சகோதரர் இறைநேசன் அவர்கள் பதிவில் விஷமக் கார்ட்டூன்கள் கிளப்பிய விவகாரம்! நான் கேட்டிருந்த சில விளக்கங்கள் குறித்து நண்பர் அவர்கள்
நண்பர் ஜோவிற்கு அன்புடன் நண்பன்... என்ற பதிவை இட்டிருந்தார் .அவருக்கு மிக்க நன்றி .அவர் கருத்துக்கள் குறித்து எனக்கு கேள்விகள் இல்லையெனினும் ,நான் முன்னர் கேட்க வந்தது என்ன என்பது குறித்து விளக்க நினைத்து அது நீண்டு விட்டதால் தனிப்பதிவாக இடுகிறேன்.
சகோதரர் நண்பன்,
உங்கள் நீண்ட விளக்கமான பதிவுக்கு நன்றி.
//இறைநேசன் பதிவில் உங்கள் ஆதங்கம் மிகுந்த கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. //
எனக்கு இதில் ஆதங்கம் எதுவுமில்லை .நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால் அப்படி தோன்றியிருக்கலாம் .ஆனால் என்னைப் பொறுத்தவரை ,இஸ்லாம் பற்றி ,நபிகள் பற்றி,நபிகளுக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்கிறேன் .இஸ்லாமிய கோட்பாடுகளில் ஈஸா நபிக்குள்ள முக்கியத்துவத்தைப் பற்றியோ ,அல்லது முகமது நபியவர்கள் ஈஸா நபியவர்களின் மேன்மையை எடுத்தியம்பியது பற்றியோ எனக்கு ஐயமில்லை.ஆனால் முஸ்லீம்கள் நடைமுறையில் அவற்றை எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள் ,வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றிய எனது சந்தேகத்தின் ,அல்லது மேல் விவரம் அறிந்து கொள்வதின் ஆர்வத்தின் பால் எழுப்பட்டது தான் என்னுடைய கேள்விகள்.
கவிக்கோவின் கவிதையும் ,அதற்கு உங்கள் விளக்கமும் அருமை .கவிதை என்ற முறையில் அதன் உட்கருத்து எனக்கு மிகவும் ஏற்புடையதாயிருக்கிறது.உங்கள் விளக்கம் அதை விட அருமை .
கத்தோலிக்க ,இஸ்லாம் மதங்களின் நம்பிக்கைகள்,கோட்பாடுகள் பற்றி கேள்வி எழுப்புவதல்ல என் நோக்கம் .இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளை நான் ஏற்றுக்கொள்ளுகிறேனோ இல்லையோ,அவை இஸ்லாமியர்களின் உரிமை என்பதை மதிக்கிறேன் .நம்பிக்கைகளை கேள்வி கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.ஆனால் இஸ்லாமிய கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட முஸ்லீம்கள் நடைமுறையில் எந்த அளவு அதை பிரதிபலிக்கிறார்கள் என்பது பற்றிய எனது தெரிந்துகொள்ளும் ஆர்வமே இங்கு பிரதானம் .அதற்கு நான் கிறிஸ்தவன் என்ற அடையாளம் கூட தேவையில்லாதது.
எல்லா மதத்திலும் அந்த மதத்தின் கோட்பாடுகளை தவறாக புரிந்து கொண்டு நடைமுறைபடுத்துபவர்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள் .கத்தோலிக்க மதத்தை எடுத்துக்கொண்டால் ,அன்னை மேரியை கத்தோலிக்கர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது .அது நடைமுறையில் ஓரளவு உண்மையும் கூட .கத்தோலிக்க மதத்தின் அதிகார பூர்வ கோட்பாடு படி ,அன்னை மரியை கடவுளாக வணங்கக் கூடாது."மகிமையும் ஆராதனையும் இறைவனுக்கு மட்டுமே" என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.புனிதர்கள் என்பவர்கள் ஆராதனைக்கும் மகிமைக்கும் உடையவர்கள் அல்ல. அவர்கள் கத்தோலிக்க திருச்சபையால் அடையாளம் காணப்பட்டு ,இறைவனுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் ,தங்கள் மேன்மையான வாழ்க்கையினால் இறைவனின் அன்பைப் பெற்றவர்கள் என நம்பப்படுகிறது .அவர்கள் இப்போது இறைவனின் அரசாட்சியில் அவரோடு நெருக்கமாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் ,அவர்களை இறைவனிடம் நமக்காக பிராத்தனை செய்ய கத்தோலிக்கர்கள் வேண்டுகிறார்கள் .அந்த வகையில் அன்னை மேரி ஒரு புனிதர் .இயேசுவை கருத்தாங்கியதால் அவள் புனிதர்களில் முதன்மையாக கருதப்படவேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை கருதுகிறது.அந்த நம்பிக்கையில் கத்தோலிக்கர்கள் அன்னையிடம் நமக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ள மன்றாடலாம் .அது போல எல்லா புனிதர்களிடமும் .இறைவன் மட்டுமே அற்புதங்களை செய்ய முடியும்.அன்னை மரியோ ,புனிதர்களோ அற்புதங்களை செய்வதில்லை .அவர்கள் மூலமாக இறைவன் செய்கிறார்.
அதனால் தான் அன்னை மரியை வேண்டும் போது "அன்னையே! எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும்!" என்று கத்தோலிக்கர்கள் வேண்ட வேண்டும் .இறைவனிடம் வேண்டுவதற்கு எதற்கு வேறொருவர் மூலமாக செல்ல வேண்டும் ?இறைவன் நமது தந்தையல்லவா? அவரிடமே நேரடியாக வேண்டலாமே? என்று கேட்கலாம் .நேரடியாகவும் தந்தையிடம் வேண்டுகிறோம் .அதே நேரத்தில் நம் நண்பர்களை ,உறவினர்களை நமக்காக இறைவனிடம் வேண்ட நாம் கோருவதில்லையா? அது போலத் தான் கன்னி மரியிடமும் ,புனிதர்களிடமும் கோருகிறோம் என்பதைத் தவிர இதில் வேறதும் இல்லை.
பின்னர் ஏன் மாதாவுக்கு ,புனிதர்களுக்கு கோவில் இருக்கிறது என்று கேட்கலாம் .மாதவுக்கென்று தனியாக எந்த கோவிலும் கிடையாது.எல்லா கோவிலகளுமே இறைவனுக்கு எழுப்பப்பட்ட கோவில்கள் தான் .கத்தோலிக்கர்கள் இறைமகனாகக் கருதும் இயேசுவும் ,அவருடைய உடலாக கருதப்படும் நற்கருணையுமே எல்லா கோவில்களிலும் நடுநாயகம் .இந்த கோவில்கள் மாதாவின் பெயரில் ,அல்லது புனிதர்களின் பெயரில் எழுப்பப்பட்ட இறைவனின் ஆலயமே தவிர ,அங்கே புனிதர்களுக்கு மகிமையும் ஆராதனையும் அதிகார பூர்வமாக செலுத்தப்படுவதில்லை.
ஆனால் இந்த கோட்பாடுகளுக்கும் ,சாதாரண கத்தோலிக்கர்களின் நடைமுறைக்கும் பெருத்த வேறுபாடு இருப்பது உண்மை .அதற்கு தங்கள் மதம் குறித்த அறியாமையே காரணம்.பல கத்தோலிக்கர்கள் இறைவனுக்கும் புனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இறைவனுக்கு இணையாக புனிதர்களை வைத்து வழிபடுவது நடைபெறுகிறது .இது கண்டிக்கப்பட வேண்டியது .அவர்கள் கத்தோலிக்க மதத்தின் அடிப்படையையே புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.இதுவே கத்தோலிக்கர் மீது பிரிந்து சென்ற சபையினர் குறை சொல்லுவதற்கும் காரணமாக இருக்கிறது.
இப்போது இஸ்லாமுக்கு வருவோம் .அல்லாவின் இறுதித் தூதராம் முகம்மது நபியவர்கள் ,இறுதித்தூதர் என்ற முறையிலும் ,குரான் அவர் மூலமாக இறக்கப்பட்டது என்ற முறையிலும் ,இஸ்லாமை அதிகார பூர்வ மார்க்கமாக நிறுவியவர் என்ற வகையிலும் தனிச்சிறப்பு பெருகிறார் .
இஸ்லாம் படி ,இயேசு இறை தூதர்களில் ஒருவர் .அதுவும் வேறெந்த இறை தூதருக்கும் கிட்டாத சிறப்பு அவருக்கு உண்டு .அவருடைய அன்னை மரியம் ,கன்னியாக இருந்தே இறைவனின் அருளால் இயேசுவை பெறுகிறாள் .இஸ்லாம் நம்பிக்கைப் படி ,உலகின் இறுதிக் காலத்தில் அல்லாவின் தூதராக இயேசு மீண்டும் வருவார் .இஸ்லாமை மறு உறுதிப்படுத்துவார் (நான் தவறாக புரிந்து கொண்டிருந்தால் சுட்டிக்காட்டவும்).
ஆக முகமது நபியவர்கள் அளவுக்கு இல்லையெனினும்,இயேசுவும் இறுதி நாளில் வரும் தூதர் என்ற சிறப்பை பெற்று ,இஸ்லாமில் முக்கியமான இறை தூதராக கருதப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை.
நண்பன் ,இறைநேசன் போன்ற இஸ்லாமிய சகோதரர்களிடம் நான் கேட்க நினைப்பது இது தான் .முகமது நபி அவர்கள் ஒரு இறை தூதர் மட்டுமே,அவர் ஒரு இறைவனின் அடியார் என்ற வகையில் மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் கோட்பாடு வற்புறுத்தினாலும் ,நடை முறையில் முகமது நபியவர்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நீங்கள் நினைக்கவில்லையா?அப்படி கொடுக்கப்படுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.அப்படியே இருக்கட்டுமே? ஆனால் முகமது நபியவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் நூற்றில் ஒரு பங்காவது இயேசுவுக்கு கொடுக்கப்படுகிறதா?
நான் செவிமடுத்த இஸ்லாமிய உரைகளிலும் ,எழுத்துக்களிலும் இப்ராஹிம் ,மூசா போன்ற மற்ற நபிகள் குறிப்பிடப்படுவது போல ஈசா நபி மேற்கோள் காட்டவோ ,குறிப்பிடப்படவோ இல்லை .இது ஈஸா நபி-யை கிறிஸ்தவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள் என்ற ஆழ் மன வெளிப்பாடா ?ஈஸா நபியை தவறாக புரிந்து கொண்டு அவரை அவமானப்படுத்துகிறார்கள் என நீங்கள் கருதும் கிறிஸ்தவர்கள் பற்றி நீங்கள் ஏன் கண்டுகொள்ள வேண்டும் ? அதற்காக உங்கள் ஈஸா நபியை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் ?உங்களுக்கு ஈஸா நபியின் பால் உள்ள நம்பிக்கை ,அவரை பின்பற்றுவதாகச் சொல்லும் மற்றவரை பொறுத்து இல்லாமல் ,சுயமாக இருக்க வேண்டாமா?
இவற்றை நான் கேட்பதற்கு காரணம் வெறும் கேள்வி கேட்கும் திருப்தியை பெறுவதற்காக அல்ல .மேலே நான் குறிப்பிட்ட கிறிஸ்தவம் ,இஸ்லாம் குறித்த தொடர்புகள் ,பொதுவான கோட்பாடுகள் ,மெல்லிய முரண்கள் பற்றியெல்லாம் நானறிந்த கிறிஸ்தவர்களில் 5 சதவீதத்தினர் கூட அறிந்து வைத்துக்கொள்ளவில்லை .பெரும்பான்மையோருக்கு கிறிஸ்தவத்தும் ,இஸ்லாமுக்கும் தொடர்பு இருப்பதே தெரியாது .அல்லா என்பது அவர்கள் கடவுள் என்பது மட்டும் தான் அவர்களுக்கு தெரியும் .தாங்கள் தந்தையென்றழைக்கும் ஆபிரகாமின் கடவுளுமான ,மோயீசனின் கடவுளுமான அதே இறைவனைத்தான் இஸ்லாமியர்கள் 'அல்லா' என்ற அரபு வார்த்தை கொண்டு அழைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. இதைப் போல சாதாரண முஸ்லிம்கள் இவை பற்றிய தெளிவைப் பெற்றிருக்கிறார்களா?
இப்படி மிக நெருக்கமான இரு பெரும் மதங்களை சேர்ந்த பெரும்பான்மையோர் ,இந்த அடிப்படைகளை பற்றிய அறிவில்லாமல் வளர்வது ஆச்சர்யமாக இருக்கிறது .இந்த புரிந்துணர்வு சாதாரண மக்களிடம் வருவது ,உலக அமைதிக்கும் முஸ்லீம்கள் மேலுள்ள பார்வை மாற்றத்திற்கும் வழி வகுக்கும் என நான் நம்புகிறேன்.
Thursday, February 02, 2006
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
கத்தோலிக்க மதம் குறித்து பதிவில் நான் குறிப்பிட்டுள்ளவை நான் அறிந்து வைத்திருப்பதை பகிர்வதற்காக மட்டுமே .அதற்காக கத்தோலிக்க மதத்தின் பிரதிநிதியாக நினைத்து ,கத்தோலிக்க மத நம்பிக்கைகளைப் பற்றி விதண்டாவாத கேள்விகளை தவிர்க்கவும் .என் சொந்த நம்பிக்கைகள் அல்லாமல்,நடைமுறைகளைப் பற்றி கேள்விகள் இருந்தால் என்னால் முடிந்த அளவு பதிலிறுக்க முயற்சி செய்வேன்
இறைநேசனின் பதிவில் இட்ட பின்னூட்டம் இப்பதிவிற்கும் பொருந்தும் என்பதால் அதை இங்கும் தருகிறேன்.
//அல்லாவின் இறைதூதர்களில் ஒருவரும் ,அல்லாவினால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டு மரியமினால் பெற்றெடுக்கப்பட்ட ஈசா நபியவர்கள் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் ,புத்தகங்கள் தாறு மாறாக வெளிவந்திருக்கின்றன .அவை பற்றியெல்லாம் முஸ்லீம் உலகம் கொதித்தெழுவதை விடுங்கள் ,குறைந்த படிசம் முணுமுணுப்பாவது வந்திருக்கிறதா ?//
ஜோ எங்கள் தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. என்னுடைய பெரிய தந்தையும், என்னுடைய தந்தையும் பாதிக்கப்படும்போது முதலில் என்னுடைய தந்தைக்குத்தான் உதவுவேன். பெரிய தந்தைக்கு உதவமாட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனாலும் மனித இயல்பு நம்முடைய தந்தைக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும். இதுபோன்றுதான் இன்றைய முஸ்லிம்களும் முஹம்மது நபிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர்.
//இயேசுவை இழிவு படுத்தும் போது முஸ்லிம்கள் தட்டிக்கேட்டால் இஸ்லாமை பற்றி அதிகம் அறியாதோர் அதை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள வழி வகுக்கும் .நல்லெண்ணம் அதிகரிக்கும் என்பதே என் கருத்து.இஸ்லாம் என்றாலே அல்லாவும் ,முகமது நபியும் மட்டும் தான் என்றே பெரும்பான்மையான பிற மதத்தவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை தாங்கள் சற்று கண்கொண்டு பாருங்கள்//
மிகச் சரியான கருத்து. எனினும் முஹம்மது நபியின் மீதும் இஸ்லாத்தின் மீதும் சுமத்தப்பட்ட, சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளே மிக அதிகம் என்பது தாங்கள் அறியாத ஒன்றல்ல. அதனை எதிர்கொள்வதே முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இது மேலைநாடு கீழைநாடு என்ற பாகுபாடின்றி தமிழ்மணத்தில்கூட அவ்வப்போது இத்தகைய பதிவுகளைத் தாங்கள் காணலாம்.
//வரும் காலத்தில் இஸ்லாமால் அங்கீகரிக்கப்படாத ஒரு கூட்டம் முகமது நபியவர்களை கடவுளாக ஏற்றுக்கொண்டு தனி மதமாக செயல் படுவதாக வைத்துக்கொள்வோம்..அப்போது முகமது நபியவர்கள் இழிவு படுத்தப்பட்டால் நீங்கள் "முகமது நபியவர்களை கடவுளாக நம்பும் இவர்களே கண்டுகொள்ளவில்லை..எங்களுக்கென்ன வந்தது" என்று விட்டு விடுவீர்களா?//
முஸ்லிம்களில் பல பிரிவினர் இருந்தாலும் இதுவரை, முஹம்மது நபியை கடவுளாக ஆக்கியது இல்லை. மேலும் இத்தகைய ஒரு கூட்டம் ஒருபோதும் தோன்றக்கூடாது என்பதற்கான போராட்டமே இது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
நான் முன்பே கூறியது போன்று முஸ்லிம்கள் ஈஸா நபி அவர்கள் விதயத்தில் முன்னுரிமை கொடுக்காமல் இருந்துவிட்டார்கள். ஆனாலும் அவர்களின் கண்ணியம் மத அடிப்படையில் குலைக்கப்படுவதை எதிர்த்து வருகின்றனர். (உதாரணமாக ஈஸா நபியவர்கள் எதிரிகளால் சிலுவையில் அறையப்படவில்லை என்பது போன்றவை) சிலுவையில் அறையப்பட்டது உங்களது பார்வையில் உண்மையாக இருப்பதால் முஸ்லிம்களின் கண்டனத்தை நீங்கள் பொருட்படுத்துவதில்லை. உங்களது மத நம்பிக்கை என்பதற்காக இந்த விதயத்தில் நாங்கள் சாமாதானமாகப் போய்விடுவதில்லை. மற்ற விதயங்களிலும் ஈஸா நபியவர்களின் கண்ணியம் குலைக்கப்படுவதை கண்டிக்க வேண்டும் என்ற உங்களின் கோரிக்கை நியாயமானதே. இனி இறைவன் நாடினால் அதற்காக நான் குரல் கொடுப்பேன்.
//நான் செவிமடுத்த இஸ்லாமிய உரைகளிலும் ,எழுத்துக்களிலும் இப்ராஹிம் ,மூசா போன்ற மற்ற நபிகள் குறிப்பிடப்படுவது போல ஈசா நபி மேற்கோள் காட்டவோ ,குறிப்பிடப்படவோ இல்லை .இது ஈஸா நபி-யை கிறிஸ்தவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள் என்ற ஆழ் மன வெளிப்பாடா ?//
இது ஈஸா நபியின் மீது தங்களிருக்கும் அபரிமிதமான அன்பின் வெளிப்பாடாலான குற்றச்சாட்டு என்றே தோன்றுகிறது. ஈஸா நபியவர்கள் குறித்து ஏராளாமான இறைவசனங்களும், நபிமொழிகளும் இருக்கின்றன. ஈஸா நபியவர்கள் சிறிது காலமே உலகில் வாழ்ந்தவர்கள். இப்ராஹீம் மற்றும் மூசா போன்றவர்கள் அதிககாலம் வாழ்ந்தவர்கள் என்ற வகையில் அவர்களை பற்றிய குறிப்புகள் ஈஸா நபியைப் பற்றிய குறிப்புகளைவிட அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி மூசா மற்றும் இப்ராஹீம் போன்ற நபிமார்கள் வேதத்தையுடைய அனைவருக்கும் பொதுவானவர்கள் என்ற முறையில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் அதிகம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
அழகப்பன்,
உங்கள் அருமையான கருத்துக்களுக்கு நன்றி.
//மற்ற விதயங்களிலும் ஈஸா நபியவர்களின் கண்ணியம் குலைக்கப்படுவதை கண்டிக்க வேண்டும் என்ற உங்களின் கோரிக்கை நியாயமானதே.//
நிச்சயமாக இது என் கோரிக்கை அல்ல.கண்டிப்பதும் கண்டிக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம் .ஆனால் முகமது நபியைப்போல் ,ஈஸா நபி விடயத்தில் முஸ்லிம்களின் நடைமுறை என்ன என்பதை அறிந்து கொள்ளவும் ,அது குறித்த எண்ணங்களை தெரிந்து கொள்ளவும் ,தொடர்பு படுத்தி கேள்வி கேட்டேன்..மற்றபடி அது என் கோரிக்கை அல்ல .
இருப்பினும் உங்கள் எண்ணத்தெளிவை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
சகோதரர் ஜோ அவர்களுக்கு
இசுலாமியர்கள், இயேசுவை ஈஸா நபி என்று அழைப்பதைப் பொறுத்துக் கொள்ளாத சிலர் அதிலும் குளிர்காய எண்ணி, இயேசுவை முஸ்லிம் ஆக்கிவிட்டார்கள் என்று சிண்டு மூட்டி எழுதியதை நினைவில் வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
ஈஸா நபியை இழிவு ப்டுத்தும் எந்த ஒரு முஸ்லிமும் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது.
//நல்லடியார் அவர்கள் "அவர்களே கண்டுகொள்ளவில்லை .எங்களுக்கென்ன?" என்று அன்னியத்தனமாக பேச என்ன காரணம் ? //
ஜோ,
இறைநேசன் பதிவில் நான் சொன்னது " இயேசுவைப்பற்றிய ஊடகத் தாக்குதல்களை முஸ்லிம்கள் கண்டித்தால் சம்பந்தப்பட்ட கிறிஸ்தவர்களே சகித்துக் கொண்டிருக்கும்போது, முஸ்லிம்களுக்கு என்ன வந்தது? என்று ஊடகங்களால் முஸ்லிம்கள் மென்மேலும் சகிப்புத்தன்மையற்றவர்களாக சித்தரிக்கப் படுவார்கள் என்பதே எதார்த்தம். ஆகவேதான் முஹம்மது நபியை தவறாக சித்தரிப்பதை மட்டும் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். முஹம்மது நபி மட்டுமல்ல மற்ற எந்த நபியையும் இழிவு படுத்தக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை."
ஐயா, இயேசுவை பிறர் இழிவுபடுத்தினால்/படுத்தும் போது இஸ்லாமியர்கள் தடுத்தால்/தட்டிக்கேட்டால், இழிவு படுத்துபவர்களும் அவர்களுக்குத் துணையாக கருத்துச் சுதந்திர போர்வை போர்த்தியவர்களும் "கிறிஸ்துவை உரிமை கொண்டாடும்/வணங்கும்/கடவுளின் மகனெனென நம்பும் கிறிஸ்துவர்களே கண்டு கொள்ளாத போது, இயேசுவை இறைத்தூதராக மட்டும் சொல்லும் முஸ்லிம்கள் ஏன் சீற வேண்டும்?" என்று கேட்பார்கள் என்பதால் முஸ்லிம்கள் முகம்மது நபியை இழிவு படுத்தும் போது மட்டும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்" என்றுதானே சொன்னேன்? இதில் எங்கே இயேசுவை அந்நியப்படுத்தினோம்?
நல்லடியார்,
உங்கள் வாக்கியத்தை சரியாக வாசிக்காது தவறாக புரிந்து கொண்டேன் .மன்னிக்கவும்!
அதை மறந்து விட்டு இங்கேயும் குறிப்பிட்டு விட்டேன் .மீண்டும் மன்னிக்கவும்.
ஆனால் உங்கள் கருத்தை புரிந்து கொண்ட பிறகு என்னுடைய பதில் இதோ..
//"சம்பந்தப்பட்ட கிறிஸ்தவர்கள்" என்று சொன்னது "இயேசுவை கடவுளின் மகனாக நம்பும்" என்ற அர்த்தத்தில் கொள்ளவும். இயேசுவை பிறர் இழிவு படுத்தும் போது முஸ்லிம்கள் 'தட்டிக்' கேட்டால் அல்லது எதிர்ப்பு தெரிவித்தால் ஊடகங்களால் என்ன சொல்லப் படுமோ அதைத்தான் சொன்னேன்.//
நல்லடியார்,
உங்கள் பார்வை முற்றிலும் தவறு என்பது என் தாழ்மையான கருத்து.இயேசுவை இழிவு படுத்தும் போது முஸ்லிம்கள் தட்டிக்கேட்டால் இஸ்லாமை பற்றி அதிகம் அறியாதோர் அதை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள வழி வகுக்கும் .நல்லெண்ணம் அதிகரிக்கும் என்பதே என் கருத்து.இஸ்லாம் என்றாலே அல்லாவும் ,முகமது நபியும் மட்டும் தான் என்றே பெரும்பான்மையான பிற மதத்தவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை தாங்கள் சற்று கண்கொண்டு பாருங்கள் .இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பற்றி அதன் உண்மையான கோட்பாடுகளைப் பற்றி மற்றவர்கள் அதிகமாக அறிந்து கொள்ள வழி வகுக்காததே இந்த பிரச்சனைகளுக்கு ஒரு காரணமும் கூட.
ஜோ,
புரிந்து கொண்டமைக்கு நன்றி.
//இயேசுவை இழிவு படுத்தும் போது முஸ்லிம்கள் தட்டிக்கேட்டால் இஸ்லாமை பற்றி அதிகம் அறியாதோர் அதை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள வழி வகுக்கும் .நல்லெண்ணம் அதிகரிக்கும் என்பதே என் கருத்து//
பர்ணபாஸ் மற்றும் சில வெர்சன்படி சொல்லப்பட்ட இயேசுவுக்கும், குர் ஆனில் சொல்லப்பட்ட இயேசுவுக்கும் உள்ள ஒற்றுமையைச் சொல்லி, இயேசு கத்தோலிக்கர்களால் அவர் சொல்லாதவற்றைச் சொல்லி இழிவுபடுத்தப்பட்டுள்ளார் என்று முஸ்லிம்கள் சொன்னால், அதற்கு கத்தோலிக்கர்களின் ரியாக்சன் என்னவாக இருக்கும்? என்பதே என் முந்தைய பதிலின் சாராம்சம்.
இரு வீடுகள் எரியும் போது முதலில் தன் வீட்டைக் காக்கவே ஒவ்வொரு மனிதனும் நினைப்பான். அடுத்தவர் வீட்டை முதலில் காப்போம், பிறகு நம் வீட்டை பார்த்துக் கொள்வோம் என்பது அரிது. தற்போதைய கார்ட்டூன் விவகாரம் முகம்மது நபியை புகழ்வதற்காக அல்ல. மாறாக இழிவு செய்வதற்காக வெளியிடப் பட்டவை. இதில் முஸ்லிம்களின் நிலைப்பாடு எரிக்கப்பட்ட தன் வீட்டைக் காப்பாற்றுபவனின் நிலையே. என் வீடு முன்பு எரிந்த போது ஏன் நீ காப்பற்றவில்லை? என்பது நியாயமாகது.
அன்புடன்,
நல்லடியார்
//இதில் முஸ்லிம்களின் நிலைப்பாடு எரிக்கப்பட்ட தன் வீட்டைக் காப்பாற்றுபவனின் நிலையே. என் வீடு முன்பு எரிந்த போது ஏன் நீ காப்பற்றவில்லை? என்பது நியாயமாகது.//
நல்லடியார்,
உன் வீடு ,என் வீடு என்று எவற்றை குறிப்பிடுகிறீர்கள் என்பதை தெளிவாக என்னால் புரிந்து கொள்ள முடியாததால் ,நான் ஒன்ரு சொல்வதற்கில்லை.
நான் கேட்காதது குறித்து உரிமைப் பிரச்சனை எல்லாம் எழுப்பவில்லை .உங்களின் இப்போதைய வருத்தத்தோடு என்னை இணைத்துக் கொண்டு ,இன்னொன்றில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று தானே கேட்டேன்? இனிமேல் நான் என்ன சொல்ல?
தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு கேட்கப்பட்ட சந்தேகத்தை ,குற்றம் சாட்டுவதாக திரித்தால் நான் என்ன செய்ய?
ஜோ,
//இயேசுவை இழிவு படுத்தும் போது முஸ்லிம்கள் தட்டிக்கேட்டால் இஸ்லாமை பற்றி அதிகம் அறியாதோர் அதை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள வழி வகுக்கும் .நல்லெண்ணம் அதிகரிக்கும் என்பதே என் கருத்து//
மேலும் தருமியின் பதிவில், இயேசுவைக் பாதுகாக்காமல் கைவிட்ட இறைவன் எப்படி சர்வ வல்லமையுள்ளவனாக இருக்க முடியும் என்றபோது, குர் ஆனில் எப்படி இயேசு இறைவனால் காப்பாற்றப்பட்டார் என்றும், //கடவுளின் குமாரனாகக் கருதப்படும் யேசு பல இடங்களில் ஜெபம் செய்ததாக பைபிளில் கூறப்பட்டாலும், சிலுவையில் அறையப்படுவதற்கு சிறிது முன்பு, ‘முடியுமானால் இந்தக் கடினமான பாத்திரம் என்னை விட்டு அகலக்கடவது; ஆனால், அது உம் எண்ணப்படியே ஆகட்டும்’ என்று ஜெபித்ததாகத் தெரியும். ஆனால் அவரது ஜெபமே கேட்கப்படவில்லை! அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஏனெனில், அது ஏற்கெனவே இப்படி நடக்குமென்று எழுதப்பட்டு விட்டது . அதைத்தான் நான் சொன்னென் - ப்ரெடெடெர்மினிச்ம் என்று. அப்படியானால், கிறித்துவம் சொல்லும் ‘ஜெபமே ஜெயம்’ என்ற கூற்று என்னாவது?//
தருமி,
பைபிளில் மனித ஊடுறுவல் நடந்து விட்டதால் இந்த குழப்பம். இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பதை இஸ்லாம் வன்மையாக மறுத்து, அவர் சிலுவையில் அறையப்படவும் இல்லை, கொலை செய்யப்படவும் இல்லை. இயேசுவின் எதிரிகளிடமிருந்து இயேசுவைக் காப்பாற்றி இறைவன் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டு விட்டான் என குர்ஆன் விளிக்கிறது. இயேசுவிற்குப் பதிலாக வேறொருவன் இயேசுவின் இடத்தில் வைக்கப்பட்டு, அவனைத் தான் இயேசுவின் எதிரிகள் இயேசு என நினைத்துக் கொலை செய்தார்களே ஒழிய இயேசுவைக் கொலை செய்யவில்லை. இதைப் பற்றிக் குர்ஆனில் குறிப்பிடும் போது :
இன்னும், “அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை, நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம” என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான்) அவரை அவர்கள் கொல்லவுமில்லை: அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை: எனினும் அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற) ஒருவனை ஒப்பாக்(கிக் காண்பிக்)கப் பட்டது. அல் குர்ஆன். 04௧57).
முஹம்மது நபி அவர்களோ அல்லது இயேசு என்றழைக்கப்படும் ஈஸா நபி அவர்களோ, இவர்கள் கொண்டு வந்த தூதுத்துவம் யாவும், இதற்கு முன் வந்த இறைத்தூதர்கள் கொண்டு வந்த ஓரிறைக் கொள்கை என்னும் தத்துவத்தை மாற்றுவதற்காக வரவில்லை, மாறாக அவற்றைப் புதுப்பிக்கவும், உறுதி செய்யவுமே வந்தார்கள்.
சரியாக சொல்வதென்றால் இயேசு பிரானை மாற்றம் செய்யப்பட்ட பைபிளைவிட குர்ஆன் கண்ணியமாகவே சொல்கிறது. முடிந்தால் குர்ஆனின் சூரா ‘மர்யம்’ என்ற அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.
என்றேன்.
"பக்தன்" என்ற பெயரில் ஒருவர் இயெசுவை முஸ்லிம்கள் சாதாரண, முகம்மது நபியை விட முக்கியத்துவம் குறைந்த? இறைதூதராகச் சொல்கிறார்கள் என்று முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சிண்டு முடிந்தார். குதர்க்கமாக வாதம் புரியும் மனநிலையில் உள்ளவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. இயேசுவை உயர்த்தி,கடவுளால் காப்பாற்றப் பட்டார், மீண்டும் வருவார் என்று சொன்னபோது நீங்கள் உட்பட மற்ற எவரும் கருத்துச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
நல்லடியார்
//இறைதூதராகச் சொல்கிறார்கள் என்று முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சிண்டு முடிந்தார். குதர்க்கமாக வாதம் புரியும் மனநிலையில் உள்ளவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. இயேசுவை உயர்த்தி,கடவுளால் காப்பாற்றப் பட்டார், மீண்டும் வருவார் என்று சொன்னபோது நீங்கள் உட்பட மற்ற எவரும் கருத்துச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.//
அவர் சிண்டு முடிந்து ஒன்றும் நடக்கவில்லை தானே? எத்தனை கிறிஸ்தவர்கள் உடனே உங்களிடம் வந்து சண்டை போட்டார்கள்?
தயவு செய்து என்னுடைய கருத்தை புரிந்து கொள்ளுங்கள் .இயேசுவைப் பற்றி ,அல்லது கத்தோலிக்க மதத்தைப் பற்றியோ வரும் கருத்துக்களை ,கேலிகளை உடனே எதிர் கொள்ள வேண்டும் என்ற கடமையோ ,ஆர்வமோ எனக்கு இல்லை .முடிந்தவரை நம்பிக்கைகளை பற்றி விவாதிக்காமல் இருப்பதே நல்லது .இங்கே இறை தூதர் முகமது பற்றிய கார்டூனுக்கு அனைவரும் கொதித்தெழுந்து கண்டனமும் கருத்தும் தெரிவித்த போது ,இஸ்லாமியர்களின் இன்னொரு நபியான ஈஸா நபி இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவே வினவினேன் .இதிலே கிண்டலோ,விஷமத் தனமோ கிடையாது .அல்லது நான் கிறிஸ்தவனாக இருப்பதற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது..இன்னும் உங்களுக்கு புரியவில்லையென்றால் என்னை மன்னிக்கவும்.
//இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளை நான் ஏற்றுக்கொள்ளுகிறேனோ இல்லையோ,அவை இஸ்லாமியர்களின் உரிமை என்பதை மதிக்கிறேன் .நம்பிக்கைகளை கேள்வி கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை//
//இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பற்றி அதன் உண்மையான கோட்பாடுகளைப் பற்றி மற்றவர்கள் அதிகமாக அறிந்து கொள்ள வழி வகுக்காததே இந்த பிரச்சனைகளுக்கு ஒரு காரணமும் கூட//
ஜோ,
ஒரு விஷயத்தை ஆழ்ந்து விவாதிக்க அந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், விஷயங்கள் விளங்கிக் கொள்வதற்காக முன் வைக்கப் படும் கேள்விகளும், நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் அடிப்படையிலேயே பார்க்கப்படும், ஒரு மனிதனின் கருத்தாக பார்க்கப் படாது. அதை அறிவுறுத்தி அறிவுறுத்தி விவாதிப்பதிலேயே பிரச்னை திசை திரும்பிவிடும். கத்திமேல் நடக்கும் அபாயம்தான் எப்போதும். ஆனாலும் உங்கலைப் போன்ற இளைஞர்கள் இதனால் சோர்ந்து போகாது விஷயங்களை விளக்குவது வருங்காலத்துக்கு நல்லது. உங்கள் சுட்டிகளுடன் வாசித்து நான் இன்று நிறைய தெரிந்து கொண்டேன்.
தாணு,
உங்கள் கருத்துக்கும்,சரியான புரிதலுக்கும் மிக்க நன்றி!
அன்பின் ஜோ,
நீன்கள் தனிப்பதிவாக வைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. அந்தப் பதிவில் நிகழ்ந்த விவாதங்களும் - ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் மதிப்பையும் அன்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது குறித்தும் மிக்க மகிழ்ச்சி.
//இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பற்றி அதன் உண்மையான கோட்பாடுகளைப் பற்றி மற்றவர்கள் அதிகமாக அறிந்து கொள்ள வழி வகுக்காததே இந்த பிரச்சனைகளுக்கு ஒரு காரணமும் கூட//
இது ஒரு பொதுப்படையான வாக்கியம். என்றாலும் இதை ஒவ்வொருவரும் மற்றவரை நோக்கி சொல்லிக் கொள்ள முடியும். இது அனைத்து மதத்தினராலும் உணரப்பட்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு, கத்தார் நாட்டில் அரசாங்கத்தின் சார்பில் ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது - அதாவது ஓரிறை கொள்கை நம்பிக்கையுடைய மதங்களின் அறிஞர்கள் கலந்து கொள்ளும் மாநாடு. அதில் நீங்கள் மேலே சொல்லிய 'எல்லோரூம் புரிந்து கொள்ளும் படி மதங்களை எளிமைப்படுத்தி பிற மத அன்பர்களுக்குத் தர வேண்டும் - அதுவும் சரியான முறையில், தரப்பட வேண்டும் என்று ம்டிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இந்த வருடத்தில் முதன்முறையாக இஸ்ரேலில் இருந்து ஒரு யூத மத ரப்பியும் கலந்து கொண்டார். ஆகையால், நீங்கள் விரும்பிய ஒருவரின் மதத்தைப் பற்றிய அறிதல் ஒரு நல்ல தளத்தில் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
ஜோ,
மேலும் ஈஸா நபிகளைப் பற்றிய பல கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டுமென்றால், அது குறித்து முதல் குரல் எழுப்ப வேண்டிய உரிமை, கடமை கிறித்துவர்களுக்கு உண்டு.
அவ்வாறில்லாமல், முதலில் இஸ்லாமியர்கள் எழுப்பி விட்டு, பின்னர் அது குறித்து கிறித்துவர்கள் எதுவும் சொல்லாமல் - எதிர்ப்பு இல்லாமல் போய்விட்டால் - பிறகு என்னவாகும்?
மனம் புண்பட்டிருந்தால் - முதலில் கிறித்துவர்கள் - அது எவ்வாறு தங்களைப் புண்படுத்துகிறது என்று அறிவுப்பூர்வமாகவோ, அல்லது உணர்ச்சிப் பூர்வமாகவோ எடுத்துரைத்து போராடத் தொடங்கினால் மட்டுமே, பிறரும் உங்களுடன் இணைந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
உதாரணத்திற்குப் பாருங்கள் -
டா வின்சி கோட் என்ற புத்தகம் - பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து எழுதப்பட்டது. ஆனால், கிறித்துவம் என்ற மிகப்பெரிய மதத்தைக் க்ட்டிக் காக்கும் பணியும் அதற்கென பல கோடி பணம் செலவு செய்து ஆராய்ச்சிகளும், விளக்கங்களும் தந்து வரும் - போப் ஆளுகையின் கீழ் இருக்கும் தேவாலயங்கள் எந்த வித விளக்கமும் அளிக்க வில்லை. நீண்ட மௌனம் தான். இப்படி இருக்கையில் முஸ்லிம்கள் இதில் என்னவாக தலையிட முடியும்?
மேலும், ஒரு மதத்திற்குள்ளாக நிகழும் சுயபரிசோதனைகளையெல்லாம், வெளியிலிருந்து தலையிட்டு தடுத்துக் கொண்டிருக்க முடியாது. அதனால், கிறித்த்வர்களே, இது உண்மையை அறியும் படியான சுயபரிசோதனை அல்ல, மாறாக, அப்பட்டமான தாக்குதல், என்று குரல் கொடுக்கும் பொழுது தான் மற்றவர்களுக்கு அது விளங்கும். அவ்வாறு குரல் எழும்பாதவரைக்கும் - அது குறித்து யாரும் எவரும் எதுவும் செய்ய இயலாது.
ஜோ,
நான் என் பதிவை மீண்டும் ஒருமுறை உங்கள் பார்வைக்குக் கொண்டு வந்ததற்கு உள்ள ஒரே காரணம் - ஈஸா நபிகளைப் பற்றிய தாக்குதலூக்கு ஒரு முஸ்லிமாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா என்று நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் தான்.
கவிஞனாக, சமூகப் பிரக்ஞை உள்ள கவிஞனாக உள்ள சிலர் - கேள்வி கேட்டிருக்கிறன்றனர். (அவர்கள் முஸ்லிம்களாக அமைந்து விட்டது தற்செயலாகக் கூட இரூக்கலாம். )
ஆனால், உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விட்டது அல்லவா?
அன்பின் நண்பன்,
//ஆகையால், நீங்கள் விரும்பிய ஒருவரின் மதத்தைப் பற்றிய அறிதல் ஒரு நல்ல தளத்தில் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.//
மிக்க மகிழ்ச்சி.
உங்கள் இரண்டாம் பின்னூட்டம் சற்று ஏமாற்றமே..மீண்டும் மீண்டும் என்னை ஒரு கிறிஸ்துவன் என்ற கோணத்தில் இந்த கேள்விகளை கேட்கவில்லை என்று பல முறை தெளிவு படுத்தியும் ,நீங்கள் அந்த கோணத்திலேயே பேசுகிறீர்கள் .நீங்கள் சொல்லுகிற கருத்து சரியென்றாலும் ,அது நான் எதிர்பார்த்த கோணத்தில் இல்லை .இருந்தாலும் பரவாயில்லை.
//கவிஞனாக, சமூகப் பிரக்ஞை உள்ள கவிஞனாக உள்ள சிலர் - கேள்வி கேட்டிருக்கிறன்றனர். (அவர்கள் முஸ்லிம்களாக அமைந்து விட்டது தற்செயலாகக் கூட இரூக்கலாம். )
ஆனால், உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விட்டது அல்லவா?//
கவிக்கோ போன்ற இஸ்லாமியர் கருத்துரைப்பது குறித்து மகிழ்ச்சியே .நான் விரும்புவது அறிவுலகைத் தாண்டி ,பெரும்பான்மை சாதாரண கிறிஸ்துவர்களுக்கும் ,இஸ்லாமியருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு புரிந்துணர்வும் ,அடிப்படை கோட்பாட்டு அறிவும் வளர வேண்டும் என்பதே .எல்லாம் ஒரே நாளில் நடந்து விடாது என்பதை அறிவேன் .அதற்கான சீரான முயற்சிகள் இதய சுத்தியோடு நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது..நன்றி!
அதனால் தான் அன்னை மரியை வேண்டும் போது "அன்னையே! எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும்!" என்று கத்தோலிக்கர்கள் வேண்ட வேண்டும் .இறைவனிடம் வேண்டுவதற்கு எதற்கு வேறொருவர் மூலமாக செல்ல வேண்டும் ?இறைவன் நமது தந்தையல்லவா? அவரிடமே நேரடியாக வேண்டலாமே? என்று கேட்கலாம் .நேரடியாகவும் தந்தையிடம் வேண்டுகிறோம் .அதே நேரத்தில் நம் நண்பர்களை ,உறவினர்களை நமக்காக இறைவனிடம் வேண்ட நாம் கோருவதில்லையா? அது போலத் தான் கன்னி மரியிடமும் ,புனிதர்களிடமும் கோருகிறோம் என்பதைத் தவிர இதில் வேறதும் இல்லை.//
கத்தோலிக்கர்களின் நம்பிக்கையையும் அதன் உட்கருத்தையும் இதை விட அழகாக, சுருக்கமாக சொல்ல முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை..
Simply superb Joe. வாழ்த்துக்கள்.
ஜோசப் சார்,
என்னுடைய புரிந்துணர்வுக்கு மூத்தவர் உங்களின் அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது..நன்றி!
Post a Comment