Tuesday, October 17, 2006

மதுரை இடைத்தேர்தல் முடிவு - விஜயகாந்தின் உள்குத்து

கொஞ்ச நாளாகவே விஜயகாந்த் செய்யும் அரசியலின் மீது எனக்கு ஒரு சந்தேகம் .அந்த சந்தேகம் இப்போது உண்மையாகும் அறிகுறிகள் தெரிகின்றன.

தனிக்கட்சி ஆரம்பித்தது முதலே விஜயகாந்த் திமுக-வையும் கலைஞரையும் கடுமையாக தாக்கி வருகிறார் .இன்று தன்னை எம்.ஜி,ஆர் பக்தராக காட்டிக்கொள்ளும் விஜயகாந்த் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கலைஞர் அபிமானி என அறியப்பட்டவர் .திமுகவினர் விஜயகாந்தை தங்கள் கட்சி அபிமானி என்றே முன்பு அறிந்திருந்தனர் .ஆனால் தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு அவர் திமுக ,அதிமுக இரண்டையும் தாக்கினாலும் ,திமுக எதிர்ப்பை அளவுக்கு அதிகமாகவே செய்து வருகிறார் .அதிமுக-வை பட்டும் படாமல் ஒப்புக்கு மட்டுமே தாக்குவதோடு தன்னை எம்.ஜி,ஆர் பக்தராக முன் நிறுத்தி வருகிறார்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது அவருடைய வருகை அதிமுகவை விட திமுகவுக்கே வாக்கு இழப்பாக இருக்கும் என பத்திரிகைகள் ஆரூடம் சொன்னன. அவரும் ஏதோ திமுகவை எதிர்த்தே கட்சி ஆரம்பித்தது போல பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதிலுள்ள சூட்சுமம் என்னவாக இருக்க முடியும் ?

தமிழகத்தில் கலைஞர் எதிர்ப்பு ஓட்டு என்பது 50% மேல் உள்ளது .இதில் பெரும் பகுதியை அதிமுக அறுவடை செய்து வந்தது .தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மூலம் கிடைக்கும் சொற்ப சதவீதத்தோடு கலைஞர் எதிர்ப்பு ஓட்டுக்களில் பெரும் பகுதியை கைப்பற்றுவதே விஜயகாந்தின் திட்டமாக இருக்க முடியும் .அதோடு எம்.ஜி.ஆர் அபிமானிகளின் ஓட்டுக்களையும் பெற முயல்வது .அதற்கு ஒரே வழி கலைஞரை எதிர்ப்பதாக காட்டிக்கொள்வது .

இதன் மூலம்
1.கலைஞரை எதிர்ப்பதற்காக மட்டுமே அதிமுகவுக்கு வாக்களிக்கும் கூட்டத்தின் ஒரு பகுதி விஜயகாந்துக்கு வாக்களிக்கும்.

2.கலைஞர் எதிர்ப்பு என்ற தாரக மந்திரத்தை கொண்டே எம்.ஜி.,ஆர் வெற்றி பவனி வந்தது போல ,கலைஞர் எதிர்ப்பாளராகவும் எம்.ஜி.ஆர் பக்தராகவும் காட்டிக்கொண்டால் ,கலைஞர் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஜெயலலிதாவை வேண்டாவெறுப்போடு ஆதரித்து வந்த எம்.ஜி.ஆர் அபிமானிகள் ஓட்டுக்களையும் பெற முடியும்.

3.ஜெயலலிதாவை விட கலைஞரை அதிகமாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டால் கலைஞர் எதிர்ப்பாளர்கள் மகிழ்ந்து தன் பக்கம் திரும்புவார்கள்.

இதோ மதுரை இடைத்தேர்தல் முடிவுகள்...

திமுக - 57 %
அதிமுக - 24 %
தேமுதிக - 19 %


கலைஞரும் விஜயகாந்தும் உள்குத்து கூட்டணி அமைத்துக்கொண்டு ,கலைஞர் இயக்கத்தில் விஜயகாந்தின் நடிப்பு பயணம் வெற்றிப்பாதையில் செல்வது போலத்தான் தெரிகிறது.

28 comments:

Unknown said...

//இதோ மதுரை இடைத்தேர்தல் முடிவுகள்...

திமுக - 57 %
அதிமுக - 24 %
தேமுதிக - 19 %//

திமுக+ காங்கிரஸ்+ மா.கம்யூ+ இ.கம்யூ+ பா.ம.க+ வி.சி+ முஸ்லிம் லீக் = 57%

அதிமுக+மதிமுக=24%

தேமுதிக=19%

ஜோ/Joe said...

செல்வன்,
திமுக-வுக்கு மட்டும் 57% வாக்குகள் இருக்குண்ணு நான் சொல்ல வரவில்லை .சரி! திமுக வாக்குகள் 40%-னு வச்சுக்குவோமே!

ஆனால் அதிமுக + மதிமுக -வெறும் 24% சதவீதம் தானா?

தேமுதிக 19% பெரும்பகுதி எங்கிருந்து (கலைஞர் ,திமுக எதிர்ப்பு ஓட்டு) வந்திருக்குண்ணு தெரியல்லியா?

We The People said...

எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது ஜோ. நீங்க சொல்லுவது சரி போலவே தோன்றுகிறது.

எல்லாம் அரசியல் தாங்க ஜோ!!!

ஜோ/Joe said...

செல்வன்,
அதிமுக+மதிமுக=24% .சரி மதிமுக ஒரு 5% வச்சுக்கலாமா ?அப்படீண்ணா அதிமுக வெறும் 19% ,அதாவது அதிமுகவும் தேமுதிக-வும் ஒரே சதவீதம்..!

Unknown said...

ஜோ

திமுகவுக்கு எந்த காலத்திலும் தனியா 40% ஓட்டு கிடையாது.

மதுரை மார்க்ஸிஸ்ட் கட்சியின் கோட்டை. அதுபோக அந்த தொகுதியில் வி.சிக்கு கணிசமா ஆதரவு உண்டு.திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மேக்ஸிமம் 30% ஆதரவுக்கு மேல் தனியா நின்னா கிடைக்காது.

விஜயகாந்துக்கு விழுவதெல்லாம் திமுக,அதிமுக இரண்டு கட்சிகள் ஆடும் ஆட்டங்களையும் கண்டு வெறுத்து போயிருக்கும் பொதுமக்களின் ஓட்டுத்தான்.

Unknown said...

//செல்வன்,
அதிமுக+மதிமுக=24% .சரி மதிமுக ஒரு 5% வச்சுக்கலாமா ?அப்படீண்ணா அதிமுக வெறும் 19% ,அதாவது அதிமுகவும் தேமுதிக-வும் ஒரே சதவீதம்..! //

உண்மை தான்.

தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய கட்சியாய் தேமுதிக வளர்ந்து நிற்பதையே இந்த தேர்தல் காட்டுகிறது.

G.Ragavan said...

இப்பல்லாம் அரசியல்வாதிங்க யாரையும் நம்புறதில்லை. எல்லாம் கூட்டுக்களவாணிங்கதான். அபீஸ்ல ஒரு நண்பன் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமே ஒப்பந்தங்கள் இருந்தாலும் இருக்கலாம்னு சொன்னான். நம்பக் கஷ்டமாயிருந்தாலும் உண்மையிலேயே இருந்தாலும் இருக்கலாம். ஆனா ஒன்னு..விஜயகாந்துக்கும் அரசியல் லேசுமாசாத் தெரிஞ்சிருக்கு. அடுத்த தேர்தல்ல நல்ல வரவேற்பு அவருக்கு இருக்கும்னு நெனைக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

அருமையான ஆய்வு ஜோ.

எனக்கும் ஆரம்ப முதலே.. அதாவது முந்தைய தேர்தலுக்கு முன் மாநாடு நடத்தில் அதில் நான் என் சொத்திலிருந்து ஏழைகளுக்கு இவ்வளவு கொடுத்தேன், அவ்வளவு கொடுத்தேன் என்று பேசினாரே, அப்போதிருந்தே விஜயகாந்த் மீது பயங்கர எரிச்சல்.

ஆகவே அவருக்கு நம் த.நா முட்டாள் மக்கள் (கடுஞ்சொல்லுக்கு மன்னியுங்கள்) கணிசமான விழுக்காடு வாக்குகளை அளித்தபோது சை.. என்ன மக்கள் இவர்கள் என்று நொந்துபோனேன்.

இப்போதும் சென்னையில் எங்களைப் போன்ற பலரும் எந்த பிரச்சினையுமில்லாமல் வாக்களிக்க முடிந்தபோது இவரால் மட்டும் வாக்களிக்க முடியவில்லை என்பதுபோல் ஒரு பொய்யான அறிக்கையை விட்டபோது 'போய்யா நீயும்.. ஒன் அரசியலும்' என்று தோன்றியது.

இம்முறை சென்னையில் வன்முறைகள் இருந்தது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் 2001ல் அ இஅதிமுக செய்த வன்முறையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது ஒன்றுமே இல்லை. அதுவும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஒட்டுமொத்தமாக திமுகவைச் சார்ந்தவர்களே என்று இவர் வெள்ளிக்கிழமை பகலே அறிக்கையிடுவது சற்று ஓவர்தான்..

அதாவது இவர் அதை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டதைப் போல் தெரிகிறது..

இப்போதும் இவருக்கு சில ஊராட்சிகள் கிடைக்கலாம். என்னைக் கேட்டால் கிடைக்க வேண்டும். அப்போதுதான் இவருடைய கட்சியின் அரைகுறை நிர்வாகத் திறமை வெளிவரும்..

ஜோ/Joe said...

தலைப்பை முதலில் 'உள்ளாட்சி தேர்தல்' என்று தவறாக இட்டிருந்தேன் .இப்போது திருத்தியிருக்கிறேன்.

G.Ragavan said...

இன்னொன்னு. கருணாநிதி பிடிக்கலைன்னு ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்பொடுறது. ஜெயலலிதா பிடிக்கலைன்னு கருணாநிதிக்கு ஓட்டுப் போடுறது...இப்பிடியே எதிர்ப்பு ஓட்டுப் போட்டுத்தானே வீணாப் போனோம். ஜெயலலிதாவ எதுத்தா கருணாநிதிய ஆதரிக்கனும்னும் கருணாநிதிய எதுத்தா ஜெயலலிதா ஆதரவுன்னும் கண்மூடித்தனமா முடிவுக்கு வர்ர அளவுக்கு நம்மாளுங்க இருக்காங்க. இதுவுல விஜயகாந்த் அவர் பங்குக்குங்கு அள்ளிக் குடிக்கிறாரு.

அருண்மொழி said...

//இப்போதும் சென்னையில் எங்களைப் போன்ற பலரும் எந்த பிரச்சினையுமில்லாமல் வாக்களிக்க முடிந்தபோது//

சார் சும்மா டமாசு பண்ணாதீங்க சார். வலைபதிவர்களின் பதிவுகளை படித்தால் சென்னையில் 2 பேர் மட்டுமே (கருணாநிதி, ஜெயலலிதா) ஓட்டு போட முடிந்தது என நினைத்திருந்தேன் :-)

ஜோ/Joe said...

//இம்முறை சென்னையில் வன்முறைகள் இருந்தது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் 2001ல் அ இஅதிமுக செய்த வன்முறையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது ஒன்றுமே இல்லை. அதுவும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஒட்டுமொத்தமாக திமுகவைச் சார்ந்தவர்களே என்று இவர் வெள்ளிக்கிழமை பகலே அறிக்கையிடுவது சற்று ஓவர்தான்..
//

ஜோசப் சார்,
அதிமுக அளவுக்கு அராஜகம் பண்ணவில்லை என்பது உண்மைதான் .ஆனால் கலைஞர் ஆட்சி மீது ஓரளவு நல்லெண்ணம் நிலவும் நேரத்தில் ,அதுவும் திமுக பெயர் கெட்டுக் கிடக்கும் சென்னையில் திமுகவினர் மேலும் பேரைக் கெடுக்காமல் இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

krishjapan said...

ஜோ, ஒரு விஷயம். திமுகவில் பொறுப்பில் இருக்கும் ஒரு நண்பனைக் கேட்டால், இது தேர்தல் வெற்றிக்காக செய்யப்பட்டதில்லை என்றும், ஆட்சி கையில் இருந்தும், சில கணக்குகளை நேர் செய்யாவிட்டால், சென்னையில் திமுக காணாமல் போய்விடுமென்பதால் செய்யப்பட்டதென்றும் சொன்னான். சரிவர புரியவில்லை. ஆனால், 2001 அதிமுக வன்முறை, யாருக்குமே சென்ற சட்டமன்ற தேர்தலில் ஞாபகம் வரவில்லையென்பதையும், சென்னையில் வேறெங்கையும்விட, அதிமுக அதிக இடங்களைப் பெற்றதையும் நினைக்கும்போது, ஏதோ கொஞ்சம் புரிவது போலுள்ளது...

Unknown said...

ஜோ அருமையான அலசல். சற்று முன் என் நண்பரோடு நான் பகிர்ந்துக் கொண்டிருந்தத் தகவல்களைத் தங்கள் பதிவினில் பார்த்தப் போது என் கருத்து உங்களோடு ஒத்துப் போவது தெரிகிறது. அதாவது.. கேப்டனின் வருகையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அதிமுக வாக்கு வஙி தான்...

இது இரு தேர்த்லகளிலும் தெளிவாய் விளங்குகிறது.

செல்வன்.. திமுகவிற்கு 40% சதவிகித வாக்குகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் 30% க்கு குறையாமல் இருக்கும் எனப்து என் கணிப்பு

குழலி / Kuzhali said...

ஜோ நீங்க சொன்ன சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.

http://kuzhali.blogspot.com/2006/04/blog-post_12.html என்ற பதிவில் என் முதல்கேள்வியே இது தான்.

1. எம்.ஜி.ஆர் பெருமை பாடும், எம்.ஜி.ஆரின் வாரிசாம், கறுப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த் எம்ஜிஆரின் பக்தர்கள், அபிமானிகளான அதிமுக ஓட்டுகளை விட எம்ஜிஆரின் எதிரியான திமுக ஓட்டை அதிகம் பிரிப்பார் என்று பத்திரிக்கைகள் சொல்வது எப்படி? ஒன்னும் புரியலை

கலைஞர் எதிர்ப்பு அரசியல் இன்னமும் உயிரோடு தான் இருக்கு போல...

Anonymous said...

// செல்வன் said...
ஜோ

திமுகவுக்கு எந்த காலத்திலும் தனியா 40% ஓட்டு கிடையாது.

மதுரை மார்க்ஸிஸ்ட் கட்சியின் கோட்டை. அதுபோக அந்த தொகுதியில் வி.சிக்கு கணிசமா ஆதரவு உண்டு.திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மேக்ஸிமம் 30% ஆதரவுக்கு மேல் தனியா நின்னா கிடைக்காது.//

< யப்பா முத்து (தமிழினி) உங்காளுக்கு இன்னொருதடவ கூட்டிட்டு போயி வகுப்பெடுங்க.....

இம்ச தாங்க முடியல !

மதுர மார்க்ஸிட் கோட்டை என்று கம்யூனிஸ்ட்களுக்கே ஆச்சர்யமான தகவல்களை அள்ளி விடுறாரு.

குறிப்பா அந்த பகுதிகளில் வி.சி பெரியளவில் கிடையாது, யார்னா அசலூர் காரனுங்ககிட்ட அள்ளிவுடுங்க .b>



//விஜயகாந்துக்கு விழுவதெல்லாம் திமுக,அதிமுக இரண்டு கட்சிகள் ஆடும் ஆட்டங்களையும் கண்டு வெறுத்து போயிருக்கும் பொதுமக்களின் ஓட்டுத்தான்.//

< போன முறை எப்படியோ இந்த தடவை விழந்த தே.மு.தி.க ஓட்டு அந்த கட்சியின் வேட்பாளருக்கு, தொகுதியில் பெருமளவில் இருக்கும் அவர் சார்ந்த யாதவ சமுதாய ஓட்டுக்கள்தான்.b>

We The People said...

ஜோசப் சார்,
அதிமுக அளவுக்கு அராஜகம் பண்ணவில்லை அப்படின்னா என்ன சொல்லவரீங்க ... கம்மியா பண்ணா தப்பில்லனா??

அமைதிபடை ஸ்டைல எங்கெல்லாம் திமுக வீக்கா இருக்கோ நல்லா analyse அங்கயெல்லாம் UNIFORM போட்ட ரௌடிகள்(தமிழகத்தில் முதல் முறையா!! கருப்பு சட்டை & வெள்ளை வேஷ்டி (அ) Trousers ) வைத்து பிச்சு எடுத்துட்டாங்க, அதுவும் போலீஸ் துணையோட. நீங்க என்னமோ தமாஷ் பண்ணறீங்க... Here comparing is not fair. People will loose their interest in democracy soon.

Anonymous said...

மதுர மார்க்ஸிட் கோட்டை என்று கம்யூனிஸ்ட்களுக்கே ஆச்சர்யமான தகவல்களை அள்ளி விடுறாரு. //

மதுரையில் 1998 பாராளுமன்ற தேர்தலில் தனிச்சு நின்னு சி.பி.எம் எத்தனை ஓட்டு வாங்கிச்சுன்னு உங்க தலைவரை கூப்பிட்டு கேட்டு வகுப்பெடுங்க. சரியா?

அதே அனானி(வேற)

ஜோ/Joe said...

மதுரை பொதுவாக அதிமுக கோட்டையாகத் தான் இருந்திருக்கிறது .ஆனால் இம்முறை சென்ற சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளில் கிட்டதட்ட 15000 வாக்குகள் சரிவை கண்டுள்ளது .இதை பெரிதும் அறுவடை செய்தது தேமுதிக தான்.

அருண்மொழி said...

கே:- விஜயகாந்த் கட்சி 2-வது இடத்தை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறதே?

ப:- பாராட்டப்பட வேண்டிய முன்னேற்றம்.

கருணாநிதி பேட்டி (நன்றி - மாலைமலர்)

ஜோ/Joe said...

//அபீஸ்ல ஒரு நண்பன் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமே ஒப்பந்தங்கள் இருந்தாலும் இருக்கலாம்னு சொன்னான். //

ராகவன்,
முன்பு எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்குமே மறைமுக ஒப்பந்தங்கள் உண்டு என சிலர் அடித்துச் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஜோ/Joe said...

//ஆனால், 2001 அதிமுக வன்முறை, யாருக்குமே சென்ற சட்டமன்ற தேர்தலில் ஞாபகம் வரவில்லையென்பதையும், சென்னையில் வேறெங்கையும்விட, அதிமுக அதிக இடங்களைப் பெற்றதையும் நினைக்கும்போது, ஏதோ கொஞ்சம் புரிவது போலுள்ளது...
//
உண்மை .மக்களின் ஞாபக மறதியே அரசியல்வாதிகளின் பலம்

Anonymous said...

may be it is true..

ஜோ/Joe said...

விஜய காந்தை 'குடிகாரன்' என்று ஜெயலலிதா தாக்கியிருக்கிறார் .விஜயகாந்த் திமுகவை திட்டுவதை இதுவரை ரசித்து வந்த ஜெ-வுக்கு விஜயகாந்த் அல்வா கொடுத்தது திமுக வுக்கல்ல,அதிமுக -வுக்கு தான் என இப்போது தான் புரிந்திருக்கிறது போல.

லக்கிலுக் said...

//விஜய காந்தை 'குடிகாரன்' என்று ஜெயலலிதா தாக்கியிருக்கிறார் .//

கெளம்பிட்டாங்கய்யா.... அம்மா கெளம்பிட்டாங்க...... :-))))

VSK said...

மிக அருமையான கணிப்பு, திரு.ஜோ!

இதே ஐயம் எனக்கும் வந்தது.

ஆனால், எப்படியோ, ஜெ. தோற்று, இரு கழகங்களும் இணைந்தால் அதுவும் வரவேற்கத் தக்கது தானே!

இதில் இன்னொன்றும் கேள்விப் பட்டேன்.
இதற்கு பின்னணியில் ஒரு வெளிநாட்டு அமைப்பின் ஆதரவும் இருப்பதாக!

அவர்களுக்கு ஜெ வெல்லுவது பிடிக்காது.
இதற்கு இவர் இருவரும் [க ; வி.க] ஒத்துழைக்கிறார்கள்!
என!

Muthu said...

//திமுகவில் பொறுப்பில் இருக்கும் ஒரு நண்பனைக் கேட்டால், இது தேர்தல் வெற்றிக்காக செய்யப்பட்டதில்லை என்றும், ஆட்சி கையில் இருந்தும், சில கணக்குகளை நேர் செய்யாவிட்டால், சென்னையில் திமுக காணாமல் போய்விடுமென்பதால் செய்யப்பட்டதென்றும் சொன்னான். //

கிருஷ்ணா,

புரியுது...(சென்னையில் நடந்தது கணக்கு தீர்ப்புதான் என்று நான் பத்ரி பதிவில் எழுதியுள்ளேன்)

அப்புறம் நாம் விரும்பினாலும் இல்லாட்டியும் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சி திமுகதான்.அதுவும் கேப்டனின் வரவால் புனிதபிம்பங்கள் பிளவுபட்ட நிலையில்.

அதிமுக
தேமுதிக
காங்கிரஸ்
பா.ம.க

இப்படித்தான் ரேங்க் வரும்

கம்யூனிஸ்ட்,மதிமுக எல்லாம் கடைசியில் தான் வருவாங்க...

krishjapan said...

முத்து, உங்க வரிசையில காங்கிரஸின் இடத்தில் நான் வேறுபடுகிறேன். தனித்து நிற்றல் வி.கா.தின் பலமென்றால், கூட்டு சேர்வது காங்,கின் பலம். காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்தால் கிடைக்கும் ஓட்டுக்கள் வேறெந்த கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலும் கிடைக்காது, பரவலாக, என்பது என் எண்ணம்....

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives