Friday, January 26, 2007

கலைஞரும் சாயி பாபாவும்

Photobucket - Video and Image Hosting

சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் பொதுத் திட்டத்திற்கு தனியொரு மனிதனாக ஒருவர் பெரும் தொகையை அளிக்க முன் வருகிறார் .அரசின் சார்பாக அவருக்கு நன்றி பாராட்டப்படுகிறது .அதற்கான விழாவுக்கு வந்த அம்மனிதன் முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கிறார் .இது தான் செய்தி.

பாபா என்ற மனிதர் சிலரால் கடவுளாக நினைக்கப்படுகிறார் .பலர் அவரை போலி என்கின்றனர் .எப்படி இருப்பினும் பொதுக் காரியத்துக்காக இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முன்வந்தவர் பாராட்ட படவேண்டியவர் .பயன் பெறும் மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் என்ற முறையில் முதல்வர் அவரைப் பாராட்ட கடமைப்பட்டவர் .இதில் என்னைய்யா பெரிய வெங்காயத்தை கண்டுபிடித்து விட்டார்கள் இப்போது கலைஞரை தூற்றுவோர்?

பாபா ஆன்மீகவாதி .கலைஞர் ஆன்மீக மறுப்பாளர் .இருவரும் சந்திக்கப்போகிறார்கள் என்ற செய்தி வந்த உடன் பலரும் எதிர்பார்த்தது கலைஞர் பாபாவை தேடிச் சென்று சந்திப்பார் என்று தான் .கால்கரி சிவா போன்றவர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை .கருணாநிதிக்கு வெட்கமில்லையா ? மானமில்லையா? என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள் .ஏதோ கலைஞர் இவரிடமிருந்து பணம் வாங்குவதற்காக தன் நாத்திக கொள்கையை காற்றில் பறக்க விட்டு பாபாவிடம் தஞ்சம் அடைந்து விட்டது போல குதியாய் குதிக்கிறார்கள் (அப்படியே நடந்திருந்தாலும் இவர்கள் நியாயப்படி மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும் ?கருணாநிதி இவர்கள் வழிக்கு வந்துவிட்டதாக கொண்டாடித் தானே இருக்க வேண்டும்?) .

ஆனால் நடந்தது என்ன ?பிரதமர்களும்,கவர்னர்களும் ,முதல்வர்களும் தேடிச்செல்லும் பாபா கலைஞரை அவர் இல்லத்துக்கு தேடிச் சென்று சந்திக்கிறார்.அவரோடு அளவளாவுகிறார். இதற்காக பாபா தனது கொள்கையை காற்றில் பறக்கவிட்டு கலைஞரை தேடிச் சென்று சந்திப்பதற்கு மானமில்லையா ? வெட்கமில்லையா ? என்று கால்கரி சிவாக்கள் கேட்கவில்லை .அப்போதும் கலைஞர் மீதே காழ்புணர்ச்சி பொழிகிறார்கள் .இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை .காஞ்சி சங்கராச்சாரியை ஜெயலலிதா கைது செய்த போதும் ,அதற்கும் ஜெயலலிதாவுக்கு பதில் கலைஞரிடம் காழ்புணர்ச்சியை காட்டியவர்கள் இவர்கள் .

இப்போது சந்திப்புக்குப் பிறகு இந்த கூட்டத்துக்கு பல விதத்திலும் கிலி அடித்திருக்கிறது .ஆகா ! இது நாள் வரை கருணாநிதியை 'இந்துக்களின் எதிரி' என்று பரப்பிவிட்டு குளிர்காய நினைத்தோமே .இப்போது பாபாவே நேரடியாக சென்று இந்த ஆளை சந்தித்து விட்டாரே .ஏற்கனவே பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை வாங்கி முதல்வராக இருக்கும் இந்த மனிதனை ,ஏதாவது காரணம் சொல்லி மீண்டும் மீண்டும் 'இந்துக்களின் எதிரி' என்று எடுத்துக்காட்டி நம்மை வளர்த்துக்கொள்ளலாமே என்ற எண்ணத்தில் மண் விழுந்து கிடக்கிறதே என்று மனதுக்குள் புலம்புகிறார்கள்.

இதோ பார்! இஸ்லாமியரோடு சேர்ந்து கஞ்சி குடிக்கிறார் .கிறிஸ்தவ சாமியார்களை சந்திக்கிறார்..ஆனால் இந்து சாமியார்களை மதிக்கிறாரா பார் என்றெல்லாம் சொல்லி இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாமல் போய்விட்டதே என்று மருகுகிறார்கள் .ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,கலைஞர் கொள்கை தவறிவிட்டதாகவும் ,ஆன்மீக வாதியை சந்தித்து விட்டதாகவும் சொல்லி அவரை தோலுரிக்கிறார்களாம் ..நல்ல தமாசு! ஏன்! பச்சை நாத்திகனை நீங்கள் வீடு தேடிச் சென்று பார்க்கலாமா என்று சாய் பாபாவை கேட்க வேண்டியது தானே?

முன் அனுமதியின்றி வீட்டுக்கு சென்று வீம்புக்காக 'பகவத் கீதை'யைக் கொடுத்த ராமகோபாலனையே வரவேற்று அதனை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு ஒரு புத்தகத்தை கொடுத்தனுப்பியவர் கலைஞர் .

சரி! பாபாவை சந்திக்க கலைஞர் மறுத்திருந்தால் மட்டும் இம்மகா அறிவாளிகள் அவரை போற்றவா போகிறார்கள் ? இல்லை..இதோ பார் .நாட்டு நலனில் அக்கறையின்றி பொது நலனுக்காக தேடி வந்த உதவியை உதாசீனப்படுத்தி ,இந்து சாமியார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை சந்திக்க மறுத்து ,தன் சொந்த கொள்கைக்காக நாட்டு நலனை அடமான வைத்து விட்டார் கருணாநிதி என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது மட்டுமில்லாமல் ,கருணாநிதியை இந்து விரோதியாக காட்டிக்கொள்ள இன்னொரு காரணம் கிடைத்து விட்டதாக உள்ளுக்குள் புழங்காகிதப்பட்டிருப்பார்கள் .அது நடவாமல் கலைஞர் தன் மதிநுட்பத்தால் தவிர்த்தது ,இவர்களுக்கு எரிச்சலை கொடுத்திருப்பதோடு ,சாதாரண மக்கள் மனதில் இதனால் கலைஞருக்கு நன்மதிப்பு வந்து விடுமே என்ற பயமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

விகடனில் கீழ்கண்ட செய்தி வந்திருக்கிறது...
"கேரள பூமியில் தோன்றி, மளமளவென உலகப் புகழ் பெற்று வரும் மாதா அமிர் தானந்தமயி அமைப்பின் பொதுச் சேவைகளுக்கும் ஆதரவுக் கரம்! சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது அமிர்தானந்தமயி அமைப்பு. அதற்கான விழா இம்மாத இறுதி யில் நாகப்பட்டினத்தில் நடக்கிறது. அதில், அமிர்தானந்தமயி யோடு முதல்வரும் மேடையில் தோன்றுவார் என்கிறார்கள்."

"மனிதனுக்குச் செய்யும் சேவையை விட உயர்வானது வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைகொடுக்க வருபவர்கள் ஆள்பவர்கள் பேரைச் சொல்லி வந்தால் என்ன... ஆண்டவன் பேரைச் சொல்லி வந்தால் என்ன? வருகிற உதவியை உதாசீனப்படுத்த லாமா?"என்பதுதான் முதல்வர் கருணாநிதி தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கேட்ட கேள்வி.


மதிநுட்பத்தோடு செயல்பட்டு ,நாட்டுக்கு நன்மை கொணர்ந்தோரை பாராட்டி ,அதே நேரத்தில் எப்போதும் தன்னை ஒழிப்பதையே குறியாக கொண்டு செயல்படும் மிகச்சில காழ்புணர்வு சக்திகளுக்கு ஆப்பும் வைத்த கலைஞருக்கு இந்த சிறுவனின் வணக்கங்கள்!


படம் :நன்றி -விகடன்

Monday, January 15, 2007

வியட்நாமில் மதுரை வீரன் - 3

வியட்நாமின் வர்த்தக நகரான ஹோசிமின் சிட்டி -யில் பரவலாக காணப்படும் ,குறிப்பாக தமிழர்களால் கட்டப்பட்ட இந்துக் கோவில்களைப் பற்றி முன்னர் பாகம் -1 , பாகம் -2 -ல் குறிப்பிட்டிருந்தேன் .

இம்முறை அவ்விரு கோவில்களுக்கு மிக அருகிலேயே ,நகரின் மிக முக்கிய பகுதியில் அமைந்துள்ள தமிழருக்கே உரிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை காண முடிந்தது.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கோவில் திறந்திருந்தாலும் ,தேடித் தேடிப் பார்த்தும் யாரும் கோவிலுக்குள் இல்லை .ஆனால் தமிழில் அச்சிடப்பட்டுள்ள நாட்காட்டி, தொடர்ந்து யாரோ சில தமிழர்களே கோவிலை பராமரித்து வருவதைக் காட்டியது.

Photobucket - Video and Image Hosting

தமிழிலேயே ஒரு கல்வெட்டும் காணக்கிடைத்தது .அதன் படி பாதரக்குடி மகாஸ்ரீஸ்ரீ பாபுராஜா பி.ஏ.சொக்கலிங்கம் பிள்ளை- யின் குமாரன் கடம்பவன சுந்தரம் பிள்ளை 1928 - ல் உபயம் செய்தது என அறிய முடிகிறது .பாதரக்குடி என்பது ஊரின் பெயரா ? தமிழகத்தில் அவ்வூர் எங்குள்ளது ?

Photobucket - Video and Image Hosting

(கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட படங்களின் தரத்துக்கு பொறுத்தருளுக!)

Saturday, January 13, 2007

தமிழ் கத்தோலிக்கரும் பொங்கலும்

இது ஒரு மீள் பதிவு...

அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாட்களுக்கு முன் என்னுடைய திருமண புகைப்படத்தை தற்செயலாகப் பார்த்ததும் என் நண்பர் கேட்ட கேள்வி "என்ன..உங்க wife கல்யாணத்துக்கு பட்டுப்புடவை கட்டியிருக்காங்க ?" .அவர் தமிழ் சினிமா பார்த்து எல்லாத்தயும் நம்புறவர்-ன்னு நல்லா புரிஞ்சது. எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டு கத்தோலிக்கர் யாரும் இவர் நினைக்குறமாதிரி ,சினிமால காட்டுற மாதிரி வெள்ளை கலர்ல பாரதிராஜா தேவதை உடை போட்டு கல்யாணம் பண்ணி நான் பார்த்தததில்லை .கேள்விப்பட்டதும் இல்லை . எல்லோரும் பட்டுப்புடவை தான் கட்டிக்குறாங்க. அதோடு தலையில ஒரு net வச்சு கிரீடம் மாதிரி அலங்காரம் பண்ணிக்கிறது ,கையில ஒரு பூச்செண்டு இவ்வளவு தான் வித்தியாசம்.

அப்புறம் ஒரு நாள் நண்பர் குடும்பத்தோடு சினிமா போகும் போது ,நண்பருடைய மனைவி என் மனைவியை பார்த்ததும் புருவம் உயர்த்தினாங்க ."நீங்க குங்குமமெல்லாம் வைப்பீங்களா? ".அடடா! அதற்கும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.

இன்னொரு நாள் ஒரு சீன நண்பரோடும் ,தமிழ் நண்பரோடும் உணவருந்திகொண்டிருந்த போது ,சீன நண்பர் "எங்கே உங்கள் கல்யாண மோதிரம் ?" என்றார் .நான் "கல்யாண மோதிரம் கண்டிப்பல்ல .இந்திய வழக்கம் போல தாலி தான் அணிவிக்கிறோம் .மோதிரம் இரண்டாம் பட்சம் தான்" .அவர் சமாதானமாகிவிட்டார் .தமிழ் நண்பர் புருவம் உயர்த்தி விட்டார் ..

"என்ன தலைவா ? நீங்களும் தாலியா கட்டுவீர்கள் ?"

"ஆமா! .மோதிரம் மாற்றிக்கொள்வதும் உண்டு .ஆனால் தாலி தான் பிரதானம் .ஒரே வித்தியாசம் .மஞ்சள் தாலி அல்ல .தங்கத்தாலி .மூன்று முடிச்செல்லாம் இல்லை .தாலியை கோர்த்து விடுவது..அவ்வளவு தான் .இன்னும் சொல்லப் போனால் எங்கள் ஊரில் கத்தோலிக்கர்கள் திருமணத்தையே 'தாலிக்கட்டு' என்று தான் சொல்லுவார்கள்"

என்னங்க! பொட்டு வைக்காத ,தாலி அணியாத தமிழ் கிறிஸ்தவர்கள் இல்லை என்கிறீர்களா? என்று உங்களில் பலர் கேட்கலாம் ..இருக்கிறார்கள் .ஆனால் அவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களில் சிறுபான்மையினர் ..தமிழ் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்களும் ,தென்னிந்திய திருச்சபையினர் (CSI) என்றழைக்கப்படும் protestants இவர்கள் இருவரும் தான் பெரும்பான்மை .மற்ற சபையினர் மிக மிக சிறுபான்மை (மொட்டை மாடியில் மைக் கட்டிக்கொண்டு ஊரிலுள்ளவர்களையெல்லாம் பாவிகள் என்று சொல்லுவது ..விவிலியத்தை பிட் நோட்டீஸ் மாதிரி வினியோகிப்பது எல்லாம் இவர்கள் தான்.இது பற்றி தனிப்பதிவு பின்னர்).

CSI கிறிஸ்தவர்களின் வழக்கங்களை முழுமையாக அறுதியிட்டு என்னால் கூற முடியாதெனினும் ,கத்தோலிக்க தமிழர்களை பற்றி கண்டிப்பாக என்னால் கூற முடியும் .கத்தோலிக்க தமிழர்கள் திருமணத்தில் பட்டுப்புடவை அணிந்து தங்கத்தாலி கட்டுகிறார்கள் .பொட்டு ,குங்குமம் வைக்கிறார்கள் .

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கிறிஸ்தவ கோவில் என்றால் அது 'மாதாக் கோவில்' தான் .மாதாக்கோவில் என்றால் அது கத்தோலிக்க கோவிலாகத்தான் இருக்க முடியும் .ஆனால் அங்கு நடைபெறும் (தமிழர்)திருமணக்காட்சியில் மட்டும் எல்லாம் தலை கீழாக காட்டப்படும் .மணப்பெண் பாரதிராஜா படத்து தேவதை மாதிரி உடை அணிந்திருப்பார் .மோதிரம் மட்டும் மாற்றிக்கொள்வார்கள் ..தாலி கட்டுவது கிடையாது . மணப்பெண் பொட்டு வைத்திருக்க மாட்டார்.இப்படி தமிழகத்தின் எந்த கத்தோலிக்க கோவிலில் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை .

நான் பார்த்தவரைக்கும் ,தமிழகத்தில் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டு குழப்புவதில்லை .என்னுடைய மூதாதையர்கள் ,ஏன் எங்கள் ஒட்டு மொத்த ஊர் மட்டுமல்ல ,ஒட்டு மொத்த community-யே கத்தோலிக்கர்களாக மாறி 400 வருடங்கள் கழிந்து விட்டன ..மதம் மாறியிருக்கிறதே தவிர மற்ற வழக்கங்கள்( சாதி உட்பட என்பது வருத்ததுக்குரிய விஷயம்) பெரிதாக மாறவில்லை.எது நம்முடைய கலாச்சாரம் சம்மந்தப்பட்டது ,எது நம்முடைய மதம் சம்மந்தப்பட்டது என்பதில் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் (தமிழ் சினிமா தவிர) ..

திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது (ஒரு நிமிஷம் பொறுங்க!.அப்துல் கலாம் ,சுஜாதா படித்த அதே வகுப்பறையில் நானும் இயற்பியல் படித்தேன் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்) நண்பர்களோடு பலமுறை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றதுண்டு .ஒரு முறை நண்பர்களோடு நேராக உச்சிப்பிள்ளையார் சன்னிதி-க்கு சென்றேன் .நண்பர் ஒருவர் அங்கிருந்த அர்ச்சகரிடம் எங்கள் பெயரையெல்லாம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னார். "ஜோ நமஹா.." என்று அவர் சொன்னது மட்டும் புரிந்தது .முடித்து விட்டு விபூதி கொடுத்தார் .வாங்கிக் கொண்டேன் . விபூதிப் புதனன்று கோவிலில் பாதிரியார் "மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய் .மண்ணுக்கே திரும்புவாய் .மறவாதே என்றும் " என்று நெற்றியில் இட்டு விடுகிற சாம்பல் நினைவுக்கு வந்தது .நான் வணங்கும் தெய்வத்தை நினைத்துக்கொண்டு விபூதியை பூசிக்கொண்டேன்.

வேலை தேடி சென்னையில் எங்கள் ஊர் நண்பர்களோடு தங்கியிருந்தேன் .சொந்தமாக சிறு தொழில் செய்து வந்த நண்பர் எனக்கும் ,அவரோடு வேலை செய்த சகோதரருக்கும் ,இன்னொரு நண்பருக்கும் அடைக்கலம் தந்திருந்தார் .வீடு என்பதை விட அறை என்று சொல்லலாம் ..வீட்டு சொந்தக்காரர் பக்கத்தில் தான் இருந்தார் .அவருக்கு ரெண்டு குடும்பம் .நல்ல நாட்களில் மட்டுமே அவரை இங்கு பார்க்க முடியும் .மற்ற அனைவரும் எங்கள் எல்லோரோடும் நன்கு பழகுவார்கள் .அன்பானவர்கள் ..அன்றைக்கு பொங்கல் தினம் .எல்லோரையும் போல ,பசங்கள் என்பதால் கொஞ்சம் விமர்சையாகவே நாங்களும் காலையிலயே பொங்கல் போட்டோம் .முதல் காரியமாக கொஞ்சம் பொங்கல் எடுத்து வீட்டுக்காரர் குடும்பத்துக்கு கொடுக்க நான் எடுத்துச்சென்றேன். எதிர்பார்த்த மாதிரி வீட்டுக்காரர் இருந்தார்.

"பொங்கல் போட்டோம்..வாங்கிக்குங்க!"

"என்ன தம்பி! நாங்க தானே உங்களுக்கு தரணும் ..நீங்க எப்படி பொங்கல் போட்டீங்க?"..கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏன்?"

"இல்ல..நீங்க கிறிஸ்தவங்களாச்சே"

"அதுக்கு !.பொங்கல் இந்து பண்டிகைன்னு உங்களுக்கு யார் சொன்னது? பொங்கல் .உழவர் திருநாள் ..அது மட்டுமல்ல ..தமிழர் திருநாள்.. உங்கள பத்தி தெரியாது ..நாங்கள்ளாம் தமிழர்கள் "

கொஞ்சம் வியப்பாக பார்த்தார் ..அவரிடம் அதிகம் பேசாத என்னிடம் அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் .

"ஓ! எதுவா இருந்தாலும் எங்களுக்கு முன்னால நீங்க பொங்கல் கொண்டு வந்தது சந்தோஷம்"

வீட்டுக்கார அம்மா புன்சிரிபோடு "குடுங்க தம்பி" என்று வாங்கிக் கொண்டார்.

என் நினைவு எங்க ஊருக்கு சென்றது .வருஷம் முழுவதும் காசு சேர்த்து வைத்து வகுப்பு தோழர்களெல்லாம் பொங்கலன்று தென்னந்த்தோப்புக்கு சென்று பொங்கல் போடும் நினைவுகள் வந்தது ..பொங்கல் அன்று எங்கள் தேவாலயத்தின் பலிபீடம் கரும்பினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் .கோவில் சார்பாக பொங்கல் செய்து ,திருப்பலியின் நடுவே ,எல்லோரும் வரிசையாக சென்று பாதிரியாரிடமிருந்து ஒரு கரண்டி சர்க்கரைப்பொங்கலை கைகளில் பிரசாதம் போல் வாங்கி உண்டது மனக்கண்முன் நின்றது.

எங்கள் ஊர் கன்னியர் மடத்திலுள்ள கன்னியர்கள் செய்த அந்த சர்க்கரைப்பொங்கல் சுவை இன்னும் இனிக்கிறது..

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives