
(அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்)
சிவாஜி சார் ஓவ்வொரு அறைக்கும் என் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனார் . தொங்கிக் கொண்டிருந்த நட்சத்திர விளக்கு ,சுவரில் மாட்டியிருந்த பெரிய புகைப்படங்கள் ,அறையை அலங்கரித்த கலைப்பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் இவற்றையெல்லாம் ஒரு சின்னக்குழந்தையின் மனோபாவத்தோடு பார்த்துக்கொண்டு நடந்து போனேன்.
சிவாஜி சாரின் மிகப்பெரிய பங்களா அது . அந்த நேரம் என் மனைவி சுசி (நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ரா) அங்கே இல்லை .எங்கோ வேறு ஒரு அறையில் இருந்தாள் என நினைக்கிறேன். நான் சொன்னவையெல்லாம் அவள் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. சிவாஜி சாரின் கைவிரல் குளிர்ச்சி மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது .வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அந்த விரல்களும் அந்த ஸ்பரிசமும்.
சிவாஜி சார் ஸ்டுடியோவுக்கு வருவதை பார்த்திருக்கிறேன் .அவர் வரும் போது எல்லா படப்பிடிப்பும் ஒரு நிமிடம் நின்று போகும் .அவர் போகும் வழியில் அனைவரும் எழுந்து நின்று அவரை கை கூப்பி வணங்குவார்கள் . அவர் வந்து போவதே ஒரு ராஜா வருவது போல இருக்கும் . அவர் சிரித்துக்கொண்டே கடந்து போகும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஒளி வட்டம் நமது மனதில் வெளிச்சம் வீசி விட்டு செல்லும்.
சிவாஜி சாரைப் போல மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுகிறேன். தமிழில் மன்னனாக கோலோச்சிய அவர் மலையாளத்தில் நடிக்க வந்த போது ஒரு சாதாரண நடிகராக பழகினார் . இயக்குநருக்கும் மற்ற நடிகர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்தார் .
குறையோ குற்றங்களோ எதுவுமே சொன்னதில்லை . தவிர்க்க முடியாத காரணங்களால் நடுவில் படப்பிடிப்பு தடை பட்ட போதும் சிறிதளவு கூட கோபமோ வருத்தமோ இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்று சென்றார் . மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போதும் மகிழ்ச்சியோடு வந்து நடித்துக் கொடுத்தார் .
அவர் படப்பிடிப்புக்காக கேரளத்துக்கு வந்த போது என்னுடன் தான் தங்கியிருந்தார் . ஒரு குழந்தை எப்படி சாக்லெட்டை விரும்பி கேட்குமோ ,அது போல வாத்து இறைச்சியும் மற்ற அசைவ உணவு வகைகளையும் விரும்பிக் கேட்பார் . அவர் கேட்டவையெல்லாம் தயார் செய்து அவர் சாப்பிட அமரும் மேசையில் வைக்கும் போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே ,தான் கேட்டது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்குமே குழந்தை ,அது போல மாறி விடுவார் . ஒவ்வொரு அயிட்டம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் அடிக்கும் கமெண்ட் இருக்கிறதே ,அழகோ அழகு . அதே சமயம் தான் என்ன சாப்பிடுகிறோமோ அது தன்னுடைய பணியாட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.
வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவர் தனக்கு பிடித்த சில பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தார் . சொந்த மகனோ அல்லது மகளோ கேட்டால் கூட கொடுக்க மாட்டாராம் . ஒரு தடவை அவர் கையில் கட்டியிருந்த வாட்ச் நன்றாக இருக்கிறது என்று நான் சொன்னவுடன் உடனே கழற்றி என்னிடம் கொடுத்து விட்டார் . அதன் பிறகு பிரபு என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த வாட்ச்சை பலர் கேட்டும் கொடுக்காமல் வைத்திருந்தார் என்ரு சொன்னார் .
ஒரு முறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் ( மலையாள எழுத்தாளர்) அவரது நண்பர்களும் சிவாஜி சாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தனர் .அவர்கள் விருப்பத்திற்காக சிவாஜி சார் ஒரு கையில் வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு ,நெஞ்சை விரித்து ,கண்களில் தீப்பொறி பறக்க ,வீர பாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காண்பித்தார் (இங்கே 'வரி வட்டி' வசனத்தை மோகன்லால் குறிப்பிடுகிறார் ) .லட்சக்கணக்கான மக்களை மெய் மறக்கச் செய்த அந்த சிம்ம கர்ஜனையை நேரடியாக கேட்ட பாலச்சந்திரன் உணர்ச்சிவசப்பட்டு சிறுநீர் கழித்து விட்டார் என்கிறார் லால்.
இந்த வசனத்தை தமிழ்நாட்டுக்காரன் பேசச் சொல்லி கேட்டால் பேசுவாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது .அயல் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் கூடிய விருந்தினர்களுக்காக அவர்கள் விருப்பப்படும் எதையும் செய்யத் தயாராக இருந்தார் சிவாஜி சார் .தமிழகத்தின் தலை வணங்காத ராஜாவாக வாழ்ந்த அவர் , விருந்தினர் முன்னிலையில் பூமி போல பணிவாக நடந்து கொண்டார் . விருந்தினர் கடவுளுக்கு நிகர் என்று
அவர் உறுதியாக நினைத்து அது போல நடந்தார் . விருந்தினர்க்கு முன்னிலையில் ஒரு மலையாளியும் அது போல பணிவாக நடப்பதை நான் பார்த்ததே இல்லை .
வாயில் படியிறங்கி வந்து அவர் விருந்தினரை கார் கதவு திறந்து உள்ளே உட்கார வைத்து வழி அனுப்புவார் .அவர் அருகில் அவர் மனைவியும் சிரித்த முகத்துடன் நிற்பார் . நாம் வந்து விட்டு செல்வது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்பது போல அந்த முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படும் . தான் சந்திப்பவர்கள் எல்லாம் தன்னை விட பெரியவர்கள் என்றே அவர் நினைத்தார் . ஒருவரை அறிமுகப்படுத்தும் போது கூட இவர் பெரிய மனிதன் என்றே அறிமுகம் செய்வார் . அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை . ஆனால் நடிப்பு உலகம் அவருக்கு சொல்லிக் கொடுத்த பழக்க வழக்கங்கள் யாராலும் காப்பி அடிக்க முடியாதவை .
நான் எப்போதாவது தலை குனிந்து வணங்க நேரிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் மலையாளி குணம் என்னிடம் " இந்த அளவுக்கு தலை குனிந்து வணங்க வேண்டுமா ?" என்று கேள்வி எழுப்பும் . அப்போது என்னை அறியாமலே சிவாஜி சார் நினைவு வரும் .தானே தலை குனிந்து போகும் .
தமிழாக்கம் : முரளி ஸ்ரீனிவாஸ்
நன்றி : மலையாள மனோரமா