Monday, August 28, 2006
வேட்டையாடு விளையாடு
பொதுவாகவே கமல் படம் என்றாலே ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் குறை சொல்லுவதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடி வரிசைப்படுத்துவது என்று ஒரு பெருங்கூட்டமே கிளம்பி விடும் .மற்ற நடிகர்கள் படங்களுக்கு இந்த அளவுக்கு அவர்கள் மெனக்கெடுவதில்லை . இதிலிருந்து கமல் மட்டுமே சீரியஸாக எடுத்துகொள்ளக் கூடிய நடிகர்களில் முதன்மையானவர் என்பது தெளிவாகிறது
கமல் என்னும் நடிகனிடமிருந்து இன்னொரு 'குருதிப் புனல்'-ஐயும் கவுதமிடமிருந்து இன்னொரு 'காக்க காக்க'-வையும் பலர் எதிர் பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது . 'வேட்டையாடு விளையாடு' குருதிப்புனல் அளவுக்கு நேர்த்தியான கமல் படமல்ல .காக்க காக்க-வின் சுவடுகளை மறைக்க இயக்குநரால் முடியவில்லை தான் .தமிழில் மிகச்சிறந்த படம் என்று இப்படத்தை சொல்ல முடியாது தான் .ஆனால் போலிஸ் என்றால் 'வால்டர் வெற்றி வேல்" அல்லது சந்து முனையில் பீரில் முகம் கழுவும் "சாமி' போன்ற அரைத்த மாவுகளை தூக்கி கடாசி விட்டு இயல்பான டி.ஜி.பி ராகவனை ரசிக்கப் பழகுங்கள் தமிழ் மக்களே!
கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை .ஆனால் காட்சி அமைப்புகள் நேர்த்தி படத்தின் ஓட்டத்தை சீராக கொண்டு செல்கிறது .படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பது பொதுவாக பலரும் கருதினாலும் ,எந்த இடத்திலும் போரடித்ததாக எனக்கு நினைவில்லை.
கமல் என்ற மகா கலைஞனுக்கு இந்த பாத்திரம் அல்வா சாப்பிடுவது மாதிரி .யானைப் பசிக்கு சோளப்பொரி! இதற்கு கமல் தேவையா? -என்று என் நண்பர் கேட்டார் .நானும் தமிழில் உள்ள மற்ற எல்லா நடிகர்களையும் ஒவ்வொருவராக இதில் பொருத்தி மனதுக்குள் நினைத்துப் பார்த்தேன் .கமலின் மகத்துவம் தெரிந்தது .40-களில் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ள டி.ஜி.பி ராகவன் பாத்திரத்துக்கு இந்த அளவுக்கு கம்பீரத்தையும் ,பண்பட்ட தோற்றத்தையும், இயல்பையும் ,ஒற்றை வரிகளில் பொட்டிலடிதாற் போல் புரிய வைக்கும் நேர்த்தியையும் வெளிக்கொணர கமலை விட்டால் வேறு யாரால் முடியும்?கமலின் முந்தைய சாதனைகளை கணக்கிலெடுத்துக் கொண்டால் அவருக்கு இந்த படம் ஒரு மைல் கல் அல்ல .ஆனால் டி.ஜி.பி ராகவன் என்ற பாத்திரம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் தான் .மற்ற இளைய நடிகர்களுக்கு ஒரு எதிர் கால பாடம்.
இயக்குநர் கவுதமைப் பொறுத்தவரை காக்க காக்க-வை இன்னும் மறக்கவில்லை என தெரிகிறது . அது போலவே இதிலும் வில்லன் நீள தலைமுடி வைத்துக்கொண்டு ,அதே பாணியில் வசனம் பேசுகிறார் .காக்க காக்கவில் ஹீரோவின் நண்பராக வந்தவர் இதில் வில்லனாக வருகிறார் . மருத்துவம் படிக்கும் இரு வில்லன்களுக்கும் ஏன் இவ்வளவு வெறி என்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் போதுமானதாக இல்லை . வில்லன் முடியை முன்னால் தூக்கிப் போட்டுக்கொண்டு மரணமில்லா பெருவாழ்வு தரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் ,ஏழைகளுக்கு சேவை செய்யப்போவதாகவும் உச்சஸ்தாயில் கத்தவிட்டு என்ன சொல்ல முயல்கிறார் இயக்குநர் என்பது புரியவில்லை.
கமலினி சில நிமிடங்கள் வந்து மனதில் நிற்கிறார் .ஜோதிகா -கமல் உரையாடல் ,பின்னர் காதல் தமிழ் சினிமா வரையறைகளுக்குள் வராமல் இயல்பாக இருக்கிறது . "சாப்ட்வேரா.. இல்லைங்க..நான் போலிஸ்..ஹார்ட்வேர்" என்று சொல்லும் போது இயல்பான நகைச்சுவைக்கு தியேட்டர் அதிர்கிறது .இப்படி பல இடங்களில் கமலின் ஓரிரு வார்த்தைகள் ,டைமிங் ரசிக்க வைக்கின்றன. இன்றிலிருந்து நீயும் குழந்தையும் என் சொந்தம் என்று கமல் சொல்லும் போது ஜோதிகா உணர்ச்சிகளை அருமையாக வெளிக்காட்டியிருக்கிறார்.
தமிழில் ஓளிப்பதிவில் நான் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம் .சேஸிங் காட்சியில் கேமராவை போட்டு தலைகீழாக புரட்டியது தவிர ,படம் முழுக்க காமிரா கவிதை படித்திருக்கிறது .
அமெரிக்க போலிஸ் அதிகாரிகளோடு உரையாடல்கள் இயல்பாக ஆங்கிலத்தில் ,தமிழ் சப்-டைட்டில்களுடன் காட்டப்படுகின்றன .ஹேராமில் இது போல தமிழில் சப் -டைட்டில் போட்டிருக்கலாம் என்று குறை சொன்னார்கள் .இப்போது தமிழ் நாட்டு மக்களுக்கு ஒன்றுமே புரியாதே ,அதனால் அமெரிக்க அதிகாரி ஜுனூன் தமிழிலேயாவது பேச விட்டிருக்கலாம் என்று குறை சொல்லுவார்கள் .அப்படியே செய்து விட்டால் அமெரிக்க அதிகாரி தமிழ் பேசுவது போல அபத்தக்காட்சிகள் கமல் படத்தில் என்று மீண்டும் குறை சொல்லுவார்கள் .
இசையைப் பொறுத்தவரை பின்னணி இசையில் குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை .பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருக்கின்றன .ஹரிஸ் ஜெயராஜைப் பொறுத்தவரை அவரின் சில பாடல்களில் தேவாலயங்களில் பாடப்படும் கிறிஸ்தவப்பாடல்களின் சாயல் இருப்பது போல எனக்குத் தோன்றும் .குறிப்பாக "பார்த்த முதல் நாளே.." பாடலில் "உன் அலாதி அன்பினில்.." எனும் போது புனித வெள்ளியன்று கோவிலில் இருப்பது போல இருக்கிறது .சின்ன வயதில் அவர் தேவாலய இசைக்குழுவில் இருந்ததால் அந்த பாதிப்பு இன்னும் மறையவில்லை போலிருக்கிறது.
குறை சொல்லுவதற்கு இந்த படத்தில் நிறைய இருக்கிறது .ஆனால் இது நிராகரிக்கத்தக்க படம் அல்ல ."சாமி' போன்ற படங்கள் 150 ஓடுமென்றால் ,இந்த படம் 300 நாள் ஓடும் தகுதியுள்ளது .தமிழ் ரசிகர்கள் இதை உணர வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
நம்ம விமர்சனம் இங்கே. சுட்டவும்
well said.
இங்கே வர நாளாகும்(-:
//சேஸிங் காட்சியில் கேமராவை போட்டு தலைகீழாக புரட்டியது தவிர ,படம் முழுக்க காமிரா கவிதை படித்திருக்கிறது//
குறிப்பாக இரண்டொரு ஸீன்களில் வரும் தெள்ளத் தெளிவான நீல வானம், இலையுதிர் கால காட்சிகள், இரவு நேர அமெரிக்க ஸ்கைலைன் ஆகியவை மனதில் நிற்கிறது.
//அதனால் அமெரிக்க அதிகாரி ஜுனூன் தமிழிலேயாவது பேச விட்டிருக்கலாம் என்று குறை சொல்லுவார்கள்//
நல்ல காலம்ங்க! இந்த காரியத்தப் பண்ணாம் விட்டாங்க. இல்லன்னா படத்துல காமெடி இல்லாத குறையை இது போக்கியிருக்கும்.
:)
//குறை சொல்லுவதற்கு இந்த படத்தில் நிறைய இருக்கிறது .ஆனால் இது நிராகரிக்கத்தக்க படம் அல்ல//
உண்மை. நல்லாச் சொன்னீங்க.
ஜோ! நல்ல விமர்சனம்!
உங்களின் முழு விமரிசனமும் படித்தேன் , ஒரு நல்ல நடிகனின் படம் வெற்றியடைய வேண்டும் என்ற உங்களின் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்!
அன்புடன்...
சரவணன்.
நல்ல விமர்சனம். நச்சுன்னு சொன்னீங்க. பாராட்ட ஒருத்தரும் வரமாட்டாங்க. குற்றம் கண்டுபிடிக்கக் கூட்டமா வருவாங்க.
// ஆனால் போலிஸ் என்றால் 'வால்டர் வெற்றி வேல்" அல்லது சந்து முனையில் பீரில் முகம் கழுவும் "சாமி' போன்ற அரைத்த மாவுகளை தூக்கி கடாசி விட்டு இயல்பான டி.ஜி.பி ராகவனை ரசிக்கப் பழகுங்கள் தமிழ் மக்களே! //
ரொம்பச் சரியாச் சொன்னீங்க. ஆனா பேரு மட்டும் இடிக்குதே....இதுதானா இளா சொன்னது?
// இன்றிலிருந்து நீயும் குழந்தையும் என் சொந்தம் என்று கமல் சொல்லும் போது ஜோதிகா உணர்ச்சிகளை அருமையாக வெளிக்காட்டியிருக்கிறார். //
ஜோதிகா ஒரு நல்ல நடிகை. அவர் வந்த புதிதில் தொப்பை, முழிமுழின்னு முழிக்கிறவ்ர்னு சொன்னாங்க....ஆனா அவங்க நின்னு நிலையா நல்லபடி நடிக்கிறாங்க. இனிமே சூர்யா மட்டுந்தான் பாக்க முடியும்.
// குறிப்பாக "பார்த்த முதல் நாளே.." பாடலில் "உன் அலாதி அன்பினில்.." எனும் போது புனித வெள்ளியன்று கோவிலில் இருப்பது போல இருக்கிறது .சின்ன வயதில் அவர் தேவாலய இசைக்குழுவில் இருந்ததால் அந்த பாதிப்பு இன்னும் மறையவில்லை போலிருக்கிறது. //
இருக்குமோ! இருக்கலாம். வெகுசில இசையமைப்பாளர்களே எந்தச் சூழலையும் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரை யோசிக்காமல் சொல்லலாம். கேவிஎம் ஏ.பி.நாகராஜன் படங்களுக்கும் மற்ற சாமி, ராஜாராணி படங்களுக்கும் மிகச் சிறப்பாய் செய்து சமூகப் படங்களில் கொஞ்சம் அப்படி இப்பிடித்தான் இருக்கும்.
1976க்கு முன்னாடி சங்கர் கணேஷ் இசை மெல்லிசை மன்னர் பாணியிலும் பிறகு இளையராஜா பாணியிலும் இருக்கும். சந்திரபோசும் நல்ல இசையமைப்பாளரே. ஆனால் அதை விட மிகச் சிறந்த பாடகர் (ஏண்டி முத்தம்மா பாட்டு போதுமே).
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஹாரிஸ் ஜெயராஜ் என்னைப் பொருத்தவரை இன்னும் நிரூபிக்க வேண்டிய இசையமைப்பாளர். பல பாடல்கள் ஒரே சாயலில் இருப்பது போலத் தோன்றுகிறது. முன்னுக்கு வர வாழ்த்துகள்.
// "சாமி' போன்ற படங்கள் 150 ஓடுமென்றால் ,இந்த படம் 300 நாள் ஓடும் தகுதியுள்ளது .தமிழ் ரசிகர்கள் இதை உணர வேண்டும். //
இது கஷ்டந்தான்னு நெனைக்கிறேன். ஏன்னா நீங்க தமிழ் ரசிகர்கள் உணரனும்னு சொல்றீங்களே!
நல்லதொரு நடுநிலையான விமர்சனம் ஜோ.
ராகவன்,
இன்னும் படம் பார்க்கல்ல போலிருக்கு .கமலின் கம்பீரமான நடிப்பு உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
சஞ்சீவ் குமார்,இளா,துளசியக்கா,கைப்புள்ள,சரவணன் ,ராகவன்,துபாய் ராஜா..வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!
அட்றா சக்க... பாத்துட்டு வந்து சொல்றேன்..
பஞ்ச் வசனம் பேசாமல் , இமேஜ் வளையத்துக்குள் சிக்காமல் , அரசியலில் மூக்கை நுழைக்காமல் (உடைபடாமல்) இருப்பவர் கமல் என்பதால், அவர் படம் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை எனக்குண்டு . நன்றாக இருக்கும்பட்சத்தில் இந்த படம் வெற்றி பெறவேன்டும் .
நேற்று வசந்ததில் ' அவள் ஒரு தொடர்கதை' பார்த்ததிலிருந்து இது மாதிரியான படங்கள் இப்போது வருவதில்லையே என ஏக்கமாக உள்ளது. அது வெற்றிப்படமா? இயக்குனர் ருத்ரையா வேறு என்ன படங்கள் எடுத்துள்ளார்?
லாஜிக்கா... ரீல் சுத்தும் இடத்தில் இதெல்லாம் கேட்கலாமா ;-))
எனக்கு தோன்றிய சில:
1. அமெரிக்காவில் காவல்துறை காட்சிகள்
- கண்காணிப்பு காமிராவை பொருத்தி விட்டு, தூரத்தே நின்று குற்றவாளிகளை வலையில் விழ வைப்பது இவர்களின் அணுகுமுறை. இரண்டு வாயிற்காப்போனை நிற்கவிட்டு, இரண்டு பேரும் 'ஹாண்ட்ஸ் அப்' என்று வருவது காமெடி டைம்.
- வாரண்ட் இல்லாமல், பூட்டை உடைப்பதின் ஆபத்தை உணர்ந்தவர்கள். ராகவன் அவ்வாறு செய்தால் கூட, உடனடியாக இன்னொருவர், காருக்கு சென்று, 'backup' உடனடியாக வருமாறு அழைத்து விட்டு, வெளியில் நின்று வேவு பார்ப்பார். அவரும் உள்ளே போய் ஆராய மாட்டார்.
- அமெரிக்காவில் சீரியல் கில்லர்களுக்கு பெருத்த மரியாதை உண்டு. இந்த மாதிரி நான்கு அமெரிக்க உயிர்கள் கழன்றிருந்தால், 'America's Most wanted' பட்டியல் போட்டு, அதற்கென்று தனிக் குழு அமைத்து, சந்தேகத்தில் இருக்கும் பத்து பேரையும் ஒரே சமயத்தில் லபக்கி, கடும் விசாரணையில் கொணர்ந்திருப்பார்கள்
2. அமெரிக்காவில் இயலாத இன்ன பிற காட்சிகள்
- ஜோதிகாவின் வாசஸ்தல கதவை ஒரே மோதலில் தள்ளி உள்ளே நுழைவது. இவர்கள் இருப்பது கிட்டத்தட்ட நட்சத்திர ஹோட்டலாக காண்பிக்கிறார்கள். சாதா இடத்திலேயே, அப்படி உடைப்பது நடவாத காரியம்.
- இந்தியா கஃபேயில் காலையுணவு சாப்பிட செல்லும் காட்சி. அனைத்து இந்திய உணவகங்களும், 11/11:30 மணிக்கு மதிய சோற்றோடுதான் துவங்கும். காலையிலேயே திறந்தாலும், அமெரிக்க/மேற்கத்திய பிரெட், பேகல் போன்றவைதான் கிடைக்கும்.
- கமல், பொதுத் தொலைபேசியில் பேசுவது. இது 'அழைப்பு அட்டை' (calling card) உலகம். நான் வந்த புதிதில், கிட்டத்தட்ட ஐந்து அமெரிக்க டாலருக்கு 25 பைசாவாக மாற்றி, ஒவ்வொன்றாக உள்ளே தள்ளி, இந்தியா அழைத்ததுண்டு. ஒரேயொரு முறை; அதுவும் ஒரு நிமிடம்தான் பேச முடியும். காலிங் கார்ட் இல்லாமல் தொலைபேசுபவர்கள் எவரும் இலர். ஹோட்டல் அறையிலிருந்தே கூவ முடியும்.
ராஜேஷ்குமார் கதை படிக்கும்போது கேள்வி கேட்காமல் படித்து செல்வது போல், எதுவும் ஆராயாமல் பார்க்க வேண்டும்.
நான் கண்டுபிடித்த ஒரு குறை, பிரகாஷ்ராஜின் உடலைப் பார்க்கப் போகும் இடத்துக்கு "பிணவரை" என்று தமிழில் உபதலைப்புக் காட்டினார்கள்.
இது முட்டையில் மயிர் பிடுங்குவது போலுள்ளதா? ஆனால் இப்படக்கூட்டணி தமிழைச் சரியாக எழுதியிருக்க வேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு.
கமலின் சிறிய தொந்தியை மறைக்கும்வகையில் அவரது உடையைத் தெரிந்தெடுத்திருக்கலாம். காவற்றுறை உடையில் செம்மையாகத் தெரிந்த உடல்வாகு சாதாரண உடையில் இல்லை.
கமல் உடம்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நன்று எனப்படுகிறது.
இன்னும் "ஆளவந்தான் நந்து"வாக இருந்தால் எப்படி?
இதற்குக் கமல் தேவையில்லை, வேறொருவரே போதுமென்பதே இப்போதும் என் கணிப்பு. ஆனால் நீங்கள் சொன்னதுபோல நானும் ஏனைய நடிகர்களை இப்பாத்திரத்தில் பொருத்திப் பார்த்தேன். யாரும் தேறவில்லை (தேறியவர்களுக்கு வயது போதவில்லை).
ஜோ,
ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பிருக்கிறது. இதே படத்தை கே. எஸ் ரவிக்குமாரோ, பேரரசுவோ இயக்கி விஜய்யோ, அஜித்தோ செய்திருந்தால் இந்தளவுக்கு எதிர்பார்க்கப்போவதில்லை. மேலும் கமலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லை என்பதும் உண்மை.
I know Pro Kamal (or any actor) and anti Kamal (any actor) is an endless argument topic. Anyways just my few cents after reading the post
காய்ச்ச மரம் தான் கல்லடி படும் என்பதற்கு சாட்சியாக பல விமர்சனங்கள்!
கமல் என்னும் மகா கலைஞன் இல்லாவிட்டல் இப்படியோரு மசாலா குறைவான, உலகத்தரம் வாய்ந்த படத்தை, இத்தனை பொருட்செலவில் எடுத்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!
"இந்த படம் இன்னும் பல வருடங்களுக்கு பேசப்படும்"
/பீரில் முகம் கழுவும் "சாமி' போன்ற அரைத்த மாவுகளை தூக்கி கடாசி விட்டு இயல்பான டி.ஜி.பி ராகவனை ரசிக்கப் பழகுங்கள் தமிழ் மக்களே!/
இதற்கு கமல் தேவையா? -என்று என் நண்பர் கேட்டார் .நானும் தமிழில் உள்ள மற்ற எல்லா நடிகர்களையும் ஒவ்வொருவராக இதில் பொருத்தி மனதுக்குள் நினைத்துப் பார்த்தேன் .கமலின் மகத்துவம் தெரிந்தது /
எல்லாரும் சொல்லவது போல் படத்திற்கு வேண்டுமானால் கமல் மாதிரி ஒரு நடிகர் வேண்டும்.ஆனால் கமலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கண்டிப்பாக இல்லை.
விஜயகாந்த் கூட பொருந்துவார்.(ஊமை விழிகள்)
இனி கெளதம் பற்றி..
இவருடைய காக்க காக்க மற்றும் வே.வி இரண்டுமே அபபட்டமான் காப்பி.சரி காப்பி அடித்தாலும் ஒழுங்காக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.(கஜினி,அன்பே சிவம்,அவ்வை சண்முகி போன்ற வெற்றிப் படங்கள்).இந்த மாதிரி படம் எடுக்க கெளதம் தேவையில்லை.ஒரு 5 அல்லது 6 ஆங்கில படங்கள் பார்த்து சீனை மாத்தி மாத்தி போட்டால் படம் ரெடி.
இந்த படத்தில் ஒரு ஒரத்தில் தேதி மற்றும் நேரம் காட்டப் படுகிறது.நானும் ஏதோ சொல்ல வருகிறார்கள் என நினைத்து ஏமாந்து போனேன்.தேதி நேரம் காட்டிக் கொண்டே இருக்கும் போது பிளாஷ் பேக்(இது ஒன்றே போதும் இயக்குநரின் வறண்ட கற்பனை சக்திக்கு)..அப்புறம் பிளாஷ் பேக்கிற்குள் ஒரு 'குட்டி' பிளாஷ் பேக்..அப்படி என்றால் ஏன் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தேதி மற்றும் நேரம்(இந்த உத்தியும் ஒரு ஆங்கில படமே).
//"சாப்ட்வேரா.. இல்லைங்க..நான் போலிஸ்..ஹார்ட்வேர்" என்று சொல்லும் போது இயல்பான நகைச்சுவைக்கு தியேட்டர் அதிர்கிறது .இப்படி பல இடங்களில் கமலின் ஓரிரு வார்த்தைகள் ,டைமிங் ரசிக்க வைக்கின்றன/
இந்த சிலவற்றிக்காக முழு 'கழுத்தறுப்பையும்' பார்கக வேண்டுமா??
/படம் முழுக்க காமிரா கவிதை படித்திருக்கிறது /
ஆறுதலான விஷயம் இது ஒன்றுதான்.
மற்றபடி படகளின் உள்ள மற்ற 'காமெடிகளை' மற்றவர்கள் நன்றாகவே அலசி விட்டார்கள்.
நம்மவர்களிக்கு அமெரிக்காகாரர்கள் ஏமாறுவது போல காட்டினால் ரசிக குஞ்சுகளின் விசிலகளுக்குப் பஞ்சம் இருக்காது.
இப்படியாக பல ஆங்கில படங்களில் உள்ளதையெல்லாம் இந்த படத்தில் புகுத்துகிறேன் பேர்வழி என்று நம்மை 'கழுத்து அறுக்கிறார்கள்' .இவர் படங்களில் வரும் வில்லன்களும் ஒரே டைப்..ஒரே இரைச்சல்(இதே மாதிரிதான் பாலா ,செல்வராகவன் ஒரே மாதிரியான பாணி)..
ஏற்கனேவே முதலில் தாயாரித்த தாயரிப்பாள்ர் தற்கொலைக்கு முயற்சித்தார்..
/குறை சொல்லுவதற்கு இந்த படத்தில் நிறைய இருக்கிறது .ஆனால் இது நிராகரிக்கத்தக்க படம் அல்ல /
உங்கள் விமர்சனத்தில் மிகவும் பிடித்த்து இதுதான்.'கமல்' பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்.
/"இந்த படம் இன்னும் பல வருடங்களுக்கு பேசப்படும்"/
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே இவங்களையெல்லாம் பெரிய ஆள் ஆக்கிட்டீங்க..
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்
Veetaiyaadu Villaiyaadu vetti nadai podanumgra Ungar aathangam therigirathu. Vazhthugal!!
//பார்த்த முதல் நாளே.." பாடலில் "உன் அலாதி அன்பினில்.." எனும் போது புனித வெள்ளியன்று கோவிலில் இருப்பது போல இருக்கிறது .//
இதே மாதிரி எனக்குத் தெரிந்த ஒரு பாடல் .. ஒரு சத்யராஜ் படத்தில் வரும் 'இந்த தெற்குத் தெரு மச்சானின்..' என்ற பாடல் 'உன் சிறகுகள் நிழலில்..' என்ற ஆதிகாலப் பாட்லின் அப்பட்டமான காப்பி
// ஒரு சத்யராஜ் படத்தில் வரும் 'இந்த தெற்குத் தெரு மச்சானின்..' என்ற பாடல் 'உன் சிறகுகள் நிழலில்..' என்ற ஆதிகாலப் பாட்லின் அப்பட்டமான காப்பி//
ஆம்! அது ஒரு 100% காப்பி.
சூப்பர் விமர்சனம். படத்தில் எனக்கு அந்த கமல் அறிமுக காட்சி மிகவும் பிடித்து இருந்தது
Post a Comment