Monday, July 04, 2005

கடற்கரை மணலில் M.G.R படம்- ஆட்டோகிராப்.

முக்கடலும் முத்தமிடும் குமரி-க்கு மேற்கே அரபிக்கடல் தாலாட்டும் (அவ்வப்போது சீரழிக்கும்) அமைப்பான மீனவ கிராமம் ,நம்ம சொந்த ஊர் .கிட்டதட்ட 25 வருடங்கள் பின்னோக்கினாலும் அப்பொதே,மற்ற மீனவ கிராமங்களிலிருந்து சற்று வித்தியாசம் என்று தான் சொல்ல வேண்டும்.ஊருக்கு மேற்கே பழமையான மிகப்பெரிய தேவாலயம் .அதையொட்டி ஊருக்கு சொந்தமான (நான் உயர்நிலை வரை படித்த,அம்மா எனக்கும் படிப்பித்த) உயர்நிலைப்பள்ளி (இப்போது மேல்நிலை) .அற்புதமான பெரிய தேர் .எனக்கு தெரிந்து இத்தனை பெரிய தேரை எந்த தேவாலயத்திலும் பார்த்ததில்லை .(இப்போது அந்த தேர் இல்லை..1982 மண்டைகாடு கலவரத்தில் எரிக்கப்பட்டது) எந்த மீனவ கிராமத்திலும் இல்லாத வகையில் தேவாலயத்தில் முன்னால் 200 அடி அகலம்,800 மீட்டர் நீளமான தேரடி வீதி போன்ற கடற்கரை மணலாலான தெரு.கசமுசா என்றில்லாமல் தெருக்களாக கட்டப்பட்ட வீடுகள் .அதிக ஆடம்பரமும் ,அதிக ஏழ்மையும் இல்லாத வீடுகளின் தோற்றம்..கிராமத்துகுரிய ஓலை குடிசைகள் கிட்டதட்ட இல்லை என்றே சொல்ல வேண்டும் . ஊரின் இரு புறங்களிலும் சுத்தமான உயரமான மணல் தேரிகள் நிரம்பிய கடற்கரை,தென்னந்தோப்புகள்.

மக்களின் பரம்பரை தொழில் மீன்பிடி .அப்போது சுமார் 3000 பேர் .ஒரே சாதி .ஒரே மதம்.சுத்தி வளைத்து பார்த்தால் எல்லொரும் எல்லொருக்கும் ஒரு வகையில் சொந்தக்காரர்கள்.விசைபடகுகள் இன்றி சாதாரண கட்டுமரத்தில் தொழில் செய்வதால் ,துடுப்பு போடும் வலிமையான தோள்கள் கொண்ட ஆண்கள் .கஷ்டத்திலும் பிள்ளைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச விழிப்புணர்வுள்ள கூட்டம்.

ஊரைப்பத்தி சொல்லிட்டே இருக்கலாம்..சரி ..matter-க்கு வருவோம்..அப்போ நான் ஊர்பள்ளியிலே படிச்சிட்டு இருந்த போது TV கிடையாது..தமிழ் நாட்டு தலையெழுத்துக்கு எங்க ஊர் மட்டும் விதி விலக்கா? நம்ம மக்களுக்கு சினிமா-ன்னா அப்படி ஒரு ஆர்வம் ..அதிலும் வாத்தியார் படம்னா கேக்கவே வேணாம்.கிட்டதட்ட ஒட்டுமொத்த ஊரும் வாத்தியார் பக்தர்களாவே (உபயம் : படகோட்டி ,மீனவ நண்பன்)இருந்தது (என்ன மாதிரி ஒரு சில சிவாஜி பைத்தியங்களை தவிர) ..எதாவது ஒரு காரணத்த சொல்லி வாரத்துக்கு ஒரு படமாவது ஊருல போடுவாங்க ..பெரும்பாலும் வாத்தியார் படம்..அப்பப்ப சிவாஜி படம்.35 MM திரையில கடற்கரை மணல்ல ஒட்டுமொத்த ஊரும் ஒண்ணா உக்காந்து படம் பாக்குற அனுபவம் இருக்கே !அடடடா!
கல்யாணம் ,மறுவீடுல இருந்து புது கட்டுமரம் ,வலை release வரைக்கும் எதாவது ஒரு வைபவதுக்கு சம்பந்தபட்டவர் படமாவது போடலிண்ணா என்னங்க மரியாத1 நாகர்கோவில்-ல ஸ்டுடியோ-க்கு போய் advance கொடுத்துட்டு வந்தவுடனே பள்ளிக்கூடத்துல தான் இது முதல்ல எதிரொலிக்கும் .."மக்களே ! அருளப்பன் மொவளுக்கு கல்யாணத்துக்கு வெள்ளிக்கிழம படம்" " என்ன படமாம்?" " ஆயிரத்தில் ஒருவன்' (ஏற்கனவே 6 தடவ போட்டாச்சே? சொல்ல முடியுமா? அடி தான் விழும்) "நல்லா தெரியுமா?" "போப்பா! அருளப்பன் நேத்து தான் அட்வான்ஸ் குடுத்துண்டு வந்தாராம்"..அடடா! இன்னும் 2 நாள் இருக்கே?..நம்ம நண்பர் குழு (கிட்ட தட்ட 10 பேர்) அப்பவே ரெடியாயிருவோம்.

வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடத்தில் பசங்க மொகத்துல அத்தனை மகிழ்ச்சி ! வரலாறு வாத்தியார் கண்டுபிடிச்சிருவாரு.."என்னடே! இன்னிக்கு ஊருல படமா?".."ஆமா சார் ..ஆயிரத்தில் ஒருவன்" ..வாத்தியார் MGR பத்தி அவர் பங்குக்கு வஞ்ச புகழ்ச்சி -யில கொஞ்ச நேரம் பசங்கள கிண்டலடிப்பார் (கிட்டதட்ட ஊரே MGR ரசிகரா இருக்கும் போது ஊரிலுள்ள வாத்தியார் பெரும்பாலும் MGR-ய் கிண்டல் பண்ணுவது தான் பசங்களுக்கு புரியல்ல.".இந்த வாத்தியாருங்கள்ளாம் கருணாநிதி கோஷ்டிங்க") .நமக்கு அதே அளவு உற்சாகம் இருந்தாலும் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம் .அதே பள்ளியில வேலை பாக்குற டீச்சர் புள்ள..அம்மாக்கு சினிமாவே ஆகாது..அதிலும் MGR -ன்னா சுத்தமா ஆகாது).

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து ,விளையாடப்போகிறேன் என்று சொல்லி விட்டு நம்ம கோஷ்டியோடு கலந்துக்குவேன்..மெதுவா சினிமா போடப்போற வீட்டுக்கு பக்கதுல போய் நோட்டம் போடுறது ..இன்னிக்கு படம் உண்டுன்னு confirm பண்ணிட்டு ,நேரே கடற்கரை ..குட்டி மலைகளை போல உயரமான சுத்தமான மணல் குன்றுகள் ..அருகருகே கத்தாளை வளர்ந்து குகைகள் போல தோற்றம் .கோஷ்டியை ரெண்டா பிரிச்சு (MGR கோஷ்டி ,நம்பியார் கோஷ்டி) ,ஆளுக்கொரு கம்பை எடுத்துக்கொண்டு மணல் மேட்டு உச்சியில் நின்று வாள் சண்டை ..அவ்வப்போது கத்தாளை குகைகளிலிருந்து எதிர்பாரா தாக்குதல்..மலையிலிருந்து உருள்வது போல ,பட்டு போன்ற அந்த மணல் சரிவில் உருளுதல் என்று நிஜ வாள்சண்டை ரேஞ்சுக்கு தொடரும் விளையாட்டு .இருட்டியதும் உடலிலிலும் தலையிலும் கடற்கரை வெள்ளை மண்ணோடு வீடு .குளித்து விட்டு மீண்டும் ஒண்ணா சேர்ந்து படம் போடப்போகிற பெரிய திறந்த மணல் வெளியை ஒட்டிய ரோட்டில் படப்பொட்டி கொண்டு வரும் டாக்சி-க்காக waiting..கொஞ்க நேரத்தில் ..அதோ வருகிறது டாக்சி ..பெரிய திரையை துணிகடையில் துணியை சுருட்டிவைத்தது போல கம்பு போலாக்கி டாக்சி-யின் மேல் கட்டியிருந்தால் confirmed..அவ்வளவு தான் ..பசங்க ஆளாளுக்கு பறந்து விடுவார்கள் ..பின்ன! பொட்டி வந்தாச்சுன்னு அவங்கவங்க தெருவுல சொல்ல வேணாமா? சட்டு புட்டுன்னு சாப்பிட்டு வேலைய முடிச்சிட்டு எல்லோரும் வரணுமுல்ல!..அதுலயும் தாய்மார்கள் வாத்தியார் படம்ணா சாப்புடாட்டியும் பரவாயிலிண்ணு மொத ஆளா வந்துடுவாங்க.

பாய்மரத்துக்கு உபயோகிக்குற ரெண்டு உயரமான மூங்கில கொண்டு வந்து நட்டு ,அதுல திரைய கட்டியாச்சு..Projector-அ தூக்கிட்டு வந்து 20 மீட்டர் தள்ளி போகஸ்-லாம் பாக்குறாங்க .தியேட்டர்ல போடுர மாதிரியே எதாவது ஒரு நியூஸ் ரீலை முதல்ல போடணும் ..அப்போ தான் கொஞ்ச நஞ்சம் மீதியிருக்குற சனங்களும் "ஏ! நியூஸ் போட்டாச்சி" -ன்னு அரக்க பரக்க ஓடி வருவாங்க..

நமக்கு இன்னும் தான் பிரச்சனையே! மத்த பசங்கள்ளாம் நினைச்ச நேரத்துக்கு வரலாம் .நம்ம அப்பிடியா ? டீச்சர் புள்ளையாச்சே! மெதுவா வீட்டுகுள்ள போவேன் ..அம்மா முன்னால நான் போய் நிக்குற அழகும் ,ரோட்டுல மக்கள் பரபரப்பா போற சத்தமும் ..அம்மாக்கு தெரியாதா நான் எதுக்கு வழியுறேன்னு .." என்ன! இன்னிக்கு படமா?" "ஆமா" "யார் படம்?" "MGR படம்" "ம்..ரொம்ப முக்கியம்...சரி..சரி..ஜெபம் படிச்சுட்டு சாப்பிட்டு போ"..வேற வழி..?

குடும்பமே ஜெபத்துல உக்காரும் ..நம்ம மனசோ எங்கியோ இருக்கும் ..இப்போ கிட்ட தட்ட எல்லோரும் போயிருப்பாங்க..பரந்த அந்த மணல் வெளியில் அவங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு இடத்த புடிச்சுகிட்டு ,சிலர் உக்கார ,சிலர் படுத்துகிட்டே பாக்குறதுக்கு வசதியா மணலை ஒருக்களித்து தலையணை போலாக்கி துண்டோ போர்வையோ விரித்து தயாராயிருப்பார்கள் .நான் போய் நம்ம பசங்க ஒண்ணா உக்காந்திருக்கிற இடத்த கண்டுபிடிச்சு கூட்டத்துல நுழைஞ்சு போய் சேந்துக்கணும் ..எனக்காகவே பசங்க எப்பொதும் projector-kku தெக்க 5 மீட்டர் தூரத்துல இருப்பாங்க..இங்க இன்னும் ஜெபமே முடியல்ல ..ஜெபத்துல நான் சொல்ல வேண்டிய turn வரும் "அருள் நிறைந்த மரியே வாழ்க..கர்த்தர் உம்முடனே....." படுவேகமா சொல்லுவேன்..10 தடவ திருப்பி சொல்லணும் ..ஒரு வழியா ஜெபம் முடிஞ்சதும் ..சாப்பாடு ..சாப்பிட ஆரம்பிசதும் ..அங்க நியூஸ் ரீல் ஓடுர சத்தம் கேக்கும் ..நான் அள்ளி திணிச்சுட்டு ..குளிருக்கு ஒரு துண்டை எடுத்து போட்டுகிட்டு "ம்மா..வர்ரேன்"-ன்னு பதிலுக்கு காத்திருக்காம ஓடுனா படம் போடுர எடத்துல போய் தான் நிப்பேன்..நம்மளை எதிர் பார்த்திருக்கிற பசங்க நம்மள கண்டதும் 'மக்களே!" குரல்குடுப்பாங்க. ..எனக்கு பசங்க மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் ..இருட்டுல நான் பாட்டுக்கு கூட்டத்துகுள்ள போயிட்டிருப்பேன் .குறஞ்சது 10 பேர் காலையோ மிதிச்சுகிட்டு (அவங்களும் கண்டுக்குறதில்ல..)மண்ணு தெரியிர இடத்துல கால வச்சு தாண்டி தாண்டி பசங்க இருக்க இடத்துல கிட்ட தட்ட குதிச்சு தான் கரையேறுவேன்..படம் தொடங்குறதுக்கு சரியா இருக்கும்..சுத்தி ஒரு நோட்டம் விட்டா..ஒட்டு மொத்த ஊரும் இங்க தான் இருக்கு.

இனிமே தான் பசங்க எங்க வேலைய ஆரம்பிபோம் ..10 பேர் கும்பலா இருப்போம் .நமக்கு லீடர் ஆரோக்கியம் .அவன் சொன்னாத்தான் ஒண்ணா செய்யுறது .இப்போ எழுத்து போட்டாச்சு ..கம்பெனி பேரெல்லாம் போட்டு ..போட்டான் பாரு "புரட்சி நடிகர் M.G.R" ..அவ்வளவு தான் ..கை தட்டல் ,விசில் ..கடல்ல போற கப்பல் காரனுக்கே கேக்குற மாதிரி ..கொஞ்ச பேரு துண்டை எடுத்து வானத்துல வீசுறாங்க ..அது அவன் கிட்ட திருப்பி வர்ரதுக்கு பதில் வேற யார் தலை மேலே விழ அவன் சுருட்டி வச்சுகுறான் (படம் முடிஞ்சு தான் துண்டு பரிமாற்றம் நடக்கும்) ..இத்தனை களேபரம் நடந்து கொண்டிருக்க ,நம்ம பசங்க இருக்க இடம் இடிவிழுந்த மாதிரி இருக்கும் .கை தட்டல் ,விசில் ஏன் அசைவே கிடயாது..அப்பமே சுத்தி இருக்கவனுங்க விவகாரமா பாப்பாங்க ..ஒட்டு மொத்த கூட்டமும் வாத்தியார் பேருக்கு கை தட்டும் போது இவனுங்க கல்லுளி மங்கன் மாதிரி இருக்கானுவளே? அப்படின்னு பாப்பாங்க..திரையில வேற எழுத்தெல்லாம் ஓடிட்டிருக்கும் ..ஆரோக்கியம் சொல்லுரதுக்கு நாங்க வெயிட்டிங் ..திடீர்ன்னு "எடிட்டிங் --ஏகாம்பரம்" -னு ஸ்கிரீன்ல வரவும் ஆரோக்கியம் "அட்ரா மக்களே!" ..10 பேரும் கைதட்டல் ,விசில்னு கலக்கி எடுத்துடுவோம் ..ஒட்டு மொத்த கூட்டமும் திரும்பி பாக்கும் ..அங்கங்கே முணுமுணுப்பு கேக்கும் "ஆரம்பிச்சுட்டாங்க.."..பக்கத்துல ஒரு பெருசு "நானும் பல தடவ பாத்துடுட்டேன் ..இப்டியே பண்ணிட்டிருக்காங்க ..யாருக்க மொவனுவள்ள அது"..அங்கங்கே அறுப்பு கண்டமும் கேக்கும் (கெட்ட வார்த்தய நம்ம ஊருல 'அறுப்பு கண்டம்'-ன்னு தான் சொல்லுவாங்க..வரலாறு & புவியியல் பரிட்சையில "கண்டங்களிலே பெரிய கண்டம் எது?' கேள்விக்கு நம்ம நண்பன் எழுதுன விடையும் "அறுப்பு கண்டம்' தான்)

படம் இப்போ பிக்கப் ஆயி மக்கள் ஒன்றி போயிருப்பாங்க.இப்போ வாத்தியாரும் நம்பியாரும் வாள்சண்டை..வாள் சண்டை முடிஞ்சவுடனே..ஆஹா! இப்போ வர்வானுங்கன்னு நினைக்குறதுக்குள்ளால ..ஒருத்தர் எழும்பி ப்ரொஜக்டர் ஆப்பரேட்டர் கிட்ட வந்து "அண்ணாச்சி ..அந்த வாளடி(வாள் சண்டை)-ய சுத்திப் போடும் "..அதானே பாத்தேன் ..வாத்தியார் படத்துல வாளடி,கம்படி ரெண்டும் ஒரு தடவையாவது திருப்பி போடணும்-றது நம்ம ஊருல எழுதப்படாத விதி..நம்ம ஊருக்கு வர்ற ஆப்பரேட்டர் கிட்ட ஏற்கனவே ஸ்டுடியோ-ல சொல்லி விட்டுருப்பாங்க ..மரியாதயா போட்டுடு,இல்லைன்னா ப்ரொஜக்டர் கடல்ல தான் போகும்.திரும்பி வராதுண்ணு .அதனால சொன்னவுடன அவரும் சுத்தி போட்டுடுவாரு.

இன்னொரு ஆசாமி..50 வயசு இருக்கும்..வாத்தியாருன்னா அநியாயத்துக்கு உணர்ச்சிவசப்படுவார்.ஒரு குகைக்குள்ள வாத்தியாரும் நம்பியாரும் ஒருத்தரை ஒருத்தர் தேடிட்டிருப்பாங்க..திடீர்னு நம்பியார் கைல கத்தி வச்சுகிட்டு வாத்தியார் பின்னாலயிருந்து வந்துகிட்டிருப்பார் .இவருக்கு இருப்பு கொள்ளாது ..கிட்ட தட்ட எழும்பி,சத்தம் போட்டு "வாத்தியாரே! திரும்பி பாருங்க..அன்னா பின்னால வர்றான்.."-னு பொலம்புவார்..ஏற்கனவே இதே படம் 6 தடவ போட்ட போதும் இதேதான் பண்ணாரு.நாங்க பசங்க இவரு உக்காந்திருக்க இடத்த தேடி நைஸா நகர்ந்து அவர சுத்தி உக்காந்துகுவோம்..நாங்க இருக்கத கூட கவனிக்க மாட்டரு .எதாவது ஒரு சீன் -ல வாத்தியார் அம்மா கிட்ட செண்டிமெண்டா எதாவது வசனம் சொல்ல இவர் இங்கிருந்து 'ச்சு ..ச்சு..ச்சு" -ன்னு நாய கூப்பிடுரமாதிரி பண்ணுவார் ..கொஞ்ச நேரத்துல சம்பந்தம் இல்லாத ஒரு சீன் -ல நாங்க பசங்க எல்லொரும் சொல்லி வச்சு ஒரே நேரத்துல 'ச்சு..ச்சு..ச்சு" -ன்னு கொட்ட ஆரம்பிச்சுடுவோம்..அப்போதான் அவர் தன்னிலைக்கே வருவாரு..சுத்தி முத்தி எங்களையெல்லாம் பாப்பாரு ..மண்ணை எடுத்து வாரி எங்க மேல வீசி திட்டுவார்..நாங்க எழும்பி பறந்தே போயிடுவோம்.

இப்படியே நாங்க நோட் பண்ணி வச்சுருக்குற ஆட்களோட வம்பு பண்ணி திட்டு வாங்கி ஒரு ரவுண்டு வந்தா படம் முடிஞ்சுடும் .படம் முடிஞ்சா பாதி கூட்டம் தான் எந்திரிக்கும் .கொஞ்ச பேர் ஏற்கனவே உக்காந்த இடத்துலயே படுத்து தூங்கிருப்பாங்க..கொஞ்ச பேர் படம் முடிஞ்சு அங்கியே படுத்துடுவாங்க ..ஜிலு ஜிலு-ன்னு கடற்கரை காத்துல மணல்ல தூங்க யாருக்கு தான் பிடிக்காது..ஆனா அம்மா டின்னு கட்டிடுவாங்க .அதுனால பேசாம வீட்டுக்கு நடைய கட்டு..

ஒரு நாள் படம் பாதி ஓடிட்டிருக்கும் போது கரண்ட் கட்..மக்கள் உக்காந்த இடத்துலயே பேசிட்டு கரண்டுக்காக வேயீட்டிங்..ரொம்ப நேரமாயும் கரண்ட் வரல்ல ..பின்னாலயிருந்து ஒருத்தர் ப்ரொஜக்டர் ஆப்பரேட்டருக்கு கேக்குறமாதிரி சத்தம் போட்டு சீரியஸா சொன்னார் "ஓய்! கரண்டு வர்ர வரைக்கும் அந்த நியூஸை போடக்கூடாதா..?".

-ஜோ

36 comments:

Vijayakumar said...

ஓய்! ஜோ! ஊரு பேரை போடவேண்டியது தானே. உங்க ஊரு முட்டம்-ஆ? நம்ம கூட ரெண்டு மூனு நண்பர்கள் முட்டத்திலிருந்து வந்து படிச்சாங்கப்பா? நாகர்கோவில் ஸ்லாங்க்ல மலையாளம் கலந்து பேசும் பேச்சை கேட்கவே தனி இன்பமாக இருக்கும். நீரும் அப்படி தான் பேசுதீரா?

பதிவு அருமை ஜோ. அப்படியே யதார்த்தம் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள். நீங்க மீனவ நண்பர்களைப் பற்றி நிறைய எழுதலாமே ஜோ?

ஜோ/Joe said...

அல்வாசிட்டி அண்ணாச்சி,
நன்றி .நம்ம ஊர் பேர் 'பள்ளம்' ..நம்ம ஊருல இருந்து பாத்தாலே பாரதிராஜா பேவரிட் 'முட்டம்' தெரியும் .. திருச்சில படிச்சதால நம்ம ஸ்லாங் மாறிப் போச்சு..ஊருக்கு போன பழையபடி ஊர் ஸ்லாங் வந்துடும்.

நீங்க விரும்பினா ,நேரம் கிடைக்கும் போது எழுதுவோம் அண்ணாச்சி! ஊருல இருந்து இருட்டுகட அல்வா வந்தா சொல்லுங்க!

-ஜோ

Moorthi said...

நண்பர் ஜோ,

வாழ்த்துக்கள். நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு.

கீத்து கொட்டாயில மணல் திண்டின்மேல் அமர்ந்து அன்னக்கிளி, திரிசூலம் போன்ற படங்களைப் பார்த்த எனது பழைய நினைவுகள் எல்லாம் ஒருநிமிடம் வந்து சென்றன. பள்ளம் தோண்டி வெற்றிலைபாக்கு எச்சிலை புளிச்சு புளிச்செனப் பலர் துப்பி மண் தள்ளி மூடியதை வெறுப்புடன் பார்த்துவிட்டு அடுத்தமுறை செல்ல யோசித்தேன்.

ஜோ/Joe said...

நண்பர் மூர்த்தி,
நன்றி! .கீத்துகொட்டாய் மண்ணை விட திறந்தவெளி கடற்கரை மண் பெட்டர் .அடுத்த வாரத்துக்குள்ள காத்துல மண் அடிச்சோ ,அல்லது ஒரு மழை பெய்தாலோ ,சுத்தமாயிடும்.

துளசி கோபால் said...

ஜோ,

அருமையான பதிவு. இயல்பான நடை!!! ரொம்பவே ரசிச்சுப் படிச்சேன். எந்த ஊருன்னு கேக்கணுமுன்னு இருந்தேன். நல்லவேளை விஜய் கேட்டுட்டாரு!
'பள்ளம்'னு ஒரு ஊரா?

இன்னும் எழுதுங்க. என் கணவர் கோபால் ஒரு 'எம்.ஜி.ஆர். ரசிகராக்கும்!!!

என்றும் அன்புடன்,
துளசி.

மூர்த்தி, டெண்ட் கொட்டாய் லே நானும் பட்ம் பாத்திருக்கேன். அதெல்லாம் ஒரு காலம்!!!!!

Vijayakumar said...

ஜோ! 'பள்ளம்' ஊரை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த பக்கம் வந்ததே கிடையாது. நாகர்கோவில் கூட.

அப்புறம் சிவாஜி பத்தி எப்போ எழுத போறீங்க.

அல்வா தானே? கொடுத்தா போகுது சீக்கிரம்.

ஜோ/Joe said...

நன்றி துளசி அக்கா!

அல்வா,கண்டிப்பா ஒரு தடவ அந்த பக்கம் வாங்க! இப்போ வேலை நிமித்தம் வியட்நாமில் இருக்கேன் .வியாழன் சிங்கை வந்து பேசுறேன்.

-L-L-D-a-s-u said...

aiyoo. 'autograph'naalee namma manasu ennamo paNNuthu ..

come with more articles

எம்.கே.குமார் said...

ரொம்ப ரசிச்சி எழுதுயிருக்கீங்க ஜோ. குட்.

கடற்கரை, ஜெபம்ங்கிறதை மட்டும் எடுத்துட்டு படிச்சா நானும் உள்ளே உக்காந்து படம் பாத்துக்குட்டு இருக்கேன்.

துளசியக்கா, கோபால் சாரைக் கேட்டதா சொல்லுங்க! தலீவரு ரசிகரா அவரு?! ஆஹா!

எம்.கே.

ஜோ/Joe said...

நன்றி தாஸ்,குமார்1

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//"ஓய்! கரண்டு வர்ர வரைக்கும் அந்த நியூஸை போடக்கூடாதா..?"// :o)

நல்லாயிருக்குப் பதிவு.

Vijayakumar said...

//அல்வா,கண்டிப்பா ஒரு தடவ அந்த பக்கம் வாங்க! இப்போ வேலை நிமித்தம் வியட்நாமில் இருக்கேன் .வியாழன் சிங்கை வந்து பேசுறேன்.//

இதுக்கு முன்னாடியே உங்க நண்பர்கிட்ட இருந்து செய்தி வந்தாச்சு. எப்போது வேண்டுமானாலும் 91029154-க்கு கூப்பிடுங்க. என்கிட்டேயும் இருக்கு உங்க நம்பர். நன்றி.

enRenRum-anbudan.BALA said...

ஜோ,
பதிவு மிக அருமை ! சரளமான எழுத்து நடை !அந்த கடற்கரைக்கே சென்று "வாத்தியார்" (தலைவர் அல்ல ;-)) படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

பழைய நினைவுகளை அசை போடுவது (Nostalgia!) என்பது மிக மிக ஆனந்தமானது. அந்த நாளும் மீண்டும் வராதோ என்று நம்மை ஏங்க வைத்து விட வல்லது. நானும் "சிறு வயது சிந்தனைகள்" என்ற தலைபப்பில் பல பதிவுகள் எழுதியுள்ளேன்
!!! சில சாம்பிள்கள்:

http://balaji_ammu.blogspot.com/2004/10/ii.html
http://balaji_ammu.blogspot.com/2004/10/iv_26.html#comments
http://balaji_ammu.blogspot.com/2005/01/6.html
http://balaji_ammu.blogspot.com/2005/04/some-traders-doctor-evening-game-of.html

//திடீர்ன்னு "எடிட்டிங் --ஏகாம்பரம்" -னு ஸ்கிரீன்ல வரவும் ஆரோக்கியம் "அட்ரா மக்களே!" ..10 பேரும் கைதட்டல் ,விசில்னு
கலக்கி எடுத்துடுவோம் ..ஒட்டு மொத்த கூட்டமும் திரும்பி பாக்கும் ..அங்கங்கே முணுமுணுப்பு கேக்கும் "ஆரம்பிச்சுட்டாங்க.."..பக்கத்துல ஒரு பெருசு "நானும் பல தடவ பாத்துடுட்டேன் ..இப்டியே பண்ணிட்டிருக்காங்க ..யாருக்க
மொவனுவள்ள அது"..அங்கங்கே அறுப்பு கண்டமும் கேக்கும் (கெட்ட வார்த்தய நம்ம ஊருல 'அறுப்பு கண்டம்'-ன்னு தான் சொல்லுவாங்க
//
நாங்களும் சின்னப்ப இந்த மாதிரி நெறய லொள்ளு செஞ்சிருக்கோம் ! தீபாவளி அன்னிக்கு விடியக்காலைல, ராக்கெட்டை தரைல
படுக்க வச்சு கொளுத்திவுட்டு, கூட்டமா வர மாடுகள் மிரண்டு நாலாபக்கமும் ஓட, மாட்டுக்காரர் 'அறுப்பு கண்டத்த' தீபாவளி வாழ்த்தா வழங்கிட்டுப் போவார் :)

//பின்னாலயிருந்து ஒருத்தர் ப்ரொஜக்டர் ஆப்பரேட்டருக்கு கேக்குறமாதிரி சத்தம் போட்டு சீரியஸா சொன்னார் "ஓய்! கரண்டு வர்ர
வரைக்கும் அந்த நியூஸை போடக்கூடாதா..?".
//
இத, இதத்தான் நான் எதிர்பார்த்தேன், ஜோ ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

ஜோ/Joe said...

ஷ்ரேயா,நன்றி!

பாலா,நன்றி..சுட்டிகளுக்கும் சேர்த்து..படித்துவிட்டு சொல்கிறேன்.

Anonymous said...

அருமையான பதிவு, நடை.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மணியன்

ஜோ/Joe said...

நன்றி மணியன்!

ஜோ/Joe said...

பாலா,
ஊங்க பதிவுகளை படித்தேன்..ரசித்தேன்.குறிப்பா உங்க பழைய பள்ளியை பற்றிய பதிவு அருமை.

ஜெ. ராம்கி said...

பாரதிராஜாவுக்கு பிடிச்ச ஊர்க்காரரா நீங்க? நல்ல பதிவு. அப்படியே... போட்டோ கொஞ்சம் எடுத்து போட்டிருக்கலாம். ஜோ, நிறைய உங்க ஊர் பத்தின மேட்டர் எழுதுங்க.

குளச்சல், முட்டம் ஏரியாவெல்லாம் நிறைய சுத்தியிருக்கேன். மண்டைக்காடு போயிட்டு அப்படியே முட்டத்தை ஒட்டி வர்ற ரோட்டில் இருக்கும் அந்த பிள்ளையார் கோயில் எனக்கு பிடிச்ச இடம். சுனாமியில் கோயில் இருக்குற இடம் தெரியாம போயிடுச்சுங்கிற தகவலைத்தான் என்னால ஜீரணிக்க முடியல்லை.

ஜோ/Joe said...

ராம்கி,
நன்றி தலைவா! அடுத்த தடவ நம்ம ஊர் பக்கம் வந்தா கண்டிப்பா சொல்லுங்க..பத்மநாபபுரம் அரண்மனை,கீரிபாறை ரப்பர் தோட்டம் ,உலக்கை அருவி ,திற்பரப்பு அருவி ,சுசீந்திரம் கோவில் -னு 30 கி.மீ-க்குள்ள பார்க்க வேண்டிய இடம் நிறைய இருக்கு .ஒரு ரவுண்டு போலாம்.

உங்க புத்தகம் இன்னும் படிக்கல்ல .ஷாஜகான் கிட்ட கேட்டு வாங்கி படிச்சுட்டு சொல்லுறேன்.சிங்கைல வாங்க முடியுமா?

தருமி said...

"கண்டங்களிலே பெரிய கண்டம் எது?' கேள்விக்கு நம்ம நண்பன் எழுதுன விடையும் "அறுப்பு கண்டம்' தான்)"

ரொம்ப சிரிக்கவச்ச இடம்! வாசிச்சப்போ பள்ளத்திலேயே இருந்தமாதிரி இருந்திச்சு.

இந்த வாத்தியார் வீட்டுப் பிள்ளைகளா இருந்தாலே இந்த ஜெபம் அடுத்தது ஆங்கில இலக்கணம் - பெரிசுக நேரங்காலம் தெரியாம உயிரை எடுத்திருங்க. எல்லாம் அனுபவம்தான்.

ஜோ/Joe said...

நன்றி தருமி!

Koothu said...

Joe,
arumayaana pathivu. migavum rasithu padithen.

BTW, are you the same Joe (and Milton) that used to be in forumhub?

ஜோ/Joe said...

கூத்து,
நன்றி .ஆம்!நான் அதே ஜோ(மில்டன்) தான்.நீங்கள்?

Ramya Nageswaran said...

நல்ல பதிவு ஜோ! உங்கள் பிரண்ட்ஸ் கும்பலோடு படம் பார்த்த மாதிரி ஒரு feeling!

தொடர்ந்து எழுதுங்கள்!

சினேகிதி said...

\\வரலாறு & புவியியல் பரிட்சையில "கண்டங்களிலே பெரிய கண்டம் எது?' கேள்விக்கு நம்ம நண்பன் எழுதுன விடையும் "அறுப்பு கண்டம்' தான்)\\

Jo ennenna kothellam pani irukinga?? ithukuthan solrathu ambilai pilaya pirakanum endu.

Anonymous said...

Good One!

ஜோ/Joe said...

சினேகிதி,
வருகைக்கு நன்றி!

Unknown said...

ஜோ...சிரிச்சு, சிரிச்சு ... தாங்க முடியலை சாமி. சூப்பர்!!!.

//..ஆரோக்கியம் சொல்லுரதுக்கு நாங்க வெயிட்டிங் ..திடீர்ன்னு "எடிட்டிங் --ஏகாம்பரம்" -னு ஸ்கிரீன்ல வரவும் ஆரோக்கியம் "அட்ரா மக்களே!" ..10 பேரும் கைதட்டல் ,விசில்னு கலக்கி எடுத்துடுவோம் ..//

//..ஒருத்தர் எழும்பி ப்ரொஜக்டர் ஆப்பரேட்டர் கிட்ட வந்து "அண்ணாச்சி ..அந்த வாளடி(வாள் சண்டை)-ய சுத்திப் போடும் "..//

//"ஓய்! கரண்டு வர்ர வரைக்கும் அந்த நியூஸை போடக்கூடாதா..?".//

இதெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தப்ப விட நினைச்சுப் பார்க்கும்போதுதான் அதிக ஆனந்தம் இல்ல?. வாத்தியார் படத்தின் மகிமை அளவற்றதுதான் இல்லையா?.அவர் தன்னை மறந்து சில இடங்களில் வசனம் பேசுவது பார்க்க அவ்வளவு நல்லா இருக்கும்., ஆயிரத்தில் ஒருவனில் அம்மா., ஒரிடத்தில் 'பொல்லாத அலைகள்' என்றபோது நம்மைப் புரிந்து கொண்ட அலைகள் என்பாரே அது., 'அன்பே வா'வில் (கடைசி கட்சி?) ஒரிடத்தில் சிரிக்கும் சரோஜா தேவியை., ஏய்... உனக்கு என்ன ஆச்சு?., ஏன் இப்படி சிரிக்கிற? என் மிக இயல்பாகக் கேட்பார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

//இந்த வாத்தியாருங்கள்ளாம் கருணாநிதி கோஷ்டிங்க")//
:-)))., பஸ் முதலாளிகள் எல்லாம்????? :-)).

அப்புறம் நம்ம ஊர்ல படிச்சிங்களா?., எந்த காலேஜ்ங்க?., உங்கள் முழுப் பெயருடன் உள்ள நண்பர் ஒருவர் பாளையங்கோட்டையில் இருந்து வந்து திருச்சியில் (ஜோசப் கல்லூரில்) படித்தார். (இளங்கலை பாளையங்கோட்டை சேவியரில் படித்தார்) மக்கா... அது வாய் திறந்தாலே நமக்கு சிரிப்புதான் வரும். அது நீங்கள் இல்லைதானே?.,

மண்டைக்காடு பற்றி முடிந்தால் இங்கு பதிவு செய்யுங்களேன்.

ஜோ/Joe said...

அப்படிப் போடு,
மிக்க நன்றி!
கடற்கரையில் பிறந்து ,குழந்தைப் பருவத்தை அங்கு செலவிடுவது என்பது மிகவும் சுகமான அனுபவம்.

நீங்கள் சொல்லும் நபர் நானில்லை என்றாலும் ,நான் திருச்சி ஜோசப் கல்லூரியில் தான் இளம் அறிவியல் ,முதும் அறிவியல் படித்தேன்.

கண்டிப்பாக இது தொடர்பாக மேலும் சுவாரஸ்யமான அனுபவங்களை எழுத முயல்வேன்.

SnackDragon said...

ஜோ சுவையான பதிவு. நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். இதற்கும் அலைகள் பாறைகளுக்கும் நிறைய ஒற்றுமை தெரிகிறது. நீங்க அப்பவே கலக்கியிருக்கீங்க.

மண்டைக்காட்டின் போது அதிகம் பொருள்சேதம் செய்யப்பட்ட கடற்கரை கிராமம் பள்ளம்தான் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

சிவா said...

ஜோ! இந்த பதிவை இன்னைக்கு தான் பார்க்கிறேன். இதை அப்படியே ஊரு பேர மாத்திட்டா என்னோட பதிவுல போட்டுடலாம். இதே போல நானும் அனுபவிச்சிருக்கேன் ஜோ. நீங்க கடற்கரை என்றால், நான் பனங்காடு :-)).

நல்லா எழுதி இருக்கீங்க. அதுல அந்த முடிவு ரொம்ப சூப்பர்.தொடருங்கள்

சிங். செயகுமார். said...

"எனக்கு பசங்க மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் ..இருட்டுல நான் பாட்டுக்கு கூட்டத்துகுள்ள போயிட்டிருப்பேன் .குறஞ்சது 10 பேர் காலையோ மிதிச்சுகிட்டு
மண்ணு தெரியிர இடத்துல கால வச்சு தாண்டி தாண்டி பசங்க இருக்க இடத்துல கிட்ட தட்ட குதிச்சு தான் கரையேறுவேன்"


கோவில் திருவிழாவுல த(தி)ரை படம் பார்க்கும் போது பெருசுங்களை மிதிச்சி வாங்கிகட்டிகிட்ட ஞாபகம் வருது வாத்தியார் ஊட்டு புள்ள.நம்ம ஊர் மீனவ குழுமத்துல கடவுளே வந்து எலக்ஷன்ல நின்னாலும் ரெட்ட எலைக்குதான் அவங்க ஓட்டு. நீண்ட நாளைக்கு பின் மன நிறைவான வாசிப்பு . ஆனாலும் ஒரு பதிவு போட்டுட்டு ஒரு மாசம் ஓய்வெடுக்க போய்டுரீங்களே!

ilavanji said...

ஜோ! படிக்கறப்பவே சுகமா இருக்கு! நீர் அனுபவிச்சிருக்கீர்!!! பொகையா இருக்கு!!! நமக்கெல்லாம் கீத்துக்கொட்டாய் அனுபவம்தான்... :)

இத்தனைநாளா இந்த பதிவை பார்க்காம விட்டுட்டேன் பாருங்க!

ஜோ/Joe said...

பழைய பதிவானாலும் படித்து மகிழ்ந்து என்னையும் மகிழ்வித்த கார்திக்ராம்ஸ்,சிறில் அலெக்ஸ்,சிங்.செயக்குமார்,சிவா,இளவஞ்சி அனைவருக்கும் நன்றி!

உங்கள் பாராட்டு இது போன்ற இனிமையான அனுபவங்களை எழுத உற்சாகம் கொடுத்துள்ளது.

சந்துரூ said...

Nalla pathivu nanbarae...

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives