Thursday, March 09, 2017

ராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து பேசும் போது எல்லை தாண்டி சென்றால் கொல்லத்தான் செய்வார்கள் என ஒற்றை வரியில் கடந்து செல்லும் நியாயவான்களையும் அறிவுஜீவிகளையும் பார்க்கிறோம் . இது குறித்து சில விபரங்களைப் பார்ப்போம்.
கடலால் சூழப்பட்ட நாடுகளுக்கு நடுவிலான கடல்பரப்பில் அந்தந்த நாட்டுக்கு சொந்தமான கடற்பரப்பு , எந்த நாட்டுக்குமே சொந்தமில்லாத கடற்பரப்பு என இரு வகை பரப்புகள் இருக்கிறது .. ஒரு நாட்டில் நிலப்பரப்பிலிருந்து அதிக பட்சம் 12 நாட்டிகல் மைல் (சுமார் 22 கிமீ) தூரம் வரைக்குமே அந்த நாட்டின் கடல் பரப்பு . உதாரணமாக இந்தியாவுக்கு தெற்கேயும் மேற்கேயும் அடுத்த நாட்டு எல்லை வரை உள்ள கடற்பரப்பில் இந்தியாவிலிருந்து 22 கிமீ தாண்டி சர்வதேச கடற்பரப்பு ஏராளமாக உள்ளது .. இதில் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்க யாருக்கும் அனுமதி உண்டு .
ராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பின் தூரமே 22 கிமீ-க்கு குறைவு தான் . ஆக இதை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சமமாக பங்கிட்டால் கூட ஒரு பக்கத்துக்கு 10 கிமீ தான் தேறும் .. அதோடு அங்கே பொதுவாக மீன் பிடிக்கக் கூடிய சர்வதேச கடற்பரப்பு இல்லை .
கடலில் மீன் வளத்தை பொருத்தவரை , கடலின் அனைத்து பகுதிகளும் மீன் பிடிப்பதற்காக செறிவான மீன்கள் வாழும் பகுதிகள் இல்லை .. கடலில் 'மடை' எனப்படும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே மீன்கள் செறிவாக இனவிருத்தி செய்ய ஏதுவான சேறு இருக்கும் இது போன்ற 'மடை' பகுதிகளே பலரும் சென்று மீன் பிடிக்க ஏதுவான பகுதிகளாக இருக்கின்றன . உதாரணத்துக்கு குமரி மாவட்டத்தில் 45 மீனவ கிராமங்கள் இருக்கின்றன .. ஒவ்வொரு கிராமத்தினரும் அவர்கள் கிராமத்துக்கு நேராகத்தான் மீன் பிடிப்பார்கள் என்றில்லை .. குமரி மாவட்டத்தில் 10 -க்கு குறைவான 'மடை' பகுதிகள் இருக்கலாம் .. எனவே பாரம்பரியமாக ஒரு புரிந்துணர்வோடு பல பகுதியினரும் ஒரே மடையில் வந்து மீன் பிடிப்பார்கள் .
இது போல இப்போது பாக் ஜலசந்தியில் இந்த குறுகிய கடற்பரப்பில் எல்லைகள் பிரிக்கப்படுவதற்கு முன்பாக அந்த கடற்பரப்பு பொதுவாகவே இருந்தது ..அதில் தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் ஒன்றாகவே ஒரே மடை பகுதிகளில் மீன் பிடித்து வந்தனர் . அதில் பரஸ்பர புரிந்துணர்வும் இருந்து வந்தது .. சுந்தந்திரத்துக்குப் பின் எல்லைகள் பிரிக்கப்பட்டு ஏற்கனவே சர்வதேச கடற்பரப்பு இல்லாத மிகக்குறுகிய பகுதி பங்கு வைக்கப்பட்ட பின்னர் , மிக முக்கியமான மடைகள் இருந்த பகுதி இலங்கை எல்லைக்குள் சென்று விட்டது . இவை இன்று நேற்றல்ல , நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரியமாக இரு பகுதி மீனவர்களும் மீன் பிடித்துக்கொண்டிருந்த பகுதி .. இப்போது கோடு கிழித்து இந்த எல்லைக்குள் இருக்கும் இன்னும் சிறிய பகுதியில் மட்டும் நீ மீன் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நியாயமாகத் தோன்றலாம் . ஆனால் அது நடைமுறைக்கு பயனற்றது . மிகக் குறுகிய இந்த கடற்பரப்பில் தாங்கள் பாரம்பரியமாக மீன் பிடித்துக்கொண்டிருந்த மடைப்பகுதிகளுக்கு செல்வதே எல்லை தாண்டும் பிரச்சனை
மாநில அரசின் , மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது இந்திரா அம்மையார் கச்சத்தீவை தாரை வார்த்தது நிச்சயம் இன்னொரு பிரச்சனை என்றாலும் , கச்சத்தீவை மீட்டு விட்டால் பிரச்சனை முடிந்து விடும் என்பதும் தவறான கோணமே .
ஒரு பேச்சுக்காக , தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்வது தவறு என்று வைத்துக்கொண்டாலும் , அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பது தான் தர்மமும் , சட்டபூர்வ நடவடிக்கையாக இருக்குமே தவிர , தாக்குவதும் , சுட்டுக்கொல்வதும் காட்டுமிராண்டித்தனம் .. எனவே இவர்கள் மீன்களை கொல்வதால் அவர்களை கொல்வது நியாயமே என்றளவில் மட்டுமே நியாயம் பேசும் உயர்குடியினரை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை .
இதற்கு என்ன தான் தீர்வு ?
சுதந்திரமாக சென்று மீன் பிடிக்கக் கூடிய சர்வதேச பொதுப்பகுதி இல்லாத இந்த பகுதியில் , வழக்கமான ஒரு நாட்டின் சொந்த கடற்பரப்பான 22 கிமீ கூட இல்லாததது மட்டுமல்ல , அதுவும் இரண்டாக பிரிக்கப்பட்ட இப்பகுதியில் .. பாரம்பரிய மீன் பிடித்தல் உரிமைகளை கருத்தில் கொண்டு இரு நாடுகளும் இதை பொதுப்பகுதியாக , குறைந்தபட்சம் அந்த மடைப்பகுதிகளை பொதுப்பகுதிகளாக அறிவித்து இரு நாட்டு கடல்வழி பாதுகாப்பையும், கடத்தல் போன்ற எல்லா இடங்களிலும் நடப்பவற்றை தடுக்கவும் உறுதி செய்யும் செயல்பாடுகளோடு சேர்த்து இரு பகுதி மீனவர்களும் பொதுவாக மீன் பிடிக்க தேவையான ஒப்பந்தங்களை செய்வது ஒன்றே இதற்கு தீர்வு .

Monday, February 25, 2013

கடல் திரைப்படமும் கத்தோலிக்க மீனவர் சித்தரிப்பும் - தொடர்ச்சி


சென்ற பதிவின் தொடர்ச்சியாக ...

பொதுவாகவே கிறித்துவர்களிடையே கத்தோலிக்கருக்கும் மற்ற பிரிவினருக்கும் உள்ள கலாச்சார வேறுபாடுகள் குறித்த புரிதல் கிறித்துவரல்லாதவரிடத்தில் மிகக்குறைவு என்பது நிதர்சனம் . அதுவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து முரண்பட்ட பார்வை இருந்து கொண்டே இருக்கிறது .அவை பெரும்பாலும் ஆவேசப்பட்டு எதிர்க்கும் வகையாக இல்லாமல் புரிதலற்ற தன்மை குறித்த நகைப்போடு கடந்து செல்வதாகவே இருந்திருக்கிறது .  கிறித்துவர்களென்றால் முன்பெல்லாம் தமிழை கடித்துத் துப்பும் ஆங்கிலோ இந்தியரை சித்தரிப்பது , மாதா கோவிலில் நடப்பதாக காட்டப்படும் நிகழ்வுகள் தமிழக கத்தோலிக்க பின்புலத்திலிருந்து மாறுபட்டு கத்தோலிக்கரல்லாத பிறரின் வழக்கங்களை காட்டுவது (உதாரணமாக திருமணத்துக்கு தமிழ் கத்தோலிக்கர் இன்றுவரை மணமகள் பட்டுப்புடவை அணிந்து தங்கத்தாலி தான் கட்டுகிறார் என்பதை அறிந்திருக்காமல் ) வழக்கமான ஒன்று .

கடல் திரைப்படத்திலும் சில முரண்கள் இருக்கின்ற . 'ஸ்தோத்திரம்' என்ற வார்த்தை ஒருவருக்கொருவர் சொல்வது போல காட்டப்படுகிறது .  எங்கள் ஊர்களில் 'ஸ்தோத்திரம்' என்று யாரும் சொல்லுவதில்லை . தமிழிலேயே இன்றைக்கு கத்தோலிக்கரும் பிற பிரிவினரும் உபயோகிக்கும் விவிலியத்தின் (பைபிள்) உள்ளடக்கம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் வார்த்தை அமைப்புகளில் பெரும் வேறுபாடு உண்டு . தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகமே பைபிள் தான் என நினைக்கிறேன் . அப்போதைய தமிழ் மொழிபெயர்ப்பு அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த மணிபிரவாள நடையிலேயே அமைந்திருக்கிறது . கொஞ்சம் சமஸ்கிருதம் கலப்போடு வார்த்தைகள் அமைந்திருக்கும் ..பின்னர் கத்தோலிக்க ஆயர் குழு அதை திருத்தி முடிந்தவரை தூய தமிழில் மாற்றி அமைத்த வடிவத்தையே கத்தோலிக்கர்கள் இன்று உபயோகிக்கிறார்கள் . ஆனால் பிற சபையினர் இன்னும் பழைய வார்த்தை அமைப்புகள் கொண்ட வடிவத்தையே உபயோகிக்கிறார்கள் ..உதாரணமாக ஸ்தோத்திரம் , கர்த்தர் , தேவன் , இரட்சணியம் போன்ற வார்த்தை பிரயோகங்களை கத்தோலிக்கரல்லாதவர் உபயோகிக்கும் பைபிளில் காணலாம் .ஆனால் கத்தோலிக்கர் பைபிளில் அவை முறையே வணக்கம் , மீட்பர் , கடவுள் , மீட்பு என்றிருக்கும் . இது போன்ற வார்த்தை பிரயோகங்களிலேயே கத்தோலிக்கரையும் மற்றவரையும் அடையாளம் கண்டு கொள்ளலாம் . 'ஸ்தோத்திரம்' போன்ற வார்த்தைகள் கத்தோலிக்கரிடையே இன்று வழக்கொழிந்து விட்டது . 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்க கோவில்களில் லத்தீன் மொழியில் வழிபாடுகள் நிகழ்ந்தன . பின்னர் கத்தோலிக்க திருச்சபை அவரவர் தாழ்மொழியில் வழிபாடு செய்ய ஆரம்பித்த பிறகு நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. பொதுவாக கிறித்துவ பெண்கள் பூ , பொட்டு வைக்க மாட்டார்கள் என்ற அபிப்பிராயம் உள்ளது .மற்ற சபையினரைப் போலன்றி , தமிழக கிறித்துவர்களில் பெரும்பான்மையாக இருக்கின்ற கத்தோலிக்கர்களில் பெண்கள் பூ வைத்து பொட்டும் வைப்பது சகஜம் . அதுவும் மீனவ கிராமங்கள் இது சற்று அதிகம் . கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை தான் .ஆனால் கடல் திரைப்பட்டத்தில் 'கிறித்துவர்கள் பொட்டு வைக்க மாட்டார்கள்' என்ற பொதுக்கருத்தை அபப்டியே எடுத்துக்கொண்டு ஒரு பெண் கூட பொட்டோடு இருக்க கூடாது என கவனமாக தவிர்த்திருப்பதை பார்க்க முடிகிறது . அது ஒரு வேடிக்கையான அனுமானம் தான் .

கடல் திரைப்படத்தின் வர்த்தக தோல்விக்கு பிறகு ஜெயமோகன் தன் இணையப்பக்கத்தில் கொடுத்துள்ள சில விளக்கங்களில் ஒன்று இந்த கதை ஒரு அவிசுவாசம் நிறைந்த கத்தோலிக்க கடற்கரை கிராமத்தில் நடப்பதாக உள்ளது என்கிறார் . பொதுவாக மீனவர்கள் குறித்து உள்நாட்டவர் பலருக்கு ஒரு பொதுவான எண்ணம் உண்டு . மீனவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் , முரடர்கள் , அடுத்தவர் சென்று சொல்லித்தான் எதையும் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கும் உலக நடப்பு தெரியாதவர்கள் என்பது போன்ற ஒரு எண்ணம் பலருக்கும் இருப்பதை பார்க்க முடிகிறது . தமிழகத்தில் வட தமிழக மீனவ கிராமங்களுக்கும் தென் தமிழக மீனவ கிராமங்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு . தென் தமிழகத்தில் மீனவ கிராமங்கள் கத்தோலிக்க திருச்சபையோடு பின்னிப் பிணைந்திருப்பதால் அவர்கள் ஒரு வகையில் சுரண்டப்பட்டாலும் , அவர்கள் அடைந்த மிகப்பெரிய நன்மை கல்வி மேம்பாடு .. தென் தமிழகத்து மீனவ கிராமங்களில் வானுயர்ந்த தேவாலயங்களுக்கு அருகில் நிச்சயமாக ஒரு பள்ளிக்கூடத்தையும் காணலாம் . படிப்பறிவில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன இந்த கிராமங்கள் .சமீபத்தில் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த ஒரு இளம் பெண் பேசும் போது மீனவர்கள் என்றால் படிப்பறிவில்லாத அப்பாவிகள் என்பது போல குறிப்பிட்டு விட்டு இடிந்தகரை மக்களுக்கு உதயகுமாரின் என்.ஜி.ஓ பிழைப்பதற்கு வேலை கொடுப்பதனால் தான் அவரை ஆதரிக்கிறார்கள் என ஒரு மிகப்பெரிய காமெடியை சீரியசாக சொன்னார் . மீனவர் பற்றிய பொதுவான புரிதல் எத்தனை அபத்தமாக இருக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம் . அவரைச் சொல்லி குற்றமில்லை . ஏனன்றால் உள்நாட்டில் இருக்கும் பலரும் மீனவர் கிராமங்களுக்கு சென்று பார்த்ததே கிடையாது . இது அவருக்கு மட்டுமல்ல , மீனவர் பற்றி ரொம்ப தெரிந்தது போல பேசும் , எழுதும் பல அறிவுஜீவிகளின் நிலையும் அது தான் .

திரைப்படம் என்பது கற்பனை கலந்தது , அதை பொதுமைப்படுத்தி குறை சொல்லக்கூடாது என்பதிலும் , ஒரு குறிப்பிட்ட சித்தரிப்பு ஒட்டுமொத்தமாக எதையும் நிறுவுவதாகாது என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு . ஆனால் மீனவர் குறித்து மேற்சொன்ன பொதுமைப்படுத்துதலே தொடர்ந்து நிகழ்ந்து வரும் போது , அரிதாக மீனவர் குறித்து வரும் இது போன்ற திரைப்படங்களின் சித்தரிப்புகள் அந்த பொதுப்புத்தியை தாண்டிய பார்வையை தவிர்த்து அதை மீண்டும் உறுதிப்படுத்தவே செய்யும் எனும் போது அது பற்றி நமக்கு கரிசனம் வருவது தவிர்க்க முடியாதது . எந்த ஒரு குறிப்பிட்ட சித்தரிப்புக்கும் ஒரு குறைந்த பட்ச நடைமுறை முகாந்திரம் இருக்க வேண்டும் . ஜெயமோகன் சொல்ல வரும் அவிசுவாச மக்கள் நிறைந்த கத்தோலிக்க கடற்கரை கிராமம் என்பது குறித்த பொதுவான சித்திரத்தை அளிக்க முடியாது . குறிப்பிட்ட பாதிரியார்கள் , சில திருச்சபை செயல்பாடுகள் குறித்த சில அவிசுவாசங்கள் சாத்தியம் உண்டு என்றாலும் அடிப்படை கத்தோலிக்க விசுவாசத்தில் கடற்கரை மக்கள் காலங்காலமாக ஊறியவர்கள் . மீனவர்களுக்கும் கிறித்துவத்துக்கும் விவிலிய ரீதியாகவே பிணைப்பு உண்டு . இயேசுவை முதன் முதலாக ஏற்றுக்கொண்டு பின் தொடர்ந்த அவரது சீடர்களில் பலர் மீனவர்கள் தான் . மீன் பிடித்துக்கொண்டிருந்தவரிடம் "இன்று முதல் நீ மனிதர்களை பிடிப்பவனாவாய்" என இயேசுவால் சொல்லப்பட்ட , பின்னர் திருச்சபையின் முதல் தலைமையாக இருந்த இராயப்பர் (St.Peter) உள்ளிட்ட இயேசுவில் 12 அப்போஸ்தலர்களில் பலர் மீனவர்கள் தான் . இயேசுவே அவர்களோடு சென்று வலை வீசினார் என பைபிளில் வருகிறது . தென் தமிழ்கத்தில் 5 நூற்றாண்டுகளாக கத்தோலிக்கராக இருக்கின்ற கடற்கரை மக்களின் கிறித்துவ விசுவாசத்தில் இவை சார்ந்த ஒரு பெருமிதமும் , கூடுதல் ஒட்டுதலும் இருப்பதை நிச்சயமாக்க சொல்ல முடியும் . மீனவ மக்களிடம் அதிமாக காணப்படும் புனித அந்தோனியார்(St.Antony)  பக்திக்கும் , அந்தோனியாரின் போதனையை கடல் மீன்கள் செவிமடுத்தன என்பது போன்ற கதைகளும் காரணம் . இந்த பின்புலத்தில் கடற்கரை கிராமம் முழுவதும் அவிசுவாசிகளாக இருப்பதாகவும் அதை மாற்ற ஒரு பாதிரியார் சென்று அவர்களின் அறியாமையையும் அவிசுவாசத்தையும் போக்க முயல்வதாகவும் இன்றைய காலகட்டத்தில் சொல்லுவது நீயா நானாவில் பேசிய அந்த மாணவியிடம் வெளிபட்ட பொதுப்புத்தியிலிருந்து பெரிதும் வேறுபட்டதல்ல என்றே நினைக்கிறேன்.

மற்றபடி , பாராட்டத்தக்க சில அம்சங்களும் படத்தில் இருக்கின்றன . முதலில் மேற்சொன்ன சித்தரிப்பு முரண்பாடுகளைத் தாண்டி இது நிராகரிக்கத்தக்க படம் அல்ல .. நண்பர் அருள் எழில் சொன்னது போல மீனவர் சம்பந்தப்பட்ட எதைக்குறித்தும் மீனவரல்லாதவரிடம் நிலவுகின்ற அதீதமான இடைவெளியாலேயே  இந்த படம் பலரால் முற்றாக நிராகரிக்கப்பட்டதோ என்ற ஐயமும் இருக்கிறது . படத்தில் கையாளப்பட்ட வட்டார வழக்கை பொறுத்தவரை இதுவரை மீனவர் குறித்து வந்த படங்களிலேயே இதுவே ஆகச்சிறந்தது . முதன்மை கதாபாத்திரங்கள் தவிர சிறு கதாபாத்திரங்கள் மற்றும் பின்னணியில் ஒலிக்கும் சில வசனங்கள் அருமையான அவதானிப்பை உணர்த்துகின்றன . குறிப்பாக கதாநாயகனின் தாய்க்கு பின்னர் ஒரு நாளில் கல்லறை தோட்டத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அது சார்ந்த பாடலும் மிகவும் எதார்த்தம் .

கடவுள் , சாத்தான் , குறியீடு , படிமம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கெல்லாம் ஆழம் இருப்பதாக படவில்லை என்றாலும் நிராகரிக்கத்தக்க படமல்ல 'கடல்'.

Tuesday, February 19, 2013

கடல் திரைப்படமும் கத்தோலிக்க மீனவர் சித்தரிப்பும்


கடல் திரைப்படம் வர்த்தக ரீதியாக மட்டுமன்றி விமர்சன ரீதியாகவும் பொதுவாக நிராகரிக்கப்பட்டுள்ளது . அதீதமான எதிர் மறை விமர்சனங்களுக்குப் பின் கடல் படத்தை பார்க்க நேர்ந்ததாலோ என்னவோ பலரும் கருதும் அளவுக்கு அத்தனை மோசமில்லை என்றே எனக்கு தோன்றியது . ஒரு திரைப்படம் என்னும் அளவில் ஓரளவு என்னை கவரவும் செய்தது.


மணிரத்னம் இயக்கம் , ஜெயமோகன் வசனம் , தென் தமிழகத்து கத்தோலிக்க மீனவர் சமூக பின்னணி என பல காரணிகள் படம் பார்ப்பதற்கான ஆர்வம் தூண்டின . தமிழ் சினிமாவில் தொடர்ந்து மீனவர் குறித்த சித்தரிப்புகள் தேவையான கள ஆய்வும் புரிதலும் இல்லாமலேயே இது வரை இருந்திருக்கின்றன . ஜெயமோகன் என்ற பெரும் எழுத்தாளர் இந்த கடற்கரை சமூகம் வாழும் நிலப்பரப்பிலிருந்து 10 கிமீ தூரத்தில் வசிப்பவர் தான் என்றாலும் அவருடைய முந்தைய சில அவதானிப்புகளை பார்க்கையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கவில்லை .

இது கடல் திரைப்படத்துக்கான விமர்சனம் அல்ல . கடல் படம் சித்தரிக்கும் தென் தமிழகத்து கத்தோலிக்க மீனவர் பின்புலத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன் என்ற முறையில் கடல் படத்தில் அந்த சமூகம் குறித்த சித்தரிப்புகளின் மீதான என் பார்வை மட்டுமே.


தென் தமிழகத்து கத்தோலிக்க மீனவர் சமூகம் இந்தியாவில் மிகப்பழமையான , பாரம்பரியமிக்க கிறித்துவ சமூகங்களில் ஒன்று .திருச்செந்தூருக்கு தெற்கே மணப்பாடு முதல் கன்னியாகுமரி வரையில் வங்காள விரிகுடா ஓரமும் , கன்னியாகுமரியிலிருந்து கேரள எல்லையான நீரோடி வரை அரபிக்கடல் ஓரமாகவும் நீண்டு கிடக்கின்ற மீனவ கிராமங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கத்தோலிக்கர்களாகவும் , இரண்டு சாதியினராகவும் உள்ளனர் . இதில் 4 அல்லது 5 ஊர்களில் மட்டுமே இரண்டு சாதியினரும் இணைந்து வாழ்கிறார்கள் ..மற்ற எல்லா கிராமங்களிலும் ஏதாவது ஒரு சாதி மக்களே வாழ்கின்றனர் .. உள்நாட்டு கிறித்துவர்களை போலன்றி 450 வருடங்களுக்கு மேலாக கத்தோலிக்க மதத்தில் ஊறிப்போன இம்மக்கள் வாழ்க்கை , அரசியல் , ஊர் நிர்வாகம் எல்லாமே மதம் சார்ந்து தான் அமைந்துள்ளது . ஊர் முழுக்க ஒரே மதம் , ஒரே சாதி என்பதால் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மதம் பின்னிப் பிணைந்துள்ள சமூகம் இவை .

* இந்த பின்புலத்தில் ஒரு கடற்கரை கிராமத்து பங்கு (parish) கோவில் பல ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடப்பது என்பது நடைமுறையில் நான் கண்டிராதது .இந்த படத்தில் பங்குக்கோவில் பல ஆண்டுகள் கவனிப்பாரன்றி பூட்டிக்கிடப்பதாகவும் அதை திறக்கும் போது நாய்கள் உள்ளிருந்து பாய்ந்து வெளியே வருவதுமாக காட்டப்படுகிறது . இது போல இந்த பகுதியில் நடக்க வாய்ப்பே இல்லை . முழுக்க முழுக்க திருச்சபையை வாழ்க்கையோடு இணைத்துக் கொண்ட இம்மக்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தாங்கள் ஓலைக் குடிசைகளில் வசித்த போதும் வானளாவ கோவில்களை கட்டியவர்கள் .. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் நீங்கள் குறுக்காக பயணம் செய்தால் ஒவ்வொரு ஊரிலும் வானளாவ நிற்கும் கோவில்கள் நிச்சயம் உங்களை வாய்பிளக்க வைக்கும் .. அந்த அளவுக்கு பக்தியின் பேரால் இம்மக்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டிருக்கிறார்கள் என்பதே என் தனிப்பட்ட கருத்து . அன்றிலிருந்து இன்று வரை மீன் பிடித்து வரும் வருமானத்தில் குறைந்தது 10 சதவீதத்தை ஊர் கோவிலுக்கு கொடுத்து வருபவர்கள் இம்மக்கள் . எங்கள் ஊர் சமீபத்தில் ஒரு பங்காக இருந்து இரண்டாக பிரிக்கப்பட்டது .. 500 குடும்பங்கள் கொண்ட சிறிய புதிய பங்கில் கிட்டத்தட்ட 1.5 கோடி செலவில் புதிய ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது .. ஓரிரு உதவிகள் தவிர இது 90% எம் மக்களின் பணம் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும் . எனவே ஒரு கடற்கரை பங்குக்கோவில் இப்படி பாழடைந்து கிடக்கும் என்பது எதார்த்தமில்லாதது .

* அரவிந்த சாமி அந்த ஊருக்கு புதிய பங்குக் குருவாக வருகிறார் .. தமிழ் சினிமாவில் கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு புதிதாக வரும் ஆசிரியர் ஒரு பஸ்ஸில் வந்து இறங்கி நான் தான் பள்ளிக்கு புதுசா வந்திருக்கும் வாத்தியார் என்ன மக்களிடம் சொல்வாரே அது போல புதிய பங்கு சாமியார் வருவதாக காட்டும் போது நான் விழுந்து விழுந்து சிரித்தேன் .. ஏனென்றால் ஒரு பங்குக்கு அதுவும் கடற்கரை பங்குக்கு பங்கு குருவானவர் பொறுபேற்க வருகிறார் என்றால் அத்தனை சுழுவாக நடந்து விடாது .. முதலில் மறைமாவட்ட ஆயர் (பிஷப்) அதை அறிவிப்பார் ..பின்னர் பொறுப்பேற்கும் அன்று பெரும்பாலும் பிஷப் அவரோடு ஊருக்கு வருவார் . ஊரிலிருந்து பங்கு கமிட்டியினர் வருகின்ற புதிய குருவை சென்று வரவேற்று கொண்டு வருவார்கள் . ஓரே கூடி நிற்கும் ஒரு நிகழ்வில் பங்குக்குருவானவர் பொறுப்பேற்றுக்கொள்வார் . இது போல ஏதோ புதிதாக வந்த போஸ்ட் மாஸ்டர் கணக்காக யாரும் வருவதில்லை .

* ஒரு குருவானவரை ஊரார் நடத்தும் விதம் அதிர்ச்சிகரமாக காட்டப்பட்டுள்ளது . எக்காரணத்தைக் கொண்டும் ஒரு குருவனாவரை அடிப்பது , உதைப்பது , கிட்டத்தட்ட எல்லோருமே நாராச மொழியில் பேசுவது போன்றவை மணிரத்தினமும் , ஜெயமோகனும் பொதுவாக மீனவர்கள் படிப்பறிவற்றவர்கள் , முரடர்கள் , மரியாதை தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தியை தாண்டி எந்த கள ஆய்வும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது . முந்தைய காலங்களைப் போல குருவானவர் என்றால் பிரமிப்பும் , பக்தியும் இப்போது இல்லாதிருக்கலாம் . அதற்கு காரணம் இன்றைக்கு மிக அதிக அளவில் குருவானவர்கள் வருவது இந்த கடற்கரை கிராமங்களிலிருந்து தான் . இப்போது சொந்த குடும்பத்திலோ அல்லது ஒன்று விட்ட குடும்ப வட்டத்திலோ குறைந்தபட்சம் ஒரு குருவானவரோ அல்லது கன்னிகாஸ்திரியோ இல்லாத ஒரு மீனவ குடும்பத்தை பார்ப்பது அரிது .அந்த வகையில் பிரமிப்பும் பக்தியும் குறைந்து போயிருக்கலாம் .ஆனால் குருவானவரை ஏதோ வேண்டப்படாத விரோதி போல பார்க்கும் நிலை கண்டிப்பாக இல்லை .. சில ஊர்களில் சில குருவனாவர்களை ஏசுவதும் , அரிதாக சிறிது தாக்குவதும் நடந்திருக்கலாம் .ஆனால் இது போல ஊர்முழுக்க வசையும் தாக்குதலும் குருவனாவர் மீது நடப்பதாக காட்டுவது மீனவர் பற்றிய பொதுப்புத்தி என்றே நினைக்கிறேன். அதுவும் எடுத்தவுடனே அந்த பையன் பாதிரியாரை வசை மாறி பொழிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை . அப்படி நடந்தால் கண்டிப்பாக மக்கள் பார்த்துக்கொன்டிருக்க மாட்டார்கள்.

* இந்த படத்திலும் சரி , நீர்ப்பறவையிலும் சரி .. ஹீரோ ஊரால் புறக்கணிக்கப்பட்டவர் , ஊதாரி ரேஞ்சில் வருகிறார்கள் . நீர்ப்பறவையில் கடலில் கண்டெடுக்கப்பட்டவன் என்பதால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதது போலவும் , இந்த படத்தில் தாய் சோரம் போனதால் ஒதுக்கப்பட்டதாக்கவும் காட்டுகிறார்கள் . இறந்து போன தாயைத்தவிர அவனுக்கு யாருமே இல்லையாம் . இவையெல்லாம் கடற்கரை சமூகத்தில் சாத்தியமில்லாதது ..ஏனென்றால் பாரம்பரிய மீனவர்கள் நூற்றாண்டுகளாக அங்கிருப்பவர்கள் , யாராக இருந்தாலும் மாமன் , மச்சான் என குறைந்தது 10 குடும்பங்களாவது அந்த ஊரில் இருக்கும் . நான் பார்த்தவரை மீனவ சமூகம் பாலியல் ரீதியாக சோரம் போனதற்காக போன்ற சொத்தை காரணங்களுக்காக யாரையும் தள்ளி வைப்பதும் இல்லை ..இப்படி கேவலமாக நடத்துவதும் இல்லை .. கூட நின்று தட்டிக் கேட்பதற்கு குறைந்தது நாலு பேரில்லாத எவரையும் நான் எங்கள் ஊர்களில் பார்த்ததில்லை . (உள்ளூர் கிராமங்களுக்கும் இது பொருந்துமே என கேட்கலாம் ..நிச்சயமாக வேறுபாடு இருக்கிறது)

* நீர்ப்பறவை ஆனாலும் சரி , இதிலும் சரி .. தன்னை நிரூபிக்க ஒரு படகு வாங்கி அதில் தொழில் செய்ய முற்படுவதாக காட்டப்படுகிறது ..அதெல்லாம் சரி தான் .ஆனால் படகில் தொழில் செய்வதை ஏதோ பம்பரம் விடுவது கணக்காக காட்டுகிறார்கள் ..முதலில் ஒரு கட்டுமரத்தில் வலையோடு சென்று மீன்பிடிக்கவே குறைந்தது இரண்டு பேராவது சேர்ந்து செல்ல வேண்டும் . வள்ளம் எனப்படும் படகிலேயே ஹீரோக்கள் தனியாக சென்று மீன்பிடிப்பது போல காட்டப்படுவது நல்ல காமெடி .. வள்ளம் , படகுகளில் மீன்பிடிப்பதற்கும் படகில் சுற்றுலா போவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா ? குளுமையான காட்சி அமைப்பு , அட்டகாசமான காமிரா கோணம் திரைப்படங்களுக்கு தேவையென்பதால் படகில் படுத்துக்கொண்டு கையை விரித்து போஸ் கொடுப்பது , திடீரென்று வீட்டு அக்குவேரியத்திலிருந்து ஒரு மீனை அள்ளுவது போல அம்மாம்பெரிய மீனை கடலில் கைவிட்டு அசால்டாக பிடித்து விடுவது எல்லாம் எனக்கு ஏதோ ஹீரோ சுற்றுலா போவது போலிருக்கிறதே தவிர , தொழில் செய்வது போலில்லை .. இவையெல்லாவற்றையும் விட மிகப்பெரிய காமெடி சினிமாக்களில் கடலில் வலை வீசுவதாக வரும் காட்சிகள் தான் .. இதுவரை அப்படி வீசப்படும் வலைகளெல்லாம் ஏரி , குளங்களில் வீசப்படும் வலைகள் தான் . வலையை தோளில் போட்டுக்கொண்டு ஒரு முனையை பிடித்து வீசுவதாக காட்டுவார்கள் .. கடலிலே பயன்படுத்தப்படும் வலைகள் குறைந்தது 100 மீட்டர் நீளமாவது இருக்கும் .யாரும் அதை தோளில் தூக்கி வீசுவதில்லை ,வீசவும் முடியாது .

(தொடரும்)

Thursday, March 15, 2012

கர்ணன் - மீண்டும் பவனி


நடிகர் திலகத்தின் காவியங்களில் ஒன்றான 'கர்ணன்' திரைப்படம் 1964-ம் ஆண்டு வெளியானது .48 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலி ,ஒளி அமைப்புகள் மெருகேற்றப்பட்டு நாளை தமிழகமெங்கும் 50-க்கும் மேற்பட்ட திரைகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.



நடிகர் திலகம் கர்ணனாக , என்.டி.ராமராவ் கண்ணனாக கலக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி , தேவிகா ,முததுராமன் , அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் ..வீரபாண்டிய கட்டபொம்மனை இயக்கிய பி.ஆர் .பந்துலு இயக்கியபடம் .வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு கனல் வசனம் தீட்டிய சக்தி கிருஷ்ணசாமியே இதற்கும் வசனம் தீட்டியுள்ளார் ..மெல்லிசை மன்னர் இசையில் அற்புதமான பாடல்கள் , காலத்தை கடந்த பிரம்மாண்டமான போர்க்களக் காட்சிகள் என சகல விதத்திலும் நிறைவான படம் .






நல்ல திரைப்படங்கள் காலத்தை கடந்தும் நிலைக்கும் என்பதை இந்த மறு வெளியீட்டூக்கு மக்கள் வழங்கும் ஆதரவு உறுதி செய்யும் .இதனால் இது போல காலத்தை வென்ற திரைப்படங்கள் பல வெளியாகி இன்றைய தலைமுறை ரசிகர்களையும் சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி .


Sunday, December 19, 2010

குழந்தையும் தெய்வமும்



வார இறுதியில் குழந்தைகளோடு கழிக்கும் தருணங்கள் போல மகிழ்ச்சியானது வேறெதுவும் இல்லை . நேற்று முந்தினம் என் 5 வயது மகன் தன் விளையாட்டுத் தோழன் மூலமாக கிடைத்த கிருஷ்ணன் பற்றிய ஒரு கார்ட்டூன் குறுந்தகடு ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தான் ..முழுவதுமாக ஒரு முறை பார்த்து முடித்து விட்டு , தொடர்ச்சியாக இன்னொரு முறை பார்க்க வேண்டுமென கேட்டு இரண்டாம் முறையும் பார்த்து முடித்தான்.

முடித்தவுடன் என்னிடம் வந்த அவனுக்கும் எனக்கும் உரையாடல் இப்படிப் போனது..

மகன் :அப்பா , கிருஷ்ணன் பவர்புல் காட்-ஆ ?

(நான் பதில் சொல்லும் முன்னரே மீண்டும் அவனே)

மகன் :ஜீஸசும் கிருஷ்ணாவும் பவர்புல் காட்-சா?

நான் :ஆமா!

மகன் :எப்படி ரெண்டு பேரும் பவர்புல் காட்ஸ்?

நான் :காட் ஒருத்தர் இருக்கார் .சிலர் அவரை கிருஷ்ணன் என்கிறார்கள் .சிலர் அவரை ஜீஸஸ் என்கிறார்கள். அவ்வளவு தான்.

மகன் :போத் ஆர் சேம் ?

நான் : நாம சர்ச்-க்கு போகும் போது ஜீஸஸ் கிட்ட ப்ரே பண்ணுறோம்ல .அதுபோல சமிக்‌ஷா டெம்பிள்-க்கு போகும் போது கிருஷ்ணா கிட்ட பிரே பண்ணுவா.

சின்ன பையன் கிட்ட இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும் ..சொல்லணும் .வெற்றிகரமா இப்போதைக்கு முடிஞ்ச அளவு புரிய வச்சுட்டோம் .அவன் வயசுக்கு இதுவரை அவனுக்கு புரிஞ்சாலே போதும் -ன்னு நான் நினைச்சிட்டிருக்கும் போது , அவன் ’அன்பே சிவம்’ கமல் ரேஞ்சுக்கு அடிச்சான் ஒரு ஷாட்

மகன் : அப்பா , யூ ஆர் ஆல்சோ காட்

என்ன சொல்லுறதுண்ணு தெரியல்ல ..மறுத்தா இப்போதைக்கு முழுமையா விளக்க முடியாது

நான் : யூ டூ மோனே !

குழந்தை இயேசுவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் .


குழந்தையின் உள்ளத்தில் எந்த பிரிவினையும் கபடும் கிடையாது என்பதால் தான் இயேசு கூட இப்படிச் சொன்னார் ...



நீங்கள் குழந்தைகளாக மாறவிடில் விண்ணரசில் நுழைய மாட்டீர்கள்.... (மத்தேயு 18:3)

Monday, August 16, 2010

இந்திய சுதந்திர தினமும் குறைந்து போன சுருதியும்

அப்போதெல்லாம் எங்கள் ஊரில் கிறிஸ்துமசுக்கு அடுத்து வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நாள் இந்திய சுதந்திர தினம் .10-வது படிக்கும் போது பள்ளி மாணவர் தலைவன் என்ற முறையில் திங்கள் தோறும் தேசியக்கொடி ஏற்றி மாணவர் அணிவகுப்பு நடத்தும் பொருட்டு முன்னரே பள்ளிக்கு சென்று கொடியை மடித்துக்கட்டி உச்சியில் ஏற்றி வைக்கும் பொறுப்பும் எனக்கிருந்தது . தேவாலய வளாகத்திலேயே பள்ளி என்பதால் சுதந்திர தினத்தன்று தேவாலயத்தில் சுதந்திர தின சிறப்புத் திருப்பலி முடிந்தவுடன் ஒட்டு மொத்த ஊரும் கூடி நிற்க பள்ளி மைதானத்தில் சிறப்பு அணிவகுப்பு மற்றும் கொடியேற்றம் நடைபெறும் . பின்னர் நாள் முழுவதும் இளைஞர் அமைப்பு ஒன்று குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான வித விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இரவில் பொதுக்கூட்டம் நடத்தி கலை நிகழ்ச்சிகளோடு பரிசு கொடுப்பார்கள் . பள்ளி நாட்களுக்கு பின்னர் கல்லூரி நாட்களில் இளைஞர் குழாமோடு இணைந்து பொறுப்பேற்று நடத்தியதுண்டு .இரவுப் பொதுக்கூட்டத்தில் இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் முன் ‘தாய்நாடு நம் தாயைப் போன்றது . நம் தாய்க்கு இணையான தாய்நாட்டுக்கு மரியாதை செய்யும் விதமாக அனைவரும் எழுந்து நிற்க வேண்டுகிறேன் “ என்று உணர்ச்சிவசப்படுவது அநேகமாக நானாகத் தான் இருக்கும் .

இந்தியா , தாய்நாடு , ஜனகனமன , வந்தே மாதரம் இந்த வார்த்தைகளை கேட்டாலே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிந்த காலங்கள் அவை . அந்த தாய்நாட்டை விட்டு வேலை காரணமாக சிங்கப்பூர் வந்த பிறகு இந்த தேசபக்தி , பெருமிதமெல்லாம் இன்னும் ஒரு படி அதிகரித்திருத்திருந்தது . ஆகஸ்ட் 15 அன்று சின்ன தேசியக்கொடியை சட்டையில் குத்திக்கொண்டு அலுவலகத்துக்கு போயிருக்கிறேன்.

பள்ளியும் கல்லூரியும் கொடுத்த ஒற்றைப்பார்வை கல்வியைத் தாண்டி படிக்கவும் , பல நாடுகளை பற்றி அறிய ஆரம்பித்த போது தான் புனித பிம்பங்கள் கலைய ஆரம்பித்தது , காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாடு , ஒரே எண்ணம் ,ஒரே மக்கள் என கன்னியாகுமரியில் உட்கார்ந்து கொண்டு ‘முதலில் நான் இந்தியன் ..பின்னர் தான் ...” என்றெல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட்டது கொஞ்சம் கொஞ்சமாக காமெடியாகிப் போனது . முகம் தெரியாத மூன்றாவது நாட்டில் ஏதாவது ஒரு உணவகத்தில் அமர்ந்திருக்கும் போது பாகிஸ்தான் நாட்டு சகோதரன் வந்தாலே கொஞ்சம் சிநேகமாக புன்னகைப்போம் . காணக்கிடைக்காத நாட்டில் வட இந்தியரைப் பார்த்தாலும் பேச்சுக் கொடுப்போம் . அதே நேரம் ஒரு ஈழத்தமிழனோ , மலேசியத் தமிழனோ தென்பட்டால் மெதுவாக நம் மனம் அங்கே நகரும் ..நம் வட இந்திய நண்பரோ பாகிஸ்தான் சகோதரரை நோக்கி நகர நாமோ ஈழத்தழனையோ மலேசியத் தமிழனையோ நோக்கி நகர்ந்திருப்போம் . நானும் வட இந்தியனும் ஒரே நாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கிறோம் என்ற உறவைத் தவிர , எனக்கும் வேறு நாட்டு தமிழனுக்கும் உள்ள இயல்பாண பிணைப்பு அளவுக்கு எதுவும் இல்லை என தெரிய வருகின்ற தருணங்கள் அவை .

இந்தியா என்பது அரசியல் காரணங்களுக்காக வரையப்பட்ட எல்லைக் கோட்டுக்கு கட்டுப்பட்ட பிரதேசமேயன்றி கலாச்சார , மொழி , பண்பாட்டால் உருவான கலாச்சார பிணைப்பு அல்ல என புரிய ஆரம்பித்தது . ஒரு இந்திய பஞ்சாபிக்கு ஒரு பாகிஸ்தான் பஞ்சாபியிடமே பகிர்ந்து கொள்ளவும் உறவு கொள்ளவும் அதிக காரணங்கள் இருக்குமே அல்லாமல் இந்தியன் என்பதற்காக ஒரு தமிழனோடு அல்ல என்பதும் , ஒரு வங்காளி தெலுங்கனை விட வங்காள தேசத்தவனோடே தன்னை அதிகமாக பொருத்திப்பார்க்க முடியும் என்பதும் ஒரு தமிழ்நாட்டு தமிழன் ஒரு இடத்தில் ஒரு உத்திரப் பிரதேசக்காரனையும் ஒரு ஈழத்தமிழனையோ அல்லது மலேசியத் தமிழனையோ காண நேர்ந்தால் யாரோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயல்வான் என்பதையும் அனுபவ பூர்வமாக உணர முடிந்தது. ’ முதலில் நான் இந்தியன் ..பின்னர் தான் ...” போன்ற வெற்று கோஷங்களின் போலித்தன்மை பல்லிளிக்க முதலில் நான் யார் என தெளிவாக உணர முடிகிறது.

மொழி , கலாச்சாரம் வேறு வேறானாலும் வேற்றுமையில் ஒற்றுமை தானே நம் தனித்துவம் என காரணம் சொல்லப்படுகின்ற போது இப்போதெல்லாம் ‘ நீ அரிசி கொண்டு வா ..நான் உமி கொண்டு வாறேன் ..ரெண்டு பேரும் ஊதி ஊதி தின்னலாம் ‘ என்ற சொற்றொடர் தாம் ஞாபகம் வருகிறது . கடல் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்படும் குஜராத் மீனவர்கள் ‘இந்திய மீனவர்கள்’ என இந்திய அரசு நினைக்கும் போது ராமேஸ்வரம் மீனவன் மட்டும் ‘தமிழக மீனவன்’ என்றால் நான் என்ன நினைப்பது ? பரம்பரை எதிரியாக சித்தரிக்கப்படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி வந்து விட்ட மீனவனை சுடுவதில்லையே .. மிஞ்சிப்போனால் கைது செய்து சிறையில் தானே அடைக்கிறார்கள் .. ஆனால் காலங்காலமாக தங்கள் சொத்தாக இருந்த கச்சத்தீவை தன்னுடைய நாடு எவனுக்கோ தாரை வார்த்து கொடுத்ததும் அல்லாமல் , அங்கே வலைஉலர்த்தும் உரிமை இருப்பதாக சொன்னாலும் அதை கூட உறுதிப்படுத்த முடியாத நிலைமையில் ஒரு வல்லரசு என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் ஒரு நாடு 400 -க்கு மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்ட பின்னரும் கூட அந்த குட்டி நாட்டுக்கெதிராக ஒரு குரலைக்கூட உயர்த்த முடியவில்லையென்று சொன்னால் இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும் .. 1. இந்தியா என்ற நாட்டுக்கும் சுயமரியாதையும் முதுகெலும்பும் கிடையாது 2 . செத்துப்போன இன்னும் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மீனவர்களை இந்த நாடு தன் குடிமக்களாக கருதவில்லை ..வெறென்ன காரணம் இருக்க முடியும் ?

இப்போது ஒருபடி மேலே போய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எல்லை தாண்டி சென்றால் மீனவர்களுக்கு அரசு பொறுப்பல்ல என சொல்லியிருக்கிறார் ..ஏதோ இந்திய எல்லைக்குள் மட்டும் இவர்கள் ரொம்ப பாதுகாப்பு கொடுத்து கிழித்து விட்டது போல ..கச்சத்தீவுக்கு வெறும் 18 கிமீ தூரமே உள்ள ஒரு கடற்பரப்பில் , கச்சத்தீவு வரை சென்று மீன் பிடிக்கவும் ,வலை உலர்த்தவும் உரிமை உண்டு என சொல்லப்பட்டும் கூட , 12 கீமி -லிருந்து தன்னுடைய கடற்பரப்பாக கருதிக்கொண்டு இலங்கை நம் மக்களை தாக்குகிறது .அதையும் தாண்டி நம்முடைய கரை வரை வந்து தாக்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன ..ஆனால் வல்லரசின் மேன்மை தங்கிய வெளியுறவுத் துறை அமைச்சரோ தமிழக மீனவருக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்காதது ஒன்று தான் பாக்கி ..இந்த லட்சணத்தில் ’சுதந்திர தினம்’ ரொம்ப முக்கியம் !

Friday, April 09, 2010

மகளிர் இட ஒதுக்கீடு - அடிப்படை புரிதலும் குழப்பமும்

சமீபத்தில் ஆளும் முன்னணியால் வேகமாக முன்னெடுக்கப்பட்ட மகளிருக்கான 33.3 % சதவீத இட ஒதுக்கீடு மசோதா பல விவாதங்களை கிளப்பியுள்ளது .ஒரு தரப்பினரால் முன் வைக்கப்படும் உள் ஒத்துக்கீடு ,அதன் கூறுகள் கொஞ்சம் உள்நோக்கி ஆராய்பவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடியது .ஆனால் 33.3 % மகளிர் ஒதுக்கீடு குறித்து ஆரம்ப அளவில் நடைபெறும் விவாதங்களில் கூட அடிப்படை புரிதல் இருக்கிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

முதலில் மகளிருக்கு 33.3% ஒதுக்கீடு என்றால் என்ன அர்த்தம் ? பலரும் பேசுவதைப் பார்த்தால் 33.3% மகளிருக்கு , மீதி 66.3% ஆடவருக்கு என முடிவு கட்டி விடுகிறார்கள் .ஆனால் உண்மையில் மகளிருக்கு 100% , ஆடவருக்கு 66.3 % சதவீதம் என்பது தானே இதன் பொருள். இன்று வரை மகளிரும் ஆடவரும் எங்கேயும் போட்டியிட தங்கள் பாலினம் தடையில்லை .ஆனால் இந்த மசோதா வந்தால் , ஆடவர் 66.3 % இடங்களில் மட்டுமே போட்டியிடலாம் . 33.3 % இடங்களில் மகளிர் மட்டுமே போட்டியிட முடியும் .ஆனால் ஆடவருக்கு அனுமதிக்கப்பட்ட 66.3% இடங்கள் ஆடவருக்கு மட்டுமல்ல ,மகளிரும் போட்டியிட தடை இல்லை ..ஆக இதை மிக எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 33.3 % பிரதிநிதித்துவம் என்பது மகளிருக்கான குறைந்த பட்ச வரம்பே தவிர அதிக பட்ச வரம்பு 100% .ஆனால் ஆடவருக்கு அதிகபட்ச வரம்பு 66.3 %.

சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ‘கருத்துக்களம்’ என்னும் நிகழ்ச்சியில் இது குறித்து விவாதிக்கப்பட்டது . பொதுவாக இதை தொகுத்து வழங்குபவரும் கலந்து கொண்டு பேசுபவர்களும் பேசுகின்ற விடயம் குறித்து எந்தவித அடிப்படை அறிவும் இன்றி உளறிக் கொட்டுவது வழக்கம் . இந்த விவாதமும் அதற்கு தப்பவில்லை . தமிழச்சி தங்கபாண்டியன் விருந்தினரில் ஒருவராக வந்திருந்ததால் அவர் கொஞ்சம் உருப்படியாக பேசுவார் என்பதால் கவனிக்க ஆரம்பித்தேன்.

இன்னொரு விருந்தினராக வந்திருந்த சற்று முதிர்ந்த அம்மையார் மெத்தப்படித்தவராக தெரிந்தார் .அவரும் ‘பெண்களுக்கு ஏன் வெறும் 33.3 % மட்டும் . 50% சதவீதமல்லவா கொடுத்திருக்க வேண்டும்?” என்று வழக்கமான பல்லவியை பாடினார் .இவர் போன்றவர்களின் புரிதலே ‘பெண்ணுக்கு 33.3% ஆணுக்கு 66.3%” என்ற அடிப்படையற்ற பார்வைக்குட்பட்டதாக இருந்தால் சாதாரண பாரம மக்கள் எப்படி நினைப்பார்கள் ?

இன்றைக்கும் பெண்கள் 100% சதவீதம் வரை வருவதற்கு சட்டப்படி எந்த தடையிமில்லை . தர்மப்படி 50% வந்திருக்க வேண்டும் . ஆனால் 50% அல்லது 10% ஒதுக்கவே அரசியல் கட்சிகள் தயாராக இல்லை .எனவே தார்மீக அடிப்படையில் அரசியல் கட்சிகள் செய்ய முன்வராத ஒன்றை சட்டத்தின் மூலமாகவாவது நிர்பந்தப் படுத்தி குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களையாவது பெண்களை நிறுத்தியாக வேண்டும் என கொண்டு வருவது தானே இந்த சட்டம் .. ஆக 33.3 % சதவீதம் என்பது குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதே அல்லாமல் அதிகபட்ச வரைமுறை எதுவும் இல்லை . இந்நிலையில் ஏன் வெறும் 33.3% என்பது மிகவும் மேம்போக்கான பார்வை என்பதில் சந்தேகம் இல்லை .அங்கிருந்த தமிழச்சி தங்க பாண்டியன் கூட இது குறித்து விளக்கவில்லை.

ஒருசாரார் ஏன் 50% இல்லை என அப்பாவித்தனமாக கேட்டுக்கொண்டிருக்க ,இதை எதிர்த்தாக வேண்டும் என முடிவோடு என்ன பேசலாம் என ரூம் போட்டு யோசித்து கொண்ட இன்னொரு சாரார் பேசியது அதை விட காமெடி . ஒரு இளம் வயது பெண் ஒரே கேள்வியில் எல்லோரையும் வாயடைக்கச் செய்கிறேன் பார் என உத்தேசித்துக்கொண்டு கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி “பெண்கள் எல்லாம் பாராளுமன்றத்துக்கு டெல்லிக்கு போய் விட்டால் ,அவர்கள் பிள்ளைகளை இங்கே வீட்டில் யார் கவனித்துக் கொள்வார்கள் ? அரசாங்கமா கவனித்துக் கொள்ளும்?” என ஆவேசப் பட ..இதுக்கு மேல் தாங்காது என தொலைக்காட்சியை அணைத்தேன்.

Tuesday, April 06, 2010

எனக்கு பிடித்த 10 தமிழ் படங்கள்

தமிழில் சிறந்த 10 படங்களை பட்டியலிடுமாறு வாத்தியார் தருமி அழைத்திருந்தார் . பய இப்படியாவது ஒரு பதிவு போட்டுகிடட்டும் என நினைத்திருப்பார் போல .நான் இங்கே பட்டியலிட்டிருப்பது தமிழின் சிறந்த 10 படங்கள் என்பதை விட எனக்கு பிடித்த 10 படங்கள் என்பதே சரியாக இருக்கும்

அந்த நாள் (1954)

இப்போது பார்த்தால் அந்த நாளிலேயே இப்படி ஒரு படமா என கேட்கத் தோன்றும் படம் .பாடல்களுக்கிடையே அவ்வப்போது கதையும் வரும் காலகட்டத்தில் பாடலே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் .முதல் படத்திலேயே உச்சாணிக்கொம்பில் போய் உட்கார்ந்த நடிகர் திலகம் வில்லத்தனமான அதுவும் தேசவிரோத பாத்திரத்தில் . வீணை பாலசந்தரின் இயக்கம் . கதாநாயகன் சுட்டு வீழ்த்தப்படுவது தான் படத்தின் முதல் காட்சியே .புதுமையான திரைக்கதை ,ஒளிப்பதிவு ,வசனங்கள் என காலத்தை கடந்த கலை நுணுக்கம் .

ரத்தக்கண்ணீர் (1954)

என்னைப் பொறுத்தவரை நக்கல் ,நையாண்டிக்கு இதை மிஞ்சி எந்த படமும் வந்ததில்லை . அதில் ராதாவை மிஞ்சியவரும் எவருமில்லை . எம்.ஆர்.ராதா என்ற தன்னிகரில்லா கலைஞனின் முத்திரைப் படம் .

கர்ணன் (1964)

பிரம்மாண்டம் .64-லேயே காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் .கர்ணனாக நடிகர் திலகமும் ,கிருஷ்ணனாக என்.டி.ஆரும் சும்மா பின்னியிருப்பாங்க (ஒரு அறிவிசீவி எழுத்தாளர் சமீபத்தில் ஓவர் ஆக்டிங்கின் உச்சம் சிவாஜி என திருவாய் மலந்திருக்கிறாராம் .அவருக்கு நம் பதில் ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்பதை தவிர வேறென்ன?)

தில்லானா மோகனாம்பாள்(1968)

புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படங்களாகும் போது அவை வெற்றி பெறுவதில்லை என பொது விதியை நொறுக்கிய படம் .தரமான பொழுது போக்கு என்பதற்கு நிறைவான உதாரணம் இந்தப் படம் .நடிகர் திலகத்தின் மற்றுமொரு புகழ்மகுடம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விரும்பி ரசித்து பல முறை பார்த்த திரைப்படம் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

நாயகன் (1987)

விளக்கம் தேவையில்லை . கமல்ஹாசன் ,தமிழ் சினிமா இரண்டின் போக்கையும் மாற்றியமைத்த திரைப்படம். இப்போது அஜீத் ,விஜயின் வயதை விட நான்கைந்து வயது குறைவான வயதில் கமல் என்னும் மகாகலைஞனின் பரிமாணம் என்றும் வியப்புக்குரியது.

தேவர் மகன் (1992)

நடிகர் திலகம் என்னும் நூற்றாண்டு கலைஞன் எடுப்பார் கைப்பிள்ளையாக திறமையற்றோர் கைகளில் பந்தாடப்பட்ட போது ,கமல் என்னும் ஏகலைவன் தன் துரோணருக்கு அளித்த மகத்தான குருதட்சணை .திரைக்கதை வசனகர்த்தாவாக கலைஞானி விசுவரூபம் எடுத்த படம்.






மகாநதி (1993)

கல்கத்தா காட்சியில் கண்ணிலிருந்து ரெண்டு சொட்டாவது வராதவருக்கு இதயம் இருக்குமிடம் வெற்றிடம் என சொல்லி விடலாம் . கமல்ஹாசனின் மற்றொரு கலைப்பிரவாகம்.




சதி லீலாவதி (1995)
சிரிப்பொலியில் தியேட்டர் குலுங்கக் குலுங்க பார்த்த படம் .என்னைப் பொறுத்தவரை மைக்கல் மதன காமராஜனை விட ஒரு படி மேல் நகைச்சுவையில்.





குருதிப்புனல் (1995)

’அன்னை வேளாங்கண்ணி’ படமெடுத்தாலும் அதில் ‘வானமெனும் வீதியிலே’ என காதல் பாடாமல் தமிழ் படமில்லை எனும் எழுதப்படாத விதியிலிருந்து விலகி, எடுத்துக்கொண்ட கருவிலிருந்து இம்மியும் விலகாத படம் .





அன்பே சிவம் (2003)

கமல் மட்டுமல்ல ,மாதவனுக்கும் இது ஒரு வாழ்வில் ஒரு முறை படம் .மிகவும் ரசித்த படம்.

குறிப்பு : குணா , நான் கடவுள் ,காதல் , பாசமலர் , கவுரவம் ,முள்ளும் மலரும் ,தில்லுமுல்லு ,அழகி என பத்து மட்டும் என்பதால் பத்தாமல் போன படங்கள் நிறைய.

குறைந்தது 2 பேரையாவது தொடருக்கு அழைக்க வாத்தியார் சொல்லிவிட்டார் . நண்பர்கள் மருத்துவர் புருனோ மற்றும் சுரேஷ் கண்ணன் இருவரையும் அழைக்கிறேன்.

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில்

நான் கடவுள் , உன்னைப் போல் ஒருவனுக்கு அடுத்து தியேட்டரில் பார்த்த படம் இது தான் .வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களை படித்து விட்டு எதிர்பார்ப்புகளை வெகுவாக குறைத்துக்கொண்டு சென்றது நல்லதாக போய்விட்டது .பலரின் விமரிசனங்களை படித்தால் ‘மவனே ! பாயிண்ட் பாயிண்டா’ பிரிச்சு மேஞ்சுடணும்’ -னு நோட்டும் கையுமா போய் குறிப்பெடுத்துக் கொண்டு எழுதுவார்களோ என சந்தேகமாயிருக்கு .அதிலும் ஆங்கிலப்படங்களை அதிகமாக பார்ப்பவர்கள் தங்கள் மேதமையை காட்டுவதற்காக ‘சொதப்பிட்டான்யா’ என 1000 கோடி செலவில் எடுத்த ஆங்கிலப்படத்தையும் 30 கோடியில் எடுத்த இந்த படத்தையும் ஒப்பிட்டு ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்குவது நல்ல தமாசு .

இதுவரை செல்வராகவன் பாலாவைப் போல மிகக்கவர்ந்த இயக்குநர் இல்லை எனக்கு .முந்தைய நாள் தான் தொலைக்காட்சியில் 7Gரெயின்போ காலனி பார்க்க நேர்ந்தது .இது போன்ற அப்பார்ட்மெண்ட் காதலை சொதப்பல் நடிகர்களை வைத்து நகர்ப்புற ரசனைக்கேற்றவாறு கொஞ்சம் மந்தகாசமான கோணத்துடன் பெரும்பாலும் பாடல்களை நம்பி களமிறங்கும் ஒரு இயக்குநர் என்ற என் பொதுவான கருத்தை வலுப்படுத்திக் கொண்டு இந்த படத்திற்கு சென்றால் எதிர்பாராத மாற்றம் .எனக்கு தெரிந்து தமிழில் இந்த அளவுக்கு முன்னேற்பாடுகள் , காட்சியில் வரும் அதிகபட்ச மனிதர்களின் ஒருங்கிணைப்பு , அரங்க அமைப்பு போன்றவற்றுக்கு அதிகபட்ச உழைப்பு தேவைப்பட்டிருக்கும் படம் இதுவாகத் தானிருக்கும்.

“சோழர் பாண்டியர் உண்மை வரலாற்றுக்கும் இதற்கும் தொடர்பில்லை ..இது முழுக்க கற்பனையே” என முதலிலேயே போட்டு விட்ட பின்னரும் பலர் வரலாற்றுத் தவறுகளை நோண்டுவதுவும் பிடிபடவில்லை ..ஒரு வரலாற்றுப் புத்தகத்தை படித்து விட்டு கேள்வி கேட்கலாம் . வரலாற்றுப் புதினத்தில் வரும் கற்பனைகளையும், வர்ணனைகளையும் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி ? அதான் புதினம் -ம்னு சொல்லியாச்சேப்பா (இதுவரை வரலாற்று புதினம் எதுவும் நான் படித்ததில்லை ,அதனால என் கண்ணோட்டம் தவறோ என்னவோ?)

படத்தின் கதை ,நடிப்பு ,இசை பற்றியெல்லாம் பலரும் அலசி விட்டார்கள் .என்னைப் பொறுத்தவரை ஒளிப்பதிவு ,அரங்க அமைப்பு ,காட்சி கோணங்களில் பிரம்மாண்டம் ..குறைந்தபட்சம் இவைகளில் இந்த படம் தமிழ்சினிமாவின் உச்சத்தை தொட்டிருக்கிறது. காட்சிகளின் நம்பகத்தன்மையை மட்டும் வைத்து முற்றிலும் நிராகரிப்பதை விட அந்த காட்சியை ஒருங்கிணைப்பதில் எடுக்கப்பட்டிருக்கும் உழைப்பை கருத்தில் கொள்வதும் முக்கியம் .அந்த வகையில் செல்வராகவன் கற்பனையில் தோன்றுவதை காட்சிப்படுத்தியதில் தமிழ் சினிமாவின் பொருளாதார வரைமுறைக்குட்பட்டு கொடுத்துள்ள பிம்பங்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவை. மீண்டும் 1000 கோடிகளை 30 கோடிகளுடன் ஒப்பிட்டு ஒற்றை வரியில் நிராகரிப்பது ஏற்புடையதல்ல.

கார்த்தியின் உடம்பில் புலி வண்ணத்தையெல்லாம் ஆராய்ந்து கேள்வி கேட்கும் சோழ மன்னன் புஜத்தில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் உருவத்தை பார்த்து “யார் இந்த அரசன்?” என ஏன் கேள்வி கேட்கவில்லை ? என நானும் வம்புக்கு கேள்வி கேட்கலாம் .படம் முழுவதும் கற்பனையென்றான பின் இதற்கெல்லாம் விடையில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகள் ஈழத்தின் சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பின் செல்வராகவனுக்கு தோன்றியதாக சிலர் நினைப்பதற்கு முகாந்திரம் அதிகமே . ஒரு நாட்டின் ராணுவம் என்பது தேசபக்தியின் அடையாளம் , ஒழுக்க சீலர்களின் கூடாரம் ,புனிதப்பசுக்கள் போன்ற பாடப்புத்தக பொதுப்புத்தியிலிருப்பவர்களுக்கு கடைசி காட்சிகளை ஜீரணிக்க முடியாதிருக்கலாம் . ஆனால் அதை துணிந்து பதிவு செய்த செல்வாவை பாராட்ட வேண்டும். சோழர் காலத்து மொழியில் வரும் வசனங்கள் பலருக்கும் புரியவில்லை என பரவலாக குற்றச்சாட்டு உள்ளது .எனக்கு ஒரு சில வார்த்தைகள் தவிர அனைத்தும் தெளிவாக புரிந்தது.

செல்வா இன்னொன்றை செய்திருக்கலாம் ..படத்தை முடித்த பின்னர் வெளிப்படையாக கருத்து சொல்ல வாய்ப்பில்லாத தன் உள்வட்டத்தில் உள்ளவர்களை தவிர்த்து தனக்கு வெளிவட்டத்தில் ஒரு சில தரப்பினரிடம் படத்தை காண்பித்து கருத்து கேட்டிருந்தால் ,இரண்டாம் பாதியில் சில குறைத்தல் ,சரிப்படுத்துதல் செய்திருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப ரீதியில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் .

குறைகளைத் தாண்டி கண்டிப்பாக இது புறக்கணிக்கப்படவேண்டிய படமல்ல , கொட்டப்பட்டிருக்கும் உழைப்புக்காகவேனும் .

Wednesday, December 02, 2009

இடைத்தேர்தல் விதிமுறை கேலிக்கூத்து

அனிதா ராதாகிருஷ்ணன் என்பவர் அதிமுக சார்பாக வெற்றி பெறுவாராம் .பின்னர் அவர் சொந்த பிரச்சனை காரணமாக அதிமுக-விலிருந்து வெளியேறி திமுக-வில் இணைவாராம் .உடனே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வாராம் .அதைத் தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து தேர்தல் கமிஷன் இடைத் தேர்தல் நடத்துமாம் .தன் சொந்த பிரச்சனைக்காக அவர் ராஜினாமா செய்ததால் வரும் இடைத் தேர்தலில் அவரே மீண்டும் திமுக சார்பாக போட்டியிடுவாராம் .ஆளுங்கட்சி அமைச்சர்களெல்லாம் அமைச்சரவை பணிகளை விட்டு விட்டு அவர் தொகுதியில் முகாமடித்து மீண்டும் அவரை வெற்றி பெற செய்வார்களாம்.

இது போல ஒரு கேலிக்கூத்தை எந்த ரகத்தில் சேர்ப்பது என தெரியவில்லை .ஒரு வேளை அனிதா ராதாகிருஷ்ணனே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம் .கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எந்த மாற்றத்தையும் கொண்டு வராத இந்த முடிவால் (அவர் தான் எம்.எல்.ஏ ..சிறிது இடைவெளி ..மீண்டும் அவரே எம்.எல்.ஏ) , ஒரு தனிபட்டவரின் சொந்த விருப்பு வெறுப்பால் இழப்பு மக்கள் வரிப்பணம் ,அமைச்சர்கள் தேர்தல் வேலையால் அரசு பணிகளில் இழப்பு , இன்ன பிற..

ஒருவரை மக்கள் 5 வருட பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த பிறகு ,அவரே முன் வந்து ராஜினாமா செய்வாரென்றால் ,ஒன்று குறைந்தபட்சம் அவர் எடுத்த முடிவால் வரும் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது .இல்லை நான் போட்டியிடுவேன் என்றால் இவரின் சொந்த குழப்பத்தால் வரும் தேர்தலுக்கான செலவை அவர் ஏற்க வேண்டும் என்பது தானே குறைந்த பட்ச நியாயம் என்ற முறையிலும் சரியாக இருக்கும் ? இதைக் கூட அமல் படுத்த முடியாத தேர்தல் விதிமுறை சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?

இது ஒன்றும் புதிதல்ல ..ஏற்கனவே பலர் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வாதம் வருமானால் , இதுவரை நடந்தவையும் தவறு தான் என்பதில் சந்தேகம் இல்லை .எல்லாவற்றுக்கும் ஒரு துவக்கம் வேண்டும் .இப்படிப்பட்ட குறைந்த பட்ச நெறிமுறைகளை கடைபிடிக்காத தேர்தல் நெறிமுறைகளை வைத்துக்கோண்டு தேர்தல் கமிஷன் மார்தட்டிக்கொள்வது கேலிக்கூத்து.

Wednesday, September 23, 2009

உன்னைப்போல் ஒருவன் - முரண்களும் சந்தேகங்களும்

ஏற்கனவே பலரும் கிழியும் வரை அலசியாச்சு . சினிமா மொழி ,தொழில் நுட்பம் , திரைக்கதை வடிவம் ,தமிழ் சினிமாவின் பொதுவடிவத்திலிருந்து தனித்து நிற்பது போன்றவற்றை எடுத்துக்கொண்டால் உன்னைப்போல் ஒரு தனித்துவமான படம் தான் . கமல் ரசிகன் என்ற முறையில் , கமலுக்கு எதிர்பாராமல் கிடைத்த குறைந்த கால அவகாசத்தில் ரொம்பவும் மெனக்கெடாமல் , மிகுந்த பொருட் செலவில்லாமல் ,குறிப்பிட்ட நுகர்வோர் கூட்டத்தை குறிவைத்து வெற்றிகரமாக எடுக்கப்பட்ட படம் என நினைக்கிறேன் .வர்த்தக ரீதியுலும் இது ஒரு வெற்றிப்படமே. கமல் , மோகன்லால் நடிப்பு குறித்தெல்லாம் தனியே சொல்லத் தேவையில்லை .அனுபவத்தால் ஊதித் தள்ளியிருக்கிறார்கள்.



கலை வடிவம் என்பதைத் தாண்டி உன்னைப்போல் ஒருவன் சொல்லும் சேதி ,வசனங்கள் குறிக்கும் கருத்துருவாக்கம் இவையெல்லாம் வலையுலகில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டதை வைத்து அந்த கதாபாத்திரம் சார்ந்த ஒன்றை ஒட்டு மொத்தமாக சொல்வதாக கட்டமைக்கப்படும் வகை விமர்சனங்கள் எனக்கு ஏற்புடையதில்லை .ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் வசனகர்த்தாவும் , இயக்குநரும் பார்வையாளருக்கு சொல்ல வரும் கருத்தா அல்லது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை மட்டும் வெளிப்படுத்தும் கூறா என்பது அவரவர் எடுத்துக்கொள்ளும் விதத்தை பொறுத்தது .

உன்னைப் போல் ஒருவனில் கூட குறை சொல்ல வேண்டுமென நினைப்பவர்கள் ஒரு சில கதாபாத்திரங்கள் ,ஒரு சில இடங்களில் சொல்லும் வசனங்களை மேற்கோள்காட்டி அவையே வசன கர்த்தாவின் கருத்து என நிறுவுகிறார்கள் ..அதற்கு நேரெதிராக இன்னொரு கதாபாத்திரம் பேசும் வசனங்கள் இந்த வாதத்துக்கு ஒத்து வராததால் ,அவை ஏதோ வசன கர்த்தா எழுதாதது போலவோ ,அல்லது அது அந்த பாத்திரத்தின் கருத்து போலவோ மறைத்து விடுகிறார்கள். ஆக கதாபாத்திரத்தின் கருத்தைத் தாண்டி வசனகர்த்தாவும் ,இயக்குநரும் பார்வையாளருக்கு சொல்ல முற்படும் கருத்துக்கள் எவை என யார் முடிவு செய்வது ? அவரவர் எடுக்கும் நிலைப்பாட்டுக்கு ஏற்ப எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

இந்த படத்தில் சொல்லப்படும் வசனங்கள் , குறியீடுகள் பல எனக்கு சில வருத்தங்களையும் , சந்தேகங்களையும் எழுப்பியது உண்மை . இயக்குநர் சொல்ல வரும் கருத்து ஒன்றாகவும் பெரும்பான்மை பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் விதம் வேறாகவும் இருப்பதற்கு ஏதுவான பல வசனங்கள் படத்தில் இருக்கிறது .. இந்த பூடகத்தன்மை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதாக இருக்குமோ என சந்தேகமும் வருகிறது.

கோவை குண்டு வெடிப்பு , பெஸ்ட் பேக்கரி நிகழ்வு இரண்டுக்கும் உள்ள கால முரண்பாடு போன்ற சில அலசப்பட்டவற்றை தவித்து , வேறு சிலவற்றை பார்ப்போம் .அதற்கு நண்பர்கள் சிலர் கொடுத்த வேறு அர்த்தங்களும் உள்ளது .

1. அப்துல்லா என்ற தீவிரவாதி தன் மூன்றாவது மனைவி பெஸ்ட் பேக்கரி நிகழ்வில் எரித்து கொல்லப்பட்டதை குமுறலோடு சொல்லும் போது இந்துவாக பிறந்த உடனிருக்கும் தீவிரவாதி(சந்தான பாரதி) அதான் ரெண்டு பொண்டாட்டி மீதியிருக்கில்ல என்ற ரீதியில் நக்கலாக சொல்வது காட்சியாக வருகிறது . எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது .. ஆனால் திரையரங்கில் பலர் சிரித்தார்கள் . தீவிரவாதியோ யாரோ ஒரு பயங்கரவாத சம்பவத்தில் தன் மனைவி கொல்லப்படதை சொல்லும் போது ,அவருக்கு மூன்று மனைவி இருப்பதை வைத்து இன்னொருவர் நக்கல் அடிப்பது .. இதில் வசனகர்த்தா சொல்ல வருவதென்ன ? ஒரு சமுதாயத்தினரின் ஒரு வழக்கத்தை நக்கல் அடிப்பது தான் வசனகர்த்தாவின் நோக்கமா ? நண்பர் ஒருவர் சொன்னார் .. இல்லை ..அந்த இடத்தில் கூட இருக்கும் அந்த இந்து தீவிரவாதியின் குரூர புத்தியை சொல்ல வருகிறார்கள் என்று ..ஆனால் பெரும்பான்மை பார்வையாளர்கள் அந்த கோணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கு சந்தான பாரதி சொன்னவுடன் எழும் சிரிப்பலையே சாட்சி.

2. கமல்ஹாசன் ஒரு முஸ்லீம் என்று ஒருவர் சொல்கிறார் .. அவர் மனைவியிடம் பேசும் போது அவர் மனைவி "இன்ஷா அல்லா-வா?" என்கிறார் ..எனவே அவர் முஸ்லீம் தான் என ஒருவர் சொல்லுகிறார் ..என்னைப் பொறுத்தவரை அவர் மனைவி 'இன்ஷா அல்லா' என்று அவரே சொல்லாமல் 'இன்ஷா அல்லா-வா?" என கேட்பது இது கமல்ஹாசன் வீட்டில் அவ்வப்போது சொல்வார் என்பதை குறிக்கிறது .. முஸ்லீம் அல்லாத சிலர் கூட (நான் உட்பட) சில நேரம் 'இன்ஷா அல்லா' சொல்வதுண்டு .எனவே எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

3. தீவிரவாதிகளை ஒன்றாக சேர்த்து ஆப்பரேஷன் ஆரம்பிக்கும் முன்னர் இரண்டு போலீஸ் அதிகாரிகளிடமும் பேசும் மோகன்லால் , கடைசியாக ஒரு அதிகாரியிடம் தனியாக " ஆரிஃபை பார்த்துக்கோ" என சொல்லுகிறார். ஆரிஃப் ஒரு முஸ்லீம் என்பதால் அவரை நம்பமுடியாது எனவே அவர் மேல் ஒரு கண் வைத்துக்கொள் என மோகன் லால் சொல்லுவதாக சிலர் சொல்லுகிறார்கள் ..ஒருவர் சொன்னார் ..இல்லையில்லை ..ஆரிஃப் மிகவும் துடிப்பானவர் ..ஆத்திரத்தில் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து விடுவார் (அப்படி ஒன்றை அவர் பின்னர் செய்வார்) எனவே தான் மோகன் லால் கவனமாக இருக்கச் சொன்னார் என்கிற கோணத்தில் சொல்லுகிறார் ..எதை எடுத்துக்கொள்ள?

4 .தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதம் தான் என்பது கமல் சொல்லும் கருத்து . கமல் ஒரு கருவறுத்தல் சம்பவத்தை சொல்லுகிறார் .அந்த கறுவறுத்தல் சம்பவம் எங்கே யாரால் செய்யப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும் ..ஆக அந்த தீவிரவாதத்தை செய்தவருக்கு எதிராக கமல் தீவிரவாதத்தை கையிலெடுத்தால் கொல்லப்பட வேண்டியவர்கள் யார் ? உலகுக்கே தெரியும் .. ஆனால் கமல் கொல்ல முற்படுவது கிட்டத்தட்ட அதே இடத்தில் அதே காலகட்டத்தில் அதே தீவிரவாதத்துக்கு மனைவியை பலி கொடுத்து அதனால் உந்தப்பட்டு தீவிரவாதியான ஒருவரை ..அந்த அப்துல்லாவும் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க தீவிரவாதியானவர் ..கமலும் தீவிரவாதத்துக்கு பதிலடி தீவிரவாதம் என சொல்பவர் ..பின்னர் ஏன் கமல் கருவறுத்த கும்பலை குறி வைக்காமல் தீவிரவாதத்தால் தீவிரவாதியான ஒருவரை கொல்ல வேண்டும் ? ஆக இது தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதத்துக்கு பதிலான தீவிரவாதமா ? இது முடிவுறாத தொடர் போல தெரிகிறதே?.... விடை என்ன?????

Monday, September 14, 2009

பஃறுளி முதல் யூப்ரடீசு வரை

பொதுவாக வரலாற்று ,மொழி ஆய்வு நூல்கள் வெறும் தகவல் தொகுப்புகளாக இருப்பதால் புரட்டியவுடன் ஒரு அயற்சியை ஏற்படுத்தி முழுவதும் படிக்க விடாமல் செய்வதுண்டு ..சிங்கை நூலகத்தில் இந்த 400 பக்க புத்தகத்தை எடுத்துப் புரட்டிய போது வழக்கத்துக்கு மாறாக மிக சுவாரஸ்யமாக தோன்றியதால் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முடிக்கவும் ,வெறுமனே பக்கங்களை புரட்டவும் விடாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டது இந்த பத்தகம் .


மா.சோ.விக்டர் என்பவர் எழுதிய இந்த நூலை படித்து முடிக்கும் போது இவருடைய மொழியறிவு ,கடும் உழைப்பு மலைக்க வைத்தது. பஃறுளி ஆறு பண்டைய குமரிக்கண்டத்தில் ஓடிய ஆறு . பஃறுளி = பல துளி என சொல்ல வேண்டியதில்லை . ஆசிரியர் நிறுவ முனைவது .. குமரிக்கண்டமே விவிலியம் சொல்லும் ஆதிமனிதன் ஆதாம் வாழ்ந்த இடம் . விலிலியத்தில் சொல்லப்பட்ட நோவாவின் வெள்ளப்பெருக்கே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த கடற்கோள் .நோவா குமரிக்கண்டத்தை சேர்ந்தவரே .வெள்ளப்பெருக்கால் குடிபெயர்ந்த தமிழர்கள் சிந்து சமவெளி ,அங்கிருந்து பாபிலோன் ,மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் சென்று பரவினார்கள் . கிரேக்கம் , எபிரேயம் உட்பட மத்திய கிழக்கு மொழிகளில் காணப்படும் பல சொற்களின் மூலம் தமிழே . விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல நாடுகள், ஆறுகள் , மாந்தர்களின் பெயர்கள், பழக்க வழக்கங்களின் மூலம் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டின் மூலமாக இருக்கிறது . விவிலிய ஆராச்சியாளர்கள் அர்த்தம் கண்டு பிடிக்க முடியாத பல எபிரேய வார்த்தைகளின் மூலம் தமிழ் சொற்களின் திரிபாக இருக்கிறது .. இதன் மூலம் தமிழும் ,தமிழர் பண்பாட்டு பரவலும் வெறும் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல , 10000 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் பழமை வாய்ந்தது ..உலகின் பல மொழிகளின் தாயாக தமிழ் இருந்திருக்கிறது.

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை ஓரளவு ஏற்கனவே படித்திருப்பவர்களுக்கு இந்நூல் மேலும் சுவாரஸ்யத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . வெறும் ஆராய்ச்சி ,தகவல் தொகுப்பு என்றில்லாமல் விவிலியம் சொல்லும் ஆதி மனித தோற்றம் , நோவா வெள்ளப்பெருக்கும் , ஆபிரகாம், மோயீசன் , இஸ்ராயேல் வரலாறு என்று ஒரு வரிசைக்கிரமமான விவிலிய நிகழ்வுகளினூடே தகவல்கள் இணைந்து ஒரு நாவல் படிக்கும் உணர்வை ஊட்டுகிறது இந்நூல்.

இதில் சொல்லப்பட்ட தகவல்களில் சிலவற்றை உதாரணங்களாக சுருக்கமாக பார்ப்போம் ...

* பைபிள் - பப்பிலியோன் (Biblion) என்னும் கிரேக்க சொல்லுக்கு கோரையினின்று உருவாக்கப்பட்ட தாளில் எழுதப்பட்ட நூல் என்பது பொருளாகும் .பைப்புல் அல்லது பசும் புல் என்று கோரையினம் தமிழில் சொல்லப்பட்டது . பைப்புல் என்ற தமிழ் சொல்லே கிரேக்கத்தில் பைப்பில் என திரிந்தது.

* அப்பிரு (apiru) என்னும் சுமேரிய மூலச் சொல்லினின்று ஈப்ரூ (Hebrew) என்ற சொல் பிறந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் . அப்பிரு என்ற சொல்லுக்கு 'அந்த பக்கம்' , 'அப்புறம்' (that side) என்று ஆக்ஸ்போர்டு கலைக்களஞ்சியம் பொருள் கூறுகிறது . அப்புறம் ,அப்புற என்ற தமிழ் சொல்லின் திரிபே அப்பிரு அல்லது அப்பிறு.

* ஆபிறகாமை 'அலைந்து கொண்டிருந்த அறம்வாயன் (Wandering Aramean) என்று விவிலியம் விளிக்கிறது . அறம் + வாய் எனும் இரு தமிழ் சொற்களில் முன்னது இடத்தையும் , பின்னது மொழியையும் குறிக்கிறது .அறம் என்னும் பகுதி பாபிலோனுக்கு வடபகுதியில் இருந்தது . அறம் என்பது நோவாவின் பேரனின் பெயர் . அப்பகுதியில் பேசப்பட்ட மொழி அறம்வாய் பின்னர் அறமாய்க் என திரிந்தது.ஆபிரகாம் பிறந்த ஊரின் பெயர் ஊர் (Ur). ஆபிரகாமின் மனைவி பெயர் சாராய் .. தமிழில் சார் = அழகி .


* உல் -உல்கு -உலகு என்ற சொல்லுக்கு உருண்டை என்பதே பொருள் . இந்த உலகம் வான் வெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர் . ஞாலுதல் என்பதற்கு தொங்குதல் என்பதே பொருள் . எனவே உலகம் ஞாலம் எனப்பட்டது .உல் -உல்கு என்ற தமிழ் சொல்லின் நீட்சியே உர்ல்ட் என்றவாறு world என்ற சொல் உருவானது . இரு -இருத்தல் என்ற பொருளில் எர்த் (earth) என்னும் சொல் வந்தது . எபிரேய மொழியில் உலகம் ஓலம் (Olam) எனப்பட்டது .

* இசுரேல் - இசுரா -எல் (எல் -யூதர்களின் கடவுள்) . இசுரா என்பதற்கு முரண்படுதல் , வரிந்து செயல்படுதல் (Contended) என்ற பொருள் சொல்லப்பட்டுள்ளது . தமிழில் இசைவுறா - ஏற்றுக்கொள்ளாத ,முரண்பட்ட .

* கனான் என்ற எபிரேய சொல்லுக்கு (நோவாவின் பேரன் ,இதனாலேயே கனான் ,கானான் நாடு எனப்பட்டது) பழுப்பு அல்லது கறுப்பு என பொருள் சொல்லப்படுகிறது . பெருவெள்ளத்தால் குமரி கண்டத்திலிருந்து குடிபெயர்ந்த நோவாவின் பேரன் கருமை நிறமாகத்தான் இருக்க வேண்டும் ..தமிழில் கன்னான் = கரிய நிறம் கொண்டவன் . காயன் வழியில் இலமெக் என்பான் யா ஆள் (Jabal) , ஊ ஆள் (Jubal ), துவள் காயன் (Tubal Cain) ஆகியோருடைய தந்தையாக சொல்லப்படுகிறான் . இவனின் மனைவிகள் சிலை (Zillah ) மற்றும் ஆடை (Adah).

* கல்லோடு (Gilead) - ஓட்டை கவிழ்த்தது போன்ற மலை (கல்+ ஓடு) . யாபோக்கு (Yabbok) என்னுன் ஆறு ..தமிழில் யா = தென் திசை போக்கு =செல்லுதல் ..யாப்போக்கு = தென் திசையில் செல்லும் ஆறு .

* Yarmuk என்னும் ஆறு பாலத்தீனத்தில் பாய்கிறது .இதில் ஆறு ஆறுகள் வந்து கலக்கின்றன . ஆறு +முகம் -த்தின் திரிபே யார்முக் ஆனது .. யாறு என்ற தமிழ் சொல் யோர் (Yor) என்று எபிரேய மொழியில் திரிந்து 'தன்' நகரம் வழியாக பாயும் ஆறு 'யோர்தன்' என பெயர் பெறுகிறது.

* கலிலி ஏரிக்கு சின்னீரோத்து என்ற பெயரும் உண்டு . சின்ன + நீர் + ஊற்று என்ற மூன்று தமிழ் சொற்களின் இணைப்பே சின்னீரோத்து என திரிந்துள்ளது . நீர்+ஊற்று திரிந்து பீரோற்று பின்னர் பெய்ரூட் ஆனது ..பெய்ரூட் என்ற சொல்லுக்கு நீர் ஊற்றுகளின் நகரம் என்பதே பொருள்.

(கடல்சார்ந்த தொழில் முறையிலும் , கடல் வழி பயணங்களிலும் தமிழன் முன்னோடி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்)

* கலம்(kalam) என்ற தமிழ் சொல் , Galaia (கிரேக்கம்) , Galea (லத்தீன்) , Galley (ஆங்கிலம்)

* நாவி என்ற தமிழ்ச் சொல் , Naus (கிரேக்கம் ) , Navis (லத்தீன் ) , Navie (பிரெஞ்சு) , Navy (ஆங்கிலம்)

* நங்கூரம் என்ற தமிழ்ச் சொல் , Angura (கிரேக்கம்) , Ancora (லத்தீன்) , Anchor (ஆங்கிலம்) . Angk என்ற கிரேக்க சொல்லுக்கு வளைந்த (hook) என பொருள் கூறப்பட்டுள்ளது . அங்கு - அங்குதல் - அங்கனம் = வளைந்த சாய்கடை.

* மாந்தன் மண்ணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவன் என்ற விவிலியக் கூற்றை அடிப்படையாக வைத்தே Man என்ற சொல் வந்த்து ..இது மண் என்னும் தமிழ் சொல்லே.

இது போன்ற பல விளக்கங்கள் , பல்வேறு சுமேரிய , கிரேக்க , எபிரேய சொற்களுக்கு கிடைக்கிறது ..இது தவிர யாக்கோபு மாமன் மகளை மணந்தது , 7 நாட்கள் திருமண கொண்டாட்டங்கள் போன்றவை தமிழர் பண்பாட்டை பிரதிபலிப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.

பொதுவாக யாராக இருந்தாலும் தங்கள் இனம் தான் பழமையானது என நிறுவவே முனைவர் ..ஆனால் இந்த புத்தகத்தில் வறட்டு வாதமோ , யூகங்களோ மிக மிகக் குறைவு என்றே எனக்கு தோன்றியது ..வார்த்தைகளுக்கு உள்ள ஒற்றுமைகளை விளக்கும் போது வெறும் ஓசைகள் தரும் ஒற்றுமையாக இருந்தால் அதை வலுவானதாக எடுத்துக்கொள்ள முடியாது .ஆனால் ஓசைகள் மட்டுமின்றி மூல மொழியில் கொள்ளப்படும் அர்த்தமும் , தமிழ் வார்த்தையின் அர்த்தமும் ஒன்றாக இருப்பதே வலுவான ஆதாரமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.

மா.செ.விக்டர் என்ற இதன் நூலாசிரியர் இதை எழுதுவதற்கு மேற்கொண்டிருக்க வேண்டிய உழைப்பும் ,சிந்தனை பெருக்கும் நினைத்தால் மலைக்க வைக்கிறது ..அவரின் மற்ற நூல்களின் பட்டியலை பார்த்தால் இன்னும் மலைப்பு .. வெத்து வேட்டுகளெல்லாம் பெரிய இலக்கியவாதிகளாக அறியப்படும் தமிழ் சூழலில் இத்தகையோர் அந்த அளவு கூட அறியப்படாதது மிகவும் துரதிருஷ்டவசமானது .இவர் ஒரு முனைவர் -ஆ இல்லையா தெரியவில்லை . இந்த ஒரு புத்தகத்துக்காகவே 4 முனைவர் பட்டம் கொடுக்கலாம் .. இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தமிழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது.

Friday, September 11, 2009

ஒரு நடிகனின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது அவமானமா?

உலகில் திரைப்பட கலைஞர்களுக்கு மட்டுமென்றில்லை ,எழுத்தாளர்களுக்கு ,விளையாட்டு வீரர்களுக்கு ,பல துறைகளில் புகழ்பெற்று விளங்குபவர்களுக்கு ரசிகர் இருப்பது ஒன்றும் புதிய செய்தியில்லை ..இந்த 'ரசிகர்' என்ற பதம் ஒருவரின் கலை மீது தனி அபிமானம் வைத்திருக்கும் ஒருவன் என்பதைத் தானே குறிக்க வேண்டும் ..ஆனால் நம் நாட்டில் ,அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 'ரசிகர்' என்று சொல்லிவிட்டால் , பொழுதண்ணைக்கும் வேலை வெட்டிகளை மறந்து அபிமான நடிகருக்கு மன்றம் அமைத்து ,போஸ்டர் ஒட்டி , கோஷம் போட்டுக் கொண்டிருக்கும் சிலரை மட்டும் குறிப்பதாக ஒரு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது ,அல்லது சிலர் அப்படி கற்பித்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் தன்னை சாருவின் ரசிகர் ,ஜெயமோகனின் ரசிகர் என்று சொன்னால் அது பெருமை போலவும் , இன்னொருவர் தன்னை கமல் ரசிகர் ,ரஜினி ரசிகர் என்று சொன்னால் அது ஏதோ அவமானத்துக்குரியது போலவும் கட்டமைக்கப்படுகிறது . இதிலே என்ன பெரிய வெங்காய வித்தியாசம் இருக்கிறது என எனக்கு புரிவதில்லை . சிலரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் "நான் ரசிகர்-லாம் இல்லீங்க .ரஜினி படம் விரும்பி பார்ப்பேன்" என்பார்கள் .ஏதோ நாம் நீங்க யாருடைய ரசிகர் மன்றத்தில் இணைந்து பணிபுரிகிறீர்கள் என கேட்டது மாதிரி .. ரஜினி படம் விரும்பி பார்ப்பவர் ரஜினி ரசிகர் .இதுக்கு மேலே அவர் என்ன அர்த்தப்படுத்திக்கொள்ளுகிறார் என தெரிவதில்லை . இன்னும் சிலர் "எனக்கு எல்லா நடிகர்களும் ஒண்ணு தான்" -ன்னு ஒரு உலக மகா தத்துவத்தை சொல்லுவார்கள் ..இல்லையென்றால் நாம் அவரை ஒரு நடிகரின் ரசிகர் என அவமானமாக நினைத்து விடுவோமாம்.

இன்னொன்று ஒருவரின் ரசிகர் என்றால் அவர் சொல்லுவதே வேதவாக்காக கொண்டவர் ,அவரின் போட்டி நடிகரை வெறுப்பவர் என ஒரு பிம்பம் ..இதெல்லாம் ரசிகர் மன்றங்களில் சேர்பவர்களுக்கு சரியாக இருக்கலாம் ..ஏனென்றால் ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களில் பாதி பேர் உண்மையிலேயே அந்த நடிகரின் கலையை ரசிப்பதால் இணந்தவர்கள் என சொல்ல முடியாது ..இல்லையென்றால் ரஜினி மன்றத்தை சார்ந்தவர் அதிருப்தியால் விஜயகாந்த் மன்றத்தில் சேர்ந்தார் என்றெல்லாம் இருக்க முடியாது .ஏதோ ரஜினியின் நடிப்பில் திடீர் அதிருப்தி வந்தா அவர் மாறினார் .மன்றத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை .பிழைக்க வழியில்லை ..எனவே அரசியல் கட்சிகளுக்கு தாவுவது போல தாவுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் .இதை சொல்லுவதால் நான் ஒன்றும் அவமானப்படவில்லை .சிவாஜி கணேசனின் கலைக்கு நான் ரசிகன் .அதே நேரத்தில் சிவாஜி கணேசன் என்ற அரசியல் வாதிக்கு நான் தொண்டனாகவோ ,ஆதரவாளனாகவோ இருந்ததில்லை .இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க தெரிந்தது . ரசிகர் மன்றத்தில் இணைந்திருக்கவில்லை .இன்னும் சொல்லப்போனால் இதுவரை தியேட்டரில் அவர்கள் திரையில் தோன்றும் முதல் காட்சியில் கைதட்டலோ விசிலோ அடித்ததில்லை (விசில் அடிக்க முயற்சி செய்தும் வரவில்லை ,அது வேறு விஷயம்) .அதனால் ஒரு நடிகரின் ரசிகர் கூட்டத்தின் அளவை அறிமுகக்காட்சியில் எழும் விசில் சத்தத்தை வைத்து கணக்கிடும் முறையை நான் ஒத்துக்கொள்ளுவதும் இல்லை.



சிவாஜி ரசிகன் என்பதால் எம்.ஜி.ஆர் படம் பார்க்க மாட்டேன் என அடம் பிடிப்பதில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆரின் 135 படங்களில் ஏறத்தாழ 90 படங்களை பார்த்திருக்கிறேன் .சில படங்களை பல முறை பார்த்திருக்கிறேன் .இன்றும் எம்.ஜி.ஆர் பட பாடல்கள் என்றால் அத்தனை விருப்பம் .எம்.ஜி.ஆர் படங்களில் வந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களின் வீடியோ தொகுப்பை ஏறத்தாழ எல்லா வார இறுதியில் ஒரு முறை பார்ப்பவன் .இதே போல கமல் ரசிகன் என்பதால் ரஜினி படம் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பதில்லை ..கமல் படம் வந்தால் ஒரு வாரத்துக்குள் பார்த்துவிட வேண்டும் என நினைப்பேன் .ரஜினி படம் வந்தால் இரண்டு வாரத்துக்குள்..இந்த ஒரு வாரம் தான் வித்தியாசம் .நீண்ட நாட்களுக்கு பின் தியேட்டரில் நான் பார்க்காத ரஜினி படம் குசேலன் (சில காரணங்களுக்காக) .மற்ற படங்கள் இயக்குநர்களைப் பொறுத்து ,மற்றவர் சொல்வதை பொறுத்து . இதே போல எனக்கு தெரிந்த நண்பர்கள் பலரும் ரஜினி ,கமல் இருவரின் படங்களையும் தவறாமல் பார்ப்பவர்கள் ..ஆனால் இருவரில் ஒருவருக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பது தான் ஒரு சின்ன வேறுபாடு .



சினிமா என்பது எழுத்து போன்ற ஒரு கலை . வரலாற்று ஆய்வுகள் ,விஞ்ஞான கட்டுரைகள் போன்ற உருப்படியான எழுத்துக்களை தவிர்த்து , வெறும் புனைவுகளையும் அது குறித்த சண்டைகளையும் ,சுய சொறிதல்களையும் எழுதும் இலக்கியவாதிகளுக்கு ரசிகனாய் இருப்பதை விட ,இதை விட உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமாவில் கலைப்பங்களிக்கும் ஒரு கலைஞனின் திறமைக்கு ரசிகனாய் இருப்பது எந்த விதத்தில் தாழந்தது ?

ஆம் .நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் ,கண்ணதாசன் ரசிகன் ,இளையராஜா ரசிகன் ,நாகேஷ் ரசிகன் ,எம்.ஆர்.ராதா ரசிகன் .

Wednesday, August 12, 2009

கலையுலக பொன்விழா - நம்மவருக்கு வாழ்த்துகள்!



50 -வருடங்களுக்கு முன் அந்த சுட்டி 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாட்டுக்கு கொடுத்த முக அசைவைப் பார்த்தவர்கள் கணித்திருப்பார்களோ என்னவோ ,இந்த புள்ளையாண்டான் தமிழ் சினிமா உலகில் சரித்திரம் படைக்கப் போகிறான் என்று .ஆனா இப்போ அதை பார்க்கும் போது 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது உண்மை என கண்டிப்பாக நினைப்பார்கள் . முதல் படத்திலேயே நடிகையர் திலகம் கைகளில் தவழ்ந்த குழந்தை ,மிக விரைவிலேயே நடிகர் திலகத்தின் கைகளில் தவழ்ந்தது ..'நீ ஒருவனை நம்பி வந்தாயோ ,இல்லை இறைவனை நம்பி வந்தாயோ ' என கைகளில் கிடத்தி நடிகர் திலகம் கேட்ட கேள்விக்கு 'இல்லை ..நான் என்னையே நம்பி வந்திருக்கிறேன்' என்று அந்த பயல் பதில் சொல்லியிருப்பானோ ? .பின்னர் ஆனந்த ஜோதியில் மக்கள் திலகம் 'நீ பெரிய ஆளா வருவ' -ன்னு சொன்னது பலிக்காம இருக்குமா !




இன்று கமல்ஹாசன் என்ற ஒப்பற்ற கலைஞனின் சாதனைகளை இங்கு பட்டியலிட்டுத் தான் யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை .சினிமா உலகில் சிலர் சில திறமைகளில் மிகச் சிறப்பானவராக இருக்கலாம் .சிலர் ஒரு சில திறமைகளை ஒருங்கே பெற்றிருக்கலாம் ..ஆனால் சினிமாவின் முழுத் திறமைகளையும் முயன்று வளர்த்துக்கொண்டு முத்திரை பதித்தவர்கள் கமல்ஹாசனைப் போல யாருமில்லை.

வணிக ரீதியிலும் ,தொழில் நுட்ப ரீதியில் இரண்டிலும் தேவையான அளவுக்கு தன்னை நிரூபித்துக் கொண்டிருந்தாலும் ,இன்னும் ..இன்னும் என முன்னேற்றத்தை தேடி ஓடி ஓடி உழைக்கும் கலைஞன் .நடிகர் திலகத்தின் கலை வாரிசாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள நல்ல ரசிகன்.

50 ஆண்டுகளுக்கு முன் இதே ஆகஸ்ட் 12-தேதி 'களத்தூர் கண்ணம்மா' வெளிவந்தது .தமிழ் சினிமாவுக்கு புதிய விழி வந்தது.

கலையுலக பொன் விழா காணும் நம்மவருக்கு வாழ்த்துகள்!

Friday, July 24, 2009

நெஞ்சை நெகிழ வைத்த ராமநாதன் சேட்டன்

விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் 'நடந்தது என்ன' நிகழ்ச்சியை எப்போதாவது பார்ப்பது உண்டு .நேற்றிரவு வழக்கத்துக்கு மாறாக பார்த்த போது மனதுக்கு நெருக்கமான ஒரு தொகுப்பை காட்டினார்கள்.

சில வருடங்களுக்கு முன் கேரளாவின் பாலக்காடு பகுதியிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர் ராமநாதன் .தொடக்கத்தில் சாதாரண பெட்டிக்கடை வைத்து பிழைப்பை ஆரம்பித்தவர் இப்போது கால்டாக்சி ஓட்டி பிழைக்கிறார் .கெட்டிவாக்கம் பகுதியில் ஒரு மொட்டி மாடி அறை போன்ற சிறிய வீட்டில் குடியிருக்கும் ராமநாதனுக்கு எத்தனை பெரிய மனது . சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள தினசரியை படித்துக்கொண்டிருந்த ராமநாதனின் கண்ணில் ஒரு செய்தி இடறுகிறது .சென்னை பொது மருத்துவமனை பிணவறையில் கேட்பார் யாரிமின்றி சுமார் 80 பிணங்கள் இருப்பதாக ,அதை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பது தான் செய்தி .மனம் வருந்திய ராமநாதன் உடனே மருத்துவமனைக்கு சென்று பிணங்களை பார்க்கிறார் .பல பிணங்கள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்றன ..அங்குள்ள அதிகாரிகளிடம் பிணங்களை அடக்கம் செய்ய விரும்புவதாக சொல்ல ,ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்களுக்கு பின் 22 பிணங்களை எடுத்து வந்து மரியாதையான முறையில் அடக்கம் செய்கிறார்.

பின்னர் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார் ..ரயில்களில் ,விபத்துகளில் அடிபட்டு இறந்தவர்களின் பிணங்களை யாரும் உரிமை கோராமலோ ,கேட்பாரற்று கிடந்தாலோ அவற்றை எடுத்து தன் சொந்த செலவில் சகல மரியாதைகளோடும் அடக்கம் செய்து வருகிறார் ..இப்போது இவர் பெயர் பிரபலமாகி எங்காவது அனாதை பிணங்கள் கிடந்தால் இவரின் கைதொலை பேசிக்கு மக்கள் அழைத்து சொல்கிறார்கள் ..உடனே இவர் காரியத்தில் இறங்கி பிணத்தை பெற்று அடக்கம் செய்கிறார்.இதுவரை 300-க்கு மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்திருக்கிறார்.

"இறந்தவர் எந்த ஜாதி ,மதம் என்று எனக்கு தெரியாது ..இருந்தாலும் உரிய மரியாதையோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு இந்து ,ஒரு கிறிஸ்தவர் ,ஒரு இஸ்லாமியர் மூவரை கொண்டு அவரவர் முறைப்படி மந்திரமோ ,ஜெபமோ சொல்ல வைத்து மலர்கள் தூவி அடக்கம் செய்கிறேன் " என்கிறார் இராமநாதன்.

சமுதாய தொண்டு செய்வதற்கு தெருவை சுத்தம் செய்வது போன்ற பணிகள் இருக்க குறிப்பாக இந்த பணியை எப்படி செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு "அது போன்ற பணிகளை செய்வதற்கு நிறைய பேர் முன்வருவார்கள் ..இது போன்ற எளிதில் யாரும் முன் வராத பணியை நான் செய்ய வேண்டும் என்பதால் செய்கிறேன்" என்ற பதில் வருகிறது.

இத்தகைய உயர்ந்த உள்ளம் கொண்ட இராமநாதனுக்கு குழைந்தை பாக்கியம் கிட்டவில்லை ..அது பற்றி வருத்தமில்லையா என்று கேட்டப்பட்டபோது அது பற்றி தான் வருத்தப்படவில்லை ..இன்றே எனக்கு மரணம் வந்தாலும் நிறைந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுவேன் ..எனக்கு குழைந்தை இல்லையே தவிர என்னை 'சேட்டா' என இங்குள்ள மக்கள் அழைக்கும் போது உண்மையான அன்போடும் மரியாதையோடும் அழைப்பதாக உணர்கிறேன் ..எனக்கு வாரிசு இல்லையே தவிர இங்கு ஏராளமான சொந்த பந்தங்கள் இருக்கிறார்கள் .அன்பு பாசம் என்றால் என்ன என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் தான் எனக்கு காண்பித்தார்கள் .நான் இங்கே தான் சாக விரும்புகிறேன் என குறிப்பிட்டு விட்டு மேலும் தொடர்ந்தார்...

"இப்போ கூட இதை பார்த்துக்கொண்டிருப்பவர் சிலர் கண்கள் கலங்குவார்கள் ..அவர்கள் தான் என் பிள்ளைகள் ,அண்ணன் தம்பிகள் " என்ற அர்த்தத்தில் முடித்தார்..

சத்தியமாக அவர் இதை சொல்ல ஆரம்பிக்கும் முன்னர் என் கண்கள் பனித்திருந்தன.





Friday, June 05, 2009

எஸ்.எம்.கிருஷ்ணா ..வேலையப் பாரு - இலங்கை

இலங்கை ராணுவ இணையத்தளத்தில் சொல்லப்பட்டிருப்பது

According to the Asian Tribune the most recent case is the new Indian Foreign Minister S. M. Krishna who urged us to address the "root cause of the conflict" by effective devolution of powers to all communities in the Island nation. I say to Mr. Krishna "Who are you to tell us, a sovereign nation how to run our country? You just mind your own business or wind up like that woman Navi Pillai. The choice is yours.


To India we say that not only will there be no devolution of any sort because it is the necessary and sufficient step to separation but also the Indo Lanka Accord forced on us by India will be annulled and thrown out so that we could cleanse this land of the last vestige of Indian hegemony. You created the LTTE with the intention of annexing our land. We liquidated what you created. You can annex the moon much easier than that. We thank India for not voting against us at the UNHRC. We attribute it to the wisdom of that very harmless and soft spoken intellectual Dr.Manmohan Singh. There are many in India who would have loved to vote against us but if that happened, India would have found it very uncomfortable to live anywhere in Asia in particular at her present location with her neighbours. She will then have to move the entire Indian sub continent to a location near America where she would be under the protection of American hegemony. That probably is why Japan decided to abstain though she was originally for voting against Sri Lanka


இந்திய வெளியுறவு அமைச்சரை அவன் 'பொத்திகிட்டு போடா' என்கிறான் ..இவன்களோ அவனுக்காக ஓடி ஓடி ஆதரவு திரட்டுகிறான்கள் ..வெட்கம் ,மானம் எதுவுமே கிடையாதா ? இந்தியா வல்லரசு தான் ..எல்லோரும் நம்புங்கப்பா .

Friday, May 29, 2009

ஈழப்போராட்டமும் தமிழகத்து சாமானியனும்

ஈழப்பிரச்சனையில் இன்று காட்சிகள் மாறுகின்றன .நிலைப்பாடுகள் திசைமாறுகின்ற சூழல் .யார் சொல்லுவதை எடுத்துக்கொள்ளுவது ,யார் சொல்லுவதை உதற வேண்டியது என்பதில் இதுவரை இல்லாத குழப்பங்கள் . சர்வதேச , தேச , இனத்துக்குள்ளேயே, பிரதேச ,தனிமனித அரசியல் அத்தனையும் சேர்ந்து தண்டிக்கப்பட்டதென்னவோ
சாதாரண மக்கள் தான் .உரிமைக்காக ஏங்கி நின்ற அந்த மக்கள் இன்று உயிராவது மிஞ்சாதா எனும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் .போதிய அளவு பாதுகாப்பான தூரத்தில் தள்ளி இருந்து கொண்டு வீராவேசங்களும் ,அரசியல் கட்டுடைப்புகளும் நிகழ்த்துவது சுலபம் .உயிராவது மிஞ்சுமா எனும் சூழலில் இருந்து பார்த்தால் தான் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணவோட்டங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும் .

நேரடியாக சம்பந்தப்படாத ,ரத்த சம்பந்த உணர்வினாலே உந்தப்பட்டு ஏதாவது நிகழ்ந்து நம் சொந்தங்களுக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என ஏங்கும் தமிழக தமிழர்களில் ஒருவன் என்ற முறையில் கையாலாக நிலையின் உச்சத்தில் நின்று வசவுகளையும் ,அவமானங்களையும் தாங்கிக் கொண்டு ,இன்னும் நம்மால் செய்ய முடிவது என்ன என தெளிவான பாதை தெரியாமல் தவிக்குது மனது . தமிழகத்தில் இருக்கிற தமிழர்களின் கவனமும் செயல் வெளிப்பாடும் தேவையான அளவுக்கு இல்லாமல் போயிற்றே என மனம் அங்கலாய்க்கும் நேரத்தில் '1 ரூபாய் அரிசிக்கும் பிரியாணிக்கும் ஈழத்தமிழனை விற்று விட்ட இழிபிறவிகள் ' என்ற பொதுவான வசைமொழிக்கு தமிழகத்து தமிழர்கள் எந்த அளவுக்கு பொருத்தமானவர்கள் என (சுய விமர்சனம் என்ற முறையில்) சிந்திக்க வேண்டியுள்ளது.

என் புரிதலில் ஈழ விவகாரத்தைப் பொறுத்தவரை 5 விதமான மக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

1.பாமரர்கள் - இவர்களில் பெரும்பாலாருக்கு தெரிந்ததெல்லாம் இலங்கையில் தமிழருக்கும் சிங்களருக்கும் சண்டை .நாம் தமிழர்கள் என்பதால் தமிழர்கள் கை ஓங்கியதாக செய்தி வந்தால் மகிழ்வது ,தமிழர்கள் அடிவாங்கினால் வருத்தப்படுவது .இவர்களில் பெரும்பான்மையாவர்களுக்கு வடக்கிலுள்ள தமிழர்கள் பூர்வ குடிமக்கள் என்பதோ ,போராட்டத்தின் காரணம் ,வளர்ச்சி ,போக்கு பற்றியோ ,பூர்வீக தமிழர்கள் ,மலையக தமிழர்கள் ,தமிழ் பேசும் முஸ்லீகள் இடையிலான வேறு பாடு பற்றியோ ,வடக்கு ,கிழக்கு பிரதேச வேறுபாடுகள் பற்றியோ பெரிதாக ஒன்றும் தெரியாது .இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிலிருந்து அங்கே போய் குடியேறிய தமிழர்கள் இப்போது தனிநாடு கேட்கிறார்கள் என்றே பலரும் நினைக்கிறார்கள் ..ஆனாலும் என்ன ? அவர்கள் நம்மைப் போல் தமிழர்கள் .அந்த ஒரே காரணத்துக்காக அவர்கள் வென்றால் மகிழ்ச்சி ..மொட்டையாக சொல்ல வேண்டுமென்றால் இலங்கையிலுள்ள எல்லா தமிழரும் ஒட்டு மொத்தமாக போராடுகிறார்கள் .எல்லோரும் புலிகளை ஆதரிக்கிறார்கள். புலிகள் அவர்களுக்காக சண்டை போடுகிறார்கள் ..அவ்வளவு தான்.

(பாமரர்கள் என்றால் வெறும் படிக்காதவர்கள் மட்டுமல்ல .உத்தியோகம் வாங்குவதற்கும் ,பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் தேவையான வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் பயின்ற கனவான்களும் இதில் அடக்கம்).

2.ஆதரவாளர்கள் - இவர்களில் பலர் ஈழ விடயத்தைப் பற்றி அக்கறை எடுத்து தெரிந்து கொண்டிருப்பவர்கள் .ஆனால் இவர்களுக்குள்ளும் 3 வகை உண்டு .. முதலில் ஈழ வரலாறு ,போராட்டம் பற்றி பெரிதாக தெரியாவிட்டாலும் 'தமிழன்' என்ற ஒரே காரணத்துக்காக ,வேறெதும் காரணம் தேவைப்படாமல் தீவிரமாக ஆதரிப்பவர்கள்
..இரண்டாவது ஓரளவு தெரிந்து கொண்டு ,புலிகளின் மேலுள்ள விமரிசனத்தை மொத்தமாக புறந்தள்ளி விட்டு ஒட்டு மொத்தமாக ஆதரிப்பவர்கள் ..மூன்றாவது ஓரளவு தெரிந்து கொண்டு ,புலிகளின் தவறுகளை ஏற்றுக்கொண்டாலும் ,அதையும் தாண்டி ஒட்டு மொத்த போராட்டத்தையும் ஆதரிப்பவர்கள் .

3.எதிர்ப்பாளர்கள் - இதில் முதல் வகையினருக்கு இதை எதிர்ப்பதற்கு 'தமிழன்' என்ற ஒரே காரணமே போதும் .'தமிழ்' ,'தமிழன்' என்று தொடங்கினாலே இவர்களுக்கு வேப்பங்காய் .அதற்கு மேல் ஒன்றுமில்லை ..இரண்டாவது வகை 'நாம் முதலில் இந்தியன் ' 'தமிழன் என்ற குறுகிய மனப்பான்மை கூடாது ' போன்ற முத்துக்களை உதிர்ப்பவர்கள் ..போதாத குறைக்கு 'இறையாண்மை' ,'ராஜீவ் படுகொலை' போன்ற வெங்காய காரணங்கள் ..ஈழத்தமிழனை விட (தனக்கு சம்பந்தமே இல்லாத) பஞ்சாப் காரனும் ,பீகார் காரனும் தான் முக்கியம் என இல்லாத தேசியத்தை தூக்கி சுமப்பவர்கள் ..மூன்றாவது புலிகளை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஒட்டு மொத்த தமிழர்களின் போராட்டத்தையே குடுட்டுத் தனமாக எதிர்ப்பவர்கள்.

4.சார்பு நிலை - தான் சார்ந்திருக்கின்ற அல்லது அபிமானம் கொண்டுள்ள அரசியல் கட்சி ,தலைவர்கள் ,சமூகம் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு ஏற்ப தங்கள் நிலைப்பாட்டையும் வகுத்துக்கொள்பவர்கள்

5. கண்டுகொள்ளாதவர்கள் - எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன ? அரசியல் ,இனம் ,மொழி எல்லாம் பம்மாத்து என தத்துவம் பேசிக்கொண்டு திரியும் மேல்தட்டு படித்த இளையோர் கூட்டம் இதில் அதிகம் .இவர்களோடு தன் படிப்பு ,வேலை ,சினிமா ,கிரிக்கெட் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காத மேல் தட்டு ,நடுத்தர ,கீழ்த் தட்டு கூட்டமும் இதில் அடக்கம் .தன் இனத்துக்கும் ,நாட்டுக்கும் ,தான் வாழும் சமுதாயத்துக்கும் சம்பந்தம் உள்ள எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளும் குறைந்தபட்ச் தேடலின்றி ,ஆனால் சம்பந்தமில்லாத உலக விடயங்களில் தமக்கிருக்கும் அறிவை மெச்சிக் கொள்ளும் 'கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன ' கூட்டமும் இதில் அடக்கம் .

கடந்த 6 மாதங்களாக ஈழத்தில் நடந்து வரும் சம்பவங்கள் இந்த 5 வகையினரையும் ஓரளவு கவனம் ஈர்த்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை .ஆனாலும் அதில் எத்தனை பேர் மேலும் தெரிந்து கொள்ள விழைந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி . வலைப்பதிவுகள் போன்ற இரு வேறு அதீத கோணங்களில் வரும் கருத்துக்கள் தாண்டி , சினிமா ,கிரிக்கெட் மட்டுமே விவாதிக்கும் வேறு தளங்களில் மட்டுமே இயங்கும் பலரும் முதல் முறையாக குறைந்த பட்சம் இந்த விடயங்களில் அனுதாபமும் தெரிந்து கொள்ள ஆர்வமும் காட்டியது அனுபவ பூர்வமாக உண்மை ..இது நாள் வரை இதைப் பற்றி கிஞ்சித்தும் தெரியாமல் இருந்தேனே என்ற குற்ற உணர்ச்சியை கூட சிலர் என்னிடம் வெளிக்காட்டினார்கள் .அதே நேரத்தில் தெரிந்து கொள்ளும் முகமாக அவர்கள் கேட்ட கேள்விகள் , ஆச்சரியங்கள் ,நிலைப்பாடுகள் வலைப்பதிவுகளைத் தாண்டி பலர் கொண்டிருக்கிற ஐயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின .

நேரம் கிடைக்கும் போது அது பற்றி எழுதுகிறேன் ..

Monday, March 23, 2009

சாருவின் உளறல்கள்

தமிழகத்தில் அறிவுஜீவி என காட்டிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் ? கமல்ஹாசன் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை ,சிவாஜி கணேசனுக்கு நடிக்கவே தெரியாது ,எம்.ஜி.ஆர் ஒண்ணுமே தெரியாத முட்டாள் ,கருணாநிதிக்கு தமிழே தெரியாது ,இளையராஜாவின் இசை வெறும் இரைச்சல் மட்டுமே என அடித்து பேச வேண்டும் . அப்போது தான் 'ஆஹா ..இவன் ரேஞ்சே வேற போலிருக்கு' என்று பலர் அதிர்ந்து பார்க்க ,இதற்காகவே இருக்கும் சில அறிவுஜீவி அடிபொடிகள் உங்களை அரவணைத்துக் கொண்டு வக்காலத்து வாங்க ஓடி வருவார்கள் .

சாருநிவேதிதா இப்படிப்பட்ட அறிவிஜீவிகளில் ஒருவர் ..கெட்ட வார்த்தைகளை சம்பந்தமே இல்லாமல் ஒரு பக்கத்தில் நிரப்பிவிட்டால் அவர் பெரிய இலக்கிய பருப்பாக இருக்கலாம் .அதற்காக இலக்கியம் தாண்டிய எல்லா விடயங்களிலும் அவர் ஏன் தொடர்ந்து உளற வேண்டும் என தெரியவில்லை . ராக்கெட் அறிவியல் பற்றி அவர் உளறினால் கூட சாரு சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் (அதுவும் கேரளாவில் தான் அதிகமாம்) இருப்பது தான் இவரின் 'அடிச்சு விடுறா..பாத்துக்கலாம்" அள்ளிவிடல்களுக்கு காரணமாக இருக்க முடியும். இதே தமிழகத்திலிருந்து போன ஷகீலாவை இவரை விட 100 மடங்கு பேருக்கு தெரியும் .அதனால் என்ன இப்போ?

சாஸ்திரிய சங்கீதத்தில் கரை கண்ட செம்மங்குடி ,பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களே மேதை என ஒப்புக்கொள்ளும் இளையராஜாவின் இசை வெறும் இரைச்சலாம் ..ஜேசுதாசின் குரலைக் கேட்டால் இவருக்கு வாந்தி வருகிறதாம் .'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடல் இளையராஜா பாடியது என அடித்துச் சொன்னவர் ,இப்போது ஆஸ்கார் குறித்த கமல்ஹாசனை கலாய்க்கிறாராம் .

சாரு சொல்கிறார் "
ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தது பற்றி உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாக்காரர்கள் மட்டும் எதையெதையோ வாயில் வந்ததைப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளையராஜாவிடமிருந்து ஒரு சொல் கிடையாது. கமலோ வெளிப்படையாகவே தன்னுடைய எரிச்சலைப் பதிவு செய்தார். இதோ அந்த எரிச்சல்:

“அமெரிக்காவின் ஆஸ்கர் விருது இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது பெருமை. உலகத்தின் உச்ச விருது என்று இதைக் கூறி விட முடியாது. இது அமெரிக்காவின் உச்சம். அதில் ரஹ்மான் பங்கெடுத்து விருது வென்றிருக்கிறார். சத்யஜித் ரேவுக்கு விருது கொடுத்தது பெருமை. ரஹ்மானின் சாதனையும் அதற்குக் கம்மி இல்லை. இந்த விருதை வைத்துக் கொண்டு (அவர்) அடுத்த பிரயாணத்திற்குத் தயாராக வேண்டும். இவருக்குக் கிடைத்து விட்டதே என்று கோபப்பட்டோ, சந்தோஷம் அடைந்தோ அல்லது பொறாமைப் பட்டோ நாமும் அதுபோல் விருது பெறுவதற்கு முன்னேற வேண்டும்.” (ஃபெப்ருவரி 2009, தினகரன்)

கமலின் வாசகங்களை இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்போம். மனுஷ்ய புத்திரனுக்கு நோபல் பரிசு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அவர் அந்தப் பரிசுக்கு நிச்சயம் தகுதி உடையவர்தான்; இன்ஷா அல்லாஹ்). உடனே ஒரு சக தமிழ்க் கவிஞன் என்ன சொல்வான் தெரியுமா?

”இந்த ஸ்வீடிஷ் பரிசு மனுஷ்ய புத்திரனுக்குக் கிடைத்திருப்பது பெருமை. ஆனால் இதை உலகத்தின் உச்சபட்ச இலக்கிய விருது என்று சொல்லிவிட முடியாது. இது ஸ்வீடன் நாட்டின் உச்சம். அதில் மனுஷ்ய புத்திரன் பங்கு பெற்று வெற்றி அடைந்திருக்கிறார். (அங்கே என்ன ரேக்ளா ரேஸா நடத்தினார்கள்?) பொதுவாக ஸ்வீடிஷ்காரர்களுக்கு அவ்வளவாக இலக்கியம் தெரியாது என்று ஸ்டாக்ஹோமில் பணிபுரியும் என் சகலை அடிக்கடி சொல்லுவார். இல்லாவிட்டால் நம் பாரதிக்குக் கொடுக்காமல் அந்தத் தாகூருக்குக் கொடுத்திருப்பார்களா? தாகூருக்குக் கொடுத்தது பெருமை. ஆனால் இப்போது மனுஷ்ய புத்திரனுக்குக் கொடுத்திருப்பது சிறுமை என்று சொல்ல மாட்டேன். இந்த விருதை வைத்துக் கொண்டு அவர் அடுத்த பிரயாணத்துக்குத் தயாராக வேண்டும். (எங்கே சந்திர மண்டலத்துக்கா?)


ஆஸ்காரையும் இலக்கிய நோபலையும் ஒப்பிடும் இந்த அறிவிலியை என்ன சொல்வது ? ஆஸ்கார் என்பது உலக மொழி திரைப்படங்கள் எல்லாம் போட்டி போடும் இடமல்ல . 'சிறந்த பிற மொழி படம்' பிரிவைத்தவிர ஆங்கிலப்படங்கள் மட்டுமே இங்கே போட்டி போட முடியும் .பிற மொழி படத்திற்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க வாய்ப்புள்ளதே தவிர ,இயக்குநருக்கோ ,மற்ற தொழில் நுட்பக்கலைஞர்களுக்கோ அங்கு விருது கிடைக்க வாய்ப்பே இல்லை ..ஒரு ஈரானியப்படம் 'சிறந்த பிற மொழி திரைப்படம்' பிரிவில் ஒரு விருது பெற முடியுமே தவிர ,அதன் இயக்குருக்கோ ,நடிகருக்கோ விருது கொடுக்க மாட்டார்கள் ..காரணம் மிகச்சுலபம் ..இது ஹாலிவுட் படங்களுக்காக விருது . ஆனால் இதைத் தாண்டி சத்யஜித்ரே போன்றவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டு ,குறிப்பிட்ட படம் என்பதற்காக இல்லாமல் அவரின் ஒட்டுமொத்த கலை பங்களிப்பை கவுரவிக்க ஒரு சிறப்பு விருது கொடுத்திருகிறார்கள் ..ஆனால் ரகுமானோ ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்ததால் அந்த வாய்ப்பை பெற்று ,விருதை தட்டிச்சென்று நமக்கு பெருமை சேர்த்திருக்கிறார் ..இது தான் கமல்ஹாசன் சொன்னது ..ஆனால் அறிவுஜீவி சாரு அதை இலக்கிய நோபல் பரிசோடு ஒப்பிடுகிறார் ..இலக்கிய நோபல் என்ன சுவீடிஷ் இலக்கியத்துக்கு மட்டுமா வழங்குறார்கள் ? எல்லா மொழி இலக்கியங்களும் போட்டி போட்டு அதில் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுகிறது ..இந்த அடிப்படை வித்தியாசம் கூடவா இவருக்கு தெரியாது ? கமல்ஹாசனை நொள்ளை கண்டுபிடித்து விட்டால் இவருடைய மேதாவித்தனத்தை காட்டிக்கொள்ளலாம் அவ்வளவு தான் .ஆனால் தனது மேதாவித்தனத்தை இலக்கியத்தில் மட்டும் காட்டிவிட்டு போகலாமே ,சினிமா அறிவிலும் இவர் கமல்ஹாசனை விட அறிவாளி என காட்டிக்கொண்டு அப்புறம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் பல்டி அடிக்க ஏன் முயல்கிறார்?

அப்புறம் அடுத்த அறிவுஜீவி வாக்கியம்
"சிவாஜி கணேசனை நடிகர் திலகம் என்றார்கள். அவரைப் போன்ற நடிகர் உலகத்திலேயே இல்லை என்றார்கள். சொன்னதெல்லாம் தமிழர்கள். ஆனால் இந்தி சினிமாவில் அவர் பெயரே தெரியாது. "
..

உலகின் மிகச்சிறந்த நடிகனை இந்தி சினிமாவில் தெரிந்திருந்தால் தான் ஆச்சு என்ற அடிமைப் புத்தியை விடுவோம் .இருந்தாலும் இவரின் வழிக்கே வருவோம் .இந்த சாருவுக்கு தெரிந்த நாலு கச்சடா ஹிந்திவாலாக்களுக்கு சிவாஜி கணேசனை தெரியாது தான் .ஆனால் சிவாஜி கணேசன் இருந்த துறையில் இருந்த இருக்கிற வட இந்திய மேதைகளிடம் போய் சாரு கேட்டாரா "உனக்கு சிவாஜி கணேசனை தெரியுமா?" என்று ? வேண்டுமென்றால் அமிதாப்பச்சனிடம் போய் கேட்டுப்பார்க்கலாமே ..சிவாஜி கணேசன் யாரென்று . சிவாஜி கணேசனின் எத்தனையோ படங்கள் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட போது 'சிவாஜி அளவுக்கு எங்களால் செய்ய முடியாது ' என வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டு செய்தார்களே திலீப்குமாரும் ,சஞ்சீவ் குமாரும் ..அவர்களிடம் போய் கேட்டாரா இந்த சாரு ? சிவாஜி கணேசனை தன் உடன்பிறவா சகோதரனாக நினைந்து அவர் குடும்பத்தில் ஒருவராக விளங்கும் லதா மங்கேஷ்கரை போய் கேட்டாரா சிவாஜி கணேசனை தெரியுமா என்று ..அல்லது 1960 -ல கெய்ரோ படவிழாவில் கட்டமொம்மன் படத்துக்காக 'ஆசிய ஆப்பிரிக்க சிறந்த சிறந்த நடிகர்' விருதைக் கொடுத்து விட்டு கணேசனுக்கு தனி விருந்தளித்த எகிப்து அதிபர் நாசர் ,அடுத்த முறை இந்தியா வந்த போது தேடி வந்து கணேசனை சந்தித்தாரே ,அந்த நாசரைப் போய் கேட்டாரா ? எம்.ஜி.ஆரிலிருந்து சாய்ப் அலிகான் வரை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய ஒருவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல் ,அந்த விருதை ஒரு முறை கூட வாங்காத கணேசனின் படங்களை 6 மாத காலம் ஆராய்ச்சி செய்து தேடி வந்து 'செவாலியர்' கொடுத்த பிரெஞ்சு அரசாங்கத்தை கேட்டாரா இந்த சாரு ? அல்லது 'தில்லானா மோகனம்பாளி'ம் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய ரஷ்யாவைப் போய் கேட்டாரா இந்த சாரு? அல்லது மராத்தி மொழியில் தூர்தர்ஷன் முதல் ஒளிபரப்பை துவங்கும் போது இதே கணேசனை மராத்திய சிவாஜியாக நடிக்க வைத்து அதை ஒளிபரப்பி துவக்கினார்களே ..அங்கே போய் கேட்டாரா இந்த சாரு?




இவரே இவரை உலகத்தர எழுத்தாளர் என பீத்திக்கொள்வாராம் . தமிழ் நாட்டுலயே இவரை மொத்தம் 34 பேருக்கு தான் தெரியும் .. கேரளாவில் இவர் சொன்னா ஆட்சி மாறிடுமாம் ரேஞ்சுக்கு நினைப்பு வேற . இவர் ஒத்துகொண்டாலும் ஒத்துக்கொள்ளா விட்டாலும் ,இவருக்குத் தெரிந்த வடநாட்டுக்காரனுக்கு கணேசனை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் கணேசன் உலகப்பெரு நடிகன் தான் .

Saturday, January 31, 2009

நான் தமிழ்ச் சாதி!



மருத்துவமனையில் முத்துக்குமாருக்கு சிகிச்சை கொடுத்தபடியே அவரிடமிருந்து வாக்குமூலமும் வாங்கப்பட்டது. அங்கிருந்த டியூட்டி மருத்துவர் முன்னிலையில் நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் முரளி யிடம் முத்துக்குமார் பேசினார். முரளி, 'அலுவலகக் குறிப்புக்காகத் தேவைப்படுகிறது... தம்பி, நீங்க என்ன சாதி?' என்று கேட்க, 'நான் தமிழ் சாதி...' என்று அழுத்திச் சொன்னாராம். கூடவே, 'எந்த சாதியும் இருக்கக் கூடாது என்றுதான் போராடிக் கிட்டு இருக்கேன். அது மட்டுமல்ல, எத்தனையோ அறப்போராட்டங்கள் இருக்க, நான் இப்படியரு முடிவைத் தேடியதற்குக் காரணம்... என்னால்தான் இலங்கைப் பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்கும். என்னுடைய இந்த முடிவு விடுதலைப்புலிகள் இயக்க சகோதரர் பிரபாகரனுக்குச் சென்றடைய வேண்டும். இந்திய அரசு, இலங்கைப் பிரச்னையில் குருடாக இருக் கிறது. அதற்குப் பார்வையூட்டத்தான் என்னுடைய இந்த முடிவு...'' என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு, மயக்க நிலைக்குச் சென்று மரணத்தைத் தழுவிவிட்டார் முத்துக்குமார்.

(நன்றி : ஜூனியர் விகடன்)

ஈழத்தமிழருக்காக தன் இன்னுயிரைத் தந்த இந்த சகோதரனுக்கு கைமாறாக ஈழத்தை பெற்றுத்தர நாம் கையறு நிலையிலிருந்தாலும் ,நம்மால் முடிந்த ஒன்று அவனின் கூற்றை மெய்ப்பிப்பது தான் . ஆம் ..நாம் அனைவரும் 'தமிழ்ச் சாதி' என உறுதி பூணுவோம்.

Friday, October 03, 2008

காதலில் விழுந்த கம்யூனிஸ்டுகள்

பொதுவாக கம்யூனிஸ்டுகள் என்றால் கொஞ்சம் மரியாதை உண்டு .தோழர் பெருமதிப்புக்குரிய நல்லக்கண்ணு போன்ற பண்பாளர்கள் அங்கம் வகிப்பதால். பெரும்பாலான தலைவர்களின் எளிமையும் ,கொள்கைப் பிடிப்பும் பாராட்டுக்குரியது .ஆனால் சமீப காலங்களில் கம்யூனிஸ்டுகள் காமெடியர்களாக மாறி வருவது ரசிக்கத்தக்கதாக இல்லை .

எதேச்சையாக சன் தொலைக்காட்சி பார்த்த போது செய்திகள் போய்க்கொண்டிருந்தது ..சிவப்பு துண்டைப் போட்டுக்கொண்டு தோழர் தா.பாண்டியன் முழங்கிக்கொண்டிருந்தார் .நான் கூட அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தான் ஆவேசமாக பேசுகிறார் என நினைத்து கூர்ந்து கவனித்தால் அடடா.. 'காதலில் விழுந்தேன்' ஏன் மதுரைக் காரர்களை விழ அனுமதிக்கவில்லை என்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை பற்றி வன்மையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டிருந்தார் .

சன் டீவியை பொறுத்தவரை 2 நாட்களாக தலைப்புச் செய்தியே 'காதலில் விழுந்தேன்' படத்துக்கு மக்கள் வரலாறு காணாத வரவேற்பு ..திரையரங்கமெங்கும் மக்கள் வெள்ளம் ..இத்தியாதி..இத்தியாதி ..இத்துப்போன இந்த படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்க மு.க.அழகிரி தயவில் கிடைத்த வாய்ப்பை சன் டீவி நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது .இது ஏதோ உலக மகா பிரச்சனை போல "வாங்கையா..வாங்கையா" என திடீர் கருணாநிதி எதிர்ப்பாளர்களை தேடிப்பிடித்திருப்பார்கள் போல .

தோழர் தா.பாண்டியனை கேட்கவே வேண்டாம் ..நம்ம கிட்ட மைக் குடுத்துட்டாங்கப்பா -ன்ற சந்தோசத்துல பொளந்து கட்டினார் ..அந்த கொடுமை முடிந்தவுடன் அடுத்து மார்ச்சிஸ்ட் வரதராசன் ..அய்யோ ..மற்றொரு திடீர் கருணாநிதி எதிர்ப்பாளராம்.

இந்த காமெடி முடிஞ்சு இப்போ இன்னொரு காமெடி ..திடீர்ன்னு கம்யூனிஸ்டுகளுக்கு ஈழத்தமிழர் மீது அக்கறை .உடனே புதிய நண்பர்களையெல்லாம் கூட்டி உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்தார்கள் ..கொடுமை என்னண்ணா அதுல அ.தி.மு.க -வும் கலந்து கொள்ளும் -ன்னு அறிவிப்பு .விட்டா ராஜபக்சே ,சோ போன்றவர்களையும் கூப்பிடுவார்கள் போல .

அம்மாவும் பெரியமனது பண்ணி முன்னாள் அமைச்சர் முத்துசாமி கலந்து கொள்வார் என சொல்ல ..நிகழ்ச்சி தொடங்கியும் முத்துசாமி வரவில்லை .கடைசியில் அம்மா கொடுத்தார் பெரிய அல்வா ..வழக்கம் போல கடைசி நேரத்தில் அம்மா-வின் மூடு மாற ,கொஞ்ச நஞ்சம் வந்திருந்த அ.தி.மு.கவினர் மேலிட சிக்னல் கிடைத்ததும் கமுக்கமாக கழன்று கொண்டார்கள் .அட பாவிகளா! உங்கள் அரசியல் சதிராட்டத்துக்கு ஈழத்தமிழர் பிரச்சனையா கிடைத்தது?

பொதுவாகவே இந்த கம்யூனிஸ்ட் காரர்கள் கலைஞரோடு கூட்டணி வைத்திருக்கும் போது தான் கூட்டணி ஜனநாயகம் ,கொள்கை ,நியாயமான தொகுதிப் பங்கீடு ,வெங்காயம் பற்றியெல்லாம் பேசுவார்கள் . அம்மாவிடமெல்லாம் இந்த பாச்சா பலிக்காது .உள்ளே வரும் போதே அம்மா சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது .சும்மா இந்த உதார் விடுற வேலையெல்லாம் கருணாநிதியோட வச்சுகணும் .என் கூட்டணிக்கு வந்தா ..வந்தோமா ..குடுக்கிறத வாங்கிட்டி பேயாம போயிட்டே இருக்கணும் .வெளிய போய் நீட்டி முழக்குறதெல்லாம் வச்சுக்கபுடாது -ன்னு.

இதுல வேற 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' வைக்கோ இருக்காரு .அவர் வெளிய தான் புலி .அம்மா கிட்ட ஈழப்பிரச்சனை ,சேது சமுத்திர திட்டம் பத்தி ..ஊகூம் ..கப்சிப் ..அடுத்த முறை அம்மா இவரைப் பிடிச்சு உள்ளே போடுறவரை ஓயமாட்டார் ..அப்புறம் "பாசிச ஜெயலலிதா" -ன்னு முழங்குவார் .பார்க்கத் தானே போறோம் .கலைஞர் கிட்ட ஒரு தொகுதிக்கு உரிமைக்குரல் கொடுக்கிற வை.கோ-வும் ,தா .பாண்டியன் வகையறாக்கள் ஜெயலலிதா பிச்சைக்காசு மாதிரி வீசுகிற தொகுதிகளை கையையும் வாயையும் பொத்திகிட்டு எப்படி வாங்குறாங்கன்ணு.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives