Thursday, February 23, 2006

சங்கிலி பதிவு -ஜோசப் சார் அழைப்பில்

ஜோசப் சார் நம்மளையும் ஞாபகம் வச்சு இழுத்து விட்டுட்டாரு..அவர் சொன்னா மறுக்கமுடியுமா?

பிடித்த நான்கு விடயங்கள்

1.அரசியல்,வரலாறு புத்தகங்கள் படிப்பது
-நூலகத்துக்குப் போனால் முதலில் தேடுவது இந்த புத்தகங்களைத் தான்.'அசோகர் நிழல் தரும் மரங்களை நட்டார்' போல அதர பழசில்லாமல் ,இந்த நூற்றாண்டு அரசியல் ,சமூகம் பற்றிய புத்தகங்கள் படிக்க மிகவும் விருப்பம்

2.எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்கள்
-எம்.ஜி.ஆர் ரசிகனில்லை என்றாலும் ,அவர் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மீது எப்போதும் ஒரு மயக்கம்.

3.சமையல் செய்வது
-குண்டக்க மண்டக்க-னு எதயாவது ஒரு காம்பினேஷன்ல சமையல் செய்து பார்ப்பது .ஓரு தடவை இப்படி நண்பரோடு சேர்ந்து சிக்கன் வகையறா ஒன்று சமைக்க ,அது அதிகமாக வெந்து சிதறி விட்டது .அதற்கு 'சிக்கன் சிதறல்' -ன்னு புதுப் பேர் கொடுத்து சாப்பிட்டோம் .ரொம்ப நல்லாயிருக்க ,இன்னொரு தடவ பண்ணலாம்னா வரமாட்டேங்குது.

4.குழந்தையோடு விளையாடுவது
- சமீபத்தில் வாய்த்திருக்கிற சந்தோஷம்.

பிடித்த நான்கு திரைப்படத் துறையினர்

1.நடிகர் திலகம்
ஆயிரம் பேர் 'ஓவர் ஆக்டிங்'-ன்னு என்ன தான் வாரினாலும் ,அசைக்க முடியாத என் அபிமானம் அந்த ஈடில்லா கலைஞன்மீது.கிட்டத்தட்ட கிறுக்கு பிடித்த அபிமானம்.

2.இசைஞானி இளையராஜா
மெல்லிசை மன்னருக்கு ரசிகனாகி பின்னர் இசைஞானி இசைக்கு ரசிகனானேன்
3.கமல் ஹாசன்
நடிகர் திலகத்தின் வாரிசு .மனம் கவர்ந்த கலைஞன்!
4.எம்.ஆர்.ராதா
இவரைப்போல இவர் மட்டும் தான் .தனித்தன்மை மிக்க கலைஞன் .லொள்ளுக்கு மன்னன்!

மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்கள் 4

1.ரத்தக்கண்ணீர்
2.குருதிப்புனல்
3.தில்லானா மோகனாம்பாள்
4.சலங்கை ஒலி

வசித்த நான்கு இடங்கள்
1.பள்ளம்,குமரி மாவட்டம்
-பிறந்து வளர்ந்த இடம்
2.திருச்சி
-கல்லூரிப்படிப்பு
3.சென்னை-6 வருடங்கள்
4.சிங்கப்பூர் -6 வருடங்கள்

பிடித்த 4 உணவு வகைகள்

1.வெறும் குழம்பு - தேங்காய்,பச்சைமிளகாய் சேர்த்து அம்மா செய்யும் மிக சுலபமான குழம்பு .ஒப்புக்கு செய்யும் இந்த குழம்பு எனக்கு அந்த அளவுக்கு ஏன் பிடிக்கிறது என்று அம்மாவுக்கு ஆச்சரியம் .ஆனால் எனக்காக எப்போதும் செய்வார்கள் ,சும்மா சூப்பர் ஸ்டார் வேகத்துல.

2.வாளை மீன் குழம்பு - எல்லா மீன்களும் பிடிக்குமென்றாலும் ,இது கொஞ்சம் அதிகமாக..

3.கணவாய் பொரித்தது

4.ஆப்பம் - கோழி குருமா பண்டிகை நாட்களில் கண்டிப்பாக உண்டு.

Tag செய்ய விரும்பும் வலைப்பதிவர்கள்

1.குழலி
2.தருமி
3.முத்துக்குமரன்
4.சிங்.செயக்குமார்

Wednesday, February 22, 2006

ஆழி சூழ் உலகு -நாவல் அறிமுகம்

ஆசிரியர் : ஜோ டி குரூஸ்
பக்கங்கள் :550
பதிப்பகம் :தமிழினி ,67,பீட்டர்ஸ் சாலை,ராயப்பேட்டை,சென்னை-14.

Image hosting by Photobucket


சிறில் அலெக்ஸ் அவர்களின் அலைகள் பாறைகள் மணல்மேடுகள் என்ற முட்டம் பற்றிய பதிவுகளை படித்துவிட்டு எழுத்தாளர் ஜெயமோகன் அவருக்கு பாராட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் .அதில் 'ஆழி சூழ் உலகு' என்ற சமீபத்திய நாவலைப் பற்றி குறிப்பிட்டு தமிழில் முதன் முதலில் கிறிஸ்தவ பரதவ மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர்களின் மொழியிலேயே எழுதப்பட்ட நாவல் என்று குறிப்பிட்டிருந்தார்.

நாவல் என்றாலே எனக்கு கொஞ்சம் கசப்பு தான் என்றாலும் ,கிட்டத்தட்ட அதே பகுதி கிறிஸ்தவ மீனவ சமுதாயத்தை சார்ந்தவனாக இருந்ததால் ,இதை படிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது .சிங்கையில் ஒரு கிளை நூலகத்துக்கு சென்று வேறு புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த போது அதிர்ஷ்டவசமாக இந்த புத்தகம் கண்ணில் பட்டது .அள்ளிக்கொண்டு வந்து படித்தேன்.

இந்த நாவலுக்கு உட்புகுமுன் தென்தமிழ்நாட்டு மீனவர்களைப்பற்றி சில அடிப்படை விடயங்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது .திருச்செந்தூரின் சற்று கீழிருந்து கன்னியாகுமரி வரை வங்காள விரிகுடா ஓரமும் ,கன்னியாகுமரியிலிருந்து மேற்கே கேரள எல்லை நீரோடி வரை அரபிக்கடல் ஓரமும் வரிசையாக அமைந்துள்ள மீனவ கிராமங்கள் முழுக்க முழுக்க இரண்டு சமுதாயத்தை சார்ந்த (பரவர் ,முக்குவர்) கத்தோலிக்க மீனவர்கள் .இதில் வங்காள விரிகுடா ஓர தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்ட கிராமங்கள் கிட்டத்தட்ட முழுவதும் பரவர்கள் வாழுகிறார்கள் .அரபிக்கடல் ஓர குமரி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள சுமார் 45 கிராமங்களில் 7 கிராமங்களில் முழுவதுமாக பரவர்களும் ,கன்னியாகுமரி ,முட்டம் என்ற 2 கிராமங்களில் இரு சமூகத்தினர் இணைந்தும் ,மற்ற அனைத்து கிராமங்களில் முக்குவர் சமுதாயத்தினரும் வசிக்கின்றனர்.

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வரை குமரி அன்னையை குலதெய்வமாக கொண்டு இந்துக்களாக வாழ்ந்த இம்மக்கள் ,இப்பகுதிக்கு வந்த புனித சவேரியார் (St.Xavier) -ஆல் ஒட்டுமொத்தமாக கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள் .மணப்பாடு ,நாகர்கோவில் கோட்டாறு ஆகிய இடங்களில் தங்கியிருந்த சவேரியார் இந்த நீண்ட கடற்கரையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் கால் பதித்தார் .முதலில் பரவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு கத்தோலிக்கர்களாக மாற,அவர்களை பின் தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முக்குவர்களும் கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள் .இது நடந்தது கிட்டதட்ட 1530-வாக்கில்.

மதம் மாறியிருந்தாலும் ,அவர்கள் இதுவரை கைக்கொண்டிருந்த வழக்கங்கள் ஒரேயடியாக மாறிவிடவில்லை .குமரி அன்னை மீது மிகுந்த பக்தி கொண்டு குலதெய்வமாக வழிபட்ட இம்மக்கள் அந்த பக்தியை லேசில் விடுவதாக இல்லை .அதற்கு மாற்றாக அவர்கள் அன்னை மேரியை நிறுத்த நாளடைவில் பழகிக் கொண்டார்கள் .பின்னர் அதிலே ஊறியும் போனார்கள்.

இந்த நாவலைப் பொறுத்தவரை,இதிலுள்ள நிகழ்வுகள் 20-ம் நூற்றாண்டு தொடக்கம் முதல் இறுதிவரை நிகழ்வனவாக சித்தரிக்கப்பட்டுள்ளது .வட ,மத்திய தமிழ்நாட்டு மீனவர்களைப் போல் பல்வேறு சாதி,மதம் கலந்து வாழும் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ,முழுக்க ஒரே சாதி,மதமாக அடுத்தடுத்த கிராமங்களாக வாழும் இம்மக்களின் வாழ்க்கை முறை மற்றவர் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சமூக,பொருளாதார முறைமைகளை கொண்டிருக்கிறது .

இந்த நாவலில் இம்மக்களில் கூட்டு வாழ்க்கையின் எழுதப்படாத சட்டங்கள் ,மதம் சார்ந்த மதிப்பீடுகள் ,வீரமும் வீம்பும் நிறைந்த செயல்பாடுகள்,திட்டமிடப்படாத எகத்தாளமான பொருளாதார வாழ்க்கை,அலைகளோடு அன்றாடம் அவர்கள் நடத்தும் போராட்டம் ,மதத்தோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை,கத்தோலிக்க குருமார்களின் சமுதாயப் பங்கு ,பிரத்தியேகமான மொழிக்கூறுகள் ,தனிமனித உறவுகள்,இலங்கையோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு,அண்டைய நாடார் சமூகத்தோடு உள்ள உறவு இப்படி பல கோணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மக்கள் பேசுகின்ற மொழி அவர்களிடமிருந்து 1 கி.மீ தூரத்தில் வாழும் உள்நாட்டினர் மொழியிலிருந்து பெரிதும் வேறுபட்டாலும் ,இலங்கைத் தமிழர் மொழியோடு ஓரளவு நெருக்கமாக இருக்கிறது என்பது என் சொந்த கருத்து,என் சொந்த அனுபவத்தில்.

குறிப்பாக வங்காள விரிகுடா ஓர பரவ மீனவர்களைப் பற்றி பேசும் இந்த நாவல் ,அவர்கள் வாழ்க்கையின் எல்லா முக்கிய பரிமாணங்களையும் உள்ளடக்கியிருப்பதாக சொல்ல முடியாது .குறிப்பாக மதம்,அரசியல் ,சினிமா,கலைகள் இவற்றின் தாக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பதிவு செய்யப்படவில்லையெனினும் ,அவர்களின் அலைகடலோடான போராட்டத்தையும் ,தனிமனித உறவுகளிலுள்ள சிக்கல்களையும் ,வேறு சமூகத்தோடு அவர்களின் உறவு முறையையும் அற்புதமாக பதிவு செய்கிறது.முக்கியமாக இந்த மக்களின் மொழி வழக்கு மிக அழகாக கையாளப்பட்டுள்ளது .ஆசிரியரும் அந்த சமூகத்தவர் என்பதால் அது சாத்தியமாகியிருக்கிறது.

இந்த மக்களோடு ,அவர்கள் மொழியோடு ,குறிப்பாக கடல் சார்ந்த குறியீடுகளோடு பரிச்சயம் இல்லாத வாசகர்கள் முதலில் பின் புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'வட்டார வழக்கு சொல் அகராதி' யை ஒருமுறையேனும் படித்துவிட்டு நாவலின் உட்புகுவது நல்லது.

பின்குறிப்பு : இதன் ஆசிரியர் ஜோ டி குரூஸ் ,உவரி கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் .மறைந்த வார்த்தை சித்தர் வலம்புரி ஜாண் அவர்களும் இதே கிராமத்தை சார்ந்தவர் என்பது உபரித் தகவல்.

Thursday, February 02, 2006

நண்பன் அவர்களுக்கு விளக்கம்

சகோதரர் இறைநேசன் அவர்கள் பதிவில் விஷமக் கார்ட்டூன்கள் கிளப்பிய விவகாரம்! நான் கேட்டிருந்த சில விளக்கங்கள் குறித்து நண்பர் அவர்கள்
நண்பர் ஜோவிற்கு அன்புடன் நண்பன்... என்ற பதிவை இட்டிருந்தார் .அவருக்கு மிக்க நன்றி .அவர் கருத்துக்கள் குறித்து எனக்கு கேள்விகள் இல்லையெனினும் ,நான் முன்னர் கேட்க வந்தது என்ன என்பது குறித்து விளக்க நினைத்து அது நீண்டு விட்டதால் தனிப்பதிவாக இடுகிறேன்.

சகோதரர் நண்பன்,
உங்கள் நீண்ட விளக்கமான பதிவுக்கு நன்றி.
//இறைநேசன் பதிவில் உங்கள் ஆதங்கம் மிகுந்த கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. //

எனக்கு இதில் ஆதங்கம் எதுவுமில்லை .நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால் அப்படி தோன்றியிருக்கலாம் .ஆனால் என்னைப் பொறுத்தவரை ,இஸ்லாம் பற்றி ,நபிகள் பற்றி,நபிகளுக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்கிறேன் .இஸ்லாமிய கோட்பாடுகளில் ஈஸா நபிக்குள்ள முக்கியத்துவத்தைப் பற்றியோ ,அல்லது முகமது நபியவர்கள் ஈஸா நபியவர்களின் மேன்மையை எடுத்தியம்பியது பற்றியோ எனக்கு ஐயமில்லை.ஆனால் முஸ்லீம்கள் நடைமுறையில் அவற்றை எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள் ,வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றிய எனது சந்தேகத்தின் ,அல்லது மேல் விவரம் அறிந்து கொள்வதின் ஆர்வத்தின் பால் எழுப்பட்டது தான் என்னுடைய கேள்விகள்.

கவிக்கோவின் கவிதையும் ,அதற்கு உங்கள் விளக்கமும் அருமை .கவிதை என்ற முறையில் அதன் உட்கருத்து எனக்கு மிகவும் ஏற்புடையதாயிருக்கிறது.உங்கள் விளக்கம் அதை விட அருமை .

கத்தோலிக்க ,இஸ்லாம் மதங்களின் நம்பிக்கைகள்,கோட்பாடுகள் பற்றி கேள்வி எழுப்புவதல்ல என் நோக்கம் .இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளை நான் ஏற்றுக்கொள்ளுகிறேனோ இல்லையோ,அவை இஸ்லாமியர்களின் உரிமை என்பதை மதிக்கிறேன் .நம்பிக்கைகளை கேள்வி கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.ஆனால் இஸ்லாமிய கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட முஸ்லீம்கள் நடைமுறையில் எந்த அளவு அதை பிரதிபலிக்கிறார்கள் என்பது பற்றிய எனது தெரிந்துகொள்ளும் ஆர்வமே இங்கு பிரதானம் .அதற்கு நான் கிறிஸ்தவன் என்ற அடையாளம் கூட தேவையில்லாதது.

எல்லா மதத்திலும் அந்த மதத்தின் கோட்பாடுகளை தவறாக புரிந்து கொண்டு நடைமுறைபடுத்துபவர்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள் .கத்தோலிக்க மதத்தை எடுத்துக்கொண்டால் ,அன்னை மேரியை கத்தோலிக்கர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது .அது நடைமுறையில் ஓரளவு உண்மையும் கூட .கத்தோலிக்க மதத்தின் அதிகார பூர்வ கோட்பாடு படி ,அன்னை மரியை கடவுளாக வணங்கக் கூடாது."மகிமையும் ஆராதனையும் இறைவனுக்கு மட்டுமே" என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.புனிதர்கள் என்பவர்கள் ஆராதனைக்கும் மகிமைக்கும் உடையவர்கள் அல்ல. அவர்கள் கத்தோலிக்க திருச்சபையால் அடையாளம் காணப்பட்டு ,இறைவனுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் ,தங்கள் மேன்மையான வாழ்க்கையினால் இறைவனின் அன்பைப் பெற்றவர்கள் என நம்பப்படுகிறது .அவர்கள் இப்போது இறைவனின் அரசாட்சியில் அவரோடு நெருக்கமாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் ,அவர்களை இறைவனிடம் நமக்காக பிராத்தனை செய்ய கத்தோலிக்கர்கள் வேண்டுகிறார்கள் .அந்த வகையில் அன்னை மேரி ஒரு புனிதர் .இயேசுவை கருத்தாங்கியதால் அவள் புனிதர்களில் முதன்மையாக கருதப்படவேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை கருதுகிறது.அந்த நம்பிக்கையில் கத்தோலிக்கர்கள் அன்னையிடம் நமக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ள மன்றாடலாம் .அது போல எல்லா புனிதர்களிடமும் .இறைவன் மட்டுமே அற்புதங்களை செய்ய முடியும்.அன்னை மரியோ ,புனிதர்களோ அற்புதங்களை செய்வதில்லை .அவர்கள் மூலமாக இறைவன் செய்கிறார்.

அதனால் தான் அன்னை மரியை வேண்டும் போது "அன்னையே! எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும்!" என்று கத்தோலிக்கர்கள் வேண்ட வேண்டும் .இறைவனிடம் வேண்டுவதற்கு எதற்கு வேறொருவர் மூலமாக செல்ல வேண்டும் ?இறைவன் நமது தந்தையல்லவா? அவரிடமே நேரடியாக வேண்டலாமே? என்று கேட்கலாம் .நேரடியாகவும் தந்தையிடம் வேண்டுகிறோம் .அதே நேரத்தில் நம் நண்பர்களை ,உறவினர்களை நமக்காக இறைவனிடம் வேண்ட நாம் கோருவதில்லையா? அது போலத் தான் கன்னி மரியிடமும் ,புனிதர்களிடமும் கோருகிறோம் என்பதைத் தவிர இதில் வேறதும் இல்லை.

பின்னர் ஏன் மாதாவுக்கு ,புனிதர்களுக்கு கோவில் இருக்கிறது என்று கேட்கலாம் .மாதவுக்கென்று தனியாக எந்த கோவிலும் கிடையாது.எல்லா கோவிலகளுமே இறைவனுக்கு எழுப்பப்பட்ட கோவில்கள் தான் .கத்தோலிக்கர்கள் இறைமகனாகக் கருதும் இயேசுவும் ,அவருடைய உடலாக கருதப்படும் நற்கருணையுமே எல்லா கோவில்களிலும் நடுநாயகம் .இந்த கோவில்கள் மாதாவின் பெயரில் ,அல்லது புனிதர்களின் பெயரில் எழுப்பப்பட்ட இறைவனின் ஆலயமே தவிர ,அங்கே புனிதர்களுக்கு மகிமையும் ஆராதனையும் அதிகார பூர்வமாக செலுத்தப்படுவதில்லை.

ஆனால் இந்த கோட்பாடுகளுக்கும் ,சாதாரண கத்தோலிக்கர்களின் நடைமுறைக்கும் பெருத்த வேறுபாடு இருப்பது உண்மை .அதற்கு தங்கள் மதம் குறித்த அறியாமையே காரணம்.பல கத்தோலிக்கர்கள் இறைவனுக்கும் புனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இறைவனுக்கு இணையாக புனிதர்களை வைத்து வழிபடுவது நடைபெறுகிறது .இது கண்டிக்கப்பட வேண்டியது .அவர்கள் கத்தோலிக்க மதத்தின் அடிப்படையையே புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.இதுவே கத்தோலிக்கர் மீது பிரிந்து சென்ற சபையினர் குறை சொல்லுவதற்கும் காரணமாக இருக்கிறது.

இப்போது இஸ்லாமுக்கு வருவோம் .அல்லாவின் இறுதித் தூதராம் முகம்மது நபியவர்கள் ,இறுதித்தூதர் என்ற முறையிலும் ,குரான் அவர் மூலமாக இறக்கப்பட்டது என்ற முறையிலும் ,இஸ்லாமை அதிகார பூர்வ மார்க்கமாக நிறுவியவர் என்ற வகையிலும் தனிச்சிறப்பு பெருகிறார் .

இஸ்லாம் படி ,இயேசு இறை தூதர்களில் ஒருவர் .அதுவும் வேறெந்த இறை தூதருக்கும் கிட்டாத சிறப்பு அவருக்கு உண்டு .அவருடைய அன்னை மரியம் ,கன்னியாக இருந்தே இறைவனின் அருளால் இயேசுவை பெறுகிறாள் .இஸ்லாம் நம்பிக்கைப் படி ,உலகின் இறுதிக் காலத்தில் அல்லாவின் தூதராக இயேசு மீண்டும் வருவார் .இஸ்லாமை மறு உறுதிப்படுத்துவார் (நான் தவறாக புரிந்து கொண்டிருந்தால் சுட்டிக்காட்டவும்).

ஆக முகமது நபியவர்கள் அளவுக்கு இல்லையெனினும்,இயேசுவும் இறுதி நாளில் வரும் தூதர் என்ற சிறப்பை பெற்று ,இஸ்லாமில் முக்கியமான இறை தூதராக கருதப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை.

நண்பன் ,இறைநேசன் போன்ற இஸ்லாமிய சகோதரர்களிடம் நான் கேட்க நினைப்பது இது தான் .முகமது நபி அவர்கள் ஒரு இறை தூதர் மட்டுமே,அவர் ஒரு இறைவனின் அடியார் என்ற வகையில் மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் கோட்பாடு வற்புறுத்தினாலும் ,நடை முறையில் முகமது நபியவர்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நீங்கள் நினைக்கவில்லையா?அப்படி கொடுக்கப்படுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.அப்படியே இருக்கட்டுமே? ஆனால் முகமது நபியவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் நூற்றில் ஒரு பங்காவது இயேசுவுக்கு கொடுக்கப்படுகிறதா?

நான் செவிமடுத்த இஸ்லாமிய உரைகளிலும் ,எழுத்துக்களிலும் இப்ராஹிம் ,மூசா போன்ற மற்ற நபிகள் குறிப்பிடப்படுவது போல ஈசா நபி மேற்கோள் காட்டவோ ,குறிப்பிடப்படவோ இல்லை .இது ஈஸா நபி-யை கிறிஸ்தவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள் என்ற ஆழ் மன வெளிப்பாடா ?ஈஸா நபியை தவறாக புரிந்து கொண்டு அவரை அவமானப்படுத்துகிறார்கள் என நீங்கள் கருதும் கிறிஸ்தவர்கள் பற்றி நீங்கள் ஏன் கண்டுகொள்ள வேண்டும் ? அதற்காக உங்கள் ஈஸா நபியை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் ?உங்களுக்கு ஈஸா நபியின் பால் உள்ள நம்பிக்கை ,அவரை பின்பற்றுவதாகச் சொல்லும் மற்றவரை பொறுத்து இல்லாமல் ,சுயமாக இருக்க வேண்டாமா?

இவற்றை நான் கேட்பதற்கு காரணம் வெறும் கேள்வி கேட்கும் திருப்தியை பெறுவதற்காக அல்ல .மேலே நான் குறிப்பிட்ட கிறிஸ்தவம் ,இஸ்லாம் குறித்த தொடர்புகள் ,பொதுவான கோட்பாடுகள் ,மெல்லிய முரண்கள் பற்றியெல்லாம் நானறிந்த கிறிஸ்தவர்களில் 5 சதவீதத்தினர் கூட அறிந்து வைத்துக்கொள்ளவில்லை .பெரும்பான்மையோருக்கு கிறிஸ்தவத்தும் ,இஸ்லாமுக்கும் தொடர்பு இருப்பதே தெரியாது .அல்லா என்பது அவர்கள் கடவுள் என்பது மட்டும் தான் அவர்களுக்கு தெரியும் .தாங்கள் தந்தையென்றழைக்கும் ஆபிரகாமின் கடவுளுமான ,மோயீசனின் கடவுளுமான அதே இறைவனைத்தான் இஸ்லாமியர்கள் 'அல்லா' என்ற அரபு வார்த்தை கொண்டு அழைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. இதைப் போல சாதாரண முஸ்லிம்கள் இவை பற்றிய தெளிவைப் பெற்றிருக்கிறார்களா?

இப்படி மிக நெருக்கமான இரு பெரும் மதங்களை சேர்ந்த பெரும்பான்மையோர் ,இந்த அடிப்படைகளை பற்றிய அறிவில்லாமல் வளர்வது ஆச்சர்யமாக இருக்கிறது .இந்த புரிந்துணர்வு சாதாரண மக்களிடம் வருவது ,உலக அமைதிக்கும் முஸ்லீம்கள் மேலுள்ள பார்வை மாற்றத்திற்கும் வழி வகுக்கும் என நான் நம்புகிறேன்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives