Monday, February 25, 2013

கடல் திரைப்படமும் கத்தோலிக்க மீனவர் சித்தரிப்பும் - தொடர்ச்சி


சென்ற பதிவின் தொடர்ச்சியாக ...

பொதுவாகவே கிறித்துவர்களிடையே கத்தோலிக்கருக்கும் மற்ற பிரிவினருக்கும் உள்ள கலாச்சார வேறுபாடுகள் குறித்த புரிதல் கிறித்துவரல்லாதவரிடத்தில் மிகக்குறைவு என்பது நிதர்சனம் . அதுவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து முரண்பட்ட பார்வை இருந்து கொண்டே இருக்கிறது .அவை பெரும்பாலும் ஆவேசப்பட்டு எதிர்க்கும் வகையாக இல்லாமல் புரிதலற்ற தன்மை குறித்த நகைப்போடு கடந்து செல்வதாகவே இருந்திருக்கிறது .  கிறித்துவர்களென்றால் முன்பெல்லாம் தமிழை கடித்துத் துப்பும் ஆங்கிலோ இந்தியரை சித்தரிப்பது , மாதா கோவிலில் நடப்பதாக காட்டப்படும் நிகழ்வுகள் தமிழக கத்தோலிக்க பின்புலத்திலிருந்து மாறுபட்டு கத்தோலிக்கரல்லாத பிறரின் வழக்கங்களை காட்டுவது (உதாரணமாக திருமணத்துக்கு தமிழ் கத்தோலிக்கர் இன்றுவரை மணமகள் பட்டுப்புடவை அணிந்து தங்கத்தாலி தான் கட்டுகிறார் என்பதை அறிந்திருக்காமல் ) வழக்கமான ஒன்று .

கடல் திரைப்படத்திலும் சில முரண்கள் இருக்கின்ற . 'ஸ்தோத்திரம்' என்ற வார்த்தை ஒருவருக்கொருவர் சொல்வது போல காட்டப்படுகிறது .  எங்கள் ஊர்களில் 'ஸ்தோத்திரம்' என்று யாரும் சொல்லுவதில்லை . தமிழிலேயே இன்றைக்கு கத்தோலிக்கரும் பிற பிரிவினரும் உபயோகிக்கும் விவிலியத்தின் (பைபிள்) உள்ளடக்கம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் வார்த்தை அமைப்புகளில் பெரும் வேறுபாடு உண்டு . தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகமே பைபிள் தான் என நினைக்கிறேன் . அப்போதைய தமிழ் மொழிபெயர்ப்பு அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த மணிபிரவாள நடையிலேயே அமைந்திருக்கிறது . கொஞ்சம் சமஸ்கிருதம் கலப்போடு வார்த்தைகள் அமைந்திருக்கும் ..பின்னர் கத்தோலிக்க ஆயர் குழு அதை திருத்தி முடிந்தவரை தூய தமிழில் மாற்றி அமைத்த வடிவத்தையே கத்தோலிக்கர்கள் இன்று உபயோகிக்கிறார்கள் . ஆனால் பிற சபையினர் இன்னும் பழைய வார்த்தை அமைப்புகள் கொண்ட வடிவத்தையே உபயோகிக்கிறார்கள் ..உதாரணமாக ஸ்தோத்திரம் , கர்த்தர் , தேவன் , இரட்சணியம் போன்ற வார்த்தை பிரயோகங்களை கத்தோலிக்கரல்லாதவர் உபயோகிக்கும் பைபிளில் காணலாம் .ஆனால் கத்தோலிக்கர் பைபிளில் அவை முறையே வணக்கம் , மீட்பர் , கடவுள் , மீட்பு என்றிருக்கும் . இது போன்ற வார்த்தை பிரயோகங்களிலேயே கத்தோலிக்கரையும் மற்றவரையும் அடையாளம் கண்டு கொள்ளலாம் . 'ஸ்தோத்திரம்' போன்ற வார்த்தைகள் கத்தோலிக்கரிடையே இன்று வழக்கொழிந்து விட்டது . 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்க கோவில்களில் லத்தீன் மொழியில் வழிபாடுகள் நிகழ்ந்தன . பின்னர் கத்தோலிக்க திருச்சபை அவரவர் தாழ்மொழியில் வழிபாடு செய்ய ஆரம்பித்த பிறகு நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. பொதுவாக கிறித்துவ பெண்கள் பூ , பொட்டு வைக்க மாட்டார்கள் என்ற அபிப்பிராயம் உள்ளது .மற்ற சபையினரைப் போலன்றி , தமிழக கிறித்துவர்களில் பெரும்பான்மையாக இருக்கின்ற கத்தோலிக்கர்களில் பெண்கள் பூ வைத்து பொட்டும் வைப்பது சகஜம் . அதுவும் மீனவ கிராமங்கள் இது சற்று அதிகம் . கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை தான் .ஆனால் கடல் திரைப்பட்டத்தில் 'கிறித்துவர்கள் பொட்டு வைக்க மாட்டார்கள்' என்ற பொதுக்கருத்தை அபப்டியே எடுத்துக்கொண்டு ஒரு பெண் கூட பொட்டோடு இருக்க கூடாது என கவனமாக தவிர்த்திருப்பதை பார்க்க முடிகிறது . அது ஒரு வேடிக்கையான அனுமானம் தான் .

கடல் திரைப்படத்தின் வர்த்தக தோல்விக்கு பிறகு ஜெயமோகன் தன் இணையப்பக்கத்தில் கொடுத்துள்ள சில விளக்கங்களில் ஒன்று இந்த கதை ஒரு அவிசுவாசம் நிறைந்த கத்தோலிக்க கடற்கரை கிராமத்தில் நடப்பதாக உள்ளது என்கிறார் . பொதுவாக மீனவர்கள் குறித்து உள்நாட்டவர் பலருக்கு ஒரு பொதுவான எண்ணம் உண்டு . மீனவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் , முரடர்கள் , அடுத்தவர் சென்று சொல்லித்தான் எதையும் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கும் உலக நடப்பு தெரியாதவர்கள் என்பது போன்ற ஒரு எண்ணம் பலருக்கும் இருப்பதை பார்க்க முடிகிறது . தமிழகத்தில் வட தமிழக மீனவ கிராமங்களுக்கும் தென் தமிழக மீனவ கிராமங்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு . தென் தமிழகத்தில் மீனவ கிராமங்கள் கத்தோலிக்க திருச்சபையோடு பின்னிப் பிணைந்திருப்பதால் அவர்கள் ஒரு வகையில் சுரண்டப்பட்டாலும் , அவர்கள் அடைந்த மிகப்பெரிய நன்மை கல்வி மேம்பாடு .. தென் தமிழகத்து மீனவ கிராமங்களில் வானுயர்ந்த தேவாலயங்களுக்கு அருகில் நிச்சயமாக ஒரு பள்ளிக்கூடத்தையும் காணலாம் . படிப்பறிவில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன இந்த கிராமங்கள் .சமீபத்தில் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த ஒரு இளம் பெண் பேசும் போது மீனவர்கள் என்றால் படிப்பறிவில்லாத அப்பாவிகள் என்பது போல குறிப்பிட்டு விட்டு இடிந்தகரை மக்களுக்கு உதயகுமாரின் என்.ஜி.ஓ பிழைப்பதற்கு வேலை கொடுப்பதனால் தான் அவரை ஆதரிக்கிறார்கள் என ஒரு மிகப்பெரிய காமெடியை சீரியசாக சொன்னார் . மீனவர் பற்றிய பொதுவான புரிதல் எத்தனை அபத்தமாக இருக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம் . அவரைச் சொல்லி குற்றமில்லை . ஏனன்றால் உள்நாட்டில் இருக்கும் பலரும் மீனவர் கிராமங்களுக்கு சென்று பார்த்ததே கிடையாது . இது அவருக்கு மட்டுமல்ல , மீனவர் பற்றி ரொம்ப தெரிந்தது போல பேசும் , எழுதும் பல அறிவுஜீவிகளின் நிலையும் அது தான் .

திரைப்படம் என்பது கற்பனை கலந்தது , அதை பொதுமைப்படுத்தி குறை சொல்லக்கூடாது என்பதிலும் , ஒரு குறிப்பிட்ட சித்தரிப்பு ஒட்டுமொத்தமாக எதையும் நிறுவுவதாகாது என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு . ஆனால் மீனவர் குறித்து மேற்சொன்ன பொதுமைப்படுத்துதலே தொடர்ந்து நிகழ்ந்து வரும் போது , அரிதாக மீனவர் குறித்து வரும் இது போன்ற திரைப்படங்களின் சித்தரிப்புகள் அந்த பொதுப்புத்தியை தாண்டிய பார்வையை தவிர்த்து அதை மீண்டும் உறுதிப்படுத்தவே செய்யும் எனும் போது அது பற்றி நமக்கு கரிசனம் வருவது தவிர்க்க முடியாதது . எந்த ஒரு குறிப்பிட்ட சித்தரிப்புக்கும் ஒரு குறைந்த பட்ச நடைமுறை முகாந்திரம் இருக்க வேண்டும் . ஜெயமோகன் சொல்ல வரும் அவிசுவாச மக்கள் நிறைந்த கத்தோலிக்க கடற்கரை கிராமம் என்பது குறித்த பொதுவான சித்திரத்தை அளிக்க முடியாது . குறிப்பிட்ட பாதிரியார்கள் , சில திருச்சபை செயல்பாடுகள் குறித்த சில அவிசுவாசங்கள் சாத்தியம் உண்டு என்றாலும் அடிப்படை கத்தோலிக்க விசுவாசத்தில் கடற்கரை மக்கள் காலங்காலமாக ஊறியவர்கள் . மீனவர்களுக்கும் கிறித்துவத்துக்கும் விவிலிய ரீதியாகவே பிணைப்பு உண்டு . இயேசுவை முதன் முதலாக ஏற்றுக்கொண்டு பின் தொடர்ந்த அவரது சீடர்களில் பலர் மீனவர்கள் தான் . மீன் பிடித்துக்கொண்டிருந்தவரிடம் "இன்று முதல் நீ மனிதர்களை பிடிப்பவனாவாய்" என இயேசுவால் சொல்லப்பட்ட , பின்னர் திருச்சபையின் முதல் தலைமையாக இருந்த இராயப்பர் (St.Peter) உள்ளிட்ட இயேசுவில் 12 அப்போஸ்தலர்களில் பலர் மீனவர்கள் தான் . இயேசுவே அவர்களோடு சென்று வலை வீசினார் என பைபிளில் வருகிறது . தென் தமிழ்கத்தில் 5 நூற்றாண்டுகளாக கத்தோலிக்கராக இருக்கின்ற கடற்கரை மக்களின் கிறித்துவ விசுவாசத்தில் இவை சார்ந்த ஒரு பெருமிதமும் , கூடுதல் ஒட்டுதலும் இருப்பதை நிச்சயமாக்க சொல்ல முடியும் . மீனவ மக்களிடம் அதிமாக காணப்படும் புனித அந்தோனியார்(St.Antony)  பக்திக்கும் , அந்தோனியாரின் போதனையை கடல் மீன்கள் செவிமடுத்தன என்பது போன்ற கதைகளும் காரணம் . இந்த பின்புலத்தில் கடற்கரை கிராமம் முழுவதும் அவிசுவாசிகளாக இருப்பதாகவும் அதை மாற்ற ஒரு பாதிரியார் சென்று அவர்களின் அறியாமையையும் அவிசுவாசத்தையும் போக்க முயல்வதாகவும் இன்றைய காலகட்டத்தில் சொல்லுவது நீயா நானாவில் பேசிய அந்த மாணவியிடம் வெளிபட்ட பொதுப்புத்தியிலிருந்து பெரிதும் வேறுபட்டதல்ல என்றே நினைக்கிறேன்.

மற்றபடி , பாராட்டத்தக்க சில அம்சங்களும் படத்தில் இருக்கின்றன . முதலில் மேற்சொன்ன சித்தரிப்பு முரண்பாடுகளைத் தாண்டி இது நிராகரிக்கத்தக்க படம் அல்ல .. நண்பர் அருள் எழில் சொன்னது போல மீனவர் சம்பந்தப்பட்ட எதைக்குறித்தும் மீனவரல்லாதவரிடம் நிலவுகின்ற அதீதமான இடைவெளியாலேயே  இந்த படம் பலரால் முற்றாக நிராகரிக்கப்பட்டதோ என்ற ஐயமும் இருக்கிறது . படத்தில் கையாளப்பட்ட வட்டார வழக்கை பொறுத்தவரை இதுவரை மீனவர் குறித்து வந்த படங்களிலேயே இதுவே ஆகச்சிறந்தது . முதன்மை கதாபாத்திரங்கள் தவிர சிறு கதாபாத்திரங்கள் மற்றும் பின்னணியில் ஒலிக்கும் சில வசனங்கள் அருமையான அவதானிப்பை உணர்த்துகின்றன . குறிப்பாக கதாநாயகனின் தாய்க்கு பின்னர் ஒரு நாளில் கல்லறை தோட்டத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அது சார்ந்த பாடலும் மிகவும் எதார்த்தம் .

கடவுள் , சாத்தான் , குறியீடு , படிமம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கெல்லாம் ஆழம் இருப்பதாக படவில்லை என்றாலும் நிராகரிக்கத்தக்க படமல்ல 'கடல்'.

16 comments:

rajasundararajan said...

இரண்டு பகுதிகளையும் இப்போதுதான் வாசித்தேன். உங்கள் கவனிப்புகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டியவைதான். படத்தில் வருவது கற்பனைக் கதைதானே ஏன் இயல்பு பற்றிப் பேசுகிறீர்கள் என்று உங்களைக் கேட்கும் இதே கூட்டம் அல்லது இவர்களது பங்காளிகள் "கும்கி" படத்தில் யானையைப் பற்றிய சித்தரிப்புகளும் ஆதிவாசி கிராமமும் இயல்பாக இல்லை என்று சொன்னவர்கள்தாம்.

புனைவு என்று சொன்னாலும் ஜெயமோகன் (எந்த எழுத்தாளனும்) தன் வாழ்க்கையின் ஒரு பகுதியை அதற்குள் வைத்திருக்கிறார். இதில் எது ஜெயமோகனின் வாழ்க்கை என்று என்னால் யூகிக்க முடிகிறது, ஆனால் மணிரத்னம் அந்தப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படமாக்கவில்லை என்பதே என் கருத்து. அதுவே, அதாவது main-plot குறுக்கப்பட்டு sub-plot முக்கியத்துவம் பெற்றதே, இப் படத்தின் தோல்விக்குக் காரணம். இதை ஜெயமோகனும் தன் கட்டுரையில் - ஒளிவுமறைவாக - இடைவேளைக்குப் பின்னான படம் சிதறுவது பற்றிப் பேசுகிறார்.

போகட்டும், இப்படி உங்களைப்போல் பின்னணி தெரிந்தவரும் எழுத அக்கறை எடுத்துக்கொண்டதுக்குப் பாராட்டுகள்!

Rakesh Kumar said...

More great information, Joe. Thanks. Will definitely catch the movie when it's on our paid TV.

Rakesh Kumar said...

Lots of information again. Thanks. Will definitely catch it when it appears in our paid TV.

முரளிகண்ணன் said...

பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்.

Anonymous said...

ஜோ அருமை.இப்போது சொல்கிறேன் நான் கடல் படத்தில் ஒரு மாதம் டப்பிட்ங்கில் வேலை செய்தேன். கோவில்குட்டி, ஸ்சோஸ்திரம் போன்ற சொற்கள் மீனவர்களிடம் இல்லை என்றேன். இதில் மணி சார் மிகச் சிறாந்த மனிதர் மற்றவர்கள் அப்படியில்லை. அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் நான் பேசாமல் இருந்து விட்டேன். மற்றபடி உங்கள் விமர்சனம் அருமை.

டி.அருள் எழிலன்.

PRABHU RAJADURAI said...

கத்தோலிக்கர்களுக்கு அடுத்து பெரும்பான்மையாக இருக்கும் சி எஸ் ஐ பின்னர் லூத்தரன் சபையை சேர்ந்தவர்களும் வண்ண பட்டுப்புடவை அணிந்து தாலிதான் கட்டுகிறார்கள். மிகசிறிய அளவில் உள்ள பெந்தேகொஸ்தே சபையை சேர்ந்தவர்கள் மட்டுமே வெள்ளைபுடவை அணிந்து பைபிளை மாற்றிக் கொள்கிறார்கள்.

பைபிளை மொழி பெயர்த்தது தரங்கம்பாடியில் குடியேறிய ஸீகன்பால் ஐயர். அவர் தமிழ் கற்றுக் கொண்டது பிராமண பண்டிதர்களிடம். எனவே பைபிள் சமஸ்கிருத சொற்களால் நிரம்பியுள்ளது.

எஸ் சக்திவேல் said...

///பொதுவாக கிறித்துவ பெண்கள் பூ , பொட்டு வைக்க மாட்டார்கள் என்ற அபிப்பிராயம் உள்ளது .மற்ற சபையினரைப் போலன்றி , தமிழக கிறித்துவர்களில் பெரும்பான்மையாக இருக்கின்ற கத்தோலிக்கர்களில் பெண்கள் பூ ----வைத்து பொட்டும் வைப்பது சகஜம் .

இலங்கையிலும் அஃதே. கத்தோலுக் பெண்கள் தாலி அணிவார்கள். பொட்டு அணிவார்கள். மற்றக் கிறீஸ்தவர்கள் அப்படியில்லை.

Suganthy said...

good observation......but in my opinion the movie failed to convey any message.And as the author says there is no sea side village where the church is neglected in this manner. And our people never hate anyone to such an extent like its shown in this movie where the little boy is neglected and hated by the villagers just because he is the son of a prostitute. Arjun's character is another major flaw. I wonder why any of the Maesaikaran in Tuticorin filed a case against Manirathnam for portraying the Maesaikaran character in this way as per the present trend :P.I went to see this movie expecting a lot of nativity and lot more from a director like Manirathnam.

J.P Josephine Baba said...

nice and objective observation.

Anonymous said...

Nice and subjective observations! Finally you have ended with 'the film is not worth rejection!'

Film is rejected by cine goers who don't go to watch a film how best it portrays realities; but how best riveting the film for 3 hours. Realities should be USED artistically and not exactly. The film failed not so much because it tampered and tinkered with the realities as u explain as because it did not catch the attention of the watchers in the hall. I have not seen the film; that’s y saying its failure is due to viewers’ lack of interest.

Ur subjective observations about the lives of Tamil catholic fishermen cannot be questioned because u r both a witness and a participator in such lives. I mean, son of the soil!

- The same Anonymous.

Anonymous said...

மற்ற மக்கள் தமிழ் கத்தோலிக்க மீனவர்களைப் பற்றி தெரிந்திருக்கா காரணம் இருவகை மக்களும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லா வாழ்க்கையை வாழ்வதாலே. தொடர்பான வாழ்க்கைக்குக் காரணங்கள் அவசியம். அவையில்லை. மீனவர்கள் அவர்களுக்குள்ளாகவே வாழ்வதால். அவர்களுக்கென கத்தோலிக்க மதம் மாற்றப்பட்டிருக்கிறது. அதை சர்ச் நன்றாகவே செய்திருக்கிறது. கத்தோலிக்க கலாச்சார வாழ்க்கையை மாற்றினால் மட்டுமே மற்றெதுவும் சாத்தியம். அதை எவரும் செய்ய முடியா காரணம் பிறமக்கள் ஒரு மீனவ கிராமத்தில் வாழ முடியாது.

ஜெயமோகன் சொல்லும் அவிசுவான மீனவ கத்தோலிக்க கிராமம் இல்லவே இல்லை. நீங்களும் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். Well done!

sonrobin leon said...

அருமையான கட்டுரை.இதை படிதவர்கள் நிச்சயம் பல விசயங்கள் தெரிந்துகொள்வர்கள் மிக்க நன்றி

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணே படிப்படியாக நமது சமுதாயத்தை சார்ந்த மக்களும் நம் அருமை பெருமைகளை உணர்ந்து நடக்கும் வண்ணம் பல் கட்டுரைகளை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன் மீண்டும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

காரிகன் said...

உங்கள் பதிவு வெகு அபூர்வமாக காணக்கிடைப்பது. ஜெயமோகன் ஒரு ஆர் எஸ் எஸ் அபிமானி என்பது பரவலான அபிப்ராயம்.அவர் கிருஸ்துவத்தை வெகுவாக விமர்சிப்பவர். அதை பெருமையாக வேறு சொல்லிக்கொள்பவர். ஏசுவை ஒரு நல்ல குரு என்கிற ரீதியில் பார்க்கும் வகையை சேர்ந்தவர். இவரை மணிரத்தினம் நம்பி திரைக்கதை எழுத சொன்னது ஒரு வியப்பான நிகழ்வு. தனக்கு வேண்டிய சங்கதிகளை இப்படி உண்மை போல (ஏசு தம்பி சாத்தான் அண்ணன் என்னும் கருத்து ஒரு கிரேக்க கிறிஸ்துவர்களின் நம்பிக்கை) சொல்லி கிறிஸ்துவம் இதுதான் என்று அவர் இந்த திரைப்படத்தின் மூலம் மக்களிடம் திணிக்க முயன்றது எந்த பலனும் இல்லாமல் போனதால் இப்போது கண்ணா பின்னாவென்று அவிசுவாசம் உள்ள கிராமம் என்று பேசுகிறார்.மணிரத்தினம் கொஞ்சம் இரண்டாம் முறை யோசித்திருக்கலாம் இந்த ஜெயமோஹனை நாடுவதற்கு முன். என்ன செய்வது? சுஜாதா கூட வேறு விதமாக இந்த கதையை சொல்லி இருப்பார்.(அவர் பைபிளை இரண்டாவது இடத்தில் குறிப்பிட்டிருந்தது இப்போது நினைவு கொள்ள வேண்டும்.முதல் இடம் புறநானூறு வுக்கு). இந்த ஜெயமோகனின் கதையையே மணிரத்னம் நம்பியது முதல் தவறு. இனிமேலாவது மணிரத்னம் கொஞ்சம் விழித்து கொள்வது நல்லது.

அன்பு said...

முதல் பதிவிற்கு அற்புதமான தொடர்ச்சியை தந்தது இந்த பதிவு... நீர்ப்பறவையில் வட்டார வழக்கு இல்லாததே பெரும் குறையாக எனக்குத்தெரிந்தது.. அந்த வகையில் முதல்முறையாக வட்டாரவழக்கைதொட்டுச்சென்றிருக்கார்ஜெமோ.. சமயங்களி்ல் நாகர்கோவில் வட்டாரவழக்கை கலந்தும் அடிந்திருக்கிறார்.. உண்மையில் பிற சமுதாயத்தினர் கத்தோலிக்க மக்களை வெகுவாக புரிந்துகொள்ளாததே ஒரு பெரும் குறை.. இதுமதம் சார்ந்த வேறுபாடாயிருக்கலம்... அதுபோல முஸ்லீம் மதம் சார்த்த புரிதல்களை ஏதேனும் டைரக்டர் கொண்டுவரவண்டும் என்று விரும்புகிறேன்.. ஜமாத் , முஸ்லிம் திருமணமுறை போன்ற பல மலையாளப்படங்களைத்தவிர பெரும்பாலும் தமிழில் கண்டுகொள்ளப்படவில்லை... வரவேற்கப்படவேண்டிய நல்லபதிவு.. நன்றி

Anonymous said...

Hello. And Bye.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives