Tuesday, December 05, 2006

செவாலியே கமல்ஹாசன் ?

Photobucket - Video and Image Hosting

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது நடிகர் திலகத்துக்கு பிறகு அவருடைய கலை வாரிசான கலைஞானி கமல் ஹாசனுக்கு வழங்கப்படவிருப்பதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி கேள்விப்பட்டேன்.

இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை .ஆனால் இத்தகைய சிறப்பை நடிகர் திலகத்தை தொடர்ந்து பெறுவதற்கு கமல் ஹாசனை விட தகுதி படைத்தோர் இந்தியாவில் வேறு எவருமில்லை என்பதை மறுக்க முடியாது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ,ஒரு நடன இயக்குநராக பின்னர் நடிகனாக வளர்ந்து கமல் படைத்த சாதனைகள் மலைக்க வைப்பவை .இன்று ஒரு தயாரிப்பாளராக ,இயக்குநராக ,கதை வசன கர்த்தாவாக ,பாடலாசிரியராக ,பாடகராக பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்த ஒரு முழுக்கலைஞன் ,தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல ,வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி கட்டிய மாபெரும் கலைஞன் என்பதை அவரது விமர்சகர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள்.

நடிகர் திலகத்தை அடுத்து செவாலியே விருதை கமல் பெறப்போவது உண்மையானால் கண்டிப்பாக தமிழர்க்கும் தமிழகத்துக்கும் பெருமையே!

Tuesday, October 31, 2006

நாதியற்ற மீனவன்!

குமரி மாவட்டத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் வளைகுடா நாடுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .அரபு முதலாளிகளின் படகுகளில் வேலை மீன்பிடிக்க செல்லும் இவர்கள் உயிரைப் பணயம் வைத்து உழைத்தாலும் பல அரபு முதலாளிகள் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதே பெரும்பாடு .பட்ட கடனை அடைக்க முடியாமலேயே ஊர் திரும்பியவர்கள் ஏராளம்.

இந்நிலையில் கடந்த ரம்ஜானுக்கு 4 நாட்களுக்கு முன்பு எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் படகில் மீன் பிடிக்க சென்ற போது கடற்கொள்ளையர்களால் சுடப்பட்டு எனது நண்பர் ஒருவர் பலியாகி விட்டார் .சவூதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த அந்த நண்பர் படகு ஓட்டுபவராகவும் இருந்திருக்கிறார் .ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் போது கடற்கொள்ளையர்கள் தாக்குவது சகஜமாக நடக்கக் கூடியதாம் .வழக்கமாக கடற்கொள்ளையர்கள் வந்து விட்டால் படகை நிறுத்திவிட வேண்டுமாம் .அவ்வாறு செய்தால் அவர்கள் துப்பாக்கி முனையில் எல்லாவற்றையும் கொள்ளை அடித்து விட்டு சிறிது தாக்கி விட்டு சென்று விடுவார்களாம் .ஆனால் அவர்களை பார்த்த பின்னரும் படகை நிறுத்தாமல் சென்றால் முதலில் படகை ஓட்டுபவரை குறிவைத்து சுடுவார்களாம் .இங்கு நடந்தது அது தான்.

கடற்கொள்ளையர்களை பார்த்தவுடன் ,நண்பர் படகை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றிருக்கிறார் .அவர்களும் குறி வைத்து சுட்டதால் அவர் அந்த இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார் .எங்கள் ஊரைச் சேர்ந்த இன்னொரு நபருக்கும் கழுத்தில் குண்டு பாய்ந்து அபாயகரமான நிலையிலுள்ளார்.

அநியாயமாக இறந்து போன இந்த நண்பர் ,பள்ளியில் என்னோடு பயின்றவர் .குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்புக்கு மேல் தொடர முடியாமல் மீன்பிடித் தொழிலில் இறங்கியவர் .எங்கள் ஊரில் படித்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு இளைஞர் இயக்கத்தை தொடங்கி ,பின்னர் மீன்பிடிக்கும் இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு பல்வேறு பணிகளை செய்த போது ,மீன்பிடிக்கும் இளைஞர் என்ற முறையில் அந்த இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்த நண்பர் .இளைஞர் இயக்கத்தின் சார்பில் வெகு விமரிசையாக நடத்தப்படும் சுதந்திர தின விழாக்களை முன்னின்று நடத்தியவர் .திருமணமாகி குழந்தைகள் இருக்கின்ற சூழலில் ,இளம் மனைவியைவும் குழ்ந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு அநியாயமாக சென்று சேர்ந்து விட்டார்.

ரம்ஜான் விடுமுறை காலம் என்பதால் அவருடைய உடல் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடங்கப்படவேயில்லையாம் .கண்ணீரும் கம்பலையுமாக ஊரே அவர் உடலுக்காக காத்திருக்கிறது. இது பற்றிய செய்தி கூட எந்த பத்திரிகையிலும் வந்ததாக தெரியவில்லை.

"ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை"

Tuesday, October 17, 2006

மதுரை இடைத்தேர்தல் முடிவு - விஜயகாந்தின் உள்குத்து

கொஞ்ச நாளாகவே விஜயகாந்த் செய்யும் அரசியலின் மீது எனக்கு ஒரு சந்தேகம் .அந்த சந்தேகம் இப்போது உண்மையாகும் அறிகுறிகள் தெரிகின்றன.

தனிக்கட்சி ஆரம்பித்தது முதலே விஜயகாந்த் திமுக-வையும் கலைஞரையும் கடுமையாக தாக்கி வருகிறார் .இன்று தன்னை எம்.ஜி,ஆர் பக்தராக காட்டிக்கொள்ளும் விஜயகாந்த் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கலைஞர் அபிமானி என அறியப்பட்டவர் .திமுகவினர் விஜயகாந்தை தங்கள் கட்சி அபிமானி என்றே முன்பு அறிந்திருந்தனர் .ஆனால் தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு அவர் திமுக ,அதிமுக இரண்டையும் தாக்கினாலும் ,திமுக எதிர்ப்பை அளவுக்கு அதிகமாகவே செய்து வருகிறார் .அதிமுக-வை பட்டும் படாமல் ஒப்புக்கு மட்டுமே தாக்குவதோடு தன்னை எம்.ஜி,ஆர் பக்தராக முன் நிறுத்தி வருகிறார்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது அவருடைய வருகை அதிமுகவை விட திமுகவுக்கே வாக்கு இழப்பாக இருக்கும் என பத்திரிகைகள் ஆரூடம் சொன்னன. அவரும் ஏதோ திமுகவை எதிர்த்தே கட்சி ஆரம்பித்தது போல பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதிலுள்ள சூட்சுமம் என்னவாக இருக்க முடியும் ?

தமிழகத்தில் கலைஞர் எதிர்ப்பு ஓட்டு என்பது 50% மேல் உள்ளது .இதில் பெரும் பகுதியை அதிமுக அறுவடை செய்து வந்தது .தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மூலம் கிடைக்கும் சொற்ப சதவீதத்தோடு கலைஞர் எதிர்ப்பு ஓட்டுக்களில் பெரும் பகுதியை கைப்பற்றுவதே விஜயகாந்தின் திட்டமாக இருக்க முடியும் .அதோடு எம்.ஜி.ஆர் அபிமானிகளின் ஓட்டுக்களையும் பெற முயல்வது .அதற்கு ஒரே வழி கலைஞரை எதிர்ப்பதாக காட்டிக்கொள்வது .

இதன் மூலம்
1.கலைஞரை எதிர்ப்பதற்காக மட்டுமே அதிமுகவுக்கு வாக்களிக்கும் கூட்டத்தின் ஒரு பகுதி விஜயகாந்துக்கு வாக்களிக்கும்.

2.கலைஞர் எதிர்ப்பு என்ற தாரக மந்திரத்தை கொண்டே எம்.ஜி.,ஆர் வெற்றி பவனி வந்தது போல ,கலைஞர் எதிர்ப்பாளராகவும் எம்.ஜி.ஆர் பக்தராகவும் காட்டிக்கொண்டால் ,கலைஞர் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஜெயலலிதாவை வேண்டாவெறுப்போடு ஆதரித்து வந்த எம்.ஜி.ஆர் அபிமானிகள் ஓட்டுக்களையும் பெற முடியும்.

3.ஜெயலலிதாவை விட கலைஞரை அதிகமாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டால் கலைஞர் எதிர்ப்பாளர்கள் மகிழ்ந்து தன் பக்கம் திரும்புவார்கள்.

இதோ மதுரை இடைத்தேர்தல் முடிவுகள்...

திமுக - 57 %
அதிமுக - 24 %
தேமுதிக - 19 %


கலைஞரும் விஜயகாந்தும் உள்குத்து கூட்டணி அமைத்துக்கொண்டு ,கலைஞர் இயக்கத்தில் விஜயகாந்தின் நடிப்பு பயணம் வெற்றிப்பாதையில் செல்வது போலத்தான் தெரிகிறது.

Tuesday, October 03, 2006

இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி)

இஸ்லாமிய சகோதரர்கள் பொதுவாக கருத்து சொல்லும் போது இஸ்லாமில் அனைத்து நபி மார்களும் (ஆதாம் ,ஆபிரகாம் தொடங்கி இயேசு ,அண்ணல் முகமது நபி வரை) சமமாகவே மதிக்கப்படுகிறார்கள் ,அதே நேரத்தில் முகமது நபியவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதாலும் அவர் வழியாகவே இறை வார்த்தையான குரான் இறக்கப்பட்டதால் நடைமுறையில் முகமது நபியவர்கள் தனிச்சிறப்புடையவராகவும் இஸ்லாமியர்களின் தனிப்பட்ட பேரன்புக்குரியவராகவும் திகழ்கிறார் என்றும் கருத்துரைக்கிறார்கள் .இது பற்றி எனக்கு மறுப்பேதும் இல்லை.

ஆனால் இயேசு(ஈஸா நபி) குறித்து இஸ்லாம் நம்பிக்கை பற்றி மேலும் தகவல்களை நேரடியாக நம் இஸ்லாமிய அன்பர்களிடமிருந்து பெறலாமே என்ற நோக்கத்தில் இந்த பதிவு.

1. இயேசு அன்னை மரியின் மகனாக பிறந்தார் .ஆனால் அன்னை மரி தன்னுடைய கன்னித் தன்மையை இழக்காமலேயே ஆணின் மூலமாக அன்றி ,இறைவனால் கருத்தரிக்க வைக்கப்பட்டு இயேசு பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல முஸ்லிம்களின் நம்பிக்கையும் கூட .ஆக ஆதாம் என்கிற ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?

2. இந்த உலகின் இறுதி நாள் வரும் போது வானகத்திலிருந்து இயேசு மறுபடியும் இந்த மண்ணுலகுக்கு வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை .அது போலவே இஸ்லாமியர்களும் இறுதி நாளின் போது இயேசு மறுபடியும் வந்து குரானை ஓதுவார் என்று நம்புகின்றனர் .இங்கும் இறுதித் தூரரான முகமது நபிக்கு கிடைக்காக சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன ? ஏன் இயேசு- வுக்கு இந்த தனிச்சிறப்பு என்பதற்கு இஸ்லாம் என்ன விளக்கம் சொல்கிறது ?

Tuesday, September 19, 2006

போப்பாண்டவரும் இஸ்லாமும் -சர்ச்சை

சமீபத்தில் போப்பாண்டவர் இஸ்லாம் குறித்து பேசிய சில கருத்துக்கள் உலகம் முழுதும் இஸ்லாமியர்களின் கோபத்தை கிளறி பின்னர் அவரே மன்னிப்பு கேட்கும் நிலை உருவாகி இருக்கிறது ."முகமது நபியவர்கள் இவ்வுலகத்துக்கு கொண்டுவந்தது தீமை தான்" என்னும் பொருள் பட 14- நூற்றாண்டில் சொல்லப்பட்ட ஒரு கருத்தை மேற்கோள்காட்டி அவர் பேசியிருக்கிறார் .அது தன்னுடைய கருத்து அல்ல ,வெறும் மேற்கோள் தான் என்று அவர் சொல்வதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும் ,இன்றுள்ள சூழ்நிலையில் இந்த மேற்கோளை குறிப்பிட்டு பேச வேண்டிய எந்த அவசியமும் இருப்பதாக தெரியவில்லை.

உலகின் வலிமை வாய்ந்த ஒரு மதத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் இன்னொரு வலிமை வாய்ந்த மதத்தைப் பற்றி பேசும் போது பொறுப்புணர்வோடும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் யோசித்து பேசியிருக்க வேண்டும் .அவரவர் மனத்தளவில் சில கருத்துக்களை கொண்டிருக்கலாம் .ஆனால் பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் தனது கருத்தை வெளிப்படையாக பொதுவில் பேசும் போது அது அவர் பிரதிநிதிக்கும் அமைப்பின் ஒட்டு மொத்த கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை அவர் அறியாதிருந்திருக்க மாட்டார்.அவர் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது பற்றி விவாதங்கள் இருக்கலாம் .ஆனால் ஒரு போப் இப்போதைக்கு ,அது மேற்கோளேயானாலும் ,அதை சொல்ல வேண்டிய தேவை இல்லை .அதனால் உலகில் இணக்கமின்மை தான் அதிகரிக்குமே தவிர நன்மை விளையப்போவதில்லை .

இவருக்கு முன்னால் இருந்த போப் ஜாண் பால் அவர்களும் பல சர்ச்சைகளுக்கு ஆள்பட்டாலும் ,இஸ்லாமியர்களோடு இணக்கமாக இருந்தவர் .மசூதிக்கு சென்ற முதல் போப் என்று பெயரெடுத்தவர் .போப் பெனடிக்ட் -ம் அவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் .முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மன்னிப்பு கோரியிருக்கிறார் .இது வரவேற்கப்பட வேண்டியது .இத்தகைய செயல்களை போப்பாண்டவர் தவிர்ப்பதே நல்லது .முஸ்லீம்கள் மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் என்பதற்காக பயந்து அல்ல .மாறாக ,இத்தகைய பேச்சுக்கள் உலகில் எந்த நன்மையையும் கொண்டுவராது ,நல்லிணக்கத்தை கீழிறுக்கும் என்பதால் ,மற்றவர்க்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய கடமை போப்பாண்டவருக்கு இருக்க வேண்டும் .

இன்னொரு கோணத்தில் ,இஸ்லாமை வன்முறையோடு தொடர்புபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டி பல தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன .இதை கேள்விப்பட்டு எனக்கு சிரிப்பு தான் வருகிறது . ஒருவர் சாட்டிய குற்றம் தவறானது என்பதை நிரூபிக்க அதே குற்றத்தை செய்வது ..எங்கே போய் முட்டிக்கொள்வது?

இஸ்லாமிய சகோதரர்கள் காட்டிய எதிர்ப்பு நியாயமானது .ஆனால் சிலர் எதிர்ப்பை காட்டிய முறை நகைப்புக்குரியது.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives