Tuesday, October 31, 2006

நாதியற்ற மீனவன்!

குமரி மாவட்டத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் வளைகுடா நாடுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .அரபு முதலாளிகளின் படகுகளில் வேலை மீன்பிடிக்க செல்லும் இவர்கள் உயிரைப் பணயம் வைத்து உழைத்தாலும் பல அரபு முதலாளிகள் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதே பெரும்பாடு .பட்ட கடனை அடைக்க முடியாமலேயே ஊர் திரும்பியவர்கள் ஏராளம்.

இந்நிலையில் கடந்த ரம்ஜானுக்கு 4 நாட்களுக்கு முன்பு எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் படகில் மீன் பிடிக்க சென்ற போது கடற்கொள்ளையர்களால் சுடப்பட்டு எனது நண்பர் ஒருவர் பலியாகி விட்டார் .சவூதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த அந்த நண்பர் படகு ஓட்டுபவராகவும் இருந்திருக்கிறார் .ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் போது கடற்கொள்ளையர்கள் தாக்குவது சகஜமாக நடக்கக் கூடியதாம் .வழக்கமாக கடற்கொள்ளையர்கள் வந்து விட்டால் படகை நிறுத்திவிட வேண்டுமாம் .அவ்வாறு செய்தால் அவர்கள் துப்பாக்கி முனையில் எல்லாவற்றையும் கொள்ளை அடித்து விட்டு சிறிது தாக்கி விட்டு சென்று விடுவார்களாம் .ஆனால் அவர்களை பார்த்த பின்னரும் படகை நிறுத்தாமல் சென்றால் முதலில் படகை ஓட்டுபவரை குறிவைத்து சுடுவார்களாம் .இங்கு நடந்தது அது தான்.

கடற்கொள்ளையர்களை பார்த்தவுடன் ,நண்பர் படகை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றிருக்கிறார் .அவர்களும் குறி வைத்து சுட்டதால் அவர் அந்த இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார் .எங்கள் ஊரைச் சேர்ந்த இன்னொரு நபருக்கும் கழுத்தில் குண்டு பாய்ந்து அபாயகரமான நிலையிலுள்ளார்.

அநியாயமாக இறந்து போன இந்த நண்பர் ,பள்ளியில் என்னோடு பயின்றவர் .குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்புக்கு மேல் தொடர முடியாமல் மீன்பிடித் தொழிலில் இறங்கியவர் .எங்கள் ஊரில் படித்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு இளைஞர் இயக்கத்தை தொடங்கி ,பின்னர் மீன்பிடிக்கும் இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு பல்வேறு பணிகளை செய்த போது ,மீன்பிடிக்கும் இளைஞர் என்ற முறையில் அந்த இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்த நண்பர் .இளைஞர் இயக்கத்தின் சார்பில் வெகு விமரிசையாக நடத்தப்படும் சுதந்திர தின விழாக்களை முன்னின்று நடத்தியவர் .திருமணமாகி குழந்தைகள் இருக்கின்ற சூழலில் ,இளம் மனைவியைவும் குழ்ந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு அநியாயமாக சென்று சேர்ந்து விட்டார்.

ரம்ஜான் விடுமுறை காலம் என்பதால் அவருடைய உடல் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடங்கப்படவேயில்லையாம் .கண்ணீரும் கம்பலையுமாக ஊரே அவர் உடலுக்காக காத்திருக்கிறது. இது பற்றிய செய்தி கூட எந்த பத்திரிகையிலும் வந்ததாக தெரியவில்லை.

"ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை"

Tuesday, October 17, 2006

மதுரை இடைத்தேர்தல் முடிவு - விஜயகாந்தின் உள்குத்து

கொஞ்ச நாளாகவே விஜயகாந்த் செய்யும் அரசியலின் மீது எனக்கு ஒரு சந்தேகம் .அந்த சந்தேகம் இப்போது உண்மையாகும் அறிகுறிகள் தெரிகின்றன.

தனிக்கட்சி ஆரம்பித்தது முதலே விஜயகாந்த் திமுக-வையும் கலைஞரையும் கடுமையாக தாக்கி வருகிறார் .இன்று தன்னை எம்.ஜி,ஆர் பக்தராக காட்டிக்கொள்ளும் விஜயகாந்த் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கலைஞர் அபிமானி என அறியப்பட்டவர் .திமுகவினர் விஜயகாந்தை தங்கள் கட்சி அபிமானி என்றே முன்பு அறிந்திருந்தனர் .ஆனால் தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு அவர் திமுக ,அதிமுக இரண்டையும் தாக்கினாலும் ,திமுக எதிர்ப்பை அளவுக்கு அதிகமாகவே செய்து வருகிறார் .அதிமுக-வை பட்டும் படாமல் ஒப்புக்கு மட்டுமே தாக்குவதோடு தன்னை எம்.ஜி,ஆர் பக்தராக முன் நிறுத்தி வருகிறார்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது அவருடைய வருகை அதிமுகவை விட திமுகவுக்கே வாக்கு இழப்பாக இருக்கும் என பத்திரிகைகள் ஆரூடம் சொன்னன. அவரும் ஏதோ திமுகவை எதிர்த்தே கட்சி ஆரம்பித்தது போல பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதிலுள்ள சூட்சுமம் என்னவாக இருக்க முடியும் ?

தமிழகத்தில் கலைஞர் எதிர்ப்பு ஓட்டு என்பது 50% மேல் உள்ளது .இதில் பெரும் பகுதியை அதிமுக அறுவடை செய்து வந்தது .தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மூலம் கிடைக்கும் சொற்ப சதவீதத்தோடு கலைஞர் எதிர்ப்பு ஓட்டுக்களில் பெரும் பகுதியை கைப்பற்றுவதே விஜயகாந்தின் திட்டமாக இருக்க முடியும் .அதோடு எம்.ஜி.ஆர் அபிமானிகளின் ஓட்டுக்களையும் பெற முயல்வது .அதற்கு ஒரே வழி கலைஞரை எதிர்ப்பதாக காட்டிக்கொள்வது .

இதன் மூலம்
1.கலைஞரை எதிர்ப்பதற்காக மட்டுமே அதிமுகவுக்கு வாக்களிக்கும் கூட்டத்தின் ஒரு பகுதி விஜயகாந்துக்கு வாக்களிக்கும்.

2.கலைஞர் எதிர்ப்பு என்ற தாரக மந்திரத்தை கொண்டே எம்.ஜி.,ஆர் வெற்றி பவனி வந்தது போல ,கலைஞர் எதிர்ப்பாளராகவும் எம்.ஜி.ஆர் பக்தராகவும் காட்டிக்கொண்டால் ,கலைஞர் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஜெயலலிதாவை வேண்டாவெறுப்போடு ஆதரித்து வந்த எம்.ஜி.ஆர் அபிமானிகள் ஓட்டுக்களையும் பெற முடியும்.

3.ஜெயலலிதாவை விட கலைஞரை அதிகமாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டால் கலைஞர் எதிர்ப்பாளர்கள் மகிழ்ந்து தன் பக்கம் திரும்புவார்கள்.

இதோ மதுரை இடைத்தேர்தல் முடிவுகள்...

திமுக - 57 %
அதிமுக - 24 %
தேமுதிக - 19 %


கலைஞரும் விஜயகாந்தும் உள்குத்து கூட்டணி அமைத்துக்கொண்டு ,கலைஞர் இயக்கத்தில் விஜயகாந்தின் நடிப்பு பயணம் வெற்றிப்பாதையில் செல்வது போலத்தான் தெரிகிறது.

Tuesday, October 03, 2006

இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி)

இஸ்லாமிய சகோதரர்கள் பொதுவாக கருத்து சொல்லும் போது இஸ்லாமில் அனைத்து நபி மார்களும் (ஆதாம் ,ஆபிரகாம் தொடங்கி இயேசு ,அண்ணல் முகமது நபி வரை) சமமாகவே மதிக்கப்படுகிறார்கள் ,அதே நேரத்தில் முகமது நபியவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதாலும் அவர் வழியாகவே இறை வார்த்தையான குரான் இறக்கப்பட்டதால் நடைமுறையில் முகமது நபியவர்கள் தனிச்சிறப்புடையவராகவும் இஸ்லாமியர்களின் தனிப்பட்ட பேரன்புக்குரியவராகவும் திகழ்கிறார் என்றும் கருத்துரைக்கிறார்கள் .இது பற்றி எனக்கு மறுப்பேதும் இல்லை.

ஆனால் இயேசு(ஈஸா நபி) குறித்து இஸ்லாம் நம்பிக்கை பற்றி மேலும் தகவல்களை நேரடியாக நம் இஸ்லாமிய அன்பர்களிடமிருந்து பெறலாமே என்ற நோக்கத்தில் இந்த பதிவு.

1. இயேசு அன்னை மரியின் மகனாக பிறந்தார் .ஆனால் அன்னை மரி தன்னுடைய கன்னித் தன்மையை இழக்காமலேயே ஆணின் மூலமாக அன்றி ,இறைவனால் கருத்தரிக்க வைக்கப்பட்டு இயேசு பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல முஸ்லிம்களின் நம்பிக்கையும் கூட .ஆக ஆதாம் என்கிற ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?

2. இந்த உலகின் இறுதி நாள் வரும் போது வானகத்திலிருந்து இயேசு மறுபடியும் இந்த மண்ணுலகுக்கு வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை .அது போலவே இஸ்லாமியர்களும் இறுதி நாளின் போது இயேசு மறுபடியும் வந்து குரானை ஓதுவார் என்று நம்புகின்றனர் .இங்கும் இறுதித் தூரரான முகமது நபிக்கு கிடைக்காக சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன ? ஏன் இயேசு- வுக்கு இந்த தனிச்சிறப்பு என்பதற்கு இஸ்லாம் என்ன விளக்கம் சொல்கிறது ?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives