Wednesday, February 22, 2006

ஆழி சூழ் உலகு -நாவல் அறிமுகம்

ஆசிரியர் : ஜோ டி குரூஸ்
பக்கங்கள் :550
பதிப்பகம் :தமிழினி ,67,பீட்டர்ஸ் சாலை,ராயப்பேட்டை,சென்னை-14.

Image hosting by Photobucket


சிறில் அலெக்ஸ் அவர்களின் அலைகள் பாறைகள் மணல்மேடுகள் என்ற முட்டம் பற்றிய பதிவுகளை படித்துவிட்டு எழுத்தாளர் ஜெயமோகன் அவருக்கு பாராட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் .அதில் 'ஆழி சூழ் உலகு' என்ற சமீபத்திய நாவலைப் பற்றி குறிப்பிட்டு தமிழில் முதன் முதலில் கிறிஸ்தவ பரதவ மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர்களின் மொழியிலேயே எழுதப்பட்ட நாவல் என்று குறிப்பிட்டிருந்தார்.

நாவல் என்றாலே எனக்கு கொஞ்சம் கசப்பு தான் என்றாலும் ,கிட்டத்தட்ட அதே பகுதி கிறிஸ்தவ மீனவ சமுதாயத்தை சார்ந்தவனாக இருந்ததால் ,இதை படிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது .சிங்கையில் ஒரு கிளை நூலகத்துக்கு சென்று வேறு புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த போது அதிர்ஷ்டவசமாக இந்த புத்தகம் கண்ணில் பட்டது .அள்ளிக்கொண்டு வந்து படித்தேன்.

இந்த நாவலுக்கு உட்புகுமுன் தென்தமிழ்நாட்டு மீனவர்களைப்பற்றி சில அடிப்படை விடயங்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது .திருச்செந்தூரின் சற்று கீழிருந்து கன்னியாகுமரி வரை வங்காள விரிகுடா ஓரமும் ,கன்னியாகுமரியிலிருந்து மேற்கே கேரள எல்லை நீரோடி வரை அரபிக்கடல் ஓரமும் வரிசையாக அமைந்துள்ள மீனவ கிராமங்கள் முழுக்க முழுக்க இரண்டு சமுதாயத்தை சார்ந்த (பரவர் ,முக்குவர்) கத்தோலிக்க மீனவர்கள் .இதில் வங்காள விரிகுடா ஓர தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்ட கிராமங்கள் கிட்டத்தட்ட முழுவதும் பரவர்கள் வாழுகிறார்கள் .அரபிக்கடல் ஓர குமரி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள சுமார் 45 கிராமங்களில் 7 கிராமங்களில் முழுவதுமாக பரவர்களும் ,கன்னியாகுமரி ,முட்டம் என்ற 2 கிராமங்களில் இரு சமூகத்தினர் இணைந்தும் ,மற்ற அனைத்து கிராமங்களில் முக்குவர் சமுதாயத்தினரும் வசிக்கின்றனர்.

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வரை குமரி அன்னையை குலதெய்வமாக கொண்டு இந்துக்களாக வாழ்ந்த இம்மக்கள் ,இப்பகுதிக்கு வந்த புனித சவேரியார் (St.Xavier) -ஆல் ஒட்டுமொத்தமாக கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள் .மணப்பாடு ,நாகர்கோவில் கோட்டாறு ஆகிய இடங்களில் தங்கியிருந்த சவேரியார் இந்த நீண்ட கடற்கரையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் கால் பதித்தார் .முதலில் பரவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு கத்தோலிக்கர்களாக மாற,அவர்களை பின் தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முக்குவர்களும் கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள் .இது நடந்தது கிட்டதட்ட 1530-வாக்கில்.

மதம் மாறியிருந்தாலும் ,அவர்கள் இதுவரை கைக்கொண்டிருந்த வழக்கங்கள் ஒரேயடியாக மாறிவிடவில்லை .குமரி அன்னை மீது மிகுந்த பக்தி கொண்டு குலதெய்வமாக வழிபட்ட இம்மக்கள் அந்த பக்தியை லேசில் விடுவதாக இல்லை .அதற்கு மாற்றாக அவர்கள் அன்னை மேரியை நிறுத்த நாளடைவில் பழகிக் கொண்டார்கள் .பின்னர் அதிலே ஊறியும் போனார்கள்.

இந்த நாவலைப் பொறுத்தவரை,இதிலுள்ள நிகழ்வுகள் 20-ம் நூற்றாண்டு தொடக்கம் முதல் இறுதிவரை நிகழ்வனவாக சித்தரிக்கப்பட்டுள்ளது .வட ,மத்திய தமிழ்நாட்டு மீனவர்களைப் போல் பல்வேறு சாதி,மதம் கலந்து வாழும் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ,முழுக்க ஒரே சாதி,மதமாக அடுத்தடுத்த கிராமங்களாக வாழும் இம்மக்களின் வாழ்க்கை முறை மற்றவர் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சமூக,பொருளாதார முறைமைகளை கொண்டிருக்கிறது .

இந்த நாவலில் இம்மக்களில் கூட்டு வாழ்க்கையின் எழுதப்படாத சட்டங்கள் ,மதம் சார்ந்த மதிப்பீடுகள் ,வீரமும் வீம்பும் நிறைந்த செயல்பாடுகள்,திட்டமிடப்படாத எகத்தாளமான பொருளாதார வாழ்க்கை,அலைகளோடு அன்றாடம் அவர்கள் நடத்தும் போராட்டம் ,மதத்தோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை,கத்தோலிக்க குருமார்களின் சமுதாயப் பங்கு ,பிரத்தியேகமான மொழிக்கூறுகள் ,தனிமனித உறவுகள்,இலங்கையோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு,அண்டைய நாடார் சமூகத்தோடு உள்ள உறவு இப்படி பல கோணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மக்கள் பேசுகின்ற மொழி அவர்களிடமிருந்து 1 கி.மீ தூரத்தில் வாழும் உள்நாட்டினர் மொழியிலிருந்து பெரிதும் வேறுபட்டாலும் ,இலங்கைத் தமிழர் மொழியோடு ஓரளவு நெருக்கமாக இருக்கிறது என்பது என் சொந்த கருத்து,என் சொந்த அனுபவத்தில்.

குறிப்பாக வங்காள விரிகுடா ஓர பரவ மீனவர்களைப் பற்றி பேசும் இந்த நாவல் ,அவர்கள் வாழ்க்கையின் எல்லா முக்கிய பரிமாணங்களையும் உள்ளடக்கியிருப்பதாக சொல்ல முடியாது .குறிப்பாக மதம்,அரசியல் ,சினிமா,கலைகள் இவற்றின் தாக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பதிவு செய்யப்படவில்லையெனினும் ,அவர்களின் அலைகடலோடான போராட்டத்தையும் ,தனிமனித உறவுகளிலுள்ள சிக்கல்களையும் ,வேறு சமூகத்தோடு அவர்களின் உறவு முறையையும் அற்புதமாக பதிவு செய்கிறது.முக்கியமாக இந்த மக்களின் மொழி வழக்கு மிக அழகாக கையாளப்பட்டுள்ளது .ஆசிரியரும் அந்த சமூகத்தவர் என்பதால் அது சாத்தியமாகியிருக்கிறது.

இந்த மக்களோடு ,அவர்கள் மொழியோடு ,குறிப்பாக கடல் சார்ந்த குறியீடுகளோடு பரிச்சயம் இல்லாத வாசகர்கள் முதலில் பின் புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'வட்டார வழக்கு சொல் அகராதி' யை ஒருமுறையேனும் படித்துவிட்டு நாவலின் உட்புகுவது நல்லது.

பின்குறிப்பு : இதன் ஆசிரியர் ஜோ டி குரூஸ் ,உவரி கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் .மறைந்த வார்த்தை சித்தர் வலம்புரி ஜாண் அவர்களும் இதே கிராமத்தை சார்ந்தவர் என்பது உபரித் தகவல்.

23 comments:

ஜெ. ராம்கி said...

Good one. Is there any coverage of Tsunami days?

இளங்கோ-டிசே said...

ஜோ, 'ஆழி சூழ் உலகு' அண்மையில் வெளிவந்த நாவல்களில் குறிப்பிடத்தக்க நாவல் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். உங்கள் குறிப்புக்களுடன் வாசிக்க நாவல் இன்னும் சுவாரசியமாக இருக்கக்கூடும். கரையோர கிறிஸ்தவ மீனவ சமுகத்தை,ஏற்கனவே வண்ணநிலவனும், 'கடல்புரத்தில்' கதைக்களனாக்கியுள்ளார். ஆனால் நீங்கள் குறிப்பிடும் இடங்களையா அல்லது வேறிடங்களையா என்று தெளிவாகச் சொல்லமுடியவில்லை.

ஜோ/Joe said...

ராம்கி,
இந்த நாவல் 2004 மத்தியிலே வெளிவந்து விட்டது.அது போக இந்த கதைக்களம் நிகழ்ந்த தூத்துக்குடி மாவட்ட கடற்கரை ,குமரி மாவட்டம் போல் சுனாமியால் அதிகமாக பாதிக்கப்படவில்லை

ஜெ. ராம்கி said...

I think, the author has written something about Tsunami attack. I met him in Book fair also. It may be his new novel. Prasanna, Can u check it out?

ஜோ/Joe said...

haranparasana,
//இன்னும் ஆழமாக ஆழி சூழ் உலகு பற்றிச் சொல்லியிருக்கலாம்.//
உண்மை.ஆனால் அந்த அளவுக்கு எனக்கு இலக்கிய ஆழம் தெரியாது.

// வட்டார அகராதியை ஒரு முறை அல்ல, கையில் வைத்துக்கொண்டேதான் என்னால் படிக்க முடிந்தது.//

எனக்கு அந்த தேவை இருக்கவில்லையென்பதால் ,சுவாரஸ்யம் அதிகமாக இருந்தது.

ஜோ/Joe said...

டி.சே,
கடல்புரம் நான் படித்ததில்லை .ஆனால் 'ஆழி சூழ் உலகு' ஒரு மீனவ சமுதாயத்தவராலேயே எழுதப்பட்டிருபதால் அதிக யதார்த்தத்தோடு இருக்கும் என நம்புகிறேன்

பிச்சைப்பாத்திரம் said...

Thanks forthis post.


- Suresh Kannan

டிபிஆர்.ஜோசப் said...

ஜோ,

ஆழி சூழ் உலகு.. பேர் நல்லாத்தான் இருக்கு.

சென்னையில கிடைக்கும்னு நினைக்கிறேன். இந்த சனிக்கிழமைதான் போய் பாக்கணும். படிச்சிட்டு சொல்றேன்.

Thangamani said...

அறிமுகத்துக்கு நன்றி ஜோ!

Muthu said...

ஜோ,

உங்கள் தகவல்கள் இந்த நாவலை படிக்க நல்ல ஒரு அறிமுகமாக அமையும் என்று நினைக்கிறேன்.நன்றி.

அப்புறம் இன்னொன்று,

இங்க இலக்கியம் பேசற ஆளுங்க எல்லாம் நல்லா இலக்கியம தெரிஞ்சா பேசறம்னு நினைக்கறீங்க? :)))

G.Ragavan said...

நல்லதொரு அறிமுகம் ஜோ. இந்தப் புத்தகத்தைப் பற்றி இப்பொழுதுதான் கேள்விப் படுகிறேன். கிடைத்தால் படித்துப் பார்க்க வேண்டும். தமிழகம் சென்றால் தெடிப் பார்க்க வேன்டும்.

குரூஸ் என்பது ஆசிரியர் பெயர். தூத்துக்குடியிலும் ஒரு குரூஸ் பெர்நாந்து இருந்தார். அவர்தான் தூத்துக்குடிக்கே தண்ணீர் கொடுத்த வள்ளல்.

ஜோ/Joe said...

சுரேஷ் கண்ணன்,ஜோசப் சார்,தங்கமணி,முத்து(தமிழினி),ராகவன்,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

//இங்க இலக்கியம் பேசற ஆளுங்க எல்லாம் நல்லா இலக்கியம தெரிஞ்சா பேசறம்னு நினைக்கறீங்க? :)))//
நமக்கு தெரியாது.அத தெளிவா சொல்லிடுவோம் ,இலக்கியம் பத்தி எதாவது கேள்வி வர்றதுக்கு முன்னால..ஹி.ஹி.

b said...

நல்லதொரு புத்தக விமர்சனம். கண்டிப்பாக படிக்க முயற்சிக்கிறேன் ஜோ.

ஜோ/Joe said...

நன்றி மூர்த்தி!

Unknown said...

நன்றி ஜோ., நல்லதொரு அறிமுகம். கடற்புரத்தில் நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. கரிப்பு மணிகள் போன்ற நாவல்கள் சிறிது காலம் கடல்புற மக்களுடன் தங்கி., அவர்களுடைய பாடுகளை உள்வாங்கிக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு வாழ்ந்த ஒருவர் பதியும் போது வெளிப்படும் காட்சிகள்., உணர உன்னதமானவை. அதுவும் அங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் அதைப் படித்தால் ஏற்படும் அனுபவத்தை எழுத்தில் கொண்டு வந்து விட முடியுமா?. இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு உணரப்படும் உன்னதம் அது. அட., எப்பல்லாம் சோகம் வருதோ அப்பல்லாம் காதல் படத்தைப் போட்டுவிட்டு 'இவன் என்னாத்துக்கு பாக்குறான்னு?' எங்க வட்டார மொழி காதில் கேட்டால்தான் தூக்கமே வருகிறது எனக்கு. 'இதெல்லாம் ரொம்ப ஓவருன்னு' என் பக்கத்தில் இருந்து வரும் குரலை எப்போதும் சட்டை செய்ததில்லை :-)).

ஜோ/Joe said...

அப்படிப்போடு,
கருத்துக்கு நன்றி!
//அதுவும் அங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் அதைப் படித்தால் ஏற்படும் அனுபவத்தை எழுத்தில் கொண்டு வந்து விட முடியுமா?. //
உண்மை..உண்மை.

அன்பு said...

நல்லதொரு அறிமுகத்துக்கு நன்றி... சமயம் வாய்க்கும்போது கண்டிப்பாக படிக்கணும்.

அப்புறம், இன்னும் வியட்நாம் மாரியம்மன்கோவில் வாசந்தானா!? ஊர்ப் பக்க்கம் இருந்தால் இந்த வாரயிறுதியில் (சனி - NLB) சந்திப்போம்.

ஜோ/Joe said...

அன்பு,
நூறு வயசு உங்களுக்கு! என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்ணு நினைத்தேன்.

நாளை சிங்கை வருவேன்.சனிக்கிழமை கண்டிப்பாக NLB வருவேன்.சந்திப்போம்.

rnatesan said...

fantastic!!thank u joo!

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,
அருமையாய் எழுதியிருக்கீங்க... நாவலில் வரும் அனைத்து தலைப்புகளையுமே கிட்டத்தட்ட நான் எழுதியிருக்கிறேன்..

நாவல் படிக்க இப்போ கொடுத்துவைஉக்கவில்லை.


வலம்புரி ஜாண் மறைந்த செய்தி உங்கள் பதிவிலிருந்துதான் தெரிந்துகொண்டேன்.

ramachandranusha(உஷா) said...

ஜோ, புத்தக அறிமுகத்துக்கு நன்றி!

தோப்பில் முகமது மீரான் அவர்களின் " ஒரு கடலோர கிராமத்தின் கதை" - ஆசிரியர் பெயரும், நாவலின் பெயரும் சரியா என்று தெரியவில்லை. ஆனால் கதைகளம் முழுவதும் நீங்கள் கூறிய தென் தமிழக கடலோர , மலையாளம் கலந்த வட்டார மொழியும், கத்தோலிக்க சமூகமும்தான்.

ஜோ/Joe said...

உஷா,
தகவலுக்கு நன்றி! கண்டிப்பாக தேடி படிக்க வேண்டும்.

ramachandranusha(உஷா) said...

ஜோ, மீண்டும் வந்தேன். க.நா.சு எழுதிய "இயேசு வந்திருந்தார்". இரண்டாயிரம் வருடங்களுக்கு
முன்பு செயிண்ட் தாமஸ், தென்னிந்திய கடலோரத்தில் கிறிஸ்துவத்தை விதைத்த சரித்திர நாவல். திருவள்ளுவரும் வருவார். பல வருடங்களுக்கு முன்பு படித்ததால், ஓரளவு நினைவில் இருப்பதை எழுதுகிறேன்.
சென்னையில் சின்னமலை, லாசரஸ் சர்ச் ( லஸ் சர்ச் இல்லை) வட்டாரங்களில் வசித்ததால், கத்தோலிக்க
சர்ச் திருவிழாக்கள், சரித்திரங்களில் ஆவல் உண்டு.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives