Wednesday, December 02, 2009

இடைத்தேர்தல் விதிமுறை கேலிக்கூத்து

அனிதா ராதாகிருஷ்ணன் என்பவர் அதிமுக சார்பாக வெற்றி பெறுவாராம் .பின்னர் அவர் சொந்த பிரச்சனை காரணமாக அதிமுக-விலிருந்து வெளியேறி திமுக-வில் இணைவாராம் .உடனே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வாராம் .அதைத் தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து தேர்தல் கமிஷன் இடைத் தேர்தல் நடத்துமாம் .தன் சொந்த பிரச்சனைக்காக அவர் ராஜினாமா செய்ததால் வரும் இடைத் தேர்தலில் அவரே மீண்டும் திமுக சார்பாக போட்டியிடுவாராம் .ஆளுங்கட்சி அமைச்சர்களெல்லாம் அமைச்சரவை பணிகளை விட்டு விட்டு அவர் தொகுதியில் முகாமடித்து மீண்டும் அவரை வெற்றி பெற செய்வார்களாம்.

இது போல ஒரு கேலிக்கூத்தை எந்த ரகத்தில் சேர்ப்பது என தெரியவில்லை .ஒரு வேளை அனிதா ராதாகிருஷ்ணனே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம் .கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எந்த மாற்றத்தையும் கொண்டு வராத இந்த முடிவால் (அவர் தான் எம்.எல்.ஏ ..சிறிது இடைவெளி ..மீண்டும் அவரே எம்.எல்.ஏ) , ஒரு தனிபட்டவரின் சொந்த விருப்பு வெறுப்பால் இழப்பு மக்கள் வரிப்பணம் ,அமைச்சர்கள் தேர்தல் வேலையால் அரசு பணிகளில் இழப்பு , இன்ன பிற..

ஒருவரை மக்கள் 5 வருட பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த பிறகு ,அவரே முன் வந்து ராஜினாமா செய்வாரென்றால் ,ஒன்று குறைந்தபட்சம் அவர் எடுத்த முடிவால் வரும் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது .இல்லை நான் போட்டியிடுவேன் என்றால் இவரின் சொந்த குழப்பத்தால் வரும் தேர்தலுக்கான செலவை அவர் ஏற்க வேண்டும் என்பது தானே குறைந்த பட்ச நியாயம் என்ற முறையிலும் சரியாக இருக்கும் ? இதைக் கூட அமல் படுத்த முடியாத தேர்தல் விதிமுறை சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?

இது ஒன்றும் புதிதல்ல ..ஏற்கனவே பலர் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வாதம் வருமானால் , இதுவரை நடந்தவையும் தவறு தான் என்பதில் சந்தேகம் இல்லை .எல்லாவற்றுக்கும் ஒரு துவக்கம் வேண்டும் .இப்படிப்பட்ட குறைந்த பட்ச நெறிமுறைகளை கடைபிடிக்காத தேர்தல் நெறிமுறைகளை வைத்துக்கோண்டு தேர்தல் கமிஷன் மார்தட்டிக்கொள்வது கேலிக்கூத்து.

Wednesday, September 23, 2009

உன்னைப்போல் ஒருவன் - முரண்களும் சந்தேகங்களும்

ஏற்கனவே பலரும் கிழியும் வரை அலசியாச்சு . சினிமா மொழி ,தொழில் நுட்பம் , திரைக்கதை வடிவம் ,தமிழ் சினிமாவின் பொதுவடிவத்திலிருந்து தனித்து நிற்பது போன்றவற்றை எடுத்துக்கொண்டால் உன்னைப்போல் ஒரு தனித்துவமான படம் தான் . கமல் ரசிகன் என்ற முறையில் , கமலுக்கு எதிர்பாராமல் கிடைத்த குறைந்த கால அவகாசத்தில் ரொம்பவும் மெனக்கெடாமல் , மிகுந்த பொருட் செலவில்லாமல் ,குறிப்பிட்ட நுகர்வோர் கூட்டத்தை குறிவைத்து வெற்றிகரமாக எடுக்கப்பட்ட படம் என நினைக்கிறேன் .வர்த்தக ரீதியுலும் இது ஒரு வெற்றிப்படமே. கமல் , மோகன்லால் நடிப்பு குறித்தெல்லாம் தனியே சொல்லத் தேவையில்லை .அனுபவத்தால் ஊதித் தள்ளியிருக்கிறார்கள்.கலை வடிவம் என்பதைத் தாண்டி உன்னைப்போல் ஒருவன் சொல்லும் சேதி ,வசனங்கள் குறிக்கும் கருத்துருவாக்கம் இவையெல்லாம் வலையுலகில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டதை வைத்து அந்த கதாபாத்திரம் சார்ந்த ஒன்றை ஒட்டு மொத்தமாக சொல்வதாக கட்டமைக்கப்படும் வகை விமர்சனங்கள் எனக்கு ஏற்புடையதில்லை .ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் வசனகர்த்தாவும் , இயக்குநரும் பார்வையாளருக்கு சொல்ல வரும் கருத்தா அல்லது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை மட்டும் வெளிப்படுத்தும் கூறா என்பது அவரவர் எடுத்துக்கொள்ளும் விதத்தை பொறுத்தது .

உன்னைப் போல் ஒருவனில் கூட குறை சொல்ல வேண்டுமென நினைப்பவர்கள் ஒரு சில கதாபாத்திரங்கள் ,ஒரு சில இடங்களில் சொல்லும் வசனங்களை மேற்கோள்காட்டி அவையே வசன கர்த்தாவின் கருத்து என நிறுவுகிறார்கள் ..அதற்கு நேரெதிராக இன்னொரு கதாபாத்திரம் பேசும் வசனங்கள் இந்த வாதத்துக்கு ஒத்து வராததால் ,அவை ஏதோ வசன கர்த்தா எழுதாதது போலவோ ,அல்லது அது அந்த பாத்திரத்தின் கருத்து போலவோ மறைத்து விடுகிறார்கள். ஆக கதாபாத்திரத்தின் கருத்தைத் தாண்டி வசனகர்த்தாவும் ,இயக்குநரும் பார்வையாளருக்கு சொல்ல முற்படும் கருத்துக்கள் எவை என யார் முடிவு செய்வது ? அவரவர் எடுக்கும் நிலைப்பாட்டுக்கு ஏற்ப எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

இந்த படத்தில் சொல்லப்படும் வசனங்கள் , குறியீடுகள் பல எனக்கு சில வருத்தங்களையும் , சந்தேகங்களையும் எழுப்பியது உண்மை . இயக்குநர் சொல்ல வரும் கருத்து ஒன்றாகவும் பெரும்பான்மை பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் விதம் வேறாகவும் இருப்பதற்கு ஏதுவான பல வசனங்கள் படத்தில் இருக்கிறது .. இந்த பூடகத்தன்மை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதாக இருக்குமோ என சந்தேகமும் வருகிறது.

கோவை குண்டு வெடிப்பு , பெஸ்ட் பேக்கரி நிகழ்வு இரண்டுக்கும் உள்ள கால முரண்பாடு போன்ற சில அலசப்பட்டவற்றை தவித்து , வேறு சிலவற்றை பார்ப்போம் .அதற்கு நண்பர்கள் சிலர் கொடுத்த வேறு அர்த்தங்களும் உள்ளது .

1. அப்துல்லா என்ற தீவிரவாதி தன் மூன்றாவது மனைவி பெஸ்ட் பேக்கரி நிகழ்வில் எரித்து கொல்லப்பட்டதை குமுறலோடு சொல்லும் போது இந்துவாக பிறந்த உடனிருக்கும் தீவிரவாதி(சந்தான பாரதி) அதான் ரெண்டு பொண்டாட்டி மீதியிருக்கில்ல என்ற ரீதியில் நக்கலாக சொல்வது காட்சியாக வருகிறது . எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது .. ஆனால் திரையரங்கில் பலர் சிரித்தார்கள் . தீவிரவாதியோ யாரோ ஒரு பயங்கரவாத சம்பவத்தில் தன் மனைவி கொல்லப்படதை சொல்லும் போது ,அவருக்கு மூன்று மனைவி இருப்பதை வைத்து இன்னொருவர் நக்கல் அடிப்பது .. இதில் வசனகர்த்தா சொல்ல வருவதென்ன ? ஒரு சமுதாயத்தினரின் ஒரு வழக்கத்தை நக்கல் அடிப்பது தான் வசனகர்த்தாவின் நோக்கமா ? நண்பர் ஒருவர் சொன்னார் .. இல்லை ..அந்த இடத்தில் கூட இருக்கும் அந்த இந்து தீவிரவாதியின் குரூர புத்தியை சொல்ல வருகிறார்கள் என்று ..ஆனால் பெரும்பான்மை பார்வையாளர்கள் அந்த கோணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கு சந்தான பாரதி சொன்னவுடன் எழும் சிரிப்பலையே சாட்சி.

2. கமல்ஹாசன் ஒரு முஸ்லீம் என்று ஒருவர் சொல்கிறார் .. அவர் மனைவியிடம் பேசும் போது அவர் மனைவி "இன்ஷா அல்லா-வா?" என்கிறார் ..எனவே அவர் முஸ்லீம் தான் என ஒருவர் சொல்லுகிறார் ..என்னைப் பொறுத்தவரை அவர் மனைவி 'இன்ஷா அல்லா' என்று அவரே சொல்லாமல் 'இன்ஷா அல்லா-வா?" என கேட்பது இது கமல்ஹாசன் வீட்டில் அவ்வப்போது சொல்வார் என்பதை குறிக்கிறது .. முஸ்லீம் அல்லாத சிலர் கூட (நான் உட்பட) சில நேரம் 'இன்ஷா அல்லா' சொல்வதுண்டு .எனவே எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

3. தீவிரவாதிகளை ஒன்றாக சேர்த்து ஆப்பரேஷன் ஆரம்பிக்கும் முன்னர் இரண்டு போலீஸ் அதிகாரிகளிடமும் பேசும் மோகன்லால் , கடைசியாக ஒரு அதிகாரியிடம் தனியாக " ஆரிஃபை பார்த்துக்கோ" என சொல்லுகிறார். ஆரிஃப் ஒரு முஸ்லீம் என்பதால் அவரை நம்பமுடியாது எனவே அவர் மேல் ஒரு கண் வைத்துக்கொள் என மோகன் லால் சொல்லுவதாக சிலர் சொல்லுகிறார்கள் ..ஒருவர் சொன்னார் ..இல்லையில்லை ..ஆரிஃப் மிகவும் துடிப்பானவர் ..ஆத்திரத்தில் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து விடுவார் (அப்படி ஒன்றை அவர் பின்னர் செய்வார்) எனவே தான் மோகன் லால் கவனமாக இருக்கச் சொன்னார் என்கிற கோணத்தில் சொல்லுகிறார் ..எதை எடுத்துக்கொள்ள?

4 .தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதம் தான் என்பது கமல் சொல்லும் கருத்து . கமல் ஒரு கருவறுத்தல் சம்பவத்தை சொல்லுகிறார் .அந்த கறுவறுத்தல் சம்பவம் எங்கே யாரால் செய்யப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும் ..ஆக அந்த தீவிரவாதத்தை செய்தவருக்கு எதிராக கமல் தீவிரவாதத்தை கையிலெடுத்தால் கொல்லப்பட வேண்டியவர்கள் யார் ? உலகுக்கே தெரியும் .. ஆனால் கமல் கொல்ல முற்படுவது கிட்டத்தட்ட அதே இடத்தில் அதே காலகட்டத்தில் அதே தீவிரவாதத்துக்கு மனைவியை பலி கொடுத்து அதனால் உந்தப்பட்டு தீவிரவாதியான ஒருவரை ..அந்த அப்துல்லாவும் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க தீவிரவாதியானவர் ..கமலும் தீவிரவாதத்துக்கு பதிலடி தீவிரவாதம் என சொல்பவர் ..பின்னர் ஏன் கமல் கருவறுத்த கும்பலை குறி வைக்காமல் தீவிரவாதத்தால் தீவிரவாதியான ஒருவரை கொல்ல வேண்டும் ? ஆக இது தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதத்துக்கு பதிலான தீவிரவாதமா ? இது முடிவுறாத தொடர் போல தெரிகிறதே?.... விடை என்ன?????

Monday, September 14, 2009

பஃறுளி முதல் யூப்ரடீசு வரை

பொதுவாக வரலாற்று ,மொழி ஆய்வு நூல்கள் வெறும் தகவல் தொகுப்புகளாக இருப்பதால் புரட்டியவுடன் ஒரு அயற்சியை ஏற்படுத்தி முழுவதும் படிக்க விடாமல் செய்வதுண்டு ..சிங்கை நூலகத்தில் இந்த 400 பக்க புத்தகத்தை எடுத்துப் புரட்டிய போது வழக்கத்துக்கு மாறாக மிக சுவாரஸ்யமாக தோன்றியதால் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முடிக்கவும் ,வெறுமனே பக்கங்களை புரட்டவும் விடாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டது இந்த பத்தகம் .


மா.சோ.விக்டர் என்பவர் எழுதிய இந்த நூலை படித்து முடிக்கும் போது இவருடைய மொழியறிவு ,கடும் உழைப்பு மலைக்க வைத்தது. பஃறுளி ஆறு பண்டைய குமரிக்கண்டத்தில் ஓடிய ஆறு . பஃறுளி = பல துளி என சொல்ல வேண்டியதில்லை . ஆசிரியர் நிறுவ முனைவது .. குமரிக்கண்டமே விவிலியம் சொல்லும் ஆதிமனிதன் ஆதாம் வாழ்ந்த இடம் . விலிலியத்தில் சொல்லப்பட்ட நோவாவின் வெள்ளப்பெருக்கே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த கடற்கோள் .நோவா குமரிக்கண்டத்தை சேர்ந்தவரே .வெள்ளப்பெருக்கால் குடிபெயர்ந்த தமிழர்கள் சிந்து சமவெளி ,அங்கிருந்து பாபிலோன் ,மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் சென்று பரவினார்கள் . கிரேக்கம் , எபிரேயம் உட்பட மத்திய கிழக்கு மொழிகளில் காணப்படும் பல சொற்களின் மூலம் தமிழே . விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல நாடுகள், ஆறுகள் , மாந்தர்களின் பெயர்கள், பழக்க வழக்கங்களின் மூலம் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டின் மூலமாக இருக்கிறது . விவிலிய ஆராச்சியாளர்கள் அர்த்தம் கண்டு பிடிக்க முடியாத பல எபிரேய வார்த்தைகளின் மூலம் தமிழ் சொற்களின் திரிபாக இருக்கிறது .. இதன் மூலம் தமிழும் ,தமிழர் பண்பாட்டு பரவலும் வெறும் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல , 10000 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் பழமை வாய்ந்தது ..உலகின் பல மொழிகளின் தாயாக தமிழ் இருந்திருக்கிறது.

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை ஓரளவு ஏற்கனவே படித்திருப்பவர்களுக்கு இந்நூல் மேலும் சுவாரஸ்யத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . வெறும் ஆராய்ச்சி ,தகவல் தொகுப்பு என்றில்லாமல் விவிலியம் சொல்லும் ஆதி மனித தோற்றம் , நோவா வெள்ளப்பெருக்கும் , ஆபிரகாம், மோயீசன் , இஸ்ராயேல் வரலாறு என்று ஒரு வரிசைக்கிரமமான விவிலிய நிகழ்வுகளினூடே தகவல்கள் இணைந்து ஒரு நாவல் படிக்கும் உணர்வை ஊட்டுகிறது இந்நூல்.

இதில் சொல்லப்பட்ட தகவல்களில் சிலவற்றை உதாரணங்களாக சுருக்கமாக பார்ப்போம் ...

* பைபிள் - பப்பிலியோன் (Biblion) என்னும் கிரேக்க சொல்லுக்கு கோரையினின்று உருவாக்கப்பட்ட தாளில் எழுதப்பட்ட நூல் என்பது பொருளாகும் .பைப்புல் அல்லது பசும் புல் என்று கோரையினம் தமிழில் சொல்லப்பட்டது . பைப்புல் என்ற தமிழ் சொல்லே கிரேக்கத்தில் பைப்பில் என திரிந்தது.

* அப்பிரு (apiru) என்னும் சுமேரிய மூலச் சொல்லினின்று ஈப்ரூ (Hebrew) என்ற சொல் பிறந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் . அப்பிரு என்ற சொல்லுக்கு 'அந்த பக்கம்' , 'அப்புறம்' (that side) என்று ஆக்ஸ்போர்டு கலைக்களஞ்சியம் பொருள் கூறுகிறது . அப்புறம் ,அப்புற என்ற தமிழ் சொல்லின் திரிபே அப்பிரு அல்லது அப்பிறு.

* ஆபிறகாமை 'அலைந்து கொண்டிருந்த அறம்வாயன் (Wandering Aramean) என்று விவிலியம் விளிக்கிறது . அறம் + வாய் எனும் இரு தமிழ் சொற்களில் முன்னது இடத்தையும் , பின்னது மொழியையும் குறிக்கிறது .அறம் என்னும் பகுதி பாபிலோனுக்கு வடபகுதியில் இருந்தது . அறம் என்பது நோவாவின் பேரனின் பெயர் . அப்பகுதியில் பேசப்பட்ட மொழி அறம்வாய் பின்னர் அறமாய்க் என திரிந்தது.ஆபிரகாம் பிறந்த ஊரின் பெயர் ஊர் (Ur). ஆபிரகாமின் மனைவி பெயர் சாராய் .. தமிழில் சார் = அழகி .


* உல் -உல்கு -உலகு என்ற சொல்லுக்கு உருண்டை என்பதே பொருள் . இந்த உலகம் வான் வெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர் . ஞாலுதல் என்பதற்கு தொங்குதல் என்பதே பொருள் . எனவே உலகம் ஞாலம் எனப்பட்டது .உல் -உல்கு என்ற தமிழ் சொல்லின் நீட்சியே உர்ல்ட் என்றவாறு world என்ற சொல் உருவானது . இரு -இருத்தல் என்ற பொருளில் எர்த் (earth) என்னும் சொல் வந்தது . எபிரேய மொழியில் உலகம் ஓலம் (Olam) எனப்பட்டது .

* இசுரேல் - இசுரா -எல் (எல் -யூதர்களின் கடவுள்) . இசுரா என்பதற்கு முரண்படுதல் , வரிந்து செயல்படுதல் (Contended) என்ற பொருள் சொல்லப்பட்டுள்ளது . தமிழில் இசைவுறா - ஏற்றுக்கொள்ளாத ,முரண்பட்ட .

* கனான் என்ற எபிரேய சொல்லுக்கு (நோவாவின் பேரன் ,இதனாலேயே கனான் ,கானான் நாடு எனப்பட்டது) பழுப்பு அல்லது கறுப்பு என பொருள் சொல்லப்படுகிறது . பெருவெள்ளத்தால் குமரி கண்டத்திலிருந்து குடிபெயர்ந்த நோவாவின் பேரன் கருமை நிறமாகத்தான் இருக்க வேண்டும் ..தமிழில் கன்னான் = கரிய நிறம் கொண்டவன் . காயன் வழியில் இலமெக் என்பான் யா ஆள் (Jabal) , ஊ ஆள் (Jubal ), துவள் காயன் (Tubal Cain) ஆகியோருடைய தந்தையாக சொல்லப்படுகிறான் . இவனின் மனைவிகள் சிலை (Zillah ) மற்றும் ஆடை (Adah).

* கல்லோடு (Gilead) - ஓட்டை கவிழ்த்தது போன்ற மலை (கல்+ ஓடு) . யாபோக்கு (Yabbok) என்னுன் ஆறு ..தமிழில் யா = தென் திசை போக்கு =செல்லுதல் ..யாப்போக்கு = தென் திசையில் செல்லும் ஆறு .

* Yarmuk என்னும் ஆறு பாலத்தீனத்தில் பாய்கிறது .இதில் ஆறு ஆறுகள் வந்து கலக்கின்றன . ஆறு +முகம் -த்தின் திரிபே யார்முக் ஆனது .. யாறு என்ற தமிழ் சொல் யோர் (Yor) என்று எபிரேய மொழியில் திரிந்து 'தன்' நகரம் வழியாக பாயும் ஆறு 'யோர்தன்' என பெயர் பெறுகிறது.

* கலிலி ஏரிக்கு சின்னீரோத்து என்ற பெயரும் உண்டு . சின்ன + நீர் + ஊற்று என்ற மூன்று தமிழ் சொற்களின் இணைப்பே சின்னீரோத்து என திரிந்துள்ளது . நீர்+ஊற்று திரிந்து பீரோற்று பின்னர் பெய்ரூட் ஆனது ..பெய்ரூட் என்ற சொல்லுக்கு நீர் ஊற்றுகளின் நகரம் என்பதே பொருள்.

(கடல்சார்ந்த தொழில் முறையிலும் , கடல் வழி பயணங்களிலும் தமிழன் முன்னோடி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்)

* கலம்(kalam) என்ற தமிழ் சொல் , Galaia (கிரேக்கம்) , Galea (லத்தீன்) , Galley (ஆங்கிலம்)

* நாவி என்ற தமிழ்ச் சொல் , Naus (கிரேக்கம் ) , Navis (லத்தீன் ) , Navie (பிரெஞ்சு) , Navy (ஆங்கிலம்)

* நங்கூரம் என்ற தமிழ்ச் சொல் , Angura (கிரேக்கம்) , Ancora (லத்தீன்) , Anchor (ஆங்கிலம்) . Angk என்ற கிரேக்க சொல்லுக்கு வளைந்த (hook) என பொருள் கூறப்பட்டுள்ளது . அங்கு - அங்குதல் - அங்கனம் = வளைந்த சாய்கடை.

* மாந்தன் மண்ணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவன் என்ற விவிலியக் கூற்றை அடிப்படையாக வைத்தே Man என்ற சொல் வந்த்து ..இது மண் என்னும் தமிழ் சொல்லே.

இது போன்ற பல விளக்கங்கள் , பல்வேறு சுமேரிய , கிரேக்க , எபிரேய சொற்களுக்கு கிடைக்கிறது ..இது தவிர யாக்கோபு மாமன் மகளை மணந்தது , 7 நாட்கள் திருமண கொண்டாட்டங்கள் போன்றவை தமிழர் பண்பாட்டை பிரதிபலிப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.

பொதுவாக யாராக இருந்தாலும் தங்கள் இனம் தான் பழமையானது என நிறுவவே முனைவர் ..ஆனால் இந்த புத்தகத்தில் வறட்டு வாதமோ , யூகங்களோ மிக மிகக் குறைவு என்றே எனக்கு தோன்றியது ..வார்த்தைகளுக்கு உள்ள ஒற்றுமைகளை விளக்கும் போது வெறும் ஓசைகள் தரும் ஒற்றுமையாக இருந்தால் அதை வலுவானதாக எடுத்துக்கொள்ள முடியாது .ஆனால் ஓசைகள் மட்டுமின்றி மூல மொழியில் கொள்ளப்படும் அர்த்தமும் , தமிழ் வார்த்தையின் அர்த்தமும் ஒன்றாக இருப்பதே வலுவான ஆதாரமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.

மா.செ.விக்டர் என்ற இதன் நூலாசிரியர் இதை எழுதுவதற்கு மேற்கொண்டிருக்க வேண்டிய உழைப்பும் ,சிந்தனை பெருக்கும் நினைத்தால் மலைக்க வைக்கிறது ..அவரின் மற்ற நூல்களின் பட்டியலை பார்த்தால் இன்னும் மலைப்பு .. வெத்து வேட்டுகளெல்லாம் பெரிய இலக்கியவாதிகளாக அறியப்படும் தமிழ் சூழலில் இத்தகையோர் அந்த அளவு கூட அறியப்படாதது மிகவும் துரதிருஷ்டவசமானது .இவர் ஒரு முனைவர் -ஆ இல்லையா தெரியவில்லை . இந்த ஒரு புத்தகத்துக்காகவே 4 முனைவர் பட்டம் கொடுக்கலாம் .. இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தமிழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது.

Friday, September 11, 2009

ஒரு நடிகனின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது அவமானமா?

உலகில் திரைப்பட கலைஞர்களுக்கு மட்டுமென்றில்லை ,எழுத்தாளர்களுக்கு ,விளையாட்டு வீரர்களுக்கு ,பல துறைகளில் புகழ்பெற்று விளங்குபவர்களுக்கு ரசிகர் இருப்பது ஒன்றும் புதிய செய்தியில்லை ..இந்த 'ரசிகர்' என்ற பதம் ஒருவரின் கலை மீது தனி அபிமானம் வைத்திருக்கும் ஒருவன் என்பதைத் தானே குறிக்க வேண்டும் ..ஆனால் நம் நாட்டில் ,அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 'ரசிகர்' என்று சொல்லிவிட்டால் , பொழுதண்ணைக்கும் வேலை வெட்டிகளை மறந்து அபிமான நடிகருக்கு மன்றம் அமைத்து ,போஸ்டர் ஒட்டி , கோஷம் போட்டுக் கொண்டிருக்கும் சிலரை மட்டும் குறிப்பதாக ஒரு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது ,அல்லது சிலர் அப்படி கற்பித்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் தன்னை சாருவின் ரசிகர் ,ஜெயமோகனின் ரசிகர் என்று சொன்னால் அது பெருமை போலவும் , இன்னொருவர் தன்னை கமல் ரசிகர் ,ரஜினி ரசிகர் என்று சொன்னால் அது ஏதோ அவமானத்துக்குரியது போலவும் கட்டமைக்கப்படுகிறது . இதிலே என்ன பெரிய வெங்காய வித்தியாசம் இருக்கிறது என எனக்கு புரிவதில்லை . சிலரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் "நான் ரசிகர்-லாம் இல்லீங்க .ரஜினி படம் விரும்பி பார்ப்பேன்" என்பார்கள் .ஏதோ நாம் நீங்க யாருடைய ரசிகர் மன்றத்தில் இணைந்து பணிபுரிகிறீர்கள் என கேட்டது மாதிரி .. ரஜினி படம் விரும்பி பார்ப்பவர் ரஜினி ரசிகர் .இதுக்கு மேலே அவர் என்ன அர்த்தப்படுத்திக்கொள்ளுகிறார் என தெரிவதில்லை . இன்னும் சிலர் "எனக்கு எல்லா நடிகர்களும் ஒண்ணு தான்" -ன்னு ஒரு உலக மகா தத்துவத்தை சொல்லுவார்கள் ..இல்லையென்றால் நாம் அவரை ஒரு நடிகரின் ரசிகர் என அவமானமாக நினைத்து விடுவோமாம்.

இன்னொன்று ஒருவரின் ரசிகர் என்றால் அவர் சொல்லுவதே வேதவாக்காக கொண்டவர் ,அவரின் போட்டி நடிகரை வெறுப்பவர் என ஒரு பிம்பம் ..இதெல்லாம் ரசிகர் மன்றங்களில் சேர்பவர்களுக்கு சரியாக இருக்கலாம் ..ஏனென்றால் ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களில் பாதி பேர் உண்மையிலேயே அந்த நடிகரின் கலையை ரசிப்பதால் இணந்தவர்கள் என சொல்ல முடியாது ..இல்லையென்றால் ரஜினி மன்றத்தை சார்ந்தவர் அதிருப்தியால் விஜயகாந்த் மன்றத்தில் சேர்ந்தார் என்றெல்லாம் இருக்க முடியாது .ஏதோ ரஜினியின் நடிப்பில் திடீர் அதிருப்தி வந்தா அவர் மாறினார் .மன்றத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை .பிழைக்க வழியில்லை ..எனவே அரசியல் கட்சிகளுக்கு தாவுவது போல தாவுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் .இதை சொல்லுவதால் நான் ஒன்றும் அவமானப்படவில்லை .சிவாஜி கணேசனின் கலைக்கு நான் ரசிகன் .அதே நேரத்தில் சிவாஜி கணேசன் என்ற அரசியல் வாதிக்கு நான் தொண்டனாகவோ ,ஆதரவாளனாகவோ இருந்ததில்லை .இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க தெரிந்தது . ரசிகர் மன்றத்தில் இணைந்திருக்கவில்லை .இன்னும் சொல்லப்போனால் இதுவரை தியேட்டரில் அவர்கள் திரையில் தோன்றும் முதல் காட்சியில் கைதட்டலோ விசிலோ அடித்ததில்லை (விசில் அடிக்க முயற்சி செய்தும் வரவில்லை ,அது வேறு விஷயம்) .அதனால் ஒரு நடிகரின் ரசிகர் கூட்டத்தின் அளவை அறிமுகக்காட்சியில் எழும் விசில் சத்தத்தை வைத்து கணக்கிடும் முறையை நான் ஒத்துக்கொள்ளுவதும் இல்லை.சிவாஜி ரசிகன் என்பதால் எம்.ஜி.ஆர் படம் பார்க்க மாட்டேன் என அடம் பிடிப்பதில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆரின் 135 படங்களில் ஏறத்தாழ 90 படங்களை பார்த்திருக்கிறேன் .சில படங்களை பல முறை பார்த்திருக்கிறேன் .இன்றும் எம்.ஜி.ஆர் பட பாடல்கள் என்றால் அத்தனை விருப்பம் .எம்.ஜி.ஆர் படங்களில் வந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களின் வீடியோ தொகுப்பை ஏறத்தாழ எல்லா வார இறுதியில் ஒரு முறை பார்ப்பவன் .இதே போல கமல் ரசிகன் என்பதால் ரஜினி படம் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பதில்லை ..கமல் படம் வந்தால் ஒரு வாரத்துக்குள் பார்த்துவிட வேண்டும் என நினைப்பேன் .ரஜினி படம் வந்தால் இரண்டு வாரத்துக்குள்..இந்த ஒரு வாரம் தான் வித்தியாசம் .நீண்ட நாட்களுக்கு பின் தியேட்டரில் நான் பார்க்காத ரஜினி படம் குசேலன் (சில காரணங்களுக்காக) .மற்ற படங்கள் இயக்குநர்களைப் பொறுத்து ,மற்றவர் சொல்வதை பொறுத்து . இதே போல எனக்கு தெரிந்த நண்பர்கள் பலரும் ரஜினி ,கமல் இருவரின் படங்களையும் தவறாமல் பார்ப்பவர்கள் ..ஆனால் இருவரில் ஒருவருக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பது தான் ஒரு சின்ன வேறுபாடு .சினிமா என்பது எழுத்து போன்ற ஒரு கலை . வரலாற்று ஆய்வுகள் ,விஞ்ஞான கட்டுரைகள் போன்ற உருப்படியான எழுத்துக்களை தவிர்த்து , வெறும் புனைவுகளையும் அது குறித்த சண்டைகளையும் ,சுய சொறிதல்களையும் எழுதும் இலக்கியவாதிகளுக்கு ரசிகனாய் இருப்பதை விட ,இதை விட உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமாவில் கலைப்பங்களிக்கும் ஒரு கலைஞனின் திறமைக்கு ரசிகனாய் இருப்பது எந்த விதத்தில் தாழந்தது ?

ஆம் .நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் ,கண்ணதாசன் ரசிகன் ,இளையராஜா ரசிகன் ,நாகேஷ் ரசிகன் ,எம்.ஆர்.ராதா ரசிகன் .

Wednesday, August 12, 2009

கலையுலக பொன்விழா - நம்மவருக்கு வாழ்த்துகள்!50 -வருடங்களுக்கு முன் அந்த சுட்டி 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாட்டுக்கு கொடுத்த முக அசைவைப் பார்த்தவர்கள் கணித்திருப்பார்களோ என்னவோ ,இந்த புள்ளையாண்டான் தமிழ் சினிமா உலகில் சரித்திரம் படைக்கப் போகிறான் என்று .ஆனா இப்போ அதை பார்க்கும் போது 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது உண்மை என கண்டிப்பாக நினைப்பார்கள் . முதல் படத்திலேயே நடிகையர் திலகம் கைகளில் தவழ்ந்த குழந்தை ,மிக விரைவிலேயே நடிகர் திலகத்தின் கைகளில் தவழ்ந்தது ..'நீ ஒருவனை நம்பி வந்தாயோ ,இல்லை இறைவனை நம்பி வந்தாயோ ' என கைகளில் கிடத்தி நடிகர் திலகம் கேட்ட கேள்விக்கு 'இல்லை ..நான் என்னையே நம்பி வந்திருக்கிறேன்' என்று அந்த பயல் பதில் சொல்லியிருப்பானோ ? .பின்னர் ஆனந்த ஜோதியில் மக்கள் திலகம் 'நீ பெரிய ஆளா வருவ' -ன்னு சொன்னது பலிக்காம இருக்குமா !
இன்று கமல்ஹாசன் என்ற ஒப்பற்ற கலைஞனின் சாதனைகளை இங்கு பட்டியலிட்டுத் தான் யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை .சினிமா உலகில் சிலர் சில திறமைகளில் மிகச் சிறப்பானவராக இருக்கலாம் .சிலர் ஒரு சில திறமைகளை ஒருங்கே பெற்றிருக்கலாம் ..ஆனால் சினிமாவின் முழுத் திறமைகளையும் முயன்று வளர்த்துக்கொண்டு முத்திரை பதித்தவர்கள் கமல்ஹாசனைப் போல யாருமில்லை.

வணிக ரீதியிலும் ,தொழில் நுட்ப ரீதியில் இரண்டிலும் தேவையான அளவுக்கு தன்னை நிரூபித்துக் கொண்டிருந்தாலும் ,இன்னும் ..இன்னும் என முன்னேற்றத்தை தேடி ஓடி ஓடி உழைக்கும் கலைஞன் .நடிகர் திலகத்தின் கலை வாரிசாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள நல்ல ரசிகன்.

50 ஆண்டுகளுக்கு முன் இதே ஆகஸ்ட் 12-தேதி 'களத்தூர் கண்ணம்மா' வெளிவந்தது .தமிழ் சினிமாவுக்கு புதிய விழி வந்தது.

கலையுலக பொன் விழா காணும் நம்மவருக்கு வாழ்த்துகள்!

Friday, July 24, 2009

நெஞ்சை நெகிழ வைத்த ராமநாதன் சேட்டன்

விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் 'நடந்தது என்ன' நிகழ்ச்சியை எப்போதாவது பார்ப்பது உண்டு .நேற்றிரவு வழக்கத்துக்கு மாறாக பார்த்த போது மனதுக்கு நெருக்கமான ஒரு தொகுப்பை காட்டினார்கள்.

சில வருடங்களுக்கு முன் கேரளாவின் பாலக்காடு பகுதியிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர் ராமநாதன் .தொடக்கத்தில் சாதாரண பெட்டிக்கடை வைத்து பிழைப்பை ஆரம்பித்தவர் இப்போது கால்டாக்சி ஓட்டி பிழைக்கிறார் .கெட்டிவாக்கம் பகுதியில் ஒரு மொட்டி மாடி அறை போன்ற சிறிய வீட்டில் குடியிருக்கும் ராமநாதனுக்கு எத்தனை பெரிய மனது . சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள தினசரியை படித்துக்கொண்டிருந்த ராமநாதனின் கண்ணில் ஒரு செய்தி இடறுகிறது .சென்னை பொது மருத்துவமனை பிணவறையில் கேட்பார் யாரிமின்றி சுமார் 80 பிணங்கள் இருப்பதாக ,அதை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பது தான் செய்தி .மனம் வருந்திய ராமநாதன் உடனே மருத்துவமனைக்கு சென்று பிணங்களை பார்க்கிறார் .பல பிணங்கள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்றன ..அங்குள்ள அதிகாரிகளிடம் பிணங்களை அடக்கம் செய்ய விரும்புவதாக சொல்ல ,ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்களுக்கு பின் 22 பிணங்களை எடுத்து வந்து மரியாதையான முறையில் அடக்கம் செய்கிறார்.

பின்னர் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார் ..ரயில்களில் ,விபத்துகளில் அடிபட்டு இறந்தவர்களின் பிணங்களை யாரும் உரிமை கோராமலோ ,கேட்பாரற்று கிடந்தாலோ அவற்றை எடுத்து தன் சொந்த செலவில் சகல மரியாதைகளோடும் அடக்கம் செய்து வருகிறார் ..இப்போது இவர் பெயர் பிரபலமாகி எங்காவது அனாதை பிணங்கள் கிடந்தால் இவரின் கைதொலை பேசிக்கு மக்கள் அழைத்து சொல்கிறார்கள் ..உடனே இவர் காரியத்தில் இறங்கி பிணத்தை பெற்று அடக்கம் செய்கிறார்.இதுவரை 300-க்கு மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்திருக்கிறார்.

"இறந்தவர் எந்த ஜாதி ,மதம் என்று எனக்கு தெரியாது ..இருந்தாலும் உரிய மரியாதையோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு இந்து ,ஒரு கிறிஸ்தவர் ,ஒரு இஸ்லாமியர் மூவரை கொண்டு அவரவர் முறைப்படி மந்திரமோ ,ஜெபமோ சொல்ல வைத்து மலர்கள் தூவி அடக்கம் செய்கிறேன் " என்கிறார் இராமநாதன்.

சமுதாய தொண்டு செய்வதற்கு தெருவை சுத்தம் செய்வது போன்ற பணிகள் இருக்க குறிப்பாக இந்த பணியை எப்படி செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு "அது போன்ற பணிகளை செய்வதற்கு நிறைய பேர் முன்வருவார்கள் ..இது போன்ற எளிதில் யாரும் முன் வராத பணியை நான் செய்ய வேண்டும் என்பதால் செய்கிறேன்" என்ற பதில் வருகிறது.

இத்தகைய உயர்ந்த உள்ளம் கொண்ட இராமநாதனுக்கு குழைந்தை பாக்கியம் கிட்டவில்லை ..அது பற்றி வருத்தமில்லையா என்று கேட்டப்பட்டபோது அது பற்றி தான் வருத்தப்படவில்லை ..இன்றே எனக்கு மரணம் வந்தாலும் நிறைந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுவேன் ..எனக்கு குழைந்தை இல்லையே தவிர என்னை 'சேட்டா' என இங்குள்ள மக்கள் அழைக்கும் போது உண்மையான அன்போடும் மரியாதையோடும் அழைப்பதாக உணர்கிறேன் ..எனக்கு வாரிசு இல்லையே தவிர இங்கு ஏராளமான சொந்த பந்தங்கள் இருக்கிறார்கள் .அன்பு பாசம் என்றால் என்ன என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் தான் எனக்கு காண்பித்தார்கள் .நான் இங்கே தான் சாக விரும்புகிறேன் என குறிப்பிட்டு விட்டு மேலும் தொடர்ந்தார்...

"இப்போ கூட இதை பார்த்துக்கொண்டிருப்பவர் சிலர் கண்கள் கலங்குவார்கள் ..அவர்கள் தான் என் பிள்ளைகள் ,அண்ணன் தம்பிகள் " என்ற அர்த்தத்தில் முடித்தார்..

சத்தியமாக அவர் இதை சொல்ல ஆரம்பிக்கும் முன்னர் என் கண்கள் பனித்திருந்தன.

Friday, June 05, 2009

எஸ்.எம்.கிருஷ்ணா ..வேலையப் பாரு - இலங்கை

இலங்கை ராணுவ இணையத்தளத்தில் சொல்லப்பட்டிருப்பது

According to the Asian Tribune the most recent case is the new Indian Foreign Minister S. M. Krishna who urged us to address the "root cause of the conflict" by effective devolution of powers to all communities in the Island nation. I say to Mr. Krishna "Who are you to tell us, a sovereign nation how to run our country? You just mind your own business or wind up like that woman Navi Pillai. The choice is yours.


To India we say that not only will there be no devolution of any sort because it is the necessary and sufficient step to separation but also the Indo Lanka Accord forced on us by India will be annulled and thrown out so that we could cleanse this land of the last vestige of Indian hegemony. You created the LTTE with the intention of annexing our land. We liquidated what you created. You can annex the moon much easier than that. We thank India for not voting against us at the UNHRC. We attribute it to the wisdom of that very harmless and soft spoken intellectual Dr.Manmohan Singh. There are many in India who would have loved to vote against us but if that happened, India would have found it very uncomfortable to live anywhere in Asia in particular at her present location with her neighbours. She will then have to move the entire Indian sub continent to a location near America where she would be under the protection of American hegemony. That probably is why Japan decided to abstain though she was originally for voting against Sri Lanka


இந்திய வெளியுறவு அமைச்சரை அவன் 'பொத்திகிட்டு போடா' என்கிறான் ..இவன்களோ அவனுக்காக ஓடி ஓடி ஆதரவு திரட்டுகிறான்கள் ..வெட்கம் ,மானம் எதுவுமே கிடையாதா ? இந்தியா வல்லரசு தான் ..எல்லோரும் நம்புங்கப்பா .

Friday, May 29, 2009

ஈழப்போராட்டமும் தமிழகத்து சாமானியனும்

ஈழப்பிரச்சனையில் இன்று காட்சிகள் மாறுகின்றன .நிலைப்பாடுகள் திசைமாறுகின்ற சூழல் .யார் சொல்லுவதை எடுத்துக்கொள்ளுவது ,யார் சொல்லுவதை உதற வேண்டியது என்பதில் இதுவரை இல்லாத குழப்பங்கள் . சர்வதேச , தேச , இனத்துக்குள்ளேயே, பிரதேச ,தனிமனித அரசியல் அத்தனையும் சேர்ந்து தண்டிக்கப்பட்டதென்னவோ
சாதாரண மக்கள் தான் .உரிமைக்காக ஏங்கி நின்ற அந்த மக்கள் இன்று உயிராவது மிஞ்சாதா எனும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் .போதிய அளவு பாதுகாப்பான தூரத்தில் தள்ளி இருந்து கொண்டு வீராவேசங்களும் ,அரசியல் கட்டுடைப்புகளும் நிகழ்த்துவது சுலபம் .உயிராவது மிஞ்சுமா எனும் சூழலில் இருந்து பார்த்தால் தான் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணவோட்டங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும் .

நேரடியாக சம்பந்தப்படாத ,ரத்த சம்பந்த உணர்வினாலே உந்தப்பட்டு ஏதாவது நிகழ்ந்து நம் சொந்தங்களுக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என ஏங்கும் தமிழக தமிழர்களில் ஒருவன் என்ற முறையில் கையாலாக நிலையின் உச்சத்தில் நின்று வசவுகளையும் ,அவமானங்களையும் தாங்கிக் கொண்டு ,இன்னும் நம்மால் செய்ய முடிவது என்ன என தெளிவான பாதை தெரியாமல் தவிக்குது மனது . தமிழகத்தில் இருக்கிற தமிழர்களின் கவனமும் செயல் வெளிப்பாடும் தேவையான அளவுக்கு இல்லாமல் போயிற்றே என மனம் அங்கலாய்க்கும் நேரத்தில் '1 ரூபாய் அரிசிக்கும் பிரியாணிக்கும் ஈழத்தமிழனை விற்று விட்ட இழிபிறவிகள் ' என்ற பொதுவான வசைமொழிக்கு தமிழகத்து தமிழர்கள் எந்த அளவுக்கு பொருத்தமானவர்கள் என (சுய விமர்சனம் என்ற முறையில்) சிந்திக்க வேண்டியுள்ளது.

என் புரிதலில் ஈழ விவகாரத்தைப் பொறுத்தவரை 5 விதமான மக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

1.பாமரர்கள் - இவர்களில் பெரும்பாலாருக்கு தெரிந்ததெல்லாம் இலங்கையில் தமிழருக்கும் சிங்களருக்கும் சண்டை .நாம் தமிழர்கள் என்பதால் தமிழர்கள் கை ஓங்கியதாக செய்தி வந்தால் மகிழ்வது ,தமிழர்கள் அடிவாங்கினால் வருத்தப்படுவது .இவர்களில் பெரும்பான்மையாவர்களுக்கு வடக்கிலுள்ள தமிழர்கள் பூர்வ குடிமக்கள் என்பதோ ,போராட்டத்தின் காரணம் ,வளர்ச்சி ,போக்கு பற்றியோ ,பூர்வீக தமிழர்கள் ,மலையக தமிழர்கள் ,தமிழ் பேசும் முஸ்லீகள் இடையிலான வேறு பாடு பற்றியோ ,வடக்கு ,கிழக்கு பிரதேச வேறுபாடுகள் பற்றியோ பெரிதாக ஒன்றும் தெரியாது .இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிலிருந்து அங்கே போய் குடியேறிய தமிழர்கள் இப்போது தனிநாடு கேட்கிறார்கள் என்றே பலரும் நினைக்கிறார்கள் ..ஆனாலும் என்ன ? அவர்கள் நம்மைப் போல் தமிழர்கள் .அந்த ஒரே காரணத்துக்காக அவர்கள் வென்றால் மகிழ்ச்சி ..மொட்டையாக சொல்ல வேண்டுமென்றால் இலங்கையிலுள்ள எல்லா தமிழரும் ஒட்டு மொத்தமாக போராடுகிறார்கள் .எல்லோரும் புலிகளை ஆதரிக்கிறார்கள். புலிகள் அவர்களுக்காக சண்டை போடுகிறார்கள் ..அவ்வளவு தான்.

(பாமரர்கள் என்றால் வெறும் படிக்காதவர்கள் மட்டுமல்ல .உத்தியோகம் வாங்குவதற்கும் ,பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் தேவையான வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் பயின்ற கனவான்களும் இதில் அடக்கம்).

2.ஆதரவாளர்கள் - இவர்களில் பலர் ஈழ விடயத்தைப் பற்றி அக்கறை எடுத்து தெரிந்து கொண்டிருப்பவர்கள் .ஆனால் இவர்களுக்குள்ளும் 3 வகை உண்டு .. முதலில் ஈழ வரலாறு ,போராட்டம் பற்றி பெரிதாக தெரியாவிட்டாலும் 'தமிழன்' என்ற ஒரே காரணத்துக்காக ,வேறெதும் காரணம் தேவைப்படாமல் தீவிரமாக ஆதரிப்பவர்கள்
..இரண்டாவது ஓரளவு தெரிந்து கொண்டு ,புலிகளின் மேலுள்ள விமரிசனத்தை மொத்தமாக புறந்தள்ளி விட்டு ஒட்டு மொத்தமாக ஆதரிப்பவர்கள் ..மூன்றாவது ஓரளவு தெரிந்து கொண்டு ,புலிகளின் தவறுகளை ஏற்றுக்கொண்டாலும் ,அதையும் தாண்டி ஒட்டு மொத்த போராட்டத்தையும் ஆதரிப்பவர்கள் .

3.எதிர்ப்பாளர்கள் - இதில் முதல் வகையினருக்கு இதை எதிர்ப்பதற்கு 'தமிழன்' என்ற ஒரே காரணமே போதும் .'தமிழ்' ,'தமிழன்' என்று தொடங்கினாலே இவர்களுக்கு வேப்பங்காய் .அதற்கு மேல் ஒன்றுமில்லை ..இரண்டாவது வகை 'நாம் முதலில் இந்தியன் ' 'தமிழன் என்ற குறுகிய மனப்பான்மை கூடாது ' போன்ற முத்துக்களை உதிர்ப்பவர்கள் ..போதாத குறைக்கு 'இறையாண்மை' ,'ராஜீவ் படுகொலை' போன்ற வெங்காய காரணங்கள் ..ஈழத்தமிழனை விட (தனக்கு சம்பந்தமே இல்லாத) பஞ்சாப் காரனும் ,பீகார் காரனும் தான் முக்கியம் என இல்லாத தேசியத்தை தூக்கி சுமப்பவர்கள் ..மூன்றாவது புலிகளை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஒட்டு மொத்த தமிழர்களின் போராட்டத்தையே குடுட்டுத் தனமாக எதிர்ப்பவர்கள்.

4.சார்பு நிலை - தான் சார்ந்திருக்கின்ற அல்லது அபிமானம் கொண்டுள்ள அரசியல் கட்சி ,தலைவர்கள் ,சமூகம் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு ஏற்ப தங்கள் நிலைப்பாட்டையும் வகுத்துக்கொள்பவர்கள்

5. கண்டுகொள்ளாதவர்கள் - எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன ? அரசியல் ,இனம் ,மொழி எல்லாம் பம்மாத்து என தத்துவம் பேசிக்கொண்டு திரியும் மேல்தட்டு படித்த இளையோர் கூட்டம் இதில் அதிகம் .இவர்களோடு தன் படிப்பு ,வேலை ,சினிமா ,கிரிக்கெட் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காத மேல் தட்டு ,நடுத்தர ,கீழ்த் தட்டு கூட்டமும் இதில் அடக்கம் .தன் இனத்துக்கும் ,நாட்டுக்கும் ,தான் வாழும் சமுதாயத்துக்கும் சம்பந்தம் உள்ள எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளும் குறைந்தபட்ச் தேடலின்றி ,ஆனால் சம்பந்தமில்லாத உலக விடயங்களில் தமக்கிருக்கும் அறிவை மெச்சிக் கொள்ளும் 'கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன ' கூட்டமும் இதில் அடக்கம் .

கடந்த 6 மாதங்களாக ஈழத்தில் நடந்து வரும் சம்பவங்கள் இந்த 5 வகையினரையும் ஓரளவு கவனம் ஈர்த்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை .ஆனாலும் அதில் எத்தனை பேர் மேலும் தெரிந்து கொள்ள விழைந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி . வலைப்பதிவுகள் போன்ற இரு வேறு அதீத கோணங்களில் வரும் கருத்துக்கள் தாண்டி , சினிமா ,கிரிக்கெட் மட்டுமே விவாதிக்கும் வேறு தளங்களில் மட்டுமே இயங்கும் பலரும் முதல் முறையாக குறைந்த பட்சம் இந்த விடயங்களில் அனுதாபமும் தெரிந்து கொள்ள ஆர்வமும் காட்டியது அனுபவ பூர்வமாக உண்மை ..இது நாள் வரை இதைப் பற்றி கிஞ்சித்தும் தெரியாமல் இருந்தேனே என்ற குற்ற உணர்ச்சியை கூட சிலர் என்னிடம் வெளிக்காட்டினார்கள் .அதே நேரத்தில் தெரிந்து கொள்ளும் முகமாக அவர்கள் கேட்ட கேள்விகள் , ஆச்சரியங்கள் ,நிலைப்பாடுகள் வலைப்பதிவுகளைத் தாண்டி பலர் கொண்டிருக்கிற ஐயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின .

நேரம் கிடைக்கும் போது அது பற்றி எழுதுகிறேன் ..

Monday, March 23, 2009

சாருவின் உளறல்கள்

தமிழகத்தில் அறிவுஜீவி என காட்டிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் ? கமல்ஹாசன் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை ,சிவாஜி கணேசனுக்கு நடிக்கவே தெரியாது ,எம்.ஜி.ஆர் ஒண்ணுமே தெரியாத முட்டாள் ,கருணாநிதிக்கு தமிழே தெரியாது ,இளையராஜாவின் இசை வெறும் இரைச்சல் மட்டுமே என அடித்து பேச வேண்டும் . அப்போது தான் 'ஆஹா ..இவன் ரேஞ்சே வேற போலிருக்கு' என்று பலர் அதிர்ந்து பார்க்க ,இதற்காகவே இருக்கும் சில அறிவுஜீவி அடிபொடிகள் உங்களை அரவணைத்துக் கொண்டு வக்காலத்து வாங்க ஓடி வருவார்கள் .

சாருநிவேதிதா இப்படிப்பட்ட அறிவிஜீவிகளில் ஒருவர் ..கெட்ட வார்த்தைகளை சம்பந்தமே இல்லாமல் ஒரு பக்கத்தில் நிரப்பிவிட்டால் அவர் பெரிய இலக்கிய பருப்பாக இருக்கலாம் .அதற்காக இலக்கியம் தாண்டிய எல்லா விடயங்களிலும் அவர் ஏன் தொடர்ந்து உளற வேண்டும் என தெரியவில்லை . ராக்கெட் அறிவியல் பற்றி அவர் உளறினால் கூட சாரு சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் (அதுவும் கேரளாவில் தான் அதிகமாம்) இருப்பது தான் இவரின் 'அடிச்சு விடுறா..பாத்துக்கலாம்" அள்ளிவிடல்களுக்கு காரணமாக இருக்க முடியும். இதே தமிழகத்திலிருந்து போன ஷகீலாவை இவரை விட 100 மடங்கு பேருக்கு தெரியும் .அதனால் என்ன இப்போ?

சாஸ்திரிய சங்கீதத்தில் கரை கண்ட செம்மங்குடி ,பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களே மேதை என ஒப்புக்கொள்ளும் இளையராஜாவின் இசை வெறும் இரைச்சலாம் ..ஜேசுதாசின் குரலைக் கேட்டால் இவருக்கு வாந்தி வருகிறதாம் .'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடல் இளையராஜா பாடியது என அடித்துச் சொன்னவர் ,இப்போது ஆஸ்கார் குறித்த கமல்ஹாசனை கலாய்க்கிறாராம் .

சாரு சொல்கிறார் "
ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தது பற்றி உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாக்காரர்கள் மட்டும் எதையெதையோ வாயில் வந்ததைப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளையராஜாவிடமிருந்து ஒரு சொல் கிடையாது. கமலோ வெளிப்படையாகவே தன்னுடைய எரிச்சலைப் பதிவு செய்தார். இதோ அந்த எரிச்சல்:

“அமெரிக்காவின் ஆஸ்கர் விருது இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது பெருமை. உலகத்தின் உச்ச விருது என்று இதைக் கூறி விட முடியாது. இது அமெரிக்காவின் உச்சம். அதில் ரஹ்மான் பங்கெடுத்து விருது வென்றிருக்கிறார். சத்யஜித் ரேவுக்கு விருது கொடுத்தது பெருமை. ரஹ்மானின் சாதனையும் அதற்குக் கம்மி இல்லை. இந்த விருதை வைத்துக் கொண்டு (அவர்) அடுத்த பிரயாணத்திற்குத் தயாராக வேண்டும். இவருக்குக் கிடைத்து விட்டதே என்று கோபப்பட்டோ, சந்தோஷம் அடைந்தோ அல்லது பொறாமைப் பட்டோ நாமும் அதுபோல் விருது பெறுவதற்கு முன்னேற வேண்டும்.” (ஃபெப்ருவரி 2009, தினகரன்)

கமலின் வாசகங்களை இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்போம். மனுஷ்ய புத்திரனுக்கு நோபல் பரிசு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அவர் அந்தப் பரிசுக்கு நிச்சயம் தகுதி உடையவர்தான்; இன்ஷா அல்லாஹ்). உடனே ஒரு சக தமிழ்க் கவிஞன் என்ன சொல்வான் தெரியுமா?

”இந்த ஸ்வீடிஷ் பரிசு மனுஷ்ய புத்திரனுக்குக் கிடைத்திருப்பது பெருமை. ஆனால் இதை உலகத்தின் உச்சபட்ச இலக்கிய விருது என்று சொல்லிவிட முடியாது. இது ஸ்வீடன் நாட்டின் உச்சம். அதில் மனுஷ்ய புத்திரன் பங்கு பெற்று வெற்றி அடைந்திருக்கிறார். (அங்கே என்ன ரேக்ளா ரேஸா நடத்தினார்கள்?) பொதுவாக ஸ்வீடிஷ்காரர்களுக்கு அவ்வளவாக இலக்கியம் தெரியாது என்று ஸ்டாக்ஹோமில் பணிபுரியும் என் சகலை அடிக்கடி சொல்லுவார். இல்லாவிட்டால் நம் பாரதிக்குக் கொடுக்காமல் அந்தத் தாகூருக்குக் கொடுத்திருப்பார்களா? தாகூருக்குக் கொடுத்தது பெருமை. ஆனால் இப்போது மனுஷ்ய புத்திரனுக்குக் கொடுத்திருப்பது சிறுமை என்று சொல்ல மாட்டேன். இந்த விருதை வைத்துக் கொண்டு அவர் அடுத்த பிரயாணத்துக்குத் தயாராக வேண்டும். (எங்கே சந்திர மண்டலத்துக்கா?)


ஆஸ்காரையும் இலக்கிய நோபலையும் ஒப்பிடும் இந்த அறிவிலியை என்ன சொல்வது ? ஆஸ்கார் என்பது உலக மொழி திரைப்படங்கள் எல்லாம் போட்டி போடும் இடமல்ல . 'சிறந்த பிற மொழி படம்' பிரிவைத்தவிர ஆங்கிலப்படங்கள் மட்டுமே இங்கே போட்டி போட முடியும் .பிற மொழி படத்திற்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க வாய்ப்புள்ளதே தவிர ,இயக்குநருக்கோ ,மற்ற தொழில் நுட்பக்கலைஞர்களுக்கோ அங்கு விருது கிடைக்க வாய்ப்பே இல்லை ..ஒரு ஈரானியப்படம் 'சிறந்த பிற மொழி திரைப்படம்' பிரிவில் ஒரு விருது பெற முடியுமே தவிர ,அதன் இயக்குருக்கோ ,நடிகருக்கோ விருது கொடுக்க மாட்டார்கள் ..காரணம் மிகச்சுலபம் ..இது ஹாலிவுட் படங்களுக்காக விருது . ஆனால் இதைத் தாண்டி சத்யஜித்ரே போன்றவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டு ,குறிப்பிட்ட படம் என்பதற்காக இல்லாமல் அவரின் ஒட்டுமொத்த கலை பங்களிப்பை கவுரவிக்க ஒரு சிறப்பு விருது கொடுத்திருகிறார்கள் ..ஆனால் ரகுமானோ ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்ததால் அந்த வாய்ப்பை பெற்று ,விருதை தட்டிச்சென்று நமக்கு பெருமை சேர்த்திருக்கிறார் ..இது தான் கமல்ஹாசன் சொன்னது ..ஆனால் அறிவுஜீவி சாரு அதை இலக்கிய நோபல் பரிசோடு ஒப்பிடுகிறார் ..இலக்கிய நோபல் என்ன சுவீடிஷ் இலக்கியத்துக்கு மட்டுமா வழங்குறார்கள் ? எல்லா மொழி இலக்கியங்களும் போட்டி போட்டு அதில் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுகிறது ..இந்த அடிப்படை வித்தியாசம் கூடவா இவருக்கு தெரியாது ? கமல்ஹாசனை நொள்ளை கண்டுபிடித்து விட்டால் இவருடைய மேதாவித்தனத்தை காட்டிக்கொள்ளலாம் அவ்வளவு தான் .ஆனால் தனது மேதாவித்தனத்தை இலக்கியத்தில் மட்டும் காட்டிவிட்டு போகலாமே ,சினிமா அறிவிலும் இவர் கமல்ஹாசனை விட அறிவாளி என காட்டிக்கொண்டு அப்புறம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் பல்டி அடிக்க ஏன் முயல்கிறார்?

அப்புறம் அடுத்த அறிவுஜீவி வாக்கியம்
"சிவாஜி கணேசனை நடிகர் திலகம் என்றார்கள். அவரைப் போன்ற நடிகர் உலகத்திலேயே இல்லை என்றார்கள். சொன்னதெல்லாம் தமிழர்கள். ஆனால் இந்தி சினிமாவில் அவர் பெயரே தெரியாது. "
..

உலகின் மிகச்சிறந்த நடிகனை இந்தி சினிமாவில் தெரிந்திருந்தால் தான் ஆச்சு என்ற அடிமைப் புத்தியை விடுவோம் .இருந்தாலும் இவரின் வழிக்கே வருவோம் .இந்த சாருவுக்கு தெரிந்த நாலு கச்சடா ஹிந்திவாலாக்களுக்கு சிவாஜி கணேசனை தெரியாது தான் .ஆனால் சிவாஜி கணேசன் இருந்த துறையில் இருந்த இருக்கிற வட இந்திய மேதைகளிடம் போய் சாரு கேட்டாரா "உனக்கு சிவாஜி கணேசனை தெரியுமா?" என்று ? வேண்டுமென்றால் அமிதாப்பச்சனிடம் போய் கேட்டுப்பார்க்கலாமே ..சிவாஜி கணேசன் யாரென்று . சிவாஜி கணேசனின் எத்தனையோ படங்கள் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட போது 'சிவாஜி அளவுக்கு எங்களால் செய்ய முடியாது ' என வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டு செய்தார்களே திலீப்குமாரும் ,சஞ்சீவ் குமாரும் ..அவர்களிடம் போய் கேட்டாரா இந்த சாரு ? சிவாஜி கணேசனை தன் உடன்பிறவா சகோதரனாக நினைந்து அவர் குடும்பத்தில் ஒருவராக விளங்கும் லதா மங்கேஷ்கரை போய் கேட்டாரா சிவாஜி கணேசனை தெரியுமா என்று ..அல்லது 1960 -ல கெய்ரோ படவிழாவில் கட்டமொம்மன் படத்துக்காக 'ஆசிய ஆப்பிரிக்க சிறந்த சிறந்த நடிகர்' விருதைக் கொடுத்து விட்டு கணேசனுக்கு தனி விருந்தளித்த எகிப்து அதிபர் நாசர் ,அடுத்த முறை இந்தியா வந்த போது தேடி வந்து கணேசனை சந்தித்தாரே ,அந்த நாசரைப் போய் கேட்டாரா ? எம்.ஜி.ஆரிலிருந்து சாய்ப் அலிகான் வரை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய ஒருவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல் ,அந்த விருதை ஒரு முறை கூட வாங்காத கணேசனின் படங்களை 6 மாத காலம் ஆராய்ச்சி செய்து தேடி வந்து 'செவாலியர்' கொடுத்த பிரெஞ்சு அரசாங்கத்தை கேட்டாரா இந்த சாரு ? அல்லது 'தில்லானா மோகனம்பாளி'ம் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய ரஷ்யாவைப் போய் கேட்டாரா இந்த சாரு? அல்லது மராத்தி மொழியில் தூர்தர்ஷன் முதல் ஒளிபரப்பை துவங்கும் போது இதே கணேசனை மராத்திய சிவாஜியாக நடிக்க வைத்து அதை ஒளிபரப்பி துவக்கினார்களே ..அங்கே போய் கேட்டாரா இந்த சாரு?
இவரே இவரை உலகத்தர எழுத்தாளர் என பீத்திக்கொள்வாராம் . தமிழ் நாட்டுலயே இவரை மொத்தம் 34 பேருக்கு தான் தெரியும் .. கேரளாவில் இவர் சொன்னா ஆட்சி மாறிடுமாம் ரேஞ்சுக்கு நினைப்பு வேற . இவர் ஒத்துகொண்டாலும் ஒத்துக்கொள்ளா விட்டாலும் ,இவருக்குத் தெரிந்த வடநாட்டுக்காரனுக்கு கணேசனை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் கணேசன் உலகப்பெரு நடிகன் தான் .

Saturday, January 31, 2009

நான் தமிழ்ச் சாதி!மருத்துவமனையில் முத்துக்குமாருக்கு சிகிச்சை கொடுத்தபடியே அவரிடமிருந்து வாக்குமூலமும் வாங்கப்பட்டது. அங்கிருந்த டியூட்டி மருத்துவர் முன்னிலையில் நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் முரளி யிடம் முத்துக்குமார் பேசினார். முரளி, 'அலுவலகக் குறிப்புக்காகத் தேவைப்படுகிறது... தம்பி, நீங்க என்ன சாதி?' என்று கேட்க, 'நான் தமிழ் சாதி...' என்று அழுத்திச் சொன்னாராம். கூடவே, 'எந்த சாதியும் இருக்கக் கூடாது என்றுதான் போராடிக் கிட்டு இருக்கேன். அது மட்டுமல்ல, எத்தனையோ அறப்போராட்டங்கள் இருக்க, நான் இப்படியரு முடிவைத் தேடியதற்குக் காரணம்... என்னால்தான் இலங்கைப் பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்கும். என்னுடைய இந்த முடிவு விடுதலைப்புலிகள் இயக்க சகோதரர் பிரபாகரனுக்குச் சென்றடைய வேண்டும். இந்திய அரசு, இலங்கைப் பிரச்னையில் குருடாக இருக் கிறது. அதற்குப் பார்வையூட்டத்தான் என்னுடைய இந்த முடிவு...'' என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு, மயக்க நிலைக்குச் சென்று மரணத்தைத் தழுவிவிட்டார் முத்துக்குமார்.

(நன்றி : ஜூனியர் விகடன்)

ஈழத்தமிழருக்காக தன் இன்னுயிரைத் தந்த இந்த சகோதரனுக்கு கைமாறாக ஈழத்தை பெற்றுத்தர நாம் கையறு நிலையிலிருந்தாலும் ,நம்மால் முடிந்த ஒன்று அவனின் கூற்றை மெய்ப்பிப்பது தான் . ஆம் ..நாம் அனைவரும் 'தமிழ்ச் சாதி' என உறுதி பூணுவோம்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives