Thursday, December 15, 2005

விகடனுக்கு நன்றி!

"ஒதுக்கப்பட்ட கல்லே மூலைக்கல்லானது" என்பது போன்ற ஒரு வாசகம் பைபிளில் உண்டு .சமீபத்தில் நட்சத்திர வாரத்தில் தினம் ஒரு பதிவு எழுதுவதே பெரிய சவாலாக இருந்தது.ஒரு நாள் எழுத நினைத்திருந்த பதிவு நேரமின்மையால் எழுத முடியாமையால் போக ,அதை ஈடு கட்ட வியட்நாமின் ஹோசிமின் சிட்டி-யில் இருந்த மாரியம்மன் கோவிலையும் ,அதிலிருந்த மதுரை வீரன் சாமியையும் என் கைத்தொலைபேசியில் படம் பிடித்து ,அவரசமாக போட்ட பதிவு
வியட்நாமில் மதுரை வீரன்.

அன்றே அவள் விகடன் ஆசிரியர் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி ,தகவல் சுவாரஸ்யமாயிருப்பதாகவும் ,நான் அனுமதித்தால் இதை அவள் விகடனில் பிரசுரிக்க இருப்பதாகவும் கேட்டிருந்தார் .அதன் படி தற்போதைய அவள் விகடனில் பிரசுரமாகியுள்ளது.

பதிவு செய்திருப்பவர்களுக்கு சுட்டி இங்கே.

விகடனில் பிரசுரமாயிருக்கிறது என்பதை விட ,விகடன் போன்ற பத்திரிகைகள் தமிழ்மணத்தையும் ,தமிழ் வலைப்பதிவுகளையும் வாசித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

Wednesday, December 14, 2005

தமிழக அரசியல் - கேளிக்கை

சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் நீண்ட கால தொடர்பு இருப்பதாலோ என்னவோ ,தமிழக அரசியல் வெகு காலமாக தனி மனித செல்வாக்கை மையமாக வைத்தே நடை போடுகிறது .நமது பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் ,அங்கே ஆட்சி அமைப்பதில் தனிமனித செல்வாக்கை விட கட்சிகளின் செல்வாக்கு தான் முதன்மை பெறுகிறது .ஆனால் தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் தலைவருக்காகத் தான் அந்த கட்சிக்கு ஓட்டளிக்கின்றனர் .தி.மு.க வுக்கு ஓட்டளிப்பவர்களில் பாதி பேர் கலைஞர் வரவேண்டும் என்றும் ,இன்னொரு பாதி பேர் ஜெயலலிதா வரக்கூடாது என்றும் வாக்களிக்கின்றனர்.அதே போல அ.தி.மு.க வின் ஓட்டுவங்கி ஜெயலலிதா ஆதரவு ,கலைஞர் எதிர்ப்பு என்ற இரண்டு காரணிகளை உள்ளடக்கியது.இரண்டு பக்கத்திலும் ஒரு பெரும் கூட்டம் "அவருக்கு இவர் பரவாயில்லை' என்ற நிலைப்பாட்டிலேயே ஓட்டளிக்கின்றனர்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் ,மக்கள் மதிக்கின்ற பலருக்கு ஓட்டளிப்பதில்லை .முதல் இரண்டு நிலைகளுக்கு கீழே இருக்கும் கட்சிகளின் சில தலைவர்கள் மேல் பலருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் அவை ஒட்டுகளாக மாறுவதில்லை .காரணம் போட்டி என்பது முதல் இரண்டு பேருக்குத் தான் என்ற தோற்றம் வரும் போது ,வீணாக தன் ஓட்டை வெற்றி வாய்ப்பில்லாத ஒருவருக்கு போடும் போது ,அதன் மூலம் முதலிரண்டு நிலைகளில் தான் அதிகம் வெறுக்கும் கட்சி சாதகம் பெற்று விடுமோ என்ற அச்சத்தில் ,முதலிரண்டு கட்சிகளில் தான் குறைவாக வெறுக்கின்ற கட்சிக்கு ஓட்டளிக்கிறார்கள்.

பொதுவாக இந்த ஆட்டுமந்தை மனநிலை தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது .வச்சா குடுமி ..அடிச்சா மொட்டை ! "நீ ஏம்பா ரஜினி ரசிகனா இருக்க?" -ன்னு கேட்டா "எனக்கு ரஜினி ஸ்டைல் பிடிக்கும்" இப்படி எதாவது சொல்லாமல் "அவர் படம் தானே ஓடுது .அதான் அவர் ரசிகன்' என்று பலர் சொல்லுவது போல ,பலர் இங்கே வெற்றி பெறுகின்ற பக்கம் சாய்வதை ,எங்கே ஆரவாரம் செய்ய வாய்ப்பிருக்கிறதோ ,எங்கே இருந்தால் தான் வெற்றி பெற்ற பக்கம் இருந்தேன் என்று சொல்லி மற்றவரை கேலி செய்து சுகம் காண முடியுமோ ,அங்கே கண்ணை மூடிக் கொண்டு சாய்கிற மனநிலை சினிமா போலவே ,அரசியலிலும் இருக்கிறது .
ஏனென்றால் இங்கு அரசியல் கூட ஒரு கேளிக்கை போலத் தான் இருக்கிறது .

கண்ணியமாக ,அமைதியாக நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் மதிக்கப்படுகிற போதும் ,தேர்வு செய்யப்படுவதில்லை ."அன்பே சிவம்' மிக நல்ல படம் என்று நானறிந்த எல்லோரும் சொல்கிறார்கள் .ஆனால் அது தியேட்டரில் சென்று பார்ப்பதற்கல்ல .அதிலே விசிலடிக்க ஒன்றுமில்லை.'சிவகாசி' எனக்கு எப்படி சகிக்கவில்லையோ ,அதுபோல நானறிந்த பல நண்பர்களுக்கும் அவ்வாறே ,ஆனல் அது வசூலில் தூள்பறத்துகிறது .அது போல 'நல்ல கண்ணு'கள் இருக்கலாம் .நல்ல மனுசன் தான்னு எல்லோரும் சொல்லுறாங்க .ஆனா ஒரு கெத்து வேணாங்களா ? தலைவர்னா ஒரு மவுசு வேணாமா ? அவர் கலர பாத்து நாம வாய் பிழக்க வேண்டாமா ?ஒரு கலர்புல்லா இருந்தா தானே நல்லா இருக்கும் ,அப்படின்னு தான் சாதாரண மக்கள் நினைக்குறாங்க .
ஒரு கட்சியின் பலமே ,அது எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறது ,அதன் தலைவர் கைது செய்யப்படும் போது எத்தனை பஸ் கண்ணாடிகள் உடைகிறது என்பதை பொறுத்து தான் மக்களால் எடை போடப்படுகிறது எனும் போது ,அரசியல் வாதிகள் அதற்கு தகுந்தபடி நடந்து கொள்கிறார்கள்.அவ்வாறு நடந்து கொள்ளாத அரசியல் வாதிகள் பலமில்லாத ,தலைவருக்குரிய கவர்ச்சி இல்லாதவராக ,இன்னும் சொல்லப்போனால் கேலிக்குரியவராக ஆக்கப்படுவது சாதாரணமாக நடக்கிறது .ஆக இங்கு பலமிக்க அரசியல்வாதியாக வளருவதற்கு மசாலா சினிமா போல ,மசாலா அரசியல் செய்தால் தான் ரசிகர்கள் இருப்பார்கள் .இல்லையென்றால் கண்ணியமான சொங்கி அரசியல் வாதிக்கு தொண்டனாக இருப்பதில் என்ன சுவாரசியம்?

உதாரணத்துக்கு பா.மா.க வை எடுத்துக் கொள்ளுவோம் .நான் பிறந்து வளர்ந்த குமரி மாவட்டத்தில் "பா.ம.க கிலோ என்ன் விலை?' என்று கேட்கும் நிலை தான் .அதனால் எனக்கு எந்த சார்பும் கிடையாது.ராமதாஸ் காந்திய வழியில் நடந்து கொண்டிருந்தால் ,அவரைப்பற்றி யாரும் இங்கு பேசப்போவதும் இல்லை ,பாராட்டப் போவதும் இல்லை .அவர் தனது துவக்க கால போராட்ட முறைகளில் மசாலா தூவினார் .ரசிகர்கள் கிடைத்தார்கள் .அவரை எதிர்க்கும் கூட்டம் அதிகமானது .எதிர்ப்பு கூடக் கூட பிரபலமும் கூடுகிறது .பிரபலம் கூடக் கூட ரசிகர்களும் கூடுகிறார்கள் (இதில் நான் ராமதாஸ் அவர்களின் அரசியல் தேவை ,அவர் சார்ந்த சமுதாய எழுச்சியின் அவசியம் பற்றி பேச வரவில்லை .அதில் எனக்கு வேறு கருத்துக்கள் உண்டு .இங்கே வழிமுறைகள் பற்றியே பேசுகிறோம்)

வைக்கோவை எடுத்துக்கொள்வோம் .ஈழத்தமிழர் விடயத்திலும் ,கலைஞரோடு குலாவுவதிலும் பலருக்கு அவர் மேல் கருத்து வேற்றுமை இருக்கலாம் .ஆனால் அவர் குறைந்த பட்ச கண்ணியமாவது கடைபிடிக்கிற அரசியல் வாதி என்பது என் கருத்து .தமிழகத்தில் குறிப்பிடத் தக்க அளவு இளம் தொண்டர்களை கொண்டிருக்கின்ற தலைவர் அவர் .ஓராண்டுக்கு மேலாக அவர் சிறையிலடைக்கப்பட்ட போதும் ,நடைபயணங்கள் நடத்திய போதும் ,அவர் காட்டிய கண்ணியம் போற்றுதலுக்குரியது .தன்னிடமுள்ள இளைஞர் சக்தியை அவர் இதுவரை வன்முறைக்கு தூண்டி விட்டதில்லை .அவர் நினைத்திருந்தால் அவரது தொண்டர்களை பஸ் கண்ணாடியை உடைக்க தூண்டி தன் பலத்தை காட்டியிருக்கலாம் .ஆனால் அவ்வாறு செய்யவில்லை .அவ்வாறு அவர் கண்ணியம் காத்ததால் அவர் அடைந்த பலன் என்ன? "நடுநிலை"(?) சோ கூட இந்த கண்ணியத்தை பாராட்டியதில்லை .மாறாக அவரது தொண்டர்கள் அமைதி காத்ததை மறைமுகமாக அவரது பலமின்மையாக சுட்டிக்காட்டுவதும் , இயல்பான அவரது நெகிழும் குணத்தை கிண்டல் செய்து ,அவர் அழுமூஞ்சி என்ற ரீதியில் கேலி செய்வதும் தான் நடைபெற்றது .

ஜெயலலிதாவின் எதேச்சகாரமும் ,தான் என்ற எண்ணமும் ,வரட்டு பிடிவாதங்களும் கூட அவரது துணிவாகவும் ,தலைமைக்கு தேவையான உறுதியாகவும் அறிவு ஜீவிகளால் புகழப்படுகிற சூழ்நிலையில் ,கண்ணியமும் ,பொறுமையும் ,நல்லிணக்க முறைகளும் ஒரு அரசியல் வாதிக்கு கவனத்தையும் ,செல்வாக்கையும் பெற்றுத்தருவதற்கு பதிலாக ,பலகீனமாகவும் ,எள்ளலை சம்பாதித்து தருவதாகவும் இருக்கின்ற ஒரு சூழலில் ,ஆர்ப்பாட்ட அரசியல் ஒரு சாராரின் எதிர்ப்பை (அதில் பலர் ஓட்டே போடுவதில்லை) பெற்றுத்தந்தாலும் ,துடிப்பான அரசியல் வாதி என்ற தோற்றத்தையும் ,ஒரு சாராரின் கவனிப்பையும் பெற்றுத் தருமானால் ,அரசியல் வாதிகள் அந்த வழியை தேர்ந்தெடுப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை .

அரசியலை பரபரப்பு கேளிக்கையாக மக்கள் நினைப்பதை குறைத்துக் கொள்ளும் வரை அரசியல்வாதிகள் இப்படித் தான் இருப்பார்கள்.

(சிறிது காலம் வலைப்பதிவுக்கு இடைவெளி விட வேண்டிய நிலை .புத்தாண்டில் மீண்டும் சந்திப்போம் .அனைவருக்கும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்)

Sunday, December 04, 2005

'மதி'யுரை மறவேன் - ஜோ பேருரை

எழுச்சி மிகு இந்த விழாவுக்கு தலைமையேற்றிருக்கின்ற நம் 'தமிழ் மண இயக்கத்தின்' நிறுவனரும் நிர்வாக இயக்குனரும் ,ஆயிரம் இடர்வரினும் இந்த இயக்கத்தை இரும்புக் கோட்டையாக கட்டிக் காத்து வருகின்ற அஞ்சா நெஞ்சன் தானைத் தலைவர் காசி அவர்களே! ,இயக்கத்தின் தளகர்த்தர்களில் ஒருவரும் ,இணையில்லா உழைப்புக்கு சொந்தக்காரருமான தளபதி 'மதி' அவர்களே!

இயக்கத்தின் பகுத்தறிவுப் பாசறையின் தளபதியாக பவனி வரும் ,இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வடு சுமந்து ,அதன் பின் எண்ணற்ற உரிமைப் போராட்டங்களில் சிறை புகுந்து ,சமீபத்தில் காந்த நடிகரின் இயக்கத்தில் கொள்கைப்பரப்பு செயலாளராக ஆகி விட்டார் என்று வதந்தி பரவிய வேளையிலே ,அவர் அந்த இயக்கத்தில் வேவு பார்க்க அனுப்பிவைக்கப்பட்டவர் என்ற உண்மையறியாது நமது இயக்கத்து தோழர்கள் பலர் திகைப்புற்ற வேளையிலே ,போன காரியம் முடிந்தவுடன் கிஞ்சித்தும் தாமதியாமல் நமது இயக்கப் பணிகளில் பம்பரமாக சுழன்ற, சங்கம் வளர்த்த மதுரையில் நமது இயக்கத்தின் இடிதாங்கி தருமி அவர்களே!

நமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் ,இயக்க உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக்கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்து (ஜோசப் சார்: அடப்பாவி பயலே! உனக்கு சப்போர்ட் பண்ணுனதுக்கு இது தேவை தான்) ,இயக்க மாநாடுகளில் எண்ணற்ற நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றி ,தலைவர் முதல் தொண்டர் வரை ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கின்ற இயக்கத்தின் 'நகைச்சுவை மன்னர்' ஜோசப் ஐயா அவர்களே!

இயக்க வரலாற்றிலேயே ஒரே பதிவுக்கு அதிக பின்னூட்டங்கள் பெற்று ,தானே தன் சாதனைகளை முறியடித்துக்கொண்டிருக்கும் ,பின்னூட்ட வித்தகர் டோண்டு ஐயா அவர்களே!

தனியொரு ஆளாக நின்று நியூசிலாந்து மண்ணில் இயக்கத்தின் கொடியை விண்ணதிர பறக்க விட்டிருக்கின்ற ,"நான் தம்பிமார்களுக்கெல்லாம் அக்கா' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு அறிவித்த ,பாசமிகு அக்கா நியூசி துளசி அக்கா அவர்களே!

சிங்கை மாநகரின் இயக்கத்தின் தூணாக இருந்து ,இளம் உறுப்பினர்களை ஓடோடிச்சென்று ஊக்குவித்து அனைவரின் அன்பைப் பெற்ற ,இயக்கத்தின் தகவல் விளக்கப் பிரிவின் தளகர்த்தர் ஆற்றல்மிகு சிங்கை அன்பு அவர்களே !இயக்கத்தின் ஊடக வன்முறை எதிர்ப்பு அணியின் தலைவரும் ,தமிழ்மண பாட்டாளிப் பிரிவின் ஆலோசகருமான ,அருமை நண்பர் மானமிகு சிங்கை குழலி அவர்களே!(குழலி : அடேய்..சிங்கப்பூர் வா மவனே வச்சுகிறேன் கச்சேரிய),இயக்கத்தின் இளம்கவி சிங்.செயக்குமார் அவர்களே!

எங்கள் நாஞ்சில் நாட்டு இயக்க மறவர்களில் ஒருவரும் ,ஓடோடி வந்து ஊக்கக்கரம் கொடுப்பவருமான அருமைச் சகோதரர் நாஞ்சில் இறைநேசன் அவர்களே!முத்துநகர் தந்த சொத்து ,இயக்கத்தின் ஆன்மீக அணியின் ஆற்றல் மிகு செயல்மறவர் அருளாளர் கோ.ராகவன் அவர்களே! ஆன்மீக 'குமரன்' அவர்களே!

கர்நாடக மாநில இயக்கத்தின் சூப்பர் ஸ்டாரும் ,தமது நெகிழ்ச்சி உரைகளால் எல்லோர் உள்ளம் கவர்ந்த 'நாவலர்' இளவஞ்சி அவர்களே! இயக்கத்தின் குதிரைப்படை தளபதி பரஞ்சோதி அவர்களே! வெட்டு ஒன்று துண்டு ரெண்டென முழங்கும் கல்வெட்டு அவர்களே! வராது வந்த மாமணி மாயவரத்தான் அவர்களே!

ருஷ்ய நாட்டு இயக்கப் பிரதிநிதி செங்கொடி ராமநாதன் அவர்களே!பாசமிகு சகோதரிகள் உஷா அவர்களே!மதுமிதா அவர்களே!அருமை நண்பர்கள் முத்துக்குமரன்,டி.சே.தமிழன்,ராஜ்,முத்து,மூர்த்தி,சுதர்சனம்,சுதர்சனம் கோபால் அவர்களே!

நெல்லைச்சீமையில் இயக்க மருத்துவர் அணிக்கு தலைமையேற்றிருக்கும் மருத்துவர் தாணு அவர்களே!தங்கமணி அவர்களே!பதிவுகளில் தேன்மழை பொழிய வைக்கின்ற அருமைச் சகோதரி தேன் துளி பத்மா அவர்களே!

(அனைவரும் : அடேய்..போதும்டா.எப்ப தான் நிறுத்துவ!)

துவக்க விழாவுக்கு மட்டும் வருகை தந்து காணாமல் போன தமிழ்மண ரஜினி பேரவையின் தலைவர் இலக்கியச் செம்மல் ரஜினி ராம்கி அவர்களே! 'தமிழ்மண சுஜாதா பேரவையின்' தலைவர் ,செயலாளர் அனைத்துமான தேசிகன் அவர்களே! தமிழ் மண கலைஞானி கமல் பேரவைத் தலைவர் எம்.கே.குமார் அவர்களே! அவ்வப்போது வந்து 'லொள்'ளுகின்ற எல்.எல்.தாசு அவர்களே!

இவனையெல்லாம் நட்சத்திரமா போட்டா உருப்படுமா என்று முனகி விட்டு கடைகோடியில் முகமூடி போட்டுக்கொண்டு எனது உரையை செவிமடுக்கின்ற 'அறிவு ஜீவிகள்' அணி மறவர்களே!

பெயர்கள் விடுபட்ட இயக்கத்தின் முன்னோடிகளே!தாய்மார்களே பெரியோர்களே! (காசி: இவனுக்கு கொடுத்ததே 10 நிமிடம் .அதுல 9 நிமிடம் அவர்களே அவர்களே -ன்னு ஓட்டிட்டானே!சை!)

வாரம் ஒருவரை நட்சத்திரமாக நியமித்து பணிகள் ஆற்றச் செய்யும் நமது இயக்கத்தின் நடைமுறைக்கேற்ப மதி அவர்கள் இந்த வாரம் என்னை நட்சத்திரமாக இருக்கப் பணித்தார்கள் .வெளி நாட்டு பயணப் பணிகள் இருந்த போதிலும் இயக்க கடமை கருதி அதை நான் ஏற்றுக்கொண்டேன் (குழலி : கம்பெனி செலவுல ஊர் ஊரா ஜாலியா சுத்திகிட்டு ,பணி கிணி-ன்னு என்னமா பீலா உடுறான் பாரு). சுற்றுப்பயண வேளையிலேயே என்னால் முடிந்த அளவுக்கு இந்த பணியினை நிறைவேற்றியிருக்கிறேன் .இந்த நேரத்தில் எனக்கு மிகுந்த ஊக்கமும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இறுதியாக நமது தளபதி 'மதி' அவர்கள் ,கம்போடியா ,வியட்நாம் குறித்து நான் எழுதியது போல தொடந்து பல்வேறு பிரிவுகளில் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் (ஜோ மனசாட்சி : அடே ..போற போக்குல ஒரு போட்டாவ பிடிச்சு தத்தக்க பித்தக்கன்னு எதயாவது எழுதிட்டு பெரிய வரலாற்று விற்பன்னர் மாதிரி பில்டப் குடுக்குறியா?) .அது மட்டுமல்ல..தலைவர் அவர்களிடம் 'ஜோ அவர்களுக்கு "தமிழ்மண யுவான் சுவாங்" என்ற பட்டத்தை கொடுத்தாலென்ன " என்று ரகசியமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் (மதி: அடப் பாவி..இப்படின்னு தெரிஞ்சா நான் பின்னூட்டமே குடுத்திருக்க மாட்டேனே?) .அது அறிந்து நான் தாழ்மையாக மறுத்து விட்டேன்.

ஆனால் மதி அவர்களின் அந்த ஆலோசனையை நல்ல ஒரு 'மதியுரை'யாக (நன்றி:மதியுரை அமைச்சர் ,சிங்கப்பூர்) எடுத்துக்கொண்டு ,முடிந்த வரை அதை கடைபிடிக்க முயல்வேன் என்று கூறி ,'மதியுரை மறவேன்' என்று உறுதியளித்து ,உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் .

நன்றி! வணக்கம்!!

யேய்! நில்லுங்கப்பா! அடுத்த வாரம் நட்சத்திரமாக பொறுப்பேற்கும் நண்பர் --------- அவர்களை வருக வருக என வரவேற்று (ஒரு வழியா) அமைகிறேன்.

Saturday, December 03, 2005

வியட்நாமில் மதுரை வீரன்

என்னடா இவன் ஊர் ஊரா போறானேண்ணு பாக்குறீங்களா? என்ன செய்யுறது நமக்கு அமைந்த வேலை அப்படி .இதோ இந்த நட்சத்திர வாரத்துலயும் வியட்நாமில இருக்க வேண்டிய சூழ்நிலை. அதுக்காக வியட்நாமில் மதுரை வீரன் -னா நான் மதுரை வீரன் இல்லீங்க.வெறும் உலகம் சுற்றும் வாலிபன் தான்.(தருமி தான் சொன்னாரு..ஹி..ஹி)

ஹோ சி மின் சிட்டி-ல நிஜமாவே நான் தங்கியிருக்கிற இடத்துக்கு பக்கத்துல மதுரை வீரன் இருக்காரு .அதாங்க ஒரு மாரியம்மன் கோவில் ,அதுல மதுரை வீரனுக்கு ஒரு பிரகாரம்(சரி தானே?).மெதுவான சத்தத்துல தமிழ் பாட்டு பாடிட்டிருக்கு.

Image hosted by Photobucket.com

இதுல என்னங்க விசேஷம் அப்படீன்னு கேக்குறீங்களா ?.பொதுவா வெளிநாடுகள்ல இருக்கிற இந்தியர்களின் வசதிக்கு தான் கோவில்கள் இருக்கும் .மற்றவர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருவார்கள் .ஆனா இங்க கும்பிட வர்றவங்க கிட்டதட்ட எல்லோருமே வியட்நாமியர்கள் தாம்
.ஆனா இங்க இங்குள்ள வியட்நாம் மக்கள் இந்துக்கள் இல்லைன்னாலும் பய பக்தியா வந்து சாமி கும்பிடுறாங்க .அதுவும் கொத்தா சாம்பிராணி திரிகளை கையில வச்சுகிட்டு சீன கோவில்கள்ல தலைக்கு மேல தூக்கி கும்பிடுவாங்களே அது போல இங்க மாரியம்மனுக்கும் ,மதுரை வீரனுக்கும்
கும்பிடு.

Image hosted by Photobucket.com

உள்ளால ஒரு தமிழர் (பூர்வீகம் மதுரையாம்) சாமி பக்கத்துல நின்னுட்டிருக்காரு .மக்களுக்கு பிரசாதம் குடுக்குறாரு .அவர் கிட்ட பேச்சு குடுத்தா அவருக்கு தமிழ் அவ்வளவா தெரியாதாம் .பிறந்ததிலிருந்தே இங்க தான் இருக்காராம் .வியட்நாம் போருக்கு முன்னால இங்க நிறைய
இந்தியர்கள் இருந்தாங்களாம் .போர் நடக்கும் போது கிட்ட தட்ட எல்லோரும் ஊருக்கு போயிட்டாங்களாம் .விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு தான் இப்போ இந்தியர்கள் இருக்காங்களாம்.

Image hosted by Photobucket.com

வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆச்சுண்ணா டிராபிக் ஜாம் ஆகுற மாதிரி கூட்டம் .எல்லாம் லோக்கல் மக்கள் தான்.பாதி பேருக்கு இது இந்து கோவில்-னே தெரியல்ல .கேட்டா 'கம்போடியா கோவில்'-ன்னு சொல்லுறாங்க.அடப் பாவிகளா!


(கைத்தொலைபேசியில அவசரமா எடுத்ததால போட்டோ தரத்துக்கு பொறுத்துகுங்க மக்களே!)

Friday, December 02, 2005

கனவு காணும் வாழ்க்கை

2 மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் பிரபலமான ஒரு பல்பொருள் வணிக வளாகத்திற்கு சென்று விட்டு ,அதனோடு ஒட்டியிருக்கின்ற உணவகத்தில் நண்பரோடு காபி அருந்திக் கொண்டிருந்தேன் .சுவாரஸ்யமான உரையாடலில் இருந்த போது ,பக்கத்து இருக்கையில் இருந்து ஒருவர் "சார் .S-Pass -ன்னா என்ன சார்?" என்று கேட்டார்.35-40 வயதிருக்கும் .சோர்ந்து போயிருந்த முகம்.சிங்கப்பூரைப் பொறுத்தவரை வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து பணி புரிவோருக்கு 4 விதமான அடையாள அட்டைகள் இருக்கின்றன .

1.Work Permit (கட்டிடத் தொழிலாளர் ,உணவகத்தில் வேலை செய்பவர் போன்ற நாள் கூலி மற்றும் குறைந்த சம்பளம் உள்ளவர்)

2.S-Pass (1000-2500 டாலர் அடிப்படை சம்பளமுள்ள நடுத்தர வேலை செய்வோருக்கு)

3.Emloyement Pass (2500 டாலருக்கு மேல் அடிப்படை சம்பளமுள்ள புரபஷ்னல் வேலை செய்வோருக்கு)

4.Permenant Resident (நீண்ட நாள் வேலை செய்வோர் தங்களை நிரந்தர வாசிகளாக மாற்றிக்கொள்ளலாம்)

இதையே நான் அவரிடம் சொன்னேன் .அவர் சொன்னார் "சார். நான் இஞ்சினீயரிங் படித்துள்ளேன் .சென்னையில் 8 ஆண்டுகள் Production துறையில் அனுபவம் உண்டு .2 மாதங்களுக்கு முன் S-Pass-ல் சிங்கப்பூர் வந்தேன் .இப்போது இந்த வளாகத்தில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்து விட்டு வந்து உட்கார்ந்திருக்கிறேன்" .நான் ஆடிப்போய்விட்டேன் .அவருடைய S-Pass அடையாள அட்டையை என்னிடம் காண்பித்தார் .அதில் அவருடைய வேலை 'Mechine Technician' என்று போட்டிருந்தது .என்ன நடந்தது என கேட்டேன் .தான் அனுபவம் பெற்ற புரொடக்சன் வேலை என்று தன்னை அழைத்து வந்ததாகவும் ,ஆனால் உடனடியாக அந்த வேலை காலியாக இல்லை,எனவே அதுவரை வேறு வேலைகள் கொடுப்பதாகவும் சொல்லி அவரை பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்தார் .இப்படியே நாட்கள் கடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்து விட்டதாம் .வணிக வளாகங்களில் ட்ராலிகளை சேகரிப்பது ,கழிவறை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் செய்ய அவர் நிறுவனம் அனுப்பி வைப்பதாக கூறினார்.

பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது .மிகவும் சோர்ந்து காணப்பட்டார் .ஊருக்கு திரும்பிப் போய்விடலாமா என நினைப்பதாக சொன்னார். இஞ்சினியரிங் வரை படித்த ஒருவர் எப்படி இவ்வளவு ஏமாந்தார் என்று என்னால் நம்ப முடியவில்லை .அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டேன் "சார் .நீங்க இஞ்சினியரிங் படித்ததில் ஒன்றும் பிரச்சனை இல்லையே?"..அவரோ "என்ன சார்..நான் படிக்காதவனா இருந்திருந்தா மகிழ்ச்சியோடு இந்த வேலைகளை செய்திருப்பேன் .இப்படி ஏமாற்றம் இருந்திருக்காது .இப்போது 8 வருடம் ப்ரொடக்சன் வேலை செய்து விட்டு பல கனவுகளோடு வந்து இங்கு இப்படி இருப்பது ரொம்ப வருத்தமாயிருக்கிறது" என்றார்.

"சரி என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று கேட்டேன். "என்னால் முடிந்த வரை இதே வேலைகளை செய்ய வேண்டியது தான் .அதற்குள் எனக்கு சொல்லப்பட்ட வேலை தரல்லிண்ணா வேற வழியில்லை..ஊருக்கு போக வேண்டியது தான்" என்றார் .நான் அவரிடம் "நீங்கள் வருமுன்னர் நன்கு விசாரித்து வந்திருக்க வேண்டும் .சரி அதை விடுங்கள் .இப்போதுள்ள சூழ்நிலையில் நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் .நீங்க சொன்ன மாதிரி அவர்கள் சொல்லப்பட்ட வேலை தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் பல்லைக் கடித்துக் கொண்டு சிறிது காலம் ஓட்டி விடுங்கள் .அல்லது ஊருக்குத் தான் போகப்போகிறேன் என்று முடிவு செய்து விட்டால் ,வெறுமனே சென்று விடாதீர்கள் .அந்த நிறுவனத்தின் இந்த மோசடியைப் பற்றி மனித வள அமைச்சுக்கு ஒரு புகார் எழுதிக் கொடுத்து விட்டு போங்கள் .அரசாங்கம் கண்டிப்பாக அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும் .அட்லீஸ்ட் இனிமேலாவது உங்களைப் போல பலரை அவர்கள் ஏமாற்றாமல் தடுத்த புண்ணியமாவது உங்களுக்கு கிடைக்கும்" என்று சொன்னேன் .அவரும் ஆமோதித்து அப்படியே செய்வதாக சொன்னார்.

இந்த மனிதர் எத்தனை கனவுகளோடு இங்கே வந்திருப்பார் .விமானத்தில் பறந்து வரும் போது என்னவெல்லாம் கற்பனை செய்துகொண்டிருப்பார்? 8 ஆண்டுகள் ப்ரொடக்சன் அனுபவம் பெற்றிருந்தாலும் சிங்கப்பூர் போல அதி தொழில் நுட்பம் நிறைந்த இடத்தில், தனக்கு மேலும் நுட்பமான வேலை கிடைத்தால் எப்படி சமாளிப்பது என்றெல்லாம் நினைத்திருக்க மாட்டாரா? இப்போது அவருக்கு கிடைத்தது கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலை .அது ஒன்றும் தரக்குறைவான ,இழிவான வேலையல்ல .ஆனால் அதை ஏற்றுக்கொண்டு எதிர்பார்த்து வந்திருந்தால் பிரச்சனையில்லை .இப்போது அவர் குடும்பத்தினரிடம் கூட உண்மையை சொல்லியிருப்பாரா தெரியவில்லை.

ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும் ,இன்னொரு பக்கம் அவர் மேல் கோபமாகவும் இருக்கிறது .இவ்வளவு படித்தவர் இப்படி கண்ணை மூடிக்கொண்டு வரலாமா? படிக்காத பாமர மக்கள் இடைத்தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கட்டி எதாவது ஒரு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று எதையும் விசாரிக்காமல் இங்கு வந்து கஷ்டப்படுவது வாடிக்கை தான் .ஆனால் படித்தவர்களும் அப்படியே இருந்தால் என்ன செய்வது ?தான் பணிபுரியப்போகும் நிறுவனத்தைப் பற்றி இங்கு வரு முன்னரே விசாரித்து அறிந்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கிறது .இவ்வளவு படித்த ஒருவருக்கு யார் மூலமாகவோ ,சிங்கையில் பணிபுரியும் ஒருவரிடம் அந்த நிறுவன விபரங்களை கொடுத்து ,அவை உண்மை தானா ,உண்மையிலேயே அவருக்கு குறிப்பிடப்பட்டுள்ள வேலை கொடுக்கும் நிலையிலுள்ள,அது சம்பந்தமான பணிகள் நடக்கும் நிறுவனம் தானா என்று விசாரித்து அறிந்து கொள்ளலாமே?இங்கிருக்கின்ற நண்பர்கள்,அல்லது நண்பர்களின் நண்பர்கள் யாராவது ஒருவர் குறைந்த பட்சம் இந்த உதவி கூடவா செய்யாமல் போய் விடுவார்கள்?

இங்கே ஒரு இந்திய தூ--தரகம் இருக்கிறது என்று தான் பெயர்.அவர்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளத் தோழர்களின் பிரச்சனைகளில் எந்த அக்கரையும் காட்டியதாக தெரியவில்லை .Work Permit-ல் இங்கு வரும் இந்திய தொழிலாளர்களை விட அதே வேலை செய்யும் மற்ற நாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகம் .பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தூதரகங்கள் கூட தம் நாட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளில் அக்கரையோடு நடந்து கொள்வதாக கேள்விப்பட்டேன் .ஆனால் நம் நாட்டு தூதரகத்துக்கு ஒரே வேலை, பிறப்பு சான்றிதழ் 40 டாலர் ,திருமண சான்றிதழ் 40 டாலர் இப்படி வித விதமாக சான்றிதழ்களுக்கு பணம் வசூலிக்கும் ஒரே பணி .இது தூதரகமா இல்லை போஸ்ட் ஆபீசா தெரியவில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு உதவி கேட்டு என்னை அணுகினார் .உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் அடிப்படை ஆங்கிலம் ,எளிய உரையாடல்கள் ,பணியிடத்தில் அணுகு முறைகள்,சிங்கை நடைமுறைகள் போன்ற பயன் மிக்கவை பற்றி அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த இருப்பதாக ,அதற்கான பாடத்தை தமிழ்ப் படுத்தித்தர வேண்டும் என்று கேட்டார்.நானும் செய்து கொடுத்தேன் .இதில் ஈடுபட்டிருக்கிறவர்கள் அத்தனை பேரும் சீனர்கள் .நமது தொழிலாளர்கள் மீது இந்த சீனர்களுக்கு உள்ள அக்கரையாவது இங்குள்ள தூதரகத்துக்கு இருக்கிறதா ?சுதந்திர தினத்தன்று கொடியேற்றி இனிப்பு வழங்கி விட்டால் ஒரு வருட தேச சேவை முடிந்து விட்டது போலும்.

சரி.நாம் தொடங்கிய விடயத்துக்கு வருவோம்.பொதுவாகவே நம் மக்களுக்கு ஒரு மனநிலை இருக்கிறது .நேரடியாக நிறுவனங்களை அணுகியோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலமோ அல்லாமல் ,ஒரு தனி இடைத்தரகர் மூலம் இப்படி வேலைக்கு வருபவர்கள் சிங்கப்பூர் வந்து விட்டால் போதும் என்ற ஒரே கண்ணோட்டத்தோடு வேறு சிக்கல்களைப் பற்றி எண்ணுவது கூட கிடையாது .அப்படி எண்ணினால் இங்கு வருவது தடைபட்டு விடுமோ என்ற பயம் .தனக்கு தெரிந்தவர்களிடம் கூட விவரங்கள் சொல்வதில்லை .யாராவது எதையாவது சொல்லி தாங்கள் போவதை தடுத்து மனம் மாற வைத்து விடுவார்களோ என்ற அச்சம் ,கண்னை மூடிக்கொண்டு இங்கு வந்து சேருகிறார்கள்.இதை படிக்காத பாமரர்கள் விபரமின்றி செய்கிறார்கள் என்பதை பொறுத்துக்கொள்ளலாம் .ஆனால் ஓரளவு படித்தவர்களே இப்படி நடந்து கொண்டால் எங்கே போய் முட்டிக்கொள்வது?

இனிமேலாவது ,குறைந்த பட்சம் படித்தவர்கள் சிங்கை போன்ற நாடுகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு வரு முன் ,இங்கிருக்கும் யார் மூலமாவது கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்கள் ஓரளவு உண்மை தானா என்று சற்று விசாரித்து விட்டு வரவும் .உதவி செய்ய என்னைப் போன்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

Thursday, December 01, 2005

கம்போடியா-மண்டை ஓடுகளின் நடுவில்

1999 இறுதியில் நான் சிங்கையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் வேலைநிமித்தமாக கம்போடியா செல்ல வேண்டியிருந்தது .அப்போது அந்த நாட்டைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.ஹிட்லரை விட பன்மடங்கு கொடூரமான போல்பாட் தன் சொந்த நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பகுதியை கொன்று குவித்து 25 ஆண்டுகள் கூட ஆகவில்லை .அந்த போல்பாட் இறந்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது.

உங்களில் பல பேர் அந்த வரலாறை அறிந்திருப்பீர்கள் என்றாலும் இங்கு சுருக்கமாக குறிப்பிடுகிறேன் .இயற்கை வளத்திற்கும்,கலாச்சார பெருமைக்கும் குறைவில்லாத நாடு கம்போடியா.ஒரு காலத்தில் கம்போடியாவில் இருந்த கமேர் பேரரசுவின் கீழ் இன்றைய தாய்லாந்தின் பெரும் பகுதி,தெற்கு வியட்நாம்,லாவோஸ் போன்ற பகுதிகள் அடங்கியிருந்தன.பிற்காலத்தில் அந்த பேரரசு நலிவடைந்து 1863-ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது.பின்னர் 1953-ல் சுதந்திரம் பெற்றது.வியட்நாம் போரின் போது 1965-ம் ஆண்டு அமெரிக்க படைகள் இங்கு குவிக்கப்பட்டு வியட்நாம் போருக்கான தளமாக ஆக்கப்பட்டது.வியட்நாம் ஆதரவு கம்போடிய கம்யூனிஸ்டுகள் அமெரிக்க படைகளை எதிர்த்து சண்டை செய்ய,அமைதி கீழறுக்கப்பட்டது.1975-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் சார்பு கெமர் ரூஜ் (Khmer Rouge) என்ற அமைப்பு திடீரென்று தலைநகர் புனாம் பென் -ஐ கைப்பற்ற புதிய ஆட்சி மலர்ந்தது.

Image hosted by Photobucket.com

இந்த கெமர் ரூஜ் (Khmer Rouge) -ன் தலைவர் தான் போல்பாட் .கம்போடியாவின் கிராம புறத்தில் பிறந்த இவன் சிறிது காலம் பிரான்ஸில் சென்று பயின்ற போது கம்யூனிஸ்டு சிந்தனை வளர்ந்து ,படிப்பை முடிக்காமலேயே நாடு திரும்பினான்.சீனாவில் நடந்த கம்யூனிஸ்ட் மாற்றத்தைப் போல கம்போடியாவிலும் நிகழ்த்த வேண்டும் என்பது அவனது நோக்கம்.நாடு திரும்பிய போல்பாட் கிராமப் புற படிக்காத இளைஞர்களையும்,இளம் பெண்களையும் ஒன்று சேர்த்து ஆயுதப்பயிற்சி கொடுத்து ஒரு கொரில்லா இயக்கமாக மாற்றினான்.
கிராமத்தில் கஷ்டப்பட்டு உழைத்தும் வறுமையில் வாடும் போது நகரங்களில் படித்தவர்கள் ,வியாபாரிகள் சுகபோகமாக வாழ்வது இவர்கள் கண்ணை உறுத்தியது .உடல் உளைப்பின்றி வாழும் அனைவரும் எதிரிகளாக கொள்ளப்பட்டனர் .1975 ஆண்டு கெமர் ரூஜ் (Khmer Rouge) அமைப்பு புனாம் பென் -ஐ கைப்பற்றிய போது ,அமெரிக்க படைகளால் அமைதியிழந்திருந்த மக்கள் ,இவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள் .கிராமத்தான்கள் சேர்ந்து தம்மை மீட்டு விட்டதாக தெருக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள் .ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நகரத்து மக்கள் ஒட்டு மொத்தமாக நகரத்தை காலி செய்து கொண்டு உடனே கிராமப்பகுதிகளுக்கு விவசாயம் செய்ய புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது .மறுத்தவர்கள் கொல்லப்படனர் .

மருத்துவர்கள் ,பொறியாளர்கள் ,ஆசிரியர்கள் இப்படி அத்தனை பேரும் விவசாய நிலங்களில் துப்பாக்கி முனைகளில் வேலை செய்ய பணிக்கப்பட்டனர் .மறுத்தவர்கள் ,வேலை செய்ய திராணியற்றவர்கள் கொல்லபட்டனர் .நகரங்கள் இழுத்து மூடப்பட்டன. நாணயம் நிறுத்தப்பட்டது .மருத்துவ மனைகள் பூட்டபட்டன .கல்விக்கூடங்கள் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டன.கம்போடியா உலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.

பல இடங்களில் மக்களை ஒன்றாக கூட்டி அவர்களில் மருத்துவர் யார்,பொறியாளர் யார் ,ஆசிரியர் யார் என்று கேட்டு அவர்களுக்கு முக்கியமான வேலைகள் இருப்பதாக அழைத்துச் செல்வார்கள் .பின்னர் அவர்கள் திரும்பியதே இல்லை .புனாம் பென் -னுக்கு புறநகர் பகுதியில் கொலைக்களம் ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் உயிரோடு புதைகுழிகளில் கொல்லப்பட்டனர் .தோண்டத்தோண்ட பிணங்களில் மண்டை ஓடுகள் இருக்கும் அந்த பகுதி Killing Field என்று அழைக்கப்படுகிறது .இப்போது சில மண்டை ஓடுகளை எடுத்து பல மாடி கோபுரத்தில் காட்சிப்பொருளாக வைத்துள்ளனர்.

Image hosted by Photobucket.com

இப்படியாக 4 வருடங்கள் நீடித்த இந்த அராஜகத்தில் 10 லட்சத்திற்கு மேல் கொல்லப்பட்டனர் .அவர்கள் பெரும் பாலும் படித்த ஆண்கள் .1979 -வியட்நாம் படைகள் கம்போடியாவில் நுழைந்து கெமர் ரூஜ் (Khmer Rouge) -ஐ வென்றது கமெர் ரோக்(Khmer Rouge) தாய்லாந்து அருகிலுள்ள அடர்ந்த காடுகளில் தஞ்சம் புகுந்தது .ஒரு காலத்தில் நாட்டின் பிரதமராக இருந்து இத்தனை படுகொலைகளையும் செய்த போல்பாட் கடைசி வரை எந்த தண்டனையும் இன்றி ,1998-ல் காட்டிலேயே மரணமடந்தான் .அவனுடைய இறுதி காரியத்தை செய்தது அவன் மனைவி மட்டும் தான்.

Image hosted by Photobucket.com

சுத்தமாக கல்வி ,வர்த்தகம்,உள்நாட்டு கட்டமைப்பு என்பவை முற்றாக துடைத்தெறியப்பட்ட ,ஆண்களில் பெரும்பகுதி கொல்லப்பட்ட ஒரு நாட்டின் நிலையை நினைத்துப்பாருங்கள் .இன்று கிட்டத்தட்ட அனைத்து குடுப்பங்களிலும் ஆண்களை இழந்து ஒரு தலைமுறை தான் ஆகியிருக்கிறது .பெண்களில் 30% -க்கு மேல் எய்ட்ஸ் நோய் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.30 ஆண்டு கால வடுக்கள் இன்னும் மறையவில்லை.மக்களின் முகங்களில் இனம்தெரியாத ஒரு சோகம்,விரக்தி கண்டுகொள்ளமுடிகிறது. உள்நாட்டு சண்டைகளும் ,ஆட்சி அதிகார மோதல்களும் ,ஊழலும் இன்னும் நீடிக்கின்ற இந்த நாடு ,மண்டை ஓடுகளில் நடுவிலிருந்து எழுந்து வருவதற்கு மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது .நகரங்கள் ஓரளவு வளர்ந்து விட்ட போதிலும் ,கிராமங்களில் வறுமை தாண்டவமாடுகிறது .என் கண் முன்னரே துப்பாக்கிச் சண்டையை பார்த்திருக்கிறேன் .இந்தியாவோடு நீண்ட கலாச்சார தொடர்புடைய நாடு கம்போடியா.ஒரு காலத்தில் இந்துக் கலாச்சாரம் இங்கு தழைத்தோங்கியிருக்கிறது .12-ம் நூற்றாண்டில் கட்டபட்ட அங்கோர் வாட் என்னும் உலகின் மிகப்பெரிய ,பழமையான கோவில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது .இது இரண்டாம் சூரியவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது .அடந்த காடுகளுக்கு நடுவில் சுமார் 40 க்.மீ சுற்றளவில் ஆங்காங்கே இப்படி பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. பொதுவாக அங்கோர் என அழைக்கப்படுகிற இந்த பகுதியில் அங்கோர் வாட் என்பது முதன்மையான கோவில் .கம்போடிய தேசியக்கொடியில் இதன் உருவம் இடம் பெற்றுள்ளது .இது தவிர சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரம்மாண்டமான கோவிலும் ,மன்னர்களுக்காக கட்டப்ட்ட பல கோவில்களும் ,இப்படி சுமார் 30 கோவில்கள் உள்ளன .

Image hosted by Photobucket.com

இவை அனைத்தையும் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அங்கோர் வாட் -டின் இன்றைய நிலை சற்று புத்த கோவிலாக மாற்றம் கண்டிருந்தாலும் ,அது விஷ்ணு-வுக்காக கட்டபட்ட கோவில் தான் .பிற்காலத்தில் மன்னர் பரம்பரை புத்த மதத்தை தழுவியதாலும் ,தாய்லாந்தின் கட்டுப்பாட்டில் இப்பகுதி சிறிது காலம் இருந்ததாலும் ,இதனை ஒரு புத்த ஆலயமாக மாற்றும் முயற்சிகள் நடந்திருப்பது கண்கூடாக தெரிகிறது .இந்து கடவுளர்களின் சிலைகளில் தலை மட்டும் அகற்றப்பட்டு புத்த தலைகள் வைக்கப்பட்டுள்ளன.ஆனால் கோவிலின் நீண்ட சுவர்களில் சிற்ப ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ள இராமாயணக்கதைகள் ,பார்க்கடலை கடைந்த கதைகள் அப்படியே இருக்கின்றன.

இது தவிர பெரிய சிவன் ஆலயம் ஒன்று இருக்கிறது .நான் அங்கு சென்ற போது அங்கிருந்தவர் எனக்கு அதை விளக்க முற்பட்டார் .சிவன் ,பார்வதி என்று ஒவ்வொன்றாக காட்ட ,நான் 'திருநெல்வேலிக்கே அல்வாவா?' -என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க ,அவருக்கு புரிந்து "ஓ! நீங்கள் இந்தியர் .உங்களுக்கு தெரியாததா?" -என்று சிரித்தார் .மகிழ்ச்சியாக இருந்தது .நான் ஒரு இந்து அல்ல என்ற போதும் இவற்றை என் நாட்டு கலாச்சார பரவலின் அடையாளங்களாகத் தான் பார்த்தேன் .பெருமையாக இருந்தது.

இன்றும் இராமயணம் தான் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படும் இதிகாசம் .பிள்ளையார் இங்கு மிகவும் பிரபலம் .இப்போது முழுக்க முழுக்க புத்த நாடாக இருந்தாலும் இந்து கலாச்சாரம் ,பழக்க வழக்கங்கள் கிராமப்பகுதிகளில் தொடர்கின்றன.கல்யாணத்திற்கு வாழை மரம் கட்டி பந்தல் அமைப்பது முதல் பெயர்களில் கூட இந்திய வாடை இருக்கிறது .இவர்களின் தேசிய மொழியாம கெமர் மொழி எழுத்து வடிவம் இந்திய மொழிகலின் சாயலில் இருக்கிறது,பல வார்த்தைகளும் வடமொழிச்சொற்களாக இருக்கின்றன.இங்குள்ள ஒரு நகரத்தின் பெயர் ரத்னகிரி .ரத்தினக்கற்கள் கிடைக்கும் மலைப்பகுதி என்பதை சொல்லத்தேவையில்லை.

மக்கள் நட்பு பாராட்டுபவர்களாகவே இருக்கிறார்கள் .அதிலும் இந்தியராக இருந்தால் கூடுதல் புன்னகை .சாதாரண மக்களும் இந்தியாவோடு உள்ள பண்டைய கலாச்சார தொடர்பை அறிந்திருக்கிறார்கள் .சில நேரம் அலுவலக வேலையாக நான் நடந்து செல்லும் போது ,பலரும் சினேகமாக சிரிப்பார்கள் .நகரப்பகுதிகள் இப்போது சீன தாக்கத்தினால் கிராமங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது .நகரங்களில் மஞ்சள் நிற மேனியும் ,சாப் ஸ்டிக்கில் சாப்பிடிவதுமாகத் தான் பலர் இருக்கிறார்கள் .ஒரு முறை நான் கிராமப்பகுதிகளுக்கு சென்ற போது ,தவறி இந்தியாவுக்கு வந்து விட்டோமோ என்று நினைத்தேன் .ஆற்றுக்கரைகளில் பெண்கள் மார்போடு கச்சை கட்டிக்கொண்டு குளித்துக்கொண்டிருக்க ,ஆண்கள் மீசை வைத்து,லுங்கி அணிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.தட்டில் சோறு போட்டு நம்மைப்போல கையாலேயே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் .மேனி நிறம் கூட ஓரளவு கறுத்திருந்தது .ஆகா ..நகரத்தில் நம்மைப்பார்த்து பலரும் சிரித்ததற்கு இதுவும் காரணமாக இருக்குமோ..பாதி பேர் நான் இந்தியன் என்பதற்காக சிரிக்க ,மீதி பேர் "இத பார்டா .நம்மூர் கிராமத்தான் கையில கம்ப்யூட்டரோட டிப் டாப்-ஆ போறத" -அப்படீன்னு சொல்லி சிரிச்சிருப்பாங்களோ?

Wednesday, November 30, 2005

ஷெப்பர்ட் புரோக்ராம்

"இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது" என்று மகாத்மா காந்தி சொன்னார்.நம் நாடு இப்போது பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி பெற்று வருகிறது .முன்பெல்லாம் பல்வேறு நாட்டினர் இந்தியாவென்றால் எதோ பாம்பாட்டிகளும்,பஞ்சப்பரதேசிகளும் நிறைந்த நாடு என்று நினைத்திருந்த நிலை மாறியது மட்டுமல்ல,இப்போது இந்தியாவில் எல்லோரும் பிறக்கும் போதே கையில் மடிக்கணிணியோடு தான் பிறக்கிறார்கள் போல என்ற ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் .பெருமையாகத்தான் இருக்கிறது .ஆனால் உள்ளுக்கும் நமது வளர்ச்சி சீராக பரவலாக்கப்பட்ட வளர்ச்சியாக இருக்கிறதா என்றால் ,இல்லை.

ஒரு பக்கம் தொழில் நுட்ப அறிவில் கொடிகட்டுகிறோம்,இன்னொரு பக்கம் மிகப்பெரிய சதவீத மக்கள் எழுத்தறிவு கூட பெறவில்லை .ஒரு பக்கம் அணுக்குண்டு வெடித்து பெருமையை பறைசாற்றுகிறோம் ,அதே நேரத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத கிராமப்புறங்கள் ஏராளம்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .இப்படி பரவலாக்கப்படாத வளர்ச்சியின் மூலம்,மக்களில் பொருளாதார நிலை இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே சென்றால் ,வல்லரசு என்கிற நம் கனவு வெறும் கனவாகவே இருக்கும்.

சரி.அரசியல்வாதிகளும் ,நமது சமுதாய சிக்கல்களும் இத்தகைய சீரான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று மட்டும் சொல்லி தப்பித்து விட முடியாது .வளர்ந்து வரும் இளைய தலைமுறை குறைந்த பட்சம் நாட்டின் சீரற்ற வளர்ச்சியின் நிலையைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.நகரத்திலே பிறந்து வளரும் இன்றைய இளைஞர்கள் பலருக்கு கிராமங்களின் உண்மையான நிலை தெரிவதில்லை .அல்லது சினிமாவில் வருவது போல எல்லா கிராமங்களிலும் மலைகளும் ,ஆறும் ,பச்சை பசேல் புல் வெளிகளும் இருப்பதாக அவர்கள் நினைக்கலாம் .நகரங்களைத்தாண்டி சிறிய கிராமங்களில் மக்களின் நிலை ,அவர்களின் பிரச்சனைகள் ,அது குறித்த குறைந்த பட்ச அனுதாபம் இருப்பதாக தெரியவில்லை.

நகரங்களில் மேல்த்தட்டு வர்க்கம் பெரும்பாலும் ,எல்லாவற்றுக்கும் அரசியல் வாதிகளை குறைகூறிக்கொண்டு,எதிலும் தன் காரியம் மட்டும் நடந்து விட்டால் போதும் என்ற மனநிலை நிலையோடு இருக்கிறார்கள் ,அறிவு ஜீவி எழுத்தாளர்கள் காபி தூள் வாங்க முடியாத அளவுக்கு குடும்பம் தள்ளப்பட்டது தான் நாட்டின் உச்ச கட்ட வறுமை என்ற ரீதியில் கண்ணீர் கதை எழுதி பாராட்டும் வாங்கி விடுவார்கள்.

படித்த இளைஞர்களிடையே ராமன் ஆண்டாலென்ன ,ராவணன் ஆண்டாலென்ன என்ற மனநிலை இப்போது பெருகி வருகிறது.நகரத்தில் படித்து அங்கேயே வளருகின்ற இளைஞன் இந்தியாவில் கிராமங்களின் நிலை எப்படி இருக்கிறது என்று அனுபவ பூர்வமாக அறிந்து கொள்ளும் நிலை இங்கே இல்லை .மாறாக ,வறியவர்கள் வாழ்க்கைப் போராட்டம் பலருக்கு கேலிப்பொருளாகவே இருக்கிறது .பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க வேண்டிய கல்விக்கூடங்கள் இதற்காக பெரிதாக எதையும் செய்வதில்லை.மக்கள் வரிப்பணத்தில் படிக்கும் பலர் அதில் பெரும்பான்மையாக உள்ள மக்களின் நிலை பற்றி குறைந்த பட்ச அறிவைக்கூட பெறுவதில்லை.

இத்தகைய நிலையை உணர்ந்து ,மாணவர்கள் குறைந்த பட்ச சமுதாய அறிவை,பரிவை அனுபவபூர்வமாக பெற வேண்டும் என்று விரும்பி அதற்கான திட்டங்களை வகுக்கும் கல்வி நிறுவனங்கள் இல்லையென்று சொல்ல முடியாது .அதற்கு நான் பயின்ற திருச்சி புனித வளனார் கல்லூரி (st.Joseph's College) ஒரு உதாரணம் .

எங்கள் கல்லூரியில் ஷெப்பர்ட் புரோக்ராம்(Shepherd Programme) என்ற கட்டாய பாடத்திட்டம் இருக்கிறது .இதன் படி இளநிலை பட்டப்படிப்பில் ,ஒவ்வொரு வகுப்புக்கும் திருச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய ஒரு கிராமம் ஒதுக்கப்படும் .மாணவர்கள் தங்கள் மூன்றாண்டு காலத்தில் இந்த கிராமத்துக்கு நேரடியாக சென்று அந்த மக்களோடு தங்க வேண்டும் ,அவர்களுக்கு பணி செய்ய வேண்டும் .வகுப்பு மாணவர்கள் தங்களுக்குள் விவசாயம் ,மின்சாரம்,கல்வி இப்படி பல குழுக்களாக பிரித்துக் கொண்டு அது குறித்து அந்த கிராமத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்கு அந்த மக்களை ஊக்குவித்து ,இணந்து பணியாற்றி ,அதிகாரிகளை அணுகும் முறைகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து ,அவர்களோடு இணைந்து அந்த பிரச்சனைகளை ஓரளவாவது தீர்க்க பாடுபடவேண்டும்.கல்லூரியில் இதற்கென்று ஒரு துறையே இருக்கிறது .ஒவ்வொரு மாணவரும் குறைந்த பட்சம் 100 மணி நேரமாவது இது தொடர்பான பணிகளில் ஈடு பட்டிருக்க வேண்டும் .இல்லையென்றால் அவர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற முடியாது .

குறிப்பிட்ட நாட்களில் அனைத்து மாணவர்களும் கிராமத்துக்கு சென்று முகாமிட வேண்டும் .அதற்குண்டான செலவுகள் கல்லூரி ஏற்றுக்கொள்ளும் .(இது பல முறை நடக்கும்) .அந்த மக்களோடு பழகி அவர்கள் உணர்வுகளை அறிந்து ,அவர்கள் குறைகளை கேட்டறிந்து ,அதற்கு நம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் .

எங்கள் வகுப்புக்கு இது போல் ஒரு கிராமம் தரப்பட்டது .முதல் முகாமுக்கு சென்ற போது மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்தது .திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலுள்ள சின்னபனையூர் என்ற ஒரு கிராமம் .அது வரைக்கும் தான் பேருந்து செல்லும் .எங்களுக்கு கொடுக்கப்பட்ட கிராமமோ அங்கிருந்து முள் புதர்கள் வழியாக 3 கி.மீ நடக்க வேண்டும்.மாணவர்கள் மிகவும் ஜாலியாக நடந்து சென்று ஊரை அடைந்தோம் .ஒரு சிறிய கோவில் தென்பட்டது .அதை நாங்கள் நெருங்கிய சில நிமிடங்களில் கிட்டத்தட்ட 100 பேர் எங்களை சூழ்ந்து கொண்டார்கள் .நகர நாகரீக உடைகளோடு சென்ற எங்களை அவர்கள் ஏதோ அதிகாரிகள் என்று நினைத்தார்கள் போலும் .எடுத்த உடனேயே "ஐயா! பெரிய மனசு பண்ணி எங்களுக்கு லோன் வாங்கிக் கொடுங்கய்யா" என்று ஆளாளுக்கு கேட்க ஆரம்பித்து விட்டார்கள் .அவர்களை அமைதிப்படுத்தி ,நாங்கள் மாணவர்கள் என்றும் ,நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்றும் சொன்னோம் .4 நாட்கள் அவர்கள் ஊரிலேயே தங்கப்போகிறோம் என்றும் சொன்னோம் .மிகுந்த மகிழ்ச்சியடைந்த அவர்கள் ,எங்களை அருகில் உள்ள ஆரம்ப பாடசாலையில் தங்க ஏற்பாடு செய்தார்கள் .

ஊரை ஒரு நோட்டம் விட்டேன் .சுமார் 200 வீடுகள் இருந்தன .ஒன்றை தவிர அத்தனையும் ஓலைக்குடிசைகள் .ஒரு சிறிய கோவில் ,அருகில் நாங்கள் தங்கியிருந்த ஆரம்ப பாடசாலை .அதில் ஒரே ஒரு ஆசிரியர் .அவர் தான் தலைமையாசிரியர் .எல்லாமே அவர் தான் .அவர் விடுப்பு எடுத்தால் பள்ளிக்கு விடுமுறை தான் .1 முதல் 5 வரை எப்படி ஒருவர் பாடமெடுக்க முடியும் என்கிறீர்களா? 1 மற்றும் 2 -க்கு ஒன்றாக வகுப்பு ,அந்த நேரத்தில் 3,4,5 மாணவர்கள் வெளியே விளையாடுவார்கள்.அடுத்த ஒரு மணிக்கு 3,4,5-கு ஒன்றாக வகுப்பு ,மற்றவர்கள் விளையாட்டு ..நகரத்தில் ரொம்பவும் தான் அலுத்துக்கொள்ளும் மாணவர்களே! நினைத்துப்பாருங்கள்.இந்த ஊரில் அப்போது ஒரே ஒருவர் தான் 10-வது வகுப்பு தாண்டியிருந்தார்.மக்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் கூலி வேலை செய்கிறார்கள் .பெண்கள் சுள்ளி பொறுக்குகிறார்கள்.

காலையில் எழுந்து ஆண்கள் கூலி வேலைக்கு செல்ல ,பெண்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டோ அல்லது தங்களோடு சேர்த்துக்கொண்டோ சுள்ளி பொறுக்க செல்கிறார்கள் .இருட்டியதும் வீடு திருபுகிறார்கள் .கஞ்சி மீதி இருந்தால் சாப்பிட்டு படுக்கிறார்கள் .இது தான் அவர்கள் வாழ்க்கை..30 கி.மீ தூரத்திலிருக்கும் திருச்சிக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை .வெளியுலகம் பலருக்கு ,அதிலும் பெண்களுக்கு சுத்தமாக தெரியவில்லை .உலகமே இப்படித்தான் இருக்கும் போல என்று அவர்கள் நினைத்துக் கொள்வதால் தான் ரொம்பவும் அவர்கள் அலட்டிக்கொள்வதில்லையோ ?

முதல் நாள் மாண்வர்கள் நாங்களே சமைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்ய ,ஒரு பிரகஸ்பதி உப்புமா செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து ,பசியோடு சென்று பார்த்தால் அது களி-யாக இருந்தது .வேறு வழியின்றி நாங்கள் சாப்பிட்டிக்கொண்டிருக்க ,சில கிராமத்து பெரியவர்கள் பரிவோடு வந்து விசாரித்தார்கள் .இனிமேல் தாங்களே உணவு தருவதாக சொல்ல ,நாங்கள் அனைத்துப் பொருட்களும் வாங்கித் தருகிறோம் .உங்களுள் யாராவது சமைத்துத் தந்தால் போதும் என்று சொல்ல ..அடுத்த நாளில் இருந்து சுவையான உணவு ,அந்த மக்களின் அன்போடு சேர்ந்து கிடைத்தது.

அந்த மக்களோடு நாங்கள் அளவளாவியது..ஓவ்வொரு குடிசையாக சென்று பேசியது ,விளையாட்டுப் போட்டி நடத்தியது,கலைநிகழ்ச்சிகள் நடத்தியது ,அரசியல் பேசியது ,ஊரை சுத்தம் செய்தது ,அதிகாரிகளை அணுகும் முறைகளை சொல்லிக்கொடுத்தது,வேறு பல பயனுள்ள பணிகளை ஆற்றியது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த மக்கள் அந்த வறுமையிலும் இயலாமையிலும் எங்களிடம் காட்டிய அன்பும் அக்கரையும் மறக்க முடியாதது.

எங்கள் கல்லூரி தொடந்து நடத்தி வரும் இந்த (கட்டாய) திட்டம் குறிப்பிட்ட அந்த கிராமங்களுக்கு எந்த அளவுக்கு பயனளித்தது என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை .ஆனால் என் போன்ற மாணவர்கள் ,என்னை விட நகர சூழலில் இருந்து வரும் மாணவர்களுக்கு இது ஒரு மனத்திறவு கோல் என்பதில் ஐயமில்லை.இந்த எளியவர் வாழ்க்கை மலராதோ,மாறாதோ என்று ஒவ்வொரு மாணவனும் ஏங்கியிருப்பான் என்பது திண்ணம் .அந்த எண்ணம் வந்து விட்டால் ,அந்தப் புள்ளியிலிருந்து தான் நம் 'வல்லரசு' கனவு நனவாக ஆரம்பிக்க முடியும்.

அதனால் தான் எங்கள் கல்லூரியிலிருந்து ஒரு 'அப்துல் கலாம்' உருவாக முடிந்ததோ?


மேலும் தகவல்களுக்கு சுட்டி இங்கே

Tuesday, November 29, 2005

பங்காளிகள்


ஒரு ஊரில் ரெண்டு பங்காளிங்க இருக்காங்க.ரெண்டு பேருக்கும் பொதுவான சொத்தை சம்பந்தம் இல்லாத இன்னொருத்தன் அபகரிச்சு
வச்சுக்கிறான்.வெகுகாலமா இவங்க ரெண்டுபேரும் ஒத்துமையா அந்த ஜென்ம விரோதிய எதிர்த்து போராடுறாங்க .நீண்ட போராட்டதுக்கப்புறம் ,அடி பட்டு ,ரத்தம் சிந்தி அந்த சொத்தை மீட்குறாங்க .சொத்து அவங்க கைக்கு வந்தவுடனே பங்காளிங்க ரெண்டுபேருக்கும் இருந்த ஒத்துமை காணாமப் போச்சு .ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா சரிப்பட்டு வராதுண்ணு ,சொத்த பிரிச்சுக்கிறாங்க .அதுக்கப்புறம் பாத்தீங்கண்ணா ஊருலயே இவங்க ரெண்டு பேரும் தான் ஜென்ம விரோதி .பாத்தா முறச்சுகிறாங்க .அடிச்சுகிறாங்க .அவங்க பிள்ளைகளையும் விரோத விஷம் ஏத்தி வளக்குறாங்க.இப்போ பழைய எதிரி இருந்தானே அவன் கூட ரெண்டு பேருக்கும் நல்ல தோஸ்து தான் .அவன் கூட்டம் இவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைய மூட்டி விட்டு ,உள்ளுக்குள்ள 'பைத்தியக்கார பசங்க'-ன்னு சிரிக்கிறாங்க .


இது தமிழ் சினிமாக்கதையாவும் இருக்கலாம் .ஆனா நான் சொல்லுறது இந்தியா - பாகிஸ்தான் உண்மைக் கதைங்க. ஒரு சராசரி இந்தியனும்,பாகிஸ்தானியும் தேசபக்தி என்பது தன் சொந்த நாட்டில் பொறுப்புடன் நடந்து கொள்வது ,நாட்டின் முன்னேற்றத்துக்கும் உலக அரங்கில் அதன் பெருமைக்கும் பாடுபடுது போன்றவற்றை விடவும், எந்த அளவுக்கு இந்த எதிரி நாட்டை வெறுக்கிறான்,உணர்ச்சி வசப்படுகிறான் என்பதில் தான் இருக்கிறது என்ற எண்ண ஓட்டத்தில் தான் வளர்க்கப்படுகிறான். நானும் ஒரு சராசரி இந்தியன் என்றாலும் பாகிஸ்தானியர் மீது எப்போதும் வெறுப்பை வளர்த்துக்கொள்ளவில்லையெனினும் ,ஒரு அன்னியத்தன்மை ,அவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற நிச்சயமற்ற மனநிலை இருந்தது உண்மை.அப்படிப்பட்ட பிரமை தோற்றுவிக்கப்பட்டது.


முதன்முதலில் நான் ஒரு பாகிஸ்தானியரை சந்தித்தது கம்போடியாவில் .வேலைநிமித்தம் சில காலம் அங்கு தங்கியிருந்த போது இந்திய உணவகம் தேடியபோது கண்ணில் பட்டது 'ராயல் இந்தியா' என்ற உணவகம் .அங்கு சென்று உட்கார்ந்திருந்த போது அந்த
உணவகத்தை நடத்துபவர் என்னிடம் வந்து பேசினார் .நான் அவரிடம் "நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியைச் சேர்ந்தவர்?" என்று கேட்டேன் ."நான் ஒரு பாகிஸ்தானி" என்று சொன்னார் ."நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா?' என்று கேட்டார் .அந்த நேரத்தில் நான்
என்ன நினைத்தேனோ "இல்லை.நான் இலங்கையிலிருந்து வருகிறேன்" என்று பொய் சொல்லி விட்டேன்.எது அப்படி என்னை சொல்ல வைத்தது என்று எனக்கே தெரியவில்லை .அவர் என்னை மிக நன்றாக கவனித்தார் .(நான் இந்தியன் என்று சொல்லியிருந்தால்
இதைவிட பல மடங்கு என்னை கவனித்திருப்பார் என்பதை பின்னர் தான் உணர்ந்தேன். நான் அவ்வாறு நடந்து கொண்டது எனக்கு வெட்கத்தைக் கொடுத்தது).


அதன் பின்னர் அங்குள்ள ஒரு இலங்கைத்தமிழர் நடத்தும் உணவகத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம் .அங்கே இன்னொரு பாகிஸ்தானியரோடு நட்பு கிடைத்தது .நான் இந்தியர் என்பதை அறிந்து அவர் மிகவும் மரியாதையோடு பழகினார் .பல பொதுவான விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

இன்னொரு முறை ஹாங்காங் சென்றிருந்தேன் .4 நாட்கள் இந்திய உணவு சாப்பிடாமல் பின்னர் இந்திய உணவகம் தேட ஆரம்பித்தேன் .ஓட்டல் அறையில் இருந்த செய்தித்தாளில் ஒரு பாகிஸ்தானிய உணவக விளம்பரம் கண்ணில் பட்டது.உடனே அதிலுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் .உணவக உரிமையாளரே பேசினார் .நானிருக்கும் இடத்தை சொல்லி ,இங்கிருந்து எப்படி உணவகம் இருக்கும் இடத்திற்கு வருவது என்று கேட்டேன் ."நீங்கள் எந்த நாட்டினர்?" என்று கேட்டார்.நான்
இந்தியன் என்று சொன்னேன் .மகிழ்ச்சி தெரிவித்த அவர் அங்கிருந்து சுரங்க ரயில் மூலம் ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் இறங்கி 5 நிமிடம் நடக்க வேண்டும் .நீங்கள் எப்போது வருவீர்கள் என்று சொன்னால் நிலையத்தில் இருந்து உங்களை அழைத்து வர நான் ஒருவரை அனுப்புகிறேன் என்று சொன்னார் .நான் "சிரமம் வேண்டாம் .நான் அந்த நிலையத்துக்கு வந்து விசாரித்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.


நிலையத்தின் சுரங்கத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கே சில பாகிஸ்தான் இளைஞர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் (அந்த பகுதி பாகிஸ்தானியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியாம்) .அவர்களிடம் சென்று நான் ஒரு இந்தியன் என அறிமுகப்படுத்தி விட்டு
,உணவகத்தின் முகவரியை சொல்லி வழி கேட்டேன் .அவர்களுக்குள் ஏதோ பேசிவிட்டு ,ஒருவரை என் கூடவே அனுப்பி விட்டார்கள் .அவர் என்னை அழைத்து சென்று உணவக வாசலில் விட்டு விட்டு விடை பெற்றார்.நன்றி சொல்லி உள்ளே நுழைந்தேன்.தொலைபேசியில் உரையாடிய பாகிஸ்தானியர் என்னை மகிழ்ச்சியோடு வரவேற்று உட்கார வைத்தார் .இன்னொருவர் மெனுவோடு வந்தார். அவர் கல்கத்தாவை சேர்ந்தவராம் .பட்டியலில் இருந்த மீன் குழம்பு கேட்டேன் . அவரோ "மன்னிக்கவும் .தற்போதைக்கு மீன் இல்லை" என்றார் .பரவாயில்லை என்று சொல்லி சிக்கன் வகை ஒன்று ஆர்டர் செய்தேன் .அவர் சென்ற பிறகு சிறிது நேரத்தில்
பாகிஸ்தானியர் வந்து "உங்களுக்கு அவசரம் இல்லையென்றால் ,நான் மீன் வாங்கி வரச்செய்கிறேன் .இங்கே பக்கத்தில் தான் சந்தை" என்று சொல்ல நான் சிரமம் வேண்டாமென்று சொல்ல ,ஒன்றும் சிரமமில்லை என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார் .எனக்காக
மீன் வாங்கி வரச்செய்து சமைத்துக் கொடுக்கச் செய்தார் .மிகவும் மரியாதையாக நடத்தினார்.வற்புறுத்தி இலவசமாக குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.


2 நாட்களுக்குப்பின் மீண்டுமொரு முறை சென்றேன் .என்னைப் பார்த்ததும் பழக்க தோஷத்தில் "அஸ்லாமு அலைக்கும்" என்று சொல்லி விட்டு சுதாரித்து 'சாரி" என்று சொன்னார் .நான் உடனே "அலைக்கும் ஸலாம்" சொல்லி விட்டு "எதற்கு சாரி கேட்கிறீர்கள் ?.நீங்கள் எனக்கு சமாதனம் உண்டாகட்டும் என்று சொல்லுகிறீர்கள் .நான் பதிலுக்கு உங்களுக்கும் அவ்வாறே என்று சொல்லுகிறேன் .இது பொதுவான வாழ்த்து தானே .எங்கள் சர்ச்சில் கூட திருப்பலியில் இதைத்தான் சொல்லுகிறோம் .குருவானவர் அனைவரையும் பார்த்து "சமாதானம் உங்களோடு இருப்பதாக" என்று சொல்ல அனைவரும் பதிலுக்கு "உம்மோடும் இருப்பதாக" என்று சொல்லுகிறோம்" என்று சொன்னேன் .அவர் ஆமோதித்தார் .நீண்ட நேரம் என்னோடு பேசிக்கொண்டிருந்தார் .வயதில் எனக்கு பெரியவராக இருந்த, படித்த அவரிடம் ,பாகிஸ்தான் பற்றிய பல விஷயங்களை கேட்க முடிந்தது .அவருடைய உரையாடலில் இந்தியா மீதும் இந்தியர் மீதும் அவர் வைத்துள்ள நல்லெண்ணம் பளிச்சிட்டது . அரசியல் காரணங்களுக்காக நிலவும் பகைமைக்கு அவரும் என்னைப்போலவே வருந்தினார்.இன்றும் அவருடன் நட்பு தொடர்கிறது.


இன்று பொதுவாக,பரஸ்பர வெறுப்பு உள்ளூர் தேசபக்தியின் அளவுகோலாகவே மாறிவிட்டது .நல்லிணக்கத்தை வளர்ப்பதாக சொல்லப்படும் கிரிக்கெட் சில நேரங்களில் நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாகவும் ,பல நேரங்களில் அர்த்தமற்ற வெறுப்பை
வளர்ப்பதாகவுமே எனக்குப்படுகிறது .படிக்காத பாமர மக்களை விட்டுவிடுவோம் .படித்த நண்பர்கள் பலரே கிரிக்கெட்டில் ஜெயிப்பதில் தான் இந்தியாவின் மானமே அடங்கியிருப்பதைப் போல அரைவேக்காட்டுத்தனமாக நடந்து கொள்வதை பார்த்திருக்கிறேன் .நம்முடைய நாடு வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்க வேண்டும் .அதற்கு அவர்களை விட நம்மவர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கலாம் .நம் அணி மோசமாக விளையாடினாலும் அவர்கள் தோற்கவேண்டும் .இல்லையென்றால் அவர்களைத் திட்டுவது எந்த வகையில் நியாயம் .6 வருடங்களுக்கு முன்பு ,சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையிலிருந்து கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது .அரங்கு நிறைந்த மக்கள் கூட்டம் ஏமாற்றத்தில் 2 நிமிடம் அமைதியாக இருந்து ,பின்னர் பாகிஸ்தான் வீரர்களை பாரட்டும் விதமாக எழுந்து நின்று கரவொலி எழுப்பிய போது ,சில பாகிஸ்தான் வீரர்களின் கண்களில் நெகிழ்ச்சியின் கண்ணீர் .சென்னை மக்களை நினைத்து நான் காலரை தூக்கி விட்டுக்கொண்டேன்.பாகிஸ்தானில் இப்படி நடக்குமா என்று பலர் கேட்டார்கள் .ஆனால் பாகிஸ்தான் மக்கள் சமீபத்திய இந்திய அணி பயணத்தின் போது
சரியான பதில் தந்தார்கள் .இந்திய அணிக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தார்கள்.


சில அரசியல் பிரச்சனைகளில் நாம் வேறுபட்டிருக்கிறோம் .அதை ராஜ்ஜிய முறையில் தீர்த்துக்கொள்ளலாம் .ஆனால் அடிப்படையில் ஒரு தாய்ப்பிள்ளைகளான மக்கள் நண்பர்களாக இருப்பதில் என்ன சிக்கல் .இரு புறங்களிலிலுமே ,சாதாராண மக்களிடையே பரஸ்பரம்
தவறான புரிந்துணர்வு இருக்கிறது .இது மாற்றப்பட வேண்டியது.

சில நேரங்களில் நண்பர்கள் பலருடைய அணுகுமுறை எனக்கு புரிவதில்லை .விளையாட்டு என்பதையும் மீறி ,உணர்வுபூர்வமாக ஒரு சார்பு நிலை வருவது இயல்பு தான் .நம் நாட்டு அணி எந்த நாட்டோடு மோதினாலும் ,உணர்வுபூர்வமாக நம் நாடு வெற்றி பெற
வேண்டுமென நாம் விரும்புகிறோம் .அது இயல்பு .ஆனால் பாகிஸ்தானும் இங்கிலாந்தும் விளையாடினால் ,நாம் இங்கிலாந்து வெற்றி பெறவேண்டுமென (பாகிஸ்தான் தோற்க) விரும்புவது என்ன உணர்வு என தெரியவில்லை .நமக்கு இங்கிலாந்தை விட
பாகிஸ்தானல்லவா சொந்தம் ? பாகிஸ்தானை விட இங்கிலாந்தும் ,ஆஸ்திரேலியாவும் எந்த வகையில் நமக்கு நெருக்கம்? நியாயமாக பார்த்தால் நம் உணர்வுகள் பாகிஸ்தானோடல்லவா பொருந்த வேண்டும்?நாம் ஒன்றாக சுதந்திரத்துக்காக போராடினவர்கள் அல்லவா?.சில அரசியல் காரணங்களுக்காக அந்த முடிவு எடுக்கப்படாதிருந்தால் நாம் ஒரே நாட்டில் இருந்திருக்க வேண்டியவர்கள் அல்லவா?


நம்ம குடும்பத்து பங்காளிச்சண்டை கோர்ட்-ல இருக்கலாம் .இருந்தாலும் பங்காளிகளோட பிள்ளைங்க நாம அன்பா இருப்போமே? நாளை அதுவே பங்காளிச்சண்டையின் உக்கிரம் குறைய பயன்படலாமில்லியா?

என்ன சொல்லுறீங்க?

Monday, November 28, 2005

வந்த நாள் முதல்...

நண்பர்களே!

இந்த வாரம் ...வேற வழியில்லீங்க உங்களுக்கு! .பின்ன என்னங்க, ஏதோ ஒரு வேகத்துல வலைப்பதிவு ஆரம்பிச்சு ,என்ன பதிவு போடலாம்ன்னு மண்டைய குழப்பி ,சட்டியில இருக்குறத சுரண்டி சுரண்டி ,ஆமை வேகத்துல 10 பதிவு தான் போட்டிருக்கிற ஒருத்தன திடீர்ன்னு மதி கூப்பிட்டு நட்சத்திரமா இருப்பியா-ன்னு கேட்டா கொஞ்சம் கூச்சமா இருந்தது .எல்லோரும் 100 ,200 -ன்னு போட்டுத் தாக்கிட்டு சும்மா ஜெட் வேகத்துல போயிட்டிருக்காங்க .10 பதிவு போட்ட நம்பளயும் கணக்குல எடுத்துருக்காங்களேண்னு ஒரு சந்தோஷம் .உருப்படியா இன்னும் எழுத ஆரம்பிக்காத என் மேல நம்பிக்கை வச்சு அழைத்த மதி அவர்களுக்கும் ,காசி அவர்களுக்கும் நன்றி!

தமிழ் வலைப்பதிவுகளில் இத்தனை பேர் பல்வேறு கோணங்களில் ரசிக்கும் படியாக ஆர்வத்தோடு எழுதி வருவது ,அதுவும் இளைய தலைமுறை தமிழை விட்டு விலகிப் போய்க்கொண்டிருகிறது என்று கருதப்படுகிற காலகட்டத்தில், இத்தனை இளைஞர்கள்(தருமியையும் சேர்த்துத்தான்) தொழில்நுட்ப வளர்சியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து தமிழை முன்னெடுத்து செல்ல பங்காற்ற முன்வந்திருப்பது மகிழ்சிக்குரிய விஷயம் .தொழில்ரீதியாக அல்லாத இத்தகைய பங்களிப்புகளுக்கு ,படைக்கும் ஆர்வம், திறமை தவிர மொழி மீது கொண்டிருக்கும் ஆர்வமும் ஒரு காரணம்.ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு புள்ளியிலிருந்து இந்த ஆர்வம் தொடங்கியிருக்கும். எனக்கு ஆர்வம் வந்ததெப்படி?

எங்கள் கிராமத்தில் கத்தோலிக்க கோவிலுக்கு சொந்தமான உயர்நிலைப்பள்ளியில் 10 வது வரை படித்தேன் .அம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியர் .எனக்கும் ஆசிரியர் .அம்மா தமிழாசிரியர் இல்லையென்றாலும் ,தமிழார்வமும் எழுத்துத்திறமையும் உள்ளவர்கள் .ஆசிரியர் பணியோடு ,கோவில் பணிகளிலும் ,ஊரில் பொதுக்காரியங்களிலும் அயராது பங்களிப்பார்கள் .கோவிலில் ஞாயிறு மற்றும் விசேட தினங்களில் நடைபெறும் திருப்பலிகளின் தொடக்கத்தில் வாசிக்கப்படும் 'இன்றைய சிந்தனை' பெரும்பாலும் அம்மாவே எழுதுவார்கள் .உள்ளூரில் நடக்கும் கலைநிகழ்ச்சிகள் தொடர்பாக நாடகம் ,பாடல்கள் நிறைய எழுதுவார்கள் .

எங்கள் ஊர் ஒரு வித்தியாசமான சூழல் தான் .முழுக்க முழுக்க கத்தோலிக்கர்களைக் கொண்ட ஒரு மீனவ கிராமம் என்றாலும் ,படிப்பறிவில் பின் தங்கிவிடவில்லை .நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் 'இராயப்பர்(St.Peter) எழுத்தாளர் மன்றம்' என்ற ஒரு அமைப்பு இருந்தது .அம்மா தான் தலைவர் .ஆசிரியர்கள் ,படித்த இளைஞர்கள்,கன்னிகாஸ்திரிகள் அதில் உறுப்பினராக இருந்தார்கள் .அவர்கள் இணைந்து மாதமொருமுறை வெளிவரும்படி ஒரு கையெழுத்துப்பத்திரிகை நடத்தினார்கள்.அதற்கு அம்மா ஆசிரியர் என்ற முறையில் ,எங்கள் வீட்டில் அந்த பணிகள் நடக்கும் .தொகுப்புப் பணி முடிந்த பிறகு ஒரே மாதிரி 5 பிரதிகள் எழுத வேண்டும் .அப்பாவோட கையெழுத்து சும்மா அச்சு மாதிரி இருக்கும் .அதனால அப்பா 2 பிரதி எழுதுவாங்க .என்னோட தமிழ் கையெழுத்து அப்போ அழகா இருந்ததால நான் 1 பிரதி எழுதுவேன் .அது எனக்கு ஒரு நல்ல அனுபவம் .அடிப்படையிலயே எனக்கும் சின்ன வயசிலயே இந்த ஆர்வம் இருந்ததால மகிழ்ச்சியாக இருந்தது .கதைகள் ,கட்டுரைகள் ,கவிதைகள் ,போட்டிகள் இப்படி கலந்து கட்டி ,அந்த பத்திரிகைகள் நல்லாவே இருந்தது .எழுதி முடித்த பின்னர் எங்கள் ஊரில் ஆர்வமுள்ள வீடுகளுக்கு ஒரு நாள் ஒரு வீடு என்ற வகையில் வாசித்து அடுத்த வீட்டுக்கு அவர்களே கொடுத்து விடுவார்கள் .

சின்ன வயதிலேயே ,விளையாட்டுகளோடு ,சினிமா பாட்டு கேக்குறதுல ரொம்ப ஆர்வம் .வீட்டுல எல்லோரும் கோவில் பாட்டு மட்டும் ஆர்வத்தோடு பாடுவார்கள் .நான் மட்டும் சினிமாப் பாட்டு தான் .இலங்கை வானொலி தான் என் உற்ற நண்பன் .கல்யாணம் போன்ற விசேடங்கள் என்றால் பெரிய குழல் வச்சு ஒலி பெருக்கி வச்சு பெரும்பாலும் எம்.ஜி.ஆர் பாட்டு தான் கேட்கும் .ஏகப்பட்ட எம்.ஜி.ஆர் பாட்டுக்கள் முழு வரிகளும் எனக்கு மனப்பாடம் ஆனது இப்படித்தான் .ஆனா அதுலயும் ஒரு பயன் இருந்தது .ஊரில திருமண வரவேற்பின் போது மணமக்களை வாழ்த்தி சினிமாப் பாடல் மெட்டில் பொருத்தமான வரிகள் எழுதி பாடுவது அப்போது கண்டிப்பாக உண்டு .பெரும்பாலும் எல்லோரும் அம்மாவத்தான் தேடி வருவாங்க .எந்த பாட்டு மெட்டு-ன்னு ஆர்டர் வேற.அம்மாக்கு அவ்வளவா சினிமாப் பாட்டு தெரியாது .அதனால என்னைக் கூப்பிட்டு பாட சொல்லுவாங்க .நான் பாடுற மெட்டை மனசுல வச்சுகிட்டு அப்புறமா எழுதிடுவாங்க .அப்புறம் எழுதிய பாட்டை அதே மெட்டுல என்னை பாட சொல்லுவாங்க .சில இடங்கள்ள உதைக்கும் .நான் சொல்லுவேன் .அம்மா வேற வார்த்தை போடுவாங்க ..இப்படியே நாளாக ஆக நானே மாற்று வார்த்தை சொல்ல அம்மா ஒத்துக்குவாங்க ..அப்புறம் ஒரு தடவ எழுதிட்டு என்கிட்ட கொடுத்து நீயே திருத்திக்கொடுத்துடு-ன்னு சொல்லிடுவாங்க .அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்.

10-வது வகுப்பு முடித்த பிறகு நாகர்கோவிலில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில் படித்தேன் .வீட்டிலிருந்து 10 கி.மீ தான் என்றாலும் ,கிராமத்தில் வீட்டுக்கு பக்கத்தில் தெரிந்த ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,நல்ல சூழலில் படித்த எனக்கு நகரத்தின் இறுக்கமான புதுச்சூழல் ஒத்து வரவே இல்லை .வகுப்பில் சுமாரான மாணவனாக இருந்தேன்.ஆசிரியர்கள் அந்நியமாக இருந்தார்கள் .நகர மாணவர்களோடு ஒட்ட முடியவில்லை .ஒரு நாள் தமிழாசிரியர் வகுப்பு நடத்தும் போது நாகர்கோவில் ரோட்டரி கிளப் சார்பாக மாவட்ட அளவில் கட்டுரை போட்டி நடைபெறுவதாகவும் ,அதற்கு எங்கள் வகுப்பிலிருந்து ஒருவரை அனுப்பச்சொல்லி சுற்றறிக்கை வந்தது .ஆசிரியர் கேட்ட போது மாணவர்கள் யாரும் தயாராக இல்லை,நான் உட்பட .ஆசிரியர் என்ன நினைத்தாரோ ,கடைசி வரிசையில் இருந்த என்னை எழும்ப சொன்னார் .பெயர் கேட்டார் .சொன்னேன் .என் பெயரை அதில் எழுதி விட்டு "நீ போற..போய் எழுதுற"-ன்னு ஒரே போடா போட்டார் .எனக்கு ஒண்ணுமே புரியல்ல .வகுப்பில் நான் கவனம் பெறாத மாணவன் .ஆசிரியரிடம் பேசியதே இல்லை .எதனால் என்னை சொன்னார் என தெரியாது .கட்டுரை எழுத வேண்டிய நாளன்று வேறு ஒரு பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தார்கள் .அப்பாவியாக அங்கு சென்றேன் .அங்கே நிறைய நகரத்து மாணவர்கள் ரொம்ப சீரியசா கட்டுரை எழுத போறது பத்தி பேசிட்டிருந்தாங்க .நேரம் வந்த போது அப்போது தான் "சுதந்திர இந்தியாவின் 40 ஆண்டு கால சாதனை" -ன்னு தலைப்பு கொடுத்து எழுத சொன்னார்கள் .நானும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்து விட்டேன் .இரண்டு வாரம் கழித்து திங்கள் கிழமை காலை தேசியக்கொடி அணிவகுப்பின் போது பள்ளி முதல்வர் "மாவட்ட அளவில் ரோட்டரி சங்கம் நடத்திய கட்டுரைப்போட்டியில் நமது பள்ளி மாணவர் முதல் பரிசை பெற்றுள்ளார்" என்று சொல்லி என் பெயரைச் சொன்னார் .உண்மையிலயே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இங்கே சிங்கை வந்த புதிதில் ,இலங்கையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் வழக்கம் போல (வழமையாக) பொத்தாம் பொதுவாக தமிழ் நாட்டுக்காரர்கள் தமிழை பேணுவதே இல்லை என்ற குற்றசாட்டைச் சொல்ல அவருக்கு மறுத்து பதிலிறுக்கும் விதமாக கடிதம் ஒன்றை அனுப்பினேன் .அவர் என்ன நினைத்தாரோ ,அதை கட்டுரை போன்று ஒரு நாளிதழுக்கு அனுப்பி வைக்க ,அவர்களும் அதை 'தமிழகம் தமிழை புறக்கணிக்கிறதா?" என்ற தலைப்போடு கட்டுரையாக பிரசுரித்து விட்டார்கள் (தினக்குரல் என்று நினைக்கிறேன்) .அவர் அந்த கட்டுரையை மட்டும் வெட்டி எனக்கு அனுப்பியிருந்தார் .என்ன தான் இருந்தாலும் நம்முடைய எழுத்தை அச்சில் பார்த்தால் அந்த மகிழ்ச்சியே தனி தான்.

இப்போ நாம கிறுக்குறதையும் படிக்க கொஞ்ச ஜீவன்கள் இங்க இருக்குறது சந்தோஷமா இருக்கு .அதைவிட பலபேருடைய எழுத்துக்களை படித்து பல விடயங்களை அறிந்து கொள்ள முடிவது அதைவிட சந்தோஷமா இருக்கு..தொடர்வோம் இந்த பகிர்தலை ..நண்பர்களே!

Wednesday, November 16, 2005

உழைப்பவர் வாழ்க்கை மலராதோ

Image hosted by Photobucket.com

உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒருநாள் பொழுதும் புலராதோ...

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை

கடல்நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
உயிரைஊரார் நினைப்பது சுலபம்


---------------------------------------------

மீனவனின் வாழ்க்கையை இத்தனை உருக்கத்தோடு என்னால் எழுத முடிந்திருந்தால் அதில் பெரிய ஆச்சரியமில்லை .ஆனால் ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பிராமணன் அனுபவித்து எழுதியிருப்பது ஆச்சரியமல்லவா!

வாலி நீ வாழி!

Wednesday, November 02, 2005

குமரி மாவட்டம் -பொன்விழா ஆண்டு -சில துளிகள்

சுதந்திரத்துக்குப்பின் கேரள மாநிலத்தோடு இணைந்திருந்த குமரி மாவட்டம் ,பின்னர் மக்களின் தொடர் போராட்டங்களால் 1956-ல் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இந்த வருடம் 50 ஆண்டுகள் ஆகிறது.


எங்கள் குமரி மாவட்டம் குறித்து நானறிந்த சில தகவல் துளிகள்.

* இந்திய திரு நாட்டின் தெற்கு முனை - முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனை அமைந்துள்ள மாவட்டம்

* கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்து ,பெரும்பான்மைத்தமிழர்கள் மார்ஷல் நேசமணி தலைமையில் தாய்த்தமிழகத்தோடு இணைக்கக்கோரி மாபெரும் இயக்கம் நடத்தி,போராடி பின்னர் தமிழகத்தோடு இணைக்கப்பட்ட மாவட்டம்.

* தமிழகத்தில் எழுத்தறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்.

* பரப்பளவில் குறைந்ததெனினும் ,மலைகளும் கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ,தென்னை ,வாழை நிறைந்த மாவட்டம்.

* தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் அதிக சதவீதத்தில் இருக்கும் மாவட்டம் (ஆனால் பா.ஜ.க-வின் சட்டமன்ற கணக்கை தொடங்கி வைத்த மாவட்டம்)

* 'ஆசிரியர் மாவட்டம்' என்று சொல்லுமளவுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக ஆசிரியர்களை அனுப்பி வைத்த மாவட்டம்.

* இந்தியாவின் உயர்தர ரப்பர் விளையும் மாவட்டம்

* கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , 'தமிழ்த்தாய் வாழ்த்து' தந்த மனோன்மனியம் சுந்தரனார் பிறந்த மாவட்டம் (வள்ளுவரும் இங்கே பிறந்ததாக ஒரு சாரார் சொல்கின்றனர்)

* கலைவாணர் N.S.கிருஷ்ணன் ,திரையிசைத் திலகம் K.V.மகாதேவன் ,அவ்வை சண்முகம் போன்ற கலையுலக ஜாம்பவான்களின் சொந்த மாவட்டம்.

* சொந்த ஊரில் தோற்கடிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரை ,உச்சி முகர்ந்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த பெருந்தலைவரின் செல்ல மாவட்டம்.ஜீவா பிறந்த மாவட்டம்.

* சமீபத்தில் இந்தியாவிலேயே சுத்தமான பஞ்சாயத்து யூனியன் (மேல்ப்புறம்) என்ற ஜனாதிபதி விருதினை தட்டிச்சென்று ,தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாவட்டம்.

* இந்தியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுனரை தந்த மாவட்டம் .

* மாநில கட்சிகளுக்கு இணையாக தேசிய கட்சிகள் (காங்கிரஸ் ,பா,ஜ,க ,கம்யூனிஸ்ட்) செல்வாக்கை இன்னும் தக்கவைத்திருக்கும் மாவட்டம் . ஆனால் எந்த கட்சிக்கும் கோட்டையாக இல்லாத மாவட்டம் .திராவிட கட்சிகளுக்கு சோதனை தந்த மாவட்டம் .அதனால் 'நெல்லை எங்கள் எல்லை! குமரி எங்கள் தொல்லை!" என்று கலைஞரை புலம்ப விட்ட மாவட்டம்.

* தமிழகத்தில் அதிகமாக காற்றலை மூலம் மின் உற்பத்தி நடைபெறும் மாவட்டம்.

* தமிழகத்தில் மாவட்ட தலைநகரின் பெயரில் அழைக்கப்படாத மாவட்டம் (மாவட்ட தலைநகர் - நாகர்கோவில்).

Friday, October 21, 2005

பச்சை விளக்கு

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது அங்குள்ள தூய இருதய விடுதியில் தங்கியிருந்தேன் .எங்கள் விடுதியில் மாதம் ஒருமுறை திரை கட்டி சினிமா போடுவார்கள் .இதற்கென்று ஒரு மாணவர் பிரதிநிதி குழு இருக்கும் .அவர்கள் பொறுப்பு , படக்கம்பெனிக்கு போய் சினிமாவை தேர்ந்தெடுத்து ,புரஜ்க்டரோடு அவர்களை வரவழைத்து விடுதி திறந்தவெளி வளாகத்தில் சினிமா போடுவது.இதற்குண்டான செலவை மாத விடுதி கட்டணத்தில் பகிர்ந்து விடுவார்கள்.

நான் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் போது தான் ,இவ்வளவு நாளும் மாணவர் பிரதிநிதிகளே இதில் கொள்ளையடிப்பது தெரிய வந்தது .அதை தடுத்து நிறுத்த ,அந்த வருடம் நண்பர்கள் சேர்ந்து என்னை முதுநிலை பிரதிநிதியாக போட்டார்கள் .அன்றிரவே இளநிலை பிரதிநிதி என் அறைக்கு வந்தார் .வழக்கம் போல எப்படி பங்கு போடலாம் என்று கேட்க வந்தார் போல .நான் அவரிடம் நேரடியாகவெ சொல்லிவிட்டேன் "தம்பி ! என் கிட்ட இந்த பருப்பெல்லாம் வேகாது .எல்லாம் நியாயமா தான் நடக்கும் .இஷ்டம் இருந்தா என் கூட வாங்க!" .அதோடு போனவர் தான் .

கொஞ்ச நாள் கழித்து ,சினிமா போடலாம் என்று முடிவு பண்ணி ,ஒரு படக்கம்பெனிக்கு போனேன் . அங்கிருந்த படங்களை பார்த்து விட்டு 'வருஷம் 16' படத்தை தேர்வு செய்து ,எவ்வளவு செலவாகும் என கேட்டேன் .அவரும் ஒரு தொகை சொன்னார் .நானும் ஒத்துக்கொண்டு ரசீது தரச்சொன்னேன் . "எவ்வளவு தொகை போடணும்?' -னு கேட்டார் .நான் சொன்னேன் "அதான் இப்போ சொன்னீங்களே" .அவர் அதற்கு " அது நீங்க எங்களுக்கு தர வேண்டியது .ரசீதுல எவ்வளவு போடணும்?' -என்று கேட்டார் ." உங்களுக்கு எவ்வளவு தர சொன்னேனோ அதை மட்டும் போட்டா போதும்" -ன்னு நான் சொல்ல என்னை ஏற இறங்கப் பார்த்தார் ..இப்படியும் ஒரு மாக்கானான்னு நினைச்சிருப்பார் போல!

விடுதிக்கு வந்து விடுதிக்காப்பாளரான பாதர் -ஐ சந்தித்து விஷயம் சொன்னேன் .ரசீதை கொடுத்தேன் .ஆச்சர்ய புருவத்தை உயர்த்தினார் " என்ன ஜோ! இவ்வளவு காசு கம்மியா இருக்கு "..."இல்ல பாதர் ..இதுதான் உண்மையான தொகை" .."இஸ் இட் ? பொதுவா இதை மாதிரி மூணு மடங்கு பில் வருமேப்பா" ..முன்னால இருந்த மாணவர் பிரதிநிதிகள் மாணவர் காசையே கொள்ளை அடிச்சது எவ்வளவுன்னு தெரிஞ்சுது (இவனுங்கெல்லாம் வருங்கால தலைவனாகி நாடு உருப்பட்ட மாதிரி தான்).

இப்படியா மாதம் ஒரு சினிமா போட்டோம் .என்னுடைய ரசனையை ஒதுக்கி வைத்து விட்டு ,மாணவர்களுக்கு பிடித்த மாதிரி இது நம்ம ஆளு ,தில்லு முல்லு இப்படி படங்களை தேர்வு செய்தேன் . பொதுவா சினிமா போடுற அன்னிக்கு அறிவிப்பு பலகைல விவரம் எழுதி ஒட்டுரது வழக்கம் ..பெரிய பேப்பர்ல ஸ்கெட்ச் வச்சு எழுதுறது ..'தில்லு முல்லு' படத்துக்கு நாமளும் ஒரு தில்லு முல்லு பண்ணுவோம்னு படத்தோட பேரை மட்டும் கண்ணாடி பிம்பத்தில் இடம் மாறி தெரியுற மாதிரி எழுதி ஒப்புதலுக்காக பாதர்-கிட்ட கொண்டு காட்டினா திரு திருன்னு முழிச்சார் .விளக்கி சொல்லி விட்டு அறிவிப்பு பலகைல கொண்டு போட்டேன் .கொஞ்ச நேரத்துல பசங்க வந்து படிச்சுகிட்டு மண்டைய பிச்சுகிறாங்க ..ஒருத்தன் சொன்னான் "டேய் ..ரஜினி,கமல் நடிச்ச பாலசந்தர் டைரக்ட் பண்ணுன மலையாளப்படம் போல".

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்து விடுதி துணைக் காப்பாளர் ,ஒரு பேராசிரியர் ,வழியில் பார்த்து "என்ன! அடுத்து என்ன படம் போட போறீங்க?- னு கேட்டார் .நீங்க சொல்லுங்க சார் -ன்னு நான் சொல்ல ,அவர் ரொம்ப சீரியஸா "என்னப்பா !ஒரு நல்ல பிளாக் அண்ட் ஒயிட் சிவாஜி படம் போடக்கூடாதா? -ன்னு கேட்டார் .நான் பதறிப்போய் "காலேஜ் பசங்களுக்கு ஜாலியா எதாவது புது படம் போட்டாதான் ஒத்து வரும்..பழைய படம் போட்டா ரகளை பண்ணிருவாங்க சார்"-ன்னு சொல்ல ,அவர் ஒத்துக்கொள்ளுற மாதிரி இல்ல ."என்னப்பா ..இப்படி ரசனையே இல்லாத
ஆளாயிருக்க"-ன்னு சொல்ல ,நான் சிரிக்க ,பக்கத்தில் நின்றிருந்த நண்பன் "சார் ! இவன் பயங்கரமான சிவாஜி ரசிகன் சார்" என்று உண்மையை அவுத்து விட ,அவ்வளவு தான் ..சிவாஜி படம் போட்டே ஆகணும்-ன்னு ஒத்தைகாலில் நின்றார் .நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன் .கேக்குற மாதிரி தெரியல்ல .சரின்னு ஒத்துகிட்டு படக்கம்பெனிக்கு போய் சிவாஜி படங்களை அலசினேன் . அட்லீஸ்ட் கலர் படம் போட்டாலாவது பசங்க பொறுத்துக்குவாங்க-ன்னு அங்கிருந்த 'தங்கப்பதக்கம்' ,'வசந்த மாளிகை' போன்ற படங்களை கேட்க ,அவரோ "அதெல்லாம் பப்ளிக்-ல போட குடுக்க மாட்டோம் .புத்தம் புது காப்பி போட்டு வச்சிருக்கோம் .அடுத்த வாரம் தியேட்டர்ல போட போறோம்"-ன்னு குண்டைத் தூக்கி போட ,வேறு வழியின்றி மீதமிருந்த படங்களில் நான் தேர்வு செய்தது 'பச்சை விளக்கு' .அற்புதமான பாடல்கள் நிரம்பிய படம்.

சினிமா போடுற அன்னிக்கு 'பச்சை விளக்கு' -ன்னு அறிவிப்பு பலகைல எழுதி ஒட்ட பாதர் 'வெரி குட்..நல்ல படம்" -ன்னு சொல்ல ,பசங்களோ முணுமுணுக்க ஆரம்பித்தார்கள் .எங்கள் விடுதியில் 'ப' வடிவில் 10 மாடி கட்டிடங்கள் இரண்டு ஒன்றையொன்று பார்த்திருக்க ,இடையிலுள்ள திறந்த வெளியில் ,ஒரு கட்டிடத்தில் திரையைக்கட்டி படம் போடுவார்கள் . பழைய படம் என்பதால் பக்கத்திலிருந்த பாதர் இல்லத்திலிருந்து கல்லூரி முதல்வர் வரை படம் பார்க்க வந்திருந்தார்கள். பசங்க மேல தான் எனக்கு நம்பிக்கை இல்லை .என்ன பண்ன போறாங்களோ? .

ஒரு வழியாக படம் ஆரம்பித்தது .எல்லோரும் அறைகளில் இருந்து இறங்கி வந்து அமைதியாக படம் பார்த்துக்கொண்டிருக்க..10 வது நிமிடத்தில் வெடிச்சத்தம் காதை பிளந்தது .திரை கட்டப்பட்ட கட்டிடத்திலேயே ,படிக்கட்டுகளில் 1000 வாலா வெடியை நீட்டி வைத்து அதன் முனையில் ஊது பத்தியை கொழுத்தி வைத்து விட்டு வந்திருக்கிறார்கள் .நீண்ட நேரம் வெடி வெடித்து முடிக்க ,தங்கள் நக்கலை,அதிருப்தியை காட்டி விட்ட சந்தோஷத்தில் பசங்க நமட்டு சிரிப்பு
சிரிச்சுட்டு இருக்காங்க.

படம் முடிந்து பணத்தை பெறுவதற்கு பாதர் அறைக்கு நான் செல்ல ,பாதர் உற்சாகமாக வரவேற்றார் "ஜோ! ரொம்ப நல்ல படம் .பாதர்ஸ் எல்லோரும் ரொம்ப ரசிச்சாங்க" ன்னு சொல்லி பணத்தை தந்துவிட்டு கேட்டார் "ஆமா ! பசங்க எதுக்கு வெடி வெடிச்சாங்க?".."அதுவா பாதர்! அந்த பிளாக் பசங்க நிறைய பேர் தீவிர சிவாஜி ரசிகர்கள் ..அதான் " ன்னு நான் சொல்ல ..பாதரும் அப்பாவியா "வெரி குட்..பசங்க பரவாயில்லயே" ..நமட்டுச்சிரிப்போடு நானும் வேளியே வந்தேன்.


(பச்சை விளக்கு தலைப்பைப் பார்த்து சமீபத்திய தமிழ்மணம் சர்ச்சையை எதிர் பார்த்து வந்தவர்களுக்கு..சாரி)

Friday, September 30, 2005

நடிகர் திலகம்

Image hosted by Photobucket.com

Photobucket - Video and Image Hosting


உனக்கு தேசிய விருது கிடைக்கவில்லையாம்!

குடகு மலையைக் கடந்தாயா என
இமய மலையைக் கடந்தவனிடம் கேள்வி!

பிரான்சுக்கும் எகிப்துக்கும் தெரிந்த உண்மை -இங்குள்ள
பீஷ்மர்களுக்கு மட்டும் தெரியாதாம்!

சிதம்பரனார் செல்ல மகன்
சினிமா என்பதையும் மறந்து
"ஐயோ அப்பா!" என்றரற்றினாராமே! -இந்த
சிறப்புக்கு முன் ஆஸ்கார் எந்த மூலைக்கு?

விண்ணுலகில் கூட...

சிவனும் ,சிதம்பரனாரும்
கட்டபொம்மனும் ,கர்ணனும்
அப்பரும் ,அம்பிகாபதியும்,
ஜார்ஜ்-ம் ,சாக்ரட்டீசும்

கண்ணாடி பார்ப்பதற்கு பதில்
உன் முன்னாடி தான் நிற்கிறார்களாமே?


*************************************

(அக்டோபர் 1 - நடிகர் திலகம் பிறந்த நாள்)

Monday, August 15, 2005

தமிழ் கத்தோலிக்கரும் தாலி, குங்குமம் பிறவும்

கொஞ்ச நாட்களுக்கு முன் என்னுடைய திருமண புகைப்படத்தை தற்செயலாகப் பார்த்ததும் என் நண்பர் கேட்ட கேள்வி "என்ன..உங்க wife கல்யாணத்துக்கு பட்டுப்புடவை கட்டியிருக்காங்க ?" .அவர் தமிழ் சினிமா பார்த்து எல்லாத்தயும் நம்புறவர்-ன்னு நல்லா புரிஞ்சது. எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டு கத்தோலிக்கர் யாரும் இவர் நினைக்குறமாதிரி ,சினிமால காட்டுற மாதிரி வெள்ளை கலர்ல பாரதிராஜா தேவதை உடை போட்டு கல்யாணம் பண்ணி நான் பார்த்தததில்லை .கேள்விப்பட்டதும் இல்லை . எல்லோரும் பட்டுப்புடவை தான் கட்டிக்குறாங்க. அதோடு தலையில ஒரு net வச்சு கிரீடம் மாதிரி அலங்காரம் பண்ணிக்கிறது ,கையில ஒரு பூச்செண்டு இவ்வளவு தான் வித்தியாசம்.

அப்புறம் ஒரு நாள் நண்பர் குடும்பத்தோடு சினிமா போகும் போது ,நண்பருடைய மனைவி என் மனைவியை பார்த்ததும் புருவம் உயர்த்தினாங்க ."நீங்க குங்குமமெல்லாம் வைப்பீங்களா? ".அடடா! அதற்கும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.

இன்னொரு நாள் ஒரு சீன நண்பரோடும் ,தமிழ் நண்பரோடும் உணவருந்திகொண்டிருந்த போது ,சீன நண்பர் "எங்கே உங்கள் கல்யாண மோதிரம் ?" என்றார் .நான் "கல்யாண மோதிரம் கண்டிப்பல்ல .இந்திய வழக்கம் போல தாலி தான் அணிவிக்கிறோம் .மோதிரம் இரண்டாம் பட்சம் தான்" .அவர் சமாதானமாகிவிட்டார் .தமிழ் நண்பர் புருவம் உயர்த்தி விட்டார் ..

"என்ன தலைவா ? நீங்களும் தாலியா கட்டுவீர்கள் ?"

"ஆமா! .மோதிரம் மாற்றிக்கொள்வதும் உண்டு .ஆனால் தாலி தான் பிரதானம் .ஒரே வித்தியாசம் .மஞ்சள் தாலி அல்ல .தங்கத்தாலி .மூன்று முடிச்செல்லாம் இல்லை .தாலியை கோர்த்து விடுவது..அவ்வளவு தான் .இன்னும் சொல்லப் போனால் எங்கள் ஊரில் கத்தோலிக்கர்கள் திருமணத்தையே 'தாலிக்கட்டு' என்று தான் சொல்லுவார்கள்"

என்னங்க! பொட்டு வைக்காத ,தாலி அணியாத தமிழ் கிறிஸ்தவர்கள் இல்லை என்கிறீர்களா? என்று உங்களில் பலர் கேட்கலாம் ..இருக்கிறார்கள் .ஆனால் அவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களில் சிறுபான்மையினர் ..தமிழ் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்களும் ,தென்னிந்திய திருச்சபையினர் (CSI) என்றழைக்கப்படும் protestants இவர்கள் இருவரும் தான் பெரும்பான்மை .மற்ற சபையினர் மிக மிக சிறுபான்மை (மொட்டை மாடியில் மைக் கட்டிக்கொண்டு ஊரிலுள்ளவர்களையெல்லாம் பாவிகள் என்று சொல்லுவது ..விவிலியத்தை பிட் நோட்டீஸ் மாதிரி வினியோகிப்பது எல்லாம் இவர்கள் தான்.இது பற்றி தனிப்பதிவு பின்னர்).

CSI கிறிஸ்தவர்களின் வழக்கங்களை முழுமையாக அறுதியிட்டு என்னால் கூற முடியாதெனினும் ,கத்தோலிக்க தமிழர்களை பற்றி கண்டிப்பாக என்னால் கூற முடியும் .கத்தோலிக்க தமிழர்கள் திருமணத்தில் பட்டுப்புடவை அணிந்து தங்கத்தாலி கட்டுகிறார்கள் .பொட்டு ,குங்குமம் வைக்கிறார்கள் .

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கிறிஸ்தவ கோவில் என்றால் அது 'மாதாக் கோவில்' தான் .மாதாக்கோவில் என்றால் அது கத்தோலிக்க கோவிலாகத்தான் இருக்க முடியும் .ஆனால் அங்கு நடைபெறும் (தமிழர்)திருமணக்காட்சியில் மட்டும் எல்லாம் தலை கீழாக காட்டப்படும் .மணப்பெண் பாரதிராஜா படத்து தேவதை மாதிரி உடை அணிந்திருப்பார் .மோதிரம் மட்டும் மாற்றிக்கொள்வார்கள் ..தாலி கட்டுவது கிடையாது . மணப்பெண் பொட்டு வைத்திருக்க மாட்டார்.இப்படி தமிழகத்தின் எந்த கத்தோலிக்க கோவிலில் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை .

நான் பார்த்தவரைக்கும் ,தமிழகத்தில் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டு குழப்புவதில்லை .என்னுடைய மூதாதையர்கள் ,ஏன் எங்கள் ஒட்டு மொத்த ஊர் மட்டுமல்ல ,ஒட்டு மொத்த community-யே கத்தோலிக்கர்களாக மாறி 400 வருடங்கள் கழிந்து விட்டன ..மதம் மாறியிருக்கிறதே தவிர மற்ற வழக்கங்கள்( சாதி உட்பட என்பது வருத்ததுக்குரிய விஷயம்) பெரிதாக மாறவில்லை.எது நம்முடைய கலாச்சாரம் சம்மந்தப்பட்டது ,எது நம்முடைய மதம் சம்மந்தப்பட்டது என்பதில் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் (தமிழ் சினிமா தவிர) ..

திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது (ஒரு நிமிஷம் பொறுங்க!.அப்துல் கலாம் ,சுஜாதா படித்த அதே வகுப்பறையில் நானும் இயற்பியல் படித்தேன் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்) நண்பர்களோடு பலமுறை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றதுண்டு .ஒரு முறை நண்பர்களோடு நேராக உச்சிப்பிள்ளையார் சன்னிதி-க்கு சென்றேன் .நண்பர் ஒருவர் அங்கிருந்த அர்ச்சகரிடம் எங்கள் பெயரையெல்லாம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னார். "ஜோ நமஹா.." என்று அவர் சொன்னது மட்டும் புரிந்தது .முடித்து விட்டு விபூதி கொடுத்தார் .வாங்கிக் கொண்டேன் . விபூதிப் புதனன்று கோவிலில் பாதிரியார் "மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய் .மண்ணுக்கே திரும்புவாய் .மறவாதே என்றும் " என்று நெற்றியில் இட்டு விடுகிற சாம்பல் நினைவுக்கு வந்தது .நான் வணங்கும் தெய்வத்தை நினைத்துக்கொண்டு விபூதியை பூசிக்கொண்டேன்.

வேலை தேடி சென்னையில் எங்கள் ஊர் நண்பர்களோடு தங்கியிருந்தேன் .சொந்தமாக சிறு தொழில் செய்து வந்த நண்பர் எனக்கும் ,அவரோடு வேலை செய்த சகோதரருக்கும் ,இன்னொரு நண்பருக்கும் அடைக்கலம் தந்திருந்தார் .வீடு என்பதை விட அறை என்று சொல்லலாம் ..வீட்டு சொந்தக்காரர் பக்கத்தில் தான் இருந்தார் .அவருக்கு ரெண்டு குடும்பம் .நல்ல நாட்களில் மட்டுமே அவரை இங்கு பார்க்க முடியும் .மற்ற அனைவரும் எங்கள் எல்லோரோடும் நன்கு பழகுவார்கள் .அன்பானவர்கள் ..அன்றைக்கு பொங்கல் தினம் .எல்லோரையும் போல ,பசங்கள் என்பதால் கொஞ்சம் விமர்சையாகவே நாங்களும் காலையிலயே பொங்கல் போட்டோம் .முதல் காரியமாக கொஞ்சம் பொங்கல் எடுத்து வீட்டுக்காரர் குடும்பத்துக்கு கொடுக்க நான் எடுத்துச்சென்றேன். எதிர்பார்த்த மாதிரி வீட்டுக்காரர் இருந்தார்.

"பொங்கல் போட்டோம்..வாங்கிக்குங்க!"

"என்ன தம்பி! நாங்க தானே உங்களுக்கு தரணும் ..நீங்க எப்படி பொங்கல் போட்டீங்க?"..கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏன்?"

"இல்ல..நீங்க கிறிஸ்தவங்களாச்சே"

"அதுக்கு !.பொங்கல் இந்து பண்டிகைன்னு உங்களுக்கு யார் சொன்னது? பொங்கல் .உழவர் திருநாள் ..அது மட்டுமல்ல ..தமிழர் திருநாள்.. உங்கள பத்தி தெரியாது ..நாங்கள்ளாம் தமிழர்கள் "

கொஞ்சம் வியப்பாக பார்த்தார் ..அவரிடம் அதிகம் பேசாத என்னிடம் அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் .

"ஓ! எதுவா இருந்தாலும் எங்களுக்கு முன்னால நீங்க பொங்கல் கொண்டு வந்தது சந்தோஷம்"

வீட்டுக்கார அம்மா புன்சிரிபோடு "குடுங்க தம்பி" என்று வாங்கிக் கொண்டார்.

என் நினைவு எங்க ஊருக்கு சென்றது .வருஷம் முழுவதும் காசு சேர்த்து வைத்து வகுப்பு தோழர்களெல்லாம் பொங்கலன்று தென்னந்த்தோப்புக்கு சென்று பொங்கல் போடும் நினைவுகள் வந்தது ..பொங்கல் அன்று எங்கள் தேவாலயத்தின் பலிபீடம் கரும்பினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் .கோவில் சார்பாக பொங்கல் செய்து ,திருப்பலியின் நடுவே ,எல்லோரும் வரிசையாக சென்று பாதிரியாரிடமிருந்து ஒரு கரண்டி சர்க்கரைப்பொங்கலை கைகளில் பிரசாதம் போல் வாங்கி உண்டது மனக்கண்முன் நின்றது.

எங்கள் ஊர் கன்னியர் மடத்திலுள்ள கன்னியர்கள் செய்த அந்த சர்க்கரைப்பொங்கல் சுவை இன்னும் இனிக்கிறது..

Monday, July 04, 2005

கடற்கரை மணலில் M.G.R படம்- ஆட்டோகிராப்.

முக்கடலும் முத்தமிடும் குமரி-க்கு மேற்கே அரபிக்கடல் தாலாட்டும் (அவ்வப்போது சீரழிக்கும்) அமைப்பான மீனவ கிராமம் ,நம்ம சொந்த ஊர் .கிட்டதட்ட 25 வருடங்கள் பின்னோக்கினாலும் அப்பொதே,மற்ற மீனவ கிராமங்களிலிருந்து சற்று வித்தியாசம் என்று தான் சொல்ல வேண்டும்.ஊருக்கு மேற்கே பழமையான மிகப்பெரிய தேவாலயம் .அதையொட்டி ஊருக்கு சொந்தமான (நான் உயர்நிலை வரை படித்த,அம்மா எனக்கும் படிப்பித்த) உயர்நிலைப்பள்ளி (இப்போது மேல்நிலை) .அற்புதமான பெரிய தேர் .எனக்கு தெரிந்து இத்தனை பெரிய தேரை எந்த தேவாலயத்திலும் பார்த்ததில்லை .(இப்போது அந்த தேர் இல்லை..1982 மண்டைகாடு கலவரத்தில் எரிக்கப்பட்டது) எந்த மீனவ கிராமத்திலும் இல்லாத வகையில் தேவாலயத்தில் முன்னால் 200 அடி அகலம்,800 மீட்டர் நீளமான தேரடி வீதி போன்ற கடற்கரை மணலாலான தெரு.கசமுசா என்றில்லாமல் தெருக்களாக கட்டப்பட்ட வீடுகள் .அதிக ஆடம்பரமும் ,அதிக ஏழ்மையும் இல்லாத வீடுகளின் தோற்றம்..கிராமத்துகுரிய ஓலை குடிசைகள் கிட்டதட்ட இல்லை என்றே சொல்ல வேண்டும் . ஊரின் இரு புறங்களிலும் சுத்தமான உயரமான மணல் தேரிகள் நிரம்பிய கடற்கரை,தென்னந்தோப்புகள்.

மக்களின் பரம்பரை தொழில் மீன்பிடி .அப்போது சுமார் 3000 பேர் .ஒரே சாதி .ஒரே மதம்.சுத்தி வளைத்து பார்த்தால் எல்லொரும் எல்லொருக்கும் ஒரு வகையில் சொந்தக்காரர்கள்.விசைபடகுகள் இன்றி சாதாரண கட்டுமரத்தில் தொழில் செய்வதால் ,துடுப்பு போடும் வலிமையான தோள்கள் கொண்ட ஆண்கள் .கஷ்டத்திலும் பிள்ளைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச விழிப்புணர்வுள்ள கூட்டம்.

ஊரைப்பத்தி சொல்லிட்டே இருக்கலாம்..சரி ..matter-க்கு வருவோம்..அப்போ நான் ஊர்பள்ளியிலே படிச்சிட்டு இருந்த போது TV கிடையாது..தமிழ் நாட்டு தலையெழுத்துக்கு எங்க ஊர் மட்டும் விதி விலக்கா? நம்ம மக்களுக்கு சினிமா-ன்னா அப்படி ஒரு ஆர்வம் ..அதிலும் வாத்தியார் படம்னா கேக்கவே வேணாம்.கிட்டதட்ட ஒட்டுமொத்த ஊரும் வாத்தியார் பக்தர்களாவே (உபயம் : படகோட்டி ,மீனவ நண்பன்)இருந்தது (என்ன மாதிரி ஒரு சில சிவாஜி பைத்தியங்களை தவிர) ..எதாவது ஒரு காரணத்த சொல்லி வாரத்துக்கு ஒரு படமாவது ஊருல போடுவாங்க ..பெரும்பாலும் வாத்தியார் படம்..அப்பப்ப சிவாஜி படம்.35 MM திரையில கடற்கரை மணல்ல ஒட்டுமொத்த ஊரும் ஒண்ணா உக்காந்து படம் பாக்குற அனுபவம் இருக்கே !அடடடா!
கல்யாணம் ,மறுவீடுல இருந்து புது கட்டுமரம் ,வலை release வரைக்கும் எதாவது ஒரு வைபவதுக்கு சம்பந்தபட்டவர் படமாவது போடலிண்ணா என்னங்க மரியாத1 நாகர்கோவில்-ல ஸ்டுடியோ-க்கு போய் advance கொடுத்துட்டு வந்தவுடனே பள்ளிக்கூடத்துல தான் இது முதல்ல எதிரொலிக்கும் .."மக்களே ! அருளப்பன் மொவளுக்கு கல்யாணத்துக்கு வெள்ளிக்கிழம படம்" " என்ன படமாம்?" " ஆயிரத்தில் ஒருவன்' (ஏற்கனவே 6 தடவ போட்டாச்சே? சொல்ல முடியுமா? அடி தான் விழும்) "நல்லா தெரியுமா?" "போப்பா! அருளப்பன் நேத்து தான் அட்வான்ஸ் குடுத்துண்டு வந்தாராம்"..அடடா! இன்னும் 2 நாள் இருக்கே?..நம்ம நண்பர் குழு (கிட்ட தட்ட 10 பேர்) அப்பவே ரெடியாயிருவோம்.

வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடத்தில் பசங்க மொகத்துல அத்தனை மகிழ்ச்சி ! வரலாறு வாத்தியார் கண்டுபிடிச்சிருவாரு.."என்னடே! இன்னிக்கு ஊருல படமா?".."ஆமா சார் ..ஆயிரத்தில் ஒருவன்" ..வாத்தியார் MGR பத்தி அவர் பங்குக்கு வஞ்ச புகழ்ச்சி -யில கொஞ்ச நேரம் பசங்கள கிண்டலடிப்பார் (கிட்டதட்ட ஊரே MGR ரசிகரா இருக்கும் போது ஊரிலுள்ள வாத்தியார் பெரும்பாலும் MGR-ய் கிண்டல் பண்ணுவது தான் பசங்களுக்கு புரியல்ல.".இந்த வாத்தியாருங்கள்ளாம் கருணாநிதி கோஷ்டிங்க") .நமக்கு அதே அளவு உற்சாகம் இருந்தாலும் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம் .அதே பள்ளியில வேலை பாக்குற டீச்சர் புள்ள..அம்மாக்கு சினிமாவே ஆகாது..அதிலும் MGR -ன்னா சுத்தமா ஆகாது).

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து ,விளையாடப்போகிறேன் என்று சொல்லி விட்டு நம்ம கோஷ்டியோடு கலந்துக்குவேன்..மெதுவா சினிமா போடப்போற வீட்டுக்கு பக்கதுல போய் நோட்டம் போடுறது ..இன்னிக்கு படம் உண்டுன்னு confirm பண்ணிட்டு ,நேரே கடற்கரை ..குட்டி மலைகளை போல உயரமான சுத்தமான மணல் குன்றுகள் ..அருகருகே கத்தாளை வளர்ந்து குகைகள் போல தோற்றம் .கோஷ்டியை ரெண்டா பிரிச்சு (MGR கோஷ்டி ,நம்பியார் கோஷ்டி) ,ஆளுக்கொரு கம்பை எடுத்துக்கொண்டு மணல் மேட்டு உச்சியில் நின்று வாள் சண்டை ..அவ்வப்போது கத்தாளை குகைகளிலிருந்து எதிர்பாரா தாக்குதல்..மலையிலிருந்து உருள்வது போல ,பட்டு போன்ற அந்த மணல் சரிவில் உருளுதல் என்று நிஜ வாள்சண்டை ரேஞ்சுக்கு தொடரும் விளையாட்டு .இருட்டியதும் உடலிலிலும் தலையிலும் கடற்கரை வெள்ளை மண்ணோடு வீடு .குளித்து விட்டு மீண்டும் ஒண்ணா சேர்ந்து படம் போடப்போகிற பெரிய திறந்த மணல் வெளியை ஒட்டிய ரோட்டில் படப்பொட்டி கொண்டு வரும் டாக்சி-க்காக waiting..கொஞ்க நேரத்தில் ..அதோ வருகிறது டாக்சி ..பெரிய திரையை துணிகடையில் துணியை சுருட்டிவைத்தது போல கம்பு போலாக்கி டாக்சி-யின் மேல் கட்டியிருந்தால் confirmed..அவ்வளவு தான் ..பசங்க ஆளாளுக்கு பறந்து விடுவார்கள் ..பின்ன! பொட்டி வந்தாச்சுன்னு அவங்கவங்க தெருவுல சொல்ல வேணாமா? சட்டு புட்டுன்னு சாப்பிட்டு வேலைய முடிச்சிட்டு எல்லோரும் வரணுமுல்ல!..அதுலயும் தாய்மார்கள் வாத்தியார் படம்ணா சாப்புடாட்டியும் பரவாயிலிண்ணு மொத ஆளா வந்துடுவாங்க.

பாய்மரத்துக்கு உபயோகிக்குற ரெண்டு உயரமான மூங்கில கொண்டு வந்து நட்டு ,அதுல திரைய கட்டியாச்சு..Projector-அ தூக்கிட்டு வந்து 20 மீட்டர் தள்ளி போகஸ்-லாம் பாக்குறாங்க .தியேட்டர்ல போடுர மாதிரியே எதாவது ஒரு நியூஸ் ரீலை முதல்ல போடணும் ..அப்போ தான் கொஞ்ச நஞ்சம் மீதியிருக்குற சனங்களும் "ஏ! நியூஸ் போட்டாச்சி" -ன்னு அரக்க பரக்க ஓடி வருவாங்க..

நமக்கு இன்னும் தான் பிரச்சனையே! மத்த பசங்கள்ளாம் நினைச்ச நேரத்துக்கு வரலாம் .நம்ம அப்பிடியா ? டீச்சர் புள்ளையாச்சே! மெதுவா வீட்டுகுள்ள போவேன் ..அம்மா முன்னால நான் போய் நிக்குற அழகும் ,ரோட்டுல மக்கள் பரபரப்பா போற சத்தமும் ..அம்மாக்கு தெரியாதா நான் எதுக்கு வழியுறேன்னு .." என்ன! இன்னிக்கு படமா?" "ஆமா" "யார் படம்?" "MGR படம்" "ம்..ரொம்ப முக்கியம்...சரி..சரி..ஜெபம் படிச்சுட்டு சாப்பிட்டு போ"..வேற வழி..?

குடும்பமே ஜெபத்துல உக்காரும் ..நம்ம மனசோ எங்கியோ இருக்கும் ..இப்போ கிட்ட தட்ட எல்லோரும் போயிருப்பாங்க..பரந்த அந்த மணல் வெளியில் அவங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு இடத்த புடிச்சுகிட்டு ,சிலர் உக்கார ,சிலர் படுத்துகிட்டே பாக்குறதுக்கு வசதியா மணலை ஒருக்களித்து தலையணை போலாக்கி துண்டோ போர்வையோ விரித்து தயாராயிருப்பார்கள் .நான் போய் நம்ம பசங்க ஒண்ணா உக்காந்திருக்கிற இடத்த கண்டுபிடிச்சு கூட்டத்துல நுழைஞ்சு போய் சேந்துக்கணும் ..எனக்காகவே பசங்க எப்பொதும் projector-kku தெக்க 5 மீட்டர் தூரத்துல இருப்பாங்க..இங்க இன்னும் ஜெபமே முடியல்ல ..ஜெபத்துல நான் சொல்ல வேண்டிய turn வரும் "அருள் நிறைந்த மரியே வாழ்க..கர்த்தர் உம்முடனே....." படுவேகமா சொல்லுவேன்..10 தடவ திருப்பி சொல்லணும் ..ஒரு வழியா ஜெபம் முடிஞ்சதும் ..சாப்பாடு ..சாப்பிட ஆரம்பிசதும் ..அங்க நியூஸ் ரீல் ஓடுர சத்தம் கேக்கும் ..நான் அள்ளி திணிச்சுட்டு ..குளிருக்கு ஒரு துண்டை எடுத்து போட்டுகிட்டு "ம்மா..வர்ரேன்"-ன்னு பதிலுக்கு காத்திருக்காம ஓடுனா படம் போடுர எடத்துல போய் தான் நிப்பேன்..நம்மளை எதிர் பார்த்திருக்கிற பசங்க நம்மள கண்டதும் 'மக்களே!" குரல்குடுப்பாங்க. ..எனக்கு பசங்க மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் ..இருட்டுல நான் பாட்டுக்கு கூட்டத்துகுள்ள போயிட்டிருப்பேன் .குறஞ்சது 10 பேர் காலையோ மிதிச்சுகிட்டு (அவங்களும் கண்டுக்குறதில்ல..)மண்ணு தெரியிர இடத்துல கால வச்சு தாண்டி தாண்டி பசங்க இருக்க இடத்துல கிட்ட தட்ட குதிச்சு தான் கரையேறுவேன்..படம் தொடங்குறதுக்கு சரியா இருக்கும்..சுத்தி ஒரு நோட்டம் விட்டா..ஒட்டு மொத்த ஊரும் இங்க தான் இருக்கு.

இனிமே தான் பசங்க எங்க வேலைய ஆரம்பிபோம் ..10 பேர் கும்பலா இருப்போம் .நமக்கு லீடர் ஆரோக்கியம் .அவன் சொன்னாத்தான் ஒண்ணா செய்யுறது .இப்போ எழுத்து போட்டாச்சு ..கம்பெனி பேரெல்லாம் போட்டு ..போட்டான் பாரு "புரட்சி நடிகர் M.G.R" ..அவ்வளவு தான் ..கை தட்டல் ,விசில் ..கடல்ல போற கப்பல் காரனுக்கே கேக்குற மாதிரி ..கொஞ்ச பேரு துண்டை எடுத்து வானத்துல வீசுறாங்க ..அது அவன் கிட்ட திருப்பி வர்ரதுக்கு பதில் வேற யார் தலை மேலே விழ அவன் சுருட்டி வச்சுகுறான் (படம் முடிஞ்சு தான் துண்டு பரிமாற்றம் நடக்கும்) ..இத்தனை களேபரம் நடந்து கொண்டிருக்க ,நம்ம பசங்க இருக்க இடம் இடிவிழுந்த மாதிரி இருக்கும் .கை தட்டல் ,விசில் ஏன் அசைவே கிடயாது..அப்பமே சுத்தி இருக்கவனுங்க விவகாரமா பாப்பாங்க ..ஒட்டு மொத்த கூட்டமும் வாத்தியார் பேருக்கு கை தட்டும் போது இவனுங்க கல்லுளி மங்கன் மாதிரி இருக்கானுவளே? அப்படின்னு பாப்பாங்க..திரையில வேற எழுத்தெல்லாம் ஓடிட்டிருக்கும் ..ஆரோக்கியம் சொல்லுரதுக்கு நாங்க வெயிட்டிங் ..திடீர்ன்னு "எடிட்டிங் --ஏகாம்பரம்" -னு ஸ்கிரீன்ல வரவும் ஆரோக்கியம் "அட்ரா மக்களே!" ..10 பேரும் கைதட்டல் ,விசில்னு கலக்கி எடுத்துடுவோம் ..ஒட்டு மொத்த கூட்டமும் திரும்பி பாக்கும் ..அங்கங்கே முணுமுணுப்பு கேக்கும் "ஆரம்பிச்சுட்டாங்க.."..பக்கத்துல ஒரு பெருசு "நானும் பல தடவ பாத்துடுட்டேன் ..இப்டியே பண்ணிட்டிருக்காங்க ..யாருக்க மொவனுவள்ள அது"..அங்கங்கே அறுப்பு கண்டமும் கேக்கும் (கெட்ட வார்த்தய நம்ம ஊருல 'அறுப்பு கண்டம்'-ன்னு தான் சொல்லுவாங்க..வரலாறு & புவியியல் பரிட்சையில "கண்டங்களிலே பெரிய கண்டம் எது?' கேள்விக்கு நம்ம நண்பன் எழுதுன விடையும் "அறுப்பு கண்டம்' தான்)

படம் இப்போ பிக்கப் ஆயி மக்கள் ஒன்றி போயிருப்பாங்க.இப்போ வாத்தியாரும் நம்பியாரும் வாள்சண்டை..வாள் சண்டை முடிஞ்சவுடனே..ஆஹா! இப்போ வர்வானுங்கன்னு நினைக்குறதுக்குள்ளால ..ஒருத்தர் எழும்பி ப்ரொஜக்டர் ஆப்பரேட்டர் கிட்ட வந்து "அண்ணாச்சி ..அந்த வாளடி(வாள் சண்டை)-ய சுத்திப் போடும் "..அதானே பாத்தேன் ..வாத்தியார் படத்துல வாளடி,கம்படி ரெண்டும் ஒரு தடவையாவது திருப்பி போடணும்-றது நம்ம ஊருல எழுதப்படாத விதி..நம்ம ஊருக்கு வர்ற ஆப்பரேட்டர் கிட்ட ஏற்கனவே ஸ்டுடியோ-ல சொல்லி விட்டுருப்பாங்க ..மரியாதயா போட்டுடு,இல்லைன்னா ப்ரொஜக்டர் கடல்ல தான் போகும்.திரும்பி வராதுண்ணு .அதனால சொன்னவுடன அவரும் சுத்தி போட்டுடுவாரு.

இன்னொரு ஆசாமி..50 வயசு இருக்கும்..வாத்தியாருன்னா அநியாயத்துக்கு உணர்ச்சிவசப்படுவார்.ஒரு குகைக்குள்ள வாத்தியாரும் நம்பியாரும் ஒருத்தரை ஒருத்தர் தேடிட்டிருப்பாங்க..திடீர்னு நம்பியார் கைல கத்தி வச்சுகிட்டு வாத்தியார் பின்னாலயிருந்து வந்துகிட்டிருப்பார் .இவருக்கு இருப்பு கொள்ளாது ..கிட்ட தட்ட எழும்பி,சத்தம் போட்டு "வாத்தியாரே! திரும்பி பாருங்க..அன்னா பின்னால வர்றான்.."-னு பொலம்புவார்..ஏற்கனவே இதே படம் 6 தடவ போட்ட போதும் இதேதான் பண்ணாரு.நாங்க பசங்க இவரு உக்காந்திருக்க இடத்த தேடி நைஸா நகர்ந்து அவர சுத்தி உக்காந்துகுவோம்..நாங்க இருக்கத கூட கவனிக்க மாட்டரு .எதாவது ஒரு சீன் -ல வாத்தியார் அம்மா கிட்ட செண்டிமெண்டா எதாவது வசனம் சொல்ல இவர் இங்கிருந்து 'ச்சு ..ச்சு..ச்சு" -ன்னு நாய கூப்பிடுரமாதிரி பண்ணுவார் ..கொஞ்ச நேரத்துல சம்பந்தம் இல்லாத ஒரு சீன் -ல நாங்க பசங்க எல்லொரும் சொல்லி வச்சு ஒரே நேரத்துல 'ச்சு..ச்சு..ச்சு" -ன்னு கொட்ட ஆரம்பிச்சுடுவோம்..அப்போதான் அவர் தன்னிலைக்கே வருவாரு..சுத்தி முத்தி எங்களையெல்லாம் பாப்பாரு ..மண்ணை எடுத்து வாரி எங்க மேல வீசி திட்டுவார்..நாங்க எழும்பி பறந்தே போயிடுவோம்.

இப்படியே நாங்க நோட் பண்ணி வச்சுருக்குற ஆட்களோட வம்பு பண்ணி திட்டு வாங்கி ஒரு ரவுண்டு வந்தா படம் முடிஞ்சுடும் .படம் முடிஞ்சா பாதி கூட்டம் தான் எந்திரிக்கும் .கொஞ்ச பேர் ஏற்கனவே உக்காந்த இடத்துலயே படுத்து தூங்கிருப்பாங்க..கொஞ்ச பேர் படம் முடிஞ்சு அங்கியே படுத்துடுவாங்க ..ஜிலு ஜிலு-ன்னு கடற்கரை காத்துல மணல்ல தூங்க யாருக்கு தான் பிடிக்காது..ஆனா அம்மா டின்னு கட்டிடுவாங்க .அதுனால பேசாம வீட்டுக்கு நடைய கட்டு..

ஒரு நாள் படம் பாதி ஓடிட்டிருக்கும் போது கரண்ட் கட்..மக்கள் உக்காந்த இடத்துலயே பேசிட்டு கரண்டுக்காக வேயீட்டிங்..ரொம்ப நேரமாயும் கரண்ட் வரல்ல ..பின்னாலயிருந்து ஒருத்தர் ப்ரொஜக்டர் ஆப்பரேட்டருக்கு கேக்குறமாதிரி சத்தம் போட்டு சீரியஸா சொன்னார் "ஓய்! கரண்டு வர்ர வரைக்கும் அந்த நியூஸை போடக்கூடாதா..?".

-ஜோ

Friday, February 18, 2005

வார்த்தை சித்தர்

சமீபத்திய குமுதம் இதழில் வலம்புரி ஜான் அவர்களின் தற்போதைய உடல் நிலை குறித்து வைரமுத்து எழுதியிருந்த கட்டுரையில் அவரின் தற்போதைய நிலையிலுள்ள புகைப்படத்தை கண்டதும் மனது பதறியது.

சின்னவயதில் எனக்கு ஏனோ எம்.ஜி.ஆர் என்றாலே பிடிக்காது . அதே எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போது தற்செயலாக வானொலி கேட்க நேர்ந்தது..அப்போது யாரோ ஒருவர் எம்.ஜி.ஆர் பற்றி பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருந்தேன் .என்னையறியாமலேயே கண்ணீர் வந்து எட்டிப்பார்த்தது..அன்று நான் அதிகம் விரும்பாத எம்.ஜி.ஆர்-க்காக என்னை கண்ணீர் விட வைத்தவர் 'வலம்புரி ஜான்' என்று பின்னர் அறிந்தேன்.

காலப்போக்கில் அவருடைய பேச்சுக்கு தீவிர ரசிகனாகி விட்டேன்.கடல் சங்குகளில் 'வலம்புரி' அபூர்வமானது என்பதால் ,நெய்தல் நிலத்து மைந்தனான ஜான் -க்கு 'வலம்புரி' என்று கலைஞர் சூட்டிய பெயர் முற்றிலும் பொருத்தம்.

பல்துறை அறிவும் மொழி வளமும் ஒருங்கே அமைவது அரிது. வலம்புரி ஜான் அத்தகைய அரிதான மனிதர் .நம்முடய தமிழ் சமூகத்தில் திறமைகேற்ற அங்கிகாரம் கிடைப்பது அரிது என்பதோடு அரைகுறைகள் அதீத அங்கீகாரம் பெறுவதும் வழக்கமாக இருக்கிறது.

வலம்புரி ஜான் போன்ற அற்புதமான பேச்சாளர்களை விட மூன்றாம் தர அரசியல் பேச்சாளர்கள் தாம் மக்களிடையே பிரபலம் .4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மத்திய ரயில் நிலயத்தில் தோளில் ஒரு பையோடு நின்று கொண்டிருந்தார். யாரும் அவரைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை . அருகில் சென்று வணக்கம் சொல்லி "நான் உங்கள் ரசிகன்" என்று சொன்னேன் .மகிழ்ந்து புன்னகைத்து விட்டு ,ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் விடை பெற்றார்.

ஆழ்ந்த சிந்தனையும்,அற்புதமான மொழி புலமையும் ,அகண்ட வாசிப்பு அனுபவமும் கொண்ட அவர் ,அரசியலில் கண்ணதாசனைப் போல் கிளை விட்டு கிளை தாவும் பறவையாகவே இருந்தார். தி.மு.க, அ.தி.மு.க ,த.ம.கா ,மறுபடியும் தி.மு.க என்று எல்லா இடத்திலும் இருந்திருக்கிறார்.

சிங்கப்பூரில் 'இமயங்கள்' நிகழ்ச்சியில் 2 ஆண்டுகளுக்கு முன் பேச வந்த போது உடல் தளர்ந்து ,பார்வை மங்கிய நிலையிலும் உணர்ச்சிகரமாக பேசியது நினைவில் நிற்கிறது.
இப்போது மிகவும் உடல் நிலை குன்றிய நிலையில் உடல் உபாதைகளோடு போராடி கொண்டிருப்பது மனதுக்கு வேதனையாக இருக்கிறது .கோடி கோடியாக கொட்டி வைத்திருக்கின்ற தி.மு.க ,அவருடைய சிகிச்சை செலவுக்கு உதவி செய்தால் குறைந்தா போய் விடும்.?

மீண்டும் அவர் எழுந்து வந்து தமிழ் பணியாற்ற மனதார வேண்டுவோம்...

Monday, February 14, 2005

தேச பக்தர்

சிங்கப்பூர் வந்த புதிதில் நடந்த நிகழ்ச்சி ஒன்று.

பிரபலமான செந்தோசா தீவுக்கு கம்பிவட ஊர்தியில் செல்வதற்காக நண்பர்களோடு அனுமதி சீட்டு பெறும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். ஒரு நடுத்தர வயதுக் காரர் ஏதோ விசாரிக்கும் முகமாக என்னை நோக்கி வந்தார்.நேரடியாக இந்தியில் ஏதோ கேட்டார்..நான் அவரிடம் "மன்னிக்கவும்.எனக்கு இந்தி தெரியாது.உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியுமா?" என்று பொருள்பட ஆங்கிலத்தில் வினவினேன் .மனிதர் உடனே முகத்தை கேலி செய்யும் விதமாக வைத்துக் கொண்டு "இந்தி தெரியாதா?" என்று கேட்டார் .நான் 'தெரியாது' என்று மறுபடியும் சொன்னேன் .மனிதர் அதோடு விட்டுவிட்டு கேட்க நினைத்ததை கேட்டிருக்கலாம் ..இன்னும் கேலி செய்யும் தொனியோடு "இந்தியராக இருக்கிறீர்கள்..எப்படி இந்தி தெரியாமலிருக்கலாம்?"..அது வரை பொறுமையாக இருந்த நான் உண்மையிலேயே வெடித்து விட்டேன் .."இதோ பாருங்கள்..நீங்கள் இப்போது உத்தர பிரதேசத்திலோ அல்லது பீகாரிலோ இல்லை..இது சிங்கப்பூர் ..இங்கே தமிழ் தான் ஆட்சி மொழிகளில் ஒன்று ..இந்தி அல்ல..முடிந்தால் ஆங்கிலத்தில் பேசுங்கள்..அல்லது தமிழ் கற்று கொள்ளுங்கள்..உங்கள் அறியாமையை இங்கு வந்து காட்டாதீர்கள்" என்று பொருள் பட கத்தி தீர்த்து விட்டேன்.
இந்த மனிதரின் மனப்போக்கில் எனக்கு பல கேள்விகள் எழும்பின..

1. தோற்றத்தின் மூலம் நான் இந்திய இனத்தவன் என்று அவர் புரிந்து கொண்டது சரியே..ஆனால் நான் இந்திய தேசத்தவனா அல்லது சிங்கப்பூர் இந்தியனா என்று கூட அவருக்கு தெரியாது .இந்தியாவில் பிறந்தவனென்றால் கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற கூமுட்டை தனத்தை கூட சகித்து கொள்ளலாம்..ஒரு வேளை சிங்கப்பூர் தமிழனாக இருந்தாலும் இந்தி தெரிந்திருக்க வேண்டுமென்று நினைக்கிற அளவுக்கா மாங்காய் மடையனாக இருக்க முடியும்?

2.இவர் வட நாட்டினர் என்று தெரிந்ததும் ,சிங்கப்பூரே ஆனாலும் கூட நான் அவர் தமிழ் பேச வேண்டுமென்று எதிர் பார்க்கவில்லை..ஆனால் சம்பந்தமே இல்லாமல் நான் இந்தி பேச வேண்டும் என்று எப்படி இவர் எதிர் பார்க்கிறார்?

3.'இந்தி தெரிந்தால் தான் இந்தியன்' என்ற மனநிலை இவர்களுக்கு ஏற்பட என்ன காரணம்?..

இந்தி படிக்குறவங்க படிச்சிட்டு போங்கப்பா..நமக்கு அதில் ஒண்ணும் பிரச்சினை இல்லை..ஆனா இந்தி அறிந்திருக்கிறவன் கூடுதல் தேச பக்தனாய் காணப்படுவது எதனால் .? நம்ம ஆளுங்களோட தேசபக்தி அளவுகோல்களை நினைத்தாலே புல்லரிக்குது.

குப்பை தொட்டி வரை குப்பையை கொண்டு வந்து சுதந்திர திமிர்ல வேண்டுமென்றே குப்பை தொட்டிக்கு வெளியே கொட்டி விட்டு போகிற ,பொது இடங்களில் மற்றவர் உரிமையை மதிக்க தெரியாத ,சமூகத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கரை இல்லாத ஒருவர் தேச பக்திமானாய் ஆவதற்கு சுலப வழி உண்டு..ஒன்றுமில்லை ..இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் நடக்கும் போது கூட்டத்தோட TV முன்னால உட்கார்ந்துகிட்டு.. இந்தியா காரன் எப்படி மோசமா விளையாடினாலும் குருட்டாம் போக்கிலயாவது ஜெயிக்கணும் ...பாகிஸ்தான் காரன் நல்லா விளையாடினாலும் அவுட் கொடுக்காத அம்பயர திட்டணும் ... தப்பி தவறி பக்கத்தில யாரவது "அவனுங்க நல்லா ஆடுராங்கப்பா" -ன்னு சொன்னா "தேச பக்தி கொஞ்சமாவது இருக்காடா?"-ன்னு கண்ட படி திட்டணும்..உடனே இவர் பெரிய தேச பக்தர் ஆயிடுவார்.

Monday, February 07, 2005

இலக்கிய அலர்ஜி

ஒரு சராசரி வாசகன் தான் மக்களே நான்.சின்ன வயசில இருந்து கையில கிடைக்கிற பிட் நோட்டீஸ் முதற்கொண்டு எதையும் விடாம படிக்கிறதுண்டு.ஆனா இத்தனை வயசாகியும் ,கதை,நாவல் படிக்குற பழக்கம் வரவே மாட்டேங்குது.அட என்னப்பா வெறும் கதைய படிக்குறதுல என்னத்த புதுசா தெரிஞ்சிக்கப் போறோம்.அதுக்கு பதிலா எதாவது தகவல் இருக்கிற மாதிரி கட்டுரையோ அல்லது துணுக்கு செய்திகளோ படிச்சா பிரயோஜனமா இருக்கும் அப்படின்னு தான் எண்ண ஒட்டம் போகுது..இப்போ குமுதம் ரிப்போர்ட்டர்ல ராகவன் எழுதிட்டு வர்ற 'நிலமெல்லாம் ரத்தம்' மாதிரி தகவல் சார்ந்த கட்டுரைகள் தான் நம்ம சாய்ஸ்..அது போல அரசியல்,சமூகம் சார்ந்த விவாதங்கள் எட்டி நின்று வேடிக்கை பார்க்க ரொம்ப பிடிக்கும்.

ஆனாலும் இந்த 'இலக்கிய விவாதம்' நமக்கு இம்மியும் பிடி படாத விசயமா இருக்கு..நம்மை போல படிக்கும் பழக்கமுள்ள நபர்களோடு இது பற்றி பேசுகிற தைரியம் எனக்கில்லை..அவங்க பாட்டுக்கு ஜெயகாந்தனோட அந்த நாவல் படிச்சிருகீங்களா? ஜெய மோகனோட இந்த நாவல் படிச்சிருகீங்களா?-னு எதாவது கேட்டா நான் அம்பேல்.

இப்போ நமக்கு சந்தேகம் என்னணா , 'இலக்கியம்'-னா என்ன? இந்த மாதிரி இலக்கிய வட்டத்துக்குள்ள தொபுக்கடீர்னு குதிக்கிறதுக்கு இந்த மாதிரி நாவல்-லாம் படிச்சிருகணுமா? தகவல்,வரலாறு சார்ந்த எழுத்துககளும் இலக்கியம் தானா?
அடிக்க வராதீங்கண்ணா! எதோ அறியா சிறுவன் கேட்டுட்டேன்...கொஞ்சம் பொறுமையுள்ள அண்ணாச்சி யாராவது சொல்லி புரிய வையுங்கப்பா..

கணியம் -என்ன மக்களே அர்த்தம்?

வணக்கம் நண்பர்களே!நாஞ்சில் நாட்டு நெய்தல் நிலத்துக்காரன் என்பதால் 'கணியம்' என்ற இந்த தலைப்பு.இது மீனவர்களின் தொழிலோடு சம்மந்தப் பட்ட ஒரு வார்த்தை.
மீன் பிடி வலைகளிலே பல வகை .

1.செவ்வக வடிவிலான,நீண்ட வலையை வீசி ஓரு மணி நேரத்தில் அவற்றை உடனே எடுத்து மீன்களை கண்ணிகளிலிருந்து உருவி எடுப்பது ஒரு வகை.இவற்றில் கண்ணிகளில் சிக்கி கொண்ட மீன்களே நம் கைக்கு வருகின்றன.கண்ணிகளில் மாட்டிக் கொண்ட மீன்கள் தண்ணீரிலிருந்தாலும் கூட சிறிது நேரத்தில் இறந்து விடுகின்றன.எனவே முடிந்த அளவு விரைவாக அவை அழுகுமுன் கரை சேர்ப்பது அவசியம்.

2.மிக சிறிய கண்ணிகளை கொண்டு ,நம்மூர் மூதாட்டிகள் வைத்திருக்கும் 'சுருக்கு' போன்று வடிவமைக்கப் பட்ட இவ்வகை பை போன்ற வலையை குமரி மாவட்ட மீனவர்கள் 'மடி' என்று அழைக்கிறார்கள். குறைந்தது 40 மீட்டர் நீளம் ,10 மீட்டர் அகலம் கொண்ட மெகா பைக்குள் கூட்டமாக வரும் தன்மை கொண்ட மீன் வகையை லாவகமாக ஒரு சேர உள்ளே தள்ளி ,கண்ணிமைக்கும் நேரத்தில் சுருக்கை பூட்டிக் கொண்டு மொத்தமாக மீன்களை அள்ளிக் கொள்ளும் முறை இது.

3.சந்தையில் மிக விலையுயர்ந்த கல் இரால் (lopstar) போன்ற உயிரினங்கள் பாறை பகுதிகளில் கிடைக்கின்றன .இருந்தாலும் இவை மீன்களை போன்று பெரும் எண்ணிக்கையில் வருவதில்லை. இதன் சிறப்பு இவை வலைகளில் மாட்டிக் கொண்டாலும் இறப்பதில்லை..கரைக்கு வந்த பின்பும் நீண்ட நேரம் உயிரோடிருக்கும் தன்மை கொண்டவை..எனவே இவற்றை கரை சேர்ப்பதில் அவசரம் காட்ட தேவையில்லை. எனவே இவற்றை பிடிப்பதற்கு ஏறத்தாழ முதல் வகை வலையையே பயன்படுதினாலும் அவற்றை உடனே எடுத்து வருவதில்லை.

குறிப்பிட்ட இடத்தில் இந்த வலைகளை தண்ணீருக்குள் அமுக்கி விட்டு ,அடையாளத்திற்கான மிதவைகள் மட்டும் வெளியே தெரியும் வகையில் வலையை விட்டு விட்டு மீனவர்கள் கரை வந்து விடுவார்கள் .மீண்டும் 2 அல்லது 3 நாட்கள் கழித்து வலையை போட்ட இடத்தில் சென்று எடுத்து வர வேண்டும்..ஆழ் கடலில் ,கிட்ட தட்ட நிலம் மறைந்து ,மலை உச்சிகளும் ,சில உயரமான கோபுரங்களும் ,தேவாலய உச்சிகளுமே மட்டும் தெரிகிற பரந்து விரிந்த தண்ணீர் பரப்பில் குறிப்பாக தாங்கள் விட்டுச் சென்ற வலையின் இருப்பிடத்தை கணித்து கொள்வதற்கு ,மீனவர்கள் கோவில் கோபுரங்களையும் ,மலை முகடுகளையு ஒரு சேர்த்து ஒரு கணக்கை மனதுக்குள் வைத்துக்கொள்கிறார்கள். இதனை அவர்கள் 'கணியம்' என்றழைக்கிறார்கள்.

வணக்கம்

நம்ம நண்பர் ஒருவர் மூலமா சமீபத்தில் வலை பூக்கள் அறிமுகம் கிடைத்தது.அப்போதிலிருந்தே தமிழ்மணம்.காம்-ய் அரை மணி நேரத்திற்கொரு முறை refresh பண்ணுறதே நம்ம பொழப்பா போச்சு.

நாமும் ஒண்ணு ஆரம்பிச்சுட வேண்டியது தான்..நாம பிறந்து வளர்ந்த நெய்தல் நிலத்து அனுபவங்களை ,செய்திகளை சொல்லலாமேன்ணு தோணிச்சு.

வலை பூ நண்பர்கள் மீது பாரத்தைப் போட்டு ஆரம்பிப்போம்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives