப் பெற முயன்றால், அவர்கள் அங்கே இந்த நூலை விற்கும் முனைப்பில் இருப்பது போலவே தெரிவில்லை. தொலைதூர வெளிநாடொன்றில் இருந்து ஒருவன் தமிழ் நூல் ஒன்றைப் பெறக் கூப்பிட்டு பேசுகிறானென்பதே அவர்களுக்கு நம்ப முடியா ஒரு கலாய்த்தல் போல் தோன்றுகிறது போலும். பல முறைத் தொடர்பு கொண்டும், சரியான மறுவினை அங்கிருந்து வரவில்லை. செகத் கசுபார் அடிகளார் தான் அதன் நிறுவனர் என அறிகிறேன்.

மசோ.விக்டர், அரசேந்திரன், அருளி, முனைவர்.நெடுஞ்செழியன் போன்ற அருமையான ஆய்வாளர்களின் நூல்களைப் பெறுவது கொழுகொம்பாக உள்ளது. வெகுசனப் பொத்தகக் கடைகளில், இணைய நூலங்காடிகளில் கேட்டால் கையை விரிக்கிறார்கள். இவர்கள் போன்றோரைத் தொடர்புகொள்ளவும் சரியான முகவரிகள் இல்லை. ஒரு புறம் ஒதுங்கிய நூல் யாவாரம் போற் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள இந்தத் தமிழ்வட்டத்தோடு, இவர்கள் ஆய்வுகளைப் பின்பற்றித் தொடர்ந்து வரும் ஒரு சில ஆய்வாளர், ஆர்வலர் சிலர் கைகளுக்குத் தான் போய்க் கிடைக்கிறது. அமேசன்.காம் போன்ற தளங்களில் ISBNஎண்களோடு உலகெங்கிலும் கிடைக்கக் கூடிய மாதிரி இவர்கள் போன்றோர் நூல் வெளியிட்டால் தான் அனைவரையும் சென்று அடையும்.

-தமிழாய்வாளர்களின் நூல்களை வாங்க முயன்று கடுப்படைந்திருக்கும் ஒருவன்

ஜோ/Joe said...

//இது தமிழ்மையம் வெளியீடு தானே?
எப்படிப் பெற்றீர்கள்? சிங்கை பொத்தகக் கடைகளில் உள்ளதா?//

ஆம் .தமிழ் மையம் வெளியீடு தான் ..சிங்கை நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன் .புத்தக கடையில் உள்ளதா தெரியவில்லை.

ஜோ/Joe said...

//நூலாசிரியரின் ஆய்வு & அர்பணிப்பு போற்றத்தக்கது.//
வாங்க டொன்லீ .அங் மோ கியோ நூலகத்துல இருக்குது .எடுத்து படிங்க.

ஜோ/Joe said...

Rakesh Bro..Thanks!

Anonymous said...

// இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தமிழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது. //

suvanappiriyan said...

ஜோ!

பல அரிய தகவல்களைப் பெற முடிந்தது. இலங்கையில் உள்ள ஒரு மலையை ஆதம்ஸ் மலை என்றும் அனைத்து மதத்தவரும் அந்த இடத்தை புனிதமாக கருதுவதாகவும் கேள்விப் பட்டிருக்கலாம். ஆதம் பேசிய மொழி தமிழ்தான் என்று ஒரு இஸ்லாமிய ஆராய்ச்சியாளர் ஒரு புத்தகம் முன்பு வெளியிட்டிருந்தார். நோவா பிரளயத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஜோ/Joe said...

//இலங்கையில் உள்ள ஒரு மலையை ஆதம்ஸ் மலை என்றும் அனைத்து மதத்தவரும் அந்த இடத்தை புனிதமாக கருதுவதாகவும் கேள்விப் பட்டிருக்கலாம்.//

ஆம் ..இது பற்றிய செய்தியும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

விருபா - Viruba said...

ஆசிரியருடைய மற்றைய புத்தகங்கள், புத்தக வெளியீட்டுவிழா பற்றிய செய்திகள்

இங்கு

உள்ளன.

ஜோ/Joe said...

விருபா,
வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் நன்றி !

பொன்முருகராசு said...

உங்களின் கருத்துக்கள் மிகச்சரியே! நம் தமிழர்களின் பண்பாடு அது, தமிழ்ப்
பற்று , தமிழ்ப்புலமையும், செம்மொழித்தமிழாய்வில் செழுமையும் மிக்கவரை சிறப்பு செய்வதற்கு மனம் வேண்டுமே!
நீங்கள் குறிப்பிட்டமட்டிலும் ஆசிரியருக்கு முனைவர் பட்டம் கொடுக்க பல்வேறு பல்கலைக்கழகங்களும் வரிசைகட்டி நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆசிரியரின் முன்னாள் மாணவன் என்ற முறையில் அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்....இவ்வளவு சிறப்பு வாய்ந்த புத்தகங்களை எழுதிய இவர் ஒரு முனைவரா என வினவியுள்ளீர்கள்! இப்புத்தக ஆசிரியர் ஒரு விருப்ப ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர் என்றால் உங்களால் நம்ப முடியாதுதானே!!! ஆனால் அதுதான் உண்மை.... தங்களின் வசதிக்காக ஆசிரியரின் முழு முகவரி:

50,அண்ணா நகர்,
அரியலூர்-621 712
தமிழ்நாடு.
மின்னஞ்சல் முகவரி:
victor@tholthamizh.com
இணைய தளம்
www.tholthamizh.com
அலைபேசி:
9843273914

ஜோ/Joe said...

//இவ்வளவு சிறப்பு வாய்ந்த புத்தகங்களை எழுதிய இவர் ஒரு முனைவரா என வினவியுள்ளீர்கள்! இப்புத்தக ஆசிரியர் ஒரு விருப்ப ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர் என்றால் உங்களால் நம்ப முடியாதுதானே!!! //

ஆம்! நம்பவே முடியவில்லை!

ஜோ/Joe said...

//நீங்கள் குறிப்பிட்டமட்டிலும் ஆசிரியருக்கு முனைவர் பட்டம் கொடுக்க பல்வேறு பல்கலைக்கழகங்களும் வரிசைகட்டி நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆசிரியரின் முன்னாள் மாணவன் என்ற முறையில் அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்//

நானும் எதிர்நோக்குகிறேன்.

கைப்புள்ள said...

அருமையான தகவல்கள் ஜோ சார். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. விக்டர் அவர்களின் உழைப்பு கண்டிப்பாக போற்றுதலுக்குரியது தான். நீங்கள் இப்பதிவில் காட்டியிருக்கும் மேற்கோள்களைப் படித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது - தமிழ் மொழியின் தொன்மையான தொடர்புகளைக் கண்டு. மிக்க நன்றி.

சுந்தரவடிவேல் said...

பதிவுக்கு நன்றி ஜோ!
இது போன்ற புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டித் தரும் விருபா இணையத்தளத்திற்கும், விருபா இயக்கும் தொல்தமிழ் இணையத்தளத்திற்கும் நம் நன்றிகள்!

2. முனைவர் பட்டம் கொடுப்பார்களா, அங்கீகரிப்பார்களா என்று சோராமல், இத்தகைய புத்தகங்களை வாசிப்பதும், பரப்புவதும், இவற்றைக் குறித்த ஆரோக்கியமான உரையாடல்களை மேற்கொள்வதுமே இத்தகைய நூலாசிரியர்களுக்கு நாமளிக்கும் மதிப்பாகும். தளராவூக்கமே நமது இன்றைய தேவை.

ஜோ/Joe said...

கைப்புள்ள ,சுந்தரவடிவேல் ஐயா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

Good one!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:தகவலுக்கு நன்றி

ஜோ/Joe said...

TVR ஐயா! வருகைக்கு நன்றி.

ஜோ/Joe said...

விருபா ,
மேலே ஒரு அன்பர் புத்தகங்களை பெறுவதில் உள்ள சிரமங்களை சொல்லியிருக்கிறார் ..அவருக்கு உதவியான தகவல்கள் இருந்தால் அளிக்கலாமே?

ஜோ/Joe said...

ம.செ.விக்டர் அவர்களின் நேர்காணல்

dagalti said...

ஜோ,
இந்த நூலை நான் இன்னும் படிக்கவில்லை. நான் இங்கு சொல்ல இருப்பவற்றுக்கு பலத்த பதில்கள் இந்நூலில் இருக்கலாம்.

வரலாற்று/மொழி ஆய்வின் பலத்த சார்புகளால் மிகுந்த கடுப்படைகிறேன். சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்தை பற்றிய சமீபத்தில் வெளிவந்த ஒரு மிக முக்கியமான ஆய்வுக்கட்டுரை: (அவ்வெழுத்து மொழியின் எழுத்துவடிவமா அல்லது பிம்பங்களின் தொகுப்பா என்பதை ஆராயும் கட்டுரை - அதனால் அந்நாகரீகத்தாரின் படிப்பறிவைப் பற்றிய கட்டுரை). ஆனால் இரு சாராரும் குழாயடி சண்டை போடாத குறையாக அடித்துக்கொண்டார்கள். இதில் பொதுமக்களை சென்றடையும் புரிதல்...சுத்தம்.

இந்தியாவில் மட்டும் தான் வரலாற்று ஆய்வு இத்தனை அரசியல் ஆகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

பொதுவாக குமரிக்கண்டம் பற்றி இதுவரை எனக்குப் படிக்கக் கிடைத்தவை அவ்வளவு உவப்பாகப் பட்டதில்லை. தொல்பொருள்/சமுத்திரவியல் சார்ந்த ஆய்வுகள் குறைவாகவும், இலக்கியம் சார்ந்த ஆய்வுகள் நிறையவும் கிடைக்கப் பெறுகின்றன. அதுவே பிரச்சனை இல்லை என்றாலும், ஆசிரியரின் அர்த்தப் படுத்துதல்களுக்கு (interpretations) பெரிய பங்கு இருக்கும் நிலை இருக்கிறது.

சிலப்பதிகாரப் பாடலில் வரும் தொலைவுக் குறிப்பை ஆரம்பப்புள்ளியாக வைத்துக்கொண்டு குமரிக்கண்டத்துக்கு வரைபடம் எல்லாம் போட முனைந்திருக்கிறார்கள் !

சு.கி.ஜெயகரன் (தியோடர் பாஸ்கரனின் சகோதரர்) : 'குமரி நில நீட்சி' என்ற நூலை எழுதியிருக்கிறார். குமரிக் கண்டம் என்ற கருதுகோள் உருவான விதம், வரலாற்றில் அதன் அரசியல், அக்கருதுகோளின் 'எதிரிகள்' அதை கையில் எடுத்துக்கொண்ட முரண்நகை, கடந்தகால் ஆய்வுகளின் தன்மை, தற்கால உத்திகள், குறிப்பாக சமுத்திரவியல் - oceanography, மூலம் கண்டடைந்தவை பற்றி எழுதியிருக்கிறார். நான் படித்த அளவில் மிக திருப்திகரமான நடுநிலை ஆய்வுநூல் அது.


தமிழ் சார்ந்த சொற்பிறப்பியல் (etymology) மிக சிக்கலான ஒன்று. எதை வைத்து ஒன்றை சொல்கிறார்கள் என்று சான்றுகள் கிடையாது. யூகங்கள் மூலம் கண்டடையும் தேற்றங்களே அனேகம்.
ஒலி ஒத்துப்போவதை மட்டும் வைத்து சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஏற்கவோ, மறுக்கவோ போதிய பாண்டித்தியம் எனக்கு இல்லை.

ஆனால்ல் காது இட்டுச்செல்லும் பாதையில் எனக்கு பலத்த சந்தேகம் உண்டு:

ஒரு முறை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார்தாசன் சொன்னார்.

பெற்றோர் ஒத்தல் (parents in agreement) என்பதில் இருந்து தான் betrothal என்ற வார்த்தை வந்தது.

சிரிக்காமல், மிகுந்த நம்பிக்கையுடன் ஆணித்தரமாக சொன்னார். இதை எல்லாம் எப்பிடி எதிர்வாதம் செய்வது. betroth என்பது troth (truth என்பதற்கு பொது வேர் என்று நினைக்கிறேன்) என்ற சொல்லிலிருந்து 'வாக்கு கொடுப்பது' என்ற அர்த்தப்படும்படி வந்த சொல் என்று கொஞ்சம் எளிதாகவே புரிகிறது.

அதனால் தான் காதை மட்டும் நம்புவதில் எனக்கு தயக்கம்.


ஜெயகரனின் புத்தகமும் வசவுகள் வாங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். சில பகுதிகள் வாசிப்பதற்கு எளிதாக இல்லாத கரடுமுரடானவை தான். ஆனால் குமரிக்கண்டம் கருதுகோளை பல முனைகளில் இருந்து ஆராய்ந்து எழுதிய நூலாக அது எனக்குப் பட்டது.

இது தொடர்பாக எனக்குத் தோன்றிய சில எண்ணங்கள்

ஜோ/Joe said...

//ஒலி ஒத்துப்போவதை மட்டும் வைத்து சொல்கிறார்களா என்று தெரியவில்லை.//

இதை பதிவிலேயே தெளிவாக சொல்லியிருக்கிறேன்.."வார்த்தைகளுக்கு உள்ள ஒற்றுமைகளை விளக்கும் போது வெறும் ஓசைகள் தரும் ஒற்றுமையாக இருந்தால் அதை வலுவானதாக எடுத்துக்கொள்ள முடியாது .ஆனால் ஓசைகள் மட்டுமின்றி மூல மொழியில் கொள்ளப்படும் அர்த்தமும் , தமிழ் வார்த்தையின் அர்த்தமும் ஒன்றாக இருப்பதே வலுவான ஆதாரமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது."

dagalti said...

குறிப்பாக பிரளயம் சார்ந்த கதைகள் உலகில பற்பல நாகரீகங்களில், பல்வேறு கதைகளில் இருப்பதை ஜெயகரன் குறிப்பிடுகிறார்.

நோவா தவிற மத்ஸ்யாவதாரத்திலும் இதே கதை தான். கடவுள் ஒரு பெரிய மீனாக வந்து ஒரு கப்பலில் சில ஜீவராசிகளை இழுத்து சென்று காப்பாத்துவது தான் கதை. இதே போல ஆஃப்ரிகா, தென் அமெரிகாவில் எல்லாம் இருக்கிறதாம்.

மனிதன் ஒரு இடத்தில் இருந்தபோது நிகழ்ந்த நிகழ்வை,வழிவழியாகச் சொல்லப்பட்டு வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற சந்ததிகள் வெவ்வேறு வகையில் சொன்ன கதையா. அல்லது பல இடங்களில் நடந்த கடல்சார்ந்த அழிவுகளை அந்த அந்த மனிதக் குழுக்கள் நினைவுகூறியவையா என்ற கேள்வியை ஜெயகரன் பேசுகிறார்.

'கடற்கோளால் அழிந்த தொன்மையான நாகரீகம்' என்பது பல இடங்களில் வழங்கப்படும் 'தன் வரலாற்றை சொல்லுதலின்' ஆரம்பப்புள்ளியாக இருக்கிறது.

ஜோ/Joe said...

dagalti,
விக்டர் நிறுவ முனையும் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கோண்டு ஆதாம் தமிழன் ,நோவா தமிழன் ,தமிழ் தான் மனித இனத்தின் முதல் மொழி என வெறும் கும்மி அடிப்பது என் நோக்கமில்லை .இந்த புத்தகத்தில் அதீத அனுமானங்கள் இருக்கலாம் .ஆனால் ஆச்சரியப்படுத்தும் அர்த்த ஒற்றுமைகள் கொட்டிக் கிடக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

dagalti said...

Okay. As I said, I have not yet read the book. Nor did I mean to imply you bought all that was said en masse either. Was trying to outline what Jayakaran's book said. And that the 'kadarkOL' and the discussions about pre-existing civilization (central to the kumari kaNdam) are not exclusive to us. I found that perspective very interesting that various diverse civilizations have such great similarity in the story exploring their origins and epochal events.
(some problem with ekalappai hence the English)

AMAL said...

தீபாவளி தமிழர் விழா அல்ல
இராவணனை (தமிழனை) கொன்று வடவர் கொண்டாடும் விழா
இதை தமிழனே கொண்டாடுவது வேடிக்கை
மதம் எப்படி தமிழனை அடிமை படுத்தி இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்
விழாக்கள் நல்லது அதற்காக உன்னை கொன்றவனையா கொண்டாடுவது?
கேவலம்.....
தன் துணைவியை ஐயம் கொண்டு தீமிதிக்க சொன்னவன் நல்லவனா இல்லை
கடத்தினாலும் தொடாதவன் நல்லவனா?
என்ன பூ சுற்றுகிறார்கள்
எல்லாம் ஏமாற்று..
இதை நம்பும் தமிழன் ஒரு கோமண சுற்று ....

தமிழ் said...

சொல்லாய்வு அரிமா அவர்களின்
பல பொத்தங்களும் சிங்கை தேசிய நூலகத்தின் படித்துள்ளேன்
உண்மையிலே அயராத உழைப்பும் சிந்தனையும் மலைக்க வைக்கின்றன.

தங்களின் கட்டுரையும் இடுகையும் மகிழ்ச்சியை அளிக்கின்றன.

அவரின் சில ஆய்வுக்கட்டுரைகள்

1.காரணம், காரியம்

2.அகிலாண்டம்

3.தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 1

4.தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 2

5.தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 3

Tamil Home Recipes said...

மிகவும் அருமையான பதிவு.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives