Monday, August 28, 2006

வேட்டையாடு விளையாடு

Photobucket - Video and Image Hosting

பொதுவாகவே கமல் படம் என்றாலே ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் குறை சொல்லுவதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடி வரிசைப்படுத்துவது என்று ஒரு பெருங்கூட்டமே கிளம்பி விடும் .மற்ற நடிகர்கள் படங்களுக்கு இந்த அளவுக்கு அவர்கள் மெனக்கெடுவதில்லை . இதிலிருந்து கமல் மட்டுமே சீரியஸாக எடுத்துகொள்ளக் கூடிய நடிகர்களில் முதன்மையானவர் என்பது தெளிவாகிறது

கமல் என்னும் நடிகனிடமிருந்து இன்னொரு 'குருதிப் புனல்'-ஐயும் கவுதமிடமிருந்து இன்னொரு 'காக்க காக்க'-வையும் பலர் எதிர் பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது . 'வேட்டையாடு விளையாடு' குருதிப்புனல் அளவுக்கு நேர்த்தியான கமல் படமல்ல .காக்க காக்க-வின் சுவடுகளை மறைக்க இயக்குநரால் முடியவில்லை தான் .தமிழில் மிகச்சிறந்த படம் என்று இப்படத்தை சொல்ல முடியாது தான் .ஆனால் போலிஸ் என்றால் 'வால்டர் வெற்றி வேல்" அல்லது சந்து முனையில் பீரில் முகம் கழுவும் "சாமி' போன்ற அரைத்த மாவுகளை தூக்கி கடாசி விட்டு இயல்பான டி.ஜி.பி ராகவனை ரசிக்கப் பழகுங்கள் தமிழ் மக்களே!

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை .ஆனால் காட்சி அமைப்புகள் நேர்த்தி படத்தின் ஓட்டத்தை சீராக கொண்டு செல்கிறது .படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பது பொதுவாக பலரும் கருதினாலும் ,எந்த இடத்திலும் போரடித்ததாக எனக்கு நினைவில்லை.

கமல் என்ற மகா கலைஞனுக்கு இந்த பாத்திரம் அல்வா சாப்பிடுவது மாதிரி .யானைப் பசிக்கு சோளப்பொரி! இதற்கு கமல் தேவையா? -என்று என் நண்பர் கேட்டார் .நானும் தமிழில் உள்ள மற்ற எல்லா நடிகர்களையும் ஒவ்வொருவராக இதில் பொருத்தி மனதுக்குள் நினைத்துப் பார்த்தேன் .கமலின் மகத்துவம் தெரிந்தது .40-களில் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ள டி.ஜி.பி ராகவன் பாத்திரத்துக்கு இந்த அளவுக்கு கம்பீரத்தையும் ,பண்பட்ட தோற்றத்தையும், இயல்பையும் ,ஒற்றை வரிகளில் பொட்டிலடிதாற் போல் புரிய வைக்கும் நேர்த்தியையும் வெளிக்கொணர கமலை விட்டால் வேறு யாரால் முடியும்?கமலின் முந்தைய சாதனைகளை கணக்கிலெடுத்துக் கொண்டால் அவருக்கு இந்த படம் ஒரு மைல் கல் அல்ல .ஆனால் டி.ஜி.பி ராகவன் என்ற பாத்திரம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் தான் .மற்ற இளைய நடிகர்களுக்கு ஒரு எதிர் கால பாடம்.

இயக்குநர் கவுதமைப் பொறுத்தவரை காக்க காக்க-வை இன்னும் மறக்கவில்லை என தெரிகிறது . அது போலவே இதிலும் வில்லன் நீள தலைமுடி வைத்துக்கொண்டு ,அதே பாணியில் வசனம் பேசுகிறார் .காக்க காக்கவில் ஹீரோவின் நண்பராக வந்தவர் இதில் வில்லனாக வருகிறார் . மருத்துவம் படிக்கும் இரு வில்லன்களுக்கும் ஏன் இவ்வளவு வெறி என்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் போதுமானதாக இல்லை . வில்லன் முடியை முன்னால் தூக்கிப் போட்டுக்கொண்டு மரணமில்லா பெருவாழ்வு தரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் ,ஏழைகளுக்கு சேவை செய்யப்போவதாகவும் உச்சஸ்தாயில் கத்தவிட்டு என்ன சொல்ல முயல்கிறார் இயக்குநர் என்பது புரியவில்லை.

கமலினி சில நிமிடங்கள் வந்து மனதில் நிற்கிறார் .ஜோதிகா -கமல் உரையாடல் ,பின்னர் காதல் தமிழ் சினிமா வரையறைகளுக்குள் வராமல் இயல்பாக இருக்கிறது . "சாப்ட்வேரா.. இல்லைங்க..நான் போலிஸ்..ஹார்ட்வேர்" என்று சொல்லும் போது இயல்பான நகைச்சுவைக்கு தியேட்டர் அதிர்கிறது .இப்படி பல இடங்களில் கமலின் ஓரிரு வார்த்தைகள் ,டைமிங் ரசிக்க வைக்கின்றன. இன்றிலிருந்து நீயும் குழந்தையும் என் சொந்தம் என்று கமல் சொல்லும் போது ஜோதிகா உணர்ச்சிகளை அருமையாக வெளிக்காட்டியிருக்கிறார்.

தமிழில் ஓளிப்பதிவில் நான் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம் .சேஸிங் காட்சியில் கேமராவை போட்டு தலைகீழாக புரட்டியது தவிர ,படம் முழுக்க காமிரா கவிதை படித்திருக்கிறது .

அமெரிக்க போலிஸ் அதிகாரிகளோடு உரையாடல்கள் இயல்பாக ஆங்கிலத்தில் ,தமிழ் சப்-டைட்டில்களுடன் காட்டப்படுகின்றன .ஹேராமில் இது போல தமிழில் சப் -டைட்டில் போட்டிருக்கலாம் என்று குறை சொன்னார்கள் .இப்போது தமிழ் நாட்டு மக்களுக்கு ஒன்றுமே புரியாதே ,அதனால் அமெரிக்க அதிகாரி ஜுனூன் தமிழிலேயாவது பேச விட்டிருக்கலாம் என்று குறை சொல்லுவார்கள் .அப்படியே செய்து விட்டால் அமெரிக்க அதிகாரி தமிழ் பேசுவது போல அபத்தக்காட்சிகள் கமல் படத்தில் என்று மீண்டும் குறை சொல்லுவார்கள் .

இசையைப் பொறுத்தவரை பின்னணி இசையில் குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை .பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருக்கின்றன .ஹரிஸ் ஜெயராஜைப் பொறுத்தவரை அவரின் சில பாடல்களில் தேவாலயங்களில் பாடப்படும் கிறிஸ்தவப்பாடல்களின் சாயல் இருப்பது போல எனக்குத் தோன்றும் .குறிப்பாக "பார்த்த முதல் நாளே.." பாடலில் "உன் அலாதி அன்பினில்.." எனும் போது புனித வெள்ளியன்று கோவிலில் இருப்பது போல இருக்கிறது .சின்ன வயதில் அவர் தேவாலய இசைக்குழுவில் இருந்ததால் அந்த பாதிப்பு இன்னும் மறையவில்லை போலிருக்கிறது.

குறை சொல்லுவதற்கு இந்த படத்தில் நிறைய இருக்கிறது .ஆனால் இது நிராகரிக்கத்தக்க படம் அல்ல ."சாமி' போன்ற படங்கள் 150 ஓடுமென்றால் ,இந்த படம் 300 நாள் ஓடும் தகுதியுள்ளது .தமிழ் ரசிகர்கள் இதை உணர வேண்டும்.

Friday, July 21, 2006

மகா கலைஞன் நினைவாக

Photobucket - Video and Image Hosting

காலத்தை வென்ற கலைஞனே !
ஞாலத்தில் உனை மிஞ்சும்
நடிகன் நானறியேன்.

தமிழரின் பெருமையே!
வாழ்க நீ தந்த கலை!


Photobucket - Video and Image Hosting

(ஜூலை 21 -நடிகர் திலகம் நினைவு நாள்)

Friday, July 07, 2006

பிரேசில் தோற்ற கதை

பிரேசில் தோற்ற கதை
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

Thursday, July 06, 2006

இந்து மதம் -சில சந்தேகங்கள்

சமீபத்திய ஐயப்பன் கோவில் குறித்த சர்ச்சைகளிலும் ,அது தொடர்பான நம்பிக்கைகளோடு இணைந்த விவாதங்களிலும் எனக்கு கருத்து இருந்தாலும் இது வரை கலந்து கொள்ளவில்லை .ஆனால் சில அடிப்படை நிலைப்பாடுகள் குறித்த நியாயமான ஐயப்பாடுகள் எனக்கு இருப்பது மறுக்க முடியாது .அவை ஒரு வேளை என் அறியாமையினாலோ அல்லது சரியான புரிந்துணர்வின்மையாலோ தோன்றியிருக்கலாம் .ஒரு கிறிஸ்தவனான நான் இது குறித்து பொதுவில் அதுவும் வலைப்பதிவுகளில் அறிந்து கொள்ளும் முகமாக இந்த கேள்விகளை முன் வைத்தால் அது எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்ற குழப்பம் காரணாமாக நீண்ட தயக்கம் இருந்து வந்திருக்கிறது.

450 வருடகாலமாக கிறிஸ்தவர்களாக இருக்கும் ஒரு சமூகத்தில் பிறந்த நான் ,என் பிறப்பால் தான் நான் கிறிஸ்தவன் ஆனேனேயன்றி ,என் சுய தேடலின் விளைவாக நான் கிறிஸ்தவன் ஆகவில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறேன் .அதனால் ஏற்பட்ட ஒரு சிறு தெளிவில் பிற மதங்களை மரியாதையோடும் ,திறந்த மனத்தோடும் தான் நான் அணுகி வந்திருக்கிறேன் .நண்பர்கள் பலரோடு பல முறை இந்து கோவில்களுக்கு செல்ல நேரிட்ட போது ,அங்கு விபூதி வைத்துக்கொள்வதிலோ ,அல்லது என் நண்பர்கள் அர்ச்சனை செய்யும் போது என்னுடைய பெயரையும் சேர்த்துச் சொன்ன போதும் எனக்கு சிறு நெருடலோ ஏற்பட்டதில்லை .அங்கிருக்கின்ற ஆச்சார முறைமைகளுக்கு என்னால் (என் அறியாமையால்) எந்த சங்கடமும் நேர்ந்து விடக்கூடாதே என்ற எண்ணத்தால் கூடுதல் கவனம் எடுத்து மரியாதையுடன் பணிவுடனும் நடந்து கொண்டிருக்கிறேன். அந்த தகுதியின் அடிப்படையில் எனது இந்து சகோதரர்களிடம் சில விளக்கங்கள் கேட்கலாமென்றிருக்கிறேன்.இவை சமீபத்திய சர்ச்சைகளுக்கு சம்பந்தம் இல்லாத பொதுவான கேள்விகளாகவும் இருக்கலாம்.

(சில கேள்விகள் குமரன் அவர்கள் பதிவில் கேட்கப்பட்டு அவர் பதிலும் சொல்லியிருக்கிறார்)

1.பொதுவாக நான் பார்த்தவரை சைவர்கள் தயங்காமல் வைணவக் கோவில்களுக்கு செல்கிறார்கள் .ஆனால் பெரும்பான்மை வைணவர்கள் மறந்தும் கூட சைவ கோவில்களுக்குள் அடியெடுத்து வைப்பதில்லை (எனக்கு தெரிந்து சிலர் கிறிஸ்தவ கோவில்களுக்கு கூட வந்திருக்கிறார்கள் ,ஆனால் சைவக்கோவிலுக்குள் வர மறுத்து விட்டார்கள்). இது ஏன்?

2.பொதுவாக இறைவன் அன்பே உருவானவன் என்று ஏற்றுக்கொள்ளும் போது 'தெய்வக்குற்றம்' என்பது எனக்கு புரிவதில்லை .பொதுவாக 'தெய்வ குற்றம்' என்பது ஒருவன் செய்த தீவினையினால் ஏற்பட்டதாக இருந்தால் நியாயம் இருக்கிறது .உதாரணமாக ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து விட்டான் .அதனால் அது 'தெய்வ குற்றம்'ஆகி அவன் மேல் இறைவன் கோபமாக இருக்கிறார் என்றால் அது புரிந்து கொள்ளக்கூடியது .ஆனால் பொதுவாக 'தெய்வ குற்றம்' என்பது ஏதோ சடங்கு சம்பிரதாயங்களை மீறுவதாலேயே ஏற்படுவது போலவும் ,தனிப்பட்ட முறையில் இறைவனை நாம் முறைத்துக் கொள்ளுவதால் அவர் கோபப்படுவது போலவும் அதனால் 'தெய்வ குற்றம்' ஆகிவிட்டதாகவும் சொல்லுவதாகவே நான் புரிந்து கொண்டிருக்கிறேன் .ஆனால் இதற்கு சில மனதளவில் இல்லாத வெளி அடையாங்கள் மூலம் சிலவற்றை செய்யும் போது கடவுள் மனம் குளிர்ந்து தெய்வ குற்றத்தை போக்கி விடுவதாகவும் நம்பப்படுகிறதே ? இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை .இறைவன் அகத்தை விட புறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நிறுவுவது சரியா?

3.மாதவிடாய் என்பது இறைவனே பெண்களுக்கு படைத்துவிட்ட ஒரு உடற்கூறு .அது எப்படி தீட்டாக முடியும் ? மனிதர்களுக்கு அதனால் சில அசவுகர்யங்கள் இருக்கலாம் ,ஆனால் இறைவன் சன்னிதானத்தில் அது தீட்டாக பார்க்கப்படுவது எந்த விதத்தில் ?

4.மீரா ஜாஸ்மின் என்ற பெண் கிறிஸ்தவர் .அவர் இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரு கோவிலுக்குள் சென்று வணங்கி விடுகிறார் .ஒரு இடத்தின் புனிதத் தன்மையை பற்றிய அறிவு இல்லாமல் நடந்துகொள்ளக்கூடும் என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பது தவறு ஒன்றும் இல்லை .கிறிஸ்தவ ஆலயத்தில் யாரும் சென்று வழிபடலாம் ,திருப்பலியில் கலந்துகொள்ளலாம் என்றாலும் ,திருவிருந்தில் கிறிஸ்தவர் அல்லாதவர் கலந்து கொள்வதை தவிர்க்க அறிவுற்த்தப்படுகிறார்கள் .காரணம் ..திருப்பலியில் திருவிருந்துப்பகுதி என்பது இயேசுவின் கடைசி ராவுணவு நிகழ்ச்சியை நினைவு கூறும் நிகழ்ச்சி .இயேசு அப்பத்தை பிட்டு அதனை தன் உடலாகவும் ,கிண்ணத்தில் இருக்கும் ரசத்தை தனது இரத்தமாகவும் உணர்ந்து உண்ணுமாறு தமது சீடர்களுக்கு பணித்தது போல ,குருவானவர் இயேசுவின் பிரதிநிதியாக இருக்க மக்கள் சீடர்களாக இருக்க ,அதே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .எனவே அதனை உட்கொள்ளுவோர் அதன் பொருளை உணர்ந்து அதனை செய்ய வேண்டும் .அந்த சிறிய அப்பத்தில் இயேசு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு உண்ண வேண்டும் .இன்னும் சொல்லப்போனால் ஞானஸ்நானம் பெற்றவர் அனைவரும் இதை உண்பதற்கு தகுதிபடைத்தவராகி விடுவதில்லை .விபரம் அறிகிற வயதுக்கு வந்த பின்னர் இது குறித்த அறிவு புகட்டப்பட்டு ,தனிப்பயிற்சிகள் அளிக்கப்பட்டே இதில் கலந்துகொள்ள வேண்டும் ..அந்த அடிப்படையிலே தான் மற்றவர் இதன் பொருளுணராது ஏதோ அப்பம் கொடுக்கிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது என்று அவர்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது .ஆனால் தப்பித்தவறி ஒருவர் தெரியாமல் அதை உண்டால் அதனால் ஒன்றும் தீட்டு கிடையாது .அப்படி நடைபெறுவது தடுக்கவும் முடியாது..அந்த வகையில் மீரா ஜாஸ்மின் செய்தது தவறு தான் .அதற்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை தான் என்னை உறுத்துகிறது .10000 -ரூபாய் கட்டுவது தான் தண்டனையாம் .அதைக்கொண்டு அந்த தீட்டு நீங்க சடங்குகள் நடத்தப்படுமாம் .முதலில் 'தீட்டு' என்றால் என்ன ? 'தீட்டை களைவது' என்றால் என்ன?


(இவை எனது முதற்கட்ட சந்தேகங்கள் தான்..இதற்கு கிடைக்கும் பதில்களின் கோணம் அறிந்த பின் மற்ற கேள்விகள் கேட்கலாமென நினைக்கிறேன் ..தயவு செய்து உண்மையிலேயே நான் உளப்பூர்வமாக தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்பதாக கருதுவோர் பதிலிறுத்தால் மகிழ்ச்சியடைவேன் )

Thursday, June 29, 2006

எனக்கு பிடித்த ஆறு..

ஆறு போட அழைத்த சகோதரி லிவிங் ஸ்மைல் மற்றும் விடாது கறுப்பு இருவருக்கும் நன்றி! வேலைப்பளு காரணமாக தமிழ்மணம் பக்கமே அதிகமாக வர முடியாத நிலை .இருப்பினும் அவரச ஆறு!

பிடித்த பேச்சாளர்கள்

1.வலம்புரி ஜாண்
2.சுகி சிவம்
3.ப.சிதம்பரம்
4.அண்ணா
5.வைகோ
6.பெரியார் தாசன்

பிடித்த நடிகர்கள் / நடிகைகள்

1.நடிகர் திலகம்
2.கமல்ஹாசன்
3.நாகேஷ்
4.மம்மூட்டி
5.சாவித்திரி
6.எம்.ஆர்.ராதா

பிடித்த இசை/பாடகர்கள்

1.இசை ஞானி இளையராஜா
2.மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
3.எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
4.பி.சுசீலா
5.வாணி ஜெயராம்
6.டி.எம்.எஸ்

பிடித்த பாடல்கள்

1.சிப்பி இருக்குது முத்தும் இருக்குது -வறுமையின் நிறம் சிவப்பு
2.ஓ வசந்த ராஜா -நீங்கள் கேட்டவை?
3.மலர்ந்தும் மலராத -பாசமலர்
4.எங்கே என் ஜீவனே -உயர்ந்த உள்ளம்
5.அந்திமழை பொழிகிறது - ராஜ பார்வை
6.பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை

பிடித்த படங்கள்

1.சலங்கை ஒலி
2.குருதிப்புனல்
3.மகாநதி
4.தேவர் மகன்
5.முதல் மரியாதை
6.முள்ளும் மலரும்

படித்ததில் பிடித்தது

1.வாடிவாசல் - சி.சு .செல்லப்பா
2.சீரங்கத்து தேவதைகள் -சுஜாதா
3.சினிமாவுக்கு போன சித்தாளு -ஜெயகாந்தன்
4.அக்னி சிறகுகள் - டாக்டர் அப்துல் கலாம்
5.ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
6.இது ராஜபாட்டை அல்ல -சிவகுமார்

என்னை பாதித்தவர்கள்

1.தந்தை பெரியார்
2.பெருந்தலைவர் காமராஜர்
3.நடிகர் திலகம் சிவாஜி
4.அப்துல் கலாம்
5.கக்கன்
6.கலைஞர்

பிடித்த இடங்கள்

1.எங்கள் ஊர் பள்ளம் ,குமரி மாவட்டம்
2.கேரளா
3.அங்கோர் வாட் ,கம்போடியா
4.கோத்தா திங்கி ,மலேசியா
5.கீரிப்பாறை ,குமரி மாவட்டம்
6.முட்டம் ,குமரி மாவட்டம்

அடிக்கடி உலாவுவது

1.தமிழ்மணம்
2.forumhub
3.திண்ணை
4.தமிழ்.சிபி
5.தட்ஸ்தமிழ்
6.விகடன்.காம்

மனதிற்கு இதம்

1. சுசீலாவின் ஒரு குரல் பாடல்கள்
2. அதிகாலையில் தூரத்தில் கேட்கும் சுப்பிரபாதம்
3. குழந்தையின் சிரிப்பு
4. பிடித்த ஒருவருக்கு கிடைக்கும் பாராட்டு வார்த்தைகள்
5. மாலை நேர கடற்கரை உலாத்தல்
6. தமிழ் மொழி

நான் அழைக்கும் ஆறு பேர்

1. டி.பி.ஆர்.ஜோசப்
2. தருமி
3. பாலசந்தர் கணேசன்
4. நெல்லை சிவா
5. ரஜினி ராம்கி
6. முத்து தமிழினி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives