Tuesday, September 16, 2008

நாசமாய் போன தமிழகம்

பொதுவாகவே நம்முடைய பெரியவர்கள் தொட்டதுக்கெல்லாம் "நாடு இப்போ ரொம்ப கெட்டுப் போச்சு ..எங்க காலத்துல..." என்று ஆரம்பித்து விடுவார்கள் .தமிழக அரசியல் என்று வரும் போது இன்னும் நிறைய பேர் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் ..திராவிட இயக்க ஆட்சி வந்த பிறகு தான் நாசமாய் போனதாக்கும் .இல்லையென்றால் தமிழ்நாடு இப்படி நாசமாய் போயிருக்காதாக்கும் என்றெல்லாம் சாபமும் ஒப்பாரியுமாக இருக்கும் .கேட்பவர்களுக்கு கூட இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி கெட்டு குட்டிச்சுவராயிடுச்சு போல என்றொரு எண்ணம் தோன்றும்.

அப்புறம் ஒப்பீட்டுக்கு காமராஜர் ,கக்கன் இந்த இரண்டு பேரையும் சொல்வார்கள் ..மறந்தும் ராசாசி ,பக்தவச்சலம் பற்றி சொல்ல மாட்டார்கள் .ராசாசி ,பக்தவத்சலம் போன்ற உயர் அடுக்கிலிருந்து வந்தவர்களே கோலோச்சிய அதிகாரத்தில் காமராஜரும் கக்கனும் வந்ததே பெரிய மாற்றம் தான் .அதனால் தான் தந்தை பெரியார் காமராசரை ஆதரித்தார்கள் .கல்விக்கண் திறந்த தலைவனை என்றும் மறவோம் ,அது வேறு.காமராசராலும் கக்கனாலும் காங்கிரசுக்கு பெருமையே தவிர ,காங்கிரசால் அவர்களுக்கல்ல ..இன்று காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று முழங்குபவர்களில் முக்கால்வாசி பேரின் பின்னணி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு இந்திரா பின்னால் போனது தான் .

திராவிட இயக்க ஆட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை .ஆனால் தேசிய கட்சிகள் ஆண்டிருந்தால் தமிழகம் நாசமாயிருக்காது என்று சொல்பவர்களுக்கு நான் கேட்கும் கேள்வி "ஒட்டு மொத்த இந்தியாவை ஒப்பிடும் போது அப்படி தமிழகம் என்னைய்யா நாசமாய் போய்விட்டது?" .ஏதோ இந்தியாவில் தேசிய கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாலும் தேனும் ஓடுவது போலவும் , நிர்வாக சீர்கேடுகளே இல்லாதது போலவும் .

அப்புறம் இந்தியை கட்டாயமாக படிக்க விடாமல் தமிழ்நாட்டை கெடுத்து விட்டார்கள் .இது ஒரு குற்றச்சாட்டு .தேவையானவர்கள் படித்துக்கொள்ள வேண்டியது தானே ? சரி ..இப்போ இந்தி பேசுகிற மாநிலங்களின் லட்சணங்களை பார்க்கலாமே .நாலஞ்சு சல்மான் கான் ,சாருக்கான் படங்களை பார்த்து விட்டு வட இந்தியாவில் செல்வம் கொழிக்கிறதாக்கும் ,எல்லோரும் பெரிய பெரிய பங்களாவில் கூத்தும் கும்மாளமுமாக தான் இருப்பார்களாக்கும் ..சே .நாமளும் இந்த தமிழ் நாட்டில் வந்து பிறந்தோமோ என நினைக்கும் இளைய தலைமுறைக்கு நகரம் தவிர்த்த வட இந்திய கிராமப்புறங்களின் லட்சணத்தையும் ,தமிழகத்தின் கிராமப்புறங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க சொல்லிக்கொடுக்க வேண்டாமா?

சரி..விஷயத்துக்கு வருவோம்..இந்தியா டுடே பத்திரிகை சமீபத்தில் நாடு தழுவிய மக்களவைத் தொகுதிகள் மற்றும் மாநிலங்களின் தரப்பட்டியலை வெளியிட்டுள்ள்து .543 மக்களவைத் தொகுதிகள் ,20 பெரிய மாநிலங்கள் ,10 சிறிய மாநிலங்கள் ,5 யூனியன் பிரதேசங்கள் என்று பிரித்து சமூக பொருளாதாரம் ,உட்கட்டமைப்பு ,விவசாயம் ,தொழில் ,கல்வி ,ஆரம்ப சுகாதாரம் உள்ளிட்ட பல தளங்களில் ஆய்வு செய்து சில புள்ளியல் விவரங்களை ,தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது .அதிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம் .

* நாட்டின் சிறந்த 100 மக்களவை தொகுதிகள் (மொத்தம் 543) பட்டியலில் தமிழகத்தின் 26 தொகுதிகள் இடம் பிடித்துள்ளன.

* கேரளாவின் அனைத்து 20 தொகுதிகளும் சிறந்த 100 பட்டியலில் இடம் பிடித்துள்ளன . காம்ரேட்கள் தான் காரணம் என நினைக்க வழியில்லை ..ஏனென்றால் மேற்கு வங்கம் அதல பாதாளத்தில் இருக்கிறது ..வெளிநாடு வாழ் மலையாளிகளின் அன்னிய செலவாணியும் ,சுற்றுலாவுமே கேரளத்துக்கு கைகொடுக்கின்றன.

* தமிழகமும் ,கேரளமும் மட்டும் 100-ல் 46 தொகுதிகளை கொண்டிருக்கின்றன .சிறந்த 100 தொகுதிகளில் 79 தொகுதிகள் விந்திய மலைக்கு தெற்கே இருக்கின்றன .

* மாநிலங்களின் ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழகம் 2-ம் இடத்தில் இருக்கிறது .முதலிடம் பஞ்சாப் .சென்ற வருடம் 4-வது இடத்திலிருந்து இந்த வருடம் 2-ம் இடத்திற்கு தமிழகம் முன்னேறியிருக்கிறது .

* விவசாயத்தில் பஞ்சாப் ,ஹரியானாவுக்கு அடுத்து தமிழகம் 3-வது இடத்தில் .

* ஆரம்ப சுகாதாரத்தில் தமிழகம் முதல் இடம் .முதலிடத்திலிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடத்தில்.

* முதலீட்டு சூழலில் இமாச்சல பிரதேசம் ,குஜராத் ,பஞ்சாப் -க்கு அடுத்து தமிழகம் 4-வது இடத்தில்.சென்ற வருடம் 7-வது இடம்.

* ஆரம்ப கல்வியில் தமிழகம் 4-வது இடம் .சென்ற வருடம் 6-வது இடம்.

* உள்கட்டமைப்பில் பஞ்சாப் ,இமாச்சல் ,கேரளா- வுக்கு அடுத்ததாக தமிழகம் 4-வது இடத்தில்.

* நுகர்வோர் சந்தையில் தமிழகம் 7-வது இடத்தில்.

* சட்டம் ஒழுங்கில் கேரளாவுக்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில்.

* இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்.

* மிகவும் நகரமயமான மாநிலங்களில் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் .

* மாநிலங்கள் தர வரிசையில் கடைசி இடங்களில் இருப்பவை பற்றி சொல்லத் தேவையில்லை . பீகார் ,ஜார்கண்ட் ,உத்திர பிரதேசம் .. இந்தி சொல்லித் தராமல் தான் பெரிய இந்தி மேதையாவதை தடுத்து விட்டதாக அங்கலாய்க்கு விஜயகாந்த் வீணாக தமிழகத்தில் கஷ்டப்படுவதற்கு இங்கே போய் குடியேறி விடலாம் .நமக்கும் நல்லது .

* நேரு குடும்பம் 8 முறை வென்ற ரேபரேலி தொகுதி 507-வது இடத்தில்.

* ராஜீவ் ,சஞ்சய் வென்ற அமேதி தொகுதி 484-வது இடத்தில் .

* ஷிபு சோரனின் தும்கா தொகுதி 540-வது இடத்தில்.

* சோம்நாத் சாட்டர்ஜியின் போல்பூர் தொகுதி 319 -வது இடத்தில்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives