தொலைக்காட்சியில் ஜெயா டிவி நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே நம்மூர் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு ,வெளியில் இறங்கி நடந்தால் ,முந்தைய மாரியம்மன் கோவிலைவிட பெரிய இந்து கோவில் ஒன்று கண்ணில் பட்டது.இம்முறை 'ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில்'.
மாரியம்மன் கோவில் மாதிரியே இங்கேயும்,உள்ளே நுழைந்ததும் அமுதத் தமிழ் செவியில் நுழைந்தது .'காக்க காக்க ..கனகவேல் காக்க' -என்ற மயக்கும் பாடல் ,கொஞ்ச நேரம் அப்படியே கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன் .பின்னர் மிதியடிகளை அவிழ்த்து விட்டு பிரகாரம் அருகில் நுழைந்தால் ,உள்ளிருந்து இந்தியரா ,வியட்நாமியரா என்று குழப்பம் தருகிற தோற்றத்தோடு ஒருவர் வெளியே வந்து என்னைக் கண்டு கைகூப்பி வரவேற்றார் .பதில் வணக்கம் தெரிவித்து ,அவரிடம் பின்னர் பேசலாம் என்று நோட்டம் விட ஆரம்பித்தேன்.
மிகவும் விசாலமான இடவசதி இருந்தது கோவிலில் ,பிரகாரத்தை சுற்றி நிறைய சாமிப் படங்கள் மாட்டப்பட்டிருந்தன .'காக்க காக்க " பாடலை கேட்டுக்கொண்டே ஒரு முறை சுற்றி வந்தது இனிமையாக இருந்தது .மதிய நேரம் என்பதால் எண்ணைய் ,பூக்கள் விற்றுக்கொண்டிருந்த இரு வியட்நாம் பெண்கள் தவிர யாருமில்லை .முதலில் பார்த்த நபரை பேசலாமே என்று தேடினால் ,ஆளை காணவில்லை .
சரி கிளம்பலாம் என்று நினைக்கும் போது கோவிலின் உள்ளே சுவர்களில் மாட்டப்பட்டிருந்த சில இந்திய தலைவர்கள் ,அறிஞர்களின் பெரிய படங்கள் கவனத்தை ஈர்த்தன.அதில் ஆச்சரியமும் ,மகிழ்ச்சியும் தந்தது ,இளம் விவேகானந்தருக்கு அருகில் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் படம்.
ஒரு இந்துக் கோவிலுக்குள் ,ஒரு இஸ்லாமியரின் படத்தைக் கண்டு ,ஒரு கிறிஸ்தவன் மகிழ்வது தான் நமது தனிச்சிறப்போ?